Wednesday, September 30, 2015

பெரியார்.

எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5. 1933 ந் தேதி மாலை 7:45 மணிக்கு ஆவி நீத்தார்.  இதற்காக நான் துக்கப்படுவதா, மகிழ்ச்சியடைவதா?  நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?
ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா?
இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா?
உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா?
ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா?
எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?  எதுவும் விளங்கவில்லையே!
*  பெரியார் சுற்றுப்பயணம் செய்த தூரம் 8,20,000 மைல்கள்.
*  அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700.
*  உரையாற்றிய நேரம் 21,400 மணி நேரம்.
-- ( குடி அரசு - தலையங்கம் 14. 05.1933 ).
--  ' தி இந்து ' நாளிதழ்.  செவ்வாய், டிசம்பர் 24, 2013. 

Tuesday, September 29, 2015

கோபம் ஒரு நோய் !

*பலருக்கும் தெரியாத உண்மை இது.  கோபம் என்பது பழக்கம் அல்ல.  அது ஒரு நோய்.  சிலருக்கு கோபமே அவர்களின் வாழ்வியல் அங்கமாகிவிட்டிருக்கிறது.  சமூகத்தில் அன்பானவர், புத்திசாலி, கறார் பேர்வழி, கஞ்சப் பிசினாரி, சபலக்காரர் என்கிற வரிசையில் கோபக்காரர்களும் மிக அதிகமாகவே இருக்கிறார்கள்.  இளம் வயதிலேயே இதற்குத் தீர்வு கானாவிட்டால் இவர்கள் ஆயுட்காலக் கோப நோயாளிகளாகிவிடுவர்.
*கோபம் அதிகரிக்க அதிகரிக்க ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தின் வீச்சு அதிகரிக்கிறது.  அப்போது அக்குழாய்களின் உட்பகுதி தசைகளில் நுண்ணிய கிழிசல்கள் ( Micro teams) ஏற்படுகின்றன.  இது தொடர்ந்தால் இதயத் தாக்குதல், பக்கவாதம் நோய்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு.
* ஏற்கனவே இதயத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து கோபப்படுவதால் இதயத்தில் ரத்தத்தை பீய்ச்சும் திறன்
  ( Pumping efficiency) பாதிக்கப்படுகிறது.
--  டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  டாக்டர் மோகன் வெங்கடாசலபதி. ( உணர்ச்சிகள் ). வாழ்வு இனிது. ரசித்து வாழ வேண்டும்.
-- ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013. 

Monday, September 28, 2015

மணல் ரகசியம்.

தஞ்சை பெரிய கோயிலில் ' புதைந்திருக்கும் ' மணல் ரகசியம்.
கட்டிடக்கலை வல்லுநர்கள் புதிய தகவல்.
கீழே இரு மடங்கு சுமை    
     பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்ததில், கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமான ஆற்றுமணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.  அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இருமடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
     அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டி கட்டியிருக்கிறார்கள்.  கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும்.  அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது.  பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.  அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
தலையாட்டி பொம்மை போல...
     தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ.  தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன்.  அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.  இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைதானே சமப்படுத்திக்கொள்ளும்.  இதனை zero settlement of foundation என்பர்.  இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது.  அசையுமே தவிர விழாது.  தலையாட்டி பொம்மையின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
     இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது.  அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மனலும் இடம்பெறுகின்றன.
     2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை.  அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை.  350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.
      இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல.  தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல்.  ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல்.  இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல்.  மேற்கு தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.(கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்யம்மன் ,  கூறக்கேட்டது ) பூச்செண்டு.
-- ' தி இந்து ' நாளிதழ்.  செவ்வாய், டிசம்பர் 24, 2013.  

Sunday, September 27, 2015

கோபம்

ஆண் கோபம், பெண் கோபம் : எது அதிகம்?
     சமூகக் கட்டமைப்பில் ஆணும் பெண்ணும் சமம்.  ஆனால், உடலியல் தொடங்கி உளவியல் வரை இருவருக்குமான இடைவெளி அதிகம்.  அதனால்தான் ஆண் கோபம் வேறு, பெண் கோபம் வேறு என்கிறோம்.  பெரும்பான்மை ஆணின் கோபம் மூர்க்கக் கோபம்.  முன்பின் யோசிக்காத கோபம்.  சமயங்களில் வக்கிரம் கொப்பளிக்கும் கோபம்.
     ஆண் கோபத்துக்கு கொஞ்சமும் வீரியம் குறைந்தது அல்ல பெரும்பான்மை பெண் கோபம்.  ஆனால், அதனை வெளிப்படுத்துவதில் இருக்கிறது வேறுபாடு.  பெண் கோபம், விளைவுகளை யோசிக்கும்.  ஆண் அளவுக்கு அழிக்கத் துணியாது.  கொஞ்சமேனும் கருணை காட்டும்.
     இந்த வேறுபாடுகளை அடையாளம் காணும் மருத்துவ அறிவியல் அதற்குக் காரணமும் சொல்கிறது.  சரிசமமாக உடைத்த அரை வட்டத் தேங்காய் வடிவத்தில் இரு பாகங்களாக இருக்கிறது நமது மூளை.  இதன் பெயர் செரிபிரல் ஹெமிஸ்பியர்
( Cerebral  hemisphere ).  இந்த இரு அரை வட்டப் பகுதிகளையும் இணைக்கும் நார்ப் பொருளிலான சுவர்தான் கார்பஸ் கலோசம் ( Corpus callosum).  வலது அரை வட்ட மூளைக்கும் இடது அரை வட்ட மூளைக்கும் தகவல் தொடர்புகளை கொண்டுசெல்வது இந்த கார்பஸ் கலோசம்தான்.  தகவல் தொடர்பில் தபால்காரருக்கு உதவுவதற்காக சுமார் 250 மில்லியன் நரம்பு முனைகள் ( Axons ) பரிமாற்றப் பணிகளில் அதிவேகத்தில் ஈடுபடுகின்றன.
      வலது மூளையை எமோஷனல் பிரைன் ( Emotional brain ) என்றும் இடது மூளையை லாஜிக்கல் பிரைன் ( Logical brain ) என்றும் சொல்கிறது மூளை நரம்பியல்.  வலது மூளை உணர்ச்சிகரமானது.  வேகமானது.  உடனடியாகச் செயல்பட உறுப்புகளுக்குக் கட்டளையிடக்கூடியது.
     இடது மூளையோ யோசிக்கும் தன்மை கொண்டது.  நாகரிகம், சிந்தனைகள், பகுத்தாய்வு, பன்திறன்கள், கூச்சம், கண்னியம், நட்பு, காதல், தாய்மை உள்ளிட்ட உணர்வுகள் எல்லாம் ஊற்றெடுப்பது இடது மூளையில்தான்.  விலங்கிடம் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் ஆறாம் அறிவு இதுதான்.
     வேகமும் விவேகமும் சேர்ந்து இயங்கும்போதுதான் ஒரு மனிதனின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.  அதற்கு இரு அரை வட்ட மூளைகளுக்கான தபால்காரரும் மேலாளருமான கார்பஸ் கலோசம் ஆரோக்கியமானவராக இருத்தல் அவசியம்.  இவர்தான் இடது மூளை சிந்தித்து உருவாக்கும் கருத்தை வலது மூளைக்கு எடுத்துச் செல்கிறார்.  அங்கு சிற்சில காய் நகர்தலுக்குப் பிறகு அக்கருத்து, செயலாக்கம் பெறுகிறது.  இவைகள் எல்லாம் நமது கற்பனைக்கு எட்டாத வேகத்தில் நடக்கக்கூடியவை.  ஆனால், தபால்காரர் ஆரோக்கியம் இழந்தால், சரியாகச் செயல்படத் தவறினால், தகவல் தொடர்பில், ஆலோசனை பெறுவதில் குளறுபடி நடக்கிறது.  250 மில்லியன் நரம்பு முனைகளும் ஒரே நேரத்தில் தாறுமாறாக இயங்குகின்றன.  யோசிக்கவே இயலாமல் ஸ்தம்பிக்கிறது மூளை.  கோபம் கண்ணை மறைத்துவிட்டது என்று சொல்வோமே அது இதுதான்.
     இயல்பிலேயே ஆண் மூளையின் கார்பஸ் கலோசம் என்கிற நார்ச் சுவரின் தடிமன் மிகக் குறைவு.  மென்மையானது.  ஆனால், பெண் மூளையின் கார்பஸ் கலோசம், ஆண் மூளையில் இருப்பதைவிட இருமடங்கு தடிமன் அதிகமானது.  உறுதியானதும்கூட.  இதனால்தான் இயல்பிலேயே பெண் மூளை, ஆண் மூளையைவிட யோசித்துக் கோபப்படுகிறது.  புத்திசாலித்தனமாகக் கோபப்படுகிறது. அழகாகக் கோபப்படுகிறது.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  டாக்டர் மோகன் வெங்கடாசலபதி. ( உணர்ச்சிகள் ). வாழ்வு இனிது. ரசித்து வாழ வேண்டும்.
-- ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013.  

Saturday, September 26, 2015

ஸ்ரீரங்கம்.

உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கம்.
     ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.  13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.
தங்க விமானம்
     மூலமூர்த்தியாகிய ஸ்ரீரங்கநாதப் பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார்.  கருவறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கருவறைமேல் தங்க விமானம் ஜொலிக்கிறது.  தங்க விமானத்தின் தெற்குப் பக்கம் பரவாகதேவரின் தங்க சிலையும் பளபளப்புடனும் நேர்த்தியுடனும் விளங்குகிறது.
கம்பன் காவியம் அரங்கேறிய தலம்
     கவிச்சக்ரவர்த்தி கம்பன், தன் உன்னதப் படைப்பான ' ராமாவதாரம் ' என்ற ராமாயணக்காப்பியத்தை அரங்கேற்றம் செய்ய ஸ்ரீரங்கத்தையே தேர்ந்தெடுத்தான்.  ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி அருகே கோயில் கொண்ட நரசிம்மர் சன்னதியில்தான் கம்பன் தன் காவியத்தை அரங்கேற்றினான்.
     கம்பன் தன் காவியத்தின் புதிய படைப்பான ' இரணியன் வதைப்படல'த்தைப் பாடியபோது, ' மேட்டு அழகிய சிங்கர் ' என்ற திருநாமம் கொண்ட நரசிம்ம மூர்த்தி தன் தலை அசைத்து கம்பன் காவியம் அரங்கேற அங்கீகாரம் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
-- புலவர் முத்து வெங்கடேசன். ஆனந்த ஜோதி.
--  ' தி இந்து ' ஆளிதழ்.  வியாழன்,  டிசம்பர் 19, 2013. 

Friday, September 25, 2015

கடவுள் எதற்காக?

  மனிதனே எல்லாவற்றையும் தன்னுடைய முயற்சியால் சம்பாதித்துக் கொள்கிறான் என்றால் கடவுள் எதற்காக?
      உங்களுக்காக கண்ணதாசன் சொன்னதைக் கேளுங்கள்...
பிறப்பின் வருவது யாதெனக்
கேட்டேன்
பிறந்து பாரென இறைவன்
பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதென
கேட்டேன்
அறிந்து பாரென இறைவன்
பணித்தான்

அன்பெனப்படுவது யாதென
கேட்டேன்
அளித்துப் பாரென்றான்

மனையாள் சுகமெனில் யாதெனக்
கேட்டேன்
மணந்து பாரென்றான்

பிள்ளை என்பது யாதெனக்
கேட்டேன்
பெற்றுப் பாரென்றான்

முதுமை என்பது யாதெனக்
கேட்டேன்
முதிர்ந்து பாரென்றான்

இறப்பின் பின்னது ஏதெனக்
கேட்டேன்
இறந்து பாரென்றான்

அனுபவித்தே அறிவது
வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்
கேட்டேன்

அந்த அனுபவமே நான்தானே
என்றான்.
-- ஸ்ரீ கேள்வி பதில்.
-- தினமலர். பெண்கள்மலர் இணைப்பு.  21-12-2013.  

Thursday, September 24, 2015

விழிப்புடன் இருங்கள்!

   (  சிறப்பு )
     பைக்  வைத்திருப்போர்,  பெட்ரோல்  பங்க்களில், பெட்ரோல்  நிரப்பும்போது  கவனிப்பது  உண்டா? ...
     நீங்கள்  கொடுக்கும்   பணத்திற்கு  ஏற்ற  பெட்ரோல், பைக்  டேங்கை  நிரப்பும்  முன், கையில்  உள்ள  பெட்ரோல், 'பம்ப் நாக்'கை  அழுத்தி  விடுவார்.
     நீங்கள்,  100  ரூபாய்க்கு  பெட்ரோல்  போடச்  சொல்லி  இருப்பீர்கள்;   பெட்ரோல்  நிரப்பும்  நபர், 100  ரூபாய்  என,  பொத்தானை  அழுத்தி,  பெட்ரோல்  போடுவார்.  மீட்டரில், 90  ரூபாய்  நெருங்கும்  சமயம்  அவர், 'லாக்கை'  அழுத்தி, பின்  விடுவிப்பார்.  பின்,  மெதுவாக   பெட்ரோல்  இறங்கி  100  ரூபாயை  தொடும்.  இது  எல்லோரும்  பார்க்கும்  விஷயம்தான்.
     இந்த  நடவடிக்கையால்,  ஐந்து  ரூபாய்  முதல்,  10  ரூபாய்  வரை  மதிப்புள்ள   பெட்ரோல்,  உங்களுக்கு  குறைகிறது.  எவ்வாறெனில்,   பெட்ரோல், 'பம்ப்  மீட்டர்'  ஒரே  சீராக  இயங்கினால்  தான்,  சரியாக  100  ரூபாய்க்கு  என  இறங்கும்.  நடுவில்  தடை  செய்யப்பட்டு, பின்  இயக்கினால்,  குறைந்த  அளவு  பெட்ரோல்  மட்டுமே  கிடைக்கும்.
     இதுபோல்  நூதன  திருட்டு  மூலம்   பெட்ரோல்  பங்க்  உரிமையாளர்கள், தினமும், 20  ஆயிரம்  ரூபாய்  வரை  லாபம்  அடைகின்றனர்.  உங்கள்  பணத்தை, உங்கள்  கண்  முன்  திருடுவதை  பார்த்துக்  கொண்டிருக்காதீர்கள்.  தைரியமாக  தட்டிக்  கேளுங்கள்!
     நுகர்வோரே... ஏமாற  தயாராகாதீர்கள்;  விழிப்புடன்  இருங்கள்!
-- இது  உங்கள்  இடம்.
-- தினமலர்  சென்னை  ;  செவ்வாய் ;  30-6-2015.
--  இதழ் உதவி: S.B.மாதவன், விருகம்பக்கம். சென்னை .92.