Thursday, January 7, 2016

மேதாஜனனம் வேறுமுறைகள்.

  ஐந்திரீ  எனப்படும்  பேய்க்கும்மட்டி  வேர்,  ப்ராஹ்மீ  எனப்படும்  ப்ரம்மி  வழுக்கையின்  இலை,  சங்கபுஷ்பீ  என்ற  மூலிகையின்  வேர்,  வசம்பு  இந்த  நான்கையும்  தனித்தனியே  கடுகளவு  அரைத்து  இந்த  விழுதையும்  10  துளி  பசுநெய்  5  துளி  தேனையும்  சுய   தங்கத்தினால்  செய்த  ஓர்  அரசிலையில்  வைத்து  தேய்த்து  தர்ப்பத்தினால்  தோய்த்து  புத்தியினுடைய  வளர்ச்சிக்காக  குழந்தைக்கு  சிறிது  சிறிதாக  ஊட்டவேண்டும்.
     ஒரு  வசம்பு  துண்டைச்  சில  மணிநேரம்  பசுவின்  பாலில்  ஊற  வைத்தால்  மிருதுவாகும்.  இதில்  ஒரு  தங்கக்  கம்பியின்  ஊசி  போன்ற  நுனியால்  சொருகி  வசம்பின்  மத்தியில்  அடித்துச்  சொருகி  வைத்துக்  கொள்ளவும்.  மாத்திரை  மருந்து  அரைப்பதற்காக  உள்ள  ஒரு  சிறு  குழவியுடன்  கூடிய  வழுவழுப்பான  அம்மியில்  சில  துளிகள்  முலைப்பால்  வைத்து                 அதில்  தங்கக்  கம்பியும், வசம்பும்  அரைபடும்படியாக  உரைத்துக்  கலக்கி  அப்பாலை  குழந்தைக்கு  கொடுக்கவும்.  வசம்பு, தங்கக்கம்பி  உரைத்து  பிறந்தநாள்  வரும்வரையில்  தினசரி  கொடுக்கும்  பழக்கம்  கேரளத்தில்  பழைய  இல்லங்களில்  இன்றும்  இருக்கிறது.
     தங்கக்  குச்சியை  வசம்புத்  துண்டில்  அடித்து  வைத்துக்  கொண்டு, வசம்பையும்  தங்கத்தையும்  உரைத்துக்  கொடுக்கும்  முறையில்  சில  இடஞ்சல்கள்  ஏற்படுகின்றன.  வசம்பிலிருந்து  தங்கக்கம்பி  அடிக்கடி  நழுவி  விடுகிறது.  அரைப்பில்  வசம்பு  விழுதின்  அளவு  கண்டுபிடித்தல்  சிரமமாயிருக்கிறது.  வசம்பின்  அளவு  அதிகமானால்  குழந்தைக்கு  உமட்டல்  வாந்தி  ஏற்படும்.  அதனால்  கவனம்  தேவை.  இதைவிட  நல்ல  முறையானது  சுமார்  12  கிராம்  வசம்பை  துண்டுகளாக  நறுக்கி  ஆறு  மணிநேரம்  பசும்பாலில்  ஊறவைத்து  வெந்நீரால்  கழுவி  வெயிலில்  உலர்த்தி  நன்றாகப்  பொடி  செய்து  துணியால்  சலித்து  கண்ணாடி  பாட்டிலில்  பத்திரப்படுத்தி  வைத்துக்கொள்ளவும்.  தங்கத்தினால்  செய்த  சிறுபாலாடையில்  நெய்,  தேன்,  முலைப்பால்  இவற்றைச்  சில  துளிகள்  சேர்த்து  அதில்  மேற்படி  வசம்பு  சூரணம்  சிறுபயறு  அளவு  சேர்த்து  குழவியினால்  3  நிமிடங்கள்  நன்றாய்த்  தேய்க்கவும்.  அதைக்  குழந்தைக்கு  ஊட்டவும்.  இவ்விதம்  தொடர்ந்து  ஒரு  வருட  காலம்  தினசரி  செய்ய  வேண்டும்.  வசம்பு  சூர்ணத்தின்  அளவை  மாதத்திற்கு  3  கடுகளவு  வீதம்  கூட்டலாம்.  இதற்கு    உபயோகிக்கும்  தங்கப்  பாலடை  அல்லது  கிண்ணம்  அதிக  வழுவழுப்பாக  இருக்கும்படி  தேய்த்துப்  பாலீஷ்  போட்டிருக்கக்கூடாது.  கொஞ்சம்  சொரசொரப்பாக  இருப்பின்  தங்கம்  சேர்ந்து  மருந்துடன்  இழைபடுவதற்கு  எளிதாக  இருக்கும்.
     மேற்குறிப்பிட்ட  மூலிகைகளுடைய  சிறப்பான  மருத்துவ  குணங்களால்  குழந்தைக்கு  அறிவுத்திறன்  மேன்மையாக  வளரும்  என்று  கண்டுபிடித்தது  ஆயுர்வேதத்திற்கே  உரிய  தனிப்பெருமை.
-- எஸ்.சுவாமிநாதன்.  டீன்.  ஸ்ரீஜயேந்திர  சரஸ்வதி  ஆயுர்வேதக்  கல்லூரி.  நசரத்பேட்டை-( பூந்தமல்லி  அருகே)
--  தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

Wednesday, January 6, 2016

பிறந்த குழந்தை அறிவாளியாக வளர!

   மனதிற்கு  சத்வம்,  ரஜம்,  தமஸ்  என்று  மூன்றுவித  குணங்கள்.  சத்வம்  என்ற  குணத்தினால்  வித்தைகளை  எளிதில்  அறியும்  ஆற்றல்,  அறிந்த  வித்தைகளை  மறக்காமல்  இருக்கும்  சாமர்த்தியம்  முதலிய  சக்திகள்  மனதிற்கு  ஏற்படுகின்றன.  மனதின்  இந்த  விசேஷ  சக்தியைத்  தான்  மேதை  என்பர்.  மேதை  எவ்வளவுக்கு  எவ்வளவு  நன்றாக  மேன்மையடைகிறதோ  அவ்வளவுக்கவ்வளவு  அந்த  மனிதன்  மேலாகிறான்.  ஆயுர்வேதமும்  தர்ம  சாஸ்திரமும்  மனிதனுடைய  மூளை  சக்தியின்  வளர்ச்சிக்குப்  பிறந்த  நிமிடம்  முதல்  பல  உபாயங்களை  கடைபிடிக்க  வற்புறுத்துகின்றன.  மூளையின்  நாடிகள்,  தாதுக்கள்  விரிவைத்  துவங்கும்  முன்பு  தூய்மையான  விரிவையே  பெறுவதற்கு  உதவும்படியாக  குழந்தைக்குப்  பிறந்தது  முதலிலேயே  உணவு  மருந்து  மூலிகை  குளியல்,  மந்திரப்  பிரயோகங்களை  உபயோகிக்க  சாஸ்திரங்கள்  போதித்துள்ளன.  இதற்கு  மேதா  ஜனனம்  என்று  சொல்லுவர்.
     தாமிரக்  கலப்பில்லாத  சொக்கத்  தங்கத்தின்  ஒரு  சிறு  துண்டை  தர்பத்தினால்  முடிந்து  கொண்டு,  சுமார்  10-12  துளி  சுத்தப்பசு  நெய்யும்  5-6 துளி  தேனும்  கலந்து  ஒரு  தங்கம்  அல்லது  வெள்ளிப்  பாலடையில்  வைத்து  அதில்  தங்கத்  துண்டை  நன்றாய்  அழுத்தி  உரைத்து  குழந்தையின்  வாயில்  அந்த  நெய்  தேன்  கலவையை  மெதுவாய்  தடவி  உட்கொள்ளச்  செய்ய  வேண்டும்.  ஒரு  நாளில்  மூன்று  தடவை  இதுபோல  தொடர்ந்து  செய்யலாம்.
--  எஸ்.சுவாமிநாதன்.  டீன்.  ஸ்ரீஜயேந்திர  சரஸ்வதி  ஆயுர்வேதக்  கல்லூரி.  நசரத்பேட்டை-( பூந்தமல்லி  அருகே)
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.   

Tuesday, January 5, 2016

பிரசவம்

  பிரசவத்தின்  போது  நம்  தாய்  57  டெல்  யூனிட்  வலியை  நமக்காக  தாங்கிக்  கொள்கிறார்.  இது,  ஒரே  நேரத்தில்  20  எலும்புகள்  உடையும்போது  உணரப்படும்  வலிக்கு  சமமாகும்.
சரியான  நேரத்தில்  தண்ணீர்  அருந்துவதால்  ஏற்படும்  பலன் :
     *  விழித்ததும்  அருந்தும்  2  கிளாஸ்  நீரால்  உள்ளூருப்புகள்  சுறுசுறுப்படையும்.
     *  உணவுக்கு  30  நிமிடங்களுக்கு  முன்  அருந்தும்  1  கிளாஸ்  நீரால்  ஜீரணம்  அதிகரிக்கும்.
     *  குளிப்பதற்கு  முன்  அருந்தும்  1  கிளாஸ்  நீரால்  குறைந்த  ரத்த  அழுத்தம்  குணமாகும்.
     *  தூங்குவதற்கு  முன்  அருந்தும்  ஒரு  கிளாஸ்  நீரால்  மாரடைபிலிருந்து  தப்பலாம்.
-- 'பேஸ்புக்'கில்  படித்தது.  சி.பன்னீர்செல்வன்,  செங்கற்பட்டு.
அதிகமாகச்  சாப்பிட்டுவிட்டால்...
     சிறிதளவு  புதினா  இலைகள்,  ஒரு  சிறிய  துண்டு  இஞ்சி,  சிறிதளாவு  பெருங்காயம்  ஆகியவற்றை  எடுத்துக்கொண்டு  புதினாவையும்  இஞ்சியையும்  சிறுசிறு  துண்டுகளாக  நறுக்கி  பெருங்காயம்  சேர்த்து  ஒரு  டம்ளர்  மோரில்  போட்டு  குடித்து  விடவும்.  இவ்வாறு  செய்தால்  இது  செரிமானத்தைத்  தூண்டி  வயிற்றைச்  சரிபடுத்திவிடும்.
-- ஷீலா பாஸ்கரன்,முதியால்பேட்டை.
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன்.

Monday, January 4, 2016

'சாணக்கிய நீதி'

"ந  பஸ்யதி  ச  ஜன்ம  அந்த:
 காம  அந்தோ  ந  ஏவ  பஸ்யதி!
 ந  பஸ்யதி  மத  உன்மத்த:
 ஸ்வார்த்தி  தோஷான்  ந  பஸ்யதி!!"
     இதில்  முதல்  வரியின்  விளக்கம் :  பிறவியிலேயே  பார்வையற்றவர்களுடைய  கண்கள்  மற்றவர்களை  நேருக்கு  நேர்  பார்க்க  முடியாது.  அதனால்,  இவர்கள்  மற்றவர்கள்  மேல்  தவறான  எண்ணம்  அல்லது  தப்பெண்ணம்  கொள்வதில்லை.
     அடுத்த  வரியின்  விளக்கம் :  கண்  பார்வை  இருந்தும்,  பார்வையற்றவர்கள்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  "கொக்குக்கு  ஒன்றே  மதி"  என்று  சொல்லுவார்களே... அதைப்போல  அதிகமான  ஆசைகளை  வளர்த்து  வைத்துக்கொண்டிருப்பவர்கள்  தன்னுடைய  ஆசைகளை  எப்படி  அடைவது  என்று  மட்டும்  பார்க்க  தெரிந்தவர்கள்.  மற்ற  விஷயங்கள்  அவர்கள்  கண்ணுக்குத்  தெரியாது.
     மூன்றாவது  வரியின்  விளக்கம் :  கர்வம்,  இறுமாப்பு,  அகங்காரம்,  செருக்கு,  தற்பெருமையில்  மயங்கி  தத்தளிக்கும்  மனிதர்கள்  தன்னை  மீறி  எவரையும்  பார்க்க  மறுப்பவர்கள்.
     கடைசி  வரிக்கு  விளக்கம் :  மிகவும்  மோசமான  நிலையில்  இருக்கும்  கண்ணுள்ள  குருடர்களும்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  அவர்கள்  பிறர்  நலம்  கருதாதவர்கள்;  தன்னலத்தால்  தூண்டப்பட்ட  சுயநலவாதிகள்.  தன்னை  மீறி  மற்றவர்கள்  இருப்பதையே  மறந்து  விடுபவர்கள்.
     கண்  பார்வை  இல்லாததால்  பார்க்க  முடியாதவர்கள்      நம்மிடையே  இருக்கிறார்கள்.  அதுபோல,  பார்வை  இருந்தும்  போலி  வாழ்வு  வாழ்பவர்களும்  நம்மிடையே  இருக்கிறார்கள்.  இதற்கு  நிவாரணம்  இருக்கிறதா?
     இருக்கிறது... கண்களை  திறந்து  பார்த்து,  நன்கு  யோசிக்க  வேண்டிய  விஷயம்  இது.  நாம்  எல்லோரும்  இதயக்கண்  மூலம்  மற்ற  ஜீவராசிகளை  நோக்க  வேண்டும்.  அவ்வாறு  செய்தால்,  ஊனக்கண்  மட்டுமல்ல!  ஞானக்கண்ணும்  இருக்கிறது  என்று  பெருமைப்பட்டுக்  கொள்ளலாம்.
-- சித்ரா  நாராயணன்.  ( நல்ல  வார்த்தை  நாலஞ்சு! )  தொடரில்...
-- தினமலர்.  ஆன்மிக மலர்.  இணைப்பு. சென்னை  பதிப்பு . நவம்பர்  18, 2014.
-- இதழ்  உதவி :  SB. மாதவன்,  விருகம்பாக்கம்.  சென்னை . 92.

Sunday, January 3, 2016

பாவனைகள்

  மூன்று  விதமான  பாவனையில்  உலகில்  மனிதர்கள்  வாழ்கிறார்கள்.  அவை :  பிரம்ம  பாவனை,  கர்ம  பாவனை,  உபய  பாவனை.
     கடவுளையே  எப்போதும்  தியானித்து  பக்தி  செலுத்துவது  பிரம்ம  பாவனை.  நம்மாழ்வார்  போன்ற  ஆழ்வார்கள்  அனைவரும்  இந்த  பாவனையில்  வாழ்ந்தவர்கள்.
     வேலை,  சம்பாத்தியம்,  குடும்பப்  பொறுப்பு  என  எப்போதும்  கடமையில்  ஈடுபட்டு  இருப்பது  கர்ம  பாவனை.
     ஆனால்,  மனிதர்கள்  பெரும்பாலும்  பிரம்ம,  கர்ம  என்ற  இரண்டு  நிலையிலும்  கலந்து  வாழவே  விரும்புகிறார்கள்.  இந்தக்  கலப்புக்கு  உபயபாவனை  என்று  பெயர்.
-- வேளூக்குடி  உ.வே. கிருஷ்ணன்  சுவாமி.  ( நினைத்தாலே  இனிக்கும் )  தொடரில்....
-- - தினமலர்.  ஆன்மிக மலர்.  இணைப்பு. சென்னை  பதிப்பு . நவம்பர்  18, 2014.
-- இதழ்  உதவி :  SB. மாதவன்,  விருகம்பாக்கம்.  சென்னை . 92.

Saturday, January 2, 2016

தெரிந்து கொள்வோம் !

*  40  பனிப்  பள்ளங்கள்,  சந்திரனில்  இருப்பதை  சந்திராயனின்  ரேடார்  கண்டுபிடித்துள்ளது !
*  ஆமலகம்  என்றால்  நெல்லி  என்று  பொருள் .  நெல்லிமரத்தின்  அடிப்பகுதியில்  ஹரியும்,  நடுப்பகுதியில்  ஹரனும்,
  நுனிப்பகுதியில்  பிரம்மனும்   வசிக்கின்றனர்
*   பென்சிலில்  'எச்பி',  எச்பி2'  என்று  குறிப்பிடப்பட்டிருக்கும்.  'எச்'  என்றால்  ஹார்டு,  'பி'  என்றால்  பிளாக்.  அந்த பென்சிலில்
  பயன்படுத்தப்பட்டுள்ள  கிராபைட்  எந்த  அளவுக்கு  உறுதியாக,  கறுப்பாக  எழுதும்  என்பதை  இது  குறிக்கிறது.  

Friday, January 1, 2016

பூமியை விட பெரிய கருந்துளை

 * பெய்ஜிங்
      பூமியை  விட  சுமார்  1,200  கோடி  அளவு  பெரிய  கருந்துளை  ஒன்று  விண்வெளியில்  இருப்பதை  சீன  விண்வெளி  ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.  இதற்கு  SDSS  J0100 +2802  என்று  பெயரிட்டுள்ளனர்.
     கருந்துளை  என்பது  விண்வெளியின்  ஒரு  பகுதியாகும்.  இது  மிகவும்  அடர்த்தி  வாய்ந்த  ஒன்று.  எனவே,  இதனுள்  ஒளி  கூட  புக  முடியாது.  இந்தக்  கருந்துளை  தனக்கு  அருகில்  இருக்கும்  அனைத்தையும்  ஈர்த்துக்  கொள்ளும்  சக்தி  கொண்டது.  இதனால்  ஏற்படும்  வெப்பம்  காரணமாக,  ஒளித்துகள்கள்  மின்னும்  கதிர்களைவெளியிடும்  தன்மை  கொண்டவையாக  உள்ளன.  இந்த  ஒளிக்  கதிர்கள்  'குவாசார்'  என்று  அழைக்கப்படுகின்றன.
     இந்த  கருந்துளை  பூமியில்  இருந்து  1,200  கோடி  ஒளி  ஆண்டுகள்  தொலைவில்  உள்ளது.  இப்படி  ஒரு  கருந்துளை  இருப்பதை  அமெரிக்காவும்,  சிலி  நாடும்  உறுதி  செய்துள்ளன.
     இதுவரை  கண்டுபிடிக்கப்பட்ட  கருந்துளைகளிலேயே  இதுதான்  மிகவும்  பெரியதாகவும்,  இதன்  ஒளிக்கதிர்கள்  அதீத  வெளிச்சம்  கொண்டதாகவும்  இருப்பதாகக்  கூறப்படுகிறது.
    "பிரபஞ்சத்தில்  பெருவெடிப்பு  நிகழ்ந்தது  சுமார்  90  லட்சம்  ஆண்டுகளுக்குப்  பிறகு  இந்தக்  கருந்துளையை  நாங்கள்  கண்டுபிடித்துள்ளோம்.  இதன்  மூலம்  கருந்துளைகள்  எவ்வாறு  தோன்றுகின்றன  என்பது  குறித்தஆய்வு  அடுத்த  கட்டத்துக்கு  நகர்ந்துள்ளது"  என்றனர்  ஆய்வாளர்கள்.
    "பொதுவாக  இது  போன்ற  ஒரு  கருந்துளையைக்  கண்டுபிடிக்க  10  மீட்டர்  குறுக்களவு  கொண்ட  தொலைநோக்கிகள்தான்  பயன்படுத்தப்படும்.  ஆனால்  2.4  மீட்டர்  குறுக்களவு  கொண்ட  தொலைநோக்கியைப்  பயன்படுத்தி  இவர்கள்  கண்டுபிடித்திருப்பது  உண்மையிலேயே  மிகப்  பெரிய  சாதனைதான்.  இது  சீன  விண்வெளி  விஞ்ஞானிகளின்  அறிவுத்திறனைக்  காட்டுகிறது"  என்றார்  ஆய்வாளர்.
-- பி.டி.ஐ.   ( கடைசிப்  பக்கம் ).
-- 'தி இந்து'  நாளிதழ்.  வெள்ளி,  பிப்ரவரி  27, 2015.