Thursday, March 31, 2016

மனதுக்கு இல்லை வயது!

   நம் நாட்டில் 60 வயதைக் கடந்தவர்கள் 8 கோடியே 60 லட்சம் பேர்.  இது மொத்த மக்கள்தொகையான 121 கோடியில் 7.1 சதவிகிதம் .  60 வயதைக் கடந்தவர்களை முதியவர்கள் என்று ஐ.நா. சபை வகைப்படுத்துவதால் இந்தக் கணக்கு.  முத்யவர் யார் என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.
     50 வயது முதலே முதுமை தொடங்குவதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு.  ஆனால், முதுமை என்பதை வயதின் மூலம் அறிவதைவிட , வாழ்க்கையில் ஒருவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையிலும் அவரது செயல் தன்மையின் அடிப்படையிலும் புரிந்துகொள்ள வேண்டும்.  முதியவர்களின் உடலில் செல்களைப் புதுப்பிக்கும் திறன் குறைவாக இருக்கும்.  இதனால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும்.
     இன்னொரு பக்கம் பார்வை, கேட்புத் திறன் உள்ளிட்ட உனர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கும்.  ஒவ்வொரு உணர்வு உறுப்புகளும் வெவ்வேறு காலத்தில் இதுபோல படிப்படியாக உணர்வுகளை இழக்கும்.  ஆனால், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.  இதை வைத்தும் முதுமையை உணரலாம்.  முன்பு செய்த கடினமான வேலைகளைத் தவிர்த்து எளிமையான வேலைகளைச் செய்வது அல்லது மெதுவாக வேலைகளைச் செய்வது என்பதும் முதுமையின் இயல்பே.  வயதாவதைப் பற்றிய அறிவியலுக்கு ஜெரான்டோலாஜி (Gerontology ) என்று பெயர்.  முதுமையில் வரும் நோய்களைப் பற்றிய படிப்புக்கு ஜெரியாட் ரிக்ஸ் ( Geriatrics ) என்று பெயர்.
--- பேராசிரியர்கள் இராம சீனுவாசன். வே.ராஜி சுகுமார்.  பூச்செண்டு.
--- 'தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஏப்ரல் 13,2014.    

Wednesday, March 30, 2016

டைல்ஸ்


உஷ்ணம் குறைக்கும் டைல்ஸ் !
     கட்டுமானத்துறையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதியப் பொருட்கள் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன.  அந்த வகையில் வீட்டில் உஷ்ணத்தைக் குறைக்கவும் நவீன தொழில் நுட்பம் வந்துள்ளது.  உஷ்ணத்தை உள்ளீழுத்துக் கொள்ளும் டைல்ஸ்களை மாடியின் மேற்புரத்தில் பதிப்பதன் மூலம் உஷ்ணத்தைக் குறைக்க வழி கிடைத்துள்ளது.  வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த வகை டைல்ஸ்கள் இப்போது இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டும், உஷ்ணத்தை குறைக்கும் மூலப்பொருட்களின் கலவையைக் கொண்டும் உயர் அழுத்த முறையில் டைல்ஸ்களை பல நிறுவனங்கள் இன்று உற்பத்தி செய்து வருகின்றன.
     இந்த வகையான டைல்ஸ்கள் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன் கட்டடத்தின் உஷ்ணத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை அதிகப்படுத்துகிறது.  இதுபோன்ற டைல்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் குளிர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்கள், மின் விசிறிக்கான மின் தேவை குறையும்.  மேலும் இந்த டைல்ஸ் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காங்கிரீட் சேதமடையாமலும் காக்கப்படுகிறது.
     "உஷ்ணத்தைத் தடுக்கும் இந்த வகையான டைல்ஸ்களை மாடியின் மேல்புரத்தில் ஒட்டினால், கீழ் தளத்தில் உள்ள வீட்டுக்கு கிடைக்கும் குளிர்ச்சி, மாடி வீட்டுக்கும் கிடைக்கும்" என்கிறார் உஷ்ணம் குறைக்கும் டைல்ஸ்களை உற்பத்தி செய்துவரும் பிரேம் ஆந்த்.
-- டி.கார்த்திக்.  சொந்த வீடு.
--  'தி இந்து' நாளிதழ்.  சனி, அக்டோபர்19, 2013.                                  

Tuesday, March 29, 2016

குற்றவாளிகளைக் கண்டுபிடித்த நாய்

  உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிளி தன் காப்பாளரைக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் சில வாரங்களுக்கு முன்னால் பரபரப்பாகப் பேசப்பட்டது.  அதேபோல பிரான்ஸில் தன் காப்பாளரைக் கொன்ற குற்றவாளியை அவரது நாய் அடையாளம் காட்டியுள்ளது.  பாரீஸ் நகரத்தில் டாங்கோ என்னும் 9 வயதுடைய நாய் வசித்து வந்தது.  டாங்கோவின் காப்பாளரை சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.  ஆனால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு இருந்தது.  அதன் அடிப்படையில் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரை அடையாளம் காட்டுவதற்காக அந்த நாயை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.  கைதிகள் ஒவ்வொருவரும் நாயை அடிப்பதுபோல் பாசாங்கு செய்யச் சொல்லியுள்ளனர்.  அப்போது அவர்களில் ஒருவரைப் பார்த்து அந்த நாய் கோபமாகக் குரைத்தது.  அந்த நபர்தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்தனர்.
--  ஆர்.ஜெய்குமார்.  விந்தை உலகம்.   வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 12, 2014.  

Monday, March 28, 2016

கொழுப்பைக் குறை

'கொழுப்பைக் குறை' யாராவது சொன்னால் நமக்கு கோபம் வராமல் இருக்காது.  ஆனால், ஒரு அரசாங்கமே இதைச் சொன்னால் ...? கொழுப்பைக் குறை எனஸ் சொல்லியிருப்பது இங்கிலாந்து அரசுதான்.  இங்கிலாந்தில் பீட்சாக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சீஸ், சாஸ் நிறுத்த வேண்டும் என்றும் அதற்குத் தனியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.  'கொழுப்புக் குறைபாடு' நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குக் காரணம் பீட்சாவுக்கு இலவசமாக அளிக்கப்படும் சீஸூம் சாஸூம்தான் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.  மக்கள் கேட்கும் போதெல்லாம் இவற்றை ஹோட்டல்காரர்கள் கூடுதலாக வழங்குகிறார்கள்.  எனினும் இதற்கு ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
-- ஆர்.ஜெய்குமார்.  விந்தை உலகம்.   வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 12, 2014.   

Sunday, March 27, 2016

நிலாவின் வயதென்ன?

    நிலா பூமியின் துணை கிரகம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  ஆனால், இந்த நிலா எப்போது தோன்றியது தெரியுமா?  447 கோடி ஆண்டுகள்.  இதைக் குறித்து பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒரு ஆய்வு மேற்கொண்டது.  முடிவில், சந்திரன் 447 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.  செவ்வாய் கிரக அளவிலான ஒரு பொருள் பூமியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.  பூமியில் இருந்து உடைந்த சிதறல் தான் நிலா ஆக உருமாறியுள்ளது என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.  அதே நேரத்தில், பூமியின் சிதறலில் இருந்து நிலா தோன்றி 10 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற கருத்தும் எழுந்துள்ளது.
-- ஆர்.ஜெய்குமார்.  விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 12, 2014. 

Saturday, March 26, 2016

சோலார் பேனல்

சோலார் பேனல்மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
     சோலார் பேனல் என்பது சோலார் செல்களால் ஆனது.  இது ஒளிச்சக்தியை மின் சக்தியாக மாற்றக்கூடிய தன்மை வாய்ந்தது.
மின்சாரம், வோல்டேஜ் போன்ர மின் இணைப்பின் பல தன்மைகளைக் கொண்டது இந்த செல்.
      சோலார் செல்கள் சிலிக்கானால் ஆனவை.  இந்த செல்லில் அதிகப்படியான எலக்ட்ரான்கள் ஒரு பகுதியிலும், எலக்ட்ரான்களை இழந்த அணுக்கள் மறு பகுதியிலும் இருக்கும்.  சூரிய ஒளி இந்த செல்லில் பட்டவுடன், அதிகப்படி எலக்ட்ரான்கள் உள்ள பகுதி, குறைவுபட்ட எலக்ட்ரான்கள் உள்ள பகுதியை நோக்கிப் பாயும்.  இதன் காரணமாக ஒருவித மின்சாரம் உண்டாகிறது.  இது இன்வர்ட்டரை அடைகிறது.  அங்கு இது பயன்படுத்தப்படக் கூடிய மின்சாரமாக மாற்றப்படுகிறது.
--  ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை?!
--  தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.  

Friday, March 25, 2016

கிரீன் கார்டு

கிரீன் கார்டு என்றால் என்ன பொருள்
     ஸ்மார்ட்டு கார்டு என்பது சட்டைப்பைக்குள் வைக்கும்படியான சிறிய பிளாஸ்டிக் கார்டு.  இதை அடையாள அட்டையாகவோ, தகவல்களைப் பதிவு செய்யும் அட்டையாகவோ பயன்படுத்தலாம்.  கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டு.  எரிபொருள் நிரப்புவதற்கான கார்டு, செல்போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டு இவை எல்லாமே ஸ்மார்ட்டு கார்டுதான்.  பான் கார்டு என்பது வருமான வரித்துறையினரால் அளிக்கப்படும் அடையாள அட்டை.  கிரீன் கார்டு என்பது அமெரிக்க அரசால் வழங்கப்படும் அட்டை .  இது இருந்தால் அந்த நாட்டின் நிரந்தரக் குடிமகன் என்பது அர்த்தம்.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை?!
--  தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.   

Thursday, March 24, 2016

வாத்துகளைக் கையாளும் விதம்

  பொதுவாக மனிதர்கள் பிற உயிரினங்களை குறைந்தபட்ச கவனம் செலுத்தி கையாளவேண்டும்.  இல்லை எனில் அது மனிதருக்கோ அல்லது அந்த விலங்குக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படலாம்.
     எனவே, மனிதன் கையாளும் முக்கியமான உயிரினங்களான முயல்களை அவற்றின் இரண்டு காதுகளைப் பிடித்து தூக்குகிறான்.  பூனையை பிடரியைப் பிடித்து தூக்குகிறான்.  கோழிகளை கால்களைப் பிடித்து தூக்குகிறான்.  ஆனால், வாத்துகளை மட்டும் கழுத்தைப்பிடித்துதான் தூக்க வேண்டும்.  பிற பறவை இனங்களில் கழுத்தைப்பிடித்து தூக்குவது என்பது அது ஒரு கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.
     வாத்துகளின் கால்கள் எளிதில் உடைய கூடியதாக இருக்கும்.
     வாத்தின் கழுத்தில் உள்ள சுவாச குழாய் பிவிசி குழாய் போல உறுதியாக இருக்கும்.  அதனால் கழுத்தைப் பிடித்துதான் தூக்கவேண்டும்.
-- டால்டர் ஆர். கோவிந்தராஜ்.
-- தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.    

Wednesday, March 23, 2016

திருமலை நாயக்கர்

திருமலை நாயக்கரின் கற்சிற்பங்கள் கண்டெடுப்பு.  தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் தகவல்.
     தமிழகத்தில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர்களில் சிறந்தவராக கருதப்படும் திருமலை நாயக்கரின் கற்சிற்பங்கள் மதுரை உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  நேர்த்தியான கனமான கற்பலகைகளில் நாயக்கர் கால கலைநுட்பத்துடன் சிற்பங்கள் இரண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இந்த சிற்பங்கள் சுமார் 400 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததால் முகத்தில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது.  ஒரு சிற்பத்தில் உயர்ரக வகையைச் சேர்ந்த கம்பீரமான தோற்றத்தையுடைய ஆண் குதிரையின்மீதுஅமர்ந்துள்ள மன்னர் குதிரையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போல கீழே நிற்கும் பணியாள் மன்னருக்கு உதவுவது போன்றும் காட்டப்பட்டுள்ளன.  அருகில் பெண் ஒருவர் அச்சத்துடன் நிற்பது போலவும், நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன.
     அடுத்த சிற்பத்தில் மன்னர் நடந்து செல்வது போலவும், வில்லில் நாணினை இழுத்து அம்பினை எய்துவது போன்றும் உள்ளது.
திருமலை நாயக்கரை குதிரை வீரராகவும், வேட்டையாடும் காட்சியையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
_தினமலர்.  10-4-2014.   

Tuesday, March 22, 2016

தன்வந்திரி பகவான்

  பாற்கடல் கடையப்பட்ட சமயத்தில் அதுலேர்ந்து அமுத கலசத்தை எடுத்துகிட்டு வெளிப்பட்டவர்தான் தன்வந்திரி பகவான்.  ஒரு கையில அமுதம் நிரம்பிய கலசம் எடுத்துக்கிட்டு வந்த இவர், தன்னோட மற்ற மூன்று கைகள்ல மருந்துக் கல்வம், மூலிகைச் செடிகள், அட்டைப்பூச்சி இவற்றை ஏந்திவந்தாராம்.  மகாலட்சுமி, தன்வந்திரி, சந்திரன் மூணுபேரும் பாற்லடல்ல இருந்து தோன்றியவங்க.
கதவு இல்லாத ஊர் !
     மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் சனிசிங்கணாபூர் என்னும் கிராமத்தில் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ளது.  அந்தக் கோயிலுக்கும், அவ்வூரில் உள்ள வீடுகள் அனைத்திற்கும் கதவுகள் கிடையாது.  வீடு திறந்தே இருந்தாலும் அங்கு திருட்டு எதுவும் நடைபெறுவதில்லை.  சக்தி வாய்ந்த சனீஸ்வர பகவான், திருடனை கடுமையாகத் தண்டிப்பார் என்று அங்கு வாழும் மக்கள் நம்புகிறார்கள்.
அரசமர பிரதட்சணம்!
     நமக்கு ஏற்படும் நோய்கள், துன்பங்கள், நவகிரக பாதிப்புகள் எல்லாவற்றையும் அசுவத்த பிரதட்சணம் ( அரசமரத்தை வலம் வருதல் ) போக்குகிறது.
_  குமுதம் பக்தி ஸ்பெஷல். மார்ச் 15 - 31,  2014. 

Monday, March 21, 2016

பாதியில் நின்ற கோபுரம் !

  மதுரை மீனாட்சிக்குக் கோயில் கட்டியபோது, கிழக்குப் பகுதியில் ஆவணி மூல வீதியை அடுத்து ராஜகோபுரம் ஒன்று கட்டப்பட்டது.  பணிகள் பாதி நடந்து கொண்டிருந்த வேளையில் ராஜகோபுரத்தில் இருந்த கற்களில் தேரை விழுந்துவிட்டதாம்.  அதற்கு மேல் பணியைத் தொடர்ந்தால் கோபுரம் தாங்காது எனச் சிற்பிகள் எச்சரித்ததால் உடனே அப்பணி நிறுத்தப்பட்டதாம்.  இக்கோபுரம் இப்போதும் பாதி கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி அளிக்கிறது.
பத்து வகை உற்சவம் !
      ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்கள் பத்து வகைப்படும்.  அவை : 1நாள் உற்சவம் -- சைவம்;  2 நாள் உற்சவம்  --  கௌணம்;  5 நாள் உற்சவம்  --  பௌதிகம்;  7 நாள் உற்சவம்  --  கௌவனம் ஸ்ரீகாரம்;  9 நாள் உற்சவம்  --  தைவீகம் சௌக்யம்;  11 நாள் உற்சவம்  --  மைத்ருகம்;  13 நாள் உற்சவம்  --  கௌமாரம்;  15 நாள் உற்சவம்  --  காத்தூகம்;  18 நாள் உற்சவம்  --  சாந்திரம்;  48 நாள் உற்சவம்  --  மண்டலம்.
மணியோசை !
     மைசூருக்கு அருகில் சோமநாதபுரத்தில் அமைந்துள்ள கேசவன் கோயில் கி.பி.1208-ல் மூன்றாம்னரசிம்ம ஹொய்சாள மன்னரால் கட்டப்பட்டது.  இங்கு கிருஷ்ணரின் சிலையில் உள்ள புல்லாங்குழலில் எங்கு தட்டினாலும் இனிய மணியோசை கேட்கிறது.  இத்தனைக்கும் சிலை வடிக்க கையாண்ட அதே வகை கனமான கருங்கல்லே புல்லாங்குழல் வடிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
---  குமுதம் பக்தி ஸ்பெஷல். மார்ச் 15 - 31,  2014.  

Sunday, March 20, 2016

வலை பாயுதே

*  twitter.com / dohatalkies:  அம்மா ஆட்சியில் எல்லாத்தையும் விலையில்லாமல்கூடத் தருவாங்க.  ஆனா, இலையில்லாமத்
   தர மாட்டாங்க போல!
*  twitter.com / Nagarajan_M: தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள்?  -- மோடி # நாங்கெங்க அவரை
   அனுப்பிச்சோம்.  அவரே ஜெயிச்சதா சொல்லி ஜீப்ல ஏறி வந்துட்டாரு!
*  twitter.com / puthi_yavan_ ji:  எல்லா இறைவனும் புகழ்வதற்கே!
__ சைபர் ஸ்பைடர்.
    குருக்கள்
*  "மன்மோகனையும் சோனியாவையும் தனக்குக் கிடைத்த 'இரண்டு குருக்கள்' என்கிறாரே ராகுல்?"
    "ஆம்.  ஒருவர் இத்தாலிய குரு;  மற்றொருவர் மௌனகுரு!"
__ சம்பத் குமாரி, திருச்சி.
*  "குடிகாரர், குடிகாரன்  _ என்ன வித்தியாசம்?"
   "டாஸ்மாக்கில் நுழையும்போது குடிகாரர்.  அங்கிருந்துவெளியே திரும்பும்போது குடிகாரன்!"
__ புதூர்  பாலா, நாமக்கல்.  ( நானே கேள்வி... நானே பதில்!   தொடரில்... ).
_ஆனந்த விகடன்.  6-11-2013

Saturday, March 19, 2016

பிரஸ்தானத்ரயம்.

   இந்து சமயத்தின் அடிப்படை நூல்கள் எவை?  மூன்று நூல்களை அடிப்படையான நூல்கள் என்று கொள்ளும் மரபு இந்து தத்துவ இயலில் உள்ளது.  இவற்றை பிரமாணமான, அதாவது ஆதாரமான நூல்கலாகக் கொள்ளலாம்.  பிரஸ்தானத்ரயம் என்று இவை அழைக்கப்படுகின்றன.  ஆதாரமான மூன்று பிரதிகள் என்று பொருள் கொள்ளலாம்.
     பாதராயணர் அல்லது வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரம், உபநிஷதங்கள், பகவத் கீதை ஆகியவையே அந்த மூன்று நூல்கள்.  இவற்ரில் உபநிஷதம் என்பது ஒரு நூல் அல்ல.  முக்கியமான உபநிஷதங்கள் என்று 14 உபநிஷதங்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.  சங்கரர்,ராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று ஆசாரியர்களும் இந்த நூல்களுக்குத் தத்தமது பார்வையின் அடிப்படையில் உரை எழுதியிருகிறார்கள்.
-- நசிகேதன்.  தத்துவ விசாரம்.  ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஏப்ரல் 10, 2014.  

Friday, March 18, 2016

சொர்க்கம், மோட்சம்

சொர்க்கம்,  மோட்சம் இரண்டும் ஒன்றல்ல.
     'சொர்க்கம்' என்பது இன்ப உலகம்.  தேவ உலக இன்பங்கள் நிறைந்திருக்கும் இடம்.  'மோட்சம்' என்றால் 'முக்தி' என்று அர்த்தம்.  இறைவனுடன் கலப்பது, இறையின்பத்தில் திளைப்பது மோட்சம்.
      வடநாட்டில் உள்ள வைணவ தலங்களில் ஒன்று துவாரக.  சொர்க்கமும், மோட்சமும் வேறுவேறானவை என்பதைக் காட்டும் ஊர் இது.  இந்த ஊரை சப்த ( ஏழு ) மோட்சபுரிகளில் ஒன்றாகச் சொல்வார்கள்.  இங்குள்ள துவாரகீஷ் ஆலயத்துக்கு உள்ளே செல்பவர்கள் ஒரு வழியாக செல்வார்கள்.  அந்த வழிக்கு 'சொர்க்கதுவார்' என்று பெயர்.  இன்னொரு வழியாக வெளியே வருவார்கள்.  அதற்கு 'மோட்ச துவார்' என்று பெயர்.
     இங்கேயுள்ள இந்த இரண்டு வழிகளும் சொர்க்கமும், மோட்சமும் வேறானவை என்பதைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.  'துவாரம்' என்றால் 'வாசல்' என்று அர்த்தம்.  'கா' என்றால் நிரந்தரமான    இன்பம் பரமானந்தம் என்று அர்த்தம்.  அதனால் இந்த ஊருக்கு 'துவாரகா' என்று பெயர்.  
--  தினமலர். பக்திமலர். ஏப்ரல் 10,  2014. 

Thursday, March 17, 2016

திதிகள்

பிரதமை,     துதிகை,     திரிதியை,     சதுர்த்தி,     பஞ்சமி,     சஷ்டி,     சத்தமி,     அஷ்டமி,     நவமி,     தசமி,     ஏகாதசி,     துவாதசி,
திரியோதசி,     சதுர்த்தசி,     அமாவாசை ( அ) பௌர்ணமி.

திருமாலாயுதம்.
சங்கு,     சக்கரம்,     தண்டு,     வாள்,     வில்.

தாதுக்கள்
இரசம்,     இரத்தம்,     சுக்கிலம்,     மூளை,     தசை,     எலும்பு,     தோல்.
--- தினமலர். பக்திமலர். ஏப்ரல் 10,  2014.

Wednesday, March 16, 2016

ஜோக்ஸ் !

*  "ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றவரை எதுக்கு போலீஸ் கைதுசெஞ்சாங்க?"
   " 'வீட்டு மனை (வி)  விற்பனைக்கு'னு தவறுதலா ப்ளெக்ஸ் ஃபோர்டு வெச்சிட்டாராம்!"
*  "எங்கள் அவமானத்துகுரிய... மன்னிக்கவும்,  எங்கள் அபிமானத்துக்குரிய தலைவர் அவர்களே !"
* "சாவி இல்லைன்னா நீங்க என்ன பண்ணுவீங்க எசமான்?"
  "பூட்டை உடைப்பேன்."
  "அதையேதான் நானும் செஞ்சேன் !"
* "மாப்ள, நீங்க ஐ.எஸ்.ஐ.எஸ்.பேங்க்ல என்னவா இருக்கேன்னு சொன்னீங்க?"
  "கஸ்டமரா இருக்கேன் மாமா...ஹி...ஹி!"
* "தாய்மார்களே...பெரியோர்களே...நண்பர்களே! கட்சிக்குள்ளே இருக்கும் எதிர்க் கட்சி ஆதரவாளர்களே...!"

தேவியர் மூவர் !

   காசி விசாலாட்சி, திருக்கடவூர் அபிராமி, திருவையாறு அறம்வளர்த்த நாயகி மூன்று தேவியருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.  இந்த மூவரும் வலக்கையில் அக்க மாலையும்,  இடக்கரத்தில் கெண்டியும்தாங்கி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகின்றனர்.
கிணற்றில் கங்கை !
     திருக்கடவூர் ஆலயத் திருக்கிணற்றில் பங்குனி மாத அசுவினி நட்சத்திர நாளில் கங்கை ஆவிர்பவித்ததாக ஐதீகம்.  அன்றைய தினம் மார்க்கண்டேயர் தீத்தவாரி கண்டருள்வார்.  இந்த தீர்த்தமே திருக்கடவூர் இறைவனுக்குரிய அபிஷேக தீர்த்தம் என்பது சிறப்பு.
வித்தியாசமான கோலம் !
     காவிரி வடகரைத் திருத்தலங்களுள் ஒன்றான திருநெய்த்தானத்தில் தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது வித்தியாசமான தோற்றமாகும்.
பிரயாகை புண்ணியம் !
     அரசமரத்தின் நிழல்படும் நீர்நிலைகளில் அமாவாசை தினங்களிலும் வியாழக்கிழமைகளிலும் நீராடுவது, பிரயாகையில் நீராடிய பலனைத் தரும் எங்கின்றன புராணங்கள்.
---  குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஏப்ரல் 1 - 15,  2014. 

Tuesday, March 15, 2016

ராம நாமம் !

  ராம நாமத்தை மந்திர அட்சரங்களாகப் பிரித்தால் ர, அ, ம என்ற மூன்று அட்சரங்களாகும்.  ர என்பது அக்னி பீஜம்.  அ என்பது சூர்ய பீஜம்.  ம என்பது சந்திர பீஜம்.  அக்னி பீஜம் பாவங்களைப் போக்கும்,  சூர்ய பீஜம் ஞானம் அளிக்கும்,  சந்திர பீஜம் மனத்துயர் போக்கும்.  மனத்துயரை நீக்கி பாவங்கள் போக்கி ஞானம் அளிப்பது ராம நாமம் என்பது இதன் உட்பொருள்.
பஞ்ச பிரம்ம தலங்கள் !
     நடுவே மூலஸ்தானமும், நான்கு பக்கங்களிலும் நான்கு லிங்கங்களும் அமையப் பெற்ற திருத்தலம் பஞ்ச பிரம்ம ஸ்தலம் எனப்படும்.  அந்த அமைப்பு உள்ள திருப்புகலூர், திருவாரூர், மாகாளம் ஆகியன பஞ்ச பிரம்ம தலங்களாக விளங்குகின்றன.
யோக பீடங்கள் !
     அகத்தியர் தவம் புரிந்த இடங்களுள் பாபநாசத்தினை யோக பீடம் என்றும்,  குற்றாலத்தை போக பீடமெனவும்,  சிவசைலத்தினை ஞான பீடமாகவும் சொல்வர்.  இம்மூன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்லன.
பிரதோஷ கணபதி !
     காரைக்கால் அருகே உள்ள திருதெளிசேரி, பார்வதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிள்ளையார், பிரதோஷ விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.  திங்கட் கிழமைகளில் மாலைவேளையில் இவரை வணங்குவது சிறப்பான பலன் தரும்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஏப்ரல் 1 - 15,  2014.

Monday, March 14, 2016

பழுப்பரிசி.


     வெள்ளையனை மட்டுமல்ல வெள்ளை அரிசியையும் வேண்டாம் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி.  'பழுப்பரிசியே நல்லது' என 70 வருடங்கள் முன்னரே அவர் வலியுறுத்தினார்.  உணவுப் பற்றாக்குறை குறித்த பெரும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் 'ஆலையில் அரைத்த குருணை அற்ற, வெளுத்த அரிசியை மட்டுமே விநியோகிக்கச் சொல்கின்றார்கள்.  ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது' என நெல் விவசாயிகள் வருந்திச் சொன்னபோது காந்தி, 'பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது.  அதைச் சாப்பிடுங்கள் ' எனச் சொல்லியிருக்கிறார்.
    பழுப்பரிசி எனும் பிரவுன் ரைசில், 'Aleurone layer' எனும் தவிட்டுக்குப் பிதைய அரிசியின் தோல் நீக்கப்படுவது இல்லை.  அந்த
'அலெயுரன்' நீக்கிய வெள்ளை அரிசியில், கைக்குத்தல் அரிசியில் உள்ள 67 சதவிகித வைட்டமின் பி3, 80 சதவிகித வைட்டமின் பி1, 90 சதவிகித வைட்டமின் பி6,  மாங்கனீசு, செலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் மேலானவை காலாவதியாகிவிடும்.  நார்ச்சத்தும், நல்லது செய்யும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலமும் கூட முற்றிலும் காணாமல் போய்விடும்.
     இந்த உண்மை தெரிந்த பிறகும் அரிசிக்கு ஏன் அந்த பாலிஷ் அலங்காரங்கள் என்று கேட்டால், 'அலெயுரன் உறையை நீக்கினால்தான் அரிசியின் ஆயுட்காலம் அதிகரிக்கும்.  வணிகத்துக்கு அதுதானே அடிப்படை?' என வாதிடுகிறார்கல்.  அரிசியின் ஆயுள்காலத்தை நீட்டித்து லாபம் ஈட்டும் வணிகம், அதை உண்ணும் மனிதனின் ஆயுள்காலத்தைக் கண்டுகொள்வது இல்லை!
--- மருத்துவர் கு.சிவராமன்.   ( 'ஆறாம் திணை' தொடரில் )
-- ஆனந்த விகடன்.  22-01-2014.                                              

Sunday, March 13, 2016

பரோட்டோ, சப்பாத்தி.


     'கடை பரோட்டோ எப்படி இவ்வளவு சாஃப்ட்டா இருக்கிறது... டி.வி.யில் காட்டும் சப்பாத்தி எப்படி தவாவில் அழகா 'புஸ்' என பூரி மாதிரி உப்புகிறது' எனப் பலருக்கும் கேள்வி உண்டு.  பரோட்டா மென்மையாகவும் விசிறிப் போட வசதியாகவும், தவாவில் போடும் சப்பாத்தி, உப்பி வருவதற்கும் கோதுமையில் இயல்பாக இருக்கும் குளூட்டனைவிடக் கூடுதல் 'குளூட்டன்' கோதுமை மாவில் சேர்க்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது.  குளூட்டன் பலருக்கும் ஒவ்வாமை தரக்கூடியது.  அது மூலநோய், குடல் புண், 'இரிடபிள் பவல் சிண்ட்ரோம்' எனும் குடல் நோய் முதல் குடல் புற்று வரை உருவாக்கக்கூடியது.
-- மருத்துவர் கு.சிவராமன்.   ( 'ஆறாம் திணை' தொடரில் )
-- ஆனந்த விகடன்.  22-01-2014.                                              

Saturday, March 12, 2016

அயோடின் உப்பு.

   'உப்பு...உப்பேய்' என கூவிக் கூவி விற்கப்பட்ட உப்பை நாம் ஒழித்தாயிற்று.  இன்றளவும் சர்ச்சைக்குரிய அயோடினைக் கலந்த உப்பு மட்டும்தான் சட்டப்படி சந்தையில் இருக்க முடியும்.  அந்த நவீன உப்பைத் தயாரிக்கும் முறையைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
     உப்பளத்தில் காய்ந்து பெற்ற கடல் உப்பைக் கழுவி, அரைத்து, குழம்பாக்கி, தூசிகள்(?) நீக்கி, 'வேக்கும் ரிஃபைனரி' மூலம் இயல்பாகவே கடல் உப்பில் ஒட்டியிருக்கும் மக்னீசிய,கால்சிய கனிமங்கள், கடல் பாசியின்                                                    நுண்கனிமங்களை நீக்கி, பின் காயவைத்து உலர்த்தி, அயோடினைச் சேர்த்து, மறுபடி பொலபொலவென உதிர்ந்து விழ, உணவுக் கட்டுப்பாடு விதிகளை அங்கீகரித்து சேர்க்கப்படும் ரசாயனங்களான சோடியம் ஃபெர்ரோசயனைட் , அல்லது மெக்னீசியம் சல்பேட் முதலான பல கூறுகளில் சிலவற்றைச் சேர்த்து பளபளப்பாகப் புட்டியில் வரும் வெள்ளை வெளேர் உப்பு.  சுத்தம் தரலாம், சுகம் தருமா?
--  மருத்துவர் கு.சிவராமன்.   ( 'ஆறாம் திணை' தொடரில் )
-- ஆனந்த விகடன்.  22-01-2014.    

Friday, March 11, 2016

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

*  ஏ.சி.யில் இருந்து அமோனியா வாயு கசிந்து அறை முழுவதும் பரவியதால், தூங்கிக்கொண்டிருந்த தொழில் அதிபர் பரிதாபமாக
    உயிரிழந்தார்.
*  ஏ.சி. பயன்படுத்துவோரின் கவனத்துக்கு :  "காற்றைக் குளிர்ச்சிப் படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில்
    இருந்துதான் அமோனியா வாயு கசியும்.  ஏ.சி.யை சரியாக பராமரிக்காமல் விட்டால் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்படும்.
    சரியான கால இடைவெளியில் அதை சர்வீஸ் செய்தால் 90 % பிரச்சினைகள் ஏற்படாது.
*  ரப்பர், காகிதத்தைவிட அதிக ஒட்டும் தன்மை கொண்டது.  அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்துத் தேய்கும்போது,
   காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராஃபைட் ( பென்சில் மினை கிராஃபைட்டால்தான் செய்யப்படுகிறது), ரப்பரில்
   ஒட்டிக்கொள்கிறது.  அதனால் அந்த இடத்தில் எழுத்து அழிந்து, சுத்தமாகிவிடுகிறது.
*  ஆண்டு தோறும் ஏப்ரல் 12-ம் தேதி, உலக விண்வெளி வீரர்கள் தினம் ஆக உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது.
*  நபிகள்னாயகம் குரானில் எத்தனை வசனங்களை இயற்றினார்?  --   6,666 வசனங்களும், 114 அத்தியாயங்களும் உள்ளன.
--- 'தி இந்து' நாளிதழ்களில் இருந்து...

Thursday, March 10, 2016

'புர்ஜ் காலிபா'

   துபையில் உள்ளது உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் காலிபா.
     828 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடம் 163 தளங்கள் கொண்டது.  இதன் கட்டுமானப் பணி 2004, செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கியது.  2010-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி இக்கட்டிடம் திறக்கப்பட்டது.
     இதன் மேல்தளத்தில் இருந்து நகரின் அழகை நன்கு ரசிக்க முடியும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு மீண்டும் மீண்டும் வருவதாக இக்கட்டிடத்தை நிர்வகித்து வரும் எமார் பிராபர்ட்டீஸ் செயல் இயக்குநர் அகமது அல் பலாசி கூறுகிறார்.
     இந்த கட்டிடத்தின் மேல் தளத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு 18.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.  இவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர்.
     இந்த கட்டிடத்தின் 4-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நகரின் சூரிய உதயத்தை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ். வியாழன், பிப்ரவரி 6,  2014. 

Wednesday, March 9, 2016

ஆவுடையார்கோவில்.

ஆவுடையார்கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்.
கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம்.
     திருப்பெருந்துறை எனச் சைவ சமயத்தில் கொண்டாடப்படும் புகழ் பெற்ற கோவில் 'ஆவுடையார்கோவில்'.  சிவபெருமான் 'ஆத்மநாத சுவாமி' என்ற பெயரில் அருள்புரியும் திருத்தலம்.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது.  இக்கோயிலைக் கட்டியவர் சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் என்பது புராணம்.  தற்போது அக்கோயிலின் பஞ்சாட்சர மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கோயிலின் கருவறையையும் கனகசபை மண்டபத்தையும் எழுப்பியவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதிசெய்திருக்கிறது.
    "வழி வழியாக நாம் கேட்டு வந்த வரலாற்றுக்கான ஆவணமாக இக்கல்வெட்டு கிடைத்துள்ளது.  மண்டபத்தில் காணப்படும் சுமார் 250 கல்வெட்டுகளில் 5 கல்வெட்டுகள் செய்யுளாக வெட்டப்பட்டுள்ளன.  மானிக்கவாசகர்தான் இக்கோயிலைக் கட்டினார் என்பதை அதில் ஒரு செய்யுள் குறிப்பிடுகிறது" என்கிறார் தமிழக அரசின் தொல்லியல் துறை திருச்சி மண்டலப் பதிவு அதிகாரி கோ.முத்துசாமி.
     திருவாசகமும் திருப்பள்ளியெழுச்சியும் இக்கோயிலில் இருந்துதான் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது.  'திருப்பெருந்துறையுறை சிவபெருமானே' என்னு உருகுகிறார் மாணிக்கவாசகர்.  பாண்டியர்களின் துறைமுகங்களில் திருப்பெருந்துறையும் ஒன்று.  மற்றது கொற்கை.
    "மாணிக்கவாசகரின் காலம் 9-ம் நூற்றாண்டு.  ஆனால் பஞ்சாட்சர மண்டபம் 16-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது.  அதை எழுப்பிய பாண்டியமன்னர்களோ, மற்றவர்களோ மாணிக்கவாசகரின் பங்களிப்பைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர்".
     சைவ சமய மரபில் நரியைப் பரியாக்கிய கதை மிகவும் முக்கியமானது.  மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர்.  குதிரை வாங்குவதற்காக மன்னன் கொடுத்த நிதியைக் கொண்டு சிவபெருமானுக்குக் கோயில் எழுப்பிவிட்டார்.  அது மன்னன் காதுக்குப் போய் கடுமையாக எச்சரிக்கப்பட்டதும், சிவபெருமானின் திருவிளையாட்டால் நரிக்கூட்டம் பரிக்கூட்டமானது என்கிறது திருவிளையாடல் புராணம்.
    "மாணிக்கவாசகர் கோயில் கட்டினார்" என்பது புரானத்தில் மட்டுமே இருந்தது.  அதற்கு ஆதாரமாக கல்வெட்டு செய்யுள் கிடைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
--பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய், பிப்ரவரி 4, 2014. 

Tuesday, March 8, 2016

வேலையைக் காதலி!

   அந்த நடிகர் வசீகரமானவர்.  பட்டப் படிப்பும் நல்ல சினிமா கம்பெனி வேலையும் இருந்தது.  கதாநாயக வேடத்திற்கு தேடிக்கொண்டிருக்கையில் ஒரு வாய்ப்பு வந்தது.  போய்ப் பார்க்கிறார்.
    "இதில் இரண்டு கெட்டப்கள்.  ஒன்று ராஜகுமாரன்.  இன்னொன்று நோய் பிடித்த வயோதிகன் ( சாபத்தின் விளைவு ).  ராஜகுமாரன் வேஷம் சரிதான்.  ஆனால், அந்த நோய்வாய்ப்பட்ட வயோதிகன் வேடம் உங்களுக்கு பொருந்தாதே !" என்று திருப்பி அனுப்பிவிட்டார் இயக்குநர்.
     மனம் தளரவில்லை.  அடுத்த நாள் காலை  இயக்குநர் வீட்டில் ஒரு நோய்வாய்ப்பட்ட வயோதிகர் காத்திருந்தார்.  கருணையுடன் என்ன வேண்டும் என்று கேட்க, "ஹீரோ சான்ஸ்" என்று வேஷம் கலைத்து தன் வேஷப் பொருத்தத்தை நிரூபித்தார் அந்த நடிகர்.  முதல் வாய்ப்பும் கிடைத்தது.
     படம் : மணாளனே மங்கையின் பாக்கியம்.
     அந்த நடிகர் :  ஜெமினி கணேசன்!
-- டாக்டர் ஆர். கார்த்திகேயன்.  தேசம்.
--  'தி இந்து' நாளிதழ். திங்கள், ஏப்ரல் 7, 2014.    

Monday, March 7, 2016

பிஸ்கட்டில் கேன்சர் !

பிஸ்கட்டில் ஒளிந்திருக்கிறது கேன்சர் !
     'பிஸ்கட்' சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  சிலர் பிஸ்கட்டை மாற்று உனவாக சாப்பிடுகிறார்கள்.  இதனால் பிஸ்கட்டுகளின் தரத்தை அறிய ஒரு ஆய்வு செய்தனர்.  அதன்படி, தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் உள்ள புகழ் பெற்ற பிஸ்கட் நிறுவனங்களின் தயாரிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில்,  பிஸ்கட்கள் கிரீம், உப்பு போன்ற 6 வகைகளாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.  ஈரப்பதம், நார்ச்சத்து, அமிலத்தன்மை, செயற்கை வண்ணம், பிஸ்கட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் ஆகியவற்றை அளவீடுகளாக வைத்து ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகரமான விவரங்கள் தெரியவந்துள்ளன.
     முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் அளவுகளில் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.  உதாரணமாக ஒரு பிஸ்கட் நிறுவனம் தன் தயாரிப்பு ஒன்றில் அதிக அளவு தேன் இருப்பதாக விளம்பரப்படுத்தியது.  ஆனால், அதை ஆய்வு செய்தபோது,வெறும் 0.11 கிராம் அளவே தேன் இருப்பதாக தெரிய வந்தது.  இப்படி பல நிறுவனங்கள் தவறான தகவல்களால் மக்களை ஏமாற்றி வருகின்றன.  சில நிறுவனங்கள் ஆபத்தான செயற்கை சாயங்களை பயன்படுத்துகின்றன.  இவற்றால் கேன்சர், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது.
     2 மேரி பிஸ்கட்டுகள் நமக்கு 56 கிலோ கலோரி வழங்குகிறது.  இந்த அளவுக்கான கலோரியை செலவு செய்ய நாம் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  இப்படி அதிகப்படியான சத்துக்கள் தரும் பிஸ்கட்டுகளாலும் நமக்கு ஆபத்து தான்.  எனவே, நமது வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டே பிஸ்கட்டுகளை சாப்பிட வேண்டும்.  கட்டாயம் பிஸ்கட்டுகளை மாற்று உனவாக உட்கொள்ளக் கூடாது.
--- தினமலர்.  8-2-2014.  

Sunday, March 6, 2016

பாதித்த சம்பவம்.

"சமீபத்தில் உங்கள் மனதைப் பாதித்த சம்பவம்.?"
     "சமீபத்தில், நாளிதழில் படித்த செய்தி ஒன்று... பவானியில் வயதான தம்பதியினர் ஆட்டோ ஒன்றில் ஏறி பவானி காவிரி ஆறு சங்கமிக்கும் கூடுதுறைக்கு போகச் சொல்லியுள்ளனர்.  ஆட்டோ அங்கு சென்றதும் இருவரும் தட்டுத்தடுமாறி இறங்கிச் சென்று, சென்ற வேகத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள்.  வந்தவர்கள், 'அந்த ஆற்றங்கரைக்குப் போ... இந்த படித்துறைக்குப் போ...' என ஆட்டோகாரரை அலைக்கழித்திருக்கிறார்கள்.   ஆனால், இறங்கிச் சென்ற அனைத்து இடங்களிலும் சென்ற வேகத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள்.  சந்தேகத்தில், 'என்ன விஷயம்?' என விசாரிக்க,  'நாங்கள் எங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்.  ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்யலாம் எனச் சென்றால் எங்குமே முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் வரவில்லை' எனக் கதறினார்களாம்.
      அவர்களை காவல் நிலையத்தில் விட்டார் ஆட்டோக்காரர்.  தம்பதியினரின் பிள்ளைகளை வரவழைத்து அறிவுறை கூறி அனுப்பிவைத்திருக்கனர் போலீஸார்.  இதில் தற்கொலை செய்துகொள்ள விரும்பிய பெற்றொரின் துயரம் ஒரு புறம் என்றால், ஆறுகள் 'கொலை' செய்யப்பட்ட வேதனை மறுபுறம் !"
-- சத்தி ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம். ( நானே கேள்வி... நானே பதில்!  பகுதியில்.)
-- ஆனந்த விகடன்.  09-04-2014.  

Saturday, March 5, 2016

யார், எது, என்ன ?

1.  யோக வாசிஷ்டம்       அ.   பதஞ்சலி.
2.  பிரம்ம சூத்திரம்          ஆ.   மாணிக்கவாசகர்.
3.  சௌந்தர்யலகரி          இ.    பட்டினத்தார்.
4.  ஸ்ரீபாஷ்யம்                  ஈ.    சேக்கிழார்.
5.  திருஅருட்பா                 உ.   ஆதி சங்கரர்.
6.  பெரிய புராணம்          ஊ.   பாதராயணர்.
7.  திருவெம்பாவை          எ.    ராமானுஜர்.
8.  யோக சாஸ்திரம்         ஏ.    ராமருக்கு வசிஷ்ட முனிவர் அருளியது.
9.  காதற்ற ஊசியும்          ஐ.   வள்ளலார்.
10.அனுமன் சாலிசா         ஒ.    சைவ சித்தாந்தம்.
11.பதி பசு பாசம்               ஓ.    நீயே அதுவாக இருக்கிறாய்.
12.தத்வமஸி                      ஔ.துளசிதாசர்  
   விடை : 1- ஏ,    2- ஊ,   3- உ,     4- எ,      5- ஐ,    6- ஈ
                 7- ஆ    8- அ,    9- இ,    10-ஔ,  11-ஒ    12.- ஓ
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  மார்ச்  13, 2014.  

Friday, March 4, 2016

யார், எது, எப்படி ?

1.  அஷ்ட வசுக்கள்........................ சிவஞானபோதம்
2.  மீமாம்சை.................................. அப்பர்.
3.  அஷ்டாங்க யோகம்................. அனுமன்.
4.  யயாதி ....................................... தத்துவம்.
5.  அஞ்சிலே ஒன்று பெற்றான் .... திருஞானசம்பந்தர்.
6.  ஞானப்பால் .............................. தாரணை.
7.  உழவாரப்பணி ........................  நாலாயிர திவ்விய பிரபந்தம்.
8.  பொலிக பொலிக...................... கங்கா தேவி.
9.  மெய்கண்டார்............................ தேவயானி.
*    பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்று அஷ்ட வசுக்களை வசிஷ்டர் சபித்தார்.  பூலோகத்தில் கங்காதேவிக்கு அவர்கள்
     பிறந்தார்கள்.
*   மீமாம்சை என்பது ஷட் தரிசனங்கள் எனச் சொல்லப்படும் ஆறுவகை தத்துவ தரிசங்களில் ஒன்று.
*   அஷ்டாங்க யோகம் எனச் சொல்லப்படும் யோகத்தின் எட்டு அங்கங்களில் ஒன்று தாரணை.
*   மன்னன் யயாதி சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியின் கணவன்.
*    அஞ்சிலே ஒன்று பெற்றான்  என்பது அனுமனைக் குறிக்கும்.  ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் புத்ல்வன் என்பதால்
     அனுமனைக் கம்பர் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
*   ஞானப்பால் உண்டவர் திருஞானசம்பந்தர் என்று புராணம் கூறுகிறது.
*   உழவாரப்பணி எனச் சொல்லப்படும் கோவில் துப்புறவுப் பணியைச் சிரமேற்கொண்டு செய்தவர் அப்பர்.
*   பொலிக பொலிக எனத் தொடங்கும் பாடல் ஒன்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ளது.
*   மெய்கண்டார் இயற்றிய நூல் சிவஞானபோதம்.
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஏப்ரல்  3, 2014. 

Thursday, March 3, 2016

மூளைக்காரன்பேட்டை

நான் யார்
*1.  நான் நான்கு எழுத்துகள் கொண்ட ஒரு நீர்நிலை.
*2  நீங்கள் உணவருந்த என் கடைசி இரண்டு எழுத்துகள் வேண்டும்.
*3.  என் இரண்டாபது, மூன்றாவது எழுத்துகளை மாற்றிப் போட்டால் குறும்புக்கார குழந்தையை குறிப்பிடும் வார்த்தை.
*4.  என் முதல் இரண்டு எழுத்துகள் உங்களிடம் இரண்டு உண்டு.
*5.  நடுவில் உள்ள இரண்டு எழுத்துகளை நீக்கிவிட்டால், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய, சத்துமிக்கது கிடைக்கும்.
-- நான் யார்?
--  புதிருக்கான விடை:  1.கால்வாய்  2.வாய்  3.வால்  4.கால்  5.காய் 

Wednesday, March 2, 2016

கலவரப்படுத்தும் சைரன்.

கலவரக்காரர்களையே கலவரப்படுத்தும் சைரன்.
மூளையைத் தாக்கி வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தும்.
     கலவரத்தில் ஈடுபடுபவர்களை எளிதாகக் கலைக்க, அவர்களின் மூளையை தாக்கி, பயந்து அலறவைக்கும் சைரன் கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் இங்கிலாந்து போலீஸார்.
     கூம்பு வடிவத்தில் இருக்கும் இந்த கருவியை கலவரக்காரர்களை நோக்கி திருப்பினால் போதும்.  கலவரக்காரர்கள் நிலைகுலைந்து போவார்கள்.  கலவரக்காரர்களின் மண்டைக்குள் சைரன் சத்தம் பயங்கரமாக ஒலிக்கும்.  மற்றவர்களுக்கு சாதாரண சத்தமாக இருக்கும் இது.  இந்த கருவி யாரை நோக்கி இருக்கிறதோ அவர்களுக்கு பயங்கரமாக இருக்கும்.  அதிலிருந்து வெளிப்படும் சைரன் சத்தம் வாந்தி, மயக்கத்தையும் ஏற்படுத்தி விடும்.  காதைப் பொத்தினாலும் மண்டைக்குள் சத்தம் கேட்பது நிற்காது.
     மெகாபோன் போல போலீஸார் இதை கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ளலாம்.  400 மீட்டர் தொலைவில் இருக்கும்போதே, இந்த சவுண்ட் பிளாஸ்டர் கருவியை இயக்கினால் போதும்.  லேசர் லைட் வசதி இருப்பதால், ஆளைக் குறிவைத்து திருப்பலாம். இதில் இருந்து கிளம்பும் 115 டெசிபல் ஒலிக் கற்றை மூளையை கலக்கிவிடும்.  கலவரக்காரர்கள் சத்தமில்லாமல் இடத்தை காலி செய்து விடுவார்கள்.
     " இது சாதாரண கருவி இல்லை.  பார்க்க வேடிக்கைத் துப்பாக்கி மாதிரிதான் இருக்கும்.  ஆனா அனுபவிச்சாதான் தெரியும்.  மண்டைக்குள்ள ஏதோ குடையுற மாதிரி இருக்கும்.  கொஞ்ச நேரத்துல வாந்தி வர்ற மாதிரி  இருக்கும்.  எப்படா அந்த இடத்தை விட்டு போவோம்னு ஆயிரும்".   லத்தி, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா, கண்ணீர் புகை குண்டு போன்ர வழக்கமான உத்தியை விடவும் இதுதான் அருமை என்கிறார்கள் போலீஸார்.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், பிப்ரவரி 12, 2014.  

Tuesday, March 1, 2016

எரிபொருள் பிரச்சினை

எரிபொருள் பிரச்சினைக்கு எளிய தீர்வு கண்ட இளைஞர்கள்.
     பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பல்வேறு தேவைகளின் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் எரிபொருள் பற்றாக்குறை கடுமையான அளவில் இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் பயமுறுத்தி வரும் நிலையில், மாற்று எரிபொருளுக்காக அனைத்து நாடுகளும் ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
     இந்த நிலையில், நாகப்பட்டினம் மாணவர்கள் கார்த்திகேசன், சிவச்சந்திரன் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.  தண்ணீரை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுத்து அதனை எரிபொருளோடு சேர்த்து பயன்படுத்தி வாகன மோட்டாரை இயக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள்.
     தற்போதைய நிலையில் எரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் ஒரு கருவி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.  இரு தனித்தனி பாகங்களைக் கொண்ட இக்கருவி 300 கிராம் வரை எடையுள்ளது.  இதனை ஒரு இரு சக்கர வாகனத்தில் பொருத்திவிட்டால் போதும்.
     வாகனம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்த கருவியும் இயங்கத் தொடங்கி அதில் இருக்கும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயு பிரிக்கப்பட்டு எரிபொருள் செல்லும் பாதையில் செலுத்தப்படும்.  அதனால், எரிபொருளின் தேவை பாதியாகக் குறையும்.  உதாரணத்துக்கு லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அந்த வாகனம் 90 கிலோ மீட்டர் தூரம்வரை செல்லும்.  இதை மைலேஜ் டெஸ்ட் , லோடு டெஸ்ட் உள்பட பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கிறோம் என்கின்றனர் அவர்கள்.
     இக்கருவி இயங்கத் தனியான பொருட்கள் எதுவும் தேவையில்லை.  வண்டியை முடுக்கத் தேவைப்படும் மின்சாரத்திலேயே இதுவும் இயங்கத் தொடங்கிவிடும் என்பதுதான் இக்கருவியின் தனிச்சிறப்பு.  இக்கருவி பொருத்தப்படுவதன் மூலம் இன்னொரு பயனும் கிடைக்கிறது.  எரிபோருள் எரிக்கப்படுவதால் வெளியாகும் கார்பனின் அளவு 75 % வரையிலும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.  பெருகிவரும் வாகனப் புகையால் மூச்சுத்திணறும் இன்றைய காலக்கட்டத்தில் இது மிகப்பெரிய சமுதாய சீர்திருத்தம் என்றே சொல்லலாம்.
-- கரு.முத்து.  பூச்செண்டு
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 2, 2014.