Tuesday, June 30, 2009

அண்டார்டிகா .

உலகில் உள்ள 7 பெரிய கண்டங்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பது அண்டார்டிக்கா கண்டம் . இது யாருக்கும் சொந்தமானது அல்ல . இங்கே எந்த அரசாங்கமும் கிடையாது . ' நோ மேன்ஸ் லாண்ட் '
என்று ஆங்கிலத்தில் சொல்வோம் .
ஆனாலும் , ஏழு நாடுகள் அதைச் சொந்தம் கொண்டாட முயற்சி செய்து வருகின்றன . கடுமையான குளிர்ப்பிரதேசம் என்பதால் இங்கே வசிப்பதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை . இதன் மக்கள் தொகை 1000க்கும் குறைவாகத்தான் உள்ளது . கோடைக் காலங்களில் மட்டும் சுமார் 3000 டூரிஸ்ட்டுகள் வருவர் . ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள்தான் அங்கே முகாம் இட்டிருப்பார்கள் . அவர்களுக்காக அங்கே 20 விமானத்தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன .
பூமிக் கிரகத்திலேயே மிகவும் குளிரான பகுதி அண்டார்டிக்காதான் . மைனஸ் 90 டிகிரி வரை இங்கே படுபயங்கர குளிர் நிலை செல்லும் . கோடைகாலத்தில் 24 மணி நேரமும் சூரியன் மறையாது . அதேபோல் குளிர் காலத்தில் சூரியன் தோன்றவே தோன்றாது . இருட்டு மட்டுமே இருக்கும் .
அண்டார்டிக்காவை சூழ்ந்த கடல் எப்பொழுதும் உறைபனியாகவே இருக்கும் . அதனால் குறிப்பிட்ட கோடை காலங்களில் மட்டுமே கப்பல்கள் அங்கே செல்ல முடியும் . பென்குயின் போன்ற பறவைகளும் , கடல் பாசி போன்ற தாவரங்கள் மட்டுமே அங்கே உண்டு . முக்கியமான இன்னொரு விஷயம் என்ன தெரியுமா ? அண்டார்டிக்காவில் கொசுவே கிடையாது .
--- தினமலர் . ஏப்ரல் 10 . 2009 . .

Monday, June 29, 2009

திருநீறு

திருநீறு ஏன் ?
மாற்றங்களைக் கடந்தவர் கடவுள் . ' மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன் ' என்பது திருவாசகம் . பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது , அழியாதது , சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்லுகின்றன . நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும் . பஞ்சையோ , கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும் . ஆனால் , நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும் ? அது சாம்பலாகவே இருக்கும் . எந்த மாற்றமும் அடையாது .
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம் . கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும் .கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்துவிடும் . பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போழுதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் அணிகிறோம் !
---தினமலர் . ஏப்ரல் 9 . 2009 .

Sunday, June 28, 2009

தண்டி யாத்திரை !

1930 -ம் ஆண்டு மார்ச் 12 -ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து காந்திஜி தண்டி யாத்திரை தொடங்கினார் .அவருடன் ஒரு லட்சம் பேர் யாத்திரையில் கலந்து கொண்டனர் . தினந்தோறும் அவருடன் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து சென்றனர் . பயணத்தின் போது நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகள் தண்டி யாத்திரையை தலைப்பு செய்தியாக வெளியிட்டன . சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து 390 கி. மீ . நீளமுள்ள தண்டி கடற்கரைப் பகுதியை ஏப்ரல் 5-ம் தேதி காந்திஜி அடைந்தார் . அன்றே அவர் தண்டியில் உப்பு அள்ளியபோதும் , முறைப்படியான உப்பு அள்ளும் போராட்டம் 1930 -ம் ஆண்டு இதே நாளில் நடந்தது . காந்திஜியை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள உப்பளங்களில் இதே நாளில் மக்கள் உப்பு அள்ளினர் .
---தினமலர் . 06 - 04 - 2009 .

Saturday, June 27, 2009

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோயிலில் நுழையும் போதே ஒரு பிரம்மாண்டமான இடத்தில் நுழையும் பிரமிப்பு ஏற்படும் . 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது ராமேஸ்வரம் . கோயில் உயர்ந்த மதிற்சுவர்களும் , அண்ணாந்து பார்க்கக்கூடிய கோபுரங்களும் , பிரம்மாண்டமான நந்தியும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் என்றாலும் , ஆயிரங்கால் மண்டபம் நம்மை பிரமிப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் .
நூல் பிடித்தாற் போன்ற துல்லியத்தை அத்தனை மண்டபத் தூண்களில் எப்படி கொண்டு வந்தனர் என்பது புரியாத புதிர் . அந்தக் காலத்தில் கட்டடக் கலை எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தது என்பதற்கு சாட்சியாய் நிற்கிறது அந்த மண்டபம் . 4 ஆயிரம் அடி நீளமுள்ள உலகிலேயே மிக நீண்ட மண்டபமான இதில் மொத்தம் 4 ஆயிரம் தூண்கள் தமிழரின் சாதனையாய் கம்பீரமாய் நிற்கின்றன .
இந்த தூண்கள் கிரானைட் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன . ராமேஸ்வரம் சுற்று வட்டாரப் பகுதி எங்கும் இந்தக் கற்கள் கிடைப்பதில்லை . எனவே , தமிழ்நாடு அல்லாது வெளிநாடுகளில் இருந்துதான் கடல் வழியாக அவை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் . கிழக்குப் பகுதி ராஜ கோபுரம் 126 அடி உயரமும் , எட்டு நிலைகளையும் கொண்டது . 18 அடி உயர நந்தி 22 அடி நீளம் கொண்டது . 12 -ம் நூற்றாண்டு வரை இந்தப் புனிதத்தலம் பெரிய கோயில்களோ , கட்டடங்களோ இன்றி சிறிய கூரைப் பகுதியில்தான் இருந்ததாம் . முதலில் இங்கே கோயில் கட்டடத்தை எழுப்பியது இலங்கை அரசன் பராக்கிரம பாஹூ . அதன் பிறகு ராமேஸ்வரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் கோயில் கட்டடத் திருப்பணிகளை முடித்து வைத்தனர் . கோயிலின் பல விமானப் பகுதிகள் பல்லவர் கால ஸ்டையிலை நினைவுப்படுத்துவதாக இருக்கின்றன . அடுத்தடுத்து வந்த பல மன்னர்களும் கோயில் புணரமைப்பு மற்றும் கட்டுமானங்களை ஏற்படுத்தினர் .மூன்றாவது பிரகாரத்தில் மிக நீண்ட மண்டபம் 18 -ம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர் . திருவாங்கூர் , ராமநாதபுரம் , மைசூர் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானங்கள் கோயிலுக்கான பராமரிப்பு நிதியை வழங்கியிருக்கின்றன .
--- ஆர் . சண்முகம் , ராணிப்பேட்டை . தினமலர் . சிறுவர்மலர் . பிப்ரவரி . 2009 .

Friday, June 26, 2009

கிரகாம் பெல் .

அலெக்சாண்டர் கிரகாம் பெல் .
அலெக்சாண்டர் கிரகாம் பெல் , ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் நகரில் 1847-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்தார் . அவரது தந்தை மெல்வில் பெல் பேச்சுக்கலைப் பயிற்சியில் சிறந்து விளங்கினார் . ஒலி உண்டாவதற்குக் காரணமான குரல்வளை , நாக்கு , தொண்டை , உதடுகள் ஆகியவற்றின் பங்கு பற்றி விளக்கும் ஒலிப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப் பள்ளியில் கிரகாம் பெல் தனது படிப்பைத் தொடர்ந்தார் . பேச்சுப்போட்டி , நாடகம் , இசை ஆகியவற்றிலும் பெரும் ஈடுபாடு இருந்தது . பள்ளியில் படிக்கும்போதே மற்றவர்களுக்கு பேச்சுப் பயிற்சி அளித்தல் , இசை கற்பித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார் .
1865-ம் ஆண்டு மின்சாரத்தின் வழியே பேசும் ஒலியை செலுத்தும் எண்ணம் அவருக்குத் தோன்றியது . ஹெர்மன் ஹேய்ம் ஹோல்ட்ஸ் என்பவர் எழுதிய ' வியப்பூட்டும் குரலொலி ' என்ற புத்தகத்தை படித்ததால் அவருக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது.
1866-ம் ஆண்டு முதல் பல ஆய்வுகளில் கிரகாம் பெல் ஈடுபட்டார் . 1870 -ல் அவரது அண்ணன் காசநோய்க்கு பலியானார் . எனவே , அந்த நோய் கிரகாம் பெல்லையும் தாக்கக்கூடும் என்பதால் அவர் தந்தை குடும்பத்தை கனடா நாட்டிலுள்ள ஒண்டோரியோவுக்கு அருகில் பிராண்ட் போர்ட் எனும் இடத்திற்கு மாற்றினார் . கிரகாம் பெல் பாஸ்டன் நகருக்குச் சென்றார் . 1872 -ம் ஆண்டில் அங்கு காது கேளாதோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளி ஒன்றைத் துவக்கினார் .
1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் குரல் உறுப்புகள் பற்றிய பேராசிரியராகப் பணியாற்றினார் .
தொலைபேசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்காவைச் சேர்ந்த எலிஷா கிரே , தாமஸ் ஆல்வா எடிசன் , கிரகாம் பெல் , ஜெர்மனியின் பிலிப் ஆகிய 4 பேரும் தனித்தனியே முயற்சித்தனர் . இறுதியில் கிரகாம் பெல் வெற்றி பெற்றார் . 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அரசு கிரகாம் பெல் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டு தொலைபேசிக்கான காப்புரிமையை வழங்கியது .
1876 ஜூன் மாதம் அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரில் அறிஞர்கள் முன்னிலையில் தொலைபேசி எவ்வாறு பணி புரிகிறது என்பதை விளக்கினார் .
1877-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ' பெல் தொலைபேசி நிறுவனம் ' உருவாக்கப்பட்டது .கிரகாம் பெல் தனது கண்டுபிடிப்பால் முப்பதாவது வயதில் பெரும் புகழுக்கும் , செல்வத்திற்கும் சொந்தக்காரர் ஆனார் . தொலைபேசியை கண்டுபிடித்த பிறகு கிரகாம் பெல் 45 ஆண்டுகள் தனது அறிவியல் வாழ்க்கையை மேற்கொண்டார் .
1922-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி அவர் இறந்தபோது அமெரிக்காவில் எல்லா தொலைபேசிகளும் ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டு அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது .
--- தினமலர் . 07 -03 -2009 .

Thursday, June 25, 2009

கொலம்பஸ் .

கொலம்பஸின் பிறப்பு மற்றும் இளமைக்காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன . அவர் இத்தாலியின் ஜெனோவா நகரில் 1451ல் பிறந்தார் என்று ஆய்வுகள் கூறுகின்றன . அவருடைய தந்தை டொமினிகோ கொலம்போ ஒரு துணி வியாபாரி .
1471ல் கொலம்பஸ் ஒரு கப்பல் மூலம் ஏஜியன் கடல் பகுதியில் உள்ள கியோஸ் தீவு பகுதியைச் சுற்றி வந்தார் . இந்த கப்பலில் 2 ஆண்டுகள் வேலை பார்த்தார் .
1480 ல், கொலம்பஸ் அட்லாண்டிக் கடல் வழியே தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா செல்வதற்கு திட்டமிட்டார் . அவருக்கு உதவி கிடைப்பது மிகக் கடினமாக இருந்தது .
கொலம்பஸ் தன் கடல் பயணத்துக்காக போர்ச்சுக்கல் அரசை நாடினார் . ஆனால் உதவிகள் கிடைக்கவில்லை . பின்னர் ஸ்பெயின் அரசரை கொலம்பஸ் நாடினார் . ஸ்பானிய அரசரும் அரசியும் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக கூறினர் . 'அலைகடலின் தளபதி ' என்று பட்டம் சூட்டப்பட்டு , புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும் , வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது .
ஆகஸ்ட் 3-ம் தேதி 3 கப்பல்களில் கொலம்பஸ் புறப்பட்டார் . முதலில் அவர் கேனரித்தீவுகளை அடைந்து ஒரு மாதம் தங்கினார் . முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது . பகாமாசில் ஒரு தீவை அடைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது . 1492 -ம் ஆண்டு அக்டோபர் 12 -ல் கரையேறினார் . 1493 -ல் நாடு திரும்ப திட்டமிட்டார் . புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் உள்ள லிஸ்பனுக்கு 1493 -ம் ஆண்டு மார்ச் 4 -ம் தேதி சென்றார் . அப்போது போர்ச்சுகல்லுக்கும் , ஸ்பெயினுக்கும் உறவு மோசமாக இருந்ததால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் . தனது பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 15 -ம் தேதி ஸ்பெயினை அடைந்தார் . ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார் . அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கிலும் பரவியது . கொலம்பஸின் இந்த பயணம் ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும் .
2-வது பயணத்தை 1493 -ம் ஆண்டு செப்டம்பர் 24 -ல் தொடங்கினார் . 17 கப்பல்களில் , 1200 பேருடன் கிளம்பினார் . முதலில் டொமினிக்கா சென்றவர் , பின்னர் குவாடெலோப் , மோன்ட்செர்ராட் , ஆண்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய தீவுகளைக் கண்டறிந்து பெயர் சூட்டினார் . அவர் கண்டுபிடித்த தீவுகளுக்கு அவரே ஆளுநராக நியமிக்கப்பட்டார் . அட்லாண்டிக் கடலில் பல பயணங்களை மேற்கொண்டார் . கடல் பயணியாக இருந்த போதிலும் ஒரு மோசமான நிர்வாகியாகக் கருதப்பட்டார் .
1498 -ல் 3 -ம் முறையாக ட்ரினிடாட் தீவுகளை ஜூலை 31 -ல் கண்டுபிடித்தார் . அத்தோடு தென் அமெரிக்காவின் நிலப்பகுதியையும் கண்டுபிடித்தார் . கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தில் தன் மகன் பெர்டினான்டுவையும் அழைத்துச் சென்றார் . 1504 -ல் நாடு திரும்பினார் . திரும்பச்சென்றார் . ஸ்பானிய அரசிடமிருந்து பத்து சதவீதம் லாபம் வேண்டும் எனக்கேட்டார் . ஆனால் ஸ்பானிய அரசர்
இதை நிராகரித்தார் . 1506 -ம் ஆண்டு மே 20 -ல் கொலம்பஸ் காலமானார் .
--- தினமலர் . 04 - 03 - 2009 .

Wednesday, June 24, 2009

லேடிஸ் மேட்டருங்க...

இது லேடிஸ் மேட்டருங்க...
பெண்கள் சரியான அளவில் பிரா வாங்க கீழே உள்ள ஐடியாவை ஃபாலோ பண்ணினால் , கச்சிதமான பிராவை வாங்கி அணியலாம் .
மார்புக்கு கீழ் பக்கம் சுற்றளவை எடுங்கள் . ஒற்றைப்படை எண்ணாக அவை இருந்தால் , அத்துடன் 5 என்ற எண்ணைக் கூட்டிக் கொள்ளுங்கள் . இரட்டைப் படை எண்ணாக இருந்தால் 6 என்ற எண்ணைக் கூட்டிக் கொள்ளுங்கள் . இந்த அளவுப்படி பிரா வாங்கினால் அவை சரியாக இருக்கும் .
--- சத்திரப்பட்டி குருசாமிப்பாண்டியன் . பாக்யா . மார்ச் 20 --26 ; 2009 .
அப்படியா .
மனித இனத்தில் அடிப்படியாக நான்கு வகையான பிரிவுகள் இருப்பதாக உடற்கூறு வல்லுனர்கள் கூறுகிறார்கள் . அவை :
' காகஸாய்ட் ' , ' மங்கலாய்ட் ' , ' ஆஸ்ட்ரலாய்ட் ' , ' நீக்ராய்ட் ' என குறிப்பிடுகிறார்கள் . வாழும் இடத்தைப் பொறுத்தும் , தட்ப வெப்ப நிலையைப் பொறுத்தும் தான் இந்த உடற்கூறு பிரிவுகளைப் பிரித்துள்ளனர் .
--- திரு . பாக்யா . மார்ச் 20 --26 ; 2009 .

Tuesday, June 23, 2009

' பதவி ' மோகம் ?

ஷாஜஹான் மன்னருக்கு தனது மூத்த மகன் ' குர்ரம் ' மீது அளவு கடந்த பிரியம் . எப்பவும் தன்னோட பக்கத்திலேயே வச்சுகிட்டு ராஜகாரியங்களை எப்படி எப்படி செய்யவேண்டும்னு வாய்மொழியா போதிப்பாராம் . தனக்குப்பின் அவன்தான் அரியணையில் அமர வேண்டும்னு குறிக்கோளோட செயல்பட்டாராம் .
அவரது ஏழாவது மகன் ஔரங்கசீப் மகாமுரடன் .எப்பொழுதும் சண்டை , போராட்டம்னு ஈடுபடுவானாம் . அதனால , அவருக்கு ஔரங்கசீப்பையே பிடிக்காது . நாட்ல எங்காவது கலவரம் , அண்டை நாட்டு மன்னன் தொல்லை, எல்லைத் தகராறுன்னா ஔரங்கசீப்பை அங்கு அனுப்பிவிடுவார் , அரண்மனைக்குள் அவனை சேர்த்துக் கொள்ளவே மாட்டாராம் . ஔரங்கசீப் அதனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதுல கவனம் செலுத்தினான் . இறுதியில் , ' ராஜ்யத்தை ஆள வாரிசு யார் ? ' பிரச்சனை எழுந்த சமயம் ஷாஜஹான் தன் மூத்தமகன் குர்ரம்மை தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தார் .
தன் தந்தை கூறியபடி சாம்ராஜ்யம் விரிவுபடுத்தும் வேலையில் இருந்த ஔரங்கசீப் இதைக் கேள்விப்பட்டு ' மூத்த மகன்தான் அரசாள வேண்டுமா ? இவ்வளவு பெரிதாக மொகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தின தனக்கு உரிமை இல்லையா?' ன்னு வெறுப்புல தனக்கு மூத்த சகோதரர்கள் ஆறு பேரையும் கொன்னுட்டு தந்தையை சிறையிலடைச்சுட்டு தனக்கே உரிய பாணியில் மன்னனாக அரியணையில் அதிரடியா ஏறிட்டானாம் !
---பாக்யா . மார்ச் 20 -- 26 ; 2009 .

Monday, June 22, 2009

நீச்சல் குளம் !

தங்க நீச்சல் குளம் !
கோடீஸ்வரர்களின் ஆடம்பரம் .
உலகமகா கோடீஸ்வரர்களின் சொகுசு பங்களாக்கள் பற்றி போர்ப்ஸ் வெளியிட்ட தவல்கள் தலையை கிறுகிறுக்க வைப்பதாக உள்ளது .
அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது . சர்வதேச அளவில் 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ள 724 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர் .
லண்டன் நகரின் லக்ஸ் கெனிங்ஸ்டன் பகுதியில் இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மிட்டல் பங்களா உள்ளது . உலக அதிசயமான தாஜ்மகாலில் உள்ள மார்பிள்கள் எங்கிருந்து வந்ததோ அதே சுரங்கத்தில் இருந்துதான் மிட்டல் பங்களாவுக்கும் மார்பிள் வந்துள்ளது . 12 படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டில் 20 கார்கள் நிறுத்துவதற்கான கேரேஜும் இங்குள்ளன .
பில்கேட்ஸ் வீட்டில் நீச்சல் குளத்துக்கு அடியில் மிக அருமையான மியூசிக் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போர்ப்ஸ் கூறுகிறது .
பட்டியலில் 468 வது இடம் பிடித்துள்ள லெவ்லெவீல் என்ற கோடீஸ்வரர் இதற்கு ஒரு படி மேலே சென்றுவிட்டார் .இவரது வீட்டில் உள்ள நீச்சல் குளம் முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டிருக்கிறது . 17 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் தனது பங்களாவை கட்ட 325 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார் லெவீல் .
ஜார்ஜ் லூகாஸ் என்ற கோடீஸ்வரர் தனக்கென்று சிறு ராணுவத்தையே பராமரித்து வருகிறார் .
மற்றொரு கோடீஸ்வரர் ஜப்பான் ராஜபரம்பரையினர் 16 ம் நூற்றாண்டில் கட்டிய ஒரு அரண்மனையை அப்படியே பெயர்த்து எடுத்து லண்டனில் ஒரு பங்களா கட்டியிருப்பதாகவும் போர்ப்ஸ் கூறுகிறது .
--- தினமலர் . 15 - 03 -2009 .

Sunday, June 21, 2009

அப்படியா ?

* ஓர் இந்திய விவசாயி , துன்பம் தாளாமல் தனது குறியை அறுத்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார் .
* கைரேகை பற்றிய ஆய்வுக்கான பெயர் ' டாக்டியோ கிராபி ' .
* ஜான் எஃப் . கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக மிகச்சரியாக 1000 நாட்கள் பதவியில் இருந்தார் .
* அமெரிக்காவுக்கு சுருக்கமாக ' யு.எஸ்.ஏ. ' என்ற வார்த்தையைச் சூட்டியவர் அந்நாட்டு எழுத்தாளரான தாமஸ் பெய்ன் ஆவார்.
* நேவிஸ் என்ற லத்தீன் சொல்லிலிருந்தே கப்பல் படையைக் குறிக்கும் ' நேவி ' என்ற சொல் வந்தது .
* இந்திய வரலாற்றில் முதன் முறையாக கோர்ட்டில் ஆஜரான ஜனாதிபதி வி.வி. கிரிதான் .
* பெண் எறும்புகள் எப்பொழுதும் வரிசையாய் போகும் . ஆண் எறும்புகளோ தனித்தனியாகச் செல்லும் .
* ஒரு மனிதன் சந்தோஷமாக அழும்போது ( அவங்க ஆனந்தக்கண்ணீர் ) கண்ணீரின் முதல் துளி வலது விழியிலிருந்து உதிரும் . வலியோ சோகத்திலோ அழும்போது இடது விழியிலிருந்து கண்ணீரின் முதல் துளி விழும் .
* முதன் முதலில் அலுமினிய உலோகத்தைப் பிரான்ஸ் நாட்டில் பாக்ஸ் என்ற இடத்தில் கண்டறிந்தனர் . எனவேதான் அதன் தாதுவிற்குப் பாக்ஸைட் என்று பெயர் வந்தது
* தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,30,058 சதுர கிலோ மீட்டர்கள் .
* உலகிலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைக் கடைபிடித்து வாழும் உயிரினம் புறா மட்டும்தான் .
* மொகலாய மன்னர்களில் அசைவ உணவை சாப்பிடாமல் சைவ உணவை இறுதிவரை சாப்பிட்டவர் அக்பர் மட்டும்தான்
* நவக்கிரகங்களில் சூரியனை ' பித்ருகாரகன் ' என்றும் , சந்திரனை ' மாத்ருகாரகன் ' என்றும் ஜோதிட நூல்கள் இயம்பும் .
* மகான்கள் துறவறம் ஏற்றுக்கொள்வது பெரும்பாலும் பவுர்ணமி நாட்களில்தான் ...

Saturday, June 20, 2009

மாவிலை !

மகத்துவம் நிறைந்த மாவிலை !
கோயில் சம்பந்தப்பட்ட எந்த விழாவை எடுத்துக் கொண்டாலும் சில பொருள்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் . மஞ்சள் , குங்குமம் , விபூதி , மஞ்சள் தூள் கலந்த அரிசி ( அட்சதை ), தர்ப்பைப் புல் , மாவிலை போன்றவை எல்லா சுபகாரியங்களிலும் பயன்படுத்தப்படும் பொருட்கள் .
பந்தலிலும் முகப்பிலும் குருத்தோலைத் தோரணங்கள் இடம் பெறும் . வீட்டின் முகப்பில் மாவிலைத் தோரணம் கட்டாயம் இருக்கும் . இதைக்கட்ட நேரமில்லாவிட்டாலும் , ஒரு கொத்து இலையாவது
சொருகி வைப்பர் .
பூஜைகள் செய்யும்போது கலச ஸ்தாபனத்துக்கு கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் மாவிலைகள் இட்டு அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள் . பூஜை முடிந்த பின் மாவிலை நுனியால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர் . இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை . இதற்கு சமய ரீதியான காரணம் உண்டு . மாவிலையின் நுனியில் லட்சுமி தேவி வசிக்கிறாள் . அதனால்தான் அதிகம் முற்றாததும் , நுனி உள்ளதுமான இலையை உபயோகிப்பர் .
மாவிலைக்கு இன்னொரு சக்தியும் உண்டு . மரம் , செடி , கொடிகள் காற்றில் கலந்து கிடக்கும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன . மனிதன் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறான் . மாசுபடும் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவன மரம் , செடி , கொடிகள் மரத்திலிருந்து வெட்டப்பட்டபின்னரும் கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியை மாவிலைத் தோரணம் செய்து வருகிறது என்கிறார்கள் . அலங்காரத்துக்கு மட்டுமல்ல ; ஆரோக்கியத்துக்கும் உதவும் மாவிலையை பயன்படுத்துவதே நல்லது .
--- தினமலர் . பக்திமலர் . மார்ச் 12 . 2009 .

Friday, June 19, 2009

வேதங்களின் தாய் !

சந்தியா , சாவித்திரி , காயத்ரி , சரஸ்வதி இவர்கள் நான்கு பேரும் சந்தியாவந்தன வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் தெய்வங்கள் . வைதீக வழிபாட்டில் காயத்ரி தேவிக்கு அதிகமுக்கியத்துவம் உண்டு .
சூரியனுக்கு ஒளி தருமாறும் , உலகுக்கெல்லாம் ஞான ஒளி கொடுக்குமாறும் வேண்டும் மந்திரமே காயத்ரி மந்திரமாகும் .
காயத்ரி என்றால் எவரெல்லாம் தன்னை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள் .
' காயத்ரீம் சந்தஸாம் மர்தா ' என்பது ஒரு வாக்கியம் . இத்தொடரில் உள்ள சந்தஸ் என்பது வேதத்தைக் குறிக்கும் .வேத மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரம் என்பது இந்தத் தொடரின் பொருள் .
காயத்ரி 24 எழுத்துக்களை கொண்டது . மூன்று பாதங்களை உடையது . எனவே , இம்மந்திரத்தைத் திரிபதா என்பார்கள் . ஒவ்வொரு பாதம் ஒரு வேதத்தின் சாரமாகும் . மூன்று பாதங்களும் ரிக் , யஜுர் ,
சாம வேதங்களின் சாரமாகக் கருதப்படுகின்றன . ( அதர்வண வேதத்துக்கு என்று தனி காயத்ரி மந்திரம் உண்டு . இரண்டாவது முறை உபநயனம் செய்து கொண்டு அதன் பின்புதான் அதர்வண காயத்ரி மந்திர ஜெபம் செய்வார்கள் .)
காலை , நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும் . காயத்ரி , சாவித்திரி , சரஸ்வதி என்று மூன்றுவிதமாக தியானிக்கவேண்டும் . காலையில் பிரும்ம ரூபிணியாகவும் , மதியம் சிவரூபிணியாகவும் , மாலையில் விஷ்ணுரூபிணியாகவும் காயத்ரி தேவி இருக்கிறாள் .
மந்திர சக்தி என்பது அக்னியைப் போன்றது . நெருப்பு அணைந்து இருப்பது போல தெரிந்தாலும் அதற்குள் ஒரு பொறி நிச்சயம் இருக்கும் . அந்தப் பொறி தான் காயத்ரி மந்திரம் . அதை ஊதுவதால் பெரிதாக்கிவிட முடியாது . ஓதுவதால்தான் அதிகரிக்கச் செய்ய முடியும் .
ஜூரத்துக்கு மருந்து கொடுப்பது போல ஆத்மாவைப் பிடித்திருக்கக் கூடிய பந்தங்கள் என்னும் ஜூரத்தை நீக்கக் கூடிய மருந்துதான் காயத்ரி என்கிறார் காஞ்சி மாமுனிவர்.
--- தினமலர் . பக்திமலர் . மார்ச் 12 .2009 .

Thursday, June 18, 2009

தவளை .

சிகரம் தொட்ட தவளை .
தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன . மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை எட்டவேண்டும் என்பதுதான் போட்டி .
இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும் , போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் கோபுரத்தை சுற்றி மிகப்பெரிய கூட்டம் கூடியது .
போட்டி தொடங்கியது . சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏறமுடியாமல் சரிய ஆரம்பித்தன . சாண் ஏறினால் முழம் சறுக்கியது . தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த சில தவளைகள் மட்டும் அதிக உயரத்தில் ஏறிக்கொண்டு இருந்தன .
' இது மிகவும் கஷ்டமான காரியம் ' என கூச்சல் போட்டது கூடியிருந்த கூட்டம் . உற்சாகமாக இருந்த சில தவளைகள் சோர்வடைந்து தங்கள் முயற்சியை கைவிட்டு கீழ்நோக்கி இறங்கத் தொடங்கின.
ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்துத் தவளைகளும் முயற்சியைக் கைவிட்டன . அது மட்டும் தொடர்ந்து மேலே ஏறிக்கொண்டே இருந்தது . தன் முயற்சியிலிருந்து சற்றும் தளரவில்லை . மிகுந்த சிரமப்பட்டு கோபுரத்தின் உச்சியை அடைந்தது .
' உனக்கு மட்டும் எப்படி இத்தனை பலம் ?' என தொல்வியடைந்த தவளைகள் கேட்க , வெற்றி பெற்ற தவளையிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை . பிறகுதான் தெரிந்தது வெற்றிபெற்ற தவளைக்கு காதுக் கேட்காது என்பது .
மனிதன் தனது லட்சியத்தை அடைய இந்தச் செவிட்டு தவளை போன்றுதான் மற்றவர்களின் அர்த்தமற்ற -- நியாயமற்ற விமர்சனங்களைக் காதில் வாங்காமல் இருக்கவேண்டும் .
--- விவேகானந்தர் சொன்ன கதை . ராணி . 23 - 11 - 2008 . இதழை கொடுத்து உதவியது , எனது அண்ணன் மகன் , A .முத்துக்குமரசாமி . திருநள்ளாறு .

Wednesday, June 17, 2009

மாயாஜாலம் .

பறவைகள் கூட்டமாய் பறக்கும்போது ஒய் ( ' Y ' ) என்ற ஆங்கில எழுத்து வடிவில் பறந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு .
முதல் காரணம் : விஞ்ஞானபூர்வமானது . பறவைகள் நேர்வரிசையில் பறந்து சென்றால் அதிகமான காற்று அழுத்தத்தை சந்திக்கவேண்டிவரும் . காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது , பறவைகளால் வேகமாய்ப் பறக்க முடியாது . சீக்கிரமே களைப்படைந்துவிடும் . ' Y ' வரிசையில் பறக்கும்போது காற்றின் அழுத்தம் இரண்டு பக்கமும் சமமாய்ப் பிரிவதால் , நடுவில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும் . அழுத்தம் குறைவதால் பறவைகள் சிரமமில்லாமல் பறக்கமுடிகிறது .
இரண்டாவது காரணம் : பொதுவாக பறவைகளின் கூட்டத்துக்கு ஒரு தலைவன் உண்டு . அந்தத் தலைவன் முதலில் பறந்துபோக , அந்தத் தலைவனைப் பார்த்துக்கொண்டே பறப்பதற்க்காக பறவைகள் ' Y ' வரிசையில் இரண்டு பக்கமும் பிரிந்து பறக்கின்றன .
---ராஜேஷ்குமார் , கேள்வியும்... பதிலும் : ராணி 23 - 11 - 2008 .

Tuesday, June 16, 2009

தத்துவ ஞானிகள் ! கால மாற்றம் .

முக்கியமான கிரேக்க தத்துவ ஞானிகள் மூவரில் ( சாக்ரடீஸ் , அரிஸ்டாட்டில் , பிளேட்டோ ) யாருக்கு யார் மாணவர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள ஆசிரியை சொல்லிக் கொடுத்த ஒரு சொல் :
' சாப்பிட்டாச்சா "
இதில் , சா - சாக்ரடீஸ் , பி - பிளேட்டோ , ஆ - ( சா ) அரிஸ்டாட்டில் . --- கோ . லஷ்மி , அசோக்நகர் .மங்கையர்மலர் .ஆகஸ்ட் 2008 .
கால மாற்றம் .
சூரியனின் விட்டம்
ஒலியின் வேகம்
கடலின் ஆழம் என
எதைக் கேட்டாலும்
அடுத்த நொடியே
பதில் சொன்ன
குழந்தை
மலங்க மலங்க
விழித்தது...
அத்தை என்பவர் யார் ?
சித்தப்பா என்றால்
என்ன உறவு ? என்று
கேட்டபோது !
--- லதா வில்சன் , புள்ளமங்கலம் . ராணி . 23 - 11 - 2008 .

Monday, June 15, 2009

காந்தி கணக்கு .

அசலான காந்தி கணக்கு என்பது , நேர்மையான உச்சமான அடையாளம் .
தபாலில் வந்த அஞ்சல் உறையைப் பிரித்து வைத்து உட்பக்கத்தை ஒரு பக்கக் காகிதமாக பயன்படுத்திய சிக்கனவாதி காந்தி . ஒவ்வொரு காசுக்கும் கணக்கு எழுதியவர் ; எதிர்பார்த்தவர் ; நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டவர் .
ஆசிரமத்துப் பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இளைய மகன் மணிலால் , தன் அண்ணன் ஹரிலாலுக்குக் கடனாக அவசரத்துக்கு கைவசம் இருந்த ஆசிரமப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தது தெரிந்ததும் காந்தி எடுத்த கடும் நடவடிக்கை இன்றைக்கும் கற்பனை செய்ய முடியாதது . சென்னைக்குச் செல்ல ஒரு வழி டிக்கட் எடுத்து மணிலால் கையில் கொடுத்துவிட்டு , ' அடுத்த ஒரு வருடத்துக்கு சென்னையில் உழைத்துப் பிழைத்து உன் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்கும் நீயே காசு சம்பாதித்தால்தான் உனக்கு இதன் அருமை தெரியும் ' என்று சொல்லிவிட்டார் . போகிற இடத்தில் யாரிடமும் காந்தி மகன் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது என்பது இன்னொரு நிபர்ந்தனை . மணிலால் அப்படியே சென்னை நடைபாதைகளில் படுத்துத் தூங்கி ஓராண்டு உழைத்து வாழ்ந்தபின் அப்பாவிடம் திரும்பினார் .
இன்றைய அரசியலில் அப்படிப்பட்ட அப்பா -- பிள்ளைகளை எதிர்பார்த்தால் அது நம் தவறுதான் .
--- ஞாநி , ஓ...பக்கங்கள் . குமுதம் 18 - 03 -2009 .

Sunday, June 14, 2009

சாக்ரடீஸ் .

சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாகக் கூறப்படுகிறது . அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை . தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம் , தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார் . ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை . அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர் . அதில் ஒருவரான பிளாட்டோ , சாக்ரடீஸ் பற்றிய சிந்தனைகளை பல புத்தகங்களாக எழுதினார் . இந்த புத்தகங்கள் மூலம்தான் சாக்ரடீஸ் பற்றி வெளி உலகத்துக்கு தெரியவந்தது .
சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது . அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினான் . இளைஞர்களைக் கெடுக்கிறார் , கிரேக்கர்கள் தொழுது வரும் கடவுள்களை தூற்றி , ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார் , வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் , சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார் , புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார் . சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .
இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ் , என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்குவிசாரணை செய்ய விரும்பவில்லை . என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் . நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் . ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்ப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம் என்றார் .
இதன் பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது . மரணம் , மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்தனர் . 220 பேர் சாக்ரடீஸை மன்னித்துவிடுமாறும் , 281 பேர் மரணதண்டனை அளிக்கவும் வாக்களித்தனர் . எனவே சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339 ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார் . அப்போது விழாக்காலம் என்பதால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்துவைக்கவேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது . சாக்ரடீஸை தப்ப வைக்க கிரீடோ என்பவர் ரகசியமாக சிறைக்கு சென்று சந்தித்தார் . ஆனால் சாக்ரடீஸ் தப்பிக்க விரும்பவில்லை . திட்டமிட்டபடி 30 நாட்கள் கழித்து விஷம் கொடுத்து சாக்ரடீஸ் கொல்லப்பட்டார் .
--- தினமலர் 15 - 02 -2009 .

Saturday, June 13, 2009

ஆஸ்கர் விருது .


இந்த பெருமைக்குரிய விருதைப் பெறும் நான்காவது இந்தியர் , முதல் தமிழர் ஏ.ஆர். ரகுமான் . ஆஸ்கர் அவார்டின் அமெரிக்கப் பெயர் அகாடமி விருதுகள் . ' அகாடமி ஆப் மோஷன்பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ' என்ற அமைப்பால் உலகம் எங்கும் ஒரு ஆண்டில் வெளியாகும் சிறந்த படங்கள் , இயக்குனர்கள் , இசையமைப்பாளர்கள் , எழுத்தாளர்கள் , நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துத் தரும் விருதுகள் தான் ஆஸ்கார் . ( பெரும்பாலும் அமெரிக்க , பிரிட்டிஷ் படங்கள் தான் விருது பெறும் ) .
ஆஸ்கார் தேர்ந்தெடுக்கும் அமைப்பில் இப்போது 5829 பேர் அங்கத்தினராக இருக்கிறார்கள் . இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நடிகர்கள் . இந்த அங்கத்தினர்கள் அளிக்கும் ஓட்டுக்களைக் கணக்கெடுத்து சீர்படுத்துவதற்காக இன்னொரு நிறுவனம் வேலை செய்கிறது .
1929ம் ஆண்டு முதன் முதலாக ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன . இன்று 80 ஆண்டுகளைக் கடந்து விட்டது ஆஸ்கார் . பிரிட்டானியம் என்ற உலோகத்தில் தங்க பாலீஷ் போடப்பட்ட ஆஸ்கார் விருதுச் சிலையின் விலை ஒரு டாலர் தான் .ஆனால் , மதிப்போ பல கோடிகள் . பின்னணி இசை மற்றும் பாடல் இசைக்கான 2 விருதுகளை பெற்றுள்ள ரகுமானுக்கு நம் வாழ்த்துக்கள் .
--- தினமலர் , சிறுவர்மலர் . மார்ச் 6 , 2009 .

Friday, June 12, 2009

தாஜ்மகால் .

முகலாய மன்னரான ஷாஜகான் தன்னுடைய 20-வது வயதில் அர்ஜுமான் பானு பேகம் என்பவரை மணந்தார் . இவர் தான் பின்னாளில் மும்தாஜ் என்று அழைக்கப்பட்டார் . இவருக்கும் ஷாஜகானுக்கும் 1613 லிருந்து 1631 வரை 11 குழந்தைகள் பிறந்தன .
அவர்களில் நான்கு குழந்தைகள் தான் உயிரோடு பிழைத்தன . அதில் ஒருவர் ஔரங்கசீப் . கடைசி பெண் குழந்தையான கவுகனாராவைப் பெற்றெடுத்த போது தான் பிரசவ பிரச்னைகளில் மும்தாஜ் இறந்து போனார் .
தன் அன்புக்குரிய மனைவியின் மரண்த்தை ஷாஜகானால் தாங்க முடியவில்லை . முதலில் பர்கான்பூர் என்ற ஊரில் புதைக்கப்பட்ட மும்தாஜின் உடல் , பிறகு தோண்டி எடுக்கப்பட்டு , யமுனை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டது . அந்த இடத்தில் தான் , மும்தாஜுக்கு பளிங்கினாலான மாளிகையைக் கட்டினார் ஷாஜகான் . தாஜ்மகால் என்று பெயரிடப்பட்ட அந்த கனவு மாளிகையை கட்டி முடிக்கவே 22 ஆண்டுகள் ஆயின . இதன் நீளம் 1900 அடி , அகலம் 1000 அடி . தாஜ்மகாலைக் கட்டிய தலைமைச் சிற்பியின் பெயர் உசுதாத் இசா என்ற பாரசீகர் .இரவு நேரத்தில் நிலவொளியில் தாஜ்மகாலைக் காண்பது மெய்சிலிர்க்க வைக்கும் .
--- தினமலர் , சிறுவர்மலர் . மார்ச் 6 . 2009 .

Thursday, June 11, 2009

ஆம் காலம் ஆகும் !

மலையத்துவஜ பாண்டியனின் மகள் மீனாட்சி , தகப்பனார் மறைந்த பிறகு , தான் அரச காரியங்களைக் கவனிக்கிறாள் .அவள் திருமண ஞாபகமே இல்லாமல் , அரச காரியங்களிலேயே ஈடுபட்டிருந்ததைக் கண்டு , அவளுடைய தாயார் காஞ்சனமாலை கவலையுறுகிறாள் . ஆனால் , மீனாட்சியோ அம்மாளைத் தேற்றுகிறாள் . " அம்மா ! ஆம் காலத்தில் எல்லாம் ஆகும் . வீணாகக் கவலைப்படாதே !" என்கிறாள் .
ஆம் காலத்தில் ஆகும் என்றால் , எது எது எந்தக் காலத்தில் ஆகவேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ , அந்தக் காலத்தில் ஆகும் என்பது பொருள் . அதனால் , ஆண்டவனே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவான் , நாம் கைகளைக் கட்டிக்கொண்டு பேசாமல் இருக்கலாம் என்பது பொருள் அல்ல .
ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் முயற்சி தேவையா, அல்லது திருவருள் இருந்தால் மட்டும் போதுமா என்கிற பிரச்சினை வெகு காலமாகவே மக்களைக் குழப்பி வருகிறது . இதற்குப் பதில் , முயற்சியும் வேண்டும் , திருவருளும் வேண்டும் என்பதுதான் . நிலத்தில் பயிர் விளைய, எப்படி நாம் உழவும் வேண்டும் , மழை பொழியவும் வேண்டுமோ , அதுமாதிரி இரண்டும் தேவை . ஆண்டவன் நமக்காக உழமாட்டான் , நாம்தான் உழ வேண்டும் . மழையை நம்மால் கொண்டு வர முடியாது , அவன் தான் கொடுக்க வேண்டும் .
ஆம் காலத்தின்போது ஆகும் என்று சொன்ன மீனாட்சிகூட , கணவன் தன்னைத் தேடிக் கொண்டு வருவான் என்று காத்திருக்கவில்லை . அவள் திக் விஜயம் செய்கிறாள் . பலரை வெற்றி கொள்ளுகிறாள் . கடைசியில் அவள் சிவனைச் சந்தித்ததும் , அவளுடைய மூன்றாவது பால் உறுப்பு மறைய , அவன்தான் தன் கணவன் எனத் தேர்கிறாள் . அவள் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் , அதாவது திக் விஜயம் கிளம்பாமல் இருந்திருந்தால் சிவனைச் சந்தித்து இருக்க முடியுமா?
--புலவர் சிதம்பரம் சுவாமிநாதன் .கடம்பத்தூர் சைவ சித்தாந்தக் கழகத்தில் , நிகழ்த்திய , " தெய்வத் திருமணங்கள் " சொற்பொழிவின் போது . வியா , நவ ,16 , 1989 .

Wednesday, June 10, 2009

முழுப் பைத்தியம் .

புதிதாக ஒரு பள்ளியில் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் , மாணவர்களை திணற அடிக்க வேண்டும் என்பதற்காக , வகுப்பில் நுழைந்தவுடன் மாணவர்களை நோக்கி , " சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் 100 கிலோ மீட்டர் என்றால் என் வயது என்ன ? " என்றார் .
ஒரு மாணவன் சற்றும் தாமதியாமல் " 32 வயது " என்றான் . ஆசிரியருக்கோ ஆச்சரியம் தாங்க முடிய வில்லை . " எப்படி கண்டுபிடித்தாய் ? " என்றார் .
மாணவன் அமைதியாக கூறினான் . " ஐயா , எங்கள் ஊரில் ஒரு அரைப் பைத்தியம் இருக்கிறது . அதற்கு வயது 16 " .
--- தினமலர் வாரமலர் . 24 -07 -1983 .

Tuesday, June 9, 2009

கின்னஸ் சாதனை !

2 நிமிடத்தில் 51 கார மிளகாய் : இந்திய பெண் கின்னஸ் சாதனை .
2 நிமிடங்களில் 51 காரமான மிளகாயைத் தின்று இந்தியாவைச் சேர்ந்த பெண் கின்னஸ் சாதனை படைத்தார் .
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் அனந்திதா தத்தா தாமுலி ( 28 ) .
உலகத்திலேயே காரம் அதிகம் உள்ள மிளகாய் என்று 2007 -ல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மிளகாயைத் தின்று உலக சாதனை படைக்க நினைத்தார் அனந்திதா .
சாதாரண மிளகாயின் காரத்தை விட ' அசாம் மிளகாய் ' காரம் 10 லட்சம் யூனிட்கள் அதிகம் .இதிலிருந்து நாம் சாறு எடுத்தால் அதன் காரம் வழக்கமான மிளகாயை விட கிட்டத்தட்ட 5 ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் . மிளகை விட அதிகபட்சம் 8 ஆயிரம் மடங்கு காரத் தன்மை கொண்டது .
அசாம் மிளகாயை சாப்பிட ஆரம்பிக்கும் முன்னர் , அந்த மிளகாயில் 2 ஐ எடுத்து , தன் கண்களில் தேய்த்துக் கொண்டார் .
அனந்திதாவின் சாதனைக்கு முன்னதாக அவரது டேபிளில் வைக்கப்பட்டிருந்த மிளகாயைக் கடித்துப் பார்த்த இங்கிலாந்து சமையல் கலைஞர் ராம்சே , ' அய்யோ சாமி , ஆளை விட்டா போதும் இது ரொம்பவும் காரம் ' என்று கமென்ட் அடித்தார் . இப்போது சொல்லுங்கள் இது கின்னஸ் சாதனைதானே .
--- தினமலர் . 12 - 04 - 2009 .

Monday, June 8, 2009

வர்த்தமானர் .

வாராது வந்த மாமணி வர்த்தமான மகாவீரர் .
உலக வரலாற்றில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு காலத்தால் போற்றுதற்குரிய சிறப்பானதொரு காலப் பெட்டகம் ஆகும் .தத்துவ விசாரணைகளும் , ஐயமனப்பான்மைகளும் கலந்திருந்த காலம் .
வர்த்தமான மகாவீரர் , கௌதம புத்தர் , கன்பூஷியஸ் , ஹிராக்ளடஸ் , லாசோ போன்ற போற்றுதற்குரிய ஆசான்களின் சகாப்தமாக அமைந்த நூற்றாண்டு ,
இந்த வேளையில் , சமண சமயத்தை தோற்றுவித்ததாகக் கருதப்படும் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வரலாற்று அறிஞர்களால் ஆழ்ந்து தெளிந்து ஒப்புக் கொள்ளப்பட்டவர் ஆவர் .
வர்த்தமானர் கி.மு. 599-ல் வைசாலிக்கு அருகில் உள்ள குண்டலபுரம் என்ற இடத்தை அரசாண்ட சித்தார்த்தன் என்பவருக்கும் த்ரிசலாதேவி அம்மையாருக்கும் மகனாய் அவதரித்தார் .இளைஞராக இருந்தபோது இவர்தம் நெஞ்சுரத்தைக் காண விரும்பிய தேவனொருவர் நெடும் பல அரவாகக் கடுந்தோற்றம் பூண்டு மரம் ஒன்றினை பின்னிப்பிணைந்து நின்ற போது விளையாடிக் கொண்டிருந்த வர்த்தமானர் என்ற பயமறியா பாலகன் அந்த பாம்பின் தலையின் மீது கால் வைத்து ஆடியதாகவும் அதன் கண் இமையவன் இவரை மகாவீரர் எனப்பெயரிட்டு போற்றினன் என மரபுக் கதைகள் உண்டு .
இல்லற் வாழ்வில் சிறிதும் நாட்டமின்மையால் , தம்முடைய தமையனார் நந்தி வர்த்தனரின் உடன்பாட்டுடன் தம் 30-ஆம் அகவையில் வீட்டைத் துறந்து துறவறம் மேற்கொண்டார் மகாவீரர் . பின்னர் ஆடைகளைத் துறந்த துறவியாக 13 ஆண்டுகள் மிகக்கடுமையான விரதங்கள் மேற்கொண்டு தனது 44-வது வயதில் மெய்யறிவு பெற்றார் . அது முதல் ஜீனர் ( வெற்றி பெற்றவர் ) என்றும் இவரை பின்பற்றுவோர் ஜீனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் . சுமார் 30 ஆண்டுகள் சித்தாந்தியாக பாமரரும் தெளிந்து விரும்பும் தமது புதுக் கருத்துக்களை பரப்பிய வண்ணம் பல இடங்கள் சுற்றி வந்தார் . தமது 72 -வது வயதில் இராஜகிருகத்திற்கு அருகில் பாவாபுரி என்னும் இடத்தில் வீடுபேறு அடைந்தார் .
--- கா. இர. குப்புதாசு . வடக்கு வாசல் .ஜனவரி , 2009 . 5A / 11032, Second Floor, Gall No. 9 , Sat Nagar, Karol Bagh, NEW DELHI - 110 005 .

Sunday, June 7, 2009

மோனோலிஸா யார் ?

லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ் பெற்ற ஓவியம் ' மோனோலிஸா '
இணையற்ற அழகும் , செல்வமும் ஒருங்கே பெற்ற ' லிஸா கொர்டினி ' என்ற பெண்ணின் உருவம்தான் மோனோலிஸா . அவள் கணவனின் பெயர் மெஸ்ஸர் கியோகோண்டா .
தனது 21 -வது வயதில் , டாவின்ஸி படம் வரைவதற்காக லிஸா மாடலாக உட்கார்ந்தாள் . ஆனால் , டாவின்ஸி வரைந்து முடிக்க ஆறு வருடங்கள் ஆகிவிட்டன .
அந்தப் படம் வரைய ஆரம்பிப்பதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் லிஸா கொர்டினியின் குழந்தை இறந்தது . இப்போது புரிகிறதா , மோனோலிஸாவின் கறுப்பு உடைக்கும் , அவளது முகத்தில் நிழலாடும் சோகத்துக்கும் காரணம் ?
-- எஸ் . ரஜத் . ஆனந்தவிகடன் . 11 - 03 - 2009 .
" ஈஸி கோல் "
"ரஷ்யாவும் அமெரிக்காவும்தான் முதன் முதலில் விண்வெளியில் மனிதனை அனுப்பிச் சாதனை புரிந்த நாடுகள் . முதன்முதல் என்பதால் , இரண்டு நாடுகளுமே தொழில்நுட்பரீதியாகப் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . சாதாரண இங்க் பேனா கூட சவாலாக இருந்தது . விண்வெளியில் வீரர்கள் குறிப்பெடுக்கப் பேனா வேண்டும் . ஆனால் , இங்க் பேனாவை அங்கே பயன்படுத்த முடியாது . ஏனென்றால் , இங்க்கை வெளியில் கொண்டுவரும் புவியீர்ப்பு விசை விண்வெளியில் கிடையாது . இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன செய்வது ?
மண்டையை உடைத்துக்கொண்ட அமெரிக்கா பல மில்லியன் டாலர் செலவு செய்து விண்வெளியில் எழுதுவதற்காக ஒரு பேனாவைத் தயாரித்து அனுப்பியது . ஆனால் , இதே பிரச்னையை ரஷ்யா எப்படிச் சமாளித்தது தெரியுமா ? ரொம்ப சிம்பிள் . குறிப்பு எடுப்பதற்காக , விண்வெளி வீரர்களிடம் ரஷ்யா கொடுத்து அனுப்பியது பென்சில் ! "
--- எஸ் . பரந்தாமன் , சென்னை - 120 . ஆனந்தவிகடன் , 11 - 03 - 2009 .

Saturday, June 6, 2009

ஆஸ்கார் விருதும் .குப்பத்து நாயும்

உலக அளவில் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகையே , இந்தியாவில் இருந்து உருவாகிவரும் கோடீஸ்வரர்களை அடையாளம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது . ஆனால் , சமீபத்தில் வெளியான ' ஸ்லம்டாக் மில்லியனர் ' படம் போர்ப்ஸ் பத்திரிகை செய்தியை பொய் என்று சொல்லாமல் சொல்லிவிட்டது . அதாவது , போர்ப்ஸ் பத்திரிகையில் வரும் செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பெறும் இந்தியர்களுக்கு அறிவும் , ஆற்றலும் இல்லை . குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகவே இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று மூக்கில் குத்தியது போல் கூறியுள்ளது .
உலக அளவில் இந்தியர்கள் மனித உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் . இது உலக நாடுகள் ஒப்புக்கொண்ட உண்மை . ஐரோப்பா , அரபு நாடுகள் , கிழக்காசிய நாடுகளை வளப்படுத்தும் பணிகளில் , மழை , வெயிலில் அயராது உழைப்பவர்கள் தமிழர்களே , இந்தியர்களே . ஆனால் , ஹாலிவுட்காரர்கள் இந்தியர்களை குப்பத்து நாய் என்று தைரியமாக சொல்லி , அதை படம் பண்ணி காசு பார்த்து விட்டார்கள் . ' சபாஷ் , உலக அரங்கில் வேகமாக முன்னேறிவரும் இந்தியர்களை சரியாக மட்டம் தட்டினீர்கள் ' என்று ஹாலிவுட் சினிமா உலகம் பாராட்டி , அதற்கு ஆஸ்கார் விருதும் கொடுத்துள்ளார்கள் . இந்தியர்களை சினிமா மூலம் திட்டினால் கண்டுகொள்ள மாட்டார்கள் , மகிழ்ந்து கூத்தாடுவார்கள் என்று புரிந்து கொண்டு , நமது ஊரில் சினிமா எடுத்து , நம்மையே மட்டம் தட்டி பெருமை அடைந்திருக்கிறார்கள் ஹாலிவுட் சினிமாக்காரர்கள் .அந்தப் படத்தை இசையால் தத்ரூபமாக்கியதற்காக நம்மவருக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள் . வாழ்க சினிமா .
--- சந்திரசேகரன் , அரியலூர் . தினமலர் , 06 - 03 -2009 .

Friday, June 5, 2009

வாலன்டினா தெரஸ்கோவா .

விண்வெளி சகாப்தத்தில் சாதனை படைத்த முதல் பெண்ணான வாலன்டினா தெரஸ்கோவா 1937 -ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி , ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார் .
இவரது முழு பெயர் வாலன்டினா விளாடிமிரோவ்னா தெரஸ்கோவா . அப்பாவுக்கு வயல்களில் டிராக்டர் ஓட்டும் வேலை . அம்மாவுக்கு நெசவு ஆலையில் வேலை . குடும்ப வறுமையால் , தனது 8 வது வயதில்தான் அவரால் பள்ளிக்கு சேர முடிந்தது . ஆனாலும் , தொடர்ந்து படிக்க முடியாத அளவுக்கு வறுமை வாட்டியதால் , 1953ல் அவர் பள்ளிக்கு டாட்டா காட்டி விட்டு தொலைதூரக் கல்வி முறையில் தனது படிப்பைத் தொடர்ந்தார் . இதில் அவர் படித்தாலும் , பாராசூட் ஜம்பிங்கில் அலாதி பிரியம் .இதற்காக உள்ளூரில் இருந்த விமானப் பயிற்சி கிளப் ஒன்றில் சேர்ந்து பாராசூட் ஜம்ப் பயிற்சி பெற ஆரம்பித்தார் . வாலன்டினாவின் பாராசூட் ஜம்பிங் பற்றி கேள்விப்பட்ட ரஷ்ய அரசு , அவரை விண்வெளி வீரர் பயிற்சிக்கு தேர்வு செய்தது . விண்வெளியைச் சுற்றிவந்த முதல் ரஷ்ய வீரரான யூரி காகரினுக்கு அடுத்தபடியாக , சோவியத் ராக்கெட் இன்ஜினியரான செர்கே கொரோல்யாவ் தலைமையிலான விண்வெளி குழுவில் இடம் பிடித்தார் வாலன்டினா . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1962 பிப்ரவரி 16ம் தேதி வெளியானது . ரஷ்யா -- அமெரிக்கா இடையிலான விண்வெளி யுத்தத்தில் , முதன்முறையாக ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்பி , அதிலும் தனது முத்திரை பதிப்பதில் முந்தியது ரஷ்யா . மிக் போர் விமானம் , இலகு ரக விமானம் , ராக்கெட் இன்ஜினில் பயிற்சி என்று பல பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த வாலன்டினா , 1963 ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி வோஸ்டாக் ராக்கெட்டில் வெற்றிகரமாக விண்ணுக்குப் பறந்தார் . விண்வெளியில் 3 நாட்கள் தங்கியிருந்த அவர் , 48 முறை உலகை வலம் வந்தார் .
--- தினமலர் . 06 - 03 - 2009 .

Thursday, June 4, 2009

எத்தனை பேர் ?

பட்டணம் செல்ல ஒரு ராஜா புறப்படுகிறார் . அவருடன் 9 மனைவிகள் புறப்படுகிறார்கள் . ஒவ்வொரு மனைவியின் பின்னால் 9 குழந்தைகள் போகின்றன . ஒவ்வொரு குழந்தையின் பின்னால் 9 நாய்கள் செல்கின்றன . ஒவ்வொரு நாயின் பின்னால் 9 குட்டிகள் செல்கின்றன .
அப்படியானால் , ராஜாவுடன் போனவர்கள் மொத்தம் எத்தனை பேர் ? ( விடை : 7380 ) . 17 - 12 - 1983 .
நாய் வால் !
நாயின் வாலை நிமிர்த்த ஒருவன் விரும்பினான் . வால் அளவுக்கு ஒரு இரும்புக் குழாய் செய்து , அதற்குள் நாயின் வாலை நுழைத்து , ஒரு தூணில் பிணைத்தான் .
ஒரு ஆண்டுகாலம் தூணோடு சேர்த்து இணைக்கப்பட்டிருந்த அந்த வாலுக்கு விடுதலை அளிக்க பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தான் . ஊருக்குப் பெரிய மனிதர் ஒருவர் விழாவிற்குத் தலைமை ஏற்றார் . அவனுடைய விசித்திர விழாவைக் காண பெருங்கூட்ட்ம் கூடியிருந்தது . இரும்புக் குழாயை உருவிப் பார்த்தபோது --
நாய் வால் வளைந்துதான் இருந்தது ! அதோடு இரும்புக்குழாயும் வளைந்து போயிருந்தது !
--- புலவர் கீரன் . கந்தபுராணச் சொற்பொழிவு . 24 - 12 - 1983 .

Wednesday, June 3, 2009

சிவ பக்தன் !

மகாலிங்க சுவாமிக்கு தைல அபிஷேகம் செய்ய ஒருவன் எள்ளைக் காய வைத்திருந்தான் . அதை ஒருவன் திருடி எடுத்து வாயில் போட்டுத் தின்று விட்டான் .
உடனே , எள்ளிற்குச் சொந்தக்காரன் சிவ கைங்கர்யத்திற்கு வைத்திருந்ததை எதுத்து விட்டதாக கூறி , எள் தின்றவனை அழைத்துப் போய் அரசர் முன்னிலையில் நிறுத்தி முறையிட்டான் .
வரகுண் பாண்டியர் அந்த எள் திருடனை நோக்கி , " எள்ளை எடுத்துத் தின்றது உண்மைதானா ? " என்று விசாரித்தார் .
திருடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான் . மீண்டும் அரசர் , " அந்த எள் சிவபெருமானின் தைல அபிஷேகத்திற்க்காக காய வைத்திருந்தது என்ற விஷயம் உனக்குத் தெரியுமா ? " என்றார் .
திருடன் , " ஆம் , தெரியும் " என்று பதில் கூறினான் .
அதைக் கேட்டதும் அரசர் கோபத்துடன் , " சிவ அபசாரம் செய்து விட்ட உன்னை இப்போதே இந்த வாளால் வெட்டி விடுகிறேன் " என்று சொல்லி உடனே வாளை உருவினார் .
திருடன் , " அரசே ! நான் சொல்வதைத் தயை செய்து கேளுங்கள் . எள்ளைத் தின்றால் உழைக்கவேண்டும் . மகாலிங்க சுவாமியினுடைய எள்ளைத் தின்றால் மீண்டும் பிறந்து அவருக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தை அடைவேன் . அதனால்தான் அவருடைய எள்ளைத் தின்றேன் ."
இதைக் கேட்ட அரசர் , " இவன் சிவபக்தன் , சிவத் தொண்டு செய்வதற்காகவே ஏள்ளை எடுத்துத் தின்றிருக்கிறான் , " என்று அவனது செயலை எண்ணி வியந்து , திருடனின் வாயைத் திறக்கச் சொல்லி அவனது வாயில் ஒட்டியிருந்த இரண்டொரு எள்ளையும் தாம் எடுத்துத் தின்றார் .
--- ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் . 04 - 12 - 1983 .

Tuesday, June 2, 2009

பவிஷ்யோத்திர புராணம் !

பவிஷ்யோத்திர புராணத்தில் மனித உடலை விட்டு உயிர் பிரியும் தருவாயின் 4 நிலைகள் விளக்கப்பட்டுள்ளன . அவை : ஆர்த்தம் , ரவுத்ரம் , தன்யா மற்றும் சுக்லம் என்பவையாகும் .
உலக வாழ்வின் பொருள் மயமான சுகங்களில் அளவுகடந்த ஈடுபாடு கொண்டு வாழ்ந்து , பற்றெனும் பாசக்கிணற்றில் உழன்று , வயதான காலத்தும் ஆசை அற்றுப் போகாத காரணத்தால் உலகை விட்டுப் பிரிய மனமின்றி வருந்தி காலதேவனால் கட்டாயமாக அழைத்துக் கொள்ளப்படும் உயிர்கள் முன்னிலும் துயரம் மிகுந்த பிறவியை மீண்டும் அடைவர் . இதுவே ஆர்த்தம் எனும் நிலையாகும் .
சிலர் போனால் போகட்டும் என்று எண்ணி உடல் அழிவைப் பொருட்படுத்தாது மரணத்தை எதிர்கொள்வர் . அவர்களுக்கு உயர்ந்த மனிதப்பிறவியே அடுத்த ஜென்மாவிலும் வாய்க்கின்றது . இதனை ரவுத்ரம் எனக்கூறுவர் .
தன்யா என்பதோ யோகியர் அடையும் நிலை . தெளிவு , அடக்கம் ,மவுனம் மற்றும் ஞானநிலை எய்தியவராக யோகியர் உடலைத் துறக்கின்றனர் . அவர்களே தேவனிலையை எய்துகின்றனர் .
சுக்லம் என்பது பூரணமாக பிரம்மத்துடன் கலந்துவிடும் பிறவாமை எனும் நிலையாகும் .
--- ஸ்ரீ ஜெகநாத சுவாமி . தினமலர் , பக்திமலர் , மார்ச் 5 . 2009 .

Monday, June 1, 2009

" அசோகனும் -- புத்தமதமும் "

மாமன்னன் அசோகன் போர்க்களத்தில் இருக்கிறான் . போர் முடியாததால் நெடுநாள் தங்க நேரிடுகிறது . தன் மகன் குணாளனுக்கு 5 வயது நிறைவதால் உரிய நாளில் பள்ளியில் சேர்க்கத் தலைநகருக்குத் தான் செல்லமுடியாத நிலைக்கு வருந்துகிறான் . உரிய நாளில் பள்ளியில் மகனைச் சேர்த்து விடுமாறு ஓலையெழுதி விடுகிறான் . அரண்மனை அதிகாரிகள் , படைத்தலைவர் , முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் அசோகனின் ஓலையைத் திருமந்திர ஓலை நாயகம் ( ஓலை படிக்கும் அதிகாரி ) உரத்துப் படிக்கிறான் : ' குமாரம் அத்தியாபசேத் ' -- குமாரனை அத்தியயனம் ( கல்விகற்க செய்க ) என்பதே அவ்வோலை வாசகம் . அதனைத் தவறுதலாக ' குமாரம் அந்தியாபசேத் ' -- குமாரனை அந்தகனாக ( குருடனாக ) ச் செய்க என்று ஓலைநாயகம் படித்து விட்டான் . எல்லோரும் உண்மையென்றே நம்பி விட்டனர் .அரசி அழுது புலம்பினாள் . அரண்மனையிலுள்ளோர் புழுவாகத் துடித்தனர் . அரசன் ஆணை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அரசவைப் பெருமக்களும் ஒப்புக்கொண்டனர் . வேறு வழியின்றி ஐந்து வயது சிறுவனான குணாளனின் கண்கள் குருடாக்கப்பட்டன . போர்களத்திலிருந்து திரும்பிய அசோகன் தன் மகனுக்கு நேர்ந்த நிலை கண்டு மயங்கி வீழ்ந்தான் . வாழ்நாளெல்லாம் துயரம் கவ்விய உள்ளத்தை வெளியுலகத்திற்குக் காட்டாமல் மறைத்து வாழ முயன்றான் . அம்முயற்சியில் தோற்றுப் போய் மன அமைதி தேடி புத்த மதம் சார்ந்தான் .
--- பிராகிருத மூலக்கதை . குமுதம் , 13 -01 - 1983 .