Tuesday, April 28, 2015

" சான்ஃபிரான்சிஸ்கோ "

 அமெரிக்காவில்   சான்ஃபிரான்சிஸ்கோ  நகரில்  ' தி  மிஸ்ட்ரி  ஸ்பாட்' னு  ஒரு  இடம்  இருக்கு.  விஞ்ஞானத்தில்  உள்ள  அத்தனை  விநோதங்களையும்  அங்கே  பார்க்கலாம்.  அதாவது,  இறக்கத்தில்  உருட்டிவிடும்  பேனா,  உருட்டிவிட்ட  இடத்திற்கே  திரும்ப  வரும்.  நாம  சரிவில்  இறங்கி  நடக்குற  மாதிரி  இருக்கும்.  ஆனா,  நம்மைப்  பார்க்கிறவங்களுக்கு  நாம்  நேரா  நடக்கிற  மாதிரி  இருக்கும்.  திடீர்னு  பார்த்தா  சுவரோட  மையத்தில்  இருப்போம்.  இப்படி  அறிவியல்  குறும்புகள்  நம்மை  அச்சர்யத்தில்  ஆழ்த்தும்  இடம்  அது! '.
-- K.சந்தானம்  குடும்பத்துடன்  சென்றபோது  பார்த்தது. 

Monday, April 27, 2015

தாலாட்டு.

தாலாட்டு  பாடி  குழந்தைகளைத்  தூங்கவைக்கும்  ' மம்மி ' கள்  இப்போது  இருக்கிறார்களா?
     அரசருக்குப்  பிறந்தாலும்  அரச  மரத்தடியில்  பிறந்தாலும் தாலாட்டு  பாடி  குழந்தைகளைத்  தூங்கவைப்பது  என்பது  அழியாமல்,  உலகின்  கடைசி  தாய்  இருக்கும்  வரை  தொடரும்.
     ருமேனியத்  தாய் ' ஹையா...ஹையா...மைக்கா  பையா...'  என்று  தாலாட்டை  ஆரம்பிக்கிறாள்.  செக்  நாட்டில்  தாலாட்டு ' ஹூல்லி  பேபி...'  எனத்  தொடங்கும்.  கிரேக்கர்கள்  ' நானி...நானி...என்  பாப்பா...' என்றும்,  துருக்கியில்  ' ஹூஹூ ஹூஹூ  பேபி...' என்றும்,  நாம் ' லுலுலுலுவாயி...' என்றும்,  தாலாட்டுகிறோம். 4,000  ஆண்டுகளுக்கு  முன்பு  ஒரு  தாய்  குழந்தையைத்  ' தூக்கமே  வா!  என்  குழந்தையைத்  தூங்க  வை.  சீக்கிரம்  வா...பளிச்சிடும்  அவன்  கண்களை  என்  விரல்களால்  மெள்ள  மூடுகிறேன்...  தூக்கமே  வா!  அவன்  உதடுகள்  எதையோ  முணுமுணுக்கின்றன... அந்த  முணுமுணுப்பு  அவனைத்  தூக்கத்தில்  இருந்து  எழுப்பிவிடாமல்... தூக்கமே  வந்து  சேரு!'  என்கிற  அர்த்தத்தில்  தாலாட்டு  பாடி  இருக்கிறாள்.  சுமேரியாவில்  அந்தத்  தாய்  பாடிய  பாடல்  நமக்குக்  கிடைத்திருக்கிறது.
-- ஹாய்  மதன்.  கேல்வி...பதில்.
-- ஆனந்த விகடன்.2 .5 . 2012.  

Sunday, April 26, 2015

இன்றைய கல்விமுறை

" இன்றைய  கல்விமுறை  எப்படி  இருக்கிறது?"
" உங்களுக்காக  ஒரு  குட்டிக்  கதை.  அந்தக்  கல்லூரியைச்  சுற்றிலும்  வீடுகள்  இருந்தன.  அந்த  வீட்டில்  வசிப்பவர்களின்  நாய்கள்  அடிக்கடி  கல்லூரி  வகுப்புகளுக்குள்  வந்து  படுத்துக்கொள்ளும்.  ஆசிரியர்களும்  அதைப்  பொருட்படுத்துவது  இல்லை.  திடீரென்று  ஒருநாள்  ஒரு  பேராசிரியருக்கு  ஆத்திரம்  வந்ததாம்.  மாணவர்களைப்பார்த்து  கோபத்துடன்  சொன்னாராம், ' இந்த  நாயை  விரட்டுங்கள்.  போன  வருஷமே  இந்த  நாய்  இந்த  கோர்ஸை  முடித்து  விட்டது!".
-- அ.பேச்சியப்பன்,  ராஜபாளையம். ( நானே  கேள்வி... நானே  பதில்! ).
--ஆனந்த விகடன்.11 .4 . 2012.  

Saturday, April 25, 2015

சிறுநீர் !

  இந்த  உலகம்  கடல்  நீரால்  சூழப்பட்டு  இருப்பதுபோல்,  உயிர்கள்  சிறுநீரால்  சூழப்பட்டு  இருக்கின்றன.  சிறுநீர்   இழிவானதன்று.  மாரடைப்பைத்  தடுக்கும்  மருந்து  சிறுநீரில்  தயாரிக்கப்படுகிறது.  சிறுநீரில் தங்கமெடுக்க  முனைந்த  ஆராய்ச்சி  வெள்ளை  பாஸ்பரஸ்  கண்டுபிடிப்பில்  முடிந்தது.  சில  நூற்றாண்டுகளுக்கு  முன்பு  வரைக்கும்  தோலின்  மினுமினுப்புக்கு  உடம்பெங்கும்  சிறுநீர்  பூசிக்கொண்டார்கள்  இங்கிலாந்துப்  பெண்கள்.
      சிறுநீரில்  ஊறிய  புல்லைத்தான்  பல்  துலக்கப்  பயன்படுத்துகிறார்கள்  எஸ்கிமோக்கள்.  கோமேயம்தான்  சிறந்த  கிருமி  நாசினி  என்று  கண்டுபிடித்தவர்கள்  இந்துக்களும்  ஆப்பிரிக்கர்களும்.
      ஒரு  டஜன்  எலிகள்  கூடி  ஒரு  நாள்  முழுக்கச்  சிறுநீர்  கழித்தாலும்  ஒரு  ஸ்பூன்கூட  நிரம்பாதாம்.  ஆனால்,  ஒரு  யானை  ஒரு  நாளில்  49  லிட்டர்  சிறுநீர்  கழிக்கிறதாம்.
      கொசுவுக்கும்  சிறுநீர்  உண்டு.  ஆனால்,  அதன்  கழிப்பறைதான்  உலகத்திலேயே  உயர்ந்தது.  மனித  உடல்தான்  கொசுவின்  சிறுநீர்  கழிப்பறை.  உடம்பில்  ஊசிபோடும்  கொசு,  தன்  சிறுநீரை  உடம்புக்குள்  கழித்து  விட்டு  அந்தக்  காலி  இடத்தை  நம்  ரத்தத்தால்  நிரப்பிக்கொள்கிறது.
      சிங்கத்தின்  சிறுநீர்  வாசம்  அத்துணை  சீக்கிரம்  தீராது.  காடுகளில்  குறிப்பிட்ட  எல்லைகளில்   சிறுநீர் கழித்துச்  செல்லுமாம்  சிங்கம்.  இது  என்  காடு,  இதற்கு  மேல்  எதிரிகள்  வரக்கூடாது  என்று  எச்சரிக்கை  செய்யுமாம்  சிங்கத்தின்  சிறுநீர் வாசம்.
      ஆட்டுக்  கிடாய்  தன்  உடம்பெங்கும் சிறுநீரைப்  பூசிக்கொள்ளுமாம்.  அது  வெள்ளாட்டைப்  பாலுணர்வுக்கு  அழைத்து  வெறியூட்டுமாம்.  ஆடுகளுக்கு  ' சென்ட்'  ஆகிவிடுகிறது  சிறுநீர்.
       மோஹியோ  பாலைவனத்து  ஆமைகளின்  உடம்பில்  மூன்றில்  ஒரு  பங்கு  சிறுநீர்தானாம்.  உடம்பில்  நீர்ச்  சத்து  குறைந்துபோனால்,  சிறு நீரைத்தான்  சுழற்சிக்கு  அனுப்புமாம்.
       மனிதனின்  பிரச்சனைகள்  ஆரம்பமாவது  இரண்டில்.  சிறுநீர்  அதிகம்  பிரிவது;  மற்றும்  சிறிதும்  பிரியாதது.  அவரவர்  சிறுநீர்  பருகுதல்  அவரவர்  நோய்தீர்க்கும்  என்பதும்  ஒரு  மருத்துவ  நம்பிக்கை.
       எனவே,  சிறுநீர் என்பது  சிறுமைக்குரிய  நீரல்ல,  ' சிறுநீர்  இன்றியும்  அமையாது  இவ்வுலகு '."
-- விகடன் மேடை.  வைரமுத்து  பதில்கள்.
-- ஆனந்த விகடன்.21 . 11 . 2012.  

Friday, April 24, 2015

கிளியோபாட்ராவின் கோபம்!

 நூல்களும்  நூலகங்களும்தான்  அறிவை  வளர்ப்பதற்கு  பயன்படும்  அறிவுச்  சோலைகள்.
     ஜூலியஸ்  சீசர்  எகிப்தின்  மிது  படையெடுத்து  அந்நாட்டை  அடிமைப்படுத்தச்  சென்றபோது  எகிப்தில்  அமைந்திருந்த  மிகப்பெரும்  நூலகத்தை  அவரது  படையினர்  தீயிட்டு  அழித்தனர்.
     பேரழகி  கிளியோபாட்ராவிடம்  சீசர்  மயங்கி  அவளிடமே  அவளது  நாட்டை  ஒப்படைத்தார்.  அவள்  அழகில்  சொக்கிப்போயிருந்த  அவர்  அவளுடனேயே  தங்கிவிட்டார்.
     ஒருநாள்  சீசரை  கிளியோபாட்ரா  அழைத்து, " உமக்கு  நான்  ஒரு  பெரும்  தண்டனை  வழங்க  இருக்கிறேன்.  என்னுடன்  சேர்ந்து  வாழ்வதால்  உம்மை  மன்னிப்பதாக  இல்லை.  உம்முடைய  படைவீரர்கள்  பிடித்த  கட்டடங்களை  திருப்பிக்  கட்டிவிடலாம்.  கொல்லப்பட்ட  வீரர்களைப்  பற்றிக்கூட  அது  போரில்  நடக்கக்கூடியதே  என  விட்டுவிடலாம்.  ஆனால்,  அறிவுப்பெட்டகமாக  விளங்கிய  அரிய  நூலகத்தை  உம்முடைய  முரட்டு  வீரர்கள்  எரித்து  விட்டார்களே!  ஆயிரமாண்டுச்  சிந்தனைகளை  இனி  மீண்டும்  எப்படி  பெறுவது?  எனவே,  இந்த  நாட்டின்  அரசி  என்ற  முறையில்  உம்மை  எரிக்கலாமா?  என்று  நினைக்கிறேன்"  என்று  கடிந்தாளாம்.  சீசர்  எரிக்கப்படவில்லை.  சமரசமாகி  விட்டது.  இந்நிகழ்ச்சியை  சுட்டிக்காட்டுவது  நூல்களின்  அவசியத்தை  வலியுறுத்தத்தான்!
-- தா.பாண்டியன்  எழுதிய  ' மாணவர்  மாணவியர்களுக்காக '  என்ற  நூலில்  இருந்து...
-- தினமலர்.  வாரமலர் .  நவம்பர் . 18,  2012. 

Thursday, April 23, 2015

விநாயகர் அகவல்.

  அவ்வையார்  இயற்றிய  விநாயகர்  அகவல்  பாடல்களில்  விடுபட்ட  2  வரிகள்  குறித்து  தஞ்சை  சரஸ்வதி  மகால்  நூலக  சுவடிகளில்  விளக்கமாக  கூறப்பட்டுள்ளது  என்று  நூலக  தமிழ்  பண்டிதர்  மணிமாறன்  தெரிவித்துள்ளார்.
     இதுபற்றி  அவர்  வெளியிடுள்ள  அறிக்கை:
     விநாயகர்  அகவல். நூலை  பல்லாயிரக்கணக்கான  மக்கள்  தினமும்  பூஜையின்போது  மனமுருகிப்  பாடுவது  வழக்கமாக  உள்ளது.  அப்படி  சிறப்புடைய  பாடல்களில்  2  வரிகள்  விடுபட்டுள்ளது  இப்போது  தெரியவந்துள்ளது.  பழந்தமிழ்  நூல்கள்  அனைத்தும்  ஓலைச்சுவடிகளில்  இருந்து  பதிப்பிக்கப்பட்டு  அச்சு  நூலாக  மலர்ந்துள்ளன.  அச்சு  நூல்  வெளியானபின்பு,  அதில்  சில  விடுபட்டாலோ  அல்லது  பிழைகள்  இருந்தாலோ  அவை  அடுத்தடுத்த  பதிப்புகளில்  சரி  செய்யப்படும்.  இந்த  வகையில்  நல்லூர்  ஆறுமுக  நாவலர்  பதிப்பித்த  விநாயகர்  அகவலிலும்  பின்னர்  பாலகிருஷ்ண  முதலியார்  பதிப்பிலும்  இதன்பின்பு  திருவாவடுதுறை  ஆதீன  பதிப்புகளிலும்  முதல்  பாடலான  ' சீதக்  களபச்செந்தாமரைப்பூ ' என்று  தொடங்கும்  பாடலில்  இரு  வரிகள்  விடுபட்டுள்ளன.  இந்தப்  பாடலில்  2 வது  வரியான  ' பாதச்  சிலம்பு  பலவிசை  பாடப்...' என்ற  வரிக்கு  அடுத்து " காரணத்  தண்டை  கணைக்கால்  சிலம்பும்,  பூரணக்கதலியைப்  போற்றுடையழகும்"  என்ற  2  வரிகள்  உள்ளன.  இந்த  வரிகள்  இதுவரை  பதிப்பித்துள்ள  பாடல்களில்  இல்லை.  இந்த  சுவடியில்தான்  உள்ளன.  இவ்வாறு  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர்.  18 - 11 - 2012. 

Wednesday, April 22, 2015

துணுக்கு மேடை.

*  வள்ளுவர்  எப்படி  இருப்பார்  என்று  தெரியாத  நிலையில்,  வள்ளுவருக்கு  உருவம்  கொடுத்தவர்  வேணுகோபால்  சர்மா.
*  தாமஸ்  ஆல்வா  எடிசன்  பள்ளிக்கூடத்தில்  படித்தது  மூன்றே  மாதங்கள்தான்.  எடிசனின்  ஆசிரியர்,  இவனுக்கு  தலையில்  மூளை  இல்லை,
   களிமண்தான்  இருக்கிறது  என்று  சொன்னாராம்.  ஆசிரியரின்  கணிப்பை  பொய்யாக்கி  1000 க்கும்  அதிகமான  சாதனைகளை  கண்டுபிடித்தார்  எடிசன்.
*  இந்தியாவில்  பெண்கள்  காவல்  நிலையம்  முதன்முதலில்  கேரள  மாநிலத்தில்  கோழிக்கோடு  நகரத்தில்  1973ம்  ஆண்டு  தொடங்கப்பட்டது.
*  தமிழ்நாட்டில்  அமைக்கப்பட்ட  முதல்  நீர்மின்  திட்டம் ' பைக்காரா '.  இது  1929ல்  தொடங்கி  மூன்று  கட்டங்களாக  1956ல்  கட்டி  முடிக்கப்பட்டது.
   3080  அடி  உயரத்தில்  இருந்து  விழும்  நீரைக்  கொண்டு  இங்கு  மின்சாரம்  உற்பத்தி  செய்யப்படுகிறது.
--- தினமலர்.  பெண்கள் மலர்.  நவம்பர்  17,  2012.