Sunday, March 6, 2011

அறியாமையை உணர்ந்தவன் !

" அறிதொற்றியாமை கண்டற்றால் " என்கிறாரே வள்ளுவர் -- ' அறிதோறும் அறிவு பெற்றற்றால் ' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் ?
அறியாமையை உணர்ந்தவன்தான் அறிவைத் தேட முடியும் .
நேற்று மூட்டைப் பூச்சிகள் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன் . அதில் ஓர் அபூர்வத் தகவல் அறிந்தேன் .
காமவெறி கொண்டு ஆண் மூட்டைப் பூச்சி அலையுமாம் . பெண் மூட்டைப்பூச்சியை வசப்படுத்துமாம் . பிறகுதான் தெரியுமாம் . பெண் மூட்டைப் பூச்சிக்குப் பெண்ணுறுப்பே இல்லையென்று . பெண் மூட்டைப் பூச்சியின் பின்பக்கம் பொட்டென்று ஒரு போடு போட்டு அவசரத் துளையை உண்டாக்கிக் கொள்ளுமாம் ஆண் மூட்டைப்பூச்சி .
படித்ததும் யோசிக்க ஆரம்பித்தேன் . மூட்டைப்பூச்சி நம்மைக் கடிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே ! எத்தனை மூட்டைப்பூச்சிகள் நம் மீது ' அவசரத்துளை ' போட்டனவோ ? யாரறிவார் ?
அறியும் போதுதான் அறியாமை தெரிகிறது .
--- வைரமுத்து , குமுதம் . 18 . 07. 2007 .

சிரிப்போ... சிரிப்பு !

* " ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ப்ரீ ?"
" எப்ப வந்தாலும் ப்ரீ கிடையாது... பீஸ் வாங்குவேன் !"
* " அப்பா, நான் சாதிக்க விரும்புகிறேன் ."
" நல்லதும்மா , ஆமா எந்தத் துறைல ?"
" அய்யோ, அப்பா அவர் பேர் சாதிக் ."
* " டேய்....உன் மனைவியைக் காணோம்னு என்கிட்டே சொன்னே. ஆனா பேப்பர்ல உங்க அம்மாவைக் காணவில்லைன்னு விளம்பரம் போட்டிருக்கே. அச்சுப் பிழையா ?"
" அம்மா வீட்ல இல்லைன்னு பேப்பர்ல பார்த்ததும் , என் மனைவி உடனே வீடு வந்துடுவா . பிரச்சனையே அவங்களுக்குள்ளேதானே !"

Friday, March 4, 2011

வாயுள்ள பிள்ளை .

உங்களுக்குப் பேசத் தெரியுமா ? இதென்ன பிரமாதம் ? எல்லோரும்தான் பேசுகிறார்கள் . வாயைத் திறந்தால் பேச்சு . அது ஒரு பெரிய விஷயமா ? நிச்சயமாகப் பெரிய விஷயம்தான் . சரியான் நேரத்தில் , சரியான இடத்தில் , சரியானவிதத்தில் பேசுவதென்பது சாதாரண சமாச்சாரமே இல்லை .
பெரிய அரசியல் பிரமுகர்கள் , நிறுவனங்களின் தலைவர்கள் , முக்கிய அதிகாரிகள் , கலைத்துறைப் பிரபலங்கள் என்று யாரை எடுத்துக்கொண்டாலும் சரி , அவர்களுடைய பேச்சு , மற்றவர்களிடம் பழகும் விதம் ஒரு பெரிய ப்ளஸ் பாயின்டாக இருக்கும் . பல சமயங்களில் அதுவே அவர்களுடைய வளர்ச்சிக்கு ஏணியாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம் .
எந்தச் சூழ்நிலையிலும் பேச்சு ஒன்றையே ஆயுதமாக , கேடயமாகப் பயன்படுத்தி ஜெயிக்கமுடியும் என்கிற கருத்தை முன்னிருத்தியுள்ள ஒரு சுவாரஸ்யமான சூப்பர் ஹிட் தொகுப்பு , ' ஹவ் டூ டாக் டூ எனிவன் ' ( How To Talk To Anyone ) லீல் லௌண்டஸ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் பேச்சுக்கலை , பழகும்தன்மையை மேம்படுத்திக்கொள்வதற்கான் பல நுட்பங்கள் , வழிமுறைகள் , ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன .
அவரது வெற்றி சூத்திரங்களில் முக்கியமான பத்து இங்கே சுருக்கமாக :
1 . மனிதர்கள் எல்லோருமே உள்ளுக்குள் இன்னும் குழந்தைகள்தான் . அவர்களிடம் உள்ள ஏதேனும் ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினால் புளகாங்கிதம் அடைந்துவிடுவார்கள் . நீங்கள் சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஒரு நல்ல விஷயமாவது இருக்கும் . அதைத் துப்பறிந்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள் , ஸ்கோர் பண்ணுங்கள் .
2 . மற்றவர்களிடம் பேசும்போது மெஷின் கன் சுடுவதுபோல படபடவென்று பேசிக்கொண்டே இருக்காதீர்கள் . அடுத்தவர்களுடைய மனோபாவத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களுடைய பேசும் தன்மையை மாற்றுங்கள் , ஏற்றுங்கள் , அல்லது குறையுங்கள் ! அப்போதுதான் உங்கள் பேச்சு எடுபடும் .
3 . ஒருவரைப் புதிதாகத் தெரிந்துகோள்ளும்போது , அவர்களுடைய நெகடிவ் அம்சங்களை ( உதாரணமாக : தோல்விகள் , சர்ச்சைகள் ) முன்வைத்துப் பேசாதீர்கள் . அதெல்லாம் நீங்கள் நல்ல நண்பர்களாக நெருங்கியபிறகு பார்த்துக்கொள்ளலாம் .
4 . யார் பேசினாலும் அக்கறையோடு கவனித்துக் கேளுங்கள் , கண்கள் இங்கே யோசனை வேறு எங்கோ என்பதுபோல் நடந்துகொள்ளாதீர்கள் , ஆர்வமாய் தலையசைத்துக் கேளூங்கள் , அப்போதுதான் பேசுபவர்களுக்கு உற்சாகமாய் இருக்கும் .
5 . வெளியூர் , வெளிமாநிலம் , வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கிறபோது , முடிந்தவரை அவர்களுடைய லோக்கல் கலாச்சாரம் , பழகுமுறைகள்த் தெரிந்துவைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள் , அந்த அக்கறை அவர்களைக் கவரும் . உதாரணமாக ஒரு பஞ்சாபி சிங் உங்களைப் பார்த்து ' வணக்கம் சார் ' என்று சொல்லிக் கை கூப்பினால் அப்படியே மெய்சிலிர்த்துப் போய்விடமாட்டீர்களா ?
6 . ஒருவரை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போது , அவர்களைப்பற்றிய தனித்துவமான தகவல் ஒன்றை ஞாபகம் வைத்திருந்து சொல்லி ஆச்சர்யப்படுத்துங்கள் . ( உதாரணமாக : ' உங்க பொண்ணு டான்ஸ் கத்துக்கறதாச் சொன்னீர்களே , அரங்கேற்றம் எப்போ ? ' ) மிக எளிமையாகத் தோன்றுகிற இந்த உத்தி , அற்புதமான பலன்களைத் தரக்கூடியது . .
7 . யாரியமாவது உதவி கேட்க நேர்ந்தால் , அதைச் செய்வதன்மூலம் அவர்களுக்கு ஏதாவது பலன் இருக்கக்கூடுமா என்று யோசியுங்கள் , அதை முன்னே வைத்துப் பேசுங்கள் , அப்புறம் நீங்களே வேண்டாம் என்று சொன்னாலும்கூட , அவர்கள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள் .
8 . பேசிவிட்டுக் கிளம்பும்போது , மறக்காமல் நன்றி சொல்லுங்கள் . அதுவும் வெற்று ' நன்றி ' போதாது , ' உங்களிடம் பேசியதில் ரொம்பப் பிரமாதமான புது விஷயங்களைத் தெரிந்துகொண்டேன் , அதற்காக நன்றி ' என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள் , அடுத்த சந்திப்புக்கு அந்த ' நன்றி 'தான் அவர்களை உங்களிடம் கொக்கி போட்டு இழுக்கும் !
9 . முக்கியமான நபர்களைச் சந்திக்கும்போது அவர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு சொல்லுங்கள் . பேசும்போது அவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லும்போது உங்கள் மீது மதிப்பு உயரும் .
10 . கடைசியாக , முகத்தில் ஒரு புன்னகையோடு பேசுங்கள் . சிடுசிடுவென்று இருப்பவரை யாருக்கும் பிடிக்காது . பேசாவிட்டாலும் புன்னகையே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் .
--- என். சொக்கன் . குமுதம் , 11. 8. 2010.

Thursday, March 3, 2011

வலை பாயுதே !

* திருடன் கொள்ளை அடித்தால் அது கைவரிசை.... அதையே
மணமகன் செய்தால் சீர்வரிசை !
* முன்பெல்லாம் ' மழையில் நனையவா ? ' என் அனுமதி கேட்டுக்கொண்டு இருந்த தோழி ,
இப்போது ' மழையில் நனைய வா ! ' என்கிறாள் அதிகாரத்தோடு !
* கோழி கொதித்த போது ' கறிக் கொழம்பு ' என்றேன் .
தோழி கொதித்த போது , ' சரி கிளம்பு ! ' என்றேன் !
* ஜென் பிரியர்கள் ஜன்னலைக்கூட
' ஜென் 'னல் என்றே அழைப்பார்கள் !
--- ஆனந்தவிகடன் , 11. 8. 10

Wednesday, March 2, 2011

மேஜிக் கணக்கு !

உங்கள் நண்பர்களிடம், கீழ்க்கண்டபடி கணக்கு செய்ய சொல்லுங்கள் ...
1 . பல இலக்கங்கள் உள்ள ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள் . அதில், ' 0' மட்டும் வரவேண்டாம் .
2 . அந்த எண்ணின் எல்லா இலக்கங்களையும் கூட்டுங்கள் .
3 . நினைத்த எண்ணிலிருந்து இந்த கூட்டுத் தொகை எண்ணைக் கழியுங்கள் .
4 . வரும் விடையின் இலக்கங்களில் ஏதாவது ஒரு எண்ணை நீக்குங்கள் . ஒரு எண் பலமுறை வந்தாலும், அதில் ஒரே ஒரு எண்ணை மட்டுமே நீக்கவேண்டும் . உதாரணமாக 1224 என்ற எண்ணில் 2 ஐ நீக்குவதாக இருந்தால் ஒரு 2 ஐ மட்டுமே நீக்க வேண்டும்
5 . மீதியுள்ள எண்ணின் இலக்கங்களைக் கூட்டி, அந்த கூட்டுத்தொகை எண்ணைச் சொல்லுங்கள் ... நீங்கள் நீக்கிய எண்ணை நான் சொல்லுகிறேன் !
இதன்பின், அவர்கள் எவ்வளவு பெரிய எண்ணைச் சொன்னாலும், அவர்களால் நீக்கப்பட்ட எண்ணை நீங்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சொல்லிவிடலாம் !
எப்படி ?
ஒரு உதாரணம் பார்க்கலாம் ...
1 . உங்கள் நண்பர் நினைத்த எண் : 1,23,456 .
2 . இதில் உள்ள இலக்கங்களின் கூட்டுத்தொகை : 1 + 2 + 3 + 4 + 5 + ^ 6 = 21 .
3 . கழித்தல் செயல்பாடு : 1,23,456 - 21 = 1,23,435.
4 . இதில் நண்பர் நீக்கிய எண் 1 என்று வைத்துக்கொள்வோம் .
5 . மிஞ்சியுள்ள எண் : 23,435. இதன் இலக்கங்களைக் கூட்டி ( 2 + 3 + 4 + 3 + 5 ), ' 17 ' என்று நண்பர் கூறுவார் .
- இதன்பின் நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு சிறு கணக்குதான் .
இந்த எண்ணுடன் ( குறைந்தபட்சம் ) எந்த எண்ணைக் கூட்டினால் 9 ஆல் வகுபடும் என்று பார்க்கவேண்டும் . இந்த உதாரணத்தில், 17 உடன் 1 ஐக் கூட்டினால் 18 ; இது 9 ஆல் வ்குபடும் ! இதைக் கண்டுபிடித்ததும், ' நீக்கிய எண் 1 ' என்று சரியான விடையைச் சொல்லி நீங்கள் அசத்திவிடலாம் !
இந்த உதாரணக் கணக்கில், நண்பர் ' 2 ' என்ற இலக்கத்தை நீக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம் . அவரிடம் மிஞ்சும் எண் : 13,435 . இதன் இலக்கங்களைக் கூட்டி ' 16 ' என்று சொல்வார் . இதோடு 2 ஐ சேர்த்தால் 18 வரும் . அது 9 ஆல் வகுபடும் . எனவே, ' நீக்கிய எண் 2 ' என்று அசத்திவிடலாம் !
--- தினமலர் , ஜூலை 30 , 2010 .

Tuesday, March 1, 2011

கோவிலில் வழிபட....

கோயிலுக்குச் செல்வது மனம் ஒன்றி வழிபடவே ! மனம் ஒன்றி வழிபட வேண்டும் என்றால் மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்புலன்களும் மனதில் ஒன்றியிருந்து அமைதியாக வழிபடுதல் .
வழிபடும் வேளையில் ஐம்புலன்களை அலைபாய விடாமல் இருந்தால் மனம் ஒன்றி வழிபடலாம் . அதாவது பார்வையை அலைபாய விடுதல், வீண் வம்பு பேச்சுகளைக் கேட்டல், வாச நுகர்ச்சியில் ஈடுபடுதல், வீண் வார்த்தைகளைப் பேசுதல், உடலைத் தேவையின்றி அசைத்தல் ஆகியவற்ரைத் தவிர்க்க வேண்டும் ; முழுமையான தெய்வீக சிந்தனையில் மூழ்கி வழிபட வேண்டும் .
இந்த நவீன யுகத்தில், கோயிலுக்குள் இருக்கும் போதுகூட சிலர் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கின்றனர் . இதைத் தவிர்க்க வேண்டும் .
--- ஏ. வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , தினமலர் , ஆகஸ்ட் 12 . 2010.

தேவை ஒரு பிரகடனம்...!

இறையன்பு நிறையீர் !
வணக்கம் . மென்மேலும் வளர இறையருளைப் பிரார்த்திக்கிறேன் . வாழ்வியலில் கடைபிடிக்கப்பட்டு வரும் இல்லற தர்மங்கள் இன்றைய இந்தியாவின் விலைவாசி ஏறுமுகத்தில் இழிவுகளின் உயரங்களாக மாறிவருகின்றன . அதாவது
ஒரு கணவனின் உயிரணுவும், மனைவியின் சினைமுட்டையும் சோதனைக்குழாயில் இணைக்கப்பட்டு அதை வாடகைத் தாய் ஒருத்தியின் வயிற்றில் வளரச் செய்து குழந்தைப் பேறுக்குப் பிறகு சினைமுட்டை தந்தவளிடம் அவளின் குழந்தையாகவே ஒப்படைக்கப்படுகிறது .
இந்த வகை சீரழிவுக் கலாச்சாரம் பெங்களுர், ஹைதராபாத், ஆமதாபாத் போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வருகின்றன . குறிப்பாக ஐ.டி., சாஃப்ட்வேர் துறைகளில் பணியாற்றுகின்ற ஆண்கள், பெண்கள் திருமணத்திற்குப் பிறகு பணி, தகுதி உயர்வு போன்றவை குழந்தைப்பேறு காரணமாக பாதிக்கிறது என்பதால் கிடைத்துவரும் அபரிமிதமான வருவாயை இழக்க மனமில்லாததாலும், இருப்பதைக் கொண்டு சமரச வழியில் சிக்கனமாக வாழ முயற்சி மேற்கொள்ளாததுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன .
இதே போல வாடகைத்தாயாக இருக்க இசைவு தரும் பெண்கள் வெறும் இரண்டு லட்ச ரூபாய்களும், சில மாத மருத்துவ கண்காணிப்பு மற்றும் சத்தான உணவும் கிடைக்கப் பெறுவதால் வாடகைத்தாயாக முன்வர சம்மதிக்கிறரார்கள் .
அன்பு, அரவணைப்பு, அந்தரங்கத்தில் பகிர்ந்துகொள்ளும் பாரம்பரியப் பெருமைகளின் நீட்சியாக மனமும், உடலும் ஒன்றில் ஒன்று ஒன்றிக் கலந்து உருவாகும் புத்திரர்களே உத்தம புத்திரர்கள் . தம்பதியரின் உயிரை சினையிலிருந்தும் சோதனைக்குழாயிலும் உருவாக்கிய கரு வாடகைத்தாயின் வயிற்றிலுமாக வளர்ந்து பிரசவமானால் இந்தியத்தின் எதிர்காலம் மனச்சிதைவுகளின் தாயகமாக மாறிவிடும் . நம் தேசத்தின் குடும்ப உள்கட்டமைப்பை குலைக்கும் இச்சீரழிவைத் தடுக்க இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ அரும்பாடுபட்டு வருகிற மகான்கள், துறவியர்கள், அறநெறி போற்றி வளர்க்கும் ஆன்மிகச் செம்மல்கள் ஒருங்கிணைந்து முழுவீச்சில் பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தி விழிப்புணர்வைத் தூண்டிட வேண்டுகிறேன் .
--- 'சிவ ஒளி' பிப்ரவரி 2011 மாத இதழில் , ஆசிரியர் கா. விஜயராகவன் .