Sunday, June 7, 2015

கோயில் செய்திகள்.

ஆனந்தம்  தரும்  அபிஷேகங்கள்!
*  கேரளாவில்  உள்ள  கொடுங்கலூரில்,  பகவதி  அம்மனுக்கு  பால்,  தயிர்  போன்ற  அபிஷேகங்களுடன்  தவிடும்  அபிஷேகம்  செய்யப்படுகிறது.
*  தஞ்சை  மாவட்டம்  திரும்புறம்பியம்  தலத்திலுள்ள  பிரளயம்  காத்த  விநாயகருக்கு  சதுர்த்தி  அன்று  மட்டும்  ஒரு  குடம்  தேன்  அபிஷேகம்
   செய்யப்படுகிறது.  மற்ற  நாட்களில்  அபிஷேகம்  கிடையாது.
*  திருவலஞ்சுழியிலுள்ள  விநாயகர்  கடல்  நுரையால்  செய்யப்பட்டவர்.  ஆதலால்  அவருக்கு  பச்சைக்கற்பூரம்  தூவுவதைத்  தவிர  வேறு  அபிஷேகம்
   கிடையாது.
*  திருக்குற்றாலம்  குற்றாலநாதருக்கு  மூலிகை  வேர்கள்,  மருந்துச்  சரக்குகள்  ஆகியவற்றை  அரைத்துக்  காய்ச்சப்படும்  தைலம்  அபிஷேகம்
   செய்யப்படுகிறது. பிறகு  இந்தத்  தைலம்  பிரசாதமாகத்  தரப்படுகிறது.
*  திருவாரூர்  மாவட்டம்  பொன்னிறை  என்னும்  ஊரில்  உள்ள  அகஸ்தீஸ்வரருக்கு  ஆண்டுதோறும்  பங்குனி  உத்திரத்தன்று  நெல்லிப்பொடி  அபிஷேகம்
   செய்யப்படுகிறது.
*  சென்னை  குரோம்பேட்டை  கணபதிபுரத்தில்  உள்ள  செங்கச்சேரி  அம்மன்  ஆலயத்தில்  பௌர்ணமியன்று  மருதாணி  இலை  அபிஷேகம்
   நடைபெறுகிறது. பின்னர்  அந்த  இலை  கன்னிப்  பெண்களுக்கு  பிரசாதமாக  வழங்கப்படுகிறது.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.

Saturday, June 6, 2015

பகவானும் பழைய சாதமும்!

    பழையது  விடிய  விடிய  ஜலத்திலேயே  கிடக்கிறது.  பகவான்  எப்போதும்  கடலிலேயே  படுத்திருக்கிறார்.  பழையதைப்  போலவே  பகவானும்  நாரம்  அதாவது  தண்ணீர்  சூழ  இருப்பவர்.  அதனால்தான்  அவருக்கு  நாராயணன்  என்றே  பெயர்.  பழையதை  காலையில்  சாப்பிட  வேண்டும்.  பகவானையும்  காலையிலேயே  கும்பிட  வேண்டும்.  பழையதை  சாப்பிட்டால்  உடலுக்கு  குளிர்ச்சி  ஏற்படும்.  நாராயணனை  சேவித்தால்  மனசுக்கு  குளிர்ச்சி  கிடைக்கும்.  அதனால்  பகவானும்  பழையதும்  அப்படின்னு  சொல்ற  வழக்கம்  ஏற்பட்டது.
-- உபன்யாசம்  ஒன்றில்  கேட்டவர்:  ஆர்.கண்ணன்,  சென்னை. 33.
--   குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

Friday, June 5, 2015

டிப்ஸ்...டிப்ஸ்...!

*  சூரிய  உதயத்துக்கு  முன்பு  வாசலில்  கோலம்  போடுவது  நல்லது.
*  வெறும்  தண்ணீரை  தெளிக்கக்கூடாது.  ( மண்  தரை  இல்லாத  இடத்தில் )  சிறிது  மஞ்சள்  தூள்  கலந்த  நீரையோ,  சாணத்தையோ  கலந்து  தெளிக்க
   வேண்டும்.
*  மாக்கோலம்  போடும்  போது,  மைதா  மாவு  கலந்து  போட்டால்  சிறிது  நாட்களுக்கு  அழியாமல்,  அழகாக  இருக்கும்.
*  அரைத்த  மாவில்  கோலம்  போட்டால்  ஈரம்  காயும்  முன்  செம்மண்  பூச  வேண்டும்.
*  கிழமை  கோலங்கள்  மற்றும் பிரார்த்தனை  கோலங்களை  பூஜை  அறையில்  பலகை  அல்லது  கல்லில்  அரிசி  மாவில்தான்  போடவேண்டும்.
*  வண்ணக்கோலங்கள்  போடும்  போது  சலித்த  நைஸ்  மணலுடனோ,  கோல  மாவுடனோ  கலந்து  போட்டால்  காற்றில்  பறக்காமல்  இருக்கும்.
*  கோல  மாவு  வாங்கும்  போது  சற்று  வெளுப்பு  அதிகமாக  இருக்கும்.  மாவு  வாங்கி  சலித்து  1/4  படி  மாவிற்கு  100  கிராம்  பச்சரிசி  மாவு  கலந்து
   போட்டால்  நன்றாக  இருக்கும்.  இந்த  மாவை  கோலக்குழாயில்  போட்டால்  துளைகள்  அடைபடாது.
_    தினமலர், கோல மலர்.  12.12.12.  

Thursday, June 4, 2015

விஷ்ணு விசேஷச் செய்திகள்.

*  நாகர்கோவிலில்  இருந்து  திருவனந்தபுரம்  போகிற  வழியில்  உள்ள திருவட்டாறு  ஆதிகேசவப்  பெருமாள்  கோயிலில்  அல்லாவுக்கு  பூஜை  நடக்கிறது.
*  திருநெல்வேலி  நெல்லையப்பர்  கோயிலில்  உள்ள  பெருமாளின்  உற்சவத்  திருமேனியின்  மார்பில்  சிவலிங்க  அடையாளம்  உள்ளது.
*  திருக்கண்ணபுரத்தில்  கண்ணபுரத்தான்  பத்மாசனத்தில்  ஸ்ரீதேவி,  பூதேவி,  பத்மினி,  ஆண்டாள்  என  நான்கு  தேவியருடன்  சங்கு  சக்கரம்  தாங்கிக்
   காட்சியளிக்கிறார்.
*  ஆசியாவிலேயே  மிகப்பெரிய  பள்ளிகொண்ட  பெருமாள்  உள்ள  தலம்  திருமயம்.  ஒரே  மலையைக்  குடைந்து  அமைத்த  சிவன் - திருமால்  கோயில்
   இதுமடும்தான்.
*  திருச்சி  முசிறி  சாலையில்  உள்ள  வேதநாராயணன்  கோயிலில்  பெருமாள்  அனைத்து  வேதங்களையும்  தலையணையாக  வைத்துப்  படுத்திருக்கிறார்.
   இதனால்  அவருக்கு  வேதநாராயணன்  என்று  பெயர்.
*  கர்நாடகத்தில்  உள்ள  ஸ்ரீரங்கப்பட்டினத்தில்  உள்ள  ரங்கநாதர்  எழுந்தருளியுள்ள  ஆதிசேஷனுக்கு  ஏழு  தலைகள்  இருப்பது  வித்தியாசமானது.
*  திருமலை,  தான்தோன்றிமலை,  உப்பிலியப்பன்  கோயில்,  குணசீலம்  ஆகிய  நான்கு  பெருமாள்  கோயில்களிலும்  தாயாருக்கு  சன்னதி  இல்லை.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

Wednesday, June 3, 2015

விசேஷ நாட்களில் கோலம்.

  விசேஷ  நாட்களில்  அரிசி  மாவால்  கோலம்  போட  ஒவ்வொரு  முறையும்  அரிசியை  நீரில்  ஊறவைத்து  அரைக்க  தேவையில்லை.
     தேவையான  அளவு  அரிசியை  ஊறவைத்து,  அதிகம்  தண்ணீர்  விடாமல்  கெட்டியாக  அரைத்து,  சிறுசிறு  வில்லைகளாக  தட்டி  வெயிலில்  நன்கு  காயவைத்து  எடுத்து  பத்திரப்படுத்தி  கொண்டால்,  எப்போது  தேவையோ  அப்போது  கரைத்து  கோலமிடலாம்.   ரெடிமேட்  கோலமாவாக  உபயோகப்படுத்தலாம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012. 

Tuesday, June 2, 2015

சிவன் சிறப்புச் செய்திகள்.

*  நீடூரில்  ஒரு  நண்டு  சிவபெருமானை  வணங்கியதால்  சிவலிங்கத்தின்  உச்சியில்  நண்டு  வளை  உள்ளது.  இங்கு  சுவாமியின்  பெயர்  அருட்சோமநாதர்.
*  தலைச்சங்காட்டில்  திருமால்  சிவபெருமானை  வழிபட்டு  பாஞ்சஜன்ய  சங்கைப்  பெற்றதால்,  அங்கு  சங்கு  வடிவில்  மூலவராகக்  காட்சியளிக்கிறார்
   ஈசன்.  இறைவனுடைய  பெயர்  சங்கராண்யேஸ்வரர்.
*  அமர்நாத்தில்  உள்ள  பனிலிங்கம்  சந்திரனைப்போலவே  15  நாளில்  வளர்ந்து  பௌர்ணமியில்  முழுலிங்கமாகவும்,  அடுத்த  15  நாளில்  தேய்ந்து
   அமாவாசையில்  மறைவதும்  சிறப்பம்சம்.
*  செம்பனார்கோயிலில்  உள்ள  சிவபெருமான்  சொர்ணபுரீஸ்வரர்  என்ற  பெயருடன்  32  இதழ்களை  உடைய  தாமரை  வடிவ  ஆவுடையாரில்  சுயம்பு
   லிங்கமாக  எழுந்தருளியிருக்கிறார்.    
*  காஞ்சிபுரத்தில்  உள்ள  கைலாசநாதர்  ஆலயத்தில்  சிவன்  எட்டு  கைகளுடன்  சிற்பமாகக்  காட்சியளிக்கிறார்.
*  மகாராஷ்டிரா  மாநிலம்  எல்லோரா  குகைகளுக்கு  அடுத்து  உள்ள  ' குஸ்மேசம்'  என்னும்  ஊரில்  உள்ள  சிவலிங்கம்  குங்குமத்தால்  ஆனது.
*  பொதுவாக  பெருமாள்  கோயிலில்தான்  சடாரி  வைப்பார்கள்.  ஆனால்,  மூன்று  கோயில்களில்  மட்டும்  சடாரி  வைக்கப்படுகிறது.  அவை
   காஞ்சிபுரத்தில்  உள்ள  ஏகாம்பரேஸ்வரர்  கோயில்,  காளஹஸ்தி  கோயில்  மற்றும்  சுருட்டப்பள்ளி  சிவன்  கோயில்  ஆகும்.
*  திருவக்கரை  வக்கிரகாளியம்மன்  கோயிலில்  உள்ள  சிவபெருமானது  பெயர்  சந்திரமௌலீஸ்வரர்.  அவர்  மும்முக  லிங்கமாக  தரிசனம்  அளிக்கிறார்.
   அதில்  கிழக்கு  முகம்  தத்புருஷ  லிங்கம்  என்றும்,  வடக்கு  முகம்  வாமதேவ  முகமாகவும்,  தெற்கு  முகம்  அகோர  மூர்த்தியாகவும்  வணங்கப்படுகிறார்.
*  ஐந்துமுகம்  கொண்ட  சிவன்,  ஏழு  தலங்களில்  அருள்புரிகிறார்.  1.காசி,  2.நேபாளம்,  3.காளஹஸ்தி,  4.திருவானைக்காவல்,  5.சித்தேஸ்வர்  மகாதேவ்,
   6.ராசிபுரம்,  7.காஞ்சி  கைலாசநாதர்  கோயில்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்,  டிசம்பர்  1 - 15 , 2012.  

Monday, June 1, 2015

இப்படியும் போடலாம் கோலம்.

*  அரிசி  மாவில்  தண்ணீர்  சற்று  அதிகமாகி  விட்டதா,  கவலை  வேண்டாம்.  சிறிதளவு  மைதா  மாவினை  கலந்து  இழுங்கள்,  கோலம்  அழகாக  வரும்.
*  அரிசி  மாவில்,  சாதம்  வடித்த  கஞ்சியினை  கொஞ்சம்  கலந்து  கோலம்  இழுத்துப்  பாருங்களேன்,  இந்தக்  கோலம்  2  நாட்கள்  கூடுதலாகவே
   இருக்கும்.  சட்டென்று  உதிராது.
*  பச்சரிசியை  ஊறவைத்து,  கோலம்  போட  நேரமில்லையா.  இதோ,  இன்ஸ்டன்ட்  மாவு. உலர்ந்த  பச்சரிசி  மாவுடன்  குளிர்ந்த  நீரை  கொஞ்சம்  ஊற்றி
   10  நிமிடம்  ஊற  வையுங்கள்,  கோலமாவு  உடனே  ரெடி.
*  பால்  பிழிந்த  தேங்காய்  பூவுடன்  வண்ணங்களைக்  கலந்து  கோலம்  போட்டால்,  கோலம்  மிகவும்  அழகாக  இருக்கும். இதை  நன்கு  காயவைத்து
   பின்பு  போடவும்.
*  கலர்  மெழுகுவர்த்திகளை  ஏற்றி,  ஓர்  பாத்திரத்தில்  தண்ணீர்  வைத்து  அதில்  மெழுகுவர்த்திகளை  காண்பித்தால்  உருகும்  மெழுகு  தண்னீரில்
   விழுந்த  மணிகளாக  வரும்.  இந்த  வண்ண  மணிகளை  வைத்து  ரங்கோலி  செய்யலாம்.  ஆரத்தி  தட்டுகளில்  கோலமாக  ஒட்டலாம்.
-- பி.பத்மாவதி பெருமாள்,  காரைக்கால்.
--   தினமலர், கோல மலர்.  12.12.12.