Tuesday, October 21, 2014

தந்தி சேவை!

 160 ஆண்டுகால தந்தி சேவை முடிவுக்கு வந்தது.
     இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்பினர்.
     சென்னை, ஜூலை 15-  இந்தியாவில் 160 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த தந்தி சேவை நேற்றுடன் ( 14.7.2013 ) முடிவுக்கு வந்தது.  இறுதி நாளில் பலர் ஆர்வமுடன் தந்தி அனுப்ப வந்தனர்.
     இந்தியாவில் தந்தி சேவை 1850 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாக் தொடங்கப்பட்டது.  கோல்கத்தாவில் இருந்து டைமண்ட்  துறைமுகத்துக்கும்  கிழக்கு இந்திய கம்பெனிகளுக்கும் இடையே முதல் தந்தி சேவை அளிக்கப்பட்டது.  1853ம் ஆண்டு நாடு முழுவதும் 64 ஆயிரம் கி.மீ, தூரத்துக்கு தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.  தொடர்ந்து வெளி நாடுகளுக்கும் தந்தி சேவை அளிக்கும் வகையில் விவாக்கம் செய்யப்பட்டது.  தபாலைவிட வேகமாக வரும் என்பதால் தகவல் பரிமாற்றத்தில் தந்தி மிக முக்கிய இடத்தைப்பிடித்தது.  ஆரம்ப காலங்களில் விஞ்ஞானி ' மோர்ஸ் ' அறிமுகப்படுத்திய கருவி மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டன.
     நம் நாட்டில் தொடக்க காலத்தில் தபால்துறை தந்தி சேவையை நடத்திவந்தது.  1986ம் ஆண்டு முதல் தந்தி சேவையை பிஎஸ்என்எல் நிர்வகித்து வருகிறது.
     ஆயினும் மக்களிடம் வரவேற்பு இல்லாதது, நஷ்டத்தை சந்திப்பதாகக் கூறி தந்தி சேவையை நாடு முழுவதும் ஜூலை 14 ம் தேதியுடன் நிறுத்த பிஎஸ்என்எல் அறிவித்தது.  அதன்படி தந்தி சேவை முடிவுக்கு வந்ததால், இதுவரை தந்தி சேவையை பயன்படுத்தாதவர்களும் தந்தி அலுவலகங்களுக்கு சென்று தங்கள் உறவினர்கலுக்கும், நண்பர்களுக்கும் தந்தி அனுப்பி மகிழ்ந்தனர்.
-- தினமலர். 15 . 7 . 2013.  

Monday, October 20, 2014

வலிமையான ஆயுதம்!

 " உலகில் வலிமையான ஆயுதம் எது?"
" ' ஜனசக்தி ' இதழ் தாங்கி வரும் வரிகள் இவை:
  ' தொட்டுப் பார்த்தால் காகிதம்.
    தொடர்ந்தௌ படித்தால் ஆயுதம்' !"
-- சுரா.மாணிக்கம், கந்தர்வக்கோட்டை.

     " உயிர் கொடுப்பது மருத்துவர் சேவை... அறிவு கொடுப்பது ஆசிரியர் சேவை... இதில் எது உசத்தி?"
 " மருத்துவத் தொழில், ஒருவன் பிணமாகாமல் பார்த்துக்கொள்கிறது,
   ஆசிரியர் தொழில், ஒருவன் நடைபிணமாகாமல் பார்த்துக் கொள்கிறது!"
-- முத்தூஸ், தொண்டி.
-- நானே கேள்வி...நானே பதில்!  ஆனந்த விகடன், 17. 7.2013 .

Sunday, October 19, 2014

ஆறு அபிஷேகங்கள் !

அபிஷேகப் பிரியருக்கு ஆறே அபிஷேகம்!
     கோயில்களில் தினந்தோறும் நடைபெறுவன நித்திய பூஜைகள்,  சிறப்பு விழாக்கள் நைமித்திய பூஜைகள் எனப்படும்.
     பழமையான வழிபாட்டுச் சிறப்புப் பெற்ற கோயில்களில் தினந்தோறும் ஆறு கால பூஜைகள் நடக்கும்.  இவை, முதல்காலம் ( காலை 6 மணி ), காலசந்தி ( காலை 9 மணி ), உச்சிக்காலம் ( 12 மணி ), சாயரட்சை ( மாலை  6 மணி ) , உபசந்தி ( இரவு 8 மனி ) , அர்த்தஜாமம் ( இரவு 9 மனி ) என்பன.
     சிவபெருமானை அபிஷேகப்பிரியர் என்பர்.  எனினும் நடராஜர் திருமேனிக்கு ஓர் ஆண்டில் ஆறே ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடக்கும்.  மற்ற நாட்களில் அபிஷேகம் செய்வதில்லை.  ஆறு அபிஷேக காலங்களூம் தினசரி நடக்கும் ஆறு காலங்களுடன் தொடர்புடையவையே ஆகும்.
முதல் காலம்:
     தேவர்களுக்கு விடியற்காலம் மார்கழி மாதம்.  தட்சிணாயண நிறைவு மாதமான மார்கழி மாதம், திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நடைபெறும்.  பின்னிரவு 3 மனிக்கு அபிஷேகம் கொள்வார்.  பிராத ( முதல் ) காலம் எனப்படும்.  நிதிய பூஜைக்குச் சமமானது இது. ஆறு ஆதார பூஜைகளில் இது மூலாதார பூஜை எனப்படும்.
இரண்டாம் காலம்:
      மாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசி ( 14வது ) திதி அன்று இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆதாரங்களில் சுவாதிஷ்டான பூஜை.
உச்சிக்காலம்:
      சித்திரை மாதம் திருவோண நட்சத்திர நாளில் நிகழும். இதனை மனிபூரக பூஜை எனலாம்.
சாயுங்கால பூஜை:
      ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள் இரவில் நடைபெறும்.  ஆனித் திருமஞ்சனம் சாயுங்கால பூஜை.  இது சந்தியாகாலம்.  இது அநாகத பூஜையாகும்.
உபசந்தி காலம்:
      ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்திசி நாள் இரவு 7 மணியளவில் நடைபெறும்.  உபசந்திகால விசுத்தி பூஜையாகும்.
அர்த்தசாமம்:
      புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி இரவு 7 மணி அளவில் நடைபெறும்.  ஆக்ஞா பூஜையான அர்த்த சாம பூஜை எனலாம்.
-- தினமலர். பக்திமலர். ஜூலை 11, 2013. 

Saturday, October 18, 2014

விசித்திர கிரகம்!

கண்ணாடி மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம்!
     வாஷிங்டன்:  2005ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட  ' கண்னாடி ' மழை பொழியும் விசித்திர கிரகத்தின் நிறம் நீலம் என, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
     பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விசித்திர கிரகம் 2005 அக்டோபர் 6ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.  அதற்கு, ' எச்டி 189733பி என்று பெயரிடப்பட்டது.  ஒரு நொடிக்கு 152.5 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் இந்த கிரகம், ஒரு நட்சத்திரத்தை 2.2 பூமி நாட்களில் சுற்றி சுழன்று வருகிறது.  வாயு கிரகமான இதன் வளிமண்டல வெப்பநிலை, ஆயிரம் டிகிரி செல்சியஸை விட அதிகம்.
     இந்த கிரகம் நீல நிறத்தில் இருப்பது, இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நாசா மற்றும் ஈஎல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திர மண்டலங்களைச் சேர்ந்த 723 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதில் ஒன்றான எச்டி 189733பி கிரகத்தின் நிறம் நீலம் என இப்போது கண்டறியப்பட்டுள்ளது.  விண்வெளியிலிருந்து நமது பூமியைப் பார்த்தால், நீல நிறக் கோளமாகக் காட்சியளிக்கும்.  இதற்கு, பூமியில் உள்ள கடல்களால் ஏற்படும் ஒளி பிரதிபலிப்புகள் காரணம்.
     எச்டி 189733பி கிரகமும் நீல நிறத்தில் ஒளிர்கிறது.  அது வாயு கிரகம் என்பதால், அதில் கடல்கள் கிடையாது.  அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து மணிக்கு 7 ஆயிரம் கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.  அதன் ஊடாக கண்ணாடி ( சிலிக்கேட் )  மழையும் பொழிந்து கொண்டிருக்கிறது.  கண்ணாடி துகள்களால் ஏற்படும் பிரதிபலிப்புகள்தான், இந்த கிரகத்துக்கு நீல நிறத்தை அளித்துள்ளன.  ஒரு வெளி கிரகத்தின் உண்மையான நிறம் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
-- தினமலர். 13.7.2013.  

Friday, October 17, 2014

உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம்!

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் என்ன வேறுபாடு?
     உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்க முடியும்.  ஆனால், உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் மட்டும்தான் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியும்.  தவிர இரு மாநிலங்களுக்கு நடுவிலோ, இந்திய அரசுக்கும் ஒரு மாநிலத்துக்கும் இடையிலோ பிரச்சனைகள் உண்டானால், அதைத் தீர்க்கும் அதிகாரம்  உச்சநீதிமன்றத்திற்குத்தான் உண்டு.  அடிப்படை உரிமைகளைக் காப்பதில்   உச்சநீதிமன்றம் தானாகவே ஆணையிடலாம்.
     சிவில் வழக்காக இருந்தாலும், கிரிமினல் வழக்காக இருந்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கேள்விகள் எழ்ந்தால்,
 உச்சநீதிமன்றம் தலையிடலாம்!
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013. 

Thursday, October 16, 2014

பெரிய கிரகம்...

பெரிய கிரகம்...குறைந்த அடர்த்தி !
     சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் என்ற பெருமையைப் பெற்றது வியாழன்.  ரோமானிய ஆட்சி கடவுளான  ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
     சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியும் கிரகம்.  வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகம்.  இதன் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
     இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது.  இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால்தான் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது.  ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால், பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.
     கடந்த 1995 ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய கலீலியோ விண்கலத்தில் இருந்த சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது.
---தினமலர் சிறுவர்மலர். ஜூலை 12, 2013.

Wednesday, October 15, 2014

லிப்ஸ்டிக் வேண்டாம்!

 சாதாரணமாக லிப்ஸ்டிக்கில் 9 வகையான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றது.  மனித உடல் சராசரியாக ஏற்றுக்கொள்ளும் அளவை விட 20 சதவிகிதம் அதிகமான அலுமினியம், காட்மியம், ஈயம், மாங்கனீஸ், குடல் புற்றுநோய்க்கு காரணமான குரோமியம் உட்பட பல உலோகங்கள் சேர்க்கப்படுகிறது. மேலும், நீண்ட நாட்கள் நீடிக்கும் வகையில் இதில் சிந்தெட்டிக் ரசாயனம் கலக்கப்படுவதால், இது பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.
     முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை அறவே தவிர்த்தல் நல்லது.  ஏனெனில் இதில் உள்ள ஈயம் மற்றும் பல்வகை ரசாயனங்கள் கர்ப்பப்பையை பாதிப்பதுடன் குழந்தையின் உறுப்புகளையும் சேர்த்து பாதிக்கும்.
      மேலும், உடலுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் டிரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படுகிறது.  இது மூளையில் இருந்து தகவல்களை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை கட்டுப்ப்படுத்தி, உடலின் உள்ளே சென்ற 20 நிமிடத்திலேயே இதய செயல்பாடுகளை படிப்படியாக குறைத்துவிடுகிறது.  இதனால் மாரடைப்பு, படபடப்பு ஏற்பட்டு உடல் உள் உறுப்புகளை செயலிழக்க வைக்கிறது.  லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எச்சரிக்கிறது ஒரு ஆய்வு.
-- ரா.உ. இந்துமதி,  தினமலர். பெண்கள்மலர். 6 . 7 . 2013.