Friday, October 31, 2014

செல்போன் சாகசம்.

   ' ஸ்மார்ட்' ஃபோனின் புதிய பயன்பாடு வியப்பில் ஆழ்த்துகின்றன.
      ஸர் கிரஹாம்பெல் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த தொலைபேசி தற்போது எவ்வளவோ முன்னேற்றம் கண்டு இப்போது நாம் எங்கிருந்தாலும் தொடர்புகொள்ளும் வகையிலும் இன்னமும் பார்க்கப்போனால் டி.வி, ஸ்கிரீன் போலவும் செயல்படுகிறது.
      இப்போது ஒரு ஜப்பானிய நிறுவனம் ஸ்மார்ட் ஃபோனுக்கு இன்னுமொரு பயன்பாட்டையும் கொண்டுவந்துள்ளது!
      மேலை நாட்டு முறையில் அமைக்கப்பட்டுள்ள ' டாய்லெட் ஸீட் ' களைக் கூட இந்த ஸ்மார்ட் ' ஃபோன் ,மூலமாகத் திறக்கவும், மூடவும், பிளஷ் செய்யவும் இயலும்.
      இதற்கான பிரத்யேகமாகஸ் செய்யப்பட்ட ' டாய்லெட் ' ப்ளூடூத் ( Blue Tooth ) உடன் கூடியது. இதனால் இதுவாகவே டாய்லெட்டின் மூடியைத் திறக்கவும், பிளஷ் செய்யவும், பிறகு மூடவும் இந்த 'ஸ்மார்ட்' போனுக்கு செய்தி அனுப்பி விடுகிறது.  கிருமி நாசினிகளைத் தெளிக்கவும் சொல்கிறது.
      இதனால் ' டாய்லெட்' க்குச் செல்லுமுன்பே இதன் மூடியைத் திறக்கச் செய்யுமாறு இந்த ஸ்மார்ட் ஃபோனை வைத்திருப்பவரால் முடியும். டாய்லெட்டிலிருந்து, ஒருவேளை அதன் மூடியை மூடாமல் மறந்து போய் வந்துவிட்டாலும், இந்த போன் மூலமாக அதை மூடவும் செய்யலாம்.
--- சுமன்.
-- மஞ்சரி. பிப்ரவரி 2013.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Thursday, October 30, 2014

7 சிரஞ்சீவிகள்!

   என்றும் பதினாறாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் ஆசைபடுகின்றனர்.  ஆனால், பிணி, மூப்பு, சாக்காடு கேட்காமலேயே வந்துவிடுகிறது.  இந்த மூன்றும் தங்களுக்கு அண்டாமல் இருந்தவர்கள் என்றும் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் ஏழு பேர்.  அவர்களுடைய பெயர்கள்:
      அஸ்வத்தாமா, பலி, வியாசர், அனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர்.  மேலும், சிவனால் சிரஞ்சீவி ஆக்கப்பட்டவர் மார்க்கண்டேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
-- - தினமலர் பக்தி மலர்.மே 9, 2013. 

Wednesday, October 29, 2014

ஐந்தும், ஆலமர் செல்வனும்...

   சமய உலகில் சில எண்களுக்கு முக்கியத்துவம் உண்டு.  5, 8, 16, 32, 64 போன்றவை அவை.  சிவபெருமானின் முகங்கள் ஐந்து.  மந்திர எழுத்துக்கள் ஐந்து,  பூதங்கள் ஐந்து என ஐந்தின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
     மரங்களிலும் பஞ்ச தருக்கள் என ஐவகை மரங்களுக்குரிய பெருமைகள் புராணங்களில் பேசப்பட்டுள்ளன.  சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து தோன்றிய மரங்கள் பஞ்ச வில்வங்கள் .  அவை கூவிளம், நொச்சி, மாவிலங்கை விளா, வள்ளி முதலியன.
     ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பவர் சிவன். சிவபெருமான் ஐந்து ஆலமரங்களுக்கிடையில் வீற்றிருக்கும் இடம் பஞ்சவடி..  கோதாவரி  தீரத்தில் இருந்த பஞ்சவடியில் ராமர் வனவாச காலத்தில் வசித்தார் என்பது இதிகாச தகவல்.
    பல்லவம் என்றால் தளிர் என்று பொருள்.  அத்தி, அரளி, மா, வெண்ணாவல் இலைகளைப்  பஞ்ச பல்லவம் என்பர் வைதிகர். பஸ்மாசுரனுக்கு அஞ்சி நடித்த சிவபெருமான் ஒளிந்த காடு அஒவேலங்காடு எனப் புராணத்தகவல் உண்டு.  நாகலிங்கப்பூவில் ஒரு லிங்கத்தின் தோற்றம் இருக்கும். ஐவேலங்காட்டில் ஐந்து லிங்கங்கள் காட்சி தரும் ஒருவகைக்கொடி உண்டு. அபூர்வமாகக் காணப்படும் இக்கொடி, உப்பு வேலூரில் உள்ளது.
-- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர் பக்தி மலர். ஏப்ரல் 4, 2013.

Tuesday, October 28, 2014

பற்கள்.

" 18 வயசுக்கு மேலும் நமக்குப் பற்கள் முளைக்கும் என்று கேள்விப்பட்டேன் அது நிஜமா?"
" குழந்தை பிறந்ததில் இருந்து இரண்டரை அல்லது முன்று வயது வரை 20 பற்கள் முளைக்கும்.  பால் பற்கள் எனப்படும் இவை,  குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொன்றாக விழத்தொடங்கிப் புதிய பற்கள் முளைக்கும்.  இவையே நிலையாக இருக்கும்.  இந்தக் காலகட்டத்தில் நமது வாயும் வாய்த்தாடையும்    விரிவடைவதால்,  அந்த இடங்களில் மேலும் புதிய பற்கள் முளைக்கின்றன.  18 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் கடைவாயில் கடைசியாக நான்கு பற்கள் தோன்றுகின்றன.  இந்தக் கடைவாய்ப் பற்களுக்கு ' ஞானப் பற்கள் ' என்றும் ' அறிவுப் பற்கள் ' என்றும் பெயர் இருக்கிறது.  இது ஓர் அழகுக்காக வைத்த பெயர்களே.  மற்றபடி அறிவுக்கும் இந்தப் பற்களுக்கும் சம்பந்தம் இல்லை.
-- ஹாசிப்கான்.
-- மை டியர் ஜீபா!  கேள்வி பதில் .  சுட்டி விகடன். 15 . 06. 2012
-- இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா, பச்சூர் . காரைக்கால். 

Monday, October 27, 2014

ஒருவனை அறிந்து கொள்ள...

" ஒருவனை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?"
" கலீல் கிப்ரான் கூறுகிறார்...
' ஒருவனின் உண்மை இயல்பு
  எதைச் சொல்கிறான் என்பதில் இல்லை;
  எதை மறைக்கிறான் என்பதில் உள்ளது.
  அவனை அறிந்துகொள்ள
  அவன் சொல்வதைக் கேளாதே;
  எதைச் சொல்லாமல் மறைக்கிறான்
  என்பதை உணர்க !' "
-- டி.என்.போஜன், ஊட்டி.
-- நானே கேள்வி... நானே பதில்!..  ஆனந்த விகடன். 01.05.2013  

Sunday, October 26, 2014

ஐந்தரைக் கிலோவில் தங்கக்கட்டி.

 ஆஸ்திரேலியா கண்டம் இங்கிலாந்தின் கைதிகளுடைய இருப்பிடமாக இருந்தது.  1848ஆம் ஆண்டு அங்கே தங்கம் கிடைப்பதாகத் தெரிய வந்ததும்,  பல ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறி, தங்கம் தோண்டி எடுப்பதில் முனைப்புக் காட்ட ஆரம்பித்தனர்.  ஏற்கனவே அங்கே இருந்த பிரிட்டிஷ் கைதிகளும் இவ்வாறு தங்கம் எடுத்து, பெரும் செல்வந்தர்களாகத் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து வசதியான வாழ்க்கையை மேற்கொண்டனர்.
     ஆஸ்திரேலையாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லாராட் (  Ballarat )  என்ற ஊரில் பெருமளவு தங்கம் தற்போது கிடைத்தது.
     பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே 2.8 கிலோ எடையுள்ள தங்கக் கட்டி ஒன்று கிடைத்ததாம்.  இப்போது 18.1.2013 அன்று ஒர் அதிஷ்டசாலிக்கு ஐந்தரை கிலோ எடை கொண்ட ஒரே தங்கக் கட்டி கிடைத்திருக்கிறது.  இதன் அளவு 220 மி.மீட்டர், 140 மி.மீட்டர், அகலம் 4.5 மி.மீட்டர்.  இதைப் படத்தில் பார்த்தால் மான் போன்ற மிருகத்தின் தலைபோலத் தோன்றுகிறது.  இந்த அதிஷ்டசாலியின் பெயரை வெளியிடவில்லை.
     இவர் தங்கம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அறிவிக்கும் ஒரு கருவியை எடுத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.  அப்போது இலைச்சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் இக்கருவியில் இருந்து சப்தம் கேட்கத் துவங்கியது.  அவர் அந்த இலைச்சருகுகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்.  அப்போது பளபளவென்று மின்னியவாறு ஏதோ உலோகம் தெரியவும் அந்தப் பொருளை எடுத்துக் கழுவிப் பார்த்தபோது இத்தனை பெரிய தங்கக்கட்டியாக இருக்கவே அப்படியே பிரமித்துப் போய்விட்டார்.  அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை.
     இந்த அளவு எடையுள்ள தங்கத்தின் மார்கெட் விலை 2,82,000 ஆஸ்திரேலியன் டாலர்தான்.  ஆனாலும் இந்த அளவிற்கு ஒரே கட்டித் தங்கமாக இயற்கையாகக் கிடைத்துள்ளதால் இதன் மதிப்பு 3,00,000 டாலருக்கு மேல் இருக்கும் என்கிறார்கள் ,  அமெரிக்க டாலர் மதிப்பு 3,15,000 இருக்குமாம்.
     ' கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் ' என்பார்கள்.  இந்த ஆஸ்திரேலிய அதிர்ஷ்டசாலி விஷயத்தில்  'கொடுக்கிற தெயவம் பூமியைப் பிளந்து கொடுக்கும்' .என்பது போல் உள்ளது.
-- Source & Courtesy : " The Hindu ". தமிழில்: டி.எம்.சுந்தரராமன்.
-- மஞ்சரி. மார்ச் 2013.
-- இதழ் உதவி: செல்லூர் கண்ணன்   

Saturday, October 25, 2014


ஸ்னோ கிரீம்,

ஸ்னோ  கிரீம்  செய்வது  எப்படி?
     10  கிராம்  ஸ்பெர்மாசிட்டி,  1  கிராம்  சுத்தமான  மெழுகு,  500  கிராம்  ஆயில்  ஆப்  சுவீட்  ஆமண்ட்,  50  கிராம்  பன்னீர்  போன்றவை  போதும்.
     ஒரு  பாத்திரத்தில்  ஸ்பெர்மாசிட்டி,  மெழுகு  போன்றவற்றை  போட்டு  உருக்க  வேண்டும். நன்றாக  உருகிய  பிறகு,  ஆயில்  ஆப்  ஸ்வீட்  ஆமண்ட்,  பன்னீரை  சேர்த்து  நன்றாக  கலக்க  வேண்டும்.  கிளறிக்கொண்டே  இருந்தால்  கெட்டிப்படும்.  அப்போது  கலவையை  கீழே  இறக்கி  நன்றாக  கிளறிக்கொண்டே  இருந்தால்  ஆறிவிடும்.  இப்போது  ஸ்னோ  க்ரீம்  ரெடி.
---தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012. 

' அசர்' போடும் கல்விக் குண்டு !

  Annual Status of Educatin Report  என்பதன் சுருக்கமே அசர் ( ASER ).
    கடந்த ஜனவரி மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு வெளியிட்ட அசர் அறிக்கை,  ' தமிழகத்தில் 35 சதவிகிதம் 5 - ம் வகுப்பு மாணவர்களாலும் 13 சதவிகிதம் 8 - ம் வகுப்பு மாணவர்களாலும் 1 - ம் வகுப்பு, 2 - ம் வகுப்புத் தமிழ்ப் பாட நூல்களைக்கூடப் படிக்க முடியவில்ல' என்கிறது.  8 - ம் வகுப்பைச் சேர்ந்த 17 சதவிகித மாணவர்களால் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளை ( smaall letters )  படிக்க முடியவில்லை.  62 சதவிகித மாணவர்களால் மூவிலக்க எண்களை ஓரிலக்க எண்ணால் வகுத்துக் கூற முடியவில்லை என்றெல்லாம் கல்விக் குண்டுகளைத் தூக்கிபோடுகிறது அசர்.  தமிழகம் மட்டுமல்ல, முழு இந்தியாவின் கதியும் இதுதான்.
--டி.அருள் எழிலன், ஆனந்த விகடன். 1. 5 .2013.    

Friday, October 24, 2014

அறிவோம்! தெளிவோம்!

 கோயிலில் பின்னமான உருவம் கொண்ட தெய்வ சிலையை வணங்கலாமா?
    தெய்வ சிலையின் உருவத்தை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.  1. அங்கம்,  2. உபாங்கம்,  3. பிரத்யங்கம்.
    கை, கால், விரல்கள், ஆயுதங்கள், கிரீடம் போன்றவை பிரத்யங்கங்களாகும்.  இவற்றில், பின்னம் இருந்தால் தோஷமில்லை.  தொடர்ந்து வழிபாடுகள் செய்து கும்பாபிஷேகத்தின் போது சரி செய்து கொள்ளலாம்.  கை, கால், தலை முதலியன உபாங்களாகும்.  இவற்றில் பின்னம் ஏற்பட்டால் உடன் சரிசெய்து , பிராயசித்த கும்பாபிஷேகம் செய்து வழிபாட்டைத் துவங்கலாம்.
    முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, தொடை முதலியன முக்கிய அங்கங்களாகும்.  இவற்றில் சரிசெய்ய முடியாத பின்னம் ஏற்பட்டால், வேறு விக்கிரகம் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.  இந்த விதிகள் பொதுவானவை.  எவ்வளவு பின்னம் ஏற்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் சரிசெய்து பூஜை வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் பக்திமலர். ஜூலை 18, 2013.  

Thursday, October 23, 2014

வடக்கு வாழ்கிறது!

  இந்த உலகம் வடகோளம், தென்கோளம் எனப் புவியியல்ரீதியாக மட்டும் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.  வடகோள நாடுகள், தென்கோள நாடுகளைப் புவியியல்ரீதியாகச் சுரண்டி வாழ்கிறது.  அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென்கோள நாடுகளின் நீர்வளத்தைக் கணக்கில்லாத வகையில் உறிஞ்சி எடுக்கின்றன.  வடகோளத்தில் பிறந்த ஒரு குழந்தை தென்கோளத்தில் பிறந்த குழந்தையைவிட, 40 முதல் 70 மடங்கு அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகிறது.  உலகம் முழுவதுமே வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!
-- மாட் விக்டோரியா பார்லோ ( தமிழில்: சா.சுரேஷ் )  எழுதிய ' நீராதிபத்தியம் நூலிலிலிருந்து .
-- ஆனந்த விகடன், 17. 7.2013 . 

Wednesday, October 22, 2014

" பொதுநலம் "

" பொதுநலம் என்றால் என்ன?"
     " ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரிகியூரி அம்மையாரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர்  ' உங்களுக்கு வேண்டியதைக் கேட்கச் சொன்னால் என்ன கேட்பீர்கள்? ' என்று கேட்டார்.  அதற்கு மேரிகியூரி ' எனது ஆராய்ச்சியைத் தொடர ஒரு கிராம் ரேடியம் தேவைப்படுகிறது; ஆனால், அது ஒரு லட்சம் டாலர் விலை என்பதால் என்னால் வாங்க முடியவில்லை ' என்றார் ஏக்கத்துடன்.  அந்த பத்திரிகை ஆசிரியை அமெரிக்கா சென்று ஒரு குழு அமைத்து, பொதுமக்களிடம் நிதி திரட்டினார்.  அந்தப் பணத்தில் ஒரு  கிராம் ரேடியம் வாங்கி அமெரிக்க ஜனாதிபதி கையால் மேரிகியூரிக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.  அந்த நிகழ்ச்சியில் ரேடியத்தை வழங்கும் பத்திரத்தைப் படித்துப் பார்த்த மேரிகியூரி தனது பெயருக்கு எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்.  அதைத் தனது ஆராய்ச்சி நிறுவனப் பெயருக்கு மாற்றி எழுதச் சொன்னார் மேரிகியூரி.  அந்த ரேடியம் தனக்குப் பின் தம் சந்ததியினரின் உடமை ஆகிவிடக் கூடாது என்பதில் மேரி கவனமாக இருந்தார்.  அந்தக் கவனம் தான் பொதுநலம் !"
-- ஹெச்.பாஷா, சென்னை - 106.
-- நானே கேள்வி... நானே பதில் !  ஆனந்த விகடன் . 10 . 7 . 2013.  

Tuesday, October 21, 2014

தந்தி சேவை!

 160 ஆண்டுகால தந்தி சேவை முடிவுக்கு வந்தது.
     இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்பினர்.
     சென்னை, ஜூலை 15-  இந்தியாவில் 160 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த தந்தி சேவை நேற்றுடன் ( 14.7.2013 ) முடிவுக்கு வந்தது.  இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்ப வந்தனர்.
     இந்தியாவில் தந்தி சேவை 1850 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாக் தொடங்கப்பட்டது.  கோல்கத்தாவில் இருந்து டைமண்ட்  துறைமுகத்துக்கும்  கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கும் இடையே முதல் தந்தி சேவை அளிக்கப்பட்டது.  1853ம் ஆண்டு நாடு முழுவதும் 64 ஆயிரம் கி.மீ, தூரத்துக்கு தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.  தொடர்ந்து வெளி நாடுகளுக்கும் தந்தி சேவை அளிக்கும் வகையில் விவாக்கம் செய்யப்பட்டது.  தபாலைவிட வேகமாக வரும் என்பதால் தகவல் பரிமாற்றத்தில் தந்தி மிக முக்கிய இடத்தைப்பிடித்தது.  ஆரம்ப காலங்களில் விஞ்ஞானி ' மோர்ஸ் ' அறிமுகப்படுத்திய கருவி மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன.
     நம் நாட்டில் தொடக்க காலத்தில் தபால்துறை தந்தி சேவையை நடத்திவந்தது.  1986ம் ஆண்டு முதல் தந்தி சேவையை பிஎஸ்என்எல் நிர்வகித்து வருகிறது.
     ஆயினும் மக்களிடம் வரவேற்பு இல்லாதது, நஷ்டத்தை சந்திப்பதாகக் கூறி தந்தி சேவையை நாடு முழுவதும் ஜூலை 14 ம் தேதியுடன் நிறுத்த பிஎஸ்என்எல் அறிவித்தது.  அதன்படி தந்தி சேவை முடிவுக்கு வந்ததால், இதுவரை தந்தி சேவையை பயன்படுத்தாதவர்களும் தந்தி அலுவலகங்களுக்கு சென்று தங்கள் உறவினர்கலுக்கும், நண்பர்களுக்கும் தந்தி அனுப்பி மகிழ்ந்தனர்.
-- தினமலர். 15 . 7 . 2013.  

Monday, October 20, 2014

வலிமையான ஆயுதம்!

 " உலகில் வலிமையான ஆயுதம் எது?"
" ' ஜனசக்தி ' இதழ் தாங்கி வரும் வரிகள் இவை:
  ' தொட்டுப் பார்த்தால் காகிதம்.
    தொடர்ந்தௌ படித்தால் ஆயுதம்' !"
-- சுரா.மாணிக்கம், கந்தர்வக்கோட்டை.

     " உயிர் கொடுப்பது மருத்துவர் சேவை... அறிவு கொடுப்பது ஆசிரியர் சேவை... இதில் எது உசத்தி?"
 " மருத்துவத் தொழில், ஒருவன் பிணமாகாமல் பார்த்துக்கொள்கிறது,
   ஆசிரியர் தொழில், ஒருவன் நடைபிணமாகாமல் பார்த்துக் கொள்கிறது!"
-- முத்தூஸ், தொண்டி.
-- நானே கேள்வி...நானே பதில்!  ஆனந்த விகடன், 17. 7.2013 .

Sunday, October 19, 2014

ஆறு அபிஷேகங்கள் !

அபிஷேகப் பிரியருக்கு ஆறே அபிஷேகம்!
     கோயில்களில் தினந்தோறும் நடைபெறுவன நித்திய பூஜைகள்,  சிறப்பு விழாக்கள் நைமித்திய பூஜைகள் எனப்படும்.
     பழமையான வழிபாட்டுச் சிறப்புப் பெற்ற கோயில்களில் தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடக்கும்.  இவை, முதல்காலம் ( காலை 6 மணி ), காலசந்தி ( காலை 9 மணி ), உச்சிக்காலம் ( 12 மணி ), சாயரட்சை ( மாலை  6 மணி ) , உபசந்தி ( இரவு 8 மனி ) , அர்த்தஜாமம் ( இரவு 9 மனி ) என்பன.
     சிவபெருமானை அபிஷேகப்பிரியர் என்பர்.  எனினும் நடராஜர் திருமேனிக்கு ஓர் ஆண்டில் ஆறே ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடக்கும்.  மற்ற நாட்களில் அபிஷேகம் செய்வதில்லை.  ஆறு அபிஷேக காலங்களூம் தினசரி நடக்கும் ஆறு காலங்களுடன் தொடர்புடையவையே ஆகும்.
முதல் காலம்:
     தேவர்களுக்கு விடியற்காலம் மார்கழி மாதம்.  தட்சிணாயண நிறைவு மாதமான மார்கழி மாதம், திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நடைபெறும்.  பின்னிரவு 3 மனிக்கு அபிஷேகம் கொள்வார்.  பிராத ( முதல் ) காலம் எனப்படும்.  நிதிய பூஜைக்குச் சமமானது இது. ஆறு ஆதார பூஜைகளில் இது மூலாதார பூஜை எனப்படும்.
இரண்டாம் காலம்:
      மாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி ( 14வது ) திதி அன்று இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆதாரங்களில் சுவாதிஷ்டான பூஜை.
உச்சிக்காலம்:
      சித்திரை மாதம் திருவோண நட்சத்திர நாளில் நிகழும். இதனை மனிபூரக பூஜை எனலாம்.
சாயுங்கால பூஜை:
      ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள் இரவில் நடைபெறும்.  ஆனித் திருமஞ்சனம் சாயுங்கால பூஜை.  இது சந்தியாகாலம்.  இது அநாகத பூஜையாகும்.
உபசந்தி காலம்:
      ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்திசி நாள் இரவு 7 மணியளவில் நடைபெறும்.  உபசந்திகால விசுத்தி பூஜையாகும்.
அர்த்தசாமம்:
      புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆக்ஞா பூஜையான அர்த்த சாம பூஜை எனலாம்.
-- தினமலர். பக்திமலர். ஜூலை 11, 2013. 

Saturday, October 18, 2014

விசித்திர கிரகம்!

கண்ணாடி மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம்!
     வாஷிங்டன்:  2005ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட  ' கண்னாடி ' மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம் என, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
     பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விசித்திர கிரகம் 2005 அக்டோபர் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.  அதற்கு, ' எச்டி 189733பி என்று பெயரிடப்பட்டது.  ஒரு நொடிக்கு 152.5 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் இந்த கிரகம், ஒரு நட்சத்திரத்தை 2.2 பூமி நாட்களில் சுற்றி சுழன்று வருகிறது.  வாயு கிரகமான இதன் வளிமண்டல வெப்பநிலை, ஆயிரம் டிகிரி செல்சியஸை விட அதிகம்.
     இந்த கிரகம் நீல நிறத்தில் இருப்பது, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நாசா மற்றும் ஈஎல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திர மண்டலங்களைச் சேர்ந்த 723 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதில் ஒன்றான எச்டி 189733பி கிரகத்தின் நிறம் நீலம் என இப்போது கண்டறியப்பட்டுள்ளது.  விண்வெளியிலிருந்து நமது பூமியைப் பார்த்தால், நீல நிறக் கோளமாகக் காட்சியளிக்கும்.  இதற்கு, பூமியில் உள்ள கடல்களால் ஏற்படும் ஒளி பிரதிபலிப்புகள் காரணம்.
     எச்டி 189733பி கிரகமும் நீல நிறத்தில் ஒளிர்கிறது.  அது வாயு கிரகம் என்பதால், அதில் கடல்கள் கிடையாது.  அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து மணிக்கு 7 ஆயிரம் கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.  அதன் ஊடாக கண்ணாடி ( சிலிக்கேட் )  மழையும் பொழிந்து கொண்டிருக்கிறது.  கண்ணாடி துகள்களால் ஏற்படும் பிரதிபலிப்புகள்தான், இந்த கிரகத்துக்கு நீல நிறத்தை அளித்துள்ளன.  ஒரு வெளி கிரகத்தின் உண்மையான நிறம் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
-- தினமலர். 13.7.2013.  

Friday, October 17, 2014

உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம்!

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் என்ன வேறுபாடு?
     உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்க முடியும்.  ஆனால், உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் மட்டும்தான் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியும்.  தவிர இரு மாநிலங்களுக்கு நடுவிலோ, இந்திய அரசுக்கும் ஒரு மாநிலத்துக்கும் இடையிலோ பிரச்சனைகள் உண்டானால், அதைத் தீர்க்கும் அதிகாரம்  உச்சநீதிமன்றத்திற்குத்தான் உண்டு.  அடிப்படை உரிமைகளைக் காப்பதில்   உச்சநீதிமன்றம் தானாகவே ஆணையிடலாம்.
     சிவில் வழக்காக இருந்தாலும், கிரிமினல் வழக்காக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கேள்விகள் எழ்ந்தால்,
 உச்சநீதிமன்றம் தலையிடலாம்!
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013. 

Thursday, October 16, 2014

பெரிய கிரகம்...

பெரிய கிரகம்...குறைந்த அடர்த்தி !
     சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் என்ற பெருமையைப் பெற்றது வியாழன்.  ரோமானிய ஆட்சி கடவுளான  ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
     சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியும் கிரகம்.  வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகம்.  இதன் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
     இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது.  இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால்தான் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது.  ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால், பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.
     கடந்த 1995 ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய கலீலியோ விண்கலத்தில் இருந்த சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013.

Wednesday, October 15, 2014

லிப்ஸ்டிக் வேண்டாம்!

 சாதாரணமாக லிப்ஸ்டிக்கில் 9 வகையான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றது.  மனித உடல் சராசரியாக ஏற்றுக்கொள்ளும் அளவை விட 20 சதவிகிதம் அதிகமான அலுமினியம், காட்மியம், ஈயம், மாங்கனீஸ், குடல் புற்றுநோய்க்கு காரணமான குரோமியம் உட்பட பல உலோகங்கள் சேர்க்கப்படுகிறது. மேலும், நீண்ட நாட்கள் நீடிக்கும் வகையில் இதில் சிந்தெட்டிக் ரசாயனம் கலக்கப்படுவதால், இது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.
     முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை அறவே தவிர்த்தல் நல்லது.  ஏனெனில் இதில் உள்ள ஈயம் மற்றும் பல்வகை ரசாயனங்கள் கர்ப்பப்பையை பாதிப்பதுடன் குழந்தையின் உறுப்புகளையும் சேர்த்து பாதிக்கும்.
      மேலும், உடலுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் டிரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது.  இது மூளையில் இருந்து தகவல்களை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை கட்டுப்ப்படுத்தி, உடலின் உள்ளே சென்ற 20 நிமிடத்திலேயே இதய செயல்பாடுகளை படிப்படியாக குறைத்துவிடுகிறது.  இதனால் மாரடைப்பு, படபடப்பு ஏற்பட்டு உடல் உள் உறுப்புகளை செயலிழக்க வைக்கிறது.  லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கிறது ஒரு ஆய்வு.
-- ரா.உ. இந்துமதி,  தினமலர். பெண்கள்மலர். 6 . 7 . 2013. 

Tuesday, October 14, 2014

ஆப்பிள் கம்ப்யூட்டர்

முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர் ரூ,2.32 கோடிக்கு ஏலம் !
     லண்டன்: ஸ்டீவ் ஜாப்ஸும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1976ம் ஆண்டில் தொடங்கிய ' ஆப்பிள் ' நிறுவனம்தான்,  கம்ப்யூட்டர்  புரட்சியைத் தொடங்கி வைத்தது.  இந்த நிறுவனம், முதலில் ' ஆப்பிள் - 1 ' ரக கம்ப்யூட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்தது.  முதலாவது ஆப்பிள் - 1  கம்ப்யூட்டரை, ஸ்டீவ் ஜாப்ஸின் நண்பரும் கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானியுமான ஸ்டீவ் வோர்னியாக் உருவாக்கினார்.  இந்த கம்ப்யூட்டரின் மதர்போர்டு பொருத்தப்பட்டுள்ள மரப்பலகையில், வோர்ஜ்னியாக் கையெழுத்திட்டுள்ளர்.
     ' ஆப்பிள் 01-.0025 ' என்ற எண் கொண்ட இந்த கம்ப்யூட்டரை, இணைய தளம் மூலம் லண்டனின் கிறிஸ்டி ஏல மையம் ஏலமிட்டது.
      ஒருவர், 3.87 லட்சம் டாலருக்கு ( ரூ. 2.32 கோடி ) ஏலம் எடுத்துள்ளார்.  இந்த தகவலை வெளியிட்டுள்ள கிறிஸ்டி மையம், ஏலமெடுத்தவர் பற்றிய தகவல்களை  அறிவிக்கவில்லை.
-- தினமலர் , 12.7.2013.      

Monday, October 13, 2014

கம்ப்யூட்டர் மவுஸ்

கம்ப்யூட்டர் மவுஸ் உருவாக்கிய எங்கல்பார்ட் மரணம்.
     முதல் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியவர். இன்டர்நெட் தொகுப்புக்கு யோசனை தெரிவித்தவர், ஆராய்ச்சியாளர் டக்ளஸ் எங்கல்பார்ட். 2. 7 .2013 செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்தார்.
     அவருக்கு வயது 88.  அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் ரேடியோ ரிப்பேர் செய்பவரின் மகனாக 1925 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிறந்தவர்.
மவுஸ் தயாரிப்பு.
     1961 ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிவந்ததும், கம்ப்யூட்டர் துறைக்கு உதவியாக சில சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் எங்கல்பார்ட் ஈடுபட்டார்.
     அப்போது ' கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் எக்ஸ் - ஒய் பொசிஷன் இண்டிகேட்டர் ' கருவியை அவர் டிஸைன் செய்தார்.  அதை தயாரிக்கும் பணியை பில் இங்கிலிஸ் என்ற சக இஞ்சினியரிடம் அவர் ஒப்படைத்தார். கம்ப்யூட்டர் வைக்கும் மேஜைக்கு அடியில் பொருத்தி, முழங்கால் கொண்டு இயக்கும் கருவியாக அது முதலில் தயாரிக்கப்பட்டது.  ஆனால், கடைசியில் டேபிள்டாப் மவுஸ் ஆக அது உருமாறியது.
     1968ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில், இன் ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில், மவுஸ் கருவியை எங்கல்பார்ட் அறிமுகப்படுத்தி, ஒரு மணி நேரம் செயல்படுத்திக்காட்டினார். அப்போது, 30 மைல் தூரத்தில் இருந்த சக ஆராய்ச்சியாளரின் உருவம் மற்றும் குரலை மாநாட்டு திரையில் காட்டி எங்கல்பார்ட் உரையாடினார்.  இதுவே முதல் வீடியோ கான்பரன்ஸ் ஆகும்.
-- தினமலர் , 5.7.2013.  

Sunday, October 12, 2014

புனுகுப்பூனை.

  அகில், சந்தனம், சாம்பிராணி முதலிய மணப்பொருள்கள் மரங்களில் கிடைப்பன.  கஸ்தூரி, கோரோசனம், புனுகு முதலான மணப்பொருள்கள் விலங்குகளிடம் கிட்டுவன.
     கஸ்தூரி இமயமலைப்பகுதிகளில் உள்ள ஒருவகை மான் வயிற்றில் பெறப்படுவது.  கோரோசனம் பசுவின் வயிற்றில் கிடைப்பது. புனுகு ஒருவகைப்பூனையிடம் சுரப்பது.  புனுகு மிகவும் விசேஷமான மணப்பொருளாகும்.
     புனுகு என்ற பிராணி பூனையைப் போல இருக்கும்.  வாசனைப் பொருளை உருவாக்குவது.  இதன் பிறப்புறுப்பு அருகில் வாலின் கீழ்ப்பக்கம் ஒரு தைலப்பை இருக்கும்.  இந்தப் பையில் தைலம் சுரக்கும்.  அத் தைலத்தை மரத்தில் பீய்ச்சித் தேய்த்துவிடும்.  காட்டுவாசிகள் இதனைச் சேகரிப்பர்.
     நகரில் இதனை வளர்ப்பவர்கள் நடுவில் சுழலும் மூங்கில் அமைந்த கூண்டில் அடைத்து வைப்பர். தைலம் மிகுந்த நிலையில் தைலத்தை மூங்கிலில் பீய்ச்சித் தேய்க்கும்.  அதனை வழித்துப் பத்திரப்படுத்தி உபயோகிப்பர்.  இதுவே புனுகு.  புழுகில் இருந்து இப்படி எடுக்கப்படுவது புனுகு.
-- மானஸதேவதா.  தினமலர். பக்திமலர். ஜூன் 27,2013.

Saturday, October 11, 2014

மெய் எழுத்துக்கள்!

  " பெயருக்கு ஏற்றபடி ஏன் யாரும் நடந்துகோள்வது இல்லை?"
     " மெய் எழுத்துக்களில் வல்லின எழுத்துக்களும் ( க். ச், ட், த், ப், ற்)  ஒரு வகை.  ஆனால், வல்லினம் என்று எழுதினால், அதில், ஓர் எழுத்தேனும் வல்லினமாக இருக்கிறதா பாருங்கள்.  அப்படித்தான் மனிதர்களும் !"
-- சுரா.மாணிக்கம், புதுக்கோட்டை'
-- ஆனந்த விகடன் . 8 . 5 . 2013.                          
பூணூல் போடுவது.
    " பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?"
      கர்ப்பாஷ்ட மேஷு பிராம்மணா  --  என்று சாத்திரம் கூறுகிறது.  கர்ப்ப வாசத்தை ஒரு வயதாகக் கணக்கிட்டு ஏழு வயதில் எட்டாவது வயதாகக் கணக்கிடுவது கர்ப்பாஷ்டமம் என்று பெயர்.  அதாவது, ஏழாம் வயதில் பூணூல் போடுவது சாலச்சிறந்தது.
-- எஸ்.கே.சாந்தி, வல்லம்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 20, 2013. 

Friday, October 10, 2014

பல்புகள்.

புவி ஈர்ப்பு சக்தியால் ஒளிரும் பல்புகள்.!
     நம்ப முடிகிறதா?  புவி ஈர்ப்பு சக்தியால் பல்பை எரிய விட முடியுமா?  நம்பத்தான் வேண்டியிருக்கிறது.  Deciwatt. org  எனும் ஒரு பிரிட்டிஷ் கம்பெனி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது!  இச்சாதனையை இந்தக் கம்பெனி இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மின்சாரமின்றி இருக்கும் இடங்களில் பயன்படுத்துவதற்காகவே இம்முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
     ஒரு டைனமோவை இயக்கி மின்சக்தியைப் பெறுவதற்காக ஒரு மூட்டை மணலை இந்த டைனமோவின் சக்கரத்தில் ஒரு கயிற்றின் மூலம் தொங்கவிட்டால்;  அந்த மணல் மூட்டையின் பாரத்தினால் அந்த டைனமோவின் சக்கரம் சுழன்று, டைனமோவை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் இம்மின்சக்தியைக் கொண்டு ஒளிரும் டயோடு  Light Emitting Diode ( Led ) எரியும்.
    இந்த மணல் மூட்டை முழுவதுமாகக் கீழே இறங்கியதும் மூன்றே விநாடிகளில் இம்மூட்டையை மறுபடியும் மேலே இழுத்து விடலாம்.  இம்மாதிரி செய்து வந்தால் 30 நிமிடங்கள் LED பல்புகள் ஒளிரும்.
-- Source with Courtesy: " Times of India "
-- தமிழில்: டி.எம்.எஸ்.  மஞ்சரி. மார்ச் 2013.        
---இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Thursday, October 9, 2014

உணவில் உப்பாய் ;உதிரத்தில் வெப்பாய்!

M.G.R.  --  மூன்றெழுத்து;
சிவாஜி  --  மூன்றெழுத்து;
ஜெமினி  --  மூன்றெழுத்து;
S.S.R.  --   மூன்றெழுத்து;

இத்துணை  மூன்றெழுத்துகளுக்கும்
இடம்  கொடுத்து...

தன்
தொண்டையில்  --
ஒருசேரக் குடிவைத்திருந்த
ஒரே  மூன்றெழுத்து T.M.S:

' இது  --
உண்மைதானே?' என்று  --  மக்களை
உசாவினால்...

' ஆமாம்! ஆமாம்!'  என்று வரும்
ஆயிரம் ஆயிரம்  S.M.S. !
-- கவிஞர் வாலி
--   ஆனந்த விகடன் . 5 . 6 . 2013.  

Wednesday, October 8, 2014

இந்திய கிரிக்கெட்

" இந்திய கிரிக்கெட்டின் பலம் எது? .. பலஹீனம் எது?"
" பலம் ... ' பேட்டிங்'!
  பலஹீனம்... ' பெட்டிங்' !"
-- சம்பத் குமாரி, திருச்சி.

" எஸ்.எம். எஸ். கலாட்டா " ஒன்று சொல்லுங்களேண்?"
" சமீபத்தில் எனக்கு வந்த எஸ்.எம். எஸ்.  ' முயல் ஓடுகிறது... தாவுகிறது...குதிக்கிறது...சுறுசுறுப்பாக இருக்கிறது.  15 வருடங்கள் வாழ்கிறது.  ஆமை ஓடுவது இல்லை...தாவுவது இல்லை... குதிப்பது இல்லை...ஏன் எதுவுமே செய்வது இல்லை.  150 வருடங்கள் வாழ்கின்றன.  எனவே, ' பி வெட்டி...உவர் லைஃப் இஸ் கெட்டி ' . இது எப்படி இருக்கு?"
-- கே.சரஸ்வதி, ஈரோடு .12.   நானே கேள்வி...நானே பதில் !
--  ஆனந்த விகடன் . 26 . 6 . 2013. 

Tuesday, October 7, 2014

கடினமான சூழ்நிலை.

   " கடினமான சூழ்நிலைகளில்கூட வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
     " இந்தக் கேள்வியைப் பார்த்ததும் எனக்கு ட்விட்டரில் ( rajan @ twitter.com ) படித்தது உடனே ஞாபகம் வந்தது.
     " பாலைவனத்தைக் கடப்பவர்கள்தான் கதறி அழுகிறார்கள்.  வசிப்பவர்கள் அல்ல!"
-- கே.சரஸ்வதி, ஈரோடு.
--   ஆனந்த விகடன் . 19 . 6 . 2013.  

Monday, October 6, 2014

நரேந்திர மோடி.

   தன்னல் உள்ளே  நுழைய விடாமல் தடுக்கும் அமெரிக்காவை, நரேந்திர மோடி.வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறார். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட உயரமாக சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கிறார்.  சுதந்திர தேவி சிலை போலவே இதுவும் ஒரு தீவில்தான் அமைகிறது.  182 மீட்டர் உயரம். , 2500 கோடி ரூபாய் செலவு.  குஜராத்தின் ஒவ்வொரு விவசாயிடமிருந்தும் இதற்கு நன்கொடை பெறுகிறார் அவர். 100 கோடி ரூபாய்தான் அரசின் செலவு !
-- பொலிடிகல் பீட்,  குங்குமம், 1. 7. 2013.
--  இதழ் உதவி: P.சம்பத் ஐயர் . திருநள்ளாறு.   

Sunday, October 5, 2014

அதை அலட்சியம் செய்யாதீர்கள்!

  அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா?  செரிமானக் கோளாறு என அலட்சியம் செய்ய வேண்டாம்.  அது தொண்டையில் புற்று நோய் தாக்குவதர்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.  ' கேன்சல் எபிடெமியாலஜி ' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை இப்படி எச்சரிக்கிறது.  நார்மல் ஆசாமிகளைவிடவும் அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுகிறவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் ஆபத்து 78 சதவீதம் அதிகமாக இருக்கிறதாம்.
இதயம் காக்கும் நாய்!
     ' செல்லப் பிராணிகளை  --  குறிப்பாக நாய்களை  --  வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து குறையும் ' என்கிறது ஒரு ஆராய்ச்சி.  செல்ல நாயைக் கொஞ்சுபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதில்லை;  இதனால் மனநிலையை சமன்படுத்தும் மூளை வேதிப் பொருட்கள் இயல்பான அளவில் சுரக்கின்றன.  இதனால் ரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகிறது; ரத்தத்தில் கொலஸ்டிராலும் இயல்பான அளவில் இருக்கிறதாம்.
-- ஹெல்த் பிட்ஸ்.  குங்குமம் - 24. 6. 2013.
-- இதழ் உதவி: P.சம்பத் ஐயர் . திருநள்ளாறு. 

Saturday, October 4, 2014

புத்திசாலித்தனம்

" புத்திசாலித்தனம் என்பதற்கு ஓர் உதாரணம் ...?"
" ' நூற்றாண்டுகளாக வியாபாரம் நடந்துவரும் கடை ' என ஒரு ஸ்வீட் ஸ்டால்காரர் பெருமையாக விளம்பரம் செய்தார்.  அருகிலேயே புதிதாகக் கடை துவங்கிய இன்னொருவர் தன் கடையில் இப்படி ஒரு போர்டு மாட்டினார்...
  ' நேற்றுதான் எங்கள் கடையைத் தொடங்கினோம்.  எங்களிடம் பழைய ஸ்டாக் எதுவும் இல்லை !"
-- ஆ.திலீபன், திருநெல்வேலி.  நானே கேள்வி...நானே பதில் !
--  ஆனந்த விகடன் . 15 . 5 . 2013. 

Friday, October 3, 2014

திலஹோமம் - விளக்கம்.

 முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன சரியாக செய்யாவிட்டாலும், விபத்து, தற்கொலை காரணங்களால் இறந்த முன்னோர்களாலும் சில பாதிப்புகள் அவர்கள் வழிவந்தவர்களுக்கு ஏற்படுகிறது.  முக்கியமாக வம்சவிருத்தி தடைபடுகிறது.  இதற்குத் பரிகாரமாக சில ஹோமம் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இது யமனைக் குறித்து எள்ளினால் செய்யப் படும் யாகம்.  இதனை சமுத்திரம், நதி போன்றவற்றின் கரைகளில்தான் செய்ய
வேண்டும்.  ஏதோ செய்தோம் என்று செய்யாமல், இதற்குரிய மந்திரத்தை நாற்பத்தெட்டாயிரம் முறை ஜபம் செய்தும், இருபத்திதெட்டாயிரம் முறை ஹோமம்
செய்தும், இயன்றவரை தானங்கள் கொடுத்தும் செய்தால் பித்ரு தோஷம் நீங்கி, வம்சவிருத்தி ஏற்படுவதுடன் தரித்திரம் நீங்கி, லட்சுமி காடாட்சம் ஏற்படும். .      
--  மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- . தினமலர் . பக்திமலர் .ஜூன் 6,. 2013. 

Thursday, October 2, 2014

திருமணப் பத்திரிகை!

  தனது மகன் திருமணத்துக்கு ஒவ்வொரு கல்யாணப் பத்திரிக்கையையும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அக்சடித்து ஆச்சர்யபடவைத்திருக்கிறார் கர்நாடகா  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் சூரிய நாராயண ரெட்டி.  இவரது மகன் சரத்துக்கும், சென்னையைச் சேர்ந்த ஆத்மிகாவுக்கும் வரும் 29.5.2013 அன்று சென்னையில் திருமணம்.  அதற்கென அச்சடிக்கப்பட்ட வி.ஐ.பி - க்களுக்கான ஒவ்வொரு அழைப்பிதழும் தங்க இழைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறதாம்.  அழைப்பிதழுடன் துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலந்த பழ வகைகளும் வழங்கப்படுமாம்.  அந்த அழைப்பிதழ் தவிர 7,500 ரூபாய் மற்றும் 450 ரூபாய் செலவில் மேலும் இரண்டுவிதமான அழைப்பிதழ்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  இதற்கு முன்பு ஷில்பா ரெட்டி திருமணத்திற்குத்தான் அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் செலவில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது.  அந்தச் சாதனையை அரசியல்வாதியும் பெல்லாரி சுரங்க அதிபருமான சூரியநாராயண ரெட்டி முறியடித்துள்ளார்.  - கூடுவாஞ்சேரி கோயிந்தசாமி மொய் 100 ரூபாய்!
-- இன்பாக்ஸ் . ஆனந்த விகடன் . 29. 5.2013.

Wednesday, October 1, 2014

விபூதி.

 விபூதியை எந்த விரலில் எடுத்துப் பூச வேண்டும்?
      விபூதியை இரண்டு விதமாகப் பூசிக்கொள்ள வேண்டும்.  குளித்த பிறகு பூசிக்கொள்வதை தண்ணீரில் குழைத்து கட்டை விரல், சுண்டு விரல் நீங்கலாக மற்றைய மூன்று விரல்களால் பட்டையாக இட்டுக்கொள்ள வேண்டும்.  மற்றைய நேரங்களிலும் மேற்படி விரல்களினாலேயே புழுதியாகப் பூசிக்கொள்ள வேண்டும்.  இப்பொழுது சிலர் சிறிய கீற்றாக இட்டுக்கொள்கிறார்கள். இதற்கு மோதிர விரலை உபயோகிக்க வேண்டும்.  ஆள்காட்டி விரலால் இட்டுக்கொள்ளக்கூடாது.
-- மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- . தினமலர் . பக்திமலர் .ஜூன் 6,. 2013.