Monday, February 28, 2011

' கவித்துவமான சிந்தனை ! '

' கவித்துவமான சிந்தனைக்கு ஓர் உதாரணம் ? '
" நார்வே பெண் கவிஞர் செல்மாவின் வரி இது ...
' பனிக்கட்டி என்பது தண்ணீரின் சோம்பேறித்தனம் ! ' "
---- ஆனந்தவிகடன் , 11. 8. 10 .
' ப்ராப்தி பலசித்தி ரஸ்து '
அர்ச்சனையின்போது " ப்ராப்தி பலசித்தி ரஸ்து " என்று கூறுவதன் பொருள் :
அர்ச்சனை என்பது மூன்று செயல்பாடுகளை உள்ளடக்கியது . சங்கல்பம் , அர்ச்சனை , பிரசாதம் பெறுதல் .
முதலில் செய்யும் சங்கல்பம் என்பது நாம் எந்த நோக்கத்திற்காக அர்ச்சனை செய்கிறோம் என்று சொல்வது . இதனைக் ' குறிக்கோள் பகருதல் ' என்றும் சொல்லலாம் .
இரண்டாவது இறைவனுக்கு அர்ச்சனை செய்வது, அர்ச்சகர் அர்ச்சனை மந்திரங்களைச் சொல்லிச் செய்யும் பொழுதும், நிவேதனம் தீபாராதனை இவைகளைச் செய்யும்பொழுதும் சுவாமியைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும் .
மூன்றாவது பிரசாதம் பெறுதல் . இதுவே நாம் செய்து கொண்ட சங்கல்பம், அர்ச்சனைகள் இவைகளின் பலனாகும் .
--- ஏ. வி. சுவாமிநாத சிவாச்சாரியர் . தினமலர் , ஆகஸ்ட் 5 . 2010.

Sunday, February 27, 2011

ஷேக்ஸ்பியர் -- ஹேம்லட்.

ஹேம்லட்டில், ஷேக்ஸ்பியர் சிட்டுக் குருவியைப் பற்றி குறிப்பிடுகிறார் . லேகிய சிட்டுக்குருவி அல்ல ; பைபிளில் வரும் சிட்டுக்குருவி .
' There is special providence in the fall of a sparrow . If it be now it is not to come ; if it be not to come , it will be now ; if it be not now , yet it will come -- the readiness is all . ' என்ன ஒரு கவித்துவம் ! பொலோனியஸின் மகன் லார்ட்டஸுக்கும் தன் வளர்ப்பு மகனான இளவரசன் ஹேம்லட்டுக்கும் வாள் சண்டைக்கு ஏற்பாடு செய்கிறான் க்ளாடியஸ் அரசன் . வாள் சண்டையில் ஹேம்லட் மரணமடைய வேண்டும் என்பது அரசனின் திட்டம் . அதற்காக லார்ட்டனின் வாள் முனையில் கடும் விஷம் தடவப்படுகிறது . அப்படியும் ஹேம்லட் சாகாவிட்டால் என்ன செய்வது என்று போட்டியின் இடையே அவனுக்கு விஷம் கலந்த ஒயினும் கொடுக்க ஏற்பாடு செய்கிறான் அரசன் .
ஏற்கனவே லார்ட்டஸின் தந்தையான பொலோனியஸைக் கொன்றவன் ஹேம்லட் ; மேலும் , லார்ட்டஸின் சகோதரி ஒஃபிலியாவுக்குப் பைத்தியம் பிடித்து அவள் தற்கொலை செய்துகொள்வதற்கும் காரணமாக இருந்தவன் ஹேம்லட் . இப்படி தன் தந்தை, சகோதரி ஆகிய இருவரின் மரணங்களுக்கும் காரணமான ஹேம்லட்டைப் பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறான் லார்ட்டஸ் . இந்தச் சதியை யூகித்துவிட்ட ஹேம்லட்டின் நண்பன் ஒராஷியோ, ' இந்த வாள் சண்டையில் கலந்துகொள்ளாதே ' என்று ஹேம்லட்டைத் தடுக்கிறான் . அப்போது ஹேம்லட் சொல்லும் வாசகமே இது . என்ன அர்த்தம் ? ' இப்போது நடக்கும் என்றால் , அது நடக்காமல் போகலாம் ; நடக்காது என்றால் , நடந்தாலும் நடந்துவிடலாம் ; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும் . எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது . எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது !'
அந்தச் சண்டையில் விஷம் தோய்ந்த வாள் பட்டதால் லார்ட்டஸும் சாகிறான் . சாவதற்கு முன்னால் க்ளாடியஸ் அரசனின் சதிபற்றி ஹேம்லட்டிடம் சொல்லிவிடுவதால், அதே விஷ வாளினால் க்ளாடியஸைக் குத்தி, அவன் ஏற்பாடு செய்திருந்த விஷ ஒயினையும் அவனையே அருந்தச் செய்கிறான் ஹேம்லட் . சோக காவியம் என்பதால் முடிவில் எல்லோரும் இறந்துவிடுகிறார்கள் .
--- மனம் கொத்திப் பறவை ! தொடரில் , சாருநிவேதிதா . ஆனந்தவிகடன் , 11. 8. 10 .

Saturday, February 26, 2011

தாய்ப்பால் கொடுங்க !

உங்க குழந்தை புத்திசாலியா இருக்கணுமா ? தாய்ப்பால் கொடுங்க !
பிறக்கும் குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால் . தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்லாது தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது !
தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான் அனைத்து சத்துக்களும் இருக்கிறது .
தாய்மார்களின் இரண்டு மார்பகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மிலி முதல் 1.5 லிட்டர் வரையில் பாலை உற்பத்தி செய்கின்றன . ரத்தத்தில் உள்ள குளுகோஸ், கால்ஷியம், விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன . அதனால் எல்லா சத்துக்களும் அடங்கிய தாய்ப்பால் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து கிடைக்காது . ஆனால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்தும் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகிறது .
குழந்தைகள் குறித்து லண்டனில் உள்ள தேசிய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது . அதில், ' குழந்தையின் செரிமான உறுப்புகளைப் பாதுகாக்கும் அதிசய ஆற்றல் படைத்த ஒரு ரசாயனப்பொருள் தாய்ப்பாலில் இருக்கிறது ; குழந்தை பிறந்தவுடன் சுரக்கின்ற முதலில் சீம்பாலில் இது மிக அதிக அளவில் இருக்கிறது ; இந்தப் பொருள் , குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பிகளினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாகப் பக்குவப்படுத்துகிறது ' என்று கண்டறிந்துள்ளனர் . தாய்ப்பாலில் உள்ள அன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்தான் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன .
--- ராஜி வெங்கடேஷ் , தினமலர் . 7. 8. 2010.

Friday, February 25, 2011

ஒரு குட்டிக் கதை ....

போனில், ஒரு சிறுவனுக்கும், வீட்டு உரிமையாளர் பெண்ணிற்கும் இடையே நடக்கும் உரையாடல்....
சிறுவன் : உங்க வீட்டு தோட்டத்தை நான் சுத்தப்படுத்தட்டுமா ?
பெண் : அந்த வேலைக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கிறானே ?
சிறுவன் : அவனை விடக் குறைவா சம்பளம் கொடுத்தா போதும் . நான் நல்லா வேலை செய்வேன் ....
பெண் : வேண்டாம் , அவனே நல்லா வேலை பண்றான் .
சிறுவன் : வீட்டை சுத்தப்படுத்தற வேலை கூட செய்வேன் .
பெண் : வேண்டாம் . அதையும் அவனே நல்லா செய்றான் .
இதன்பின், சிறுவன் ' நன்றி ' என்று கூறி போனை வைக்கிறான் .
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அந்தச் சிறுவனிடம், " வேலை செய்ய வேண்டும் என்ற உன் எண்ணம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு . நீ என் கடைக்கு வேலைக்கு வர்றியா ? " என்று கேட்கிறார் .
அதற்கு அந்தச் சிறுவன், " நான் இப்ப போனில் பேசிட்டிருந்த பெண்மணியின் வீட்டில்தான் வேலை செய்யறேண் . நான் செய்யற வேலை அவங்களுக்கு திருப்தி தருதான்னு தெரிஞ்சுக்கத்தான் போன் பண்ணி கேட்டேன் ! " என்று சொல்லிவிட்டு சிட்டாக ஓடி மறைகிறான் அந்த சிறுவன் !
இந்தச் சிறுவன் மூலம் நமக்கு கிடைக்கும் ஒரு பாடம், நம்மை நாமே ' சுய மதிப்பீடு ' செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் .
--- தினமலர் , 7. 8. 2010.

Thursday, February 24, 2011

கையை கவனியுங்க .

நம்மூரில் ஒவ்வொருவரது எதிர்காலத்தை கணிக்க கைரேகை பார்ப்பார்கள் . ஆனால் தலைவர்களின் மனநிலையை அவர்களின் கையசைவை வைத்து கணிக்கிறார்கள் மேற்கத்திய விஞ்ஞானிகள் .
அரசியல் தலைவர்களின் மனநிலைக்கும் சொல்லவந்த கருத்துக்கும் ஏற்ப அவர்களின் கையசைவு இருக்கிறது என்பது நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு . இதை நிரூபிக்க அவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தல்களை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டனர் .
அமெரிக்க அதிபர் ஒபாமா நேர்மறையான மனநிலையில் இருக்கும்போது இடது கையைத்தான் பயன்படுத்துவார் . அதே எதிர்மறையான தகவல்களை சொல்ல வரும்போது வலது கையை வேகமாக அசைப்பார் .
இவர் பொதுவாக இடது கைக்காரர் . அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் . இவரும் இடது கைக்காரர் . இவரும் ஒபாமாவைப்போல நேர்மறையான செய்திகளை சொல்ல வரும் போது இடது கையையும் , எதிர்மறையான செய்திகளை சொல்ல வரும் போது வலது கையையும் பயன்படுத்தினார் .
அதிபர் தேர்தல் பிரசார வீடியோக்களை கூர்ந்து கவனித்தபோது இது தெரியவந்தது .
இதே போன்று 2004 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் புஷ் , ஜான் கெர்ரி ஆகிய வேட்பாளர்களின் கையசைவுகளும் இதே போல காணப்பட்டது . ஆனால் இவர்கள் இருவரும் வகது கைக்காரர்கள் . அதற்கேற்ப நேர்மறையான பெச்சுக்களுக்கு வலது கையும் எதிர்மறை பேச்சுக்களுக்கு இடது கையும் பயன்படுத்தினார்கள் .
அதாவது ஒருவர் பொதுவாக எந்த கையை அதிகமாக பயன்படுத்துகிறாரோ அதையேதான் மகிழ்ச்சியான , ரிலாக்சான மனநிலையில் இருக்கும்போது பயன்படுத்துவார் . வெறுப்பான , கோபமான மனநிலையில் இருக்கும்போது மற்றொரு கையை பயன்படுத்துவார் .இதுதான் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களை ஆராய்ந்ததில் தெரியவந்தது .
இந்த வினோத ஆராய்ச்சியை செய்திருப்பது நெதர்லாந்து நாட்டின் மேக்ஸ் பிளாங்கி மன மொழியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் டேனியல் கசான்டோ தலைமையிலான குழு கை அசைவை வைத்து மன ஓட்டத்தை கண்டுபிடிக்கும் இந்த புது வகை ' ஜோதிடம் ' சாதாரண மனிதர்களுக்கும் பொருந்துமா என்பதை விஞ்ஞானிகள் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் .
--- தினமலர் , 7. 8. 2010..

Wednesday, February 23, 2011

பிரெஞ்சு புரட்சி !

பிரெஞ்சு புரட்சியின்போது கொடிய பாஸ்டில் சிறை உடைக்கப்பட்டது . பல வருடங்களாக கை , கால்களில் விலங்குகளோடு வாழ்ந்தவர்கள் , வெளிச்சத்தையே பாராமல் இருட்டில் சிறை வைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் . ஆனால் விடுவிக்கப்பட்டவர்களால் வெளியே வாழ முடியவில்லை . வெளிச்சத்தையே அவர்களால் பார்க்க முடியவில்லை . மறுபடியும் சிறைக்குள் வாழவே அவர்கள் அனுமதி கேட்டுக் கெஞ்சினார்கள் . நம்ப முடிகிறதா ? அடிமைகளுக்குத் துயரங்களே வாழ்வாகி விடுகிறது . அவர்கள் எஜமானர்கள் ஆக விரும்புவதே இல்லை !
--- சுகி. சிவம் , தினகரன் இணைப்பு . 7. 8. 2010.

Tuesday, February 22, 2011

தகவல் .

கேள்வி : எங்கள் வீட்டுப் பிள்ளைகள் காஸ்ட்லியான லெதர் சோஃபாவில்கூட பால்பாயிண்ட் பேனாக்களினால் கிறுக்கி வைத்துவிடுகிறார்கள் . அதை எப்படி அழிப்பது . சோப் தண்ணீரால் துடைத்தால் சீக்கிரம் அழிவதில்லை . சோஃபாவும் லேசாக கலர் மங்குவதுபோல் தெரிகிறது... வேறு என்ன வழிகளில் இந்தக் கறையைப் போக்கலாம் ?
பதில் : " கிறுக்கிய இடத்தில் சிறிது க்ளீன் எக்ஸ் சொல்யூஷனைத் தடவி ஒரு அழுக்கில்லாத துணியால் அழுத்தமாகத் துடைத்தால் அந்தக் கறை போய்விடும் . போகவில்லை என்றால் இரண்டு மூன்று முறை தொடர்ந்து முயற்சி செய்யலாம் . அதேபோல் ஹேர் ஸ்பிரே அல்லது பாடி ஸ்பிரேயை அந்த இடத்தில் அடித்து மெதுவாகத் துணியால் துடைத்தாலும் போய்விடும் .உங்கள் சோஃபாவின் தரத்தைப் பொறுத்து அதன் தன்மை கெடாமல் கறையை நீக்க எந்த முறை சரியாக உள்ளதோ அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் ."
--- குமுதம் , 4 . 8 . 2010 .