Sunday, November 30, 2014

கணக்குப் புதிர்.

  ஒரு  குடும்பத்தில்  மொத்தம்  நான்கு  சகோதரிகள்.
     மூத்த  சகோதரிக்கும்  அடுத்த  சகோதரிக்கும்  இடையே  உள்ள  வயது  வித்தியாசம்  ஆறு.
     மற்றவர்களுக்கு  இடையே  உள்ள  வித்தியாசம்  இரண்டு.
     இவர்களின்  சராசரி  வயது  25.
     அப்படி  என்றால்  மூன்றாவது  சகோதரியின்  வயது  என்ன?  இந்தப்  புதிர்  கேள்விக்கு  விடை  சொல்லுங்கள்  பார்க்கலாம்.
விடை:  முதல்  சகோதரியின்  வயது -  31;  இரண்டாவது  சகோதரியின்  வயது - 25; மூன்றாவது  சகோதரியின்  வயது - 23;  நான்காவது  சகோதரியின்  வயது - 21;  மொத்தம்  = 100;  சராசரி = 100 / 4 = 25.
-- தினமலர்  சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012. 

Saturday, November 29, 2014

விண்வெளியில்...

விண்வெளியில் வாடகைக்கு வீடு !
     நமது நாட்டு ISRO போல, அமெரிக்க நாட்டில்  NASA (  National Aeronautic Space Administration )  என்ற அமைப்பு  உள்ளது.  இதனால் விண்வெளியில் செலுத்தப்படும் வெண்கலங்களில் அனுப்பப்படுவோர் தங்கி இருக்க வேண்டி, ஒரு வெண்கல வீடு ( அறை ) அமைக்க நினைத்து 1990ஆம் ஆண்டிலேயே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    தற்போது புதிதாகச் செய்யப்பட்ட  BEAM  ( The Bigrlow Expandable Activity Module )  என்ற புதிய சாதனமானது, வெக்ட்ரான் எனப்படும், குண்டு நுழைக்காத பொருளைக்கொண்டும், மற்றும் செயற்கை நூலிழையினால் செய்யப்பட்ட ஒரு விதமான துணி போன்ற பல அடுக்குகள் கொண்ட பொருளாலும் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்தத் துணியின் தன்மை என்னவென்றால் இக்கலம் வெண்வெளியில் செல்லும்போது சூரிய வெப்பம், சூரியப்புயல் மற்றும் அதன் மேல் விழும் பலமான வான்வெளிக்கற்கள் கதிர்வீச்சு இவற்றினால் பாதிக்கப்படாது.
    இப்புதுமாதிரியான வெண்வெளி ' வீடு ' ( அறை ) காற்றினால் உப்புகிறது. இதன் அமைப்பே ஒரு பலூன் போன்றது.  இதனுள் காற்றைச் செலுத்தி உப்பச் செய்தால் இதன் அளவு (  Size ) 13 அடி நீளம், அகலம் 10 அடி விட்டம் கொண்டதாக இருக்கும்.  இதன் எடை 1361 கிலோகிராம்.  இதை ஒரு' T' ஷர்ட்டை' மடித்து வைப்பதுபோல மடித்து ஒரு சூட் கேஸினுள் வைத்துவிட முடியும்.  இதன் உட்பரப்பு 560 கன அடி.
    இதை வருகிற 2015 ஆம் ஆண்டில் வெண்வெளியில் செலுத்துவதாக இருக்கிறார்கள்.  மனிதர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் இம்மாதிரி, காற்றை உட்செலுத்தி வைக்கிற அமைப்பானது, இதுதான் முதன்முறை.
-- ' சுமன் '  மஞ்சரி . மார்ச் 2013.                
--    இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Friday, November 28, 2014

ஃபெஸ்புக்

 சமீபத்தில் ஃபெஸ்புக்கில் ஒரு சுவாரஸ்யமான பதிவைப் படித்தேன்.  ஒரு இளைஞனின் அறையில் திருமணத்திற்கு முன்பும், பின்பும் இருக்கும் பொருட்கள் எவை எவை என்பது குறித்த பதிவு அது.
திருமணத்திற்கு முன்பு இருப்பவை:
1.  பெர்ஃப்யூம்ஸ்
2.  காதல் கடிதங்கள்
3.  பரிசுப் பொருட்கள்
4.  வாழ்த்து அட்டைகள்
5.  ஐ போன்
அதே இளைஞனின் அறையில் திருமணத்திற்குப் பிறகு இருப்பவை:
1.  வலி நிவாரணிகள்
2.  கடன் பத்திரங்கள்
3.  கட்டப்படாத பில்கள்
4.  நோக்கியா 3310
இந்த ஒப்பீட்டில் இருக்கும் வாழ்வின் தலைகீழ் மாற்றத்தை நினைத்து வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.
--மனுஷ்ய புத்திரன்.  குங்குமம் . 3 . 6 . 2013.                                
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Thursday, November 27, 2014

மூர்க்கத்துவம்

  ' மரணத்திலும் கொடுமையானது எது? ' என்று ஸ்ரீசங்கரரிடம் கேட்டான் சீடன்.  அதற்கு அவர், ' மூர்க்கத்துவம் ' என்றார்.
       மரணம் என்றால் என்ன என்பதை முதலில் ஆய்ந்து அறியவேண்டும்.  உடலை விட்டு உயிர் நீங்குதல், அதன்பின் அனைத்து நாடிகளும் ஒடுங்குதல் மரணம் என்று சொல்லப்படும்.  அந்தநிலையில் உடலைப் பிணம் என்று சொல்கிறோம்.  மூர்க்கட்த்துவம் உடைய மனிதன் பிணத்திலும் இழிநிலையில் வாழ்பவன், கிட்டத்தட்ட நடைப்பிணம் என்றே சொல்லலாம்.
       மனிதனிடம் அறியாமை இருப்பது இயல்பு.  அறியாமையில் இருந்து நீங்க முயற்சிக்க வேண்டும்.  அறியாமை காரணமாக எடுத்த முடிவைப் பிடிவாதமாகப் பின்பற்றுபவன்தான் மூர்க்கன்.  இலக்கண நூல்களில் இதை ஒரு கொள்கையாகச் சொல்வார்கள்.  ' தான் ஆட்டி தனாது நிறுத்தல் ' என்று அதற்கு பெயர்.  தான் எடுத்த முடிவு தவறானது என்பதை மனசாட்சி சுட்டிக்காட்டிய பின்னாலும்கூட  அந்த முடிவில் இருந்து பின்வாங்காமை மூர்க்கதுவமாகும்.
-- ஞான வாயில் .தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013. 

Wednesday, November 26, 2014

மலமாதம்.

 இரண்டு அமாவாசை வரும் மாதங்களில் மங்கள காரியங்கள் செய்யக் கூடாதா?  ஏன்?
      இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்.  திருமணம் மற்றும் புதிய திருக்கோயில் கும்பாபிஷேகம் போன்றவை செய்யக்கூடாது.  பழைய திருக்கோயில் கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காது குத்தல் போன்றவை செய்யலாம்.  தவிர்க்க முடியாத பட்சத்தில் மலமாத தோஷ சாந்தி செய்து விட்டு சிலர் திருமணமும் நடத்துகிறார்கள்.
--  மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013. 

Tuesday, November 25, 2014

SMART

 குறிக்கோள் நிர்ணயிப்பதன் தன்மையை  SMART  என்று சுருக்கமாகச் சொல்வார்கள்.  கடினமாக உழைப்பதைவிட புத்திசாலித்தனமாக உழைப்பது சிறந்தது என்பதைத்தான் இந்த SMART என்கிற வார்த்தை குறிக்கிறது.  இதன் விரிவாக்கத்தைப் பார்ப்போம்.
S       Specfic               குறிப்பானதா
M       Meaningful          அர்த்தமுள்ளதாக
A       Action oriented    நடைமுறைப்படுத்தத்தக்கதாக
R       Rewarding          பயனளிக்கக்கூடியதாக
T       Time-bound        நேரக் கட்டுப்பாட்டோடு இருப்பதாக
-- கோ.ரமேஷ், சுட்டி விகடன் . 15 . 01 . 2013                                        
இதழ் உதவி: இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

Monday, November 24, 2014

வணக்கங்கள் பலவிதம்

 உயர்ந்தவர்களை வணங்குவதில் பலவிதமான முறைகள் உண்டு.  ஒரு கையால் வணங்குதல் ஏகாங்க நமஸ்காரம் எனப்படும். இது இக்காலத்திய சல்யூட் போன்றது. வலது கையை மட்டும் எடுத்துத் தலை மீது வைத்து வணங்குவது ' துவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு கைகளையும் தலை மீது வைத்து வணங்குவது ' திரிவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டி, தலை ஆகியவற்றால் வனங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.  இது பெண்களுக்குரிய வணக்க முறையாகும்.  இரண்டு கால்கள், இரண்டு கைகள், இரண்டு காதுகள், தலை, மார்பு ஆகியவற்றை பூமியில் பதித்து எட்டு அங்கங்களால் வணங்குவது ' அஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  நெடுஞ்சாண் கிடையாக எல்லா உறுப்புகளும் தரையில் படும்படி  வணங்குவது ' சாஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இதுவும் ஆண்களுக்குரிய வணக்க முறையாகும்.
---   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013.