Tuesday, October 6, 2015

ஆதார் அட்டை.

  அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு அதிகாரபூர்வ எண் உண்டு.  இதன் மூலம் ஒவ்வொருவர் சம்பந்தப்பட்ட அத்தனை முக்கிய தகவல்களையும் அரசினால் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்க முடியும். அவரைப் பற்றிய பொருளாதாரப் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டாலோ அல்லது அவரது குற்றப்பின்னணி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றாலோ, ஒரு நொடியில் அறிந்து கொள்ளலாம்.
     இதுபோன்ற ஒரு எண் கொண்டதுதான் ஆதார் அட்டை.  உலகில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை இந்த எண்ணைக் கொண்டு சரிபார்க்க முடியும்.  இதை ஏற்கத்தக்க அடையாளமாகப் பயன்படுத்த முடியும்.  வங்கிக் கணக்கு தொடங்க, பயணச் சீட்டுகளை ஆன்லைனில் வாங்கிக் கொள்ள, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இப்படி பல விதங்களில் ஆதார் எண்ணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
-- குட்டீஸ் சந்தேக மேடை ?!  . ஜி.எஸ் .எஸ்.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014.  

Monday, October 5, 2015

ஒரே விசா


வளைகுடா நாடுகளுக்கு விரைவில் ஒரே விசா.
     வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் ( ஜி.சி.சி) உள்ள நாடுகளுக்கு ஒரே விசாவில் சுற்றுப் பயணம் செய்ய அனுமதிக்கும் முறை விரைவில் அமலாக உள்ளது.  இந்த கவுன்சிலில் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  இதன்மூலம் அந்த நாடுகளுக்கு ஒரே விசாவில் செல்லலாம்.
-- பி.டி.ஐ.
--   ' தி இந்து ' நாளிதழ். வியாழன், டிசம்பர் 26 2013.                                      

பிளாஸ்டிக் அரிசி

  (  சிறப்பு  )
     பிளாஸ்டிக்  அரிசி  குறித்த  பீதி  பல  தரப்பினரிடமும்  அதிகரித்துள்ளது.  தாவரத்தில்  இருந்து  விளையக்கூடிய  ஒரு  தானியத்தை,  இயந்திரங்களின்  உதவி  மூலம்  செயற்கையாக  உற்பத்தி  செய்யும்  இந்த  புதிய  முறை  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
எது பிளாஸ்டிக்  அரிசி?
     உண்மையில்  பிளாஸ்டிக்  அரிசி  என்பது  பிளாஸ்டிக்கில்  செய்யப்படுவதில்லை.  உருளைக்கிழங்கு  மற்றும்  சர்க்கரைவள்ளிக்  கிழங்குடன்  செயற்கைப்  பிசினைக்  கலந்து, பிளாஸ்டிக்  அரிசி  செய்யப்படுவதாகச்  சொல்லப்படுகிறது.  ஏற்கனவே  தங்கள்  நாட்டு  உயர்ந்த  அரிசி  வகையிலேயே  போலியைத்  தயாரித்து  விற்பனை  செய்த  சீனா, தற்போது  முழுக்க  முழுக்க  செயற்கை  அரிசியைத்  தயாரிக்க  ஆரம்பித்துவிட்டது.
எப்படிக்  கண்டுபிடிப்பது?
     பிளாஸ்டிக்  அரிசி  தனியாக  விற்பனை  செய்யப்படுவதில்லை.  இவை  அரிசியுடன்  கலக்கப்பட்டே  விற்பனைக்கு  வருகின்றன.  தவிர, சமைத்தால்  மட்டுமே  அரிசியில் பிளாஸ்டிக்  அரிசி  கலப்படம்  செய்யப்பட்டிருப்பதைக்  கண்டுபிடிக்க  முடியும்.  சமைத்த  பிறகு  பிளாஸ்டிக்  அரிசி  முழுவதும்  வேகாமல்  முரட்டுத்தன்மையுடன்  இருக்கும்.  பொதுவாக  அரிசியை  வேகவைத்தால்  அதிலிருக்கும்  ஸ்டார்ச்,  மேலே  படலமாகப்  படியும்.  பிளாஸ்டிக்  அரிசி  வேகும்போது  கண்ணாடி  போன்ற  படலம்  வரும்.  இதை  வெயிலில்  காயவைத்தால்  மெல்லிய  பிளாஸ்டிக்  ஷீட்  போல  மாறிவிடும். பிளாஸ்டிக்  அரிசியை  நெருப்பில்  காட்டினால்  சர்க்கரைவள்ளிக்  கிழங்கின்  மணம்  வெளிப்படும்.
     சர்க்கரையில்  கலந்திருக்கும்  ரவையையும்,  மிளகுடன்  கலக்கப்பட்டிருக்கும்  பப்பாளி  விதையையும்  நம்மால்  கண்டுபிடித்துவிடுகிற  மாதிரி பிளாஸ்டிக்  அரிசியை  எளிதில்  அடையாளம்  காணமுடியாது.  இதற்கென  இருக்கும்  ஆய்வகங்களின்  துணையோடு  மட்டுமே  இந்த  ரசாயன  அரிசியை, திட்டவட்டமாக  இனம்  காணமுடியும்.
என்னென்ன  பாதிப்பு?
      பிளாஸ்டிக்  அரிசி  எளிதில்  ஜீரணமாகாது.  தொடர்ந்து பிளாஸ்டிக்  அரிசியை  சாப்பிட்டுவந்தால்,  பிளாஸ்டிக்  பைகளை  உட்கொள்வதற்குஸ்  சமமான  பாதிப்புகள்  ஏற்படலாம்.  குடலியக்கச்  செயல்பாடு  சார்ந்த  பிரச்னைகளில்  தொடங்கி  மரணம்  வரை  இது  இட்டுச்செல்லும்  ஆபத்து  இருக்கிறது.
     "அரிசியில்  இருக்கிற  கார்போஹைட்ரேட்டுக்கு  இணையாக  ரசாயனம்  மூலம்  அரிசி  தயாரிப்பது  எந்த  வகையில்                                நியாயம்"
-- பிருந்தா  சீனிவாசன்.  ( நலம்  வாழ ). இணைப்பு .
--  'தி இந்து' நாளிதழ். சனி,  ஜூலை, 18, 2015. 

Sunday, October 4, 2015

அப்படியா!

*  சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
*  இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
*  வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டைய்டும்.
*  மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை.  இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.
*  ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
*  கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
*  இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
*  சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014. 

Saturday, October 3, 2015

' செக்ஸ் '

*  2013 -ம் ஆண்டு இனையத்தில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம்!  இந்தியா இரண்டாம் இடம் பிடிக்க,  கிழக்கு தைமூர், எத்தியோப்பியா, வங்காளதேசம்... ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.  இந்த டாப்-10 பட்டியலில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் எதற்கும் இடம் இல்லை என்பதுதான் ஹைலைட் !  -- அந்த நாடுகள்ல ' அதுக்கு ' வேற வார்த்தை!
*  பறவைகள் தற்கொலையாலேயே பிரபலம் அடைந்திருக்கிறது அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கிராமம்.  ஒவ்வொரு வருடமும் இந்தக் கிராமத்துக்கு இடம்பெயர்ந்துவரும் ஆயிரக்கணக்கான பறவைகள், அங்கேயே இறந்துவிடுகின்றன.  இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது என பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது சுற்றுச் சூழல் ஆய்வகம்.  செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை பறவைகள் இறப்பு சதவிகிதம் அதிகரிக்க, கிராம மக்கள் பயன்படுத்தும் விளக்கு வெளிச்சம்தான் காரணம்.  அங்கு மட்டும் பூமியின் காந்த சக்தி அதிகமாக உள்ளது என ஆளூக்கொரு காரணம் சொன்னாலும், இன்னமும் அழுத்தமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.  --  பறவைகளைக் காப்பாத்துங்க ப்ளீஸ்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 8-1-2014.  

Friday, October 2, 2015

நிகழ்ந்ததும் நிகழாததும்

 கன்னட பக்தி இலக்கியத்தில் தவிர்க்கவியலாத பெயர் அக்கா மகாதேவி.  12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அக்கா மகாதேவி, சைவ பக்தி மரபில் வந்தவர்.  சிவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு கவிதைகள் புனைந்தவர்.  மனிதக் காதலை நிராகரித்து தீராக்காதலோடு இறைவனைக் கண்டடைய முனைபவை அவரதது கவிதைகள்.
அது லிங்கம் என்று நான்
சொல்லவில்லை
அது லிங்கத்துடனான
இணைதல் என்று நான்
சொல்லவில்லை
அது ஒற்றுமை என்று
சொல்லவில்லை
அது இசைவு என்று
சொல்லவில்லை
அது நிகழ்ந்துவிட்டது என்று
நான் சொல்லவில்லை
அது நிகழவில்லை என்றும்
சொல்லவில்லை.
அது நீ என்று சொல்லவில்லை
அது நான் என்றும்
சொல்லவில்லை.
சென்ன மல்லிகார்ஜுனாவின்
லிங்கத்துடன் இணைந்த பிறகு
நான் எதுவும் சொல்லவில்லை.
என்ற கவிதை அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளில் கவிந்திருக்கும் கவித்துவ அமைதிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
-- கவிதா முரளிதரன்.  கலை இலக்கியம்.
--  ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013.  

Thursday, October 1, 2015

தெரிந்து கொள்ளுவோம்!

*  அதிக பிராண வாயு தரும் மரங்களை வளர்த்தால், மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்.  ஒரு வளர்ந்த அரச மரம்
   1,800    கிலோ  கரியமில வாயுவை உள் இழுத்து 2,400 கிலோ பிராண வாயுவை வெளியேற்றுகிறது.
*  பூச்சியுண்ணும் ஒரு அபூர்வத் தாவரம் ஏற்காடு மலையில் 38 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவது பலருக்கும் தெரியாது.
*  இந்தியாவில் பூச்சி உண்ணும் 19 வகை செடிகள் உள்ளன.  மேகாலயா மாநிலத்தின் காசி மலையில் நெப்பந்தசேயி எனும்
   பூச்சி உண்ணும் தாவரம் காணப்படுகிறது.  அதனால், நெப்பந்தசேயி காசியானா என்பது தாவரவியல் பெயர்.  கடல் மட்டத்தில்
   இருந்து 1,000 அடி முதல் 10,000 அடி உயரம் வரையுள்ள பகுதிகளில் வளரக்கூடியது.  ஈரமிக்க காடுகள், சதுப்பு நிலங்கள்,
   குட்டை ஓரங்களில்  நெப்பந்தசேயி 100 ஆண்டுகள் வரை வாழ்கிறது.
*  பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், குளமங்கலத்தில் சுற்றுச்சூழலுக்குக் கேடு
   விளைவிக்கும் விதமாக அதிகளவில் குவிந்து ஆண்டுக்கணக்கில் மக்காமல் கிடக்கும் பிளாஸ்டிக் மாலைக்கு தடை விதிக்க
   வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
*  கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள வானகம் என்ற பண்ணைத் தோட்டத்தில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்                உடல் அடக்கம் நேற்று 1.1.14 புதன்கிழமை , சித்தர்களின் ஆகம முறைப்படி செய்யப்பட்டது.
*  ராமாயணத்தில் வரும் சத்துருக்னனின் மனைவி பெயர் சுரீதகீர்த்தி.
-- ' தி இந்து ' நாளிதழ்களில் இருந்து.