Thursday, March 31, 2016

மனதுக்கு இல்லை வயது!

   நம் நாட்டில் 60 வயதைக் கடந்தவர்கள் 8 கோடியே 60 லட்சம் பேர்.  இது மொத்த மக்கள்தொகையான 121 கோடியில் 7.1 சதவிகிதம் .  60 வயதைக் கடந்தவர்களை முதியவர்கள் என்று ஐ.நா. சபை வகைப்படுத்துவதால் இந்தக் கணக்கு.  முத்யவர் யார் என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன.
     50 வயது முதலே முதுமை தொடங்குவதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு.  ஆனால், முதுமை என்பதை வயதின் மூலம் அறிவதைவிட , வாழ்க்கையில் ஒருவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையிலும் அவரது செயல் தன்மையின் அடிப்படையிலும் புரிந்துகொள்ள வேண்டும்.  முதியவர்களின் உடலில் செல்களைப் புதுப்பிக்கும் திறன் குறைவாக இருக்கும்.  இதனால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும்.
     இன்னொரு பக்கம் பார்வை, கேட்புத் திறன் உள்ளிட்ட உனர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கும்.  ஒவ்வொரு உணர்வு உறுப்புகளும் வெவ்வேறு காலத்தில் இதுபோல படிப்படியாக உணர்வுகளை இழக்கும்.  ஆனால், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.  இதை வைத்தும் முதுமையை உணரலாம்.  முன்பு செய்த கடினமான வேலைகளைத் தவிர்த்து எளிமையான வேலைகளைச் செய்வது அல்லது மெதுவாக வேலைகளைச் செய்வது என்பதும் முதுமையின் இயல்பே.  வயதாவதைப் பற்றிய அறிவியலுக்கு ஜெரான்டோலாஜி (Gerontology ) என்று பெயர்.  முதுமையில் வரும் நோய்களைப் பற்றிய படிப்புக்கு ஜெரியாட் ரிக்ஸ் ( Geriatrics ) என்று பெயர்.
--- பேராசிரியர்கள் இராம சீனுவாசன். வே.ராஜி சுகுமார்.  பூச்செண்டு.
--- 'தி இந்து' நாளிதழ். ஞாயிறு, ஏப்ரல் 13,2014.    

Wednesday, March 30, 2016

டைல்ஸ்


உஷ்ணம் குறைக்கும் டைல்ஸ் !
     கட்டுமானத்துறையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதியப் பொருட்கள் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன.  அந்த வகையில் வீட்டில் உஷ்ணத்தைக் குறைக்கவும் நவீன தொழில் நுட்பம் வந்துள்ளது.  உஷ்ணத்தை உள்ளீழுத்துக் கொள்ளும் டைல்ஸ்களை மாடியின் மேற்புரத்தில் பதிப்பதன் மூலம் உஷ்ணத்தைக் குறைக்க வழி கிடைத்துள்ளது.  வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த வகை டைல்ஸ்கள் இப்போது இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டும், உஷ்ணத்தை குறைக்கும் மூலப்பொருட்களின் கலவையைக் கொண்டும் உயர் அழுத்த முறையில் டைல்ஸ்களை பல நிறுவனங்கள் இன்று உற்பத்தி செய்து வருகின்றன.
     இந்த வகையான டைல்ஸ்கள் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன் கட்டடத்தின் உஷ்ணத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை அதிகப்படுத்துகிறது.  இதுபோன்ற டைல்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் குளிர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்கள், மின் விசிறிக்கான மின் தேவை குறையும்.  மேலும் இந்த டைல்ஸ் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காங்கிரீட் சேதமடையாமலும் காக்கப்படுகிறது.
     "உஷ்ணத்தைத் தடுக்கும் இந்த வகையான டைல்ஸ்களை மாடியின் மேல்புரத்தில் ஒட்டினால், கீழ் தளத்தில் உள்ள வீட்டுக்கு கிடைக்கும் குளிர்ச்சி, மாடி வீட்டுக்கும் கிடைக்கும்" என்கிறார் உஷ்ணம் குறைக்கும் டைல்ஸ்களை உற்பத்தி செய்துவரும் பிரேம் ஆந்த்.
-- டி.கார்த்திக்.  சொந்த வீடு.
--  'தி இந்து' நாளிதழ்.  சனி, அக்டோபர்19, 2013.                                  

Tuesday, March 29, 2016

குற்றவாளிகளைக் கண்டுபிடித்த நாய்

  உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிளி தன் காப்பாளரைக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் சில வாரங்களுக்கு முன்னால் பரபரப்பாகப் பேசப்பட்டது.  அதேபோல பிரான்ஸில் தன் காப்பாளரைக் கொன்ற குற்றவாளியை அவரது நாய் அடையாளம் காட்டியுள்ளது.  பாரீஸ் நகரத்தில் டாங்கோ என்னும் 9 வயதுடைய நாய் வசித்து வந்தது.  டாங்கோவின் காப்பாளரை சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.  ஆனால், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு இருந்தது.  அதன் அடிப்படையில் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரை அடையாளம் காட்டுவதற்காக அந்த நாயை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.  கைதிகள் ஒவ்வொருவரும் நாயை அடிப்பதுபோல் பாசாங்கு செய்யச் சொல்லியுள்ளனர்.  அப்போது அவர்களில் ஒருவரைப் பார்த்து அந்த நாய் கோபமாகக் குரைத்தது.  அந்த நபர்தான் குற்றவாளி எனக் கண்டுபிடித்தனர்.
--  ஆர்.ஜெய்குமார்.  விந்தை உலகம்.   வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 12, 2014.  

Monday, March 28, 2016

கொழுப்பைக் குறை

'கொழுப்பைக் குறை' யாராவது சொன்னால் நமக்கு கோபம் வராமல் இருக்காது.  ஆனால், ஒரு அரசாங்கமே இதைச் சொன்னால் ...? கொழுப்பைக் குறை எனஸ் சொல்லியிருப்பது இங்கிலாந்து அரசுதான்.  இங்கிலாந்தில் பீட்சாக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சீஸ், சாஸ் நிறுத்த வேண்டும் என்றும் அதற்குத் தனியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.  'கொழுப்புக் குறைபாடு' நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குக் காரணம் பீட்சாவுக்கு இலவசமாக அளிக்கப்படும் சீஸூம் சாஸூம்தான் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.  மக்கள் கேட்கும் போதெல்லாம் இவற்றை ஹோட்டல்காரர்கள் கூடுதலாக வழங்குகிறார்கள்.  எனினும் இதற்கு ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
-- ஆர்.ஜெய்குமார்.  விந்தை உலகம்.   வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 12, 2014.   

Sunday, March 27, 2016

நிலாவின் வயதென்ன?

    நிலா பூமியின் துணை கிரகம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  ஆனால், இந்த நிலா எப்போது தோன்றியது தெரியுமா?  447 கோடி ஆண்டுகள்.  இதைக் குறித்து பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒரு ஆய்வு மேற்கொண்டது.  முடிவில், சந்திரன் 447 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.  செவ்வாய் கிரக அளவிலான ஒரு பொருள் பூமியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.  பூமியில் இருந்து உடைந்த சிதறல் தான் நிலா ஆக உருமாறியுள்ளது என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.  அதே நேரத்தில், பூமியின் சிதறலில் இருந்து நிலா தோன்றி 10 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற கருத்தும் எழுந்துள்ளது.
-- ஆர்.ஜெய்குமார்.  விந்தை உலகம். வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ்.  சனி, ஏப்ரல் 12, 2014. 

Saturday, March 26, 2016

சோலார் பேனல்

சோலார் பேனல்மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
     சோலார் பேனல் என்பது சோலார் செல்களால் ஆனது.  இது ஒளிச்சக்தியை மின் சக்தியாக மாற்றக்கூடிய தன்மை வாய்ந்தது.
மின்சாரம், வோல்டேஜ் போன்ர மின் இணைப்பின் பல தன்மைகளைக் கொண்டது இந்த செல்.
      சோலார் செல்கள் சிலிக்கானால் ஆனவை.  இந்த செல்லில் அதிகப்படியான எலக்ட்ரான்கள் ஒரு பகுதியிலும், எலக்ட்ரான்களை இழந்த அணுக்கள் மறு பகுதியிலும் இருக்கும்.  சூரிய ஒளி இந்த செல்லில் பட்டவுடன், அதிகப்படி எலக்ட்ரான்கள் உள்ள பகுதி, குறைவுபட்ட எலக்ட்ரான்கள் உள்ள பகுதியை நோக்கிப் பாயும்.  இதன் காரணமாக ஒருவித மின்சாரம் உண்டாகிறது.  இது இன்வர்ட்டரை அடைகிறது.  அங்கு இது பயன்படுத்தப்படக் கூடிய மின்சாரமாக மாற்றப்படுகிறது.
--  ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை?!
--  தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.  

Friday, March 25, 2016

கிரீன் கார்டு

கிரீன் கார்டு என்றால் என்ன பொருள்
     ஸ்மார்ட்டு கார்டு என்பது சட்டைப்பைக்குள் வைக்கும்படியான சிறிய பிளாஸ்டிக் கார்டு.  இதை அடையாள அட்டையாகவோ, தகவல்களைப் பதிவு செய்யும் அட்டையாகவோ பயன்படுத்தலாம்.  கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டு.  எரிபொருள் நிரப்புவதற்கான கார்டு, செல்போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டு இவை எல்லாமே ஸ்மார்ட்டு கார்டுதான்.  பான் கார்டு என்பது வருமான வரித்துறையினரால் அளிக்கப்படும் அடையாள அட்டை.  கிரீன் கார்டு என்பது அமெரிக்க அரசால் வழங்கப்படும் அட்டை .  இது இருந்தால் அந்த நாட்டின் நிரந்தரக் குடிமகன் என்பது அர்த்தம்.
-- ஜி.எஸ்.எஸ்.  குட்டீஸ் சந்தேக மேடை?!
--  தினமலர். சிறுவர்மலர். ஏப்ரல் 11, 2014.