Saturday, June 7, 2014

வில்வத்தின் மகிமை.

  வில்வத்தை 3 தளங்களாகச் சாத்துவது நல்லது.  மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில்  வில்வத்தைப் பறிக்கக்கூடாது.  பிற நாட்களில் தூய்மையாகப் பறித்து ஓலைக் குடலை ( கூடை ) யில்  வைத்துச் சாத்தலாம்.
சிவனுக்கு 5 முகங்கள்.
     சிவபெருமானுக்கு 6 முகங்கள் உண்டு.  அவற்றுள் 5 முகங்கள் விசேஷமானவை.  இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஒரு தொழில் செய்யும். ஒரு வடிவத்தில் சிறப்பாகக் காணப்படும்.
சத்தியோஜாதம் :  மேல் நோக்கிய முகம். அருளல் தொழில்.  சதாசிவத்தின் முகம்.
வாமதேவம் :  வடக்கில் உள்ள முகம்.  மறைத்தல் தொழில். மகேசனுக்கு உரியது.
அகோரம் :  தெற்கே உள்ள முகம்.  அழித்தல் தொழில்.  ருத்ரனுக்கு உரியது.
தத்புருஷம் :  கிழக்கில் உள்ள முகம்.  காத்தல் தொழில்.  மகாவிஷ்ணுவுக்கு உரியது.
ஈசானம் :  மேற்கில் உள்ள முகம்.  படைத்தல் தொழில். பிரம்மனுக்கு உரியது.
--  தினமலர்.  பிப்ரவரி 7, 2013. 

Friday, June 6, 2014

படுக்கை ஒன்று, பெயர்களோ வேறு!

 திவ்ய தேசங்களில் சயனத் தலங்களும் அவற்றின் சயனப் பெயர்களும் பின்வருமாறு :
ஸ்ரீவில்லிபுத்தூர்  --  வடபத்ர சயனம்.
திருவிந்தளூர்  --  வீர சயனம்.
கடல்மல்லை  --  ஸ்தல சயனம்.
கும்பகோணம்  --  உத்தான சயனம்.
திருப்புல்லணை  --  தர்ப்பா சயனம்.
ஸ்ரீரங்கம்  --  புஜங்க சயனம்.
தில்லை சதிரகூடம்  --  போக சயனம்.
திருநீர்மலை  --  மாணிக்க சயனம்.
-- தினமலர்.  பிப்ரவரி 7, 2013. 

Thursday, June 5, 2014

ஏ.டி.எம். மையங்கள்!

 தமிழகத்தில் 2000-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.  தமிழகத்தில் இதுவரை ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடித்ததாக சரித்திரம் இல்லை.  அது சுலபமானதும் அல்ல.
     ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியில் ஐந்து அல்லது ஆறு அறைகளுக்குள் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  இந்த அறைகள் அலாய் ஸ்டீலால் ஆன பெட்டகத்தால் சூழப்பட்டிருக்கும். பெட்டகத்தை லாக் செய்தால் நான்கு பக்கமும் தலா இரு லாக் வீதம் மொத்தம் எட்டு லாக் செய்யப்படும். இந்த லாக்கை எவ்வித கூரிய ஆயுதத்தைக்கொண்டும் அறுக்க முடியாது.  மேலும் இந்தப் பெட்டகத்தை எந்திரத்தை வெல்டிங் ராடு உருக்க முற்பட்டால் அது மேன்மேலும் உறுதி அடையுமே தவிர உருகாது.  சில தனியார் வங்கிகள் இந்த பெட்டகத்தை 24 மணி நேரம் உயர் வெப்பத்தில் வைத்து சோதித்தப் பின்பே வாங்குகின்றன.  எனவே, யாரும் வீண் முயற்சியில் ஈடுபட்டு சிறைக்குள் கம்பி எண்ண வேண்டாம்.
     தமிழகத்தில் இம்மையங்கள் துவக்கப்பட்டபோது டெபிட் அட்டையை மையத்தின் வாயில் கதவில் சொருகினால் மட்டுமே கதவு திறக்கும்.  கதவில் அட்டையை சொருகும்போதே உள்ளே இருக்கும் காமிரா கண்விழித்துக்கொள்ளும்.  காமிரா 90 நாட்கள் வரை இடைவிடாமல் பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளும். ஆனால்,  இன்றைக்கு 90 % மையங்களில் வாயில் கதவு லாக் சிஸ்டம் செயல் இழந்துவிட்டன.
     " தாய்லாந்து,  மலேஷியா,  ஜப்பான்,  சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு,  கண்காணிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.  யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை நகர்த்தினாலோ, அடித்தாலோ, பின்புறமாக தொட்டாலோ மறு நொடியே கண்காணிப்புக் குழுவினர்,  சம்பந்தப்பட்ட வங்கி பொறுப்பாளர் மூலம்  அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுவிடும்.  தவிர, வழக்கமான காமிராவைத் தவிர ஆங்காங்கே இருக்கும் ரகசிய சிறப்பு காமிராக்கள் பல்வேறு கோணங்களில் கொள்ளையரை படம் பிடிக்கத் தொடங்கும்.  இவை தவிர,  அந்த மையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் அலாரம் ஒலிக்கத்தொடங்கும்.  மேற்கண்ட தொழில்நுட்பத்தை செயல்படுத்த கூடுதல் செலவு, 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தேவை.  எதிர்காலத்தில் மேற்கண்ட வசதிகள் கொள்ளப்படும்.
--- மாநிலம். தி இந்து . செப்டம்பர் 28, 2013. 

Wednesday, June 4, 2014

தலைகுனிந்த பரமாத்மா.

 பரமாத்மாவான குழந்தை கிருஷ்ணன் படுசுட்டி.  அவனைக் கட்டுப்படுத்துவது யசோதையின் முக்கிய சவால்களில் ஒன்று.  உறியில் இருக்கும் வெண்ணெய்யைத் தனக்குத் தெரியாமல் கிருஷ்ணன் எடுப்பதைத் தடுக்க யசோதை ஒரு காரியம் செய்தாள்.  உறியில் சில மணிகளைக் கட்டிவைத்தாள்.  வெண்ணெய்யை எடுக்கக் கிருஷ்ணன் முயன்றால், மணிகள் அசைந்து ஒலித்து காட்டிக்கொடுத்து விடுமல்லவா!
     அன்றைக்கும் வழக்கம்போல் கிருஷ்ணனை உரலில் கட்டிவைத்திருந்தாள் யசோதை.  சமையலறைக்குள் அவள் மும்முரமாக இருந்தபோது,  கிருஷ்ணனுக்கு ஒரு திட்டம் தோன்றியது.  சுற்றும்முற்றும் பார்த்தான்.  உரலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ( பரமாத்மா ஆயிற்றே ! ) உறியின் அருகே சென்றான்.
     மணிகளைப் பார்த்துக் கேட்டான், " மணிகளே ... நான் யார் தெரியுமா?"
     மணிகள் பவ்யத்துடன் கூறின.  " தாங்கள் பரமாத்மா ஆயிற்றே. "
     உடனே மணிகளுக்குக் கட்டளையிட்டான் கிருஷ்ணன்.  " மணிகளே ... நான் வெண்ணேய் சாப்பிடப்போகிறேன்.  யாரும் ஒலிக்கக் கூடாது!"
     "அப்படியே ஆகட்டும் " என்றன மணிகள்.
     உரலை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்தான்.  அதன் மீது ஏறினான்.  உறியில் கைவைத்தான்.  அதிலிருக்கும் பானையில் துழாவினான்.  வெண்ணெய்யை கை நிறைய எடுத்து வாயில் வைக்கப்போனான்.  அப்போது பார்த்து மணிகள் கணகணவென்று ஒலித்தன.  ஓடிவந்த யசோதை கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து நையப்புடைத்தாள்.
     யசோதை மீண்டும் சமையல்கட்டுக்குப் போன பின், மணீகளைப் பார்த்துக் கேட்டான் கிருஷ்ணன், " மணிகளே, ஒலிக்க மாட்டோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு ஒலித்தீர்களே,  சத்தியத்தை மீறிய பாவத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?"
    " தெரியும் ஸ்வாமி! ஆனால், பகவானுக்கு நைவேத்யம் ஆகும்போது ஒலிப்பதுதானே எங்கள் சுதர்மம்? அதற்காகத்தனே பிறப்பெடுத்தோம்?  சுதர்மத்தை மீறுவது பெரும் பாவமல்லவா! அதற்கான தண்டனையும் அதிகமல்லவா" என்று பதில் கூறின மணிகள்.  பரமாத்மா தலைகுனிந்தாராம்.
-- ஆர்.எஸ். ஆனந்த ஜோதி.  உள்ளத்தில் உண்மை ஒளி.
-- தி இந்து.  செப்டம்பர் 26, 2013. 

Tuesday, June 3, 2014

மூட்டைக் காக்க ஓடுங்கள்.

 ஓடினால் மூட்டுவலி வரும் என்று அஞ்சியே நம்மில் பலர் ஓடுவதில்லை.  75 ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்களை,  அவர்களுடைய முதுமைக் காலத்தில் சோதித்து ஆராய்ந்ததில், ஓடியவர்களின் மூட்டுகள் நல்ல நிலையில் இருப்பதும் மூடுவலி அல்லது வாதம் என்பது அவர்களைத் தொடவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.  கனடா நாட்டின் குவீன்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது.
புற்றும் குடும்பப் பற்றும்.
    புற்றுநோயாளிகளில் மணமாகாதவர்களைவிட,  மணமானவர்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்கின்றனர்.  ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் 75 ஆயிரம் பேரைச் சொதனை செய்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.  புற்றுநோயாளிகள் ஏராளமானோர் திருமணத்திற்குப் பின் நோயை வெற்றிகரமாக எதிர்கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
-- எத்திசையும்... கருத்துப் பேழை.
-- தி இந்து. செப்டம்பர் 27, 2013.  

Monday, June 2, 2014

சுந்தரகாண்டம்.

சுந்தரகாண்டம். பாராயணம் செய்யலாம் !
     ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம் சுந்தரகாண்டம்..  இது அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம்.  24 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2 ஆயிரத்து 885 சுலோகங்கள்.  68 அத்தியாயங்கள்.  வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.
     ஐந்தே நிமிடங்களில் சுந்தரகாண்டத்தை படிக்க அதன் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதைப் படித்தாலே சுந்தரகாண்டம் முழுமையாக படித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
     நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் பெரிவாச்சான்பிள்ளை என்னும் மகான் தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம் என்பதில் கீழ் வருமாறு சுந்தரகாண்டம் உள்ளது :
' சீர் ஆரும் திறல் அனுமன் மா கடலைக்
கடந்து ஏறி,
மும்மதின் நீள் இலங்கை புக்கு,
கடிகாவில் வார் ஆரும் முளை மடவாள்
வைதேகிதனைக் கண்டு,
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு
அருளாய் :
அயோத்தி தனில் ஓர் இடவகையில்
எல்லியம்போது இனிது இருத்தல்
மல்லிகை மாமாலை கொண்டு அங்கு
ஆர்த்ததுவும்
கலக்கிய மாமனத்தனனாய் கைகேயி வரம்
வேண்ட
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும்
மறாது ஒழிய,
" குலக்குமரா ! காடுறைய போ !" என்று விடை
கொடுப்ப,
லக்குமணன் தன்னோடும் அங்கு
ஏகியதும்,
கங்கைதனில் கூரணிந்த வேல்
வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை
கொண்டதுவும்,
சித்திர கூடத்து இருப்ப பரத நம்பி
பணிந்ததுவும்,
சிறு காக்கை முலை தீண்டி மூவுலகும்
திரிந்தோடி,
" வித்தகனே! இராமா! ஓ! நின்
அபயம் " என்ன,
அத்திரமே அதன் கண்னை அறுத்
ததுவும்,
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது
விளையாட...
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து
எம்பிரான் ஏக,
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்,
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்,
" ஈது அவன் கை மோதிரமே!" என்று,
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழலாள் சீதையும்,
வில்லிறுத்தான் மோதிரம் கொண்டு,
" அனுமான்! அடையாளம் ஒக்கும்" என்று,
உச்சி மேல் வைத்து உகக்க;
திறல் விளங்கு மாருதியும் இலங்கையர் கோன்
மாக்கடிகாவை இறுத்து,
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து,
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு,
அன்பினால் அயோத்தியர் கோன் தளிர்
புரைய்யும்,
அடி இணை பணிய! '
-- தேவராஜன்.
-- தினமலர்.வாரமலர். ஜூலை 28, 2013.  

Sunday, June 1, 2014

புல்லட் ரயில் !

  துப்பாக்கியிலிருந்து குண்டு ( புல்லட் ) எவ்வளவு வேகமாகச் செல்கிறது!  அந்த மாதிரி புல்லட் ரயிலும் மிக வேகமாகச் செல்லும்.  மணிக்கு 200 கிலோமீட்டருக்கு அதிகமான வேகம்.  இவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டியிருப்பதால் இந்த வகை ரயிலின் உடல் மெலிதாகவும், முன்புறம் சற்று கூர்மையாகவும் இருக்க வேண்டும்.  அப்போதுதான் காற்றுக்குக் குறைவான தடையை அளித்து காற்றைக் கிழித்தபடி வேகமாகச் செல்ல முடியும்.
     சக்கரத்தில் ஏற்படும் அதிர்வுகள் பயணிகளை அடையாதபடி சிறப்பான ஷாக் அப்சார்பர்கள் இருக்கும்.  தவிர புல்லட் ரயில்களுக்கென்றே தனி ரயில் பாதை போடப்படும்.  அதாவது இதன் தண்டவாளத்தில் வேறு எந்தவகை ரயிலும் குறுக்கிடாது.
--- குட்டீஸ் கேள்வி - பதில்.
-- தினமலர். சிறுவர்மலர். மார்ச் 22, 2013.