Friday, October 7, 2016

வெளிநாட்டுக் கோயில்கள்.

மகா கைலேஸ்வர் மந்திர்
இந்தியாவில் சில சிவன் கோயில்களில் சகஸ்ரலிங்கம் உள்ளது. உதாரணத்திற்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சகஸ்ரலிங்கம் உள்ளது. சகஸ்ரலிங்கம் ஆயிரம் லிங்கங்களால் ஆன லிங்கம் என்று பொருள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சண்டா கிளாரா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா கைலேஸ்வர் ஆலயம். அமெரிக்காவின் முதல் ஜோதிர்லிங்க சிவ ஆலயம் இதுவே ஆகும்.
இந்த ஆலயத்தில் 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காளிகாம்பாள் ஆலயக் குருக்களான சுவாமி சதாசிவத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள சகஸ்ரலிங்கம், 2 டன் எடை கொண்டது. கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே லிங்கத்தில் 1116 சிறிய சிவலிங்கங்களை கொண்ட சகஸ்ரலிங்கம் இந்த ஆலயத்தில் மூலவராக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் இந்துக்களின் பாரம்பரிய முறையிலான உடைகளை அணிந்து வர அனுமதிக்கப்படுகிறது.
ஆலய முகவரி :
Sri Maha Kaleswar mandir
2344 A Walsh Avenue ( Bldg. F. Santa Clara Commerce Park )
Santa Clara, CA 95051
இமெயில் : info@ srimahakalmandir. org.
இணையதளம் :
http:// srimahaka- lmandir.org/
-- தினமலர். பக்திமலர். 9-10-2014.

Thursday, October 6, 2016

Wednesday, October 5, 2016

பஞ்சபூதங்கள்.

மேற்கத்திய மரபில் ஐம்பூதங்கள் கிடையாது. ஆகாயம் நீங்கலாக, அங்கே நான்கு பூதங்கள்தான் ( எலிமண்ட்ஸ் -- elements ). ஆகாயம் என்று அழைக்கப்படும் வெளியையும் ஒரு அடிப்படை இயற்கைப் பொருளாக வைத்திருப்பது இந்திய மரபின் சிறப்பு. பிரபஞ்சம் முதல் நம் உடல் வரை ஐம்பூதங்களின் சேர்க்கைதான் என்று இங்கே நம்பப்படுகிறது. பௌதிகம் என்ற சொல்லுக்கு ஐம்பூதங்களால் ஆனது என்பது பொருள். உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரியாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதேபோல், பஞ்சதம் என்ற ஒரு சொல் மரணத்தைக் குறிக்க முன்பு பயன்பட்டிருக்கிறது. பஞ்சபூதங்களும் பிரிந்து தனித்தனியாவதால் மரணம் ஏற்படும் என்பது இதன் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களின் சேர்க்கை இயற்கையாக நடைபெற்றதேயொழிய கடவுளின் முயற்சியால் அல்ல என்று நம்பும் உலகாயவாதத் தத்துவம்தான் பூதவாதம்.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், செப்டம்பர் 13, 2014.

Tuesday, October 4, 2016

பாரதியின் நினைவு நாள்!

தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை வலியுறுத்தல்
மகாகவியாக இன்றும் போற்றப்படும் பாரதியாரின் நினைவு நாளில் குழப்பம் உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி டி.பி. கோவில் தெருவில் வாழ்ந்தபோதுதான் பாரதியாருக்கு மரணம் ஏற்பட்டது. இதுகுறித்து செப்-21-ல் சென்னை மாநகராட்சிப் படிவேட்டில் பாரதி மறைந்த நாள் செப்.12, 1921- என்று பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் பாரதியின் பாடல்களை ஆய்வுப் பதிப்பாக ம.ரா.போ. குருசாமியை பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் 1921 நாள் செப்டம்பர் 12, 1.30 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
1996-ல் பாரதி வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான சீனி. விசுவநாதன் வெளியிட்ட 'மகாகவி பாரதி வரலாறு' என்ற நூலில், தென்னாட்டுக்கவி சிரேஷ்டர் எனப் போற்றப்பட்ட வரகவி பாரதி 1921 செப்.12-ம் தேதியில் இந்த உலக வாழ்வைத் துறந்து விண்ணவர்க்கு விருந்தாகிவிட்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட மகாகவி பாரதியார் கட்டுரைகள் என்னும் பெயரில் வெளியிடப்பட்ட நூலில் 1921 செப் 12-ம் நாள் யாமம் 1.30 மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசும், புதுவை அரசும் செப்-11 ம் தேதியை பாரதியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கின்றன. இதற்கு காரணம் பாரதி மறைந்தது செப்-11ம் தேதி பின்னிரவு 1.30 ( அதாவது செப்-12ம் தேதி அதிகாலை 1.30 ) என்பதுதான். எனவே, தமிழக மற்றும் புதுவை அரசுகள் இந்த ஆண்டிலிருந்து பாரதியாரின் நினைவு நாளை செப்- 12-ல் கடைப்பிடிக்க வேண்டும்.
-- ( மாநிலம் ).
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், செப்டம்பர் 4, 2014.

Monday, October 3, 2016

'1950 டிஏ' விண்கல்

'1950 டிஏ' என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல், 44,800 டன் எடையும், ஒரு கி.மீ. அகலத்தோடும் இருக்கிறதாம். இது விநாடிக்கு ஒன்பது மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 2880 -ம் ஆண்டில், இது மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமி மீது மோதலாம் என்று பயமுறுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். 'அப்படி மோதினால், பூமி அதிபயங்கர சத்ததுடன் வெடித்து, தட்பவெப்ப நிலையில் மாற்றம், சுனாமி, நிலநடுக்கம்... என அடுக்கடுக்கான பாதிப்புகளால் பேரழிவு ஏற்படும். அதனால், மனித குலம் முற்றிலுமாக அழிந்தேவிடும்!' என்கிறார்கள். இன்னொரு தரப்பு விஞ்ஞானிகளோ, 'அது பூமியை நோக்கி வருவது உண்மைதான். ஆனால், அது பூமியில் மோத 300-ல் ஒரு பங்குதான் வாய்ப்பு இருக்கிறது!' என்கிறார்கள். -- இப்பவே பயமுறுத்துற மாதிரி ஆராய்ச்சி பண்ணுங்கப்பா!
வெனிசுலா
வெனிசுலா நாட்டில் ஒரு பாக்கெட் பால் வாங்க உங்கள் கைரேகையைப் பதிக்க வேண்டும். காரணம், அந்த அளவுக்கு உணவுப் பஞ்சம். ஒரே நபர் அதிகப் பொருட்களைப் பெறுவது, கள்ளச்சந்தை உருவாக்குவது போன்ற செயல்களைத் தடுக்கவே இந்த நடைமுறை. -- ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் இருக்கு... பால் இல்லையா?
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 3-9-2014.

Sunday, October 2, 2016

கழுகுகள்

இன்று சர்வதேச கழுகுகள் தினம்!
இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் வனப்பகுதியில் 1,200-க்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் உள்ளன. இவற்றில் பிணம் தின்னி கழுகுகள் மிக முக்கியமானது. இந்தியாவில் ஒன்பது வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன.
தமிழகத்தில் வெண் முதுகு பிணம் தின்னி, இந்தியன் பிணம் தின்னி, செந்தனை பிணம் தின்னி, எகிப்திய பிணம் தின்னி ஆகிய நான்கு வகை பறவைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் தற்போது எகிப்திய பிணம் தின்னியை தவிர மற்ற இனங்கள் அழிந்து வருகின்றன. தமிழகத்தில் பிணம் தின்னி கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 250 முதல் 300 வரை மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
'டைகுனோபினாக்' எனும் கால்நடை மருந்துதான், பிணம் தின்னி கழுகுகள் எண்ணிக்கை குறைவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
'டைகுனோபினாக்' மருந்தை சாப்பிட்ட கால்நடைகள், இறந்தபின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்த கால்நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடும். இந்த மருந்து 1990-ம் ஆண்டுதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எனவே, அந்த ஆண்டு முதல் இந்த கழுகுகள் இனம் அழியத் தொடங்கியது.
-- ஒய்.ஆண்டனி செல்வராஜ். ( மாநிலம் ).
-- 'தி இந்து' நாளிதழ். சனி, செப்டம்பர் 6, 2014.

Saturday, October 1, 2016

ஐம்புலன்கள்

அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே
( திருமந்திரம் - 2033 )
ஐம்புலன்களை அடக்க நினப்பவர்களை திருமூலர் இப்படி விமர்சிக்கிறார். தன்னுடைய தமிழில் அவர் கூறியதை நம்முடைய தமிழில் பார்ப்போம்.
ஐம்புலன்களை அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள்.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் தேவலோகத்தில் கூட இல்லை.
ஐம்புலன்களை அடக்கினால் மதிகெட்டு போகும்.
அவற்றை அடக்காது நெறிப்படுத்தும் அறிவை அறிந்தேன்.
-- சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. ( Business Line பக்கம் ) வணிகம்.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, செப்டம்பர் 6, 2014.