Tuesday, August 31, 2010

ஒரு மாதம் டிராபிக் ஜாம் !

100 கி. மீ., நீளத்துக்கு வாகனங்கள் !
பிசியான சாலையில் டூ வீலரில் போகிறோம் . ரெட் சிக்னல் விழுந்து விடுகிறது . 2 நிமிடம் நிற்பதற்கே வெறுத்து போய் விடுகிறது . யார் யாரையோ சபிக்கிறோம் . இதற்கே இவ்வளவு டென்ஷனாகும் நம்மவர்கள் சீனாவில் நடக்கும் கூத்தை கேட்டால் ரொம்பவே ஆறுதல் அடைவார்கள் .
சீன தலைநகர் பெய்ஜிங் -- ஜாங்கியாகூ நெடுஞ்சாலையில் சாலை சீரமைக்கும் பணி கடந்த 14ம் தேதி தொடங்கியது . சரியான மாற்றுவழி ஏற்பாடு செய்யாததால் வாகனங்கள் இரு புறமும் குவிய தொடங்கின . எப்போதும் பரபரப்பான சாலை என்பதால் வாகன வரிசை கிலோமீட்டர் கணக்கில் நீண்டது . நாளுக்கு நாள் இந்த வரிசை வளர்ந்து இப்போது, அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் நிற்கின்றனவாம் . ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற அளவில்தான் வாகனங்கள் முன்னேற முடிகிறது .
இதுபற்றி பேசிய ஜாங்கியாகூ நகர டிராபிக் கமிஷனர் ஜாங் மிங் ஹே, ' கடந்த ஆகஸ்ட் 14ல் டிராபிக் ஜாம் தொடங்கியது . இன்னும் நீடிக்கிறது . எப்போது இது சரியாகும் என்று தெரியவில்லை . குறைந்தது 2 வாரமாவது ஆகும் ' என்று அலுத்துக்கொள்கிறார் .டிராபிக் ஜாம் சீன அரசுக்கு கவலை தந்தாலும் இதனால் ஒரு விதத்தில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் . நீண்ட காலம் நீடித்த டிராபிக் ஜாம் என்ற வகையில் இது ஒரு உலக சாதனையாம் .
சாலை பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனத்தினர் கூறுகையில் : செப்டம்பர் 17 க்கு முன்னர் வேலை முடிய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர் . எல்லாம் சரி, டிராபிக் ஜாமில் சிக்கிய வாகனங்களில் இருப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசிக்க முடிகிறதா ? சாப்பாடு, தூக்கம், அரட்டை, சீட்டாட்டம், செஸ் என பொழுது போகிறதாம் .
நம்மூரில் நடப்பது போல டிராபிக் ஜாமை பயன்படுத்தி வியாபாரத்தை தொடங்கிவிட்டனர் உள்ளூர் மக்கள் . ஒரு டம்ளர் சுடுநீரை 14 ரூபாய்க்கு விறபதை தாங்கவே முடியலை என பொங்குகிறார் ஒரு டிரவர் .
சீனா என்றால் எல்லாவற்ரிலும் பிரமாண்டம்தான் . அதற்காக டிராபிக் ஜாமிலுமா ?
--- தினமலர் . 26. 8. 2010.

மனைவி சொல்படி !

மனைவி சொல்படி ஆட்சி நடத்திய ஒரு ராஜாவுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது . நம்மை மாதிரி எல்லோரும் மனைவி ஆலோசனைப்படி நடக்கிறார்களா ? என்று சோதிக்க ஆசைப்பட்டார் . நாட்டின் தளபதியை அழைத்து கருத்து கேட்டார் . அமைச்சரை அழைத்து பேசினார் . எல்லோரும் ' உங்க பாதையில் நாங்களும் செல்கிறோம் ' என்று பதில் சொன்னார்கள் .
திருப்தி ஏற்படாத மன்னர் ' நாட்டின் குடிமகன்களை அழைத்து இதுபற்றி கேட்டார் . மனைவி சொல்படி நடக்கிறவர்கள் ஒரு பக்கம் நில்லுங்கள் . மனைவியிடம் ஆலோசனை கேட்காதவர்கள் மறுபுறம் நிற்க வேண்டும் என்று உத்தரவு போட்டார் . ஒரே ஒருவரைத் தவிர , மற்றவர்கள் அனைவரும் மனைவி சொல்படி நடக்கிறோம் என்று வரிசையில் நின்றார்கள் .
அட , ஒருவராவது சொந்தமாக சிந்தித்து நடக்கிறாரே ? அவருக்கு பரிசு வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜா , அவரை அழைத்து பேசினார் . ' எப்பவுமே கூட்டத்தோடு நிற்காதீங்க .... தனியாக நில்லுங்க 'னு என் மனைவி சொல்லியிருக்கிறார் ... அதான் , தனியே நின்னேன் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் அந்த நபர் ... சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டார் ராஜா .
--- தமிழக துணை அமைச்சர் , மு. க. ஸ்டாலின் . சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் சுய உதவி குழுவில் .
--- தினமலர் ,13 03. 2010 .

Monday, August 30, 2010

பைசா கோபுரம் !

பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே 8 மாடிகள் கொண்ட இந்த கோபுரக் கட்டடத்தைக் கட்டத் தொடங்கினர் . கி.பி. 1173 ஆகஸ்ட் 9ம் தேதி கட்டுமானப்பணி தொடங்கியது . போர்கள் மற்றும் கட்டுமானப் பிரச்னைகளால் கி.பி. 1372ம் ஆண்டுவரை இதை உருவாக்கும் பணி தொடர்ந்தது .
இதை சாதாரணக் கட்டடம் போல செங்குத்தாகவே கட்டினர் . அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால் கி.பி , 1272 ல் கோபுரம் தென்மேற்கு பக்கமாகக் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்தது . இதன்பின் அடித்தளத்தை சிறிது சரிசெய்து கட்டுமானத்தைத் தொடர்ந்தனர் . ஆனாலும் சாய்வு நிற்கவில்லை . 1920ம் ஆண்டில் , அடித்தளத்தை நவீன தொழில்நுட்ப முறையில் சரிசெய்தனர் . இதனால் , 5.5 டிகிரியாக இருந்த சாய்மான அளவு 3.99 டிகிரியாகக் குறைக்கப்பட்டுள்ளது .
பைசா சாய்வுகோபுரத்தின் உயரம் 55.86 மீட்டர் . எடை , 14 ஆயிரத்து 700 டன் . இதன் மாடிகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சுழல்படிக்கட்டில் 296 படிகள் உள்ளன !
--- தினமலர் , இணைப்பு . மார்ச் , 12 , 2010 .

Sunday, August 29, 2010

மக்கள் தீர்மானிக்கட்டும் .

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ( இவிஎம் ) தில்லுமுல்லு செய்ய முடியுமா என்ற கேள்வி மறுபடியும் கிளம்பியிருக்கிறது . முடியும் என்று பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டி ' நிரூபித்த ' ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டதால் சந்தேகம் பரவ தொடங்கியிருக்கிறது .
ஹரி பிரசாத் ஆந்திராவை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் . நேர்மையான தேர்தலை வலியுறுத்தும் ' விட்டா ' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் .இவரும் அமெரிக்க பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியர் ஒருவரும், பிறருடைய கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ரகசியங்களை அம்பலப்படுத்தும் நெதர்லாந்து ஜித்தர் ஒருத்தரும் கூட்டணி அமைத்திருக்கின்றனர் . நோக்கம் : இந்திய இவிஎம்களில் மோசடி செய்யமுடியும் என நிரூபிப்பது . இவிஎம்கள் சாதா பேட்டரியில் இயங்கும் . பெரிய பிரோகிராம் எதுவும் கிடையாது . தில்லுமுல்லு செய்ய வாய்ப்பில்லை .
வாய்ப்பு இருக்கிறது என அடித்துச் சொன்ன கட்சிகளுக்கு அதை நிரூபிக்க வாய்ப்பளித்தது தேர்தல் கமிஷன் . யாராலும் முடியவில்லை . இன்று 13 லட்சம் இவிஎம்களுடன் மின்னணு வாக்குப்பதிவில் உலகின் நம்பர் ஒன் நாடு இந்தியா .
இந்த பின்னணியில் பரபரப்பாக டெமோ கொடுத்துள்ளார் ஹரி . அதில் அவர் பயன்படுத்திய இவிஎம் மும்பை அரசு குடோனில் திருடப்பட்டது என தேர்தல் கமிஷன் புகார் கொடுக்க, ஹரி கைதானார் . ஒரு எந்திரத்தை திறக்க முடிந்தால் உள்ளிருக்கும் எதையும் மாற்ற முடியும் . திறக்கவே வாய்ப்பில்லாத சூழலில் தில்லுமுல்லு சாத்தியமில்லை .
ஹரியை விடுவித்து, சர்வகட்சி தலைவர்கள் முன்னிலையில் அவர் டெமோ கொடுக்கவும் அதை பொதுமக்கள் பார்க்க நாடெங்கும் நேரடியாக ஒளிபரப்பவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும் . நேர்மை எப்போதும் சோதனைகளுக்கு அஞ்சுவதில்லை .
---தினகரன். தலையங்கம் , ஆகஸ்ட் 27 , 2010 வெள்ளிக்கிழமை .

Saturday, August 28, 2010

சூரிய மண்டலத்துக்கு வெளியே !

விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு . சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் . மேலும் 7 கோள் .
ஜெனீவா , ஆகஸ்ட் 26 : சூரியனை சுற்றியுள்ள வட்டப் பாதைக்கு வெளியே சூரியன் அளவுக்கு புதிய கிரகம் இருப்பதையும், இதுவரை இல்லாத மிகச் சிறிய கோள் உட்பட 7 புதிய கோள்களையும் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
இதுபற்றி ஜெனீவாவில் இரோப்பியன் சதர்ன் அப்சர்வேடரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது :
சூரிய சுற்றுப் பாதைக்கு வெளியே சூரியனைப் போன்ற, அதே அளவில் கிரகம் ஒன்று இருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது .அந்த புதிய கோளின் சுற்று பாதையில் 7 கிரகங்கள் உள்ளன . அதில் ஒரு கிரகம் மிகச் சிறியது . இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் மிகச் சிறியதான அது விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது .
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பெரும்பாலானவை பூமியை விட 13 முதல் 25 மடங்கு பெரியவை . ஒரே ஒரு கிரகம் மட்டுமே பூமியைப் போல 1.4 மடங்கு உள்ளது . பூமியை தவிர்த்து சூரிய மண்டலத்திலும், அதற்கு வெளியிலும் உள்ள கோள்களில் இதுவே மிகச் சிறியது என கருதப்படுகிறது . " புதிய கிரகங்கள் அனைத்தும் பாறைகள், பனிக்கட்டிகளால் ஆனவை . அவை உறுதியானவை . அதன் மேற்பகுதியில் ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருக்கலாம் . இந்த கிரகங்களில் உயிரினம் வசிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை " என்று ஒரு விஞ்ஞானி தெரிவித்தார் .
--- தினகரன் , 26 ஆகஸ்ட் 2010 .

அட்வைஸ் !

ஈர்க்கும் அட்வைஸ் !
நெடுஞ்சாலை ஒன்றில் ரசித்த ஒரு வாசகம் :
' நீங்கள் ரத்த தானம் செய்ய விரும்புகிறீர்களா ? அதை ரோட்டில் செய்யாதீர்கள் தயவு செய்து ரத்த வங்கியில் செய்யுங்கள் .'
பெட்ரோல் பங்கில் பார்த்த இன்னொரு வாசகம் :
' கவனத்தோடு செல்லுங்கள் ரோட்டில் , மனைவி மக்கள் காத்திருப்பார்கள் வீட்டில் '
--- சுகந்தா சுசீந்தர் , திருச்சி . தினமலர் இணைப்பு . மார்ச் 13 . 2010 .

Friday, August 27, 2010

படிகள் பத்து !

மனித இனம் , விலங்கு இனம் முதலியவற்றைத் தன்னில் கொண்டு அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப இறைவன் அவதாரம் எடுத்துப் பூமிக்கு வந்திருக்கிறார் என்று ' பத்து அவதாரம் ' நமக்குப் புலப்படுத்துகிறது . எப்படி ?
1 ) மச்சாவதாரம் : தண்ணீருக்கும் அடியில் உள்ளது மீன் .
2 ) கூர்மாவதாரம் : கொஞ்சம் தண்ணீருக்கு மேலே , கொஞ்சம் கீழே வசிக்கும் ஆமை .
3 ) வராக அவதாரம் : பூமிக்கு மேலே உள்ள மிருகம் . பன்றி .
4 ) நரசிம்மாவதாரம் : விலங்கு நிலையும் , மனித நிலையும் கலந்தது . ( சிங்கம் -- மனிதன் ) .
5 ) வாமனாவதாரம் : குட்டையான மனித நிலைக்கு மாறுதல் .
6 ) பரசுராம அவதாரம் : கோபம் கொண்ட மனித நிலை -- குறையுள்ளது .
7 ) பலராமர் அவதாரம் : சாதாரண மனிதர் .
8 ) கிருஷ்ணாவதாரம் : விளையாட்டும் , வினையும் கலந்த மனிதத் தன்மை .
9 ) இராமாவதாரம் : பொறுமையுடன் விவேகமான மனித நிலை கொண்டது .
10 ) புத்தர் அவதாரம் : மனித நிலை கடந்து மேலான நிலை கொண்டது .
-- சிலம்பொலி செல்லப்பன் . ( 10. 12. 1978 ) ஆனந்தவிகடன் , 10. 03. 2010 .