Tuesday, October 20, 2015

பொன்மொழி

*  மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும்.  இந்த நியதிக்கு யாரும் விதி
   விலக்கு அல்ல.  - புத்தர்.
*  உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்.  காலம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும்.  இனி அழுகை என்ற
   பேச்சே இருக்கக் கூடாது.  சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.  -- சுவாமி விவேகானந்தர்.

Monday, October 19, 2015

புதிய தீவு

எரிமலை வெடிப்பால் ஜப்பான் அருகே புதிய தீவு உதயம்.
     பசிபிக் பெருங்கடலில் உள்ள எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்புகளால் ஜப்பான் அருகே குட்டித் தீவு புதிதாக உருவாகியுள்ளது.
     இந்த சிறுதீவு 660 அடி சுற்றளவு கொண்டது.  போனின் தீவுகள் என அழைக்கப்படும் ஆளில்லாத் தீவு அருகே இந்த புதிய தீவு  உருவாகியுள்ளது என ஜப்பான் வானியல் ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.
     டோக்கியோவிலிருந்து தென் திசையில் 1,000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் 30 சிறு தீவுகள் உள்ளன.  இவை, பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் எரிமலை வெடிப்புகளால் உருவானவை.  எரிமலை தொடர்ந்து குழம்பை வெளியேற்றி வருவதால் அப்பகுதியில் அடர்கரும்புகை, சாம்பலுடன் வெளியேறியபடி உள்ளது.
     கடந்த 1970ஆம் ஆண்டுகளின் மத்தியில் இப்பகுதியில் உள்ள எரிமலைகள் குமுறத் தொடங்கின.  அதற்குப் பிறகு தற்போதுதான் எரிமலகள் லேசாக குமுறி வருகின்றன.
     ஜப்பான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " எவ்வளவு சிறிய தீவாக இருந்தாலும், அது ஜப்பானின் ஆட்சிப் பரப்புக்குள் வருவது வரவேற்கத்தக்கது.  இது போன்று ஏற்கனவே பல தீவுகள் உருவானதும், காணாமல் போனதும் நிகழ்ந்துள்ளது" என்றார்.
-- பி.டி.ஐ.  சர்வதேசம்.
---   ' தி இந்து' நாளிதழ். வெள்ளி,நவம்பர் 22, 2013. 

Sunday, October 18, 2015

' பிறை தெரிந்துவிட்டது...'


 இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு.  கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் புது தகவல்.
     கி.பி. 6 -7 ம் நூற்றாண்டின் மானசாரம் கட்டிடக் கலை மற்றும் சூரியனின் நகர்வு அடிப்படையிலான நாட்காட்டியைக் கொண்டு பழந்தமிழர் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு இன்று ( ஜனவரி 5ம் தேதி ) பிறப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.
     இது குறித்து தமிழ் அறிஞரும் ஆய்வாளருமான தென்னன் மெய்ம்மன் கூறியதாவது :
     சோழர் காலத்தில் பழந்தமிழர்கள் சூரியனை வழிபட்டு அதன் அடிப்படையிலான நாட்காட்டியைப் பின்பற்றினர்.  அதன் அடிப்படையில்  இன்று ( 5.1.2014 ) தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.  சூரியன் நகருவதால் ஏற்படும் நிழலை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டே சோழர்கள் நாட்காட்டியை நிர்ணயித்தார்கள்.  சூரியன் வடக்கில் ஆறு மாத காலமும், தெற்கில் ஆறு மாத காலமும் வலசை செல்லும் தன்மை கொண்டது.  தமிழ் இலக்கியங்கள் இதை வட செலவு, தென் செலவு என்று குறிப்பிடுகின்றனர்.
     அதன்படி மார்கழி மாதத்தின் அமாவாசை ( ஜனவரி 1-ம் தேதி ) முடிந்த மூன்றாம் நாள் ( ஜனவரி 4-ம் தேதி ) மாலை பிறை தெரியும்.  அதற்கு மறுநாள்தான் ( ஜனவரி 5-ம் தேதி ) தை முதல் நாள்.  ராஜராஜசோழன் சதயம் தொடங்கி பூசம் வரை 12 நாட்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினான்.
     12-ம் நாள் முழு நிலவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவுறும்.  அதன் பெயர் 'ஆட்டைத் திருவிழா.'  இதற்கான ஆதாரங்கள் தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் திருவாசல் கல்வெட்டிலேயே இருக்கின்றன.
     அதன் அடிப்படையில் இன்று மாலை பிறை தெரிந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.
     இவ்வாறு தென்னன் மெய்ம்மன் கூறியுள்ளார்.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  பூச்செண்டு.
--   ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014.                                    

Saturday, October 17, 2015

பொது அறிவு

*  ஒரு நாளைக்கு ஒரு நபர் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு 1.5 லிட்டர்.
*  ஒரு மனித மூளையில் உள்ள செல்கள் அல்லது நியூரான்களின் எண்ணிக்கை 10,000 கோடி.
*  நிலநடுக்கத்தை கண்டறிய சீனர்கள் கி.பி.132 ஆம் ஆண்டிலேயே ஒரு கருவியை வடிவமைத்து விட்டனர்.  ரிக்டர் வடிவமைத்த
   அளவிகோல், நிலநடுக்கத்தின் வீரியத்தை மட்டுமே கூறும்.
*  தன்னைத் தானேயும், சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கும் பூமிப் பந்தின் மீது சூரியனும், நிலவும் செலுத்தும் ஈர்ப்பு விசை
   காரணமாகவே கடலில் பல்வேறு வகை அலைகள் ( உயர் அலை, தாழ்வு அலை, அலை ஏற்றவற்றம் ) ஏற்படுகின்றன. 

Friday, October 16, 2015

வலைஞர் வாக்கு.

*  நாம் பெற்ற குழந்தையைப் போன்றது பொய் !  மிகக் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.  -- ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
*  பெண் தனக்கு பாதுகாப்பான தூரத்தில் ஆணை நிறுத்திவிடுகிறாள்.  ஆணின் துரதிர்ஷ்டம் அது நடுத் தெருவாக
    அமைந்துவிடுகிறது.  -- அரசு.
*  விட்டுக்கொடுக்காமல் ஒரு சாலையையே கடக்க முடியாது.  வாழ்க்கையை எப்படி கடக்க முடியும். - அசோக் குமார்.
*  கல் கிடைக்கும்வரை நாய் மீது அன்புகாட்டுங்கள்... ராஜதந்திரம்...!  - சத்தியம்.
*  முதுகில் குத்துபவன் நண்பனாகவோ, எதிரியாகவோதான் இருக்க வேண்டும் என்று இல்லை.  மசாஜ் பார்லர் பெண்ணாகவும்
   கூட இருக்கலாம்.  - ரைட்டர் பிசாசு.
*  கொசு மாதிரி சாப்பாட்டுக்கு அலையக் கூடாது !  சிலந்தி மாதிரி சாப்பாட்டை நம்ம இடத்துக்கே வர வைக்கணும்!  அதான்
   வெற்றி!   --  ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
--   ' தி இந்து' நாளிதழ்களிலிருந்து

Thursday, October 15, 2015

தெரிந்ததும் தெரியாததும்.

  கரஹரப்ரியா, ஸ்ரீரஞ்சனி, ஆபோகி ஆகிய மூன்று ராகங்களும் ஒரே பரம்பரையில் உள்ளவை.  கரஹரப்ரியா ஒரு சம்பூர்ண மேளகர்த்தா ராகம்.  அதன் மேளம் 22.  அதிலிருந்து பஞ்சமத்தை அகற்றினால் ( வர்ஜ்யம் ).  அதுவே ஸ்ரீரஞ்சனி.  பஞ்சமமும் நிஷாதமும் ( நி) இல்லாமல் பாடினால் கிடைப்பது ஆபோகி.  இது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.  தெரியாதது இதுதான்.  வீணைக்கென்றே பிறப்பெடுத்த எஸ்.பாலசந்தர், இந்த மூன்று ராகங்களையும் சற்றும் சுவை குன்றாமல் உரிய சிரமத்துடன் ஆல் இந்தியா ரேடியோ கச்சேரி ஒன்றில் அடுத்தடுத்து தான் யார் என்பதை நிரூபித்தார்.
-- எஸ்.சிவகுமார்.  இசை நாட்டியம் நாடகம்.
--   ' தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஜனவரி 5, 2014. 

Wednesday, October 14, 2015

செல்போன் சார்ஜ் ஆகும்!

நடந்தால் போதும்...செல்போன் சார்ஜ் ஆகும்!
     செல்போனில் சார்ஜ் குறைகிறதே என்று பிளக் பாடின்ட் தேடி ஓடவேண்டிய அவசியம் இனி இல்லை.  செல்போனை பாக்கெட்டில் வைத்து நடந்தாலே போதும்... சார்ஜ் ஆகிவிடும்.
     மொபைல் ஜெனெரேட்டர் ஜேனியோ ( mobile generator genneo ) என்ற சாதனம் நாம் நடப்பது, ஓடுவது, குதிப்பது, கையாட்டுவது போன்ற மனித அசைவுகளிலிருந்து பெறப்படும் சக்தியை வைத்து செல்போன்களை சார்ஜ் செய்கிறது.  பத்து இஞ்-க்கும் குறைவான நீளம் கொண்ட இந்த சாதனத்தை சட்டைப் பையிலோ, கைப்பையிலோ வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.  நமது அசைவுகளை சக்தியாக மாற்றி அதன் பேட்டரியில் சேமித்துகொள்ளும்.  இந்த சாதனத்துடன் கொடுக்கப்படும் யு.எஸ்.பி. கேபிளைக் கொண்டு தொடுதிரை செல்போன்கள், டேப்லட்கள், ஐ-பாட், கேமரா போன்ற தொழில்நுட்ப சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம்.
     அமெரிக்காவின் ஜெனியோ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சாதனம் இரண்டு விதங்களாக அறிமுகப்படுத்தப்படுகிறது.  G4000 என்ற வடிவம் 9.7 இஞ்ச் நீளம் கொண்டது.  இதை ஐந்து மணி நேரம் பையில் வைத்து எடுத்துச் சென்றால் ஒரு மணி நேரம் வரை பேச சார்ஜ் கிடைக்கும்.  மற்றொன்று G3000.  இது 8.2 இஞ்ச் நீளமுள்ளது.  இதை ஏழு மணி நேரம் பையில் வைத்திருந்தால் ஒரு மணி நேரம் வரை பேச சார்ஜ் கிடைக்கும்.
     எதிர் காலத்தில் சூரிய மற்றும் மனித நடவடிக்கைகளின் சக்திகளை நோக்கித்தான் உலகம் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கைகளை ஆட்டுவது, நடப்பது போன்ற செயல்களால் இயங்கும் கைக்கடிகாரங்கள் முன்பு இருந்தன.  அதேபோல, இப்போது வரும் சாதனமும் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும்.
     ஆபத்தான நேரங்களில் உடனடியாக சார்ஜ் வேண்டுமானால் அந்த சாதனத்தை ஒரு நிமிடம் வேகமாக ஆட்டினால் மூன்று நிமிடங்கள் வரை பேச முடியும்.  மின்சார வசதி இல்லாத மலைப் பிரதேசங்கள், காட்டுப் பகுதிகளிலும், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற அவசரக் காலத்திலும் இந்த சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-- வி.சாரதா.
--  ' தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர், 22, 2013.