Saturday, December 31, 2016

விமான ரகசியங்கள்!

முகமூடி ரகசியம்
     விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு,  உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும்.  விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள்.  எவ்வளாவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம்.  அதிகபட்சம் அது 15 நிமிடங்களுக்குத்தான்.  ஐயயோ! அவ்வளவுதான் என்று அலறவும் வேண்டாம்.  அதற்குள் பைலட் , விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்திற்குக் கொண்டுவந்துவிடுவார்.  எனவே, ஆக்சிஜன் மாஸ்கை முதலில் நீங்கள் மாட்டிக்கொள்ளுங்கள்.  குழந்தை மீது உள்ள பாசத்தில் அதற்கு முதலில் ஆக்சிஜனை வழங்க எத்தனிக்க வேண்டாம்.  குழந்தை உங்களைவிட அதிக வினாடிகள் ஆக்சிஜன் இல்லாமல் தாக்குப் பிடிக்கும்.  முதலில் நீங்கள் சுருண்டுவிழாமல் பார்த்துக்கொண்டு, பிறகு நிதானமாகக் குழந்தைக்கும் மாஸ்கைப் பொருத்துங்கள்.
தண்ணீர் ரகசியம்
     விமானத்தில் பாட்டிலில் தரப்படும் தண்ணீரை மட்டும் குடியுங்கள்.  ஏனென்றால், குடிக்கவும், விமானக் கழிவறையில் பயன்படுத்தவும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் தண்ணீரை நிரப்புகிறார்கள்.  இரு பயன்பாட்டுகளுக்குமான தண்ணீர் தொட்டி ஓரடி இடைவெளியில்தான் இருக்கின்றன.  அதேபோல, குறிப்பிட்ட சில இடைவெளிகளில்தான் தண்ணீர் தொட்டியைச் சுஹ்தப்படுத்துகிறார்கள்.  அந்த நீரில் ஒட்டுண்ணிகள் இருக்க வாய்ப்புண்டு.  அந்த ஒட்டுண்ணிகள் பல நாடுகளைச் சுற்றிவருவதால் எந்த பூச்சிக்கொல்லிக்கும் சாகாமல் இருக்க வரம் பெற்றவை!  குடிப்பது மட்டுமல்ல, கையைக் கழுவுவது, வாயைக் கொப்பளிப்பதுகூட ஆபத்துதான்!
-- ஜூரி.  (கருத்துப் பேழை ).
-- 'தி இந்து' நாளிதழ்,  திங்கள், ஜூன் 9, 2014.      

Friday, December 30, 2016

தெரியுமா? - தெரியுமே!

*  ராமபிரானுக்கு  உதவிய  கழுகின்  பெயர்  ஜடாயு.  இது  இறந்தபின்  ராமபிரான்  அதை  எரியூட்டிய  இடம்  ஜடாயு  குண்டம்.  இது  வைத்தீஸ்வரன்
   கோயில்  வைத்தியநாதர்  கோயிலின்  உட்புறத்தில்  உள்ளது.  இந்த  வரலாற்றைச்  சொல்லும்  சிற்பங்களும்  அங்கு  உண்டு.
*  சப்தரிஷிகள் : மரீசி,  அத்திரி,  ஆங்கிரஸ,  பிருகு,  கிருது,  புவஸ்தியர்,  வசிட்டர் ( ஏழாவது தலைமுறை ), பரத்துவர்கள் என்பவர் ஆவர்.
*  கேரளத்தில் தற்போது கரங்கனூர் என்றழைக்கப்படும் துறைமுகம் அந்தக் காலத்தில் முசிறி என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தது.
*  'நவ' என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் பொருள் உண்டு.  உத்தராயண காலத்தில் ( தை - ஆனி ) நடுவில் வருவது வசந்த ருது ( சித்திரை )
   தட்சிணாயண காலத்தில் ( ஆடி - மார்கழி ) நடுவில் வருவது சரத் ருது ( புரட்டாசி ).  இவ்விரு பருவ காலங்களும் எமதர்மனின் இரு கோரைப்பற்களைக்
   குறிக்கும் என்று தேவி பாகவதம் சொல்கிறது.
*  பர்வத ராஜகுமாரியாக விளங்கும் பார்வதிக்கு 'உமா' என்று ஒரு பெயருண்டு.
*  'உமா' என்பதை 'சக்தி பிரணவ மந்திரம்' என்று சாஸ்திரம் கூறுகிறது.
*  'ஓம்' என்னும் பிரணவத்தில் இருப்பது போல, அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்றும் 'உமா' என்ற மந்திரத்திலும் அடங்கியுள்ளது.
*  முள்ளம் பன்றியை நீரில்  அமிழ்த்தி மூழ்கடிக்கவே முடியாது.  காரணம், அதன் மேலுள்ள முட்கள். இந்த முட்களில் வெற்றிடம் நிரம்பியுள்ளது.  இவை பலூன்
   போல முள்ளம் பன்றியை மேலே  மிதக்க வைக்கத்தான் செய்யுமே தவிர மூழ்கடிக்காது. 

Thursday, December 29, 2016

திருநீறு.

   நெற்றியில் நாம் அணியும் திருநீறு அவை தயாரிக்கப்படும் முறையில் நான்கு வகைப்படும்.
     1. கல்பம் : வியாதியில்லாத கன்றுடன் கூடிய பசுவின் சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் வாங்கி,
         உருண்டையாக்கி எரிக்கும்போது மந்திரங்கள் ஜபித்து சிவாக்கினியில் தயாரிப்பது.
     2. அணுகல்பம் : காடுகளில் கிடைக்கும் சாணங்களை கொண்டு சிவாக்கினியில் தயாரிப்பது.
     3. உபகல்பம் : மாட்டுத்தொழுவங்களில் இருந்தும், மாடுகள் இருக்கும் இடங்களில் இருந்தும் சாணத்தை எடுத்து சாதாரண
         தீயில் எரித்து பின் மீண்டும் சிவாக்கினியில் தயாரிப்பது.
     4. அகல்பம் : மந்திரங்கள் இல்லாமல் எல்லோராலும் சேகரித்த சாணத்தைக் கொண்டு சுள்ளீகளால் எரிக்கப்பட்டு தயாரிப்பது.
--  தினமலர். பக்திமலர். 27-11-2014.           

Wednesday, December 28, 2016

திருவண்ணாமலை

   தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்று திருவண்ணாமலை.  இங்கு 9 கோபுரங்கள்,  2 தீர்த்தங்கள்,  25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளன.  இக்கோயிலின் உயரம் 217 அடி.
     இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திரு விழாக்கள் நடைபெறும்.  பெரிய திருவிழா கார்த்திகை தீபத் திருவிழா.  அவ்விழாவின் 10-ம் நாள் சிவபெருமான் அம்பாளுக்கு உடலில் இடப்பாகத்தை கொடுத்து பக்தர்களுக்கு ஒரு நிமிடம் அர்த்த நாரீஸ்வரர் தரிசனம் கொடுப்பார்.  தீபத் திருவிழா தொடங்கி 10-ம் நாள் 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மாலை தீபம் ஏற்றப்படும்.  தீபம் ஏற்ற 6 அடிக்கு மேல் உயரம் உள்ள கொப்பரை பயன்படுத்தப்படும்.  மொத்தம் 3 ஆயிரம் கிலோ நெய்,  ஆயிரம் மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்படும்.
     முதல் நாள் தீபத்திற்கு 600 லிட்டர் நெய், இரண்டு மூட்டை பஞ்சு, 15 மீட்டர் காடா துணி மற்றும் 2 கிலோ கற்பூரம் கொண்டு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.  11 நாட்கள் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.  மகா தீபம் ஏற்ற உரிமை பெற்றவர்கள் பருவதராஜ குலத்தினர்.
-- தினமலர். பக்திமலர். 27-11-2014.  

Tuesday, December 27, 2016

பதார்த்த குண சிந்தாமணி

பதார்த்த குண சிந்தாமணி எனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள் :
*   நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
*   வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
*   மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு.
*   45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் ( nasal drops )  மருந்து விடுவது.
*   நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
*   வருடத்துக்கு இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.
செய்யக் கூடாத விஷயங்கள் :
*   முதல் நாள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
*   கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
*   பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
*   நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
*   பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
*   உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.
*   தும்மல்,  சிறுநீர்,  மலம்,  கொட்டாவி,  பசி,  தாகம்,  வாந்தி,  இருமல்,  ஆயாசம்,  தூக்கம்,  கண்ணீர்,  உடலுறவில் சுக்கிலம்,
    கீழ்க்காற்று,  மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.
கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை :
*   உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
*   நீரைச் சுருக்கி,  மோரைப் பெருக்கி,  நெய்யை உருக்கி உண்பது.
*   வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல் இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
*   எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.
-- மருத்துவர்  கு.சிவராமன் .  (  நலம் 360 0  )
  ஆனந்த விகடன்.  8-11- 2014.       

Monday, December 26, 2016

கார் தயாரிப்பில் 'கூகுள்'

 டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார் தயாரிக்கும் பணியை, 'கூகுள்' இணைய தள நிறுவனம் துவக்கியுள்ளது.  மற்ற கார்களைப் போன்று காட்சியளித்தாலும், ஸ்டீயரிங் இல்லாமல், தானியங்கி முறையில் இயங்கும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
     ஸ்டீயரிங் மற்றும் ஆக்சிலேட்டர்கள் இல்லாததால், டிரைவர் தேவையில்லை.  அதற்கு பதிலாக, ஆன் - ஆப் பட்டன்கள் இருக்கும்.  ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்தக் காரில்,  நாம் செல்ல வேண்டிய இலக்கை பதிவு செய்துவிட்டால், கூகுள் வரைபட உதவியுடன், தானியங்கி முறையில் செல்லும்.
     கார் செல்லும் சாலை வரைபடத்தில், நெடுஞ்சாலைகளிலுள்ள சிக்னல்கள் மற்றும் முன்னால் செல்லும் வாகங்களுக்கு இடையிலான தூரம் ஆகியவை தெரியும்.
     மின்சாரத்தில் இயங்கும் இந்த காரில் இரண்டு இருக்கைகளுடன், பொருட்களை வைப்பதற்குத் தேவையான இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.  துவக்கத்தில், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.  காரில் கேமரா, லேசர் மற்றும் ரேடார் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
-- தினமலர்  சென்னை  ஞாயிறு 1-6-2014. 

Sunday, December 25, 2016

வலைபாயுதே

*   twitter.com/ raju_ kanthan :
    பணத்தின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால்,  செலவு செய்யுங்கள்!  உங்களின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால், கடன்
    கேளுங்கள்!
*   twitter.com/ navi_n :
    ஓர் ஆண் தன் வாழ்நாளில் அதிக முறை யோசித்த விஷயம், தன் மனைவி இப்போது என்ன காரணத்துக்காகக் கோபித்துக்
    கொண்டிருக்கிறாள் என்பதே!
*   twitter.com/ puthi_ yavan :
    டாஸ்மாக்ல ஆண்களும்,  ஜவுளிக்கடையில பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க!
*   twitter.com/ Aruns 212 :
    அப்பா எவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்தாலும்,  குழந்தை அழுவதற்கான காரணத்தை அம்மாவால்தான் கண்டு பிடிக்க
    முடியும்!
*   twitter.com/arattaigirl :
    'இன்னைக்கு என்ன சமைக்கலம்?'  என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'!
--சைபர் ஸ்பைடர்.
--  ஆனந்த விகடன்.  11-06- 2014.     

Saturday, December 24, 2016

டைட்டனபோ ( Titanoboa ).

  அனகோண்டா மலைப்பாம்புகள்தான் உலகிலேயே 'பிரமாண்ட டெரர்' என்ற நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.  அதைவிட 10 மடங்கு பெரிதான பாம்பு வகையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
     டைட்டனபோ ( Titanoboa ) என்று அழைக்கப்படும் அந்த பாம்புகள், சுமார் 50 அடி நீளமும்,  1200 கிலோ எடையுடன் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உலவியிருக்கின்றன.  வாழ்நாளின் பெரும் பகுதியை கடலிலேயே கழித்திருக்கும் இந்தப் பாம்புகள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போது கொலம்பியாவின் நதிப் படிமங்களில் கிடைத்திருக்கின்றன.  --  ஹாலிவுட்  சினிமாவுக்கு லீட் சிக்கிருச்சுடோய்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன்.  11-06- 2014.

Friday, December 23, 2016

ஸ்மார்ட்போன்.

*   உங்கள் போனை எப்போதுமே பாஸ்கோடு கொடுத்து லாக் செய்து வைத்திருங்கள்.
*   வைஃபை இலவசமாகக் கிடைக்கிறதே என்பதற்காக ஷாப்பிங் மால்,  காபி கிளப் என எங்கே சென்றாலும் அதன் மூலம்
     போன் பேங்கிங்,  நெட் பேங்கிங் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்த வேண்டாம்.  அதன் மூலம்தான் உங்கள் போனை
    ஹேக் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன!
*   உங்கள் போனில் உள்ள தகவல்களை ஐக்ளவுட்  அல்லது கம்ப்யூட்டரிலோ பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    இதனால் போன் காணாமல்போனாலும் தகவல்கள் பத்திரமாக இருக்கும்.  அதே சமயம் ரிமோட் ஆக்சஸ் மூலம் போனில்
    இருக்கும் தகவல்களை அழிக்கவும் முடியும்!
*   ஆப்பிள்,  ஆண்ட் ராய்டு, நோக்கியா என இயங்கு மென்பொருளைப் பொறுத்து அவர்களே சாஃப்ட்வேர் அப்டேட்களை 
    அனுப்புவார்கள்.  அதைத் தவறாமல் அப்டேட் செய்தாலே வைரஸ் பிரச்னைகள் வராது.
-- சார்லஸ்.  ( டெக் டாக் ) பகுதியில்...
--   ஆனந்த விகடன்  18- 06- 2014. 

Thursday, December 22, 2016

வினா - விடை.

*   "சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கடையேழு வள்ளல்கள் யார்?"
      -- எழினி,  காரி,  ஓரி,  நள்ளி,  பாரி,  பேகன்,  மலையன்.
*   "ஐஸ்டர்யா ராயின் மகள் பெயர் என்ன?"
     -- ஆராத்யா.
*   "லோக் சபாவில் நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் அமர வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு,  ஆனால் அந்த
     வாய்ப்பு வழங்கப்படாத எம்.பி. யார்?"
     -- அத்வானி.
*   "தன் பிறந்த நாளை, விசேஷக் காரணத்துக்காக ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடுவார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்.
     அவர் யார்?  என்ன காரணம்?"
     -- அந்தப் பிரபலம் இளையராஜா.  கருணாநிதி, இளையராஜா இருவரும் ஜூன் 3-ம் தேதி பிறந்தவர்கள்.  கருணாநிதியின்
      பிறந்த நாளின் முக்கியத்துவம் கருதி, ஒரு நாள் முன்பாக ஜூன் 2-ம் தேதியே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று
      பழக்கப்படுத்திக்கொண்டார் இளையராஜா.
*   "சென்னை வட்டாரங்களில் மண்ணெண்ணெயை ஏன் கிருஷ்ணாயில் என்று குறிப்பிடுகிறார்கள்?"
     -- கெரசின் ஆயில் என்ற ஆங்கிலப் பதமேபழக்கத்தில் 'கிருஷ்ணாயில்' என்று மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
--நா. சிபிச்சக்கரவர்த்தி.
--  ஆனந்த விகடன்  18- 06- 2014.   

Wednesday, December 21, 2016

"தேசப்பற்று"

"தேசப்பற்று என்பதன் எல்லை என்ன?"
     "பகத் சிங்கை, ஆங்கிலேயர்கள் தூக்கிலிடத் தீர்மானித்து,  தூக்கு மேடை முன்பு அவரை நிறுத்தினர்.  'தூக்கில் இடுவதற்கு முன்பு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்' என்று அனுமதி கொடுத்தனர்.  தான் இறப்பது குறித்து துளியும் வருந்தாத பகத் சிங், தன்னை ஒரு குற்றவாளியாகக் கருதி தூக்கில் போடுவதை மட்டும் விரும்பவில்லை.  'என்னை எதிரியாகக் கருதி சுட்டுவிடுங்கள்.  இதுதான் என் இறுதி ஆசை' என்றார்.
     'நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்.  உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'  என்று ஆங்கிலேய அதிகாரிகள் அலட்சியமாகக் கேட்டனர்.
     அதற்கு பகத் சிங், 'தூக்கிலிடும்போது என் கால்கள் என்னுடைய தாய் மண்ணைத் தொட முடியாத உயரத்தில் இருக்கும்.  ஆனால், துப்பாக்கியால் சுடும்போது என்னுடைய தாய் மண்ணைத் தழுவியபடியே உயிர் விடுவேன்.  அதுவே எனக்கு மகிழ்ச்சி'  என்றார்.  பற்று என்றால் இது பற்று".
-- கங்கை பிரபாகரன், சென்னை.
-- ( நானே கேள்வி ... நானே பதில் ! )  பகுதியில்...
-- ஆனந்த விகடன்  18- 06- 2014.          

Tuesday, December 20, 2016

கவனமாய் இருப்போம் !

*  வழிநெடுகிலும் வாகனங்கள்
    பயணங்களில் கவனமாய் இருப்போம் !
*  வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன
    பேசுவதில் கவனமாய் இருப்போம் !
*   சிந்தனையே செயலை முடிவு செய்கிறது
    எண்ணங்களில் கவனமாய் இருப்போம் !
*  எழுத்துகள் எப்போதும் ஆதாரம்
    கையெழுத்தில் கவனமாய் இருப்போம் !
*   சாதிக்க குணங்களே சந்தர்ப்பம் தருகின்றன
    நடத்தையில் கவனமாய் இருப்போம் !
*  வறுமையில் பணத்தின் அருமை தெரிகிறது
   சேமிப்பில் கவனமாய் இருப்போம் !
*  பிரிவில்தான் பாசத்தின் பெருமை தெரிகிறது
   நேசத்தில் கவனமாய் இருப்போம் !
*  கல்விதான் அறிவை தீர்மானிக்கிறது
   படிப்பில் கவனமாய் இருப்போம் !
*  முகம் தான் நினைப்பதை வெளியே காட்டுகிறது
   அக அழகினில் கவனமாய் இருப்போம் !
*  பொய்தான் நம்பகத்தன்மையை அடையாளப்படுத்துகிறது
   உண்மையில் கவனமாய் இருப்போம் !
*  வேலையின் விளைச்சலே பதவியை உயர்த்திடும்
   உழைப்பத்தில் கவனமாய் இருப்போம் !
*  தயக்கத்தில்தான் வெற்றிகள் தள்ளிப்போகிறது
   தைரியத்தில் கவனமாய் இருப்போம் !
*  வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது
   மகிழ்ச்சியில் கவனமாய் இருப்போம் !
*  'எனது' என்பது நிரந்தரமற்றது
   ஈகையில் கவனமாய் இருப்போம் !
*  புகழ் ஒன்றே காலத்தால் அழியாதது
   சாதனையில் கவனமாய் இருப்போம் !
-- என்.ஏகம்பவாணன்,  சென்னை.  ( கவிதைச்சோலை ! ).
-- தினமலர்.  வாரமலர்  சென்னை பதிப்பு. ஜூன் 15, 2014.      

Monday, December 19, 2016

பூச்சிகொல்லிகள்

   மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிகொல்லிகளூம் ஒரு காரணம்.  பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிகொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன.  இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன.  100 மில்லி பூச்சிகொல்லியைக் குடித்தால், உடனே மரணம்.  அதே பூச்சிகொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள் உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.  சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன.  இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிகொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது.
--  ஆர்.குமரேசன்.  ( விகடன் பார்வை ).
-- ஆனந்த விகடன். 12-11-2014.   

Sunday, December 18, 2016

உணவில் விஷம்!

   தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான்.  இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்தும் பேரழிவிற்கு உதாரணம், கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி.  ஒரு காலத்தில் இயர்கை எழில் கொஞ்சும் பகுதியாக  இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரி தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது.  அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப்பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள்.  வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை.  பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக,  நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிகொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
-- ஆர்.குமரேசன்.  ( விகடன் பார்வை ).
-- ஆனந்த விகடன். 12-11-2014.   

Saturday, December 17, 2016

தாஜ்மகால்

  உலக அதிசயமாகவும், காதலர்களின் நினைவுச் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மகாலின் அழகை, மேலும் பொலிவூட்ட , தொல்லியல் துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
     உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது, உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், மொகலாய மன்னர் ஷாஜகான், தன் மனைவி மும்தாஜ் மீது கொண்ட காதலின் அடையாளமாக, இதை கட்டினான்.  கி.பி., 1632 - 1654 ஆகிய காலத்தில் கட்டப்பட்ட இந்த அழகோவியம், வெண் பளிங்கு கற்களால் உருவானது.  இன்றும் காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.
     சமீபகாலமாக, ஆக்ராவில், சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது.  இதனால், தாஜ்மகாலின் மீதும், தூசுப் படலம் படிந்து, வெளித் தோற்றம் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது.  இந்த தூசுப் படலத்தை அகற்றி, தாஜ்மகாலின் அழகை மெருகூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
      இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது :
     தற்போது, பெண்கள், தங்கள் முகத்தை அழகூட்டுவதற்காக, 'முல்தானி மட்டி' என்ற 'பேசியல்' முறையை பின்பற்றுகின்றனர்.
இதேபோன்று, தாஜ்மகாலின் அழகையும் திரும்ப பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  மண்ணில் சில ரசாயனங்களை கலந்து, சேற்று களிம்பு தயாரித்து, அவற்றை தாஜ்மகாலில், தூசுப் படலம் சூழ்ந்துள்ள இடங்களில், 2 மி.மீ., அளவுக்கு பூசுவோம்.
     அந்த களிம்பு காய்ந்ததும், அதன் மீது, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தண்ணீர் கரைசலை பீய்ச்சி அடிப்போம்.  பின், அந்த களிம்பை மென்மையான துணியால் துடைப்போம்.  இதன்மூலம், தாஜ்மகாலின் அழகு, மீண்டும் பொலிவடைந்து விடும்.
     கடந்த, 1994, 2001, 2008 ஆகிய ஆண்டுகளிலும், தாஜ்மகாலை, இதேபோன்ற முரையில் தூய்மை படுத்தி உள்ளோம்.  இவ்வாறு, அவர்கள் கூறினர்.
--   தினமலர்  சென்னை  திங்கள் 9-6-2014.   

Friday, December 16, 2016

புனித கங்கை

சில தகவல்கள் :
*   நதியின் நீளம்  --  2,525 கி.மீ.,
*   நதியோரம் வாழும் மக்கள்  --  50 கோடி
*   ஆண்டுக்கு, 40 ஆயிரம் பிணங்கள் எரிப்பு
*   ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் சாம்பல் நதியில் கலப்பு
*   200 டன், அரைகுறையாக எரிந்த மனித உடல்கள் வீசப்படுகின்றன.
*   1,800 டால்பின் மீன்கள் வசிக்கின்றன
*   சுத்தப்படுத்த உத்தேச செலவு  --  2 லட்சம் கோடி ரூபாய்
கங்கையில் கலக்கும் பிற நதிகள் :
யமுனா,  ராமகங்கா,  கோமதி,  காகாரா,  கான்டாக்,  தமோதர்,  கோசி,  காளி,  சம்பல்,  பெட்வா,  கென்,  டோன்ஸ்,  சோனே.
கங்கை நதிக்கரை தொழில் நகரங்கள் :
*   ஹரித்துவார்
*   கான்பூர்
*   அலகாபாத்
*   வாரணாசி.
இந்தியாவின் புனித நதி :
கங்கை நீரை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் ஏராளம்.  கங்கையில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.  கங்கோத்ரி,  யமுனோத்ரி,  பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு வழிபாட்டு தலங்களும், கங்கையை அடிப்படையாக கொண்டவை.  ஆண்டுதோறும், 2 கோடி இந்துக்கள் இந்த நான்கு வழிபாட்டு தலங்களிலும் வழிபடுகின்றனர்.
-- தினமலர்  சென்னை  சனி 7-6-2014.    

Thursday, December 15, 2016

திருமணம்

  கம்பராமாயணத்தில் திருமணம், முடிசூட்டல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நன்னாள் நியமித்த செய்தி பேசப்பட்டிருக்கிறது.  அந்தக் காலத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சந்திரன் வந்து நின்று உச்சம் பெறுகின்ற நாளில் திருமணம் நடந்தால், பிற்காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கும் என்று நம்பினார்கள்.
அரண்மனை அமைக்க:
     சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர்.  ஜோதிட அறிஞர்கள் நாழிகை கணக்குப் பார்த்து திருமுறைபார்த்து செய்திருக்கிறார்கள்.
     சித்திரை மாதம் 10-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் பகல் பொழுதில் 15 நாழிகை அளவில் சூரியன் நடு உச்சியில் இருக்கும்போது நிலத்தில் இரண்டு கம்புகளை நாட்டி,, நிழல் எந்தத் திசையிலும் சற்றும் விழாத நிலையை அறிந்து மனைக்கு அடிக்கல் இட்டு திருமுறை சார்த்திய செய்தியை
     விரிகதிர் பரப்பிய வியன்வாய் மண்டிலம்
     இருக்கோற் குறிநிலை வழுக்காது குடக்கோல்
     பொறுதிறந் சாரா அரை நாள் அமையத்து
     நூலறி புலவர் நுண்ணுதிற் கயிறிட்டுத்
     தே எங் கொண்டு தெய்வம் நோக்கி
     பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனைவகுத்து
     உலவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
     இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
     புன்கண் மாலை மலை மறைந்தாங்கு
என்கிற சங்கப் பாடல் கூறுகிறது.
--  ( ஜோதிடம் தெளிவோம் )  பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 23, 2014.   

Wednesday, December 14, 2016

'காஸ் சிலிண்டர்'

'காஸ் சிலிண்டர்' எப்போது வெடிக்கும்!
     'காஸ் சிலிண்டர்' எனும் சமையல் எரிவாயு உருளைக்குள் அடைக்கப்பட்டிருக்கும், 'புரோப்பேன், பூட்டேன்' ஆகியவை, திரவ வடிவில் தான் இருக்கும்.  ஆனால், அது அடுப்புக்கு, வாயு வடிவில் வருகிறது.  சிலிண்டரில் இருந்து, 'காஸ் லீக்'  ஆகும்போது, அதை எளிதில் உணர, 'எத்தில் மெர்கேப்டன்' என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டு இருக்கும்.
     இந்த ரசாயனம் தான் 'காஸ் லீக்' ஆவதை, வாசனை மூலம் எச்சரிக்கை செய்யும்.  எனவே, இவ்வாசனையை உனர்ந்ததும், உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும்.  இல்லையென்றால், சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம், காற்றைவிட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும்.
     அப்படி கீழே தங்கியிருக்கும் காஸ் மீது, சிறிய தீப்பொறி பட்டாலும், பெரிய அளவில் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கும்.  இப்படி, சிலிண்டரை சுற்றி தீ தொடர்ந்து எரிவதால், சிலிண்டரின் உட்புறம் உள்ள திரவ நிலை எரிவாயு, அதிக அழுத்தம் அடைந்து, சிலிண்டரின், 'டெஸ்ட் பிரஷர்' எனும், அதிகபட்ச அழுத்தத்தை அடைந்து வெடிக்கிறது.
     காஸ் கசிவு ஏற்பட்டவுடன், தீ விபத்தை தடுக்க, சிலிண்டரின் மீதுள்ள, 'ரெகுலேட்டரை'  கழற்றி விட்டு, சிலிண்டரின் மேல் பகுதியில் சிறு கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வெள்ளை நிற பிளாஸ்டிக் மூடியை, சிலிண்டரின் வால்வின் மீது பொருத்தி, விபத்தை தடுக்கலாம்.
     பெரும்பாலான வீடுகளில் இரவு சமையல் முடிந்து ரெகுலேட்டரை, 'ஆப்' செய்யாமல் தூங்கிவிடுவதால் தான், 70 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன.  நைந்த, 'ரப்பர் டியூப்' பயன்படுத்துவதும் மற்றொரு காரணம்.  எனவே, தரம் குறைந்த பச்சை நிற ரப்பர் டியூப் பொருத்தியிருந்தால், ஆரஞ்சு நிற ரப்பர் டியூபை, வினியோகிப்பாளரிடம் பெற்று, அவர்களின் மெக்கானிக்கால் சரியானபடி பொருத்தித் தரச் சொல்லுங்கள்.  மேலும், தினமும் வேலை முடிந்ததும், அடுப்பை துடைப்பது தான் நல்லது.
--சாமிவேலு, அனைந்திந்திய பாரத் காஸ் வினியோகஸ்தர்கள் சங்க துணை தலைவர். சென்னை.
-- செகண்ட் பிரன்ட் பேஜ்.
-- தினமலர்  சென்னை  ஞாயிறு 8-6-2014. 

Tuesday, December 13, 2016

சர்க்கரை, ரத்த அழுத்தம்?

   வயிற்றில் எதுவும் இல்லாதபோது ( அதாவது காலை வேளையில் காப்பிகூட குடிக்காத நிலையில் ) ரத்தத்திலுள்ள சர்க்கரை அழுத்தம் 79.2 லிருந்து 110 mg/dt வரை இருக்க வேண்டும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு இது 90விலிருந்து 130 வரை இருக்கலாம் என்கிறார்கள்.  சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு 160க்குள் இருந்தால் அது நார்மல்.  என்றாலும் இந்த புள்ளி விவரங்கள் மருத்துவர்களிடையே மாறுபடுகின்றன.
     இதயம் விரியும்போது ஒருவரது ரத்த அழுத்தம் 80 என்றும், சுருங்கும்போது 120 என்றும் இருக்க வேண்டும்.  அதாவது ஓய்வெடுக்கும்போது இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 130/80 mm Hg.
-- ஜி.எஸ்.எஸ்.  ( குட்டீஸ் சந்தேக மேடை.) பகுதியில்...
-- தினமலர் - சிறுவர் மலர்.  நவம்பர் 21, 2014.  

Monday, December 12, 2016

ஹலோ !

  ஹலோ!  இது ஒரு வார்த்தை இல்லை.  உணர்வின் வெளிப்பாடு!
     அன்பை சொல்ல,  நம்மை அறிமுகப்படுத்த,  ஆசையாய் பேச,  நலம் அறிய ... இப்படி எத்தனையோ உணர்வு பரிமாற்றங்களுக்கான ஓர் அர்த்தமுள்ள சொல்தான் ஹலோ.
     எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் 1973ம் ஆண்டில் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக ( நவம்பர் , 21 ) கொண்டாடினர்.  இப்போது 180 நாடுகளில் இதை கொண்டாடுகின்றன.
     ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
-- தினமலர். பக்தி மலர்.  நவம்பர், 21, 2014.  

Sunday, December 11, 2016

ஜோக்ஸ் காலனி

*   "ஐந்தில் விளையாததுஐம்பதில் விளையாது -ங்கிற பழமொழிக்கு தலைவர் புதுசா விளக்கம் கொடுத்திருக்காரே?"
    "என்ன சொன்னார்?"
    "5 வருஷத்துல சம்பாதிக்க முடியாதவனால 50 வருஷம் பதவில இருந்தாலும் சம்பாதிக்க முடியாது'ன்னு சொல்லியிருக்கார்.
*   "பாழாப்போன சந்தேகத்தாலதான் மாட்டிக்கிட்டேன்"
    "அப்படியென்ன சந்தேகம் உனக்கு?"
    "திருடி வச்சது எல்லாத்தையும் எடுத்துக்கிட்டோமான்னு பார்க்க மறுபடியும் உள்ளே போனப்ப மாட்டிக்கிட்டேன்"
*   "என்னங்க, நம்ம வீட்டுக்கு உடனே ஒரு இன்வெர்ட்டர் வாங்கிப் போடுங்க."
     "ஏன்?"
     "நாளைக்கு உங்க மாமியார் வர்றாங்க."
*   ஆசிரியர்: "எங்கே! பாரதியார் பாடல் ஒன்றை பாடு!"
    அரசியல்வாதி மகன்: "காலி நிலம் வேண்டும் பராசக்தி, காலி நிலம் வேண்டும்!"
-- - கல்கி.  மே, 4 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.

Saturday, December 10, 2016

நியூஸ் ஏந்தி பவன்

*   கிறிஸ்துவுக்கு முன் ஐஸ்!
    கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெருக்களில் ஐஸ்கிரீம் விற்றதாக மார்க்கோபோலோ எழுதி உள்ளார்.    
 *   திபெத்தியர்கள்  மீனைத் தெய்வமாகக் கருதுகின்றனர்.  எனவே அவர்கள் மீன் சாப்பிடுவதில்லை.
*   கைரேகையை வைத்துக் குற்ரவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
*   ஜப்பானில், மாணவர்களுக்கு இரு கைகளாலும் எழுதப் பயிற்சியளிக்கிறார்கள்.
*   உலகில் மிகச் சிறிய கடற்கரை உள்ள நாடு மொனாகோ ( 5 1/2 கி.மீட்டர் நீளம் ).
-- வாசகர் பகுதி.
-- கல்கி.  மே, 4 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

Friday, December 9, 2016

மழை நீர்

  மனித உடலில் பெரும்பகுதி நீராலானது.  தாவர உடலிலும் 90 விழுக்காடு அளவுக்கு நீர் நிறைந்துள்ளது.  வளர்ந்த ஜெல்லிமீன் போன்றவற்றின் உடலில் 96 விழுக்காடு வரையும் நீர்தான்.  இது நீரின்றி உயிரில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  உயிர்வாழ்வுக்கும் புறத்தூய்மைக்கும் நீர் அவசியம்.  இவ்வுலகு நீரால் சூழப்பட்டது எனினும் நாம் பயன்படுத்தத்தக்க நந்னீரின் அளவு நாளுக்குநாள் குறைந்துகொண்டே செல்கிறது.
     மழையைச் சிறுமழை என்றும் பெருமழை என்றும் பிரித்தறிந்து செயல்பட த் தகுந்த அளவுகோல்கள் அன்று இருந்தன.  நெல் குத்த உதவும் உரலே கிராமத்து மழைமானி ஆகும்.  உரல் நிறைந்த மழை ஓர் அங்குல மழைக்குச் சமம் என்பர்.  நிலத்தில் கலப்பையின் கொழுமுனை மண்ணில் இறங்கத்தக்க அளவைவிடக் கூடுதல் மழையெனில் அது மாமழை எனப்பட்டது.
-- கண்ணன் ஸ்ரீஹரி.
-- பச்சை பூமி.  ஆகஸ்ட் - 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

Thursday, December 8, 2016

மெமரி ஸ்கேல்.

  பிட்,  பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள்.  பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்னவென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது.  சிடி ராம்,  ஹார்டு ட்ரைவ்,  யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்,  டிவிடி ராம்,  புளூரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.  கிலோ பைட்,  கிகா பைட்,  டெரா பைட் அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம்.  அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்துள்ளன.  எனவே அவற்றை இங்கு காணலாம்.
ஒரு கிலோ பைட் ( kilobyte )  =  1.024 பைட்ஸ்
ஒரு மெகா பைட் ( megabyte )  =  1.024 கிலோ பைட்ஸ்
ஒரு கிகா பைட் ( gigabyte )  =  1.024 மெகா பைட்ஸ்
ஒரு டெரா பைட் ( terabyte )  =  1.024 கிகா பைட்ஸ்
ஒரு பெட்டா பைட் ( pettabyte )  =  1.024 டெரா பைட்ஸ்
ஒரு எக்ஸா பைட் ( exa byte )  =  1.024 பெட்டா பைட்ஸ்
ஒரு ஸெட்டா பைட் ( zetta byte )  =  1.024 எக்ஸா பைட்ஸ்
ஒரு யோட்டா பைட் ( yotta byte )  =  1.024 ஸெட்டா பைட்ஸ்
     கம்ப்யூட்டர் கணக்கில் ஒரு கிலோ என்பது 2 டு த பவர் ஆப் 10 ( 2^10 ).  அதனால்தான் 1.024 எனக் கிடைக்கிறது.  ஒரு சிலை இதை 10 டு த பவர் ஆப் 3 ( 10 ^ 3 ) என எடுத்துக் கொள்கிறார்கள்.  ட்ரைவ்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட இது போல சயங்களில் எடுத்துக் கொள்வதால்தான், நமக்கு 1.024 க்குப் பதிலாக 1.000 கிடைக்கிறது.
     எக்சல்லில் செல்களைக் கட்டமிட :
     எக்சல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்கள் ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா?  அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + &  அழுத்துங்கள்.  அழகாகக் கட்டம் கட்டி காணப்படும்.  அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது என யோசிக்கிறீர்களா?  முன்பு போலவே கட்டமிட்ட செல்கலை ஹைலை செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl + Shift + ஆகிய கீகளை அழுத்தவும்.  அனைத்து பார்டர்கள் நீக்கப்பட்டுவிடும்.
-- தினமலர்.  18-11-2014.
-- இதழ் உதவி : இரா. தாமோதரன்.  மருதூர் . வடலூர்.

Wednesday, December 7, 2016

புன்னகைப் பக்கம்!

*   "அந்தக்கால சாமியார்களுக்கும் இந்தக்கால சாமியார்களுக்கும் ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம்."
     "எப்படி?"
     "அந்தக்கால சாமியார்கள் பெண்களை தாயாகப் பார்த்தாங்க.  இந்தக்கால சாமியார்கள் தாயாக்கப் பார்க்குறாங்க."
*   "இதைப் பார்த்தீங்களா?  ரோட்டுல ஒரு நாய் செத்துக்கிடக்கு.  சிங்கப்பூர்ல இது நடக்குமா?"
    "நாய் செத்துட்டா சிங்கப்பூர்லயும் நடக்காதுடி!"
*   "நோட்டாவுக்கு விழுந்திருக்கற வாக்குகளைப் பார்த்ததும் தலைவர் என்ன சொன்னார்?"
    "அடுத்த முறை தேர்தல்லே நிக்கும்போது அதையே நம்ம கட்சி சின்னமா வச்சுடலாம்னு சொன்னார்!"
*   "சார்! நம்ம ஆபீஸ் பியூன் மயக்கம் போட்டு விழுந்துட்டான்."
    "தண்ணி அடிச்சுப் பார்த்தீங்களா?"
    "ஏற்கனவே தண்ணி ய்டிச்சுத்தான் விழுந்திருக்கான்!"
*   "ஹலோ இன்ஸ்பெக்டர்!  சோமநகர் ஏழாவது தீருவுல விபசாரம் நடக்குது.  உடனே வர்றீங்களா?"
    "சீச்சீ... வைய்யா போனை.  நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது!"
-- குமுதம்.  4-6-2014.          

Tuesday, December 6, 2016

ஆர்யபட்டர் - வராகமிகிரர்

  உலகின் முதல் வான சாஸ்திர நிபுணர், குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த ஆர்யபட்டர் ஆவார்.  இவர்தான் முதலில் 'பஞ்சாங்கம்' கணித்து வெளியிட்டார்.  இவருடன் சமகாலத்தில் வாழ்ந்த வராகமிகிரரும் ஒரே அரசவையில் ஆஸ்தான வித்வான்களாகப் பதவி வகித்தார்கள்.  இருவருமே வான சாஸ்திரக் கலையில் உயர்ந்தவர்கள்.
     ஆறியபட்டர் பூமி உருண்டை என்றும் பூமி உட்பட சில கோள்கள் வான மண்டலத்தில் தன்னிச்சையாக ஒரு குறிப்பிட்ட நியமத்துடன் வலம் வந்துகொண்டே இருக்கின்றன என்றும் அந்தக் காலத்திலேயே கண்டரிந்து கூறியவர்.  இவர், தான் கண்ட உண்மைகளை வரிசைப்படுத்தி
     வாரம் ( கிழமைகள் ) = 7
     திதிகள் ( 15 + 15 ) = 30
     நட்சத்திரங்கள் = 27
    யோகம் = 27
    கர்ணம் = 11
    என்ற ஐந்து விதமான அங்கங்களின் கணிதம்,  அன்றாட நடைமுறை ஆகியவர்றை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் பஞ்சாங்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.  அந்நூலில் ஒரு நாளில் விளங்கும் மேற்கண்ட பஞ்ச அங்கங்களைத் தெளிவாக வெளியிட்ட காரணத்தல்தான் அதற்குப் பஞ்சாங்கம் எனப்பெயர் வந்தது.
--  ( ஜோதிடம் தெளிவோம் )  பகுதியில்...
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர்.
--  'தி இந்து' நாளிதழ்.  பெண் இன்று . ஞாயிறு , நவம்பர் 16, 2014.   

Monday, December 5, 2016

இளம்பெண் எலும்பு கண்டுபிடிப்பு

13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண் எலும்பு கண்டுபிடிப்பு.
     தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் யுகாடன் தீபகற்ப பகுதி குகையில் இருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் கடைவாய் பல் மற்றும் விலா எலும்லின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.
      கடைவாய் பல் மற்றும் விலா எலும்லின் சில பகுதிகள், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் எலும்புக்கூட்டில் சிதற்யவையாக இருக்கலாம்.  அந்தப் பெண், இப்பகுதியை கடந்து சென்றபோது, தவறி குகையில் விழுந்து இறந்திருக்கக்கூடும்.  இந்த எலும்புக்கூடுக்கு, 'நையா' என்று பெயரிடப்படுள்ளது.
      கடந்த 2007ல்,  இந்த குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் இருந்து, இந்தப் பெண்ணின் எலும்புக்கூட்டை பிரித்தெடுக்கும் முயர்சியை துவக்கியுள்ளோம்.  பல ஆண்டுகளுக்கு முன், ஆசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பாலம் அமைத்து, அதன் வழியாக மக்கள் குடியேறியதற்கு, இந்த எலும்புக்கூடு ஆதாரமாக உள்ளது எண தொல்லியல் துறை ஆய்வாளர் பிலர் லூனா கூறினார்.
--  தினமலர்.  சென்னை. ஞாயிறு, 25-05-2014.  

Sunday, December 4, 2016

பறக்கும் பைக்

   உலகின் முதல் பறக்கும் பைக், அமெரிக்காவின், 'ஏரோ எக்ஸ்'  நிறுவனம்,வரும் 2017ல் அறிமுகப்படுத்த உள்ளது.  'ஏர் பேக்ஸ்' பொருத்தப்பட்ட , இந்த பைக்கில் இரண்டு பேர் பயணம் செய்யலாம்.  மணிக்கு, 72 கி.மீ., வேகத்தில், 10 அடி உயரத்தில், இது பறக்கக்கூடியது.
     'ஏரோ எக்ஸ் ஹோவர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், செங்குத்தாக பறக்கவும், இறங்கவும் செய்யும்.
      டீசலில் இயங்கும் இந்த பைக்கின் எடை , 356 கிலோ;  140 கிலோ எடையுடன் பறக்கக்கூடியது.  இதன் உடல் பகுதி கார்பன் பைபரால் உருவாக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை எரிபொருளை நிரப்பனால், 75 நிமிடங்கள் பறக்கும்;  இந்த பைக்கின் விலை, 51 லட்சம்.
      இதை வாங்க விரும்புபவர்கள், 2.93 லட்ச ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  பைக்கை பெறும் போது இந்த தொகை திரும்ப வழங்கப்படும்.  முன்பதிவு செய்தவர்களுக்கு, நான்கு வார பயிற்சி வழங்கப்படும் என்றும், இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
-- தினமலர்.  சென்னை. ஞாயிறு, 25-05-2014.  

Saturday, December 3, 2016

ஒரு வீட்டுக்குள்ளே....

ஒரு வீட்டுக்குள்ளே இவ்வளவு விஷயம் இருக்குது !
     அந்தக்காலத்தில் ஒரு வீட்டை வைத்தே வாழ்க்கை பாடம் நடத்தினர்.  படி, நடை, கூடம், முற்றம், வெளி என பல பகுதிகள் வீட்டுக்குள் இருக்கும்.  முதலில் வாழ்வில் நல்லது எது கெட்டது எது என்பதை தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.  படிப்படியாக வாழ்வில் ஏறுவதற்கு படிக்கட்டும்,  படிப்பும் ஒருவனுக்கு துணை செய்கிறது.  படியில் ஏறினால் வருவது நடை ( வீட்டு வாசல் ).  படித்ததைப் பின்பற்றி மனிதன் அதன்படி நடக்க வேண்டும்.  நடையின் முடிவில் கூடம் ( ஹால் ) வரும்.  எல்லோரும் ஒன்று கூடும் இடம் கூடம்.  நல்வழியில் நடப்பவர்கள் எல்லாம் சமுதாயத்தில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.  இதையே,  'சத்சங்கம், நல்லார் இணக்கம்'  என்று சொல்வார்கள்.  கூடத்திற்கு அடுத்தது முற்றம்.  வாழ்வில் லட்சியம் முற்றுப் பெறுவது போல வீடும் முற்றத்தில் முடிவுறும்.  அடுத்தது கொல்லைப்புறம் என்னும் வெளிப்பகுதி.  இறுதியில் மனிதன் கடவுள் என்னும் பெரு வெளியில் கலந்து விடுகிறான்.
--  தினமலர் ஆன்மிக மலர். கோவை பதிப்பு . நவம்பர் 4, 2014  இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி :  K. கல்யாணம்,  சிறுமுகை ( கோவை ).  

Friday, December 2, 2016

முத்தம் - பாக்டீரியா

10 நொடி முத்ததில் 8 கோடி பாக்டீரியா ஆய்வில் தகவல்.
மனிதனின் வாயிலும், உமிழ் நீரிலும் 700 வகையான பாக்டீரியாக்கள் ( நுண்ணுயிர்கள் ) இருக்கின்றன. இந்நிலையில், உதட்டில் முத்தமிடும்போது, இந்த பாக்டீரியாக்கள் பிறருக்கு பரவ வாய்ப்பு மிகவும் அதிகம். எந்த அளவுக்கு இந்த பாக்டீரியாக்கள் முத்ததின் மூலம் பரவுகின்றன என்பதை அறிய, 21 தம்பதிகளை தேர்ந்தெடுத்து, நாளொன்றுக்கு அவர்கள் எத்தனை முறை முத்தத்தை பரிமாறிக்கொள்கின்றனர்; என்னளவு நேரம் முத்தமிடுகின்றனர் போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. பின்னர், அவர்கள் முத்தமிடுவதற்கு முன்பும், 10 நொடிகள் முத்தமிட்ட பின்பும் நாக்கிலும், உமிழ்நீரிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
இதில், ஒருவரின் வாயிலிருந்து மற்றவருக்கு 8 கோடி பாக்டீரியாக்கள் செல்வதாக தெரியவந்துள்ளது. முத்தமிட்டுக் கொள்பவர்கள் தங்கள் வாயை சுத்தமாக பேணுவதன் மூலம் இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவுவதை குறைக்க முடியும் என்று, நெதர்லாந்து டிஎன்ஓ அறிவியல் ஆய்வி மையத்தின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், நவம்பர் 18, 2014.

Thursday, December 1, 2016

மாயாஜால சேலை

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒரு நாள் காவிரிபுராணம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, தெருவில் சென்ற ஒரு துறவி, "அத்தினத்துக்கும் ஓட்டை கைக்கும் ஆயிரம் காதம். ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்" என்று பாடிக் கொண்டே சென்றார். பண்டிதரான வித்வானுக்கு அந்த பாட்டின் பொருள் புரியவில்லை. துறவியை அழைத்து விளக்கம் கேட்டார். "அர்த்தம் சொல்லணுமா சாமி! அஸ்தினாபுரம் என்னும் சொல்லே 'அத்தினம்' என சுருங்கி விட்டது. 'ஓட்டை கை' என்பது துவாரகை. 'துவாரம்' என்பதற்கு 'ஓட்டை' என்றும் பொருளுண்டு. அஸ்தினாபுரம் அரண்மனியில் திரவுபதியின் துயிலை உரித்தபோது, நெடுந்தொலைவில் துவாரகையில் இருந்தாலும், கிருஷ்ணர் சேலையைக் கொடுத்து மானத்தைக் காத்தார். மாயாஜால கண்ணன் அவளுக்கு சேலை அளித்ததையே சேலை வியாபாரம்" என்று பாடியதாக தெரிவித்தார். விளகம் கேட்ட வித்வான் வியந்து போனார்.
-- தினமலர் ஆன்மிக மலர். கோவை பதிப்பு . நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).