Tuesday, September 30, 2014

பொருள்களில் மூவகை.

    கண்ணால் கண்டறியப்படும் தன்மையின் அடிப்படையில், உலகில் உள்ள பொருள்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.  அவை: அருவம், உருவம், அரூஉருவம்.
அருவம் :  தென்றல் காற்று வீசுகிறது.  அந்தக் காற்றுக் கண்ணுக்குத் தெரிவதில்லை அல்லவா?  இப்படிப் பார்வைக்குப் புலப்படாத வடிவங்களை, உருவம் இல்லாதவற்றை அருவம் என்பார்கள்.  மனம் முதலான கருவிகளும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
உருவம் :  கண்ணால் கண்டறியப்படுவன உருவம் எனப்படும்.  நீரைப் பார்க்கலாம்.  நிலத்தைக் காணலாம்.
அரூ உருவம் :  பவுர்ணமி நாட்களில் முழு நிலவு தெரிகிறது.  ஆனால், அதே நிலவு பிறைச் சந்திரனாக இருக்கும் போது புலப்படுவதில்லை.  விறகில் கொழுந்து விட்டு எரியும் தீ, பார்வைக்குப் பளிச்செனத் தெரிகிறது.  ஆனால், அதே தீ வெந்நீரில் இருக்கும் போது வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை.  இப்படிக் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அமைவன அரு உருவம் எனப்படும்.
--  புலவர்  வே. மகாதேவன்.
--   தினமலர் .பக்திமலர். ஜூன் 6, 2013.   

Monday, September 29, 2014

நந்தி வழிபாடு !

  சிலர் பயம் அல்லது திட்டமிடத் தெரியாமை காரணமாக உடனடி முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள்.  நேரத்திற்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளத் தெரியாது.  அவர்கள் நந்திதேவரை வணங்கவேண்டும்.  மூளையில் உள்ள சிந்தனையைத் தூண்டும் சுரப்பிக்கு தமிழில் ' நந்தி ' என்று பெயர்.  நந்தியை வணங்குவதன் மூலம் சோம்பல் புத்தியை கற்பூர புதியாக மாற்றிக்கொளளலாம் !
-- ஏ.எஸ். யோகானந்தம். முமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஜூன் 16 - 30 . 2013.
பேஸ்புக்!
     சமீபத்தில் நான் பேஸ்புக்கில் படித்த வரிகள்:
     ஆண்களின் உயிரை ஒரே நாளில் எடுப்பது ' எமன் '.  தினம் தினம் எடுப்பது ' விமன் '.
-- தோழமையுடன் .. ஸ்ரீ. தினமலர் . பெண்கள் மலர் 15 . 6 . 2013.   

Sunday, September 28, 2014

யானை - ஒட்டகச்சிவிங்கி.

  கஷ்டப்படக்கூடாது என்று பொத்தி பொத்தி வளர்க்கப்படுகிற பிள்ளைகள், பிற்காலத்தில் வெகுவாக கஷ்டப்பட நேரிடும்.  பெற்றோர்களோ அதைவிடக் கஷ்டப்பட வேண்டியது வரும்.
     யானை தன்னுடைய குட்டியை குழியில் தள்ளி, அக்குழியிலிருந்து மேலே வர பயிற்சி கொடுக்கும்.
     ஒட்டகச்சிவிங்கி குட்டி போடும் போது உயரமான இடத்தில் இருந்து குட்டி கீழே விழுகிறது.  அந்த அதிர்ச்சியில், அசதியில் எழ முடியாமல் படுத்துக் கிடக்கும் குட்டியை, தாய் தன் பின்னங்கால்களால் பலமாக உதைக்கும்.  குட்டி எழுந்து ஓடும் வரை விடாது.  ஓடத் தெரியாத விலங்கால் உயிர் தப்ப முடியாது.  மிகப் பெரிய வாழக்கை கஷ்டத்திலிருந்து குட்டியை காப்பாற்ற தாயே கஷ்டப்படுகிறது.
--- ச.தவமணித்தாய், திருச்சி.
-- தினமலர் . பெண்கள் மலர். 8. 6. 2013.

Saturday, September 27, 2014

கணித விந்தைகள்

  நூலில் இருந்து ஒரு சுவாரஸ்யம் :
' ஒவ்வொரு நூற்றாண்டாகப் பின்னோக்கிச் செல்லும்போது, கிழமைகள் ஏறுவரிசையில் மாறும்.  உதாரணம் :
  1.1.501    --  திங்கள்
  1.1.401    --  செவ்வாய்
  1.1  301   --  புதன்
  1.1.201    --  வியாழன்
  1.1. 101   --  வெள்ளி
  1.1.001   --   சனி
-- கணித விந்தைகள் .  நூலில் இருந்து.
-- ஆசிரியர்: வெ.மாலா  தினமலர். 3.6.2013. 

Friday, September 26, 2014

விஷ்ணு சஹஸ்ரநாமம்.

    மகா பாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருப்பார்.  அப்போது ஸ்ரீகிருஷ்ண பகவான், அர்ஜுனன் மற்றும் தர்மர் ஆகியோர் பீஷ்மரைக் காண வந்தார்கள்.  புனிதரான பீஷ்மருக்கு அப்போது தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அவரை அருள்கிறான் ஸ்ரீகிருஷ்ணன்.  எவருக்கும் கிடைக்காத இந்த ஆனந்த தரிசனத்தைக் கண்டு திக்குமுக்காடிய பீஷ்மர், ஆயிரம் விஷ்ணு நாமாக்களைச் சொல்லி அந்த வேளையில் கிருஷ்ண பகவானை பிரார்த்தித்தார்.  அதுவே விஷ்ணு  சஹஸ்ரநாமம்.ஆயிற்று.
      விஷ்ணு  சஹஸ்ரநாமத்தில் ' ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ' என்று ஒரு வரி வரும்.
       விஷ்ணு  சஹஸ்ரநாமத்தில் உள்ள ஆயிரம் நாமாக்களை நம்மால் சொல்ல முடியாமல் போனாலும், அதில் இடம் பெற்றிருக்கும் இந்த ராம நாமத்தை மட்டும் ஜபித்தாலே ஆயிரம் நாமாக்களை உச்சரித்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
--- தினமலர் .பக்திமலர். ஜூன் 6, 2013.  

Thursday, September 25, 2014

எல்.இ.டி. விளக்குகள்.

எல்.இ.டி.  விளக்குகளால் கண் பார்வை பறிபோகும்.  ஸ்பெயி ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்.
     விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதற்கு மாற்றாக எல் இ டி எனப்படும், ' லைட் எமிட்டிங் டையோடு ' விளக்குகள் அறிமுகம் ஆனது.
     இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால் ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.  இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    ஆனால், எல் இ டி பல்புகளால் மனிதரின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    எல் இ டி பல்புகள் சுற்றுச் சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல ( வயலட் ) கதிர்கள் வெளியாகின்றன.  இவை சிறிய அலைவரிசை கொண்ட சக்திவாய்ந்த கதிர்கள்.  இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்துக் கொண்டிருக்க முடியும்.  இதுபோன்று எல் இ டி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.
     கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது.  மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல.  எல் இ டி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண்பர்வைக்கு ஆபத்து அதிகம்.
--- தினகரன். திருச்சி  16  மே 2013.   

Wednesday, September 24, 2014

'கொசு புராணம்'

" உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.
  2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.
  மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.
  ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது.  அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.
  சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.
  உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.
  ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது.  ஆண் கொசு சைவம்.  இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும்.  கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.
  கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது.  ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது.  மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
 ' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.
  ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
  டெங்குவிற்கு மருந்தில்லை;  டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.
  குடினீர் முறையாகக் கிடைக்காத தேசத்தில் தெருவெல்லாம் நீர்த்தேக்கம்.  அதுதான் கொசுக்களின் ஜென்ம சமுத்திரம்.
  எப்போது சுத்தமாகுமோ சாக்கடையும் அரசியலும்?"
-- வாசகர் கேள்விகள் -- கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள் !
-- ஆனந்த விகடன். 12. 12. 2012.   

Tuesday, September 23, 2014

நந்தி தேவர் மகிமை !

 ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் தலத்தில் நந்தி தேவர் அவதரித்தார் என்றும்,  தமிழகத்தில் திருவையாறில் நந்தி தேவர் அவதரித்ததாகவும் இருவேறு கருத்துகள் உண்டு.  பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரம் இவரது அவதார தினம்.  எனவே அன்று  நந்தி தேவர் ஜனன உற்சவம் இத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
     பழமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும்.  அவை பத்மநந்தி,  நாகநந்தி,  விநாயக நந்தி, மகா  நந்தி,  சோம  நந்தி, சூரிய  நந்தி, கருட நந்தி,  விஷ்ணு நந்தி,  சிவ   நந்தியாகும்.  இந்த ஒன்பது  நந்தியால், ஸ்ரீசைலம் தலங்களில் தரிசிக்கலாம்.
-- மல்லிகா அன்பழகன், சென்னை - 78.
--  குமுதம் பக்தி ஸ்பெஷல். ஆகஸ்ட் 16 - 31, 2013.

Monday, September 22, 2014

துவஜஸ்தம்ப ஆஞ்சநேயர் !

  சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலின் துவஜஸ்தம்பம் ஒரே கல்லாலானது.  தரைக்குக் கீழே சுமார் நாற்பதடி புதைந்தும்,  தரைக்கு மேல் சுமார் எண்பதடி உயரத்துடனும் காணப்படும்.  இது, தமிழகக் கோயில்களில் உள்ள மிகப்பெரிய துவஜஸ்தம்பங்களுக்குள் ஒன்று.  இதன் மேல் பகுதியில் சுமார் எட்டடி உயரத்தில் நின்ற கோலத்தில் அஞ்சநேயர் சேவை சாதிக்கிறார்.  இவரைச் சுற்றி மண்டபத்துடன் கூடிய அமைப்புள்ளதால்,  இந்த துவஜஸ்தம்பத்தை ஆஞ்சநேயர் கோயில் என்றே அழைக்கின்றனர்.
-- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். ஆகஸ்ட் 16 - 31, 2013.  

Sunday, September 21, 2014

கட்டடத்துக்குள் கடல்...

  உலகின் பரப்பளவில் மிக விசாலமான கட்டடத்தை சீனா கட்டி முடித்துள்ளது.
     மனிதனால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கட்டடம் எனும் புதிய சாதனையை படைத்துள்ளது சீனா.  இந்த நியூ செஞ்சுரி குளோபல் சென்டர்.  1.7 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவு.  அதாவது, ஒரு மொனாகோ நகரத்தின் பரப்பளவு.  20 சிட்னி ஒபேரா இல்லங்களுக்கு சமமான பரப்பளவு,  500 மீ, நீளம்  400 மீ, அகலம்;  100 மீ உயரம் என்று பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது இக்கட்டடம்.  ஷாப்பிங்மால், 14 ஸ்கிரீன் கொண்ட ஐமேக்ஸ் தியேட்டர்கள்,  ஆயிரம் அறைகள் கொண்ட இரண்டு 5 ஸ்டார் ஓட்டல்கள்,  சொர்க்கத்தீவு எனும் ஒரு மிகப்பெரிய நீர்ப்பூங்கா,  6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய செயற்கையான கடற்கரை.  சிசுவன் மாகாணத்தில் இருந்து கடலுக்கு குளிக்கப் போவதென்றால் ஆயிரம் கி.மீட்டர்கள் கடக்க வேண்டுமாம்.
     அதற்காக ஒரு குட்டிக்கடலையே இந்த கட்டடத்துக்குள் உருவாக்கி விட்டார்கள் இதன் கட்டடகலைஞர்கள்.  24 மணி நேரமும் சூரிய வெளிச்சம் படரும் அளவுக்கு செயர்கையாக உருவாக்கப்பட்ட சூரியன்,  ராட்சத எல்.இ.டி ஸ்கிரீன் கொண்ட அரங்குகள் என்ற அசத்தும் இக்கட்டடம் கடந்த மாதம் திறக்கப்பட்டுள்ளது.
--- தினமலர். 4. 8. 2013.  

Saturday, September 20, 2014

வெந்நீர் குளியல்.

   வெந்நீர் குளியலால் சில பயன்கள் உண்டு.
     காலையில்    வெந்நீரில் குளித்தால் அது உங்கள் உடலை கதகதப்பாக்கும்.  உடற்பயிற்சிக்குப் பிறகு    வெந்நீரில் குளித்தால் ரிலாக்சாக உணர்வீர்கள்.  தூங்குவதற்கு முன்பாக   வெந்நீரில் குளித்தால் அடித்துப் போட்ட மாதிரி தூங்க வாய்ப்பு உண்டு.  ஜலதோஷம் கொண்டவர்களுக்கு இது நல்லது.  லேசான காய்ச்சல் இருப்பவர்கள்கூட   வெந்நீரில் குளிக்கலாம்.  இதுவரை ' வெந்நீரில் ' என்று குறிப்பிட்டதெல்லாம் வெதுவெதுப்பான தண்ணீர்தான்.  கொதிக்கும் நீர் அல்ல.
     பச்சைத் தண்ணீரில் குளிப்பதால் உடல் சுறுசுறுப்பாகும் என்பது வேறு விஷயம்.
-- தினமலர் சிறுவர்மலர். ஆகஸ்ட் 23, 2013. 

இன்பாக்ஸ்.

  பீகார்  மாநிலம்  கயா  மாவட்டத்தில்  உள்ள  கெலார்  கிராமத்திச்  சேர்ந்த  தசரத் மான்ஜி,  தன்  ஊர்  மக்கள்  பக்கத்து  ஊர்  மருத்துவமனைக்குச்  செல்ல  தனி  நபராக  ஒரு  மலையைக்  குடைந்து  பாதை  அமைத்திருக்கிறார்.  2007-ல்  இறந்த  இவர்  பெயரில்  இந்த  ஆண்டு  சிறப்பு  விருதினை  சமூக  சேவகர்களுக்காக  அறிவித்து  இருக்கிறது  மத்திய  அரசு.  ஆனால்,  அவர்  உயிரோடு  இருந்தபோது,  அவர்  பெயரை  பத்ம  பூஷண்  விருதுக்குப்  பரிந்துரைத்த  போது  நிராகரித்ததும்  இதே  அரசுதான்.  அவர்  பாதையில்  பயணிப்போம்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 

Friday, September 19, 2014

அறிவோம்! தெளிவோம் !

  காசிக்கு நிகரான தலங்கள் தமிழகத்தில் எங்கிருக்கிறது?
' சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜனம் !
 சாயாவனம்ச ஸ்ரீவஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமான ஷட் !'
     என்று ஒரு சுலோகம் உள்ளது.  இதன்படி சுவேதாரண்யம் ( திருவெண்காடு ),  பஞ்சநதம் ( திருவையாறு ),  கௌரீ மாயூரம் ( மயிலாடுதுரை ),  அர்ஜுனம்
( திருவிடைமருதூர் ) ,  சாயாவனம் ( பூம்புகார் சமீபம் ),  ஸ்ரீவாஞ்சியம் ஆகிய 6 தலங்கள் காசிக்குச் சமமான க்ஷெத்திரங்களாகக் கூறப்பட்டுள்ளன.  மேலும் அவிநாசி,  தென்காசி போன்ற திருதலங்களும் காசிக்கு நிகரானவைகளே.
--  மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- . தினமலர் . பக்திமலர் .ஆகஸ்ட் 15, 2013.

Thursday, September 18, 2014

பேறுகள்.

பேறுகள் 16 வகைப்படும்.  அவை:
புகழ்,  கல்வி,  வலிமை,  வெற்றி,  நன்கக்கள், பொன்,  நெல்,  நல்லூழ்,  நுகர்ச்சி,  அறிவு,  அழகு,  பொறுமை,  இளமை,  துணிவு,  நோயின்மை,  வாழ்நாள்.

புராணங்கள்.
புராணங்கள் 18 வகைப்படும்.  இவைகளை இயற்றியவர் வேதவியாசர் ஆவார்.
பிரம்ம புராணம்,  பத்ம புராணம்,  பிரம்மவைவர்த்த புராணம்,  லிங்க புராணம்,  விஷ்ணு புராணம்,  கருட புராணம்,  அக்னி புராணம்,  மத்ஸ்ய புராணம்,
நாரத புராணம்,  வராக புராணம்,  வாமன புராணம்,  கூர்ம புராணம்,  பாகவத புராணம்,  ஸ்கந்த புராணம்,  சிவ புராணம்,  மார்க்கண்டேய புராணம்,
பிரமாண்ட புராணம்,  பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள்.
இதிகாசங்கள். மூன்று வைப்படும்.
சிவரகசியம்,  ராமாயணம்,  மகாபாரதம்.

மகாபாதகங்கள்.
மகாபாதகங்கள்.ஐந்து வகைப்படும்.
கொலை,  பொய்,  களவு,  கள் அருந்துதல்,  குரு நிந்தை.
-- தினமலர் பக்திமலர்.  ஆகஸ்ட் 15, 2013.   

Wednesday, September 17, 2014

அட...அப்படியா?

*  மங்கோலியர்கள் இந்தியாவை ' தெய்வத்தின் நாடு ' என்பர்.
*  இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில்.
*  இந்தியாவில் முதலில் உருவான மாநிலம் உத்தரப்பிரதேசம்.
*  இந்தியாவில் காபி பானம் 1600ல் அறிமுகமானது.
*  இந்தியாவில் கம்ப்யூட்டர் 1986ல் அறிமுகமானது.
*  இந்திய மொழிகளில் முதல் கலைக் களஞ்சியம் தமிழில்தான் உருவாக்கப்பட்டது.
*  இந்தியாவில் அதிக ஆயுள் கொண்டவர்கள் பஞ்சாபியர்கள்.
*  இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றனர்.
*  இந்தியாவின் தலைநகராக 1912 வரை கொல்கத்தா இருந்தது.
--- தினமலர்.சிறுவர்மலர். ஆகஸ்ட் 16, 2013. 

Tuesday, September 16, 2014

பலாப்பழம் கணக்கு.

  சங்க காலத்தில் எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில்,  பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
' பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
 சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி  -  வருவதை
 ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
 வேறெண்ண வேண்டாஞ் சுளை.'
     விளக்கம்:  பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி,  ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.
--  தினமலர்.சிறுவர்மலர். ஆகஸ்ட் 16, 2013.

Sunday, September 14, 2014

கூடியதும், கூட்டாததும்...

   சொல்லக்  கூடியதும்  கூட்டாததும்...
     இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள், பல தகவல்களைச் சொல்லி இருக்கின்றன.
     அவற்றின் படி...
     ஒன்பது தகவல்களை அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது.
1.  பிறந்த நாள்  -  நட்சத்திரம்.
1.  நம்மிடம் உள்ள செல்வம்.
3.  நமக்கு நடந்து வரும் கிரக நிலைகள்.
4.  உண்ணும் மருந்து.
5.  குருநாதர் உபதேசித்த மந்திரம்.
6.  நமக்கு ஏற்பட்ட அவமானம்.
7.  செய்யக் கூடிய தானம்.
8.  கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்னியோன்யம்.
9.  நம்மைப் புகழ்ந்து, பத்துபேர் சொன்ன பாராட்டு வார்த்தைகள்.
     என்னும் இந்த ஒன்பது தகவல்களையும் அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது.  சொன்னால் அதன் மூலம் நமக்கு இடையூறுகள் உண்டாகும்.
     சொல்லக் கூடாத தகவல்களை பற்ரி சொன்ன நமது முன்னோர்கள், சொல்லக் கூடிய தகவல்கள் என நான்கு தகவல்களைச் சொல்கிறார்கள்'
     அவை...
1.  நம்முடையப் பகைவர்களைப் பற்றிய தகவல்கள்.
2.  நோய்.
3.  பசி.
4.  நாம் செய்த பாவம்.
     இவைகளை சொல்வதன் மூலம் அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட வழி பிறக்கும்.
--- ஸ்ந்த்ரானந்தா.
--  தினமலர். வாரமலர். ஆகஸ்ட் 18, 2013. 

Saturday, September 13, 2014

டிப்ஸ் கார்னர்.

*  பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.
*  இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணை வீட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும்.
   இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும்.  பிரயாணத்துக்கு உகந்தது.
*  தேங்காய் வருத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணை இருக்கும்.  அதை நீக்க சிறிது நேரம் பிரிட்ஜில் வையுங்கள்.  மேல் பகுதியில்  
   எண்ணை படியும்.  அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*  கல் கம்மலில் எண்ணை இறங்கி விட்டால்,  அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு
   ஆவியில் வைத்தால்,  கம்மலில் இறங்கியிருந்த எண்ணை முழுவதும் துணியில் இறங்கி விடும்.
*  இட்லி மாவு புளிக்காமல் இருக்க, இரண்டு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் மாவுப் பாத்திரத்தில் குப்புற போடவும்.  இரண்டு நாட்களுக்கு மாவு
   புளிக்காமலும், பொங்காமலும் இருக்கும்.
*  கொஞ்சம் வசம்பு எடுத்து தட்டி  ரவா, மைதா, அரிசி ஆகியவை உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூக்சி, புழுக்கள் தலை காட்டாது.
-- கிருத்திகா,
--  தினமலர்.பெண்கள்மலர். ஆகஸ்ட் 17, 2013.   

Friday, September 12, 2014

படம் பார்த்து...

' இது ஏரோப்ளேன்...
அது கப்பல்...'
படம் காட்டி
சொல்லித் தந்தார்
- எனக்கு என் அப்பா !
' இது சித்தப்பா...
அது அப்பத்தா...'
படம் காட்டி
உறவு சொல்லுகிறேன்
- என் மகனுக்கு நான் !
-- வைரச்சந்திரன், திருச்சி.
-- தினமலர். வாரமலர். ஆகஸ்ட் 18, 2013. 

Thursday, September 11, 2014

கபிலர் சொன்ன 99 மலர்கள்.

 சங்கத்தமிழ் நூல்களில் பத்துப்பாட்டில் ஒருநூல் கிறிஞ்சிப்பாட்டு.  இப்பாட்டில் ஒரு பெண் தினைப்புனம் காக்கச் செல்கிறாள்.  மலையில்,  சுனையில் இருந்த பூக்களைப் பறித்துக் குவித்து விளையாடுகிறாள்.  அவள் குவித்துள்ள மலர்களாக 99 மலர்களின் பெயர்களை வரிசையாகப் பட்டியல் இடுகிறார் கபிலர்.  இப்படி ஒரு பாட்டு குறிஞ்சிப்பாட்டில்  மட்டுமே உள்ளது.
     மலர்களின் மீது சங்கப்புலவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும், அறிவையும் விளக்கும் அரிய எடுத்துக்காட்டு இது.
     99 மலர்களைப் பட்டியலிட்ட குறிஞ்சிப்பாட்டு இதோ...
' ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
 தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
 செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
 உரிதுநாறு, அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்,
 எரிபுரை, எறுழம், கள்ளி, கூவிரம்,
 வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
 எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
 பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
 சும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
 விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
.குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
 குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
 போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
 செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
 கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
 தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
 குல்லை, பிடவம், சிருமா ரோடம்,
 வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
 தாழை, தளவம், முள்தாள் தாமரை,
 ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
 சேடல், செம்மல், சிறுசெங் குரலி,
 கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
 காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
 பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
 ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை,
 அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி, அவரை,
 பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
 வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
 தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி,
 நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
 பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
 ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
 நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
 மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,
 அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
 மால்அங்கு உடைய மலிவனம் மறுகி...
     நாமும் மலர்களின் பெயர்களையும் மகத்துவத்தையும் அறிந்து, இறைவழிபாட்டில் பயன்படுத்துவோம்.
-- புலவர் வே.மகாதேவன்.
-- பூஜைக்குரிய மலரே வா...
-- தினமலர் பக்திமலர். மே 2, 2013. 

Wednesday, September 10, 2014

பிங்க் சிட்டி.

  ஜெய்ப்பூர் நகரம் 1727ல் மகாராஜா சவாய் ஜெய்சிங்கால் உருவாக்கப்பட்டது.
     1876ல் இளவரசர் ஆல்பர்ட்டும், இரண்டாம் எலிசபத் மகாராணியும் இங்கு வருகை தந்தபோது, அந்த நகரம் முழுவதும் பிங்க் வண்ணத்தால் பெயின்ட்செய்யப்பட்டது.  அதனால், அந்த நகரம் பிங்க் சிட்டி என்று அழைக்கப்படுகிறது.  இன்றுகூட ஜெய்ப்பூரில் பல முக்கிய கட்டடங்கள் பிங்க் வண்ணத்தைத் தாங்கியே உள்ளன.
--  தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 2, 2013. 

Tuesday, September 9, 2014

ஐகியூ டெஸ்ட்!

ஐகியூ டெஸ்ட்டில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய இங்கிலாந்து சிறுமி.
     லண்டன் :  இங்கிலாந்தைச் சேர்ந்த மென்சா என்ற நிறுவனம்,  உலகின் மிகச்சிறந்த அறிவுக்கூர்மை கொண்ட நபர்களை உறுப்பினர்களாக கொண்டது.  இந்த அமைப்பு சார்பில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த அறிவுக்கூர்மை தேர்வில்,  நார்த் ஹாம்டன் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி பர்னெல்லுக்கு அறிவுக்கூர்மையின் அளவு 162 புள்ளிகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
     6ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு ஐகியூ அளவு 162 புள்ளி என்பது விஞ்ஞானிகள் ஸ்டீபன் ஹாவ்கிங் மற்றும் ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் ஆகியோரது ஐகியூ அளவை காட்டிலும் அதிகமாகும்.  இதே மென்சா அமைப்பில் பர்னெலின் தந்தையும் உறுப்பினராக இருக்கிறார்.  அவரது ஐகியூ அளவு 142 புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து சிறுமி பர்னெலிடம் கேட்டபோது,  " அறிவுக்கூர்மையில் எனது தந்தையை முந்த வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன்.  ஆனால், பரிசோதனையில் எனக்கு இந்த அளவுக்கு அறிவுக்கூர்மை இருப்பதாக கூறும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.  இது நல்லதா கெட்டதா என்று சொல்லத் தெரியவில்லை" என்றார்.
--- தினமலர் . 6. 8. 2013.

Monday, September 8, 2014

ஸ்டார்கள்!

 காவல்துறையில் அணியும் சட்டையில் கொடுக்கப்படும் ஸ்டார்கள் பற்றி...
     போலீசாரின் சட்டையில் காணப்படும் ஸ்டார்கள் மாநிலத்துக்கு மாநிலம் ஓரளவு வேறுபடும்.  என்றாலும், பதவிக்குத் தகுந்தாற்போல் சட்டையில் காணப்படும் ஸ்டார்கள் கீழே குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்தான் பெரும்பாலும் இருக்கும்.
ஒரு ஸ்டார் :  உதவி சப் இன்ஸ்பெக்டர்.
2 ஸ்டார் :   சப் இன்ஸ்பெக்டர்.
3 ஸ்டார் : இன்ஸ்பெக்டர்.
மேற்படி ஸ்டார்களுக்குக் கீழே மெலிதான ஒரு சிகப்புப்  பட்டையும் கறுப்பு பட்டையும் இருக்கும்.
கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கெசடெட் பிரிவினருக்கு இந்தப் பட்டைகள் இருக்காது.  அவர்கள் உடுப்பின்மீது காணப்படும் ஸ்டார் விவரங்கள் :
3 ஸ்டார்  --  ஏ. சி  பி.. அல்லது டி.எஸ்.பி.
மூன்று சிங்கத் தலைகள் தென்படும் தேசியச் சின்னத்தின் கீழே ஒரு ஸ்ராஎ  --  டி.சி.பி. அல்லது எஸ்.பி.
மூன்று சிங்கத் தலைகள் தென்படும் தேசியச் சின்னத்தின் கீழே இரண்டு ஸ்டார்  --  டி.எஸ்.பி.  அல்லது எஸ்.எஸ்.பி. ( சீனியர் சூபரின்டெண்டென்ட்  ஆப் போலீஸ்.
ஐ.பி.சி. அதிகாரிகளைப் பொறுத்தவரை ஸ்டார்களுக்குக் கீழே I .P .S என்ற எழுத்துகள் இருக்கும்.
--  தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 2, 2013

Sunday, September 7, 2014

" இங்கிதம் "

" இங்கிதம் என்றால் என்ன?"
    " நான் பெரிதும் மதிக்கும் பெரும் பாடகி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார்.  தெரிந்தோ தெரியாமலோ காலணிகளைக் கழற்றாமல் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தார்.  அதை எப்படி உணர்த்துவது ?
     ' அம்மா ! உங்கள் பாதங்கள் என் வீட்டில் பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!' என்றேன்.  பதறிப்போய்க் காலணிகளைக் கழற்றிவிட்டு வந்தார்.
      புண்படுத்தாமல் பண்படுத்துவது இங்கிதம் !"
-- கவிப்பேரரசு வைரமுத்து , பதில்கள்.
--   ஆனந்த விகடன். 19.12.2012.  

Saturday, September 6, 2014

சமச்சீர்!

சம்பளக் கவரில்
இருந்து
ஆயிரம் என் வீட்டிற்கு
என்றேன்...
முகம் கறுத்தது
என் கணவருக்கு.
அடுத்த
ஆயிரம் எடுத்து
உங்கள் பெற்றோருக்கு
என்றேன்...
கணவருக்கு
முகம் மலர்ந்தது.
சமச்சீர் உதவியால்
தவிர்க்கப்பட்டது
குடும்ப சண்டை...!
-- க.கலா, காகிதப்பட்டறை.
--  தினமலர். பெண்கள்மலர். 3. 8. 2013. 

Friday, September 5, 2014

பக்கவாதத்தை கண்டுபிடிக்க...

  உங்களோடு பேசியபடியே நடந்துவரும் நண்பர் திடீரென்று கீழே விழுந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  என்ன நினைப்பீர்கள்...? காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு வந்திருக்கலாம், சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம், ரத்த அழுதம் கூடியோ, குறைந்தோ இருக்கலாம் என்று கணிப்பீர்கள் தானே.  இனி இந்தப் பட்டியலில் பக்கவாதத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
     சரி, அப்படி விழுந்தவர் பக்கவாதம் பாதிப்பில்தான் விழுந்தார் என்று எப்படி அறிந்துகோள்வது?  எஸ்டிஆர் செய்து பாருங்கள் என்கின்றனர் டாக்டர்கள்.  அதென்ன   எஸ்டிஆர்...?
     எஸ் ( ஸ்மைல் ):  சம்பந்தப்பட்டவரை ' சிரிக்க' சொல்ல வேண்டும்.
     டி ( டாக் ):  அவரை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொல்ல வேண்டும்.
     ஆர் ( ரைஸ் ) :  இரண்டு கைகளையும் சேர்த்து மேலே தூக்கச் சொல்ல வேண்டும்
     இந்த மூன்று செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்ய அந்த நண்பர் சிரமப்பட்டாலும், உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.  அந்த அறிகுறிகள் தவிர, அவர் நாக்கை வெளியே நீட்டச் சொல்லுங்கள்.  நாக்கு கோணலாக வந்தாலும் பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து உடனடியாக செயல்படுங்கள்.
---   தினமலர். பெண்கள்மலர். 3. 8. 2013.    

Thursday, September 4, 2014

ஞானம்.

" ஞானம் எப்போது பிறக்கிறது?"
" எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம்.  குரு, சாகும் தருவாயில் படுத்திருந்தார்.  ' ஐயா, கடைசியாக எனக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?' என்று கேட்டான் சீடன்.  குரு வாயைட் திறந்து காட்டி, ' நாக்கு இருக்கிறதா?' என்றார்.  'இருக்கிறது ' என்றான்,  ' பற்கள்?'  ' இல்லை! '. குரு கேட்டார்,' காரணம் தெரிகிறதா?'  ' தெரிகிறது குருவே!  நாக்கு மென்மையானது.  அதனால் இன்னும் இருக்கிறது.  பற்கள் கடினமானது.  அதனால் உதிர்ந்துவிட்டன!'  ' உனக்கு ஞானம் வந்துவிட்டது' என்றார் குரு!'
-- எஸ்.ராமச்சந்திரன், சென்னை - 49.  ( நானே கேள்வி... நானே பதில் ! ).
--  ஆனந்த விகடன். 19.12.2012.    

Wednesday, September 3, 2014

வாலி கவிதாஞ்சலி!

வாலிபக் கவிஞர் வாலி வான்புகழ் எய்திவிட்டார்.  அந்தக் காவியக் கவிஞருக்கு, கவிதாஞ்சலி இங்கே...
யாரைச் சொல்வேன்?
உன்னை நான்...
ஜிப்பா அணிந்த
'ஷெல்லி ' என்பேன்
' ஷேக்ஸ்பியரின் '
தம்பி என்பேன்.

ஸ்ரீரங்கத்துக்
' கம்பன் ' என்பேன்
திருநீறு அணியும்
'ஜிப்ரான் ' என்பேன்.

' சீவல் ' மெல்லும்
சங்கம் என்பேன்
' சிலேடை'த் தமிழ்ச்
சிங்கம் என்பேன்.

வெள்ளை வேட்டி
' நியூட்டன் ' என்பேன்
வெண்பா பாடும்
' விட்மன் ' என்பேன்.

கவிதை எழுதும்
' பிட்மன் ' என்பேன்
' கற்பகம்  அவென்யூ '
' பிகாசோ ' என்பேன்.

இனிமேல் இப்படி
யாரைச் சொல்வேன்?
-- இளையகம்பன்.
-- ஆனந்த விகடன். 31.7.2013.  

Tuesday, September 2, 2014

இதையும் தெரிஞ்சிக்கோங்க!

*  எளிமையா இருக்கிறவன் மனுஷன்... எளிமையானவர்கள் கிட்ட இனிமையா இருக்கிறவன் பெரிய மனுஷன்!
*  ஆவணி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் ( தேய்பிறையில் ) வரும் எட்டாவது திதி நாள் கோகுலாஷ்டமி.
*  பிறந்த நட்சத்திரமான ரோகிணிக்கு முக்கியத்துவம் தந்து பூஜிப்பது ஸ்ரீ ஜயந்தியாகும்.
*  பிறப்பு முதல் இறப்பு வரை அமையும் 40 சடங்குகளில் ஜாதகர்மா -  ஜாதகம் எழுதுதல் முதலாவதாகும்.
*  நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குருபகவான்.  இவர் தேவர்களின் குருநாதர்.  ஜோதிட சாஸ்திரப்படி இவர் இருக்கும் ராசியிலிருந்து எண்ணினால்
   ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய ராசிகளைப் பார்க்கிறார்.  நமது ராசிக்கு ஏழரைச்சனி, அஷ்டமச் சனி போன்றவை நடந்தாலும், இந்த ராசியை குரு பார்த்தால்
   கஷ்டங்கள் ஏற்படாது என்பதனால் குருபார்க்கக் கோடி நன்மை என்பர்.
--- தினமலர் பக்திமலர்கள்.

Monday, September 1, 2014

செல்போன் எண்.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவை இனி கார்ப்பரே எண்களும் மாறலாம்.
     இந்தியாவில் ஒரு செல்போன் நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்றால்,  செல்போன் எண்ணை மாற்றாமலேயே நிறுவனம் மாறிக்கொள்ளூம் நம்பர் போர்டபிலிட்டி சேவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த வசதியை பயன்படுத்தி,  பலர் தங்களது செல்போன் எண்ணை மாற்றாமல் தங்களுக்கு விருப்பமான நிறுவங்களுக்கு  மாறிக்கொண்டனர்.  ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் குரூப் எண்களை மாற்றுவதில் சிக்கல் இருந்துவந்தது.  இந்நிலையில் இத்தகைய கார்ப்பரேட் குரூப் எண்களையும் போர்டபிலிட்டி சேவையின் கீழ் மாற்றிக்கொள்ளும் வசதி அமுலுக்கு வருவதாக இந்திய தொலைதொடர்புகட்டுப்பாட்டு ஆணையம் ( டிராய்) தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஒரே விண்ணப்பத்தின் மூலமாக 50 எண்கள் வரை ஒட்டுமொத்தமாக நிறுவனம் மாறிக்கொள்ளலாம்.  கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு சேவை மாற்ற ஆபரேட்டர்களுக்கு 48 மணிநேரம் அனுமதி வழங்கப்படுவதாகவும் அதில் டிராய் தெரிவித்துள்ளது.  கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் குழுவாக தங்களின் எண்களை மாற்றிக்கொள்ள விரும்பும் பட்சத்தில் அது குறித்து சம்பதப்பட்ட அந்நிறுவனத்தின் அதிகாரி கையோப்பம் பெற்று சமர்ப்பிக்கப் பட்ட பிறகே சேவை மாற முடியும் எனத் தெரிகிறது.
-- தினமலர் . 26. 7 . 2013.