Friday, July 31, 2015

'குரு பூர்ணிமா' - ஆடிப் பவுர்ணமி!

  ( சிறப்பு )
( இன்று  குரு  பூர்ணிமா )
     ஆடி  மாதத்துப்  பவுர்ணமி  நாளைக்  'குரு  பூர்ணிமா'  என்று  சொல்வார்கள்.  குரு  என்று  இங்குக்  குறிப்பிடப்படுபவர்  வேதவியாசர்  ஆவார்.
     இவர்  நாராயணனை  முதல்வராகக்கொண்ட  குரு  பரம்பரையில்  வருபவர்.  நாராயணனிடமிருந்து  பிரம்மதேவர்  பிறந்தார்.  பிரம்மனிடமிருந்து  வசிஷ்டர்  வந்தார்.  வசிஷ்டர்  மகன்  சக்தி.  சக்தியின்  மகன்  பராசரர்.  பராசரருக்கும்  சத்தியவதிக்கும்  மகனாகப்  பிறந்தவர்  வியாசர்.
     வேதவியாசர்  அருளிய  பிரம்மசூத்திரத்துக்கு  ஸ்ரீசங்கரர்  உரை  எழுதியிருக்கிறார்.  குரு  பூர்ணிமா  வியாச  பூஜையை  முடித்தபின்  சாதுர்மாஸ்ய  விரத  சங்கல்பம்  நடக்கும்.  சங்கல்பம்  செய்துகொண்ட  இடத்தில்  அந்த  துறவியர்  நான்கு  பட்சங்கள்  தங்கியிருப்பர்.
--தினமலர்.  பக்திமலர்.  30-7-2015.
     பூமத்திய  ரேகைக்கு  வடக்கே  சூரியனின்  ஓட்டம்  இருக்கும்போது ( ஜனவரி  முதல்  ஜூன்  வரை )  உத்ராயணம்  என்கிறோம்.  சூரியனின்  ஓட்டம் தெற்கே  இருக்கும்போது ( ஜூலை  முதல்  டிசம்பர்  வரை )  தட்சிணாயணம்  என்கிறோம்.
     உத்திராயணத்தில்  வரும்  முதல்  பவுர்ணமியை ( தை  மாதம் )  'தன்ய  பவுர்ணமி'  என  அழைக்கிறோம்.  தட்சிணாயணத்தில்  வரும்  முதல்  பவுர்ணமியை ( ஆடி  மாதம் )  'குரு  பவுர்ணமி'  என்கிறோம்.  இந்த  பவுர்ணமி  ஜூலை  மாதத்தில்  ஏற்படும்  தட்சிணாயண  காலத்தில்  6  மாதங்கள்  'உள்வாங்கிக்கோள்ளும்  தன்மையடையதாகவும்,  உத்திராயண  காலத்தில்  6  மாதங்கள்  'நிறைவடையும் '  தன்மையுடையதாகவும்  உள்ளன.
--சத்குரு  ஜக்கி  வாசுதேவ்.
-- தினமலர். திருச்சி. 31- 7-2015.  

கிழமை -- நட்சத்திரம் -- நிவேதனம்

கிழமை, நட்சத்திரம் மற்றும் திதி அடிப்படையில் அம்பாளுக்கு  ( நவராத்திரி நாட்களில் ) நிவேத்திக்க வேண்டிய பொருட்கள் :
ஞாயிறு  --  சர்க்கரைப் பொங்கல்.
திங்கள்  --  பால் சாதம்.
செவ்வாய்  --  வெண் பொங்கல்.
புதன்  --  கதம்ப சாதம்.
வியாழன்  --  எலுமிச்சம் பழ சாதம்.
வெள்ளி  --  பால் பாயசம்.
சனி  --  புளியோதரை அல்லது தேங்காய் சாதம்.
-- தினமலர். பக்திமலர். அக்டோபர் 3,2013.  

Thursday, July 30, 2015

கவிதை

 (சிறப்பு )
புதையல்  புதைகிற  வேளை ...!
விதைகள்  வெளிவரும்  நாளை ...!!
 வல்லரசின்  விருட்சமே  விடைகொடுத்தோம் - உன்
 விருப்பங்கள்  நிறைவேற்ற  படையமைத்தோம்
 நல்லபடி  ஓய்வெடுங்கள்  நாயகரே - உங்கள்
 நிழலாக  வளர்வார்கள்  வாலிபரே !

 கலாம்கண்ட  கனவென்றும்  கலையாது - அவர்
 கொடைதந்த  இலட்சியங்கள்  குலையாது
 சலாம்சொல்லி  வழியனுப்பும்  வையகம் - அவர்
 சொன்னபடி  சிலிர்த்தெழுக  பாரதம் ...
-- ஸ்ரீ தைலா  சில்க்ஸ்,  திருச்சி -2
-- தினமலர் . திருச்சி.  வியாழன் .  ஜூலை,  30, 2015.  

இந்தியன் எனும் ஏமாளி

  இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது சமீபத்திய 'குளோபல்
என்.சி.ஏ.பி. ஆய்வு. இந்த நிறுவனம் கார்களை வேகமாக ஓட்டிவந்து மோதிப் பார்க்கும் சோதனைக்கு உள்படுத்தியபொது, 'சுசூகி - மாருதி  ஆல்டோ 800,'
'டாட்டா நானோ', 'ஃபோர்டு ஃபிஃகோ',  'ஹுண்டாய் ஐ- டென்,'  'ஃபோக்ஸ்வேகன் போலோ' ஆகிய ஐந்து சிறிய ரக கார்களும் ஒரு விபத்து நேரிட்டால் அப்பளம்போல நொறுங்கிப்போகும் வாய்ப்புடையவை என்பதும் அவற்றில் பயணிப்போருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையில் முன்னணியில் இருப்பவை இந்த கார்கள்.  நம் நாட்டில் விற்பனையாகும் ஐந்துகார்களில் ஒன்று இவற்றில் ஏதேனும் ஒரு கார் என்கிற பின்னணியில் இந்தச் சோதனையின்போது வெளிவந்திருக்கும் உண்மைகள் அதிரவைக்கின்றன.
     இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக ஆய்வை நடத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயம், இந்திய நுக்ர்வோரை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி மதிப்பிடுகின்றன என்பதை உணர்த்தப் போதுமானது.  அதாவது, 'இந்த கார்களில் காற்றுப் பைகள் கிடையாது.  நிறுத்த முடியாத அளவுக்கு கார் வேகமாகச் செல்லும்போது, இந்த காற்றுப் பைகளைப் பயன்படுத்தினால் காரின் வேகம் கணிசமாக மட்டுப்படும்.  ஆனால், அவை பொருத்தப்படவில்லை.  அதேசமயம் இதே கார்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்படும்போது அவை காற்றுப்பைகளுடனே விற்கப்படுகின்றன ' என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.
     இந்த ஆய்வறிக்கை வெளியான உடனேயே இந்த கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்,  "கார் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் தடுப்பதுதான் எம் முதல் நோக்கம்; அதற்கேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்போம்" என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 'ஃபோக்ஸ்வேகன்' நிறுவனம் தன்னுடைய 'போலோ' ரக கார்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கிறது.  கூடவே, 'இனி விற்கப்படும் கார்களில் காற்றுப் பைகளும் பிரேக்குகள் பழுதாகாமல் இருப்பதற்கான சாதனமும் சேர்த்தே விற்கப்படும்.  அவற்றுக்காகக் கூடுதலாக 2.7% கட்டணம் வசூலிக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறது.
     இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 2012-ல் மட்டும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.  இவற்றில் கார் பயணிகளின் இறப்பு சுமார் 17%.  இந்தியாவில் விற்கும் கார்களில் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார்களின் சந்தை 80%. மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த் சந்தை மேலும் பிரமாண்டமாக விரிவடையும்.  எனில், எவ்வளவு பெரிய ஆபத்து இது?
     பெருனிறுவனங்களுக்கு எப்போதுமே லாபமே முக்கியக் குறிக்கோள் என்பதும் இந்திய சந்தைக்கு அவை கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதும் ஆச்சரியமானதல்ல.  ஆனால்,இப்படிப்பட்ட ஆபத்துகளை எல்லாம் அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்க்கிறது?
--- தலையங்கம்.  கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ்.  பிப்ரவரி 3 , 2014.

Wednesday, July 29, 2015

'கட் ஆப்' மதிப்பு இப்படித்தான் !

 இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர முக்கிய பாடங்களின் கூட்டுத் தொகையை கொண்டு 'கட் ஆப்' நிர்ணயிக்கப்படுகிறது.
     இன்ஜினியரிங் படிப்பில் சேர கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு 'கட் ஆப்' நிர்ணயிக்கப்படும்.  மருத்துவ படிப்புக்கு உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களின் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும்.
     உதாரணமாக கணக்கு பாடத்தில் 200, இயற்பியலில் 200, வேதியியலில் 200 மதிப்பெண் பெற்றிருந்தால் அவரின் கட் ஆப் 200 ஆக வரும்.  மதிப்பெண் வேறுபடும்போது கட் ஆப், மதிப்பெண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதற்கு, இன்னொரு உதாரணம் பார்க்கலாம்.  கணக்கு பாடத்தில் 190 மதிப்பெண் பெற்றிருந்தால் 190 ஐ, 2 ஆல் வகுக்க வேண்டும்.  இதன் மதிப்பு 95 ஆக வரும்.
     இதேபோல், இயற்பியல் பாடத்தில் 180 பெற்றால் அதை 4 ஆல் வகுக்க வேண்டும்.  மதிப்பு 45 ஆக வரும்.  வேதியியலில் 160 பெற்றால் அதை 4 ஆல் வகுக்க வேண்டும்.  இதன் மதிப்பு 40 ஆக வரும்.  இப்பொழுது இந்த மூன்று மதிப்பையும் கூட்ட வேண்டும்.  அதாவது 95, 45, 40 ஆகிய மூன்று மதிப்பையும் கூட்ட வேண்டும்.  இதன் மொத்த மதிப்பு 180 ஆக வரும்.
     இந்த மதிப்பே கட் ஆப் மார்க்.  இந்த மதிப்பெண்ணை வைத்தே இன் ஜினியரிங் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  அதேபோல், மருத்துவ படிப்பை பொறுத்தவரையில் உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு கட் ஆப் நிர்ணயிக்கப்படுகிறது.  இதில், உயிரியல் பாட மதிப்பெண்ணை 2 ஆல் வகுப்பார்கள்.  வேதியியல், இயற்பியல் பாடத்தேர்வு மதிப்பெண்ணை 4 ஆல் வகுப்பார்கள்.  இதன் கூட்டு மதிப்பே கட் ஆப் மதிப்பெண்ணாகும்.
-- தினமலர் நாளிதழ்.  சனி,  மே 10,  2014. 

Tuesday, July 28, 2015

தமிழில் பாரசீகம்


      நம்  தமிழ்  மொழியில்  200க்கும்  அதிகமான  பாரசீக  மொழிச்  சொற்கள்  கலந்துள்ளதாக  மொழியியல்  அறிஞர்கள்  சொல்கின்றனர்.
      ஜாகீர்,  ஜமீன்,  ஜமீந்தார்,  ஜமக்காளம்,  குல்கந்து,  குமாஸ்தா,  பீங்கான்,  ரசீது,  புதினா,  பிஸ்தா,  பந்தோபஸ்து,  பஜார்,  லுங்கி,  குஸ்தி  போன்றவை  அதில்  சில.
-- ச.ஹேமலதா,  திருச்சி.
-- தினமணி  இணைப்பு.  20  அக்ட்டோபர் 2012.                           

Monday, July 27, 2015

பொதுப் போக்குவரத்துக்குக் கைகொடுப்போம்


     (  சிறப்பு )
     இன்றைய  உலகமயமாக்கல்  கொள்கை  அமலாக்கத்  துவங்கிய  பிறகு,  வாகனத்  தொழிலை  முன்னேற்றுகிறோம்  என்ற  பெயரில்  செய்யப்பட்ட  நடவடிக்கைகள்  காரணமாக  உயர்வர்க்கத்தினர்  மட்டூமே  கார்  ஓட்டுவது  என்பதுபோய்,  நடுத்தர  மக்களும்  ஏராளமானோர்  கடனில்  கார்வாங்கி  ஓட்டும்  நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளார்கள்.  தேவை  என்பது  போய், அந்தஸ்து  என்ற  போலிக்  கவுரவதில்  சிக்கிக்கொள்ளும்  நிலையில்  கொண்டுபோய்  அது  நம்மைத்  தள்ளிவிட்டது.  அதனால், ஒரே  வீட்டில்  ஒவ்வொருவருக்கும்  ஒரு  கார்  என்ற  நிலைக்கு  வந்துகொண்டிருக்கிறோம்.  காலையில்  8  மணி  முதல்  10  மணி  வரையிலான  பீக்  அவரில்  ஏற்படும்  நெரிசலின்போது, 99%  கார்களில்  ஒரே  ஒருவர்  மட்டுமே  பயணிப்பதைக்  காண  முடியும்.  இதனால்  காற்று  மாசுபாடு  மட்டுமல்ல, நம்நாடு  இறக்குமதி  செய்ய  வேண்டிய  கச்சா  எண்ணெயின்  அளவு  அதிகரிக்கிறது.  அந்நியச்  செலாவணி  வீணாகிறது.  இந்நிலை  மாற  வேண்டுமென்றால், தேவைக்கு  மட்டுமே  காரை  எடுப்பது,  ஒருவர்  மட்டும்  பயணிப்பதைத்  தவிர்த்து  பொதுப்  போக்குவரத்தை  உபயோகிப்பது,  அருகிலிருக்கும்  இடங்களுக்கு  சைக்கிளில்  செல்வது  போன்ற  நடவடிக்கைகளை  முடிந்த  வரையில்  மேற்கொள்ள  வேண்டும்.
--- கி. ரமேஷ், மின்னஞ்சல்  வழியாக...
-- இப்படிக்கு  இவர்கள்.  கருத்துப்  பேழை.
-- 'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜூலை 27, 2015.