Saturday, May 7, 2016

மலர் மேல் மாருதி!


     வட அமெரிக்காவில், கலிபோர்னியாவில் லிவர்மோர் நகரில் சிவா - விஷ்ணு ஆலயத்தில் 14 அடி உயரமுள்ள அனுமன் தாமரை மலர்மீது கூப்பிய திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது எந்த அனுமன் கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
முக்கோல அனுமன்!
     புராண காலத்திலும், வேதகாலத்திலும் மிகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்ந்தது பங்கி எனப்படும் தலம்.  இது இன்றைக்கு கான்பூரிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  இங்குள்ள மிகப் புகழ்பெற்ற அனுமன் கோயிலில் காலையில் சூரிய ஒளியில் பார்க்கும்போது அனுமன் குழந்தையாகவும், மதிய நேரத்தில் இளம் வயதினராகவும், மாலை தரிசனத்தின்போது மகாபுருஷராக பெரியவராகவும் காட்சி தருகிறார்.  இது பக்தர்களுக்குத் தானாக ஏற்படும் பிரம்மையா, அல்லது அனுமனே நிகழ்த்தும் அற்புதமா என்பது யாரும் அறியா ரகசியமாக உள்ளது.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல்.  ஜனவரி 1-15,  2014.                                     

Friday, May 6, 2016

மழையே வந்திடு !

 ( குழந்தைப் பாடல் ).
மழையே மழையே வந்திடு
     மண்ணில் வந்து விழுந்திடு !
உழவே செழிக்க வந்திடு
     உயிரைக் காக்க வந்திடு !

பச்சை கொஞ்சி வயலிலே
     பயிர்கள் செழிக்க வந்திடு !
இச்சை கொண்டு மக்களே
     இனிதே வாழச் செய்திடு !

தாகம் தீர்க்க வந்திடு
     தாயாய் வந்து நின்றிடு !
மேகம் திரண்டு வானிலே
     மின்னல் இடியுடன் வந்திடு !

கானல் நீக்க வந்திடு
     கங்கை பொன்னியில் வந்திடு !
வேனல் போக்க இன்பமே
     வீற்றி ருக்க வந்திடு !

காடு செழிக்க வந்திடு
     கனிகள் கொடுக்க வந்திடு !
நாடு செழிக்க வைத்திடு
     நல்ல மழையே வந்திடு !
-- செ.சு.மலரடியான், கள்ளக்குறிச்சி.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 23, 2014. 

Thursday, May 5, 2016

மனக் கணக்கு


     உங்கள் ஆசிரியர் ஒரு எண்ணைக் கண்டுபிடிப்பதற்காகச் சில குறிப்புகளைத் தருகிறார்.  அதை வைத்துக் கொண்டு அந்த எண்ணைக் கண்டுபிடியுங்களேன்.
குறிப்புகள் :
1.  அது ஒரு பகா எண் ( prime number ).
2.  அது ஒரு முழு எண் (whole number ).
3.  ஒன்றை விட அது பெரிய எண்.
4.  அது இரட்டை எண்ணாகவோ அல்லது சதுர எண்ணாகவோ ( double or square ) இருக்கலாம்.
     இன்னும் தெரியவில்லையா?  அது ஒற்றை இலக்க இரட்டைப்படை எண்.  எங்கே விடையைக் கண்டுபிடியுங்கள்.
விடை : 2.
-- மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 23, 2014.                                    
மனக் கணக்கு
     அது இரட்டை இலக்க எண்.  இலக்கங்கள் ஐந்து மடங்கு எண்ணிக்கைக்கு சமம்.  அதனுடன் 9ஐக் கூட்டினால், அந்த எண்கள் வரிசை தலைகீழாக மாறிவிடும்.  அது என்ன எண் என்பதை ஊகிக்க முடிகிறதா?
     -- விடை : 45.
--  'தி இந்து' நாளிதழ்.  புதன், ஏப்ரல் 30,  2014.                                

Wednesday, May 4, 2016

மகா கும்பமேளா!

  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் உள்ள சாதுக்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் மேளா திருவிழாவே கும்பமேளா.  உலகின் மிக அதிக அளவு மக்கள் கூடும் மதத் திருவிழா கும்பமேளாதான்.இந்த ஆண்டு அலகாபாத்தில் நடக்கும் திருவிழா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சிறப்பு பெற்ற மகா கும்பமேளா.  மொத்தம் 55 நாட்கள் நடக்கும் இந்தக் கும்பமேளாவுக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என்கிறது புள்ளிவிவரம்.  தற்போது உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்த மகா கும்பமேளாவை, சென்னை ஃபேஷன் டிசைனர் அசோக்குமாரின் அனுபவங்களில் இருந்து:
*  "சாதுக்களில் இரண்டு வகை.  காவி உடை அணிந்து, ஜடா முடியுடன் ருத்திராட்சம் அணிந்து இருப்பவர்கள்.  உடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருக்கும் நாக பாபாக்கள்.  நிர்வாணக் கோலத்தில் இருக்கும் நாக பாபாக்கள், கார், பைக்குகளில் சர்வ சாதாரணமாகப் பறக்கின்றனர்.  மதுரையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நாக பாபாவாக இருக்கிறார்.
*   நாக பாபாக்களைப் படம் பிடிக்க, பணம் கொடுக்க வேண்டும்.  10 ரூபாய் கொடுத்தால், ஆசிர்வாதம் செய்வதைப் போல போஸ் கொடுத்துவிட்டு, 'இடத்தைக் காலி செய்' என்கிறார்கள்.  500 ரூபாய் கொடுத்தால், காலை மடக்கி, கை உயர்த்தி என விதவிதமாக போஸ் கொடுக்கின்றனர்.  பணம் கொடுக்காவிட்டால், எந்த பாபாவிடமும் போஸும் கிடைக்காது, அருளூம் கிடைக்காது.
*   ஒன்றரை அடி உயரமே இருக்கும் ஒரு பாபாவிடம் கூட்டம் அம்முகிறது.  அந்தக் குள்ள பாபா யாரிடமும் பேசுவது இல்லை.  ஆசிர்வாதம் மட்டுமே.  அதுவும் பைசா கொடுத்தால் தான், கை உயர்த்துவார்.
*   ஒவ்வொரு சாதுவும் விதவிதமான ஹேர் ஸ்டைலில் மிரட்டுகிறார்கள்.  மிக நீளமாக முடி வளர்த்து, அதில் வித்தியாசமான அலங்காரங்களைச் செய்துகொள்வதில் அலாதி ஆர்வம்.
*   பெண் சாதுக்களையோ, பெண் பாபாக்களையோ அங்கு பார்க்க முடியவில்லை.  அதேபோல் கும்பமேளாவில் பெண் பக்தைகளின் வருகையும் மிகவும் சொற்பமே.  வெளிநாட்டுப் பெண்கள் ஏகத்துக்கும்  தலைகாட்டுகிறார்கள்.
*   முட்டித் தள்ளும் கும்பமேளா கூட்டத்திற்கு இடையில் தங்க ரதத்தில் தகதகவென வலம்வருகிறார் நித்தியானந்தா.  நாக பாபாக்கள் சிலர் அவரை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, தங்களுக்குள் ரகசியமாகக் கிசுகிசுத்துக் கொள்கின்றனர்.
*   குளிர்க் கண்ணாடிகள், ஜீன்ஸ் பெண்ட் , டீ ஷர்ட் சகிதமாக ஒரு நாக பாபா ஹாயாக அமர்ந்து இருந்தார்.  அவரைப் படம் பிடிக்கலாம் என கேமராவை எடுத்தபோது, சட்டென்று கண்ணாடியில் ஆரம்பித்து ஒட்டுமொத்த ஆடைகளையும் சடசடவேன அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்தர்.
*  'முற்றும் துறந்தவர்'களாக இருந்தாலும் நாக பாபாக்கள், தங்களது ஆணுறுப்பயீல் மட்டும் சிறிய கம்பியைச் சுற்றி இருக்கிறார்கள்.  அந்தக் கம்பியை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடுவார்களாம்.
--கே.ராஜாதிருவேங்கடம்.
-- ஆனந்த விகடன்.  27-2-2013.   

Tuesday, May 3, 2016

குடிகாரர்.

  பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
    "நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்ப்வர்களுக்கு 200 டாலர் பரிசு.  போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும்.  சவாலுக்கு தயாரா?" என்று அறிவித்தார்.
     யாரும் அசையவில்லை.  ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார்.  இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
    "பந்தயத்துக்கு நான் தயார்," என்றார்.
     அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார்.  சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, "ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?" என்று கேட்டார்.
    "பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்." என்றார் அவர்.
     இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்?
-- ஜாலிக்காக குடிக்கலாமா?  NO !  ( மது அருந்துதல் பற்றி சத்குருவின் பதில்கள் தொடரில் ).
-- சத்குரு ஜக்கி வாசுதேவ்.
-- ஈஷா காட்டுப்பூ .  பிப்ரவரி 2014.   

Monday, May 2, 2016

மனதுக்கு இல்லை வயது !

  நாம் இந்த உலகைப் பற்றித் தெரிந்துகொள்வதே புலன்கள் வாயிலாகத்தான்.  பார்வை, கேட்டல், தொடுதல், முகர்தல், சுவைத்தல் என்று ஐம்புலன்கள் வழியாக அன்றாடம் நம்மை அடையும் ஆயிரக்கணக்கான தகவல்கள்வழியாகவே நம்மைச் சுற்றி நடக்கும் மாறுதல்களைக் கண்டுகொள்கிறோம்.  'ஓடும் நதியில் ஒருமுறை கையில் அள்ளிய நீரை மீண்டும் அள்ள முடியாது' என்று சொல்வதுபோல கணந்தோறும் உலகில் ஒருமுறை நடக்கும் விஷயம் மறுகணம் மாறுகிறது.  இம்மாற்றங்களைப் புலன்கள் மூலமே நாம் பதிந்துகொள்கிறோம்.
     வயதாகும்போது புலன்களின் திறன் குறையத் தொடங்குகிறது.  இதுபோல புலன்களின் திறன் குறையும்போது அதிலிருந்து வரும் தூண்டுதல்கள் இல்லாததால் மூளையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.  பார்வை குறைந்தவர்களுக்கு ஏதோ உருவங்கள் மாயத் தோற்றங்கள் தெரியத் தொடங்கும்.  ஆங்கிலத்தில் இதை ஹாலுசினேஷன் ( hallucinations ) என்பர்.  யாரும் இல்லாமலேயே யாரோ நிற்பதுபோல பேசிக் கொண்டிருப்பார்கள்.  'வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார்கள்.  யாருமே கவனிக்கமாட்டேன் என்கிறீர்களே' என்று சத்தம் போடுவார்கள்.  இன்னும் சிலருக்குத் திருடர்கள் வருவதுபோலக்கூடத் தோன்றும்.
     அதேபோல செவிப்புலன் குறையத் தொடங்கும்போது யாரோ பேசுவதுபோல் தோன்றும். 'மருமகள் என்னைப் பற்றிக் குறை சொல்கிறாள்' என்று புலம்புவார்கள்.  எல்லோரும் என்னை திட்டுகிறார்கள் என்று சொல்வார்கள்.  யதேச்சையாகச் சிரித்தாலும் என்னைப் பற்றித்தான் சிரித்தாள் என்று சந்தேகம் வரும்.  இதைப் பாரானோயா ( Paranoia ) என்பார்கள்.
     மனிதன் எந்த மோசமான விஷயத்தையும் தாங்கிக்கொள்வான்.  ஆனால் நிச்சயமற்ற தன்மையை, மர்மத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே இயலாது.  ஆகவே புலன்கள் திறன் குறையத்தொடங்கும்போத அவற்றைக் கவனிக்க வேண்டும்.  கண்ணாடியோ, அறுவைசிகிச்சையோ, ஹியரிங் எய்டோ அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.  'வயதானாலே அப்படித்தான்' என்று விட்டுவிடக் கூடாது.
     அதேபோல, காது சரியாக கேட்கவில்லை என்றால் எழுதிக்காட்டுங்கள்.  என்ன நடக்கிறது என்பதை உணரச் செய்யுங்கள்.  வெறும் தொடுதல் மூலம் ஆயிரம் செய்திகளைப் பரிமாறலாம்.
-- மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்.  பூச்செண்டு.
-- 'தி இந்து' நாளிதழ்.  செவ்வாய்,ஏப்ரல் 22, 2014. 

Sunday, May 1, 2016

'இயற்கை பானம்'

 பழத்தைக் கழிவி ( washing ), சாறு பிழிந்து ( extracting ) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து ( blending ), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி ( de-oilling ), விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி ( deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி ( paste urize), கசப்பு நீக்கி ( debittering ) அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி ( acide stabliization ), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி ( cloud stabliization ),கொதிக்கவைத்து ( evaporating ) பிறகு குளிர்வித்து ( freezing ) திடப்படுத்துகிறார்கள்.  இப்படி ஒவ்வோரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப்பதப்படுத்தி எடுத்து, கடைசியாக பழச்சாரின் அடர்வை ( concentrate ) பெறுகின்றனர்.  இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள்.  பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணீர் தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்' என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.
-- மருத்துவர் கு.சிவராமன்.  ( ஆறாம் திணை  தொடரில் ).
-- ஆனந்த விகடன் . 27-2-2013.