Friday, November 6, 2015

கழிவை நீக்கும் காளான்

   காளான்களை கொண்டு சாக்கடையை சுத்தம் செய்யலாம்.  இதை பாட்டனி புத்தகத்தில் படித்ததோடு சரி.  யாரும் முயற்சி செய்வதில்லை.  அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளார்கள்.  கழிவு நீர் நிறைந்த பகுதியில் சில காளான்களை நட்டு வைத்தார்கள்.  அடுத்த ஒரு வாரம் கழித்து அந்த நீரை சோதித்ததில் அந்த நீரின் நச்சுத்தன்மை கிட்டத்தட்ட  பாதிக்கும் கீழாக குறைந்திருந்தது.  சாக்கடை நீரின் தன்மை இப்படி மாறுவதற்கு காரணம், மைசிலியம் என்னும் காளான்களின் அடிப்பகுதி சாக்கடையில் உள்ள இ - கொலி பாக்டீரியா, பூச்சிகள் போன்றவற்றை அழித்துவிடுவதுதானாம்.
-- மணிகண்டன். நாளைய உலகம். ரிலாக்ஸ்.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், பிப்ரவரி10,2014.

Thursday, November 5, 2015

வருஷாபிஷேகம்.

வருஷாபிஷேகம் என்றால் என்ன?  கோயிலில் நடத்துவது ஏன்?
      நாம் பிறந்த நாள் கொண்டாடுவது போல, கோயிலில் கும்பாபிஷேகம் செய்த நாள், அக்கோயிலின் வருஷாபிஷேக நாளாகக் கொண்டாட வேண்டும்.  இதனை சம்வத்ஸராபிஷேகம்  என்றும் சொல்வர்.
---அறிவோம்! தெளிவோம்!  - தொடரில், மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014.  

Wednesday, November 4, 2015

ராமன் பூஜித்த நவக்கிரகங்கள்.

  ஸ்ரீராமபிரான் சேது பந்தனம் ( பாலம்) கட்டுவதற்கு முன்பு விநாயகரையும், நவக்கிரகங்களையும் பூஜித்தார் என்பது புராணம்.  நவக்கிரகப் பிரதிஷ்டை நடந்த இடம் ' நவபாஷாணம்' எனப்படும்.  அது இப்போதுள்ள தேவிப்பட்டணம்.  விக்னேஷ்வரரை பூஜை பண்ணிய இடம் உப்பூர்.  எனவே, இந்தப் பிள்ளையாரை வழிபட்டே ராமேஸ்வர யாத்திரையை தொடங்க வேண்டும்.
மூன்று வகை ஆசைகள்
     மூன்று வகையான  ஆசைகள் மனிதனை மோட்சமடையாமல் தடுக்கின்றன என்பர்.  மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பன அவை.  தனேஷனை, தாரேஷனை, புத்ரேஷனை என்பது வடநூல் வழக்கு.  மண்ணாசை முதலில் வந்துவிடும்.  இளமையில் பெண்ணாசை வரும்.  பிறகு வருவது பொன்னாசை.  இம்மூன்று ஆசைகளே பிறவிக்குக் காரணமாகும்.  இவற்றை விடவேண்டும் என்பதனை நாயன்மார் வரலாறு காட்டும்.  சேரமான் பெருமாள் தனேஷனையை விட்டவர்.  திருநீலகண்டர் தாரேஷனையை விட்டவர். புத்ரேஷனையை விட்டவர் சிறுத்தொண்டர்.
-- தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014. 

Tuesday, November 3, 2015

கருந்துளை கண்டுபிடிப்பு


ஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு
     புவியிலிருந்து 390 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆற்றல் மிக்க புதிய கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
     ஆர்எக்ஸ்ஜே 1532 பால்வெளி மண்டலத்தில் இந்த கருந்துளை உள்ளது.  மிகப் பெரிய அளவுடையதாக இது உள்ளது.  நாசாவின் சந்திரா எக்ஸ் கதிர் கண்காணிப்பு தொலை நோக்கி மற்றும் இதர தொலைநோக்கியைப் பயன்படுத்தி இக்கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.
     அளப்பரிய வடிவமைப்புகளை இக்கருந்துளை உருவாக்கியுள்ளதுடன் வெப்பவாயுச் சூழலில் ஏராளமான நட்சத்திரங்கள் உருவாவதிலிருந்தும் பாதுகாத்து வருகிறது.  இந்த கருந்துளை நமது சூரியனை விட ஆயிரம் லட்சம் கோடி ( ஆயிரம் டிரில்லியன் ) மடங்கு பிரகாசமானது. இக்கருந்துளையின் மையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான தடயம் எதுவும் கண்டறியப்படவில்லை.
கருந்துளை என்றால் என்ன?
     கருந்துளை ( பிளாக் ஹோல்) என்பது அண்டவெளியில் ஒரு பகுதியாகும்.  இவை இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம்.  கருந்துளைகளின் எல்லைக்குள் செல்லும் ஒளி உள்ளிட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவுக்கு அதீத ஈர்ப்பு சக்தியைக் கொண்டவை.  இவற்றின் எல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒலி,ஒளி, மின்காந்த அலைகள் கூட வெளியேறாது.  ஆகவே, இக்கருந்துளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.
     இக்கருந்துளைகள் நட்சத்திர தோற்றப் பரிமாணத்தின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுகின்றன.  இவை அதீத நிறையைக் (மாஸ்) கொண்டுள்ளதால், முடிவேயில்லாத அடர்த்தியைக் கொண்டுள்ளன.  கன அளவோ, மேற்பரப்போ இவற்றுக்குக் கிடையாது.
     அண்டப்பெருவெடிப்புக் காரணமாகவே, பூமி உள்ளிட்ட கிரகங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, ஜனவரி25,2014.                                        

Monday, November 2, 2015

பொதுஅறிவு

*  உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுப்பு நரம்புத் தொகுப்பு.
*  தும்மல் என்பது சுவாசப் பகுதியை சுத்தம் செய்வதற்காக இயற்கையாகவே நிகழும் நிகழ்வாகும்.  தும்மும்போது சில
   சமயங்களில் மார்பு விலா எலும்பு உடைய வாய்ப்பு உள்ளது.  அதே தும்மலை நாம் அடக்கினால் சில சமயங்களில் கழுத்து,
   தலைஆகிய பகுதிகளில் ரத்த நாளங்கள் வெடித்து இறப்பு ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.
*  சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்களில் புதன் கோள்தான் சூரியனை மிக வேகமாகச் சுற்றி வருகிறது.  விநாடிக்கு 48 கி.மீ.
   வேகத்தில், 88 நாட்களில் சூரியன ஒரு சுற்று சுற்றிவருகிறது.  சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள அளவில் சிறிய கோளும்
   இதுதான்.
'நெட்'டுக்குத்து
*  செய்தி : பா.ம.க ஆட்சிக்கு வந்தால் காடுவெட்டி குருவுக்குதான் காவல்துறை.  --  ராமதாஸ்
   குத்து :  ஆட்சிக்கு வரலைன்னா காடுவெட்டி குரு காவல்துறைக்குதான்.  --  வஸந்தகுமாரன்.
--  'தி இந்து'  நாளிதழ்.

தானியங்கி கிளீனர்

  வீட்டை  பெருக்க, சுத்தம்  செய்யும் வேலைகளை  எளிதாக  செய்ய  வேக்குவம்  கிளினர்  இயந்திரங்களைப்  பயன்படுத்துகிறோம்.  ஆனால்  இந்த  இயந்திரத்தை  இயக்கவும்  ஒரு  ஆள்  தேவையாகத்தான்  இருக்கிறது.
   தற்போது  இதையும்  எளிமையாக்கியுள்ளது  ஐபோபாட்  என்கிற  கருவி.  மொபைல்  ஆப்ஸ்  மூலம்  இயக்கப்படும்  இந்த  கருவி  தானாகவே  அறையை  சுத்தம்  செய்கிறது.
   360  டிகிரி  சுழலும்  இந்த  கருவியிலுள்ள  சென்சார்கள்  வீட்டின்  வளைவுகளுக்கு  ஏற்ப  சுற்றி  வருகிறது.  எத்தனை  மணிக்கு  சுத்தம்  செய்ய  வேண்டும்  என  ஆப்ஸில்  பதிவு  செய்துவிட்டால்  தானாகவே  சுத்தம்  செய்துவிட்டு  அதற்குரிய  இடத்தில்  செட்டில்  ஆகிவிடும்.
கைகளே  கீபோர்டு
   கீபோர்டு  மற்றும்  மவுசுக்கு  பதிலாக  கையில்  சில  ஒயர்களை  மாட்டிக்கொண்டு  கம்ப்யூட்டரை  இயக்கலாம்.  இப்படியான  ஒரு  கருவியை  ஜெஸ்ட்  என்கிற  நிறுவனம்  வடிவமைத்துள்ளது.
   ஒயர்களைப்  போல  உள்ள  இந்தக்  கருவியை  கையில்  அணிந்து  கொண்டு  கம்ப்யூட்டரின்  மானிட்டரை  பார்த்து  கை  அசைத்தால்  மவுசாக  இயக்கலாம்.  திரையில்  தெரியும்  கீ  போர்டு  எழுத்துகளை  கையை  அசைப்பதன்  மூலமே  டைப்  செய்யலாம்.  மோஷன்  பிராசசர்  மூலம்  இந்தக்  கருவி  செயல்படுகிறது.
   போட்டோஷாப்  மற்றும்  3டி  வேலைகள்  உட்பட  பல  வசதிகளை  இந்த  கருவி  மூலம்  மேற்கொள்ள  முடியும்.
---'தி இந்து' நாளிதழ். வணிக வீதி  இணைப்பு. திங்கள்,   நவம்பர், 2, 2015.   

Sunday, November 1, 2015

மீட்டர் பேசுது

*  சூரியனிலிருந்து சுமார் 9.1 கோடி மைல் தொலைவில் பூமி உள்ளது  சூரியனிலிருந்து வெளிப்படும் வெளிச்சம்
    பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகின்றன.
*  வானிலையில் மாற்றம் ஏற்பட சூரியனே காரணம்.  சூரிய ஒளியால் கடல் பரப்பை விட நிலப்பரப்பு விரைவாக சூடாகிறது.
    இதனால் அதன் மேற்பரப்பில் வெப்ப நிலை, காற்றின் அழுத்தம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.
*  இங்கிலாந்தின் தென்கிழக்கே 1987 -ம் ஆண்டு அக்டோபர் 15 மற்ரும் 16 ஆகிய தேதிகளில் வீசிய கடுமையான புயலால் ஒரு
   கோடியே 50 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
-- 'தி இந்து'  நாளிதழ்.