Thursday, March 19, 2015

லிங்க வழிபாடு..

  சைவ  ஆகம  சாஸ்திரங்களில்  லிங்க  வழிபாடு  மிகவும்  முக்கியமானது.  32  வகையான  புனிதமான  பொருட்களால்  லிங்கங்கள்  செய்யப்படுகின்றன.  அவை  செய்யப்படும்  பொருளுக்கேற்ப  அருள்  வழங்கும்  தன்மையவை  என்று  சாஸ்திரங்கள்  சொல்கின்றன.
      ஆனால்,  இந்த 32  வகையிலும்  சேராமல்  சுயம்புவாக  அதாவது  இயற்கையாக  கிடைக்கக்கூடியதுதான்  ஸ்படிக  லிங்கம்.  அதனால்  இது  மிகவும்  உயர்ந்த  ஸ்தானத்தில்  வைத்து  மதிக்கப்படுகிறது.  ஸ்படிகம்  சிவனின்  நெற்றியை  அலங்கரிக்கும்  சந்திரனிலிருந்து  விழுந்ததாக  கூறுவோரும்  உண்டு.
      ஸ்படிகம்  என்பது  ஒரு  வகை  கிரிஸ்டல்.  தூய்மையான  நிலையில்  கண்ணாடி  போலக்  காணப்படும்.  இது  மிகவும்  குளிர்ந்த  தன்மையது.அதனால்  இதன்  மணிகளை  மாலையாகக்  கோர்த்து  பெரியவர்கள்  அணிவதும்  உண்டு.  ஸ்படிகம்  இமய  மலையின்  அடி  ஆழத்திலும்,  விந்திய  மலை  மற்றும்  சங்ககிரி  மலையின்  சில  பகுதிகளிலும்  கிடைக்கும்.  இது  மிகவும்  விலைமதிப்புள்ளது.
--- ஸ்ரீஜா  வெங்கடேஷ்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31, 2012.

Wednesday, March 18, 2015

குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம்.

அதிக  நேரம்  ' டிவி '  பார்க்கும்  குழந்தைகளுக்கு  ரத்த  அழுத்தம்..
     ஆஸ்திரேலியாவின்  சிட்னி  நகர  பல்கலைக்கழக  பேராசிரியர்  பாமினி  கோபிநாத்.  இவர்  தலைமையிலான  ஆராய்ச்சி  குழுவினர்,  34  ஆரம்பப்  பள்ளிகளைச்  சேர்ந்த  1,492  குழந்தைகளிடம்  சோதனை  நடத்தினர்.  ஏழு  வயதுக்குட்பட்ட  குழந்தைகள்  தினமும்  இரண்டு  மணி  நேரம் ' டிவி '  பார்த்தால்  அவர்களுடைய  கண்ணுக்கு  பின்புறம்  உள்ள  ரத்தக்  குழாய்களின்  குறுக்களவு  குறைவதாக  கண்டறிந்தனர்.
     இதே  நிலை  நீடிக்கும்  பட்சத்தில்,  மாரடைப்பு  மற்றும்  ரத்த  அழுத்தம்  போன்ற  ஆபத்துகள்  விரைவில்  ஏற்பட  வழிவகுப்பதை  இவர்கள்  தங்கள்  ஆய்வில்  கண்டறிந்தனர்.  தினமும்  குழந்தைகள்  ' டிவி '  பார்க்கும்  நேரத்தை  குறைத்து  ஒரு  மணி  நேரம்  விளையாட  வேண்டும்.  எனவும்  பாமினி
கோபி நாத்  தெரிவித்தார்.
-- தினமலர்  சென்னை.  22 - 4 - 2011. 

Tuesday, March 17, 2015

தர்மமும் நீதியும்

 குருகுலவாசம்  முடிந்து  சீடர்கள்  கிளம்பும்போது  ' தர்மத்தைக்  காத்து  நீதி  வழி  நடந்திடுங்கள் '  என  குரு  ஆசியளித்தார்.  ' தர்மம்  வேறு;  நீதி  வேறா?'  என  சந்தேகம்  கொண்ட  சீடர்கள்,  குருவிடமே  விளக்கம்  கேட்டனர்.
     புன்னகைத்த  குரு,  ' நீதி  என்பது  இடத்திற்கும்,  சூழ்நிலைக்கும்  ஏற்ப  மாறும்.  உதாரணமாக  முன்  விரோதத்தால்  சண்டையிட்டு  ஒருவனைக்  கொல்வது  கொலை.  ஆனால்,  எதிரி  நாட்டின்  வீரர்களோடு  சண்டையிட்டுக்  கொல்வது  கொலையல்ல;  வீரம்!  இப்படி  நீதி  மாறக்கூடியது.  எனவே  அதைக்  காத்திட  முடியாது.  ஆனால்  தர்மம்  மாறாதது.  அதனைக்  காப்பாற்றுவது  அவசியம் !'  என  தெளிவுபடுத்தினார்.
     உணர்ந்த  சீடர்கள்  குருவை  வணங்கி  விடைபெற்றனர்.
-- ஜி.கே.சுந்தரமூர்த்தி,  கோபிசெட்டிபாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  அக்டோபர்  16 - 31.  2012. 

Monday, March 16, 2015

பொது அறிவு.

*  அமெரிக்க  அதிபர்  பாரக்  ஒபாமா,  இல்லினய்ஸ்  மாகாணத்தைஸ்  சேர்ந்தவர்.
*  இந்தியாவின்  முதல்  ராணுவ  அமைச்சர்,  என்.கோபாலசாமி  அய்யங்கார்.
*  இருதய  மாற்று  அறுவை  சிகிச்சையை  இந்தியாவில்  முதல்  முதலில்  மேற்கொண்டவர்,  டாக்டர்  வேணுகோபால்.
*  இந்தியாவின்  முதல்  பெண்  கவர்னர்,  சரோஜினி  நாயுடு.
*  எவரெஸ்ட்  சிகரம்  மீது  ஏறிய  முதல்  பெண்,  பச்சேந்திரி  பால்.
*  சண்டிகர்  நகரை  நிர்மாணித்தவர்,  லி  கொர்புசியர்.
*  இந்தியாவில்  முதல்  ஆங்கில  நாளிதழை  துவக்கியவர்,  ஜே.ஏ.ஹிக்கி.
*  நீண்ட  காலம்  முதல்வராக  இருந்தவர்,  ஜோதி  பாசு.
*  இந்தியாவுக்கு  வந்த  முதல்  அமெரிக்க  அதிபர்,  ஐசெஹோவர்.
*  மாநிலங்களில்,  முதல்  பெண்  அமைச்சர்  ராஜ்குமாரி  அம்ரித்  கவுர்.
-- தினமலர் .

Sunday, March 15, 2015

' எருது '

கேள்வி:  கோளறு  பதிகம்  9 -வது  பாட்டில்  ' பசுவேறும்  எங்கள்  பரமன் '  என்று  சிவபெருமானை  அடியார்  குறிப்பிட்டிருக்கின்றார்.  சிவபெருமானின்
              வாகனம்  'எருது'  என்றல்லவா  சொல்லக்  கேட்டிருக்கிறோம்?
பதில்:     பசு  என்ற  சொல்லுக்குக்  கட்டுப்பட்டது  என்பது  பொருள்.  பச்  என்ற  தாதுவிலிருந்து  பசு  என்ற  சொல்  வந்தது.  ஆகவே,  கட்டுப்பட்ட
             எருதுக்கும்  பசு  என்ற  பெயர்  உண்டு.  எருதும்  கட்டுப்பட்டதுதானே?  ஆனால்,  உலகப்  பெருவழக்கில்  பசு  என்பது  பெண்  இனத்தைக்
             குறிக்கின்றது.  ஆராய்ச்சிப்படி  பசு  என்பது  மாட்டின்  பொதுப்பெயராகும்.
             இராகவன்  என்ற  சொல்  இரகுவம்சத்தில்  வந்தவன்  என்ற  பொருளைத்  தரும்.  தசரதனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  இராமனும்
             இரகுவம்சத்தில்  வந்தவன்.  இலட்சுமணனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  பரதனும்  இரகுவம்சத்தில்  வந்தவன்.  சத்ருக்கனும்  இரகுவம்சத்தில்
             வந்தவன்.  ஆகவே,  எல்லாரும்  இராகவர்கள்தான்.  ஆனால்,  உலகப்  பெருவழக்கில்  இராமனை  மட்டும்  இராகவன்  என்று  கருதுகின்றார்கள்.
             பார்த்தன்  என்ற  சொல்லுக்குப்  பொருள்  பிரதையின்  மகன்  என்பதாகும்.  தருமனும்  பிரதையின்  மகன்தான்.  பீமனும்  பிரதையின்  மகன்தான்.
             அர்ஜுனனும்  பிரதையின்  மகன்.  ஆகவே,  தருமனும்  பார்த்தன்.  பீமனும்  பார்த்தன்.  அர்ஜுனனும்  பார்த்தன்.  ஆனால்,  உலகப்
            பெருவழக்கில்  அர்ஜுனனையே  பார்த்தன்  என்று  குறிப்பிடுகின்றார்கள்.
            இந்த  நியதிப்படி  பசு  என்பது  எருதையும்   குறிக்கும்  என்று  உணர்க.
----' குமுதம்  வினா - விடை '  நூலில்  திருமுருக  கிருபானந்தவாரியார்  சுவாமிகள்.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர். 

Saturday, March 14, 2015

வெள்ளை நிற ஆடை.

கேள்வி: " எல்லா  சிவாலயங்களிலும்  இரவு  அர்த்தஜாமத்தில்  மற்ற  நிறப்  புடவையிருந்தும்,  ஏன்  வெள்ளை  நிறப்  புடவையைச்  சாத்துகின்றார்கள்?"
பதில்: " கருமை  நிறம் -- தாமச  குணத்தைக்  காட்டுவது.  செம்மை  நிறம் -- இராஜச  குணத்தைக்  காட்டுவது.  வெண்மை  நிறம் -- சத்துவ  குணத்தைக்  காட்டுவது.  இரவிலே  எல்லா  உயிகளும்  சாந்தமாக  இருக்க  வேண்டும்.  அதனால்தான்  அர்த்த  ஜாமத்தில்  அம்பிகைக்கு  வெள்ளைப்  புடவையைச்  சாத்துகிறார்கள்.  இதே  காரணம்தான்  சரஸ்வதி  தேவி  வெள்ளைக்  கலையுடுத்துவதற்கும்.  ' வெள்ளைக்கில்லை  கள்ளச்  சிந்தை'."

கேள்வி: " சாந்திராயண  விரதம்  யாது?"
பதில்:  " பூர்ணிமை  தொடங்கி  அமாவாசை  வரை  ஒவ்வொரு  பிடி  அன்னங்  குறைத்தும்.  அமாவாசை  தொடங்கி  பூர்ணிமை  வரை  ஒவ்வொரு  பிடி  அன்னம்  அதிகப்படுத்தியும்  புசித்து  அநுஷ்டிக்கப்படும்  பிராயசித்த விரதம்.  சாந்திராயணம்!  திருவிளையாடற்  புராணம் தலவிசேடப்  படலத்தில்  கூறப்பட்டுள்ளது.
--' குமுதம்  வினா - விடை '  நூலில்  திருமுருக  கிருபானந்தவாரியார்  சுவாமிகள்.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர். 

Friday, March 13, 2015

குளோனிங் செயல் முறை.

 குளோனிங்கிற்கு  ஒருவரது  திசு  உயிரணுவே  போதுமானது.  ஆணின்  விந்து  அவசியம்  என்பதில்லை.  ஒரு  பெண்ணின்  உயிரணுவிலிருந்து  கூட  இப்படி  குளோனிங்  குழந்தையை  உருவாக்கலாம்.  அதாவது  எந்த  விதத்திலும்  ஆணின்  தொடர்பு  இல்லாமல்  ஒரு  குழந்தை.
       நம்  உடலில்  உள்ள  சில  குறிப்பிட்ட  திசுக்கள்  அழிந்து  போனால்  அவற்றை  உயிப்பிக்க  முடியாது.  பிறரது  திசுக்களை  அங்கு  பொருத்தினால்  அதை  உடல்  ஏற்றுக்கொள்ள  வாய்ப்பு  மிகக்குறைவு.  மாறாக  நம்  உடலிலிருந்தே  ஒரு  பகுதித்  திசுக்களை  அங்கு  பதிய  வைத்தால்  ஏற்றுக்  கொள்ளும்  வாய்ப்பு  அதிகம்.  மூளை,  சிறுநீரகம்  போன்ற  பகுதிகளில்  உள்ள  திசுக்களில்  பாதிப்பு  என்றால்  பிற  பகுதியில்  திசுக்களை  வெற்றிகரமாக  இங்கு  பொருத்தமுடியாது.  அதற்குத்தான்  குளோனிங்  முறையில்  உருவான  கரு  உதவுகிறது.
      குளோனிங்கிற்கு  ஆகும்  செலவு  மிக  மிக  அதிகம்.  நடுத்தர  மக்களுக்கு  அது  எட்டாக்கனிதான்.  நூறு  சதவீதம்  குறைபாடே  இல்லாத  குழந்தையை  உருவாக்கமுடியாது.  குளோன்  செய்யப்பட்ட  குழந்தையின்  நோய்  எதிர்ப்பு  சக்தி  மிகக்  குறைவாக  இருக்க  வாய்ப்பு  உண்டு.
---அறிவியல்  தகவல்கள் , தினமலர்  இணைப்பு,  17  ஜூன், 2012.