Wednesday, April 30, 2014

வாயைத் திறக்காதீங்க.

 மவுன விரதம் இருப்பது மிகவும் விசேஷமான வழிபாட்டு முறை.  இது உடம்புக்கு ஆரோக்கியம் தரும் உபாயமும்கூட.  எந்தக் கிழமையில் மவுன விரதம் இருப்பதாக நேர்ந்து கொள்கிறோமோ, அன்று சூரியனின் உதயம் முதல் பேசாமல் இருக்க வேண்டும்.  மவுன விரதத்தில் காஷ்ட மௌனம் என்பது மிகவும் சிரமமானது.  சைகைகூடக் காட்டாமல்,  எழுதிக்காட்டாமல் மவுன விரதம் இருப்பது காஷ்டமம்.  அன்று முற்றிலும் பேசாமல் இருப்பதோடு, அளவாக உணவு உட்கொள்ள வேண்டும்.  பால், பழம் முதலியவற்றை மட்டும் சாப்பிடுவதும், சமைத்ததை உண்ணாமல் இருப்பதும் மிகவும் விசேஷம்.
தலையை கட்டாதீங்க.
      வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் தலை முழுகி, அந்தத் துண்டுடன் பூஜா காரியங்களைச் செய்வதுண்டு.  பூஜை செய்யும்போது தலையில் வஸ்திரம் இருக்கக்கூடாது.  தலையைத் துணீயால் கட்டிக்கொண்டு பூஜைகள் செய்வது வடநாட்டு சம்பிரதாயம்.  தென்னக வழக்கப்படித் தலையில் துணி இருத்தல் கூடது.
--- தினமலர். பக்திமலர். அக்டோபர் 10, 2013. 

Tuesday, April 29, 2014

பல தகவல்...

*  எறும்புகள் தூங்குவதே இல்லை.
*  மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
*  கரப்பான் பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்.
*  பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்.
*  ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்.
*  யானை,  விலங்கினத்தில் மிக நீண்ட காலம் நினைவாற்றல் பெற்ற விலங்கினம்.  பல ஆண்டுகளுக்குப் பிறகும் தன் குட்டி அல்லது குழுவைச் சேர்ந்த
   யானை மரணமடைந்த இடத்திற்குச் சென்று அது நினைவஞ்சலி செய்யும்.
*  சிறுத்தையால் அரிமாவைப் போல் ஒலி எழுப்ப ( கர்ஜிக்க ) முடியாது.  பூனையைப் போல ' மியாவ் ' என்ற ஒலியைத்தான் எழுப்ப இயலும்.
-- ரிலாக்ஸ் , தி இந்து.  செப்டம்பர் 24, 2013.

இரவாடி, பகலாடி, பொழுதாடி?

 இரவில் மட்டும் தன் இருப்பிடத்தை விட்டு வெளிவந்து இரைதேடும் உயிரினங்களுக்கு இரவாடி என்று பெயர். ஆங்கிலத்தில் நாக்டர்னல் கிரீச்சர்
 ( nocturnl  creature ).  பெரும்பாலான ஆந்தைகள், வௌவால்கள் போன்றவை இரவாடிகளாகும்.  இரவாடிகளுக்கு மற்ற விலங்குகளைவிட மோப்ப உணர்வு, செவியுணர்வு போன்றவை நுட்பமாக இருக்கும்.  இருட்டிலும் பார்க்கும் விதத்தில் அவற்றின் கண்கள் நுட்பமாக அமைந்திருக்கும்.
     இதேபோல பகலில் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்குப் ' பகலாடிகள்'  என்று பெயர்.  ஆங்கிலத்தில் டயர்னல் ( diurnel ).
     அந்திப் பொழுதிலும், விடியற்பொழுதிலும் நடமாடு, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ' பொழுதாடிகள் ' என்று பெயர். ஆங்கிலத்தில் கிரிஸ்கிலர
( crepuscular )  தங்களுக்குத் தகுந்தாற்போல், பகல்,இரவு ஆகிய இரு நேரங்களிலும் நடமாடி, இரைதேடி வாழும் உயிரினங்களுக்கு ' இருபொழுதாடிகள் ' என்று பெயர்.  ஆங்கிலத்தில் கேதிமரல் ( cathemeral ) என்று பெயர்.
     இரவாடிக்கு ' இரவு வாழ்வி ' என்ற சொல்லும்,  பகலாடிக்கு ' பகல் வாழ்வி ' என்ற சொல்லும் புழக்கத்தில் உள்ளபோதிலும், தமிழில் எழுதும் சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள் இரவாடி, பகலாடி என்ற சொற்களே பொருத்தமானது என்று கருதுகிறார்கள்.
-- சந்தனார். அறிவோம் நம் மொழியை. கருத்துப் பேழை.
--   ' தி இந்து 'நாளிதழ். புதன். அக்டோபர் 9, 2013.

Monday, April 28, 2014

ரத்த அழுத்தம் !

ரத்த அழுத்தத்தை சமாளிக்க உதவும் யானைகள்.
     மரபணுக்கள், உயரம், எடை ஆகிய அம்சங்கள்தான் ரத்த அழுத்தத்தை நிர்ணயம் செய்கின்றன.  ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்பட்டால்தான், உயிரினங்களின் மிகவும் மென்மையான ரத்த நாளங்கள் வெடித்துவிடாமல் இருக்கும்.  யானைகளின் ரத்த அழுத்தம் மற்ற உயிரினங்களைவிட அதிகம்.  அதற்கு மேலே கூறப்பட்ட அம்சங்கள்தான் காரணம்.  யானைகளின் ரத்த நாளங்களும் முகப் பெரியவை.  மனிதர்களைப் போலவே, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் யானைகளும் கஷ்டப்படும்.  இந்தப் பிரச்சினையைத் தடுக்க, யானைகள் தங்கள் இதயத் துடிப்பைக் குறைத்துக்கொண்டு சமாளிக்கின்றன.  அப்படி இல்லையென்றால் யானைகளால் சீராக இயங்க முடியாது.  இதேபோல மனிதர்களும் இதயத் துடிப்பை சீராக வைத்துக்கொண்டால் நல்லது.  குறிப்பிட்ட சில சுவாசப் பயிற்சிகள் மூலம் இதயத் துடிப்பு விகிதத்தை மனிதர்கள் சீராகப் பராமரிக்க முடியும்.
--  உயிர் மூச்சு பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ். செவ்வாய். அக்டோபர் 8, 2013. 

Sunday, April 27, 2014

கொசுக்கள் ?

கொசுக்கள் ஏன் சிலரை அதிகமாகக் கடிக்கின்றன ?
     சாதாரணமாக நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான்.  அவை யாரைக் கடிக்க வேண்டும் என்பதைப் பார்வை , மோப்பசக்தி மூலம் கண்டறிகின்றன.  அவற்றின் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும்.  இதில் 27 வேதிப்பொருள்கள் நமது வியர்வையிலேயே இருப்பவை.
     நமது வியர்வையில் இருக்கும் அப்படிப்பட்ட வேதிப்பொருள்களில் கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்டனால், நோனால் போன்றவை அடங்கும்.  ஒருவரது வியர்வையில் இந்த வேதிப்பொருள்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், கொசுக்கள் அவர்களைக் குறி வைத்துக் கடிக்கின்றன.  எனவே, இனிமேல் கொசு உங்களை அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் உங்கள் வியர்வைதான்.
    வியர்வை வருவதை தடுத்து நிறுத்த முடியாது என்பதால், மேலே சொன்ன வேதிப்பொருள்கள் வெளியே தெரியாமல் மறைக்கும் வகையில் கொசுத் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது.  சீக்கிரம் கண்டுபிடித்தால், கொசுக் கடியில் இருந்து நாமும் சீக்கிரமாகத் தப்பிக்கல்லாம்.
-- ஆதி. உயிர் மூச்சு பசுமையின் சுவாசம். சிறப்புப் பகுதி.
--   ' தி இந்து 'நாளிதழ். செவ்வாய். அக்டோபர் 8, 2013.  

Saturday, April 26, 2014

" நம்பிக்கை.

   ஒரு துறவி காட்டில் கடும் தவம் இருந்துவந்தார்.  ' அவனின்றி ஓர் அணுவும் அசையாது ' என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.  ஒரு நாள் திடீரென பல்வலி ஏற்பட்டு கடும் அவதிப்பட்டார்.  பல் வலி தீர கடவுளை வேண்டினார்.
     கடவுளூம் நேரில் தோன்றி ஒரு பச்சிலையை அடையாளம் காட்டி அதை பல்லில் வைக்கச் சொன்னார்.  கடவுள் சொல் பொய்க்குமா என்ன?  பல் வலி போயே போச்சு.
     ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் அதே பாழாய்போன பல் வலி . துறவி அதே பச்சிலை வைத்தியத்தை கையாண்டார்.  எந்தப் பயனும் இல்லை.  கடவுளிடம் மீண்டும் முறையிட்டார்.  கடவுளும் தோன்றினார்.
    " கடவுளே மீண்டும் எனக்கு பல் வலி வந்தது.  நான் கடந்த முறை நீங்கள் சொன்ன பச்சிலையை வைத்துப் பார்த்தேன் பலன் இல்லை."  என்று கூறினார்.  அதற்கு கடவுள், " முதலில் என்னை நம்பினாய்.  இப்போது பச்சிலையை நம்பிவிட்டாய்.  அதுதான் பிரச்சனை" என்றார்.
-- அ.முகமது ஹுமாயூன்.  ரிலாக்ஸ்.
--  ' தி இந்து 'நாளிதழ்.   திங்கள். அக்டோபர் 7, 2013.  

Friday, April 25, 2014

திக் திக் பயணம் !

 பைக்கில் வேகமாக போய்க்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன்.  சிக்னல் ஒன்றை கடந்து சென்றபோது, டிராஃபிக் போலீஸ்காரர் நடுரோட்டில் நின்றபடி வண்டியை நிறுத்தச் சொல்லி, சைகை காட்டினார்.
     காலையிலேயே அம்மா சொல்லி அனுப்பியிருந்தாள், ' வேகமா ஓட்டாதேடா...' என்று.
    ' ஹெல்மெட்டை போட்டுட்டுதான் போயேண்டா..'. என்று அப்பா வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தது...
     அவசரமாக வந்ததில் பர்ஸில் பணமும் இல்லை.  பத்து ரூபாய் இருக்கல்லாம்.  அவ்வளவுதான்...
     இப்படி பல சிந்தனைகள் மின்னலாக வந்து மறைய, போலீஸ் அருகே வண்டியை நிறுத்தினான் ராதாகிருஷ்ணன்.
     போலீஸ்காரர் கேட்டார்.
   " சிக்னல் தாண்டி கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா தம்பி ? "
-- சிவகாசி சுரேஷ்.  ரிலாக்ஸ்.
--  ' தி இந்து ' நாளிதழ்.  திங்கள். அக்டோபர் 7, 2013.