Sunday, June 6, 2010

மனிதா.... மனிதா !

தூக்கத்தை தொலைத்தவன்
பணக்காரன்
தூங்க மறந்தவன் படைப்பாளி
தூங்க பயந்தவன் பகையாளி
தூங்கியும் வாழ்பவன் பண்பாளி .
நினைவை இழந்தவன் மனநோயாளி
நினைக்க மறந்தவன் குற்றவாளி
நினைக்க பயந்தவன் கடனாளி
நினைப்பில் வாழ்பவன் தொழிலாளி .
விழிப்பை இழந்தவன் குருடன்
விழிக்க மறந்தவன் படிக்காதவன்
விழிக்க பயந்தவன் சோம்பேறி
விழிப்போடு வாழ்பவன் அறிவாளி .
--- தி, சண்முகப்பிரியா . அவள் விகடன் . 1 . 1 . 2010.

Saturday, June 5, 2010

மிளகாய் !

பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டு பரவிய முக்கிய பொருள் மிளகாய் . நாம் சுவைத்து மகிழ்கிற மிளகாய்க்கும் , நமக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிற விவரம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவோம் . மிளகாய் புழக்கத்துக்கு வரும்வரை மிளகுதான் காரத்திற்குக் காரணமாக இருந்தது . இந்தியாவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஐரோப்பியர்கள் ஆசைப்பட்டதே நமது நறுமணப் பொருள்களுக்காகத்தான் .
உலகத்திலேயே காரமானது , அஸ்ஸாமிலே விளைகிற ' நாகஜோலோக்கியா ' என்கிற ஒருவகை மிளகாய்தான் . அதில் 8,55,000 ஸ்கோவில் யூனிட் கேப்சைசின் இருக்கிறது .
முதன்முதலில் ஐரோப்பியர்களுக்கு மிளகாய் அறிமுகமானது கொலம்பஸின் பயணத்தின்போதுதான் . அவர் அமெரிக்காவிற்குச் சென்றபோதே ' ஆஸ்டெக் ' மக்கள் பலவிதமான மிளகாய் ரகங்களைப் பயிரிடுவதைப் பார்த்தார் . அவர்கள் காரத்தின் தன்மையைப் பொறுத்து மிளகாய்களை வகைப்படுத்தியதும் தெரிந்தது .
மிளகாயை எது முதலில் மனிதர்களைச் சுவைக்கத் தூண்டியது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது . அனேகமாக மருத்துவக் குணங்களுக்காகத் தான் அதை மனிதன் முதலில் கடித்திருக்கக்கூடும் . அளவான மிளகாய் பல வியாதிகளுக்கு மருந்தாக முடியும் என்பதை இன்று விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள் . கேன்சரைக்கூட அது தடுக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது .
கொலம்பஸ் , அவற்றின் காரம் மிளகின் காரத்தைப் போலவே இருப்பதை அறிந்து அதைச் ' சில்லி பெப்பர் ' என்றழைத்தார் . உலகத்தில் அதிகமாக மிளகாயை உற்பத்தி செய்கிற நாடு இந்தியாதான் .இருபத்தைந்து சதவிகிதத்தை இந்தியாவே பயிரிடுகிறது .
--- வெ. இறையன்பு . புதிய தலைமுறை .டிசம்பர் 17 . 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

Friday, June 4, 2010

ஜம்போ .

' ஜம்போ ' என்றாலே பெரியது , பிரமாண்டமானது என்று அர்த்தம் . ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாடு அப்போது பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது . அங்கே வாழ்ந்த் ' ஜம்போ ' என்கிற யானை கப்பல் மூலம் பாரீசுக்குச் சென்றடைந்தது . இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை அங்குள்ள சர்க்கசில் பல சாகசங்களைக் காட்டி ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . அது மிகவும் பிரபலமானதால் ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க வந்தார் . ஆனால் , ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிரிட்டிஷ் ராணிக்கு கடிதம் எழுதி அதைத் தடுத்து விட்டார்கள் . ஜம்போ இறந்த பிறகு அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது . இன்றும் சிலை வடிவில் ஜம்போ கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது .
--- தினமலர் . நவம்பர் 27 . 2009 .

Thursday, June 3, 2010

பெருமான் நடனங்கள் .

பெருமான் ஆடிய நடனங்கள் :
தில்லை ( சிதம்பரம் ) -- ஆனந்த தாண்டவம் , திருவாரூர் -- அஜபா தாண்டவம் , திருவாலங்காடு -- ஊர்த்துவ தாண்டவம் , பூண்டி -- பிரம்ம தாண்டவம் , திருப்பத்தூர் -- கவுரி தாண்டவம் , நாகப்பட்டினம் -- பரவாரதரங்க நடனம் , திரு நள்ளாறு -- உன்மத்த நடனம் , திருமறைக்காடு -- ஹம்சபாத நடனம் , திருக்காராயில் -- குக்குட நடனம் , திருவாய்மூர் -- கமல நடனம் , திருக்கோளிலி -- பிருங்க நடனம் .
--- தினமலர் . டிசம்பர் 31 . 2009 .

Wednesday, June 2, 2010

காடுகள் !

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் மழைக்காடுகள் ' உலகின் நுரையீரல் ' என்று அழைக்கப்படுகிறது .ஏனென்றால் நமக்குத் தேவைப்படும் மூச்சுக்காற்றான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதில் அமேசான் காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன . இந்த அமேசான் காட்டில் உள்ள நிலத்தில் இரண்டரை ஏக்கர் அளவு உள்ள நிலத்தில் விளைந்திருக்கும் தாவரங்கள் முழு ஐரோப்பாவில் கூட இல்லை .
விக்டோரியா ரிஜியா என்று பெயரிடப்பட்டிருக்கும் உலகின் மிகப் பிருமாண்டமான பூ இங்கேதான் பூக்கிறது . அனகோண்டா பாம்பு இங்குள்ள சதுப்பு நிலங்களில்தான் வாழ்கிறது . மனிதன் கண்டறியாத எத்தனையோ மூலிகைகளும் , பழவகைகளும் இங்கே புதைந்து கிடக்கின்றன . உலக மருத்துவ தேவைகளுக்கான தாவரங்களில் 25 சதவீதத்தை இந்த காடுகள்தான் தருகின்றன .
--- தினமலர் . நவம்பர் 27 . 2009 .

ஒரே ஒரு மாத்திரை !

உடல் பருமனை குறைக்க புது வசதி .
80 நிமிடம் நடப்பதற்கு பதில் ஒரே ஒரு மாத்திரை போதும் ! அமெரிக்கவிஞ்ஞானிகள் அசத்தல் .
அமெரிக்க விஞ்ஞானிகள் மிளகு மற்றும் குடைமிளகாயிலிருந்து புதிய மாத்திரை ஒன்றைத் தயாரித்துள்ளனர் . இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது . அந்த மாத்திரையின் பெயர் . ' கேப்சிபிளெக்ஸ் '
ஊசிமிளகாய் , குடைமிளகாய் , மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன . இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும் . ஆனால் , இவற்றைப் பயன்படுத்துவதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது . உடலில் உள்ள சர்க்கரை சத்தை அழிக்க இவற்றை பெருமளவில் பயன்படுத்தும் பொழுது , கடுமையான காரம் காரணமாக இவை குடல் இரைப்பையை அரித்து பெரும் புண்களை உண்டாக்கி விடுகின்றன . அதனால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது .இந்தச் சிக்கலுக்கு விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் .
குடல் , இரைப்பையில் அரிப்பை ஏற்படுத்தும் பொருளை சுற்றி திரை போலச் சூழ்ந்து கொள்ளும் புதிய பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர் . அந்த பொருளால் குடல் , இரைப்பையில் அரிப்பு , புண் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது . இப்பொழுது எந்தச் சிக்கலும் இல்லாமல் மிளகாய் மற்றும் மிளகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருளை கூடுதலான அளவில் பயன்படுத்த முடிந்தது .அப்படிப் பிறந்ததுதான் ' கேப்சிபிளெக்ஸ் ' .
இந்த மாத்திரையை அமெரிக்காவின் ஆக்லஹாமா பல்கலைக்கழகம் சோதனை முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டது . அப்பொழுது ஒரு மாத்திரை 278 கலோரியைத் தரும் குளுகோஸை அழிப்பதை உறுதி செய்தனர் .
80 நிமிடம் வாக்கிங் சென்றால் அல்லது 2 . 5 நிமிட ஓட்ட நடையால் எவ்வளவு குளுகோஸை எரிக்க முடியுமோ அவ்வளவு குளுகோஸை காலி செய்யும் திறன் உடையது இந்த மாத்திரை என்பதை நிரூபித்தனர் . கலோரியைக் குறைத்து , உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவும் கேப்சிபிளேக்ஸ் மாத்திரை பாதுகாப்பானது . ஆரோக்கியத்துக்கான துணைப்பொருளாகப் பயன்படுகிறது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .
--- தினகரன் . 29 டிசம்பர் 2009 .

Tuesday, June 1, 2010

விருட்ச சாஸ்திரம் !

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :
அஸ்வதி -- எட்டி , பரணி -- நெல்லி , கார்த்திகை -- அத்தி , ரோகிணி -- நாவல் , மிருகசீரிஷம் -- கருங்காலி , திருவாதிரை -- செங்காலி , புனர்பூசம் -- மூங்கில் , பூசம் -- அரசு , ஆயில்யம் -- புன்னை , மகம் -- ஆல் , பூரம் -- புரசு , உத்திரம் -- இலந்தை , அஸ்தம் -- மகாவில்வம் , சுவாதி -- மருதம் , சித்திரை -- அகண்ட வில்வம் , விசாகம் -- விளா , அனுஷம் -- மகிழம் , கேட்டை -- பராய் , மூலம் -- மரா , பூராடம் -- வஞ்சி , உத்திராடம் -- பலா , திருவோணம் -- எருக்கு , அவிட்டம் -- வன்னி , சதயம் -- கடம்பு , பூரட்டாதி -- மா , உத்திரட்டாதி -- வேம்பு , ரேவதி -- இலுப்பை . ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும் .
--- அவள் விகடன் . 2 . 1 . 2009 . இதழ் உதவி : k . மகேஷ் , திருநள்ளாறு .