Tuesday, June 30, 2015

பொம்மை கொடுங்கள்

பொம்மை  கொடுங்கள்  உங்கள்  குழந்தை  புத்திசாலியாவான் !
      " என்னடா  இது... நம்ம  குழந்தை  எப்போ  பாத்தாலும்,  பொம்மைகளோடேயே  விளையாடிகிட்டு  இருக்கானே?"  என்று  இனி  எந்த  அம்மாவும்  புலம்பத்  தேவையில்லை.  காரணம்,  குழந்தைகளுடைய  மூளையின்  செயல்திறனை  அதிகப்படுத்தும்  ஆற்றல்  பொம்மைகளுக்கு  இருக்கிறதாம்!
       ' எஜுகேஷனல்  டாய்ஸ் '  என்று  சொல்லப்படுகிற  குழந்தைகளின்  கல்வி  சம்பந்தமான,  A, B, C, D ... போன்ற  எழுத்துக்கள்,  பெயர்களோடு  கூடிய  பழங்கள்,  கார்கள்,  பல்வேறு  நாடுகளின்  தேசியக்  கொடிகள்,  மேத்மேடிகல்    பொம்மை  விளையாட்டுகள்  போன்றவற்றால்,  குழந்தைகளின்  ஐக்யூ  அதிகமாகிறது '  என்கிறார்  அமெரிக்காவைச்  சேர்ந்த  நியூரோபயாலஜி  துறை  பேராசிரியர்  எரிக்  நட்ஸென்.
       இதில்  மிகவும்  ஆச்சரியமான  விஷயம்  என்னவென்றால்,  குழந்தைகள்  தாங்கள்  கற்றுக்கொள்கிற  விஷயங்களை  வளர்ந்தவுடன்  பெரும்பாலும்  மறந்து  விடுவார்கள்.. ஆனால்,  நிறைய  பொம்மைகளோடு  விளையாடிய  குழந்தைகளின் மூளை  செயல்திறன்  அவர்கள்  வளர்ந்த  பிறகும்  கூட,  பழைய  ஞாபகசக்தி  குறையாமலும்  அதே  சுறுசுறுப்போடும்  இயங்குகிறதாம்.
-- தகவலீஸ்வரி.  குமுதம்  சிநேகிதி ,  ஆகஸ்ட்  15,  2006. 

Monday, June 29, 2015

கடி.

*  ஒருவர் : என்னது,  உங்க  மனைவி  நில்லுன்னு  சொன்னா  நிப்பீங்க.  போன்னு  சொன்னா  போவீங்கன்னு  சொல்றீங்களே.  இது  உங்களூக்கே
                வெட்கமாயில்லை!
   மற்றவர் : என்ன  பண்றது.  ஒரே  பஸ்ல  நான்  டிரைவராகவும்  என்  மனைவி  கண்டக்டராகவும்  வேலை  செய்யுறோம்..!
*  ஒருவர் :  எங்க  ஊர்ல  சப்போட்டாப்பழம்  சீப்பா  கிடைக்கும்...!
   நண்பர் :  ஆச்சரியமா  இருக்கே...!  எங்க  ஊர்ல  வாழைப்பழம்தான்  சீப்பா  கிடைக்கும்...!
*  ஒருவர் :  நான்  பத்து  வருஷமா  ஒரே  சோப்புதான்  தேய்ச்சுக்  குளிக்கறேன்...!
   மற்ரவர் : பரவாயில்லையே,  எனக்கு  ஒரு  சோப்பு  ஒரு  மாசத்துக்குக்கூட  வரமாட்டேங்குதே!
-- தினமணி சிறுவர்மணி.  24 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர். 

Sunday, June 28, 2015

கண்டது.

( சின்னமனூரில்  ஒரு  விளம்பரப்  பலகையில் )
கோபமாய்ப்  பேசினால்  குணத்தை  இழப்பாய்
அதிகமாகப்  பேசினால்  அமைதியை  இழப்பாய்
வேகமாய்ப்  பேசினால்  அர்த்தத்தை  இழப்பாய்
வெட்டியாய்ப்  பேசினால்  வேலையை  இழப்பாய்
ஆணவமாய்ப்  பெசினால்  அன்பை  இழப்பாய்
பொய்யாய்ப்  பேசினால்  பலரை  இழப்பாய்
சிந்தித்துப்  பேசினால்  சிறப்போடு  இருப்பாய்
சிரித்துப்  பேசினால்  அன்போடு  இருப்பாய்.
-- ஜி.மாரியப்பன்,  சின்னமனூர்.
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர். 

Saturday, June 27, 2015

இன்பம்!

 தமிழ்த்  தாத்தா  உ.வே.சாமிநாதய்யரிடம்  ஒருவர்,' ஐயா,  ஆங்கிலம்  படித்தால்  இந்த  ஜென்பத்தில்  மகிழ்ச்சியாக  வாழலாம்.  சமஸ்கிருதம்  படித்தால்  மறுமையில்  ஆனந்தமாக  வாழலாம்  என  நினைகிறேன்.  நீங்கள்  என்ன  சொல்கிறீர்கள்?'  என்றாராம்.
     அதற்கு  தமிழ்தாத்தா  இப்படிச்  சொன்னாராம்.
    ' தமிழை  ஒழுங்காகப்  படி  எந்த  ஜென்மத்திலும்  நீ  இன்பமாக  இருக்கலாம்!'
-- விசாகன்,  திருநெல்வேலி.
-- தினமணி சிறுவர்மணி.  24 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.

Friday, June 26, 2015

கண்டது.

 ( வாலாஜாபேட்டை  பெல்லியப்பா  நகர்  சுவர்  ஒன்றில் )                  
  சூரியனைப்  பார்த்து  நேரம்
  சொன்னது
  அந்தக்காலம்.
  பவர்கட்  ஆவதைப்  பார்த்து  நேரம்  சொல்வது
  இந்தக்காலம்.

( நாகர்கோவில்  கார்மல்  மேல்நிலைப்பள்ளி  சுவரில் )
    பள்ளியில்  ஆசிரியர்  பெற்றோரே
வீட்டில்  பெறோரும்  ஆசிரியரே.

( டிராவலர்ஸ்  வண்டியின்  பின்புறம் )
     ஒருநாள்  நிச்சியம்  விடியும்
     உன்னால்மட்டும்  அது  முடியும்.
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.  

Thursday, June 25, 2015

இருபத்தாறு கீதை.

  பரந்தாமன்  பார்த்தனுக்குச்  சொன்ன  பகவத்  கீதைபோல  மேலும்  26  கீதைகள்  இருக்கின்றன.  அவை:
     1, ரிபு  கீதை.  2. பிட்சு  கீதை.  3. பராசரகீதை.  4. போத்திய  கீதை.  5. ஷடாஜ  கீதை.  6. உதத்திய  கீதை.  7. ராமகீதை.  8. தேவிகீதை.
9. ஹம்சகீதை.  10. ஹரித  கீதை.  11. சம்பக  கீதை.  12. வாமதேவ  கீதை.  13. சூரிய  கீதை.  14. சிவகீதை.  15. கபில கீதை.  16. மங்கி  கீதை.
17. ரிஷப  கீதை.  18. விருத்திரக்கீதை.  19. வசிஷ்டகீதை.  20. உத்தவகீதை.  21. பிரம்ம  கீதை.  22. அஷ்டாவக்ர  கீதை.  23. பாண்டவகீதை.
24. உத்தர  கீதை.  25. அவதூத  கீதை.  26. வியாச  கீதை.
-- ஆர்.சௌம்யா,  திருச்சி - 13.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல்  ஜூன்  1 - 15, 2012.
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர்,  திருநள்ளாறு. 

Wednesday, June 24, 2015

தெய்வீக வீணை.

  வீணை  என்று  சொன்னதுமே  எல்லோருக்கும்   சரஸ்வதியின்  நினைவுதான்  வரும்.  ஆனால்,  32  வகையான  வீணைகளை  31  தெய்வங்கள்  இசைப்பதாக  புராணங்கள்  சொல்கின்றன.  இதோ     தெய்வங்களும்  அவர்களுக்குரிய  வீணையின்  பெயர்களும்:
     1. பிரம்மதேவனின்  வீணை  -  அண்டம்.  2. விஷ்ணு  -  பிண்டகம்.  3. ருத்திரர்  -  சராசுரம்.  4. கௌரி  -  ருத்ரிகை.  5. காளி  -  காந்தாரி.  6. லட்சுமி  -  சாரங்கி.  7. சரஸ்வதி  -  கச்சபி  எனும்  களாவதி.  8. இந்திரன்  -  சித்திரம்.  9. குபேரன்  -  அதிசித்திரம்.  10. வருணன்  -  கின்னரி.  11. வாயு  -  திக்குச்சிகை.
யாழ்.  12. அக்கினி  -  கோழாவளி.  13. நமன்  -  அஸ்த  கூர்மம்.  14. நிருதி  -  வராளி  யாழ்.  15. ஆதிசேடன்  -  விபஞ்சகம்.  16. சந்திரன்  -  சரவீணை.  17. சூரியன்  -  நாவீதம்.  18. வியாழன்  -  வல்லகி  யாழ்.  19. சுக்கிரன்  -  வாதினி.  20. நாரதர்  -  மகதி  யாழ்  ( பிருகதி ).  21. தும்புரு  களாவதி ( மகதி ).  22. விசுவாவசு  -  பிரகரதி.  23. புதன்  -  வித்யாவதி.  24. ரம்பை  -  ஏக  வீணை.  25. திலோத்தமை  -  நாராயணி.  26. மேனகை  -  வணி.  27. ஊர்வசி  -  லகுவாக்ஷி.  28. ஜயந்தன்  -  சதுகம்.  29. ஆஹா,  ஊஹூ  தேவர்கள்  -  நிர்மதி.  30. சித்திரசேனன்  -  தர்மவதி ( கச்சளா ).  31. அனுமன்  -  அனுமதம்.
32 வது  வகை  வீணையை  வாசிப்பவன்,  ராவணன்  அவனது  வீணையின்  பெயர்  -  ராவணாசுரம்.
-- எஸ்.ஜெயந்தி,  சென்னை - 92.
-- குமுதம்  பக்தி ஸ்பெஷல்  ஜூன்  1 - 15, 2012.
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர்,  திருநள்ளாறு. 

Tuesday, June 23, 2015

சிம்கார்டு.

 செல்போன்களில்  மற்றவர்களுடன்  தொடர்பு  கொள்ள  சர்வீஸ்  புரொவைடர்களால்  வழங்கப்படும்  ஒரு  சிறிய  அட்டைக்குப்  பெயர்தான்  சிம்கார்டு.  சிம்  என்பதன்  விரிவாக்கம்  Subscriber  Identity  Module ( SIM) .  முதல்சிம்  கார்டு  1991 ம்  ஆண்டில்  உருவாக்கப்பட்டது.  அந்த  சிம்கார்டை  முனிஸ்  ஸ்மார்ட்  கார்டு  தயாரிப்பாளர்  ஜெர்மன்  நாட்டைச்  சேர்ந்த  கீய்செக்கே  டெவ்ரியன்ட்  உருவாக்கினார்.
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012.

Monday, June 22, 2015

சாகையில் பார்..

 ஒரு  ஊரில்  இனிமையாக  பாடுவதில்  வல்லமை  பெற்ற  ஒரு  புலவர்  இருந்தார்.  அவர்  பாடலைக்  கேட்க  அந்த  ஊர்  மக்கள்  எப்போதுமே  விரும்புவார்கள்.
     ஒரு  நாள்  காலை  அந்தப்  புலவர்  கடைத்  தெருவுக்கு  வந்துகொண்டிருந்தார்.  அவர்  பாடும்  இனிமை  பற்றி  பக்கத்து  ஊர்க்காரர்களுக்கு  சொல்லிக்கொண்டிருந்தார்  அந்த  ஊர்  ஆசாமி.  பக்கத்து  ஊர்க்காரர்  சரியான  கிண்டல்  பேர்வழி.  சும்மா  இருப்பாரா?  பாடகரை  உசுப்பேத்த  நினைத்தார்.
     புலவரிடம்  ஓடிச்சென்று,  அவருக்கு  வணக்கம்  சொல்லி,  " ஐயா,  புலவரே,  நீங்கள்  நல்லாப்  பாடுவீங்களாமே !  நான்  உங்களைப் ' பாடையில ' பார்க்கணும் "  என்றான்  குசும்பாக   அதாவது  ' பாடும்போது  பார்க்க  வேண்டும் '  என்பதை  அப்படிச்  சொல்லியிருக்கிறான்.
     புலவருக்கு  பக்கத்து  ஊர்க்காரரின்  நக்கல்  புரிந்தது.  புலவரும்  அசராமல்,  " அப்ப  சாகையில  வந்து  பார் "  என்றார்.  அதாவது  ' சாகை'  ( ஜாகை ) என்பது  இருப்பிடத்தைக்  குறிக்கும்.  வீட்டில்  வந்து  பார்  என்பதை  இப்படி  அழகாக  சிலேடையில்  கூறினார்  புலவர்.  நையாண்டி  ஆசாமி  திகைத்து  நின்றான் !
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012.   

Sunday, June 21, 2015

கிரகணம்.

 இது  ஒரு  வானவியல்  நிகழ்வு.  வானில்  பல  பொருட்கள்  வலம்  வந்து  கொண்டிருக்கின்றன.  அவை  நகர்ந்து  செல்லும்போது  சில  சமயம்  ஒன்றின்  பாதையில்  மற்றொன்று  குறுக்கிட  நேரிடும்.  அப்போது  அந்த  வான்பொருள்  நம்  பார்வையிலிருந்து  மறைக்கப்படும்.
     இந்நிகழ்வு  சூரிய  குடும்பத்துக்குள்  நிகழும்போது  மறைக்கப்படும்  பொருளின்  பெயரை  வைத்து,  அதன்  கிரகணம்  என்று  சொல்லப்படுகிறது.
     சந்திரன்  பூமியைச்  சுற்றி  வரும்போது  29 1/2  நாட்களுக்கு  ஒருமுறை  பூமிக்கும்  சூரியனுக்கும்  இடையேயும்,  சூரியனுக்கு  எதிர்திசையிலும்  வருகிறது.  அதனால்  பூமியில்  இருப்போருக்கு  இருட்டாக  அமாவாசையாகவும்  சூரிய  ஒளிவெளிச்சம்  பெற்று  பிரகாசமாக  பவுர்ணமியாகவும்  சந்திரன்  தோற்றமளிக்கிறது.  இதற்கான  காரணம்  சூரியன்,  பூமி,  சந்திரன்  ஆகிய  மூன்றும்  குறித்த  தினங்களில்  ஒரே  நேர்  கோட்டில்  வருவதே.
     பவுர்ணமி  தினத்தில்  பிரகாசமாக  தோற்றமளிக்க  வேண்டிய  சந்திரன்  சில  சமயங்களில்  பூமியின்  நிழலால்  மறைக்கப்பட்டும்,  அமாவாசை  தினத்தில்  சூரியன்  சந்திரனின்  நிழலால்  மறைக்கப்பட்டும்  விடுகின்றது.  இவ்  நிகழ்வையே  சந்திர,  சூரிய  கிரகணம்  என்று  அழைக்கிறோம்.
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012.

Saturday, June 20, 2015

12 வகை உணவுப் பழக்கம்.

அருந்துதல்     :  மிகக்  கொஞ்சமாக  சாப்பிடுவது.
உண்ணல்       : பசி  தீர  சாப்பிடுவது.
உறிஞ்சுதல்     : நீர்  கலந்த  உணவை  உண்ணுதல்.
குடித்தல்         : நீரான  உணவை  பசி  நீங்க  உறிஞ்சி  உட்கொள்ளுதல்.
தின்றல்          : பண்டங்களை  மெதுவாக  கடித்துச்  சாப்பிடுதல்.
துய்த்தல்        : உணவை  ரசித்து  மகிழ்ந்து  உண்ணுதல்.
நக்கல்           :  நாக்கினால்  துழாவித்  துழாவி  உட்கொள்ளுதல்.
பருகல்           : நீர்  கலந்த  பண்டத்தை  கொஞ்சம்  குடிப்பது.
மாந்தல்          : ரொம்பப்  பசியால்  மடமடவென்று  உட்கொள்ளுதல்.
கடித்தல்         : கடினமான  உணவுப்  பொருளை  கடித்தே  உண்ணுதல்.
விழுங்கல்       : வாயில்  வைத்து  அரைக்காமல்  அப்படியே  உள்ளே  தள்ளுவது.
முழுங்கல்       : முழுவதையும்  ஒரே  வாயில்  போட்டு  உண்பது.
-- தினமலர் .  இணைப்பு.  செப்டம்பர்  28.  2012. 

Friday, June 19, 2015

மலைமேல் உள்ள கோயில்.

மலைமேல்  உள்ள  கோயில்களுக்கு  மகத்துவம்  இருப்பதாகக்  சொல்கிறார்களே  ஏன்?
     இந்து  மதத்தைப்  பொறுத்தவரை  நதிகள்  எப்படி  புனிதமானவையோ,  அதுபோன்று  மலைகளும்  புனிதமானவையாகக்  கருதப்படுகின்றன.  குறிப்பாக,  தெய்வசக்தியை  வரவழைத்துக்கொள்ளும் ஆற்றல்  மலைகளுக்கு  அதிகம்.  மகிமை  வாய்ந்த  மூலிகைகள்கூட  மலைகளிலேயே  தோன்றுகின்றன.  இதனால்  முனிவர்களும்,  சித்தர்களும்  தவம்  செய்வதற்கு  ஏற்ற  இடமாக  ஆற்றங்கரைகளையும்,  மலைப்பிரதேசங்களையும்  நாடி  ஆசிரமங்களை  அமைத்துக்  கொண்டனர்.  இவ்வளவு  சிறப்பு  வாய்ந்த  மலைகள்  மீது  இறைவனும்  கோயில்கொண்டு  விட்டால்  அதன்  மகிமை  பலமடங்கு  உயர்ந்து  விடுகிறது. திருக்கோயில்  அமைந்திருக்கும்  மலைகளை  ஒரு  சிலர்  ஆராய்ந்தபோது  பகலில்  சூரிய  ஒளியும்  இரவில்  நிலவொளியும்  மாறிமாறி  படுகின்றபோது  பல  நோய்களை  குணப்படுத்தக்கூடிய  பிராணவாயு  அதிகரிப்பதாக  ஒப்புக்கொள்கின்றனர்.  இவ்வளவு  தெய்வசக்தி  வாய்ந்த  கோயிலோடு  கூடிய  மலையை  வணங்கி  வழிபட்டு  கிரிவலம்  வருவதால்  எல்லா  நலன்களும்  கிடைப்பதோடு  தேக  ஆரோக்கியத்தையும்  வலுப்படுத்தும்  மகத்துவம்  மலைக்கொயில்களுக்கு  இருக்கிறது.
--   தினமலர்  பக்திமலர். டிசம்பர்  27,  2012. 

Thursday, June 18, 2015

வழிபாடு.

  கோயில்களில்  ஆகம  ரீதியாக  வழிபாடுகள்  நடக்கின்றன.  சிவாலயங்களில்  காரணம்  மற்றும்  காமிக  ஆகம  வழிபாடு  பரவலாக  உள்ளது.  வைணவக்  கோயில்களில்  வைகானசம்  மற்றும்  பாஞ்சராத்ரம்  என்ற  இரண்டு  ஆகமங்களில்  ஒன்று  பின்பற்றப்படும்.
வாழைமரம்.
கல்யாணம்  மற்றும்  திருவிழாக்களில்  வாழையில்  அதுவும்  பூவும்  தாரும்  வைத்து  கட்டுகிறார்களே  அது  ஏன்?
      சுபநிகழ்ச்சிகள்  நடக்கும்  இடத்தை  மங்களம்  பொருந்தியதாக  அலங்கரிக்க  வேண்டும்.  மாவிலை,  தென்னங்குருத்து,  தோரணம்,  வாழைமரம்,  மாக்கோலம்  இவைகளை  மங்கலத்தின்  அடையாளங்களாக  சாஸ்திரங்கள்  கூறுகின்றன.  பொதுவாக,  நம்  குலம்  தழைக்க  வேண்டும்  என்பதையே  எல்லாரும்  பெரிதும்  விரும்புகின்றனர்.  பூவும்  தாருமாக  உள்ள  வாழைமரத்தைச்  சுற்றி  அதன்  கன்றுகள்  தோன்றி  தழைப்பது  போல  நம்  வம்சமும்  தழைக்க  வேண்டும்  என்பதற்காக  அப்படிச்  செய்யப்படுகிறது.
---    தினமலர்  பக்திமலர். டிசம்பர்  27,  2012.  

Wednesday, June 17, 2015

இயற்கை மருத்துவம்

இயற்கை  மருத்துவத்தால்  கழுத்து  வலிக்கு  ' குட்பை '  சொல்லலாம்.
     கழுத்து  வலி  நீக்கும்  இயற்கை  மருத்துவம்:
     பல  சிகிச்சைகள்  உள்ளன.  அவை  நீர்ச்  சிகிச்சை,  மண்  சிகிச்சை,  வெப்பச்  சிகிச்சை,  மூலிகை  மருத்துவம்,  உடற்பயிற்சிகள்,  ஆசனங்கள்,  தியானம்,  உணவில்  திருத்தம்  முதலியவையாகும்.
     நீர்ச்  சிகிச்சை:  காலையில்  எழுந்தவுடன்  ஒரு  பெரிய  துண்டை  நீளவாக்கில்  நான்காக  மடித்து  தண்ணீரில்  நனைத்து  இலேசாக  பிழிந்து  அடிவயிற்றில்  கட்டிக்கொள்ள  வேண்டும்.  இதற்கு  ஈரத்துணிப்பட்டி  என்று  பெயர்.  இதனால்  அடிவயிற்றுச்  சூடு  தணிந்து  எளிதில்  மலம்  கழியும்.  வலி  நிற்கும்.    அரை  மணி  நேரத்தில்  வலி  நிற்கும்.
.     மண்  சிகிச்சை:  துணியில்  களிமண்  அல்லது  கரையான்  புற்றுமண்ணைத்  தண்ணீர்விட்டு  பிசைந்து  வைத்து  மடித்து  அடிவயிற்றில்  கட்டிக்கொண்டால்  மலம்  கழித்து,  வாயு  நீங்கி,  கண்  வலி,  காது  வலி,  கழுத்துவலி  முதலிய  எந்த  வலியும்  நீங்கிவிடும்.
     வெப்பச்  சிகிச்சை:  தவிட்டை  வாணலியில்  சூடாக்கி  வலி  உள்ள  இடத்தில்  ஒத்தடம்  கொடுக்கலாம்.வெந்நீர்  பையில்  சூடான .வெந்நீரை  ஊற்றி  அடைத்து  அதை  வலி  உள்ள  இடத்தில்  வைக்கலாம்.  இதை  ஒரு  நாளைக்கு  10  நிமிடம்  வீதம்  இரண்டு  தடவை  செய்யலாம்.  பொறுக்கக்கூடிய  அளவு  சூடான வெந்நீரில்  உப்பு  கலந்து  முதுகு  தண்டு  குளியல்  தொட்டியில்  4  விரற்கடை  அளவு  ஊற்றி  கழுத்து,  முதுகு  படும்படியாக  30  நிமிடம்  படுத்திருக்கலாம். வெந்நீர்  தசைப்பிடிப்புகளை  அகற்றுகிறது.  ரத்தம்,  நீர்ச்சத்து,  ரத்த  ஓட்டம்  கூடுகிறது.  மூலிகை  மருத்துவம்  இஞ்சியின்  மேல்தோலைச்  சீவிய  பிறகு  இடித்து  நசுக்கி  நல்லெண்ணையில்  வதக்கி  பொறுக்கும்  சூட்டில்  தோள்பட்டையிலும்,  பின்  கழுத்திலும்  வைத்துக்  கட்டலாம்.  சுக்குப்  பொடியை  நல்லெண்ணையில்  கலந்து  சுட  வைத்து  வலி  உள்ள  இடத்தில்  தேய்த்துக்  கொள்ளலாம்.  வெள்ளைப்பூண்டு  10  பற்களை  60  கிராம்  நல்லெண்ணையில்  இட்டு  பூண்டு  சிவப்பு  நிறமாக  மாறும்வரை  காய்ச்சி,  பின்பு  பூண்டுகளை  நசுக்கி  வலி  உள்ள  இடத்தில்  பூசவும்.  3  மணி  நேரம்  கழித்து  குளிக்கவும்.  இப்படி  15  நாட்கள்  செய்யவும்.  ருமாட்டிகோ  எண்ணையும்,  பிண்ட  தைலத்தையும்,  கற்பூரத்தையும்  கலந்து  காய்ச்சி  ஆற  வைத்துக்  கொண்டு  தேவையான  போது  வலி  உள்ள  இடத்தில்  சூடு  பறக்க  தேய்த்தால்  வலி  நீங்கும்.  அதே  போல்  பின்  கழுத்துக்குக்  கீழே  தொடங்கி  தோள்பட்டைக்குச்  சென்று  நடுமுதுகு  வரை  ஒரு  முக்கியமான  தசை  செல்கிறது.  அதை  வலுப்படுத்தக்கூடிய  பயிற்சிகள்  கழுத்து  வலியை  நீக்கும்.  மசாஜ்  மற்றும்  தியானம்  பயிற்சி  மூலம்  வலியை  நீக்கலாம்.
-- மெய்யப்பன்,  யோகாசன  ஆசிரியர்.  மயிலாப்பூர்.
--   தினமலர் . டிசம்பர்  26,  2012. 

Tuesday, June 16, 2015

கார் சாவி தொலைந்தால்.....

கார்  சாவி  தொலைந்தால்  இனி  கவலையில்லை
     கார்  சாவி  தொலைந்து  போய்விட்டதா?  இனி  கவலையில்லை.  ஸ்மார்ட்போன்  இருந்தால்  போதும்.  இத்தகைய  தொழில்நுட்ப  வசதியை  ஹுண்டாய்  நிறுவனம்  உருவாக்கியுள்ளது.
     இந்த  புதிய  வசதி  குறித்து  ஹுண்டாய்  நிறுவனம்   ஜெர்மனியில்  பிரபல  ஐ30  கார்  அறிமுக  விழாவின்போது  அறிவித்தது.  இது  குறித்து  விபரம்  வருமாறு:
     புளூடூத்திற்கு  பதிலாக,  வயர்லெஸ்  நியர்  பீல்ட்  கம்யூனிகேஷன்  என்ற  புதுவகை  தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி  இந்த  வசதியை  ஹூண்டாய்  நிறுவனம்  சாத்தியமாக்கி  உள்ளது.  கார்  ஜன்னலில்  ஒட்டப்படும்  சிறிய  சீட்டு  முன்  ஸ்மார்ட்  போனை  அங்கும்  இங்குமாக  ஆட்டி,  கார்களை  பூட்டவும்,  திறக்கவும்  முடியுமாம்.  இந்த  வசதி  அடுத்த  2  ஆண்டுகளுக்குள்  பயன்பாட்டுக்கு  வந்துவிடும்  என்று  அந்த  நிறுவனம்  தெரிவித்துள்ளதாக  தகவல்  வெளியாகி  உள்ளது.
--   தினமலர் . டிசம்பர்  26,  2012. 

Monday, June 15, 2015

வைகுண்ட ஏகாதசியில் ரத்தின அங்கியும் முத்தங்கியும் ஏன்?

 வைகுண்ட  ஏகாதசி  நாளில்  ஸ்ரீரங்கம்  கோயிலில்  உற்சவர்  நம்பெருமாள்  முற்றிலும்  ரத்தினங்களால்  ஆன  அங்கி   அனிந்திருப்பார்.  இந்த  ரத்தின  அங்கி  சூரியனின்  கதிர்வீச்சுக்கு  சமமானது.  இந்த  கதிர்வீச்சு  தெய்வீக  மற்றும்  மருத்துவ  குணம்  உள்ளது.  என்னதான்  மருத்துவ  குணமிருந்தாலும்,  அளவை  மிஞ்சக்கூடாது  என்பதற்காகத்தான்  அந்த  ரத்தின  அங்கியில்  பாதிக்குமேல்  (  பெருமாளின்  இடுப்புக்குக்கீழ் )  சல்லா ( மல் )  துணிகொண்டு  மறைத்திருப்பார்கள்.  இவ்வாறு  சூரிய  கிரணங்கள்  பட்ட  பக்தர்கள்  மேனியில்,  பாதிப்பு  ஏற்படாதிருக்க  வேண்டும்  என்பதற்காகவே,  பக்தர்கள்  மூலவரை  தரிசிக்க  வரும்போது  அவர்கள்  மீது  குளிர்ச்சியான  சந்திர  கிரகணங்கள்  படவேண்டும்  என்ற  கருத்தில்  மூலவருக்கு  சந்திரனின்  கதிர்வீச்சு  குணம்  கொண்ட  முத்துக்களால்  ஆன  அங்கி  அணிவிக்கப்பட்டிருக்கும்.
     சந்திரகிரகணங்கள்  குளிர்ச்சியானவை  என்பதாலும்,  சூரிய  கிரணங்களால்  ஏற்பட்ட  வீரியத்தை  ஈடுசெய்யும்  வகையிலும்  பெருமளவிலான  முத்துக்கள்  கொண்ட  பெரிய  அங்கி,  பெரிய  பெருமாள்  ( ரங்கநாதர் )  திருமேனியில்  அணிவிக்கப்படுகிறது.  இதிலிருந்து  வைகுண்ட  ஏகாதசி  நாளில்  ஏன்  உற்சவருக்கு  ரத்தின  அங்கியும்,  மூலவருக்கு  முத்தங்கியும்  அணிவிக்கப்படுகிறது  என்பதை  அறிந்து  கொள்ளலாம்.
---  தினமலர் . டிசம்பர்  23,  2012. 

Sunday, June 14, 2015

ஜாதிக்கற்கள் !

  நவரத்தினங்களில்  முத்து,  பவளம்  இரண்டும்  நீரிலும்  மற்றவை  பூமியில்  ஏதாவதொரு  பகுதியில்  அரிதாக  விளையும்  தன்மை  கொண்டவை.  
       ஜாதிக்கற்களுக்கு  ஒளிரும்  அல்லது  பளிச்சிடும்  தன்மை  உண்டு.  இவற்றிலிருந்து  ஏற்படும்  கதிர்வீச்சு  தெய்வீக  மற்றும்  மருத்துவ  குணம்  கொண்டது  என்பது  பெரும்பாலானவர்களால்  ஏற்றுக்  கொள்ளப்பட்டிருக்கிறது.
       நவரத்தினங்களிலிருந்து  வெளியாகும்  கதிர்வீச்சு  மனித  உடலில்  படும்போது  அது  உயிர்சக்திக்கு  வலுவூட்டுகிறது   வளர்சிதை  மாற்றம் ( மெட்டாலிக்  ஆக்டிவிடீஸ் )  என்று  அறிவியல்  கூறும்  பழைய  செல்கள்  அழிதலும்  புதிய  செல்கள்  உருவாதலும்  ஒவ்வொரு  மனித  உடல்களிலிருந்து  வெளியாகும்  கதிர்வீச்சு  மாற்றத்தை  ஏற்படுத்த  முடியும்  என்பதை  நமது  முன்னோர்கள்  தெளிவாக  அறிந்திருந்தனர். அதன்  அடிப்படையிலேயே,  சில குறிப்பிட்ட  நோய்  கண்டவர்கள்களுக்கு  நிவாரணமளிக்கக்  கூடிய  கதிர்  வீசக்கூடிய  கற்களை  அதிகம்  அணிந்த  தெய்வம்  இருக்கும்  தலத்துக்குச்  சென்று  வழிபடும்படி  ஜோதிடர்கள்  மூலம்  அறிவுறுத்தச்  செய்தனர்.  அதன்  காரணமாகவே   நவரத்தினக்  கற்களை  தெய்வங்கள்  மீது  அணிவித்து  அவற்றை  விளக்கொளியில் ( மின் ஒளி  கூடாது )  பக்தர்கள்மீது  படும்படி  செய்திருந்தனர்.  இதற்காகத்தான்  கோயிலுக்குள்  ( கருவறைக்குள் )  செல்லும்போது  சட்டை  அணியாமல்  செல்லவேண்டும்  என்று  அறிவுறுத்தி  வந்தனர்.
     முழுநிலவு  எனப்படும்  பவுர்ணமி  நிலவொளிக்கு  உயிர்சக்தியை  அதிகரிக்கும்  ஆற்றல்  உண்டு  என்பதையும்  நம்  முன்னோர்கள்  அறிந்திருந்தனர்.  அதனால்தான்  பவுர்ணமி  இரவு  நிலவொளியில்  மலையையோ  அல்லது  கோயிலையோ  சுற்றிவர  வேண்டும்  என்று  கிரிவலத்தை  நிர்ணயித்திருக்கிறார்கள்.
--  தினமலர் . டிசம்பர்  23,  2012. 

Saturday, June 13, 2015

நவரத்தினங்கள்.

   நவரத்தினங்களின்  பெயர்களும்,  அவற்றின்  நிறம்,  மற்றும்  இயல்புகளும்:
ரத்தினம் ( சிவப்பு ) :  நவக்கிரகங்களில்  நடுநாயகமாகவும்,  தலைவனாகவும்  விளங்கும்  சூரியனின்  அம்சம்  பெற்றது.
முத்து ( வெள்ளை ) :  சூரியனின்  வெப்பக்கதிர்களை  வாங்கி  அவற்றை  குளுமையாக  பிரதிபலிக்கும்  சந்திரனின்  அம்சம்  பெற்றது.
பவளம் ( இளம்சிவப்பு ) :  கடலில்  விளையும்  இது  செவ்வாய்  கிரகத்தின்  பிரதிநிதியாகக்  கருதப்படுகிறது.
மரகதம் ( பச்சை ) :  இது  புதன்  கிரகத்தின்  அடையாளம்  மற்றும்  ஆதிக்கம்  பெற்றது.
புஷ்பராகம் ( இளம்மஞ்சள் ) :  இது  குரு  பகவான்  பிரதிநிதி  மற்றும்  ஆதிக்கம்  பெற்றது.
வைரம் ( வெள்ளை ) :   நவக்கிரகங்களில்  அதிக  விலை  கொண்டது.  பூமியின்  குறிப்பிட்ட  பகுதிகளில்  ஆழமான  இடத்தில்  ஏற்படும்  அதிக  வெப்பத்தால்
                                  அங்குள்ள  கல்,  மண்  ஆகியவை  எரிந்து  கெட்டிப்பட்டு  விளைச்சல்  தன்மை  பெறுவதால்  வைரம்  கிடைக்கிறது.  இது
                                  நவரத்தினங்களில்  சுக்கிரனின்  அம்சமும்,  ஆதிக்கமும்  பெற்றது.
கோமேதகம் ( இளம்சிவப்புடன்  மஞ்சள்  கலந்த  நிறம் ) :  இது  நவரத்தினங்களில்  ராகுவின்  அடையாளம்  அல்லது  ஆதிக்கம்  பெற்றது.
மாணிக்கம் ( கரு நீலம் ) :  சனி  பகவானுக்கு  உரியது.
வைடூரியம் ( வெளிர்  மஞ்சள்  நிறத்தில்  வெண்மை  ரேகையுடன்  கூடியது ) : இது  கேதுவின்  அம்சமும்,  ஆதிக்கமும்  பெற்றது.
--  தினமலர் . டிசம்பர்  23,  2012.  

Friday, June 12, 2015

மாயன் காலண்டர்!

   சூரியனின்  மைய  புள்ளிகளில்  வீரியமில்லை.  மாயன்  காலண்டர்  முடிந்து  புதுயுகம்  பிறந்தது.
     2012  டிசம்பர்  21 ம்  தேதி  உலகம்  அழியும்  என்ற  பீதி  வெகு  நாட்களுக்கு  முன்பே  தொடங்கிவிட்டது.
     மாயன்  காலண்டர்,  தென்  அமெரிக்க  கண்டத்தில்  உள்ள  மத்திய  மெக்சிக்கோ, பெலஸ்,  குவாதிமாலா,  எல்சல்வடார்,  ஹோண்டுராஸ்,  நிகரகுவா
ஆகிய  பகுதிகளை  உள்ளடக்கியதது  மீலோ  அமெரிக்கா.  இந்த  பகுதியில்  கி.பி.  250  முதல்  கி.பி. 900  வரை  வசித்த  பூர்வீகக்குடிகள்தான்  மாயன்கள்.
     அவர்கள்  பயன்படுத்திய  மாயன்  காலண்டர்  கி.மு.  3113ல்  தொடங்கி  கி.பி.  2012ல்  முடிவடைகிறது.  மாயன்  காலண்டரில்  394  ஆண்டுகள்  கொண்டது  ஒரு  பக்துன்.  கி.மு.  3113ல்  தொடங்கிய  இந்த  பக்துன்  கணக்கு  2012  டிசம்பர்  21ம்  தேதி  11.11.11.மணிக்கு  முடிவடைகிறது.  அதன்படி  நேற்றோடு (  21.12.12 )  மொத்தம்  5  ஆயிரத்து  125  ஆண்டுகள்  நிறைவடைந்து  இருக்கிறது.  அதாவது,  13 வது  பக்துன்  நிறைவடைந்திருக்கிறது.  இந்த  மாயன்  காலண்டரில்  டிசம்பர்  21ம்  தேதிக்கு  பின்னர்  எதுவும்  குறிப்பிடப்படாததால்,  அதோடு  உலகம்  அழிந்துவிடும்  என்ற  பீதி  கிளம்பியது.,
--  தினமலர் . டிசம்பர்  21,  2012.  

Thursday, June 11, 2015

தாவரமே! தந்த வரமே !

சூரிய  ஒளியில்  சோறு  சமைத்து
சத்தான  உணவை  எங்களுக்கு  தா  வரமே!  அது  நீ  தந்த  வரமே !
உன்  இலையால் எங்களுக்கு  விருந்தளித்து
உன்  காயால்  கறி  சமைத்து
உன்  பழத்தால்  நா  சுவைத்து
உன்  பூவால்  எங்களை  அலங்கரித்து
உன்  நிழலால்  எங்களை  குளிர்விக்க  வா  தா  வரமே !  அது  நீ  தந்த  வரமே !
நீ  உணவு  சமைப்பதால்  நாங்கள்  சுவாசிக்கிறோம்
நாங்கள்  சுவாசிப்பதால்  நீ  உணவு  சமைக்கிறாய் !
இந்த  உறவை  நீட்டிக்க  வா  தா  வரமே !  அது  நீ  தந்த  வரமே !
-- S.புவனேஸ்வரி  PST,  GHS  கோத்துக்குளம்.
--  ஆசிரியர்  நண்பர்,  டிசம்பர்  2012.  காரைக்கால்  பட்டதாரி  ஆசிரியர்  சங்க  திங்களிதழ்.
--- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன்.  

Wednesday, June 10, 2015

அமைதி அது என்னுள்ளே...

மன  அழுத்தம்.
     மனிதனுக்கு  வரக்கூடிய  நோய்களில்  75  முதல்  90  சதவீதம்  வரை  மன அழுத்தத்தின்  மூலமே  வருவதாக  மருத்துவ  உலகம்  கூறுகிறது.
     மன அழுத்தம்  இரு  வகைகளில்  ஏற்படலாம்:  1.நம்மைச்சூழ்ந்த  சமூகத்தின்  செயல்பாடுகள்.  2.நமது  வாழ்க்கை  முறை.
     நம்மைச்சூழ்ந்த  சமூகத்தின்  செயல்பாடுகள்,  குடும்பச்சூழல்,  வாழ்க்கைத்துணையின்  விட்டுக்கொடுத்தல்  அல்லது  புரிந்து  கொள்ளுதல்  இல்லாத  நிலை,  பணிபுரியும்  இடங்களில்  உள்ள  வேலை  நெருக்கடி  போன்றவை  கூட  ஒருவரை  மன  உளச்சலுக்கு  உள்ளாக்குகின்றன.
     எதிர்பாராத  சூழலுக்கு  ஒருவன்  தள்ளப்படும்  பொழுது  அதிக  மன அழுத்தம்  ஏற்படுவதாக  மருத்துவர்கள்  குறிப்பிடுகின்றனர்.  அதிக  எதிர்பார்ப்பு,  கிடைத்ததில்  திருப்தி  இல்லாத  நிலை  கூட  மன உளச்சலுக்கான  காரணங்களாகின்றன.  எத்தகைய  எதிர்பார்ப்புகளும்  இல்லாத  குழந்தை  மகிழ்ச்சியுடன்  விளையாடுகிறது.  வளர்ந்த  மனித  குணங்கள்கூட  மன அழுத்தத்திற்கு  உள்ளாவதாக  ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.  அதிக  வெளிச்சம்,  அதிக  சப்தம்  போன்றவைகூட  மனிதர்களை  மன உளச்சலுக்கு  உள்ளாக்குவதாக  உளவியலார்  குறிப்பிடுகின்றனர்.
     " Peace  is  no  where  but  with  in  myself "
       அமைதி  என்பது  எங்கேயும்  அல்ல  அது  என்னுள்ளே !
-- கு.கோவிந்தராஜன்,  விரிவுரையாளர்.
--  ஆசிரியர்  நண்பர்,  டிசம்பர்  2012.  காரைக்கால்  பட்டதாரி  ஆசிரியர்  சங்க  திங்களிதழ்.
-- இதழ்  உதவி:  செல்லூர் கண்ணன். 

Tuesday, June 9, 2015

காரணம் என்ன?

  " குருவே,  முக்காலமும்  உணர்ந்த  கிருஷ்ணர்,  பாண்டவர்கள்  சூதாடப்போனபோதே  தடுத்திருக்கலாமே.  அவர்கள்  தோற்று  அவமானப்படுவார்கள்  என்பது  அவருக்குத்  தெரிந்திருக்குமே...பிறகு  ஏன்  தடுக்கவில்லை?"  கேட்டான்  சீடன்  ஒருவன்.
     புன்னகைத்த  குரு  சொன்னார், " மகனே,  முன்  கூட்டியே  அறிந்தாலும்  நடக்க  இருப்பதைத்  தடுப்பது  ஆண்டவன்  செயல்  அல்ல.  ஏனெனில்  அப்படித்தான்  நடக்கும்,  நடக்கவேண்டும்  எனத்  தீர்மானித்தவனே  அவன்தானே...!  அதனல்தான்,  துரியோதனான்  தனக்கு  பதில்  தன்  மாமா  சகுனி  ஆடுவார்  என்று  சொன்னபோது,  தருமருக்கு,  எனக்குப்  பதில்  கிருஷ்ணர்  விளையாடுவார்  என்று  சொல்லவும்  தோன்றாமல்  போய்விட்டது...!"
     " அப்படியானால்,  பிறகு  அவரே  சென்று  உதவியது  ஏன்?"
     " அழைத்தால்  வருவது  ஆண்டவன்  குணம்.  முதலை  கவ்விய  யானக்கும்,  துகிலை  இழந்த  திரௌபதிக்கும்  அவன்  உதவியதும்கூட  அழைத்த  பிறகுதானே...!"  குரு  சொல்ல,  உணர்ந்தான்  சீடன்.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

Monday, June 8, 2015

தெரியுமா உங்களுக்கு?

*  புராணங்களின்படி  பூமி,  ஏழு  த்வீபங்களாக  ( தீவுகளாக )  பிரிக்கப்பட்டுள்ளது.  அவை: ஜம்பூ  த்வீகம்,  பிலக்க்ஷ  த்வீபம்,  சால்மல  த்வீபம்,
    சுக  த்வீபம்,  க்ரௌஞ்ச  த்வீபம்,  புஷ்கர  த்வீபம்,  சாகத்வீபம்  ஆகியவையே  .
*  சமஸ்கிருதத்தில்  நமஸ்தே  என்பது  நமஹ + தே  என்று  பிரிக்கப்படுகிறது.  இதன்  பொருள்  " நான்  உங்களைத்  தலை  தாழ்த்தி  வணங்குகிறேன்
   அல்லது  நான்  நெடுஞ்சாண்  கிடையாகக்  கீழே  விழுந்து  வணங்குகிறேன்"  என்பதாகும்.  ' நமஹ'  என்ற  சொல்லிற்கு  ' ந - மம'  ( என்னுடையது  அல்ல )
   என்று  பொருள்.
*  சனிபகவான்  சந்தோஷமாக  இருக்கும்  ஊர்,  சங்ககிரி.
*  சத்யமும்  தர்மமும்  எத்தகைய  சூழலிலும்  நம்மைக்  கைவிடாது  என்பது  வேத  புராண,  இதிகாச  வாக்கு.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.  

Sunday, June 7, 2015

கோயில் செய்திகள்.

ஆனந்தம்  தரும்  அபிஷேகங்கள்!
*  கேரளாவில்  உள்ள  கொடுங்கலூரில்,  பகவதி  அம்மனுக்கு  பால்,  தயிர்  போன்ற  அபிஷேகங்களுடன்  தவிடும்  அபிஷேகம்  செய்யப்படுகிறது.
*  தஞ்சை  மாவட்டம்  திரும்புறம்பியம்  தலத்திலுள்ள  பிரளயம்  காத்த  விநாயகருக்கு  சதுர்த்தி  அன்று  மட்டும்  ஒரு  குடம்  தேன்  அபிஷேகம்
   செய்யப்படுகிறது.  மற்ற  நாட்களில்  அபிஷேகம்  கிடையாது.
*  திருவலஞ்சுழியிலுள்ள  விநாயகர்  கடல்  நுரையால்  செய்யப்பட்டவர்.  ஆதலால்  அவருக்கு  பச்சைக்கற்பூரம்  தூவுவதைத்  தவிர  வேறு  அபிஷேகம்
   கிடையாது.
*  திருக்குற்றாலம்  குற்றாலநாதருக்கு  மூலிகை  வேர்கள்,  மருந்துச்  சரக்குகள்  ஆகியவற்றை  அரைத்துக்  காய்ச்சப்படும்  தைலம்  அபிஷேகம்
   செய்யப்படுகிறது. பிறகு  இந்தத்  தைலம்  பிரசாதமாகத்  தரப்படுகிறது.
*  திருவாரூர்  மாவட்டம்  பொன்னிறை  என்னும்  ஊரில்  உள்ள  அகஸ்தீஸ்வரருக்கு  ஆண்டுதோறும்  பங்குனி  உத்திரத்தன்று  நெல்லிப்பொடி  அபிஷேகம்
   செய்யப்படுகிறது.
*  சென்னை  குரோம்பேட்டை  கணபதிபுரத்தில்  உள்ள  செங்கச்சேரி  அம்மன்  ஆலயத்தில்  பௌர்ணமியன்று  மருதாணி  இலை  அபிஷேகம்
   நடைபெறுகிறது. பின்னர்  அந்த  இலை  கன்னிப்  பெண்களுக்கு  பிரசாதமாக  வழங்கப்படுகிறது.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.

Saturday, June 6, 2015

பகவானும் பழைய சாதமும்!

    பழையது  விடிய  விடிய  ஜலத்திலேயே  கிடக்கிறது.  பகவான்  எப்போதும்  கடலிலேயே  படுத்திருக்கிறார்.  பழையதைப்  போலவே  பகவானும்  நாரம்  அதாவது  தண்ணீர்  சூழ  இருப்பவர்.  அதனால்தான்  அவருக்கு  நாராயணன்  என்றே  பெயர்.  பழையதை  காலையில்  சாப்பிட  வேண்டும்.  பகவானையும்  காலையிலேயே  கும்பிட  வேண்டும்.  பழையதை  சாப்பிட்டால்  உடலுக்கு  குளிர்ச்சி  ஏற்படும்.  நாராயணனை  சேவித்தால்  மனசுக்கு  குளிர்ச்சி  கிடைக்கும்.  அதனால்  பகவானும்  பழையதும்  அப்படின்னு  சொல்ற  வழக்கம்  ஏற்பட்டது.
-- உபன்யாசம்  ஒன்றில்  கேட்டவர்:  ஆர்.கண்ணன்,  சென்னை. 33.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

Friday, June 5, 2015

டிப்ஸ்...டிப்ஸ்...!

*  சூரிய  உதயத்துக்கு  முன்பு  வாசலில்  கோலம்  போடுவது  நல்லது.
*  வெறும்  தண்ணீரை  தெளிக்கக்கூடாது.  ( மண்  தரை  இல்லாத  இடத்தில் )  சிறிது  மஞ்சள்  தூள்  கலந்த  நீரையோ,  சாணத்தையோ  கலந்து  தெளிக்க
   வேண்டும்.
*  மாக்கோலம்  போடும்  போது,  மைதா  மாவு  கலந்து  போட்டால்  சிறிது  நாட்களுக்கு  அழியாமல்,  அழகாக  இருக்கும்.
*  அரைத்த  மாவில்  கோலம்  போட்டால்  ஈரம்  காயும்  முன்  செம்மண்  பூச  வேண்டும்.
*  கிழமை  கோலங்கள்  மற்றும் பிரார்த்தனை  கோலங்களை  பூஜை  அறையில்  பலகை  அல்லது  கல்லில்  அரிசி  மாவில்தான்  போடவேண்டும்.
*  வண்ணக்கோலங்கள்  போடும்  போது  சலித்த  நைஸ்  மணலுடனோ,  கோல  மாவுடனோ  கலந்து  போட்டால்  காற்றில்  பறக்காமல்  இருக்கும்.
*  கோல  மாவு  வாங்கும்  போது  சற்று  வெளுப்பு  அதிகமாக  இருக்கும்.  மாவு  வாங்கி  சலித்து  1/4  படி  மாவிற்கு  100  கிராம்  பச்சரிசி  மாவு  கலந்து
   போட்டால்  நன்றாக  இருக்கும்.  இந்த  மாவை  கோலக்குழாயில்  போட்டால்  துளைகள்  அடைபடாது.
_    தினமலர், கோல மலர்.  12.12.12.  

Thursday, June 4, 2015

விஷ்ணு விசேஷச் செய்திகள்.

*  நாகர்கோவிலில்  இருந்து  திருவனந்தபுரம்  போகிற  வழியில்  உள்ள திருவட்டாறு  ஆதிகேசவப்  பெருமாள்  கோயிலில்  அல்லாவுக்கு  பூஜை  நடக்கிறது.
*  திருநெல்வேலி  நெல்லையப்பர்  கோயிலில்  உள்ள  பெருமாளின்  உற்சவத்  திருமேனியின்  மார்பில்  சிவலிங்க  அடையாளம்  உள்ளது.
*  திருக்கண்ணபுரத்தில்  கண்ணபுரத்தான்  பத்மாசனத்தில்  ஸ்ரீதேவி,  பூதேவி,  பத்மினி,  ஆண்டாள்  என  நான்கு  தேவியருடன்  சங்கு  சக்கரம்  தாங்கிக்
   காட்சியளிக்கிறார்.
*  ஆசியாவிலேயே  மிகப்பெரிய  பள்ளிகொண்ட  பெருமாள்  உள்ள  தலம்  திருமயம்.  ஒரே  மலையைக்  குடைந்து  அமைத்த  சிவன் - திருமால்  கோயில்
   இதுமடும்தான்.
*  திருச்சி  முசிறி  சாலையில்  உள்ள  வேதநாராயணன்  கோயிலில்  பெருமாள்  அனைத்து  வேதங்களையும்  தலையணையாக  வைத்துப்  படுத்திருக்கிறார்.
   இதனால்  அவருக்கு  வேதநாராயணன்  என்று  பெயர்.
*  கர்நாடகத்தில்  உள்ள  ஸ்ரீரங்கப்பட்டினத்தில்  உள்ள  ரங்கநாதர்  எழுந்தருளியுள்ள  ஆதிசேஷனுக்கு  ஏழு  தலைகள்  இருப்பது  வித்தியாசமானது.
*  திருமலை,  தான்தோன்றிமலை,  உப்பிலியப்பன்  கோயில்,  குணசீலம்  ஆகிய  நான்கு  பெருமாள்  கோயில்களிலும்  தாயாருக்கு  சன்னதி  இல்லை.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

Wednesday, June 3, 2015

விசேஷ நாட்களில் கோலம்.

  விசேஷ  நாட்களில்  அரிசி  மாவால்  கோலம்  போட  ஒவ்வொரு  முறையும்  அரிசியை  நீரில்  ஊறவைத்து  அரைக்க  தேவையில்லை.
     தேவையான  அளவு  அரிசியை  ஊறவைத்து,  அதிகம்  தண்ணீர்  விடாமல்  கெட்டியாக  அரைத்து,  சிறுசிறு  வில்லைகளாக  தட்டி  வெயிலில்  நன்கு  காயவைத்து  எடுத்து  பத்திரப்படுத்தி  கொண்டால்,  எப்போது  தேவையோ  அப்போது  கரைத்து  கோலமிடலாம்.   ரெடிமேட்  கோலமாவாக  உபயோகப்படுத்தலாம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

Tuesday, June 2, 2015

சிவன் சிறப்புச் செய்திகள்.

*  நீடூரில்  ஒரு  நண்டு  சிவபெருமானை  வணங்கியதால்  சிவலிங்கத்தின்  உச்சியில்  நண்டு  வளை  உள்ளது.  இங்கு  சுவாமியின்  பெயர்  அருட்சோமநாதர்.
*  தலைச்சங்காட்டில்  திருமால்  சிவபெருமானை  வழிபட்டு  பாஞ்சஜன்ய  சங்கைப்  பெற்றதால்,  அங்கு  சங்கு  வடிவில்  மூலவராகக்  காட்சியளிக்கிறார்
   ஈசன்.  இறைவனுடைய  பெயர்  சங்கராண்யேஸ்வரர்.
*  அமர்நாத்தில்  உள்ள  பனிலிங்கம்  சந்திரனைப்போலவே  15  நாளில்  வளர்ந்து  பௌர்ணமியில்  முழுலிங்கமாகவும்,  அடுத்த  15  நாளில்  தேய்ந்து
   அமாவாசையில்  மறைவதும்  சிறப்பம்சம்.
*  செம்பனார்கோயிலில்  உள்ள  சிவபெருமான்  சொர்ணபுரீஸ்வரர்  என்ற  பெயருடன்  32  இதழ்களை  உடைய  தாமரை  வடிவ  ஆவுடையாரில்  சுயம்பு
   லிங்கமாக  எழுந்தருளியிருக்கிறார்.    
*  காஞ்சிபுரத்தில்  உள்ள  கைலாசநாதர்  ஆலயத்தில்  சிவன்  எட்டு  கைகளுடன்  சிற்பமாகக்  காட்சியளிக்கிறார்.
*  மகாராஷ்டிரா  மாநிலம்  எல்லோரா  குகைகளுக்கு  அடுத்து  உள்ள  ' குஸ்மேசம்'  என்னும்  ஊரில்  உள்ள  சிவலிங்கம்  குங்குமத்தால்  ஆனது.
*  பொதுவாக  பெருமாள்  கோயிலில்தான்  சடாரி  வைப்பார்கள்.  ஆனால்,  மூன்று  கோயில்களில்  மட்டும்  சடாரி  வைக்கப்படுகிறது.  அவை
   காஞ்சிபுரத்தில்  உள்ள  ஏகாம்பரேஸ்வரர்  கோயில்,  காளஹஸ்தி  கோயில்  மற்றும்  சுருட்டப்பள்ளி  சிவன்  கோயில்  ஆகும்.
*  திருவக்கரை  வக்கிரகாளியம்மன்  கோயிலில்  உள்ள  சிவபெருமானது  பெயர்  சந்திரமௌலீஸ்வரர்.  அவர்  மும்முக  லிங்கமாக  தரிசனம்  அளிக்கிறார்.
   அதில்  கிழக்கு  முகம்  தத்புருஷ  லிங்கம்  என்றும்,  வடக்கு  முகம்  வாமதேவ  முகமாகவும்,  தெற்கு  முகம்  அகோர  மூர்த்தியாகவும்  வணங்கப்படுகிறார்.
*  ஐந்துமுகம்  கொண்ட  சிவன்,  ஏழு  தலங்களில்  அருள்புரிகிறார்.  1.காசி,  2.நேபாளம்,  3.காளஹஸ்தி,  4.திருவானைக்காவல்,  5.சித்தேஸ்வர்  மகாதேவ்,
   6.ராசிபுரம்,  7.காஞ்சி  கைலாசநாதர்  கோயில்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.  

Monday, June 1, 2015

இப்படியும் போடலாம் கோலம்.

*  அரிசி  மாவில்  தண்ணீர்  சற்று  அதிகமாகி  விட்டதா,  கவலை  வேண்டாம்.  சிறிதளவு  மைதா  மாவினை  கலந்து  இழுங்கள்,  கோலம்  அழகாக  வரும்.
*  அரிசி  மாவில்,  சாதம்  வடித்த  கஞ்சியினை  கொஞ்சம்  கலந்து  கோலம்  இழுத்துப்  பாருங்களேன்,  இந்தக்  கோலம்  2  நாட்கள்  கூடுதலாகவே
   இருக்கும்.  சட்டென்று  உதிராது.
*  பச்சரிசியை  ஊறவைத்து,  கோலம்  போட  நேரமில்லையா.  இதோ,  இன்ஸ்டன்ட்  மாவு. உலர்ந்த  பச்சரிசி  மாவுடன்  குளிர்ந்த  நீரை  கொஞ்சம்  ஊற்றி
   10  நிமிடம்  ஊற  வையுங்கள்,  கோலமாவு  உடனே  ரெடி.
*  பால்  பிழிந்த  தேங்காய்  பூவுடன்  வண்ணங்களைக்  கலந்து  கோலம்  போட்டால்,  கோலம்  மிகவும்  அழகாக  இருக்கும். இதை  நன்கு  காயவைத்து
   பின்பு  போடவும்.
*  கலர்  மெழுகுவர்த்திகளை  ஏற்றி,  ஓர்  பாத்திரத்தில்  தண்ணீர்  வைத்து  அதில்  மெழுகுவர்த்திகளை  காண்பித்தால்  உருகும்  மெழுகு  தண்னீரில்
   விழுந்த  மணிகளாக  வரும்.  இந்த  வண்ண  மணிகளை  வைத்து  ரங்கோலி  செய்யலாம்.  ஆரத்தி  தட்டுகளில்  கோலமாக  ஒட்டலாம்.
-- பி.பத்மாவதி பெருமாள்,  காரைக்கால்.
--   தினமலர், கோல மலர்.  12.12.12.