Wednesday, June 30, 2010

மருதாணி .

மருதாணியை ஆங்கிலத்தில் ' ஹென்னா ' என்பர் . ' ஹீனா ' என்ற அரேபிய சொல்லுக்கு ' மருந்து ' என்ற பொருள் . அதுவே ஆங்கிலத்தில் ' ஹென்னா ' என்று மாறியிருக்கிறது . ஹென்னா என்கிற மருதாணியின் இலைகளில் சிறிதளவு குளுக்கோசும் , ஹென்னா டானிக் அமிலமும் இருக்கின்றன . இந்த இரண்டும்தான், மருதாணியை கைகளில் இடும்போது சிவக்க வைக்கிறது .
--- எஸ். மாலதி , மன்னார்குடி . தினமலர் . பிப்ரவரி 6 . 2010 .

Tuesday, June 29, 2010

5 அம்மாக்கள் .

ஒவ்வொருவருக்கும் 5 அம்மாக்கள் :
1 . தேஹ மாதா : உடல் அளித்த அம்மா .
2 . கோமாதா ......: பால் அளித்த பசு .
3 . பூ மாதா.........: உணவு அளிக்கும் தாவரங்களை வளர்க்கும் பூமி .
4 . தேச மாதா....: தாய் நாடு .
5 . வேத மாதா...: தெய்வத்துடன் ஐக்கியமாக வழிகாட்டும் ஆன்மிக ஞானத்தை வழங்கும் வேதங்கள் .
--- பூஜ்யா . தினமலர், பிப்ரவரி . 6 . 2010 .

Monday, June 28, 2010

விபத்து !

சங்கரன்பிள்ளை நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தார் . ஒரு திருப்பத்தில் , எதிரில் வந்த காருடன் அவருடைய கார் மிக மோசமாக மோதியது . இரண்டு கார்களும் கவிழ்ந்தன . சங்கரன் பிள்ளை தவழ்ந்து வெளியே வந்தார் . மோதிய காரில் இருந்து ஓர் அழகான பெண் வெளியே தவழ்ந்து வந்தாள் .
அவள் சண்டையிடப்போகிறாள் என்று சங்கரன் பிள்ளை நினைத்திருக்க , அவள் புன்னகைத்தாள் . " நாம் சந்தித்து இனிய நண்பர்களாக வேண்டும் என்பதற்காகக் கடவுள் ஏற்பாடு செய்த விபத்து இது . இல்லை என்றால், கார்கள் தகரமாக நசுங்கிய பின்னும், நாம் இருவர் மட்டும் அடிபடாமல் எப்படித் தப்பித்திருப்போம் ?" என்றாள் .
அவளுடைய அழகு, சங்கரன் பிள்ளையை அசத்தியது .
" உண்மைதான் " என்று இளித்தார் .
" இதைப் போன்ற சந்திப்புகளை கொண்டாடுவதற்காகவே இதை என் பையில் வைத்திருப்பேன் " என்று அவள் தன் கைப்பையில் இருந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்தாள் . திறந்தாள் . சங்கரன் பிள்ளையிடம் நீட்டினாள் .
" உங்களுக்கு வேண்டியதை நீங்கள் அருந்திவிட்டு மிச்சத்தை எனக்குத் தாருங்கள் " என்றாள் .
சங்கரன் பிள்ளைக்குப் பெருமை பிடிபடவில்லை . பாதி பாட்டிலுக்கு மேல் காலி செய்துவிட்டு , அவளிடம் நீட்டினார் .
அவள் அதை வாங்கிக்கொண்டு, போனை எடுத்து டயல் செய்தாள் .
" யாருக்கு போன் ?" என்றார் சங்கரன் பிள்ளை .
" போலீஸுக்கு !"
" எதற்கு ?"
" குடித்துவிட்டு வந்து என் கார் மீது மோதிய உங்களை விசாரிப்பதற்கு " என்று சொல்லிவிட்டு அவள் அந்த ஒயின் பாட்டிலை அவருடைய காருக்குள் எறிந்தாள் . விபத்து நேர்ந்த நிலையிலும் கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்த அந்தப் பெண் எங்கே ?
--- சத்குரு ஜக்கி வாசுதேவ் . ஆ. விகடன் , 13. 01. 2010 .

Sunday, June 27, 2010

தங்கம் .

தங்கமே தங்கம் .
தங்கம் வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்குவது நல்லது . ஆனால், ஹால் மார்க் முத்திரை என்றால் என்ன என்று தெரியுமா?
தங்கத்தையும் செம்பையும் எந்த அளவுக்கு சேர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த ஹால் மார்க் முத்திரை இடுகிறார்கள் .
18 காரட் தங்கம் என்றால் அதில் 75.0 என்றும்
20 காரட் தங்கம் என்றால் 83.3 என்றும்
22 காரட் தங்கம் என்றால் 91.6 என்றும்
24 காரட் தங்கம் என்றால் 99.9 என்றும்
அச்சடிக்கப்பட்டிருக்கும் . இந்த தர அளவுகளை கவனித்து தங்கம் வாங்குங்கள் . இதன் விலையும் மாறுபடும் .
--- சரஸ்வதி அசோக்குமார் , சென்னை. தினமலர் . ஜனவரி 9 . 2010

Saturday, June 26, 2010

திருப்பதி .

* திருமலையில் வருடம் முழுவதும் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்கும் , மார்கழியில் மட்டும் திருப்பாவைதான் ஒலிபரப்பாகிறது .
* திருமலை மடப்பள்ளியில் வெங்கடாசலபதியின் தாயான வகுளமாலிகையின் திருவுருவத்தைக் காணலாம் . தன் மகனுக்காகத் தயாராகும் பிரசாதங்களை தாயாரே நேரடியாக மேற்பார்வையிடுகிறாராம் .
* விதம்விதமான நிவேதனங்கள் தயாரானாலும் வேங்கடவனுக்கு நிவேதனம் செய்வது மண்கலயத்தில் வைத்த தயிர் சாதம் மட்டுமே .
* வேங்கடவனுக்கு தினமும் ஒரு புதுப் பட்டுப்புடவை அலங்காரமாக அணிவிக்கப்படுகிறது .
* வெள்ளிக்கிழமைகளில் சிவனுக்குரிய வில்வ தளங்களால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது .
* திருமலையில் கொலுவு ஸ்ரீநிவாசர் முன்னால் தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.
* திருமலையில் கோவிந்தனுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் கறிவேப்பிலை சேர்ப்பதில்லை.
* ஏழுமலையான் கருவறையின் விமானத்தின் நான்கு புறங்களிலும் சிங்க உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன .
* திருமலையில் தினசரி கடைசி பூஜை , அரவணை சேவை. ஆதிசேஷனாகிய பாம்பின் மேல் பெருமாளை படுக்க வைக்கும் சேவை . தூங்கும் பெருமாளை எழுப்புவது காலையில் சுப்ரபாத சேவை .
* கீழ்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், திருச்சானூர் அலர்மேல்மங்கைத் தாயார், திருமலை சுவாமி புஷ்கரணி
வராஹ மூர்த்தி, ஏழுமலையான் -- இதுதான் தரிசன வரிசை !
--- தினகரன் ,ஆன்மிக மலர் . 02.01.2010.

Friday, June 25, 2010

அடிமைத்தளை, சுதந்திரம் .

" வண்டியிழுக்கும் குதிரையைப் பார்த்திருப்பீர்கள் . அதற்குக் கண் மறைப்பு ஒன்றை மாட்டியிருப்பார்கள் . அதன் பணி முடிந்த பிறகு , அதன் கண் மறைப்பை நீக்கியபிறகும் அது, தன் பார்வையை பக்கவாட்டிலும் படர விடாது . ஒரே நேர்ப்பார்வையாகதான் பார்க்கவேண்டும் என்பது அதற்கு அதன் கண் மறைப்பு விதித்திருந்த கட்டுப்பாடு.
அதேசமயம் போர்க் குதிரையை எடுத்துக்கொள்ளுங்கள் . அதன் கண்கள் மறைக்கப்பட்டிருக்காது . அதனால் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அதன் பார்வை நாலா பக்கமும் செல்லும் . தன் எஜமானரின் கட்டளைப்படி தான் ஓடும் வேகத்தை அதிகரிப்பதோ , குறைப்பதோ, அல்லது இடது , வலது பக்கம் திரும்புவதோ செய்வதோடு , அவருக்கு உதவும் வகையில் தானே பள்ளம் தாண்டுவது , தடை வந்தால் நிற்பது என்பதையும் செய்யும் . அதன் பணி முடிந்ததும் லாயத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அது தனக்களிக்கப்பட்ட சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை. அதாவது போர்க்களத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை இங்கே அது வெளிக்காட்டுவதில்லை ; பார்வை நாற்புறமும் சுழன்றாலும் அடக்கமாக நின்றிருக்கும் .
புரிகிறதா? வண்டிக்குதிரை போல முற்றிலும் அடிமையாக இருக்கக்கூடாது . அதே சமயம் , சுதந்திர போர்க் குதிரைபோல அடக்கமாக இருக்கவும் கற்கவேண்டும் ."
--- குஃபி ஞானி யின் விளக்கம் . தினகரன் . 02.01.2010 .

Thursday, June 24, 2010

தியாகராஜர் .

தியாகராஜரின் பூர்வீகம் ஆந்திரம். 1600 ம் ஆண்டு அவருடைய மூதாதையர் தமிழ்நாட்டில் திருவாரூரில் வந்து குடியேறினர் .1767 மே மாதம் 4ம் தேதி தியாகராஜர் பிறந்தார் . தந்தை ராமபிரும்மம், தாய் சீதம்மா. பெற்றோருக்கு இயல்பிலேயே இசை வளமும் குரல் வளமும் இருந்தது . அதுவே தியாகராஜரின் பிறவிச் சொத்தாக வந்தது .
' இன்னும் ஐந்தே நாட்களில் என்னை வந்தடைவாய் ' என்று கனவில் ராமன் கூறியதும் மகிழ்ச்சியால் துள்ளினார் தியாகராஜர் . சீடர்களிடம் அப்போது முதலே ராமநாம பஜனையைத் துவங்கச் சொன்னார் . அடுத்த ஐந்தாம் நாள் , 1847 ஜனவரி 6ம் தேதி புஷ்ய பகுள பஞ்சமி தினத்தில் ஓர் ஒளிப்பிழம்பாக அவருடைய ஆன்மா ராமனை அடைந்தது .
தியாகராஜர் பாடிய 24 ஆயிரம் கீர்த்தனைகளில் சுமார் 700 மட்டுமே கிடைக்கப் பெற்றுள்லன .
--- தினகரன் , ஆன்மிக மலர் . 02.01.2010 .

Wednesday, June 23, 2010

கும்பமேளா .

கும்பமேளா -- பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாகக் கொண்டாடப்படும் வட இந்தியத் திருவிழா . தென்னிந்தியாவிலும் இதே போன்று பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு வைபவம் நிகழ்கிறது -- மகாமகம் . தமிழ்நாட்டில் கும்பகோண்த்தில் மகாமகக் குளத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் புனித நீராடும் தனிச்சிறப்புமிக்க விழா.
இரண்டும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற ஒற்றுமை தவிர , முக்கியமான வித்தியாசம் ஒன்றும் உண்டு . ஆமாம் , மகாமகம் ஒவ்வொரு 12 ம் ஆண்டிலும் ஒரே தலத்தில் கொண்டாடப்படுகிறது . ஆனால், கும்பமேளா வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது . அதாவது நான்கு இடங்களில். ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை அடுத்தடுத்து .
1 ) உத்தரப்பிரதேசம், அலகாபாத்திலுள்ள கங்கை - யமுனை - சரஸ்வதி நதிகள் கூடும் பிரயாகை.
2 ) உத்தர்கண்ட், கங்கைக்கரையில் உள்ள ஹரித்வார் .
3 ) ஷீப்ரா நதிக்கரையில் உள்ள மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினி .
4 ) கோதாவரி நதி தீரதில் உள்ள மகாராஷ்டிர நாசிக் .
இப்படி நான்கு தலங்களில் முறைவைத்துக் கொண்டாடப்படுகிறது .
--- தினகரன் , ஆன்மிக மலர் , 16.01. 2010 .

Tuesday, June 22, 2010

சூரியனின் தேர் .

சூரியனின் தேர் ஒரு சக்கரத்தில் ஓடுகிறது . இத்தேர் செல்வதற்கான சுவடு கிடையாது . அது வாயு மண்டலத்தில் தான் போக வேண்டும் . அந்த வாயுக்களின் மண்டலம் 7, அவை ஒன்றன்பின் ஒன்றாக சூரிய ரதத்தை தன் தோள்களில் சுமந்து செல்கின்றன . பொதுவாக தேருக்கு எட்டு குதிரைகள் பூட்டுவார்கள் . ஆனால், சூரியனுடைய தேருக்கோ 7 குதிரைகள் பூட்டப்பட்டிருக்கின்றன . ஒளியின் வண்ணங்கள் 7 . அதையே ஏழு குதிரைகள் என்று குறிப்பிடுவதாகச் சொல்லலாம் . மயூர சதகம் சூரியக் குதிரைகளின் வர்ணம் -- பச்சை என்கிறது . அவை காயத்ரி, பிரகுஹதி, உஷ்ணிக், ஜகதி, திரிஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி என்பனவாகும் .
--- தினமலர் , ஜனவரி 7 . 2010.

Monday, June 21, 2010

செவ்வாய் கிரகம் .

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரும் ரஷ்யா , அங்கே ஒரு குரங்கை அனுப்பிவைக்க இருக்கிறது. குரங்கைக் கவனித்துக் கொள்ள ஒரு ரோபாட்டும் உடன் செல்லும். 540 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் வாழப்போகிறது அந்தக் குரங்கு .
--- இன்பாக்ஸ் , ஆ. விகடன் , 06.01. 2010 .

Sunday, June 20, 2010

எது அழகு ?

அன்னம் , கிளி , மயில் இவற்றில் எது அழகு அதிகம் ?
மூன்றின் அழகும் அடியோடு வெவ்வேறு வகை என்பதால் , தூய்மையான அழகு -- அன்னம் . புத்திசாலித்தனமான அழகு -- கிளி , கவர்ச்சியான அழகு -- மயில் ! ( ஆனால் , மயில் வாயைத் திறக்கக் கூடாது ! )
மாதவிடாய் !
பெண் மிருகங்களுக்கும் , பறவைகளுக்கும் மாதவிடாய் , மெனோபாஸ் போன்றவை உண்டா ? செய்தியைத் தங்கள் ஜோடிக்குத் தெரிவிக்குமா ?
வருடத்தில் சில சமயங்களில் மட்டுமே அவை தாய்மைக்குத் தயாராகும் . அப்போதுதான் உறவுக்கு அனுமதி ! அதைத்தான் ' in heat ' என்கிறோம் . அச்சமயம் அதனிடம் இருந்து தனி வாசனை வரும் . ஆகவேதான் ஆண் மிருகங்கள் அவ்வப்போது முகர்ந்து பார்க்கின்றன !
--- ஹாய் மதன் . ஆ . விகடன் , 06 . 01. 2010.

Saturday, June 19, 2010

உலக அதிசயம் -- யானைமலை .

உருவாகிறது ஒரு உலக அதிசயம் .
யானைமலையை குடைந்து கலைநகரம் . ஆய்வுக்குழு அமைத்து அரசு உத்தரவு.
மதுரை அருகே ஒத்தக்கடையில் இருக்கிறது யானைமலை . நகரில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருக்கும் தோற்றம் தெரியும் . 4 ஆயிரம் மீட்டர் நீளத்தில் ஆயிரத்து 200 மீட்டர் அகலத்தில் 400 மீட்டர் உயரத்தில் இருக்கிற இம்மலையை ' உலகின் மிகப்பெரிய கல் ' என்கின்றனர் . மலை வடிவமாக இருக்கும் இந்த ஒற்றைக் கல் பாறையை கலை வடிவமாக மாற்றி உலக அதிசயங்களில் ஒன்றாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒற்றைக் கல் பாறை யானை வடிவில் படுத்திருப்பது நலமல்ல .எனவே யானை நடையிடும் 900 அடி உயர புடைப்புச் சிற்பம் செதுக்கப்படும் . இதன் முன்புறம் 27 அடி இடைவெளிவிட்டு 400 அடி அகல , 864 அடி உயரத்தில் தஞ்சை கோபுரத்தை விட பெரிய கோபுரம் செதுக்கப்படும் . நூறடி அகல , 216 அடி உயரம் கொண்டதே தஞ்சை கோபுரம் .
ஓரங்கள் குடைந்து மிகப் பெரிய கூடங்கள் , சர்வ மத குடைவரை ஆலயங்கள் அமைப்பது , சங்கத்தமிழ் இலக்கியத்தை , திருக்குறளை ஓவிய, சிற்பங்களாய் செய்வது , மனித வரலாற்றை , புராணங்களை , இதிகாசங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை என்றென்றும் அழியாத காட்சிப் படிமமாய் மாற்றி வைப்பது என மேலும் பத்தாண்டுகளில் பணிகளை நிறைவு செய்யலாம் .
இம்மலையில் உள்ள நரசிம்ம பெருமாள் ஆலயம் , சமணப்ப்டுகைகள் என எந்த பழமைச் சின்னங்களும் சேதப்படாமல் , புதியவைகளை உருவாக்கி உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த யானைமலையை மாற்ற சிற்பக் கலைநகராக மாற்ற முடியும் . மலை குடையும்போது கிடைக்கும் கிரானைட் கற்கள் , கற் பலகைகள் , மணல் விற்றால் ரூ. 5,000 கோடி கிடைக்கும் . திட்டச் செலவு ரூ. 1, 500 கோடிதான் . இவ்வாறு , கடினப்பாறையினால் ஆன இம்மலையைக் குடைந்து சிற்பக்கலை நகரம் அமைக்க மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி முன்னாள் ஆசிரியரும் , பெருந்தச்சர் அவையம் நிறுவனரும், வக்கீலுமான தஞ்சாவூரைச் சேர்ந்த் அரசு ( 63 ) தெரிவித்தார் .
--- செ. அபுதாகிர் . தினகரன் 2 பிப்ரவரி 2010 .

Friday, June 18, 2010

போதி மரம் .

நடுநிசியில் அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் சித்தார்தர் ஏழாண்டுக் காலம் அலைந்த பிறகு , பாடலிபுத்திரத்துக்கு ( பாட்னா ) தெற்கே உள்ள காட்டில், ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தார். அது அரச மரம் . ஆங்கிலத்தில் Pipul tree என்பார்கள் . ' புத்தி ' தந்த மரம் ( The tree of Knowledge ) என்பதால் ' போதி மரம் ' என்று பிற்பாடு அழைக்கப்பட்டது .
அரச மரத்தின் கீழ் அமர்ந்ததால் சித்தார்த்தார் புத்த மகானாக ஞானம் பெற்றார் என்பதைவிட , அவருக்கு அகக் கண்கள் திறந்தபோது அரச மரத்தின் நிழலில் அவர் அமர்ந்திருந்தார் என்பதே சரி ! பிற்பாடு அந்த மரத்தில் இருந்து ஒரு பகுதி , இலங்கை அனுராதபுரத்தில் நடப்பட்டது . புத்த கயாவில் இருந்த மரம் பட்டுப்போனதால் , அனுராதபுரத்தில் துளிர்விட்டு வளர்ந்த போதி மரத்தில் இருந்து ஒரு பகுதி எடுத்துவரப்பட்டு மீண்டும் பாட்னாவில் நடப்பட்டது !
--- ஹாய் மதன் . ஆ. விகடன் . 30. 12. 2009 .

Thursday, June 17, 2010

புயல் !

புயலாக இருந்தாலும் , அது பிறக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் ! அட்லாண்டிக் கடலில் கிளம்பினால் , அதன் பெயர் hurrican . தென் சீன, மற்றும் ஜப்பான் அருகே கடலில் பிறக்கும் புயலுக்குப் பெயர் typhoon . அது சீன வார்த்தை ( tai fung ). இந்தியாவில் , வங்காளவிரிகுடா அருகே உருவானால் -- cyclone . Tomato என்பது வேறு .பூமிக்கும் வானத்துக்கும் இடையே பாலம் அமைத்துச் சுழலும் இந்தப் புயல் , வட அமெரிக்காவில் மட்டுமே உண்டு !
--- ஹாய் மதன் . ஆ. விகடன் . 30. 12. 2009.

Wednesday, June 16, 2010

ஹா..ஹா ..ஹி ..ஹி.

* " ' காதலிக்கிறது ஒரு கலை 'ன்னு லவ்வர் அடிக்கடி சொல்றதோட அர்த்தம் எனக்கு இப்பதான் புரியுது !"
" என்னாச்சு ?"
" கலைச்சிடச் சொல்றார் !"
* " அந்தப்புரத்தில் அதிக நேரம் பொழுதைப் போக்க வேண்டாம் எனக் கூறினேனே, மன்னா?"
" அதற்கென்ன இப்போது அமைச்சரே ?"
" மக்கள் உங்களை ' அந்தப்புறம்போக்கு ' என அழைக்கிறார்கள் மன்னா !"
* " டாக்டர் ஆபரேஷன் தியேட்டர்ல இருக்காரா எப்போ வருவார் ?"
" செத்த நேரத்துல வந்துடுவார் !"
* " சிவகாசிக்கும் , நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க ?"
" சிவகாசியில காசை கரியாக்கிறான், நெய்வேலியில கரியை காசாக்கறான் !"
* " கபாலி, நேத்து ஏன் மாமூல் கொண்டுவரல ?"
" காய்ச்சலு எஜமான் !"
" இன்னைக்கு ஏன் கொண்டுவரல ?"
" காய்ச்சல எஜமான் !"
* " தலைமுறை தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடறமாதிரி எங்க தாத்தா பண்ணி வெச்சுட்டுப் பொயிட்டாரு !"
" அவ்வலவு சொத்துக்களா ?"
" இல்லை...! டைனிங் டேபிள் !"
* " நான் ஒரு கேள்வி கேட்பேன் . அதுக்கு தெரியும் அல்லது தெரியாதுன்னு மட்டும் தான் பதில் சொல்லணும் ?"
" சரி கேளு "
" நீங்க ஒரு லூசுன்னு உங்க வீட்டுக்குத் தெரியுமா ?"

Tuesday, June 15, 2010

' ஒய்2கே'

2000 என்ற எண்ணை கணினியின் மென்பொருளுக்கு எப்படிப் புரியவைப்பது என்று உலகில் வளர்ந்த நாடுகளுக்கு எழுந்த கவலைதான் 'ஒய்2கே ' என்ற விடிவாக வடிவெடுத்து, இந்திய இளைஞர்களின் தகவல் தொழில் நுட்பத் திறனுக்கு வெற்றிலை பாக்குவைத்து வரவேற்பு கொடுத்தது . அதுதான் , இந்திய தேசத்தின் மற்ற பல திறமைகளுக்கும் அருமைகளுக்கும் கடவுச் சீட்டாகவும் அமைந்தது .
பி. ஸி. ஜி .
சுமார் 60 வருஷங்களுக்கு முன் , க்ஷயரோகக் கிருமிகளை கால்மேத் , கெரின் என்ற இரு பிரெஞ்சு நிபுணர்கள் கண்டுபிடித்தார்கள் . ' பாஸில் ' என்றால் கிருமி என்று அர்த்தம் . இந்த நிபுணர்களின் பெயரையே அந்தக் கிருமிக்கு வைத்து , ' பி.ஸி. ஜி. என்று குறிப்பிட்டு வருகின்றனர் . இந்தக் கிருமியினின்று பாதுகாத்துக் கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு அம்மை மருந்திற்குதான் ' பி. ஸி. ஜி . வாக்ஸைன் ' என்று பெயர் .
--- ஆனந்தவிகடன் . 30. 12. 2009 .

Monday, June 14, 2010

பெஸ்ட் அறிவுரை.

என் தோழியை எப்போது சந்தித்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற best அவசியம் என்பாள் . " அது என்ன பெஸ்ட் ?" என ஒரு முறை கேட்டேன் . அவள் சொன்ன விளக்கம் இது...
. 1 . B -- Beleive in yourself ( உங்களை நம்புங்கள் ).
2 . E -- Enhance your skills ( திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் ) .
3 . S -- Stive for gold ( உயர்ந்தவைகளை அடைய முயலுங்கள் ).
4 . T -- Target the moon ( நிலவின் உயரத்தை லட்சியமாக வையுங்கள் )
வாழ்க்கையில் இந்த best வேண்டும் என்கிறாள் என் தோழி ! இது பெஸ்ட் அறிவுரைதான் இல்லையா ?
--- ராஜி , வெங்கடபுரம் . அவள் விகடன் . 10.10.2008 . இதழ் உதவி : கு. மகேஷ் . திருநள்ளாறு.

Sunday, June 13, 2010

வலம்புரிச் சங்கு !

பொதுவாக நமது இறை வழிபாட்டிலேயே சங்குக்கு முக்கிய பங்கு உண்டு . தர்மத்தின் வடிவம் என்பதால் பஞ்ச பாண்டவர்களின் கைகளில் ஒவ்வொரு விதமான பெயர்களில் விளங்குகிறது . தருமர் வைத்துள்ள சங்கு , ' அனந்த விஜயம் ' என்றும் , அர்ஜுனர் வைத்திருக்கும் சங்கு, ' தேவதத்தம் ' என்றும் , பீமசேனன் வைத்திருக்கும் சங்கு , ' மகாசங்கம் ' என்றும், நகுலன் வைத்திருக்கும் சங்கு, ' சுகோஷம் ' என்றும் , சகாதேவன் வைத்திருக்கும் சங்கு, ' மணிபுஷ்பகம் ' என்றும் அழைக்கப்படுகிறது . ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் இடக்கையில் வைத்திருக்கும் ' பாஞ்சஜன்யம் ' என்ற சங்கு, இறந்தவருக்கு நற்கதி அளிக்கக்கூடியது .
சங்குகளில் மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகையும், அரிய வகையான வலம்புரிச் சங்கும் தோற்றங்களால் வேறுபட்ட இன்னும் 7 வகை சங்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை . இந்த பதினாறு வகை சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்ததும் தெய்வத்தன்மை கொண்டதும் ஆகும் .
--- குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் . 10. 10. 2008. கு. மகேஷ் . திருநள்ளாறு.

Saturday, June 12, 2010

நட்சத்திரம் -- மரங்கள் !

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரகாரர்களின் மரங்கள் இவை :
அஸ்வதி -- எட்டி, பரணி -- நெல்லி, கார்த்திகை -- அத்தி, ரோகிணி -- நாவல், மிருகசீரிஷம் -- கருங்காலி , திருவாதிரை -- செங்காலி, புனர்பூசம் -- மூங்கில் , பூசம் -- அரசு , ஆயில்யம் -- புன்னை, மகம் -- ஆல், பூரம் -- புரசு ( பலாசு என்பது புரசமரத்தை குறிக்கும்) உத்திரம் -- இலந்தை, அஸ்தம் -- மகாவில்வம் , சுவாதி -- மருதம், சித்திரை -- அகண்டவில்வம், விசாகம் -- விளா, அனுஷம் -- மகிழம் , கேட்டை -- பராய், மூலம் -- மரா, பூராடம் -- வஞ்சி, உத்திராடம் -- பலா, திருவோணம் -- எருக்கு, அவிட்டம் -- வன்னி, சதயம் -- கடம்பு, பூரட்டாதி -- மா, உத்திரட்டாதி -- வேம்பு, ரேவதி -- இலுப்பை .
--- குமார சிவாச்சாரியார் . அவள் விகடன் . 02. 01. 2009. இதழ் உதவி : கு. மகேஷ் . திருநள்ளாறு

Friday, June 11, 2010

விருந்து - மருந்து .

எந்த ஒரு காரியத்தையும் சரியான நேரத்தில் செய்தால் செய்கிற காரியம் சிறப்பாக நடக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை . அவர்கள் கருத்துப்படி ஒரு இடத்திற்கு விருந்துக்குச் செல்ல ஏற்ற நாட்கள் : திங்கள் , புதன் , வெள்ளி ! அந்த நாட்களில் உறவுகளைப் பார்க்கச் சென்றால் உற்சாகமாகவும் , உறவு பலமாகவும் இருக்கும் என்பது அவர்கள் எண்ணம் . அதேபோல் எந்த ஒரு நீண்டகால நோய்க்கும் மருந்துகள் சாப்பிடத் துவங்கும் பொழுது , செவ்வாய் , வியாழன், சனிக்கிழமைகளில் சாப்பிட ஆரம்பிப்பது நல்லது . நோய் சீக்கிரம் குணமாகும் என்பதும் அவர்கள் நம்பிக்கை . அதனால்தான் பெரும்பாலான சித்த மருத்துவர்கள் இந்த மூன்றில் ஒரு நாளில் மருந்தை முதன்முதலில் சாப்பிடச் சொல்வதுண்டு !
--- தகவல் தமயந்தி . குமுதம் 30. 12. 2009.

Thursday, June 10, 2010

நில் , கவனி , வாழ் !

முயற்சி தோற்றால் வெற்றி இழப்பு
முயற்சிக்கத் தோற்றால் வாழ்க்கையே இழப்பு !
நீ பிறந்தது தரித்திரமாக இருந்தாலும்
வாழவது சரித்திரமாக இருக்க வேண்டும் !
வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஆனால்
அதற்கான தகுதி அனைவருக்கும் உண்டு ...முயன்றால் !
வாய்ப்புகளை பெறுபவன் அதிஷ்டசாலி
உருவாக்குபவன் புத்திசாலி
பயன்படுத்திக் கொள்பவன் திறமைசாலி !
நேற்று நடந்ததை நினைத்திருந்தால்
நாளை நடப்பது பிழையாகும் !
--- ஹ. தாஹிராபானு . அவள் விகடன் . 23. 10 . 2009. இதழ் உதவி : கு. மகேஷ் . திருநள்ளாறு

Wednesday, June 9, 2010

மனஸ்தாபம் .

சினன சினன விஷயங்களுக்கெல்லாம் மனஸ்தாபம் கொண்டு பேச்சை நிறுத்தி விடுவது நண்பர்கள் மத்தியிலும் , கணவன் மனைவியிடையேயும் பழக்கமாக இருக்கிறது . இது தேவையில்லாதது . இப்படித்தான் ஒரு குடும்பத்தில் கணவன் -- மனைவி சண்டை போட்டுக் கொண்டதால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நின்று போனது . ஆனாலும் , வாழ்ந்தாக வேண்டுமே !
அதனால் கணவர் ஏதாவது சொல்ல நினைத்தால் அதைத் தாளில் எழுதி மனைவியிடம் காட்டுவார் . அந்தம்மா எதுவும் கேட்க நினைத்தால் தானும் அது போலவே தாளில் எழுதி அவரிடம் அதற்கான பதிலைக் கேட்பார் .
" காலையில் என்ன டிபன் செய்யட்டும் ?" - இது அந்தம்மா .
" பொங்கல் -- சாம்பார் செய்யவும் " -- இது அவர் .
" மாலையில் எப்போ வீட்டுக்கு வருவீங்க ?"
" ஆறு மணிக்குமேல் ஆகும் ."
" மளிகைச் சாமான்கள் வாங்கப் பணம் வேண்டும் ."
" கைப்பையில் இருக்கிறது . எடுத்துக் கொள் ."
இப்படியே நடந்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் பிரச்னை பெரிதாகி விட்டது . " நான் நாளை அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து ரயிலைப் பிடிக்க வேண்டும் . நான்கு மணிக்கு என்னை எழுப்பி விடவும் " என்று எழுதி மேஜை மேல் வைத்து விட்டுப் படுத்து விட்டார், கணவர் . ஆனால் காலை ஆறு மணிவரை தூங்கி விட்டார் . எழுந்ததும் " ஏன் என்னை எழுப்பி விடவில்லை ?" என்று மனைவியைப் பார்த்துக் கத்தினார் .
" சும்மா கத்தாதீங்க . ' மணி நான்காகி விட்டது . எழுந்திருக்கவும் என்று எழுதி உங்க தலையணைக்கு அடியில் வைச்சிருக்கேன் " -- இது அந்தம்மாவோட பதில் . இது எப்படி ?
-- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . டிசம்பர் 2009 .

Tuesday, June 8, 2010

பபுள்கம் .

துணிகளில் பபுள்கம் ஒட்டிக்கொண்டால் அவ்வளவு எளிதாக அதை நீக்க முடியவிலை . அதை முற்றிலும் நீக்குவதற்கு எளிதான வழி :
சிறிய துணியாக இருந்தால், அதை அப்படியே சுருட்டி ஃபிரிட்ஜில் ஃப்ரீஸருக்குள் சில நிமிடங்கள் வைத்து விட்டு பின் வெளியில் எடுத்து நகங்களால் சுரண்டினால் எளிதில் வந்துவிடும் .
--- தகவல் தமயந்தி . குமுதம் 30. 12. 2009.

Monday, June 7, 2010

உறவில் விரிசல் வேண்டாம்

ஹசன் , உசேன் என்ற இரு சகோதரர்கள் . இவர்கள் அன்னையின் பெயர் பாத்திமா . இவர் , பெருமகனார் நபிகள் நாயகத்தின் புதல்வி
சகோதரர்கள் இருவரும் ஏதோ ஒரு மனத்தாங்கலில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதையே நிறுத்திக் கொண்டனர் . அன்னை பாத்திமாவுக்கு இது மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது . இருவரையும் சமாதானப்படுத்திப் பேச வைக்க முயற்சி செய்தார் .
" அன்பு மக்களே! இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கு ஒருவர் மூன்று தினங்களுக்கு மேல் பேசாமலிருந்தால் , அது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்ததற்குச் சமானம் என்று உங்கள் தாத்தா ( பெருமகனார் நபிகள் நாயகம் ) சொல்லியிருப்பது உங்களுக்கு நினைவில்லையா ? ஆகவே , கோபதாபங்களை மறந்து உறவாடுங்கள் " என்று கனிவோடு கூறினார் .
தாங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஏற்கெனவே உணர்ந்த அந்தச் சகோதரர்கள் அன்னையின் வேண்டுகோளுக்குப் பிறகு , பேசிவிடத் துடித்தனர் . ஆனாலும் , அங்கு மவுனம் தான் நிலவியது . யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதுதான் இப்போதைய பிரச்னை .
" மூத்தவன் என்பதால் அண்ணனுக்குக் கூடுதலான சுயகவுரவம் இருக்கும் . எனவே தம்பி முதலில் பேசத் தொடங்கலாமே ?" என்று அன்னை அடியெடுத்துக் கொடுத்தார் . அதற்குத் தம்பி உசேன் சொன்ன பதில் என்ன தெரியுமா ? " அம்மா ! நான் முதலில் பேசத் தொடங்குவதில் பிரச்னை இல்லை . ஆனால் , தாத்தா சொல்லியிருக்கிற இன்னொரு கருத்து என் நினைவுக்கு வருகிறது . ' பேசாமல் இருக்கிற இருவரில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ள யார் முதலில் பேசத் தொடங்குகிறார்களோ , அவர்களுக்குத்தான் சொர்க்கத்தின் வாசல் முதலில் திறக்கும் " என்று ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிறாரே ! அதனால் அந்தப் பாக்கியம் அண்ணனுக்குக் கிடைகட்டுமே என்பதற்காகத்தான் நான் பேசாமல் இருக்கிறேன் " என்றார் .
இதைக் கேட்டதும் அன்னையும் அண்ணனும் சிலிர்த்துப் போனார்கள் . " தம்பி !" என்று அவர் அழைக்க , " அண்ணா !" என்று இவர் அழைக்க இருவரும் தழுவிக் கொண்டார்களாம் .
--- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . டிசம்பர் 2009 .
இயேசுவின் தாய் மேரியின் இஸ்லாமியப் பெயர் மரியம் . பாத்திமா போன்ற பொதுவான பெயர்களும் உண்டு . நபிகள் நாயகத்துக்கும் அவரின் முதல் மனைவியான கதீஜா அவர்களுக்கும் பிறந்த மகளே பாத்திமா .
--- ஹாய் மதன் , ஆ. விகடன் , 06. 01. 2010 .

Sunday, June 6, 2010

மனிதா.... மனிதா !

தூக்கத்தை தொலைத்தவன்
பணக்காரன்
தூங்க மறந்தவன் படைப்பாளி
தூங்க பயந்தவன் பகையாளி
தூங்கியும் வாழ்பவன் பண்பாளி .
நினைவை இழந்தவன் மனநோயாளி
நினைக்க மறந்தவன் குற்றவாளி
நினைக்க பயந்தவன் கடனாளி
நினைப்பில் வாழ்பவன் தொழிலாளி .
விழிப்பை இழந்தவன் குருடன்
விழிக்க மறந்தவன் படிக்காதவன்
விழிக்க பயந்தவன் சோம்பேறி
விழிப்போடு வாழ்பவன் அறிவாளி .
--- தி, சண்முகப்பிரியா . அவள் விகடன் . 1 . 1 . 2010.

Saturday, June 5, 2010

மிளகாய் !

பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டு பரவிய முக்கிய பொருள் மிளகாய் . நாம் சுவைத்து மகிழ்கிற மிளகாய்க்கும் , நமக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிற விவரம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவோம் . மிளகாய் புழக்கத்துக்கு வரும்வரை மிளகுதான் காரத்திற்குக் காரணமாக இருந்தது . இந்தியாவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஐரோப்பியர்கள் ஆசைப்பட்டதே நமது நறுமணப் பொருள்களுக்காகத்தான் .
உலகத்திலேயே காரமானது , அஸ்ஸாமிலே விளைகிற ' நாகஜோலோக்கியா ' என்கிற ஒருவகை மிளகாய்தான் . அதில் 8,55,000 ஸ்கோவில் யூனிட் கேப்சைசின் இருக்கிறது .
முதன்முதலில் ஐரோப்பியர்களுக்கு மிளகாய் அறிமுகமானது கொலம்பஸின் பயணத்தின்போதுதான் . அவர் அமெரிக்காவிற்குச் சென்றபோதே ' ஆஸ்டெக் ' மக்கள் பலவிதமான மிளகாய் ரகங்களைப் பயிரிடுவதைப் பார்த்தார் . அவர்கள் காரத்தின் தன்மையைப் பொறுத்து மிளகாய்களை வகைப்படுத்தியதும் தெரிந்தது .
மிளகாயை எது முதலில் மனிதர்களைச் சுவைக்கத் தூண்டியது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது . அனேகமாக மருத்துவக் குணங்களுக்காகத் தான் அதை மனிதன் முதலில் கடித்திருக்கக்கூடும் . அளவான மிளகாய் பல வியாதிகளுக்கு மருந்தாக முடியும் என்பதை இன்று விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள் . கேன்சரைக்கூட அது தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது .
கொலம்பஸ் , அவற்றின் காரம் மிளகின் காரத்தைப் போலவே இருப்பதை அறிந்து அதைச் ' சில்லி பெப்பர் ' என்றழைத்தார் . உலகத்தில் அதிகமாக மிளகாயை உற்பத்தி செய்கிற நாடு இந்தியாதான் .இருபத்தைந்து சதவிகிதத்தை இந்தியாவே பயிரிடுகிறது .
--- வெ. இறையன்பு . புதிய தலைமுறை .டிசம்பர் 17 . 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Friday, June 4, 2010

ஜம்போ .

' ஜம்போ ' என்றாலே பெரியது , பிரமாண்டமானது என்று அர்த்தம் . ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாடு அப்போது பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது . அங்கே வாழ்ந்த் ' ஜம்போ ' என்கிற யானை கப்பல் மூலம் பாரீசுக்குச் சென்றடைந்தது . இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை அங்குள்ள சர்க்கசில் பல சாகசங்களைக் காட்டி ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . அது மிகவும் பிரபலமானதால் ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க வந்தார் . ஆனால் , ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிரிட்டிஷ் ராணிக்கு கடிதம் எழுதி அதைத் தடுத்து விட்டார்கள் . ஜம்போ இறந்த பிறகு அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது . இன்றும் சிலை வடிவில் ஜம்போ கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது .
--- தினமலர் . நவம்பர் 27 . 2009 .

Thursday, June 3, 2010

பெருமான் நடனங்கள் .

பெருமான் ஆடிய நடனங்கள் :
தில்லை ( சிதம்பரம் ) -- ஆனந்த தாண்டவம் , திருவாரூர் -- அஜபா தாண்டவம் , திருவாலங்காடு -- ஊர்த்துவ தாண்டவம் , பூண்டி -- பிரம்ம தாண்டவம் , திருப்பத்தூர் -- கவுரி தாண்டவம் , நாகப்பட்டினம் -- பரவாரதரங்க நடனம் , திரு நள்ளாறு -- உன்மத்த நடனம் , திருமறைக்காடு -- ஹம்சபாத நடனம் , திருக்காராயில் -- குக்குட நடனம் , திருவாய்மூர் -- கமல நடனம் , திருக்கோளிலி -- பிருங்க நடனம் .
--- தினமலர் . டிசம்பர் 31 . 2009 .

Wednesday, June 2, 2010

காடுகள் !

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் மழைக்காடுகள் ' உலகின் நுரையீரல் ' என்று அழைக்கப்படுகிறது .ஏனென்றால் நமக்குத் தேவைப்படும் மூச்சுக்காற்றான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதில் அமேசான் காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன . இந்த அமேசான் காட்டில் உள்ள நிலத்தில் இரண்டரை ஏக்கர் அளவு உள்ள நிலத்தில் விளைந்திருக்கும் தாவரங்கள் முழு ஐரோப்பாவில் கூட இல்லை .
விக்டோரியா ரிஜியா என்று பெயரிடப்பட்டிருக்கும் உலகின் மிகப் பிருமாண்டமான பூ இங்கேதான் பூக்கிறது . அனகோண்டா பாம்பு இங்குள்ள சதுப்பு நிலங்களில்தான் வாழ்கிறது . மனிதன் கண்டறியாத எத்தனையோ மூலிகைகளும் , பழவகைகளும் இங்கே புதைந்து கிடக்கின்றன . உலக மருத்துவ தேவைகளுக்கான தாவரங்களில் 25 சதவீதத்தை இந்த காடுகள்தான் தருகின்றன .
--- தினமலர் . நவம்பர் 27 . 2009 .

ஒரே ஒரு மாத்திரை !

உடல் பருமனை குறைக்க புது வசதி .
80 நிமிடம் நடப்பதற்கு பதில் ஒரே ஒரு மாத்திரை போதும் ! அமெரிக்கவிஞ்ஞானிகள் அசத்தல் .
அமெரிக்க விஞ்ஞானிகள் மிளகு மற்றும் குடைமிளகாயிலிருந்து புதிய மாத்திரை ஒன்றைத் தயாரித்துள்ளனர் . இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது . அந்த மாத்திரையின் பெயர் . ' கேப்சிபிளெக்ஸ் '
ஊசிமிளகாய் , குடைமிளகாய் , மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன . இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும் . ஆனால் , இவற்றைப் பயன்படுத்துவதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது . உடலில் உள்ள சர்க்கரை சத்தை அழிக்க இவற்றை பெருமளவில் பயன்படுத்தும் பொழுது , கடுமையான காரம் காரணமாக இவை குடல் இரைப்பையை அரித்து பெரும் புண்களை உண்டாக்கி விடுகின்றன . அதனால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது .இந்தச் சிக்கலுக்கு விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் .
குடல் , இரைப்பையில் அரிப்பை ஏற்படுத்தும் பொருளை சுற்றி திரை போலச் சூழ்ந்து கொள்ளும் புதிய பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர் . அந்த பொருளால் குடல் , இரைப்பையில் அரிப்பு , புண் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது . இப்பொழுது எந்தச் சிக்கலும் இல்லாமல் மிளகாய் மற்றும் மிளகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருளை கூடுதலான அளவில் பயன்படுத்த முடிந்தது .அப்படிப் பிறந்ததுதான் ' கேப்சிபிளெக்ஸ் ' .
இந்த மாத்திரையை அமெரிக்காவின் ஆக்லஹாமா பல்கலைக்கழகம் சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டது . அப்பொழுது ஒரு மாத்திரை 278 கலோரியைத் தரும் குளுகோஸை அழிப்பதை உறுதி செய்தனர் .
80 நிமிடம் வாக்கிங் சென்றால் அல்லது 2 . 5 நிமிட ஓட்ட நடையால் எவ்வளவு குளுகோஸை எரிக்க முடியுமோ அவ்வளவு குளுகோஸை காலி செய்யும் திறன் உடையது இந்த மாத்திரை என்பதை நிரூபித்தனர் . கலோரியைக் குறைத்து , உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும் கேப்சிபிளேக்ஸ் மாத்திரை பாதுகாப்பானது . ஆரோக்கியத்துக்கான துணைப்பொருளாகப் பயன்படுகிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .
--- தினகரன் . 29 டிசம்பர் 2009 .

Tuesday, June 1, 2010

விருட்ச சாஸ்திரம் !

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :
அஸ்வதி -- எட்டி , பரணி -- நெல்லி , கார்த்திகை -- அத்தி , ரோகிணி -- நாவல் , மிருகசீரிஷம் -- கருங்காலி , திருவாதிரை -- செங்காலி , புனர்பூசம் -- மூங்கில் , பூசம் -- அரசு , ஆயில்யம் -- புன்னை , மகம் -- ஆல் , பூரம் -- புரசு , உத்திரம் -- இலந்தை , அஸ்தம் -- மகாவில்வம் , சுவாதி -- மருதம் , சித்திரை -- அகண்ட வில்வம் , விசாகம் -- விளா , அனுஷம் -- மகிழம் , கேட்டை -- பராய் , மூலம் -- மரா , பூராடம் -- வஞ்சி , உத்திராடம் -- பலா , திருவோணம் -- எருக்கு , அவிட்டம் -- வன்னி , சதயம் -- கடம்பு , பூரட்டாதி -- மா , உத்திரட்டாதி -- வேம்பு , ரேவதி -- இலுப்பை . ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும் .
--- அவள் விகடன் . 2 . 1 . 2009 . இதழ் உதவி : k . மகேஷ் , திருநள்ளாறு .