Wednesday, December 7, 2011

இருட்டிலும் பார்க்க முடியும் !

நமது கருவிழியில் ' ப்யூபில் ' என்ற சிறு துவாரம் உள்ளது . வெளிப்புற வெளிச்சத்துக்கு ஏற்றபடி இந்த துவாரம் பெரிதாகவோ, சிறியதாகவோ மாறும் . அதிக வெளிச்சம் இருந்தால், இந்த துவாரம் மிகமிகச் சிறிய அளவில் சுருங்கிவிடும் . இதனால்தான், அதிக வெளிச்சத்தில் நமக்கு கண் 'கூசும் '.
மங்கல் ஒளி, இருட்டு போன்ற குறைவான வெளிச்சத்தின் போது, இந்த துவாரம் பெரிதாக விரியும் . சாதாரண வேளையில் ப்யூபில் துவாரம் இருக்கும் அளவைவிட, இருட்டு வேளையில் அதன் அளவு 16 மடங்கு பெரிதாக மாறும் . இப்படி விரிவடைந்த துவாரத்தின் வழியாக சில காட்சிகள் கண்ணுக்குள் நுழையும் . இதனால்தான் இருட்டிலும் நம்மால் கொஞ்சம் பார்க்க முடிகிறது .
இருட்டிலும் அதிக வெளிச்சத்திலும் கண்விழித்துப் பார்ப்பது பார்வையைப் பாதிக்கும் . எனவே இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டும் .
--- தினமலர் . நவம்பர் 12 , 2010 .

Tuesday, December 6, 2011

தெரியுமா ? தெரியுமே !

* 50 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் ஆண்டு ஒன்றுக்கு 5.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது . 10 லட்ச ரூபாய் மதிப்புக்கூணவைத் தருகிறது . உலகில் மிக அதிகக் காலம் வாழக்கூடிய உயிரினம் மரம்தான் . ஸ்வீடனில் இருக்கும் ஊசியிலை மரத்தின் வயது 9,550 ஆண்டுகளுக்கும் அதிகம் .
* ஜப்பானில் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை சைபீரிய பனிப் பிரதேசங்களில் வாழ்ந்த கம்பள யானையின் ( Woolly Mammoth ) மரபணுவைச் சேகரித்து, அதை உயிரோடு உள்ள ஆப்பிரிக்க யானைக்குச் செலுத்தி மீண்டும் கம்பள ஆனையை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன !
* கிரேக்கத்தில் உள்ள லெஸ்வாஸ் தீவில் உள்ள கல் காடு தான் உலகின் மிகப் பெரிய கல் காடு, கிட்டத்தட்ட 150 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள காட்டுப் பகுதி இங்கு கல் காடாக மாறியிருக்கிறது .
* மின்னல், எரிமலை, பாறைச் சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொறிகள் இவைகள் காட்டுத் தீ உருவாக முக்கிய காரணங்களாம் .
* காட்டுத் தீ அருகில் பரவும் முன்னே அந்தப் பகுதியின் காற்று 800 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாகிவிடும் .
* காட்டுத் தீயின் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்றாலும் புல்வெளிகளில் 22 கி.மீ. வரை சீறும் .
* காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, அது பரவும் திசைக்கு எதிர்த் திசையில் தீ வைப்பதுதான் தீர்வு .
* 2030 -ம் ஆண்டுக்குள் அமேசான் காடுகளில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் காட்டுத் தீயினால் அழிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறதாம் .
* ஜப்பானில் குப்பைகளுக்குப் பஞ்சமே இல்லை . மொத்தக் குப்பைகளையும் கடலில் கொட்டி செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி, அதில் மண்னைக்கொட்டி மரம் வளர்ப்பது என்பதுதான் திட்டம் . இதனால், குப்பைகளும் காலியாகும்; சுற்றுச்சூழலும் பாதிக்கபடாது . காடும் வளர்க்கலாம்; கார்பனையும் கட்டுப்படுத்தலாம் .
* காடுகள் நோய் தீர்க்கும் ஓர் அற்புத மருத்துவன் . இப்போது நாம் பயன்படுத்தும் மருந்துகளை அளித்தது எல்லாமே தாவரங்கள்தான்
* காடுகள்தான் நீரின் ஆதாரம் . ஆனால், ஆச்சர்யமாக நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன . இரண்டு வகை நீர்க் காடுகள் இருக்கின்றன . முதல் வகை அலையாத்தி காடுகள்
இது பெரும்பாலும் கடல் நீருக்கு அருகில் மட்டுமே வளரும் . இரண்டாவது வகை கெல்ப் காடுகள் . கடலுக்கு அடியில் வளர்ந்திருக்கும் பூஞ்சை வகைச் செடிகள் இவை .
* உலகின் மிகப் பெரிய அலையாத்தி காடுகள் பிரேசிலில் ( 26 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு ) இருக்கிறது . இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் காடு ..
--- காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 ..

Monday, December 5, 2011

இசையும் வழிபாடும் !

உற்சவங்களில் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இசையைத்தான் வாசிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன ....
* உதய காலம் : பூபாளம், பவுளி, கோபிகா வசந்தம் .
* காலை நேரம் : பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி.
* நடுப்பகல் : ஸ்ரீராகம், சாவேரி, மத்யமாவதி, மணிரங்கு, மோஹனம் .
* சந்தியா காலம் : சங்கராபரணம், கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, பூர்விக கல்யாணி .
* இரவு : காம்போதி, தோடி, பைரவி, நீலாம்பரி .
* தீபாராதனை வேளை : மிஸ்ர மல்லாரி, தேவாரம், திருப்புகழ், அஷ்டபதி, திருப்பாவை .
* யாகசாலை வரை : மல்லாரி .
* யாகசாலை முதல் கோபுர வாசல் வரை : திரிபுடை மல்லாரி .
* கோவிலுக்குள் : துரிதகால திரிபுடை மல்லாரி .
* நிவேதன வேளை : தாளிகை மல்லாரி .
* கும்பம் எழுந்தருளல் செய்யும் போது : தீர்த்த மல்லாரி .
* ஸ்வாமி வீதியுலா வேளை : ராகம், தானம், பல்லவியுடன் கீர்த்தனைகள் .
* பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை : ஆனந்த பைரவி, கேதாரகௌளை .
* பள்ளியறைக்கு சேர்த்தபின் : நீலாம்பரி .
---- தினமலர் . நவம்பர் 11 .2010 .

Sunday, December 4, 2011

ஆலய வாத்தியங்கள் ..

ஆலய வாத்தியங்கள் பஞ்சபூத அடிப்படையில் ஆனவைதான் :
1 . ப்ருதிவி ( நிலம் ) வாத்யம் : மரத்தினால் செய்யப்பட்டவை .
2 . அப்பு ( நீர் ) வாத்யம் : உலோகத்தினால் செய்யப்பட்டவை .
3 . வாயு வாத்யம் : துளை உள்ள வாத்யங்கள் .
4 . ஆகாய வாத்யம் : சங்கநாதம், தாள வாத்யம் .
5 . அக்னி வாத்யம் : நரம்பு வாத்யங்கள் .
--- தினமலர் . நவம்பர் 11 .2010 .

Saturday, December 3, 2011

அமேசான் காடுகள் .

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப் பெரியது அமேசான் காடுகள்தான் . அடர்த்தியானதும் இவைதான் . அமேசான் என்ற வார்த்தைக்கு, ' திடகாத்திரமான, உயரமான பெண் ' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை ' நதிகளின் ராணி ' ( 4,000 மைல்கள் நீளம் ) என்று அழைக்கிறார்கள் . நதியைச் சூழ்ந்திருக்கும் காடு, சந்தேகமே இல்லாமல் ராஜாதானே ?
பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு, 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவுகொண்டது . பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது . உலகப் பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்கின்றன . உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் ( தாவரம், விலங்கு, பூச்சி ) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு . 2,500 வகை மீன்கள், 1,500 வகைப் பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன .
அமேசான் காடுகளை நான்கு தளங்களாகப் பிரிக்கலாம் . மேல் தளத்தில் கழுகு, பருந்து போன்ற பறவைகளும், அடுத்தத்தளத்தில் குரங்கு போன்ற உயிரினங்களும், மூன்றாவது தளத்தில் பூச்சிகள், ஊர்வன போன்ற விலங்குகளும் வாழ்கின்றன . தரைப் பகுதி பயங்கர காட்டு விலங்குகளுக்கானது . ( அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான் ).
இந்தக் காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள் . அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு, பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6.712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது . இங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் தாவரவியல் வல்லுனர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உணர்த்தும் !
--- பா.முருகானந்தம், தீபக், அ.ஆதித்தியன் . காடு விகடன் இணைப்பு . 27 . 1 . 10 .

Friday, December 2, 2011

மன உளைச்சலா...

மன உளைச்சலா முக மசாஜ் போதும் !
இங்கிலாந்து நாட்டு மனோதத்துவ நிபுணர்கள், மன உளைச்சல் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர் . மன உளைச்சலுக்கு மாத்திரை போடாமல் தீர்வு காணும் சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர் . இதற்கு " பேசியல் ரெப்ளக்சாலஜி " என்று பெயர் சூட்டி உள்ளனர் . இது வேறு ஒன்றும் இல்லை . முகத்தில் லேசாக மசாஜ் செய்வதுதான் .
மன உளைச்சலுக்கு ஆளானவர்களின் முகத்தில் கன்னம், தாடை, நெற்றியில் பட்டுத்துணியால் ஒற்றி எடுப்பது போல மெதுவாக குத்தியும் அழுத்தி தடவியும் மசாஜ் செய்வதுதான் பேசியல் ரெப்ளக்சாலஜி .
சீனாவின் அக்குபஞ்சர் முறையை பின்பற்றி இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது . உடலின் அத்தனை உறுப்புகளின் நரம்புகளும் முகம் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன . எனவே இந்த நரம்புகளை தூண்டும் வகையில் இதமாக மசாஜ் செய்தால், மன உளைச்சல் போயே போய்விடும் . அழுத்தம் குறைந்து மனசு லேசாகிவிடும் . தூக்கம் கெட்டு அவதிப்படுபவர்கள் நன்றாக தூங்கமுடியும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .
--- தினமலர் 10 . 11 . 10 .

Thursday, December 1, 2011

ஒபாமா .

' We Can ' என்ற ஒற்றை ஸ்லோகன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை எட்டிப்பிடித்தவர் பராக் உசேன் ஒபாமா ! மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவில் அமெரிக்கா சிக்கித் தவித்த வேளையில் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கறுப்பின அதிபர் . பூ மழை தூவி வசந்தங்கள் வாழத்த பதவிக்கு வந்தவர் . அதன் பிறகு எதிர்கொண்டது அனைத்தும் கண்டனங்களும் ஆவேசக் கோபதாபங்களும்தான் !
* அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961 - ம் ஆண்டு ஆகஸ்ட் 4 - ம் தேதி பிறந்தார் . கென்யாவின் ஸ்வாஹிலி மொழியில் ' பராக் ' என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று பொருள் !
* ஒபாமாவின் அப்பா ஒபாமா சீனியர் ஆண்டன் ஹாமை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்தின்போதே ஒபாமா மூன்று மாதக் குழந்தையாக ஆன் வயிற்றில் இருந்தார் !
* ஒபாமா, அவரது பெற்றோருக்கு ஒரே மகன்தான் . ஆனால், தந்தை மற்றும் தாயின் மறுமணங்களால் இவருக்கு எட்டு சகோதர, சகோதரிகள் உண்டு !
* இடது கைப் பழக்கம்கொண்ட ஒபாமா, தினமும் உடற்பயிற்சி செய்வார் . கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும்தான் உடற்பயிற்சிக்கு ஓய்வு !
* சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் ' சிறந்த பேராசிரியர் ' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் !
* சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்றபோது அறிமுகமான மிஷேலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் . மலியா, சஷா என்று இரண்டு குழந்தைகள் !
* மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், சீசர் சாவேஸ் ( விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய மெக்சிக்கோ அமெரிக்கன் ) ஆகிய மூவரும்தான் தன் ரோல்மாடல் ஹீரோக்கள் என்று குறிப்பிடுவார் .
* " இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை . இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான் ! " என்று தாய்நாட்டை உயர்த்திப் பிடிக்கும் பேச்சுக்களால் கைதட்டல்களை அள்ளி வாக்குகளைக் கவர்ந்தவர் ஒபாமா !
* ' அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி ' என்று செய்தி வெளியானவுடன், இன்ப அதிர்ச்சி தாங்க முடியாத லட்சக்கணக்கான ஆஃப்ரோ -- அமெரிக்கர்கள் வீதிகளில் வாய்விட்டு அழுத காட்சிகள் அப்போது டி.ஆர்.பி ஹிட் சென்சேஷன் !
* ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வாஷிங்டனில் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டார்கள் . கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்றபோது, 50 ஆயிரம் பேர் நேரில் கூடியதே அதுவரையிலான சாதனை !
* 2009 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது . " அந்தப் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா என்பது ஒருபுறம் இருக்கட்டும் ... இந்தப் பரிசை அளித்ததன் மூலம் அமெரிக்கர்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி . பதவி ஏற்ற ஒன்பதே மாதங்களில் அவருக்கு அளிகப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது ! " என தலையங்கம் எழுதியது அமெரிக்காவின் மனசாட்சியான ' தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ' பத்திரிகை !
* உலகமே எதிர்பார்த்தபடி அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமாவால் அற்புதங்களை நிகழ்த்த்த முடியவில்லை . ' அமெரிக்காவின் இன்றைய அரசியல் நிலையும், யதார்த்த சூழ் நிலையும் ஒபாமாவின் கனவுகளை இப்போதைக்குச் சாத்தியப்படுத்தாது ! ' என்கிறார்கள் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் !
---சார்லஸ் . ஆனந்த விகடன் , 10 . 11 . 10 .