Wednesday, April 29, 2009

கேட்டவனும் , கேட்காதவனும் .

" என் தாத்தா பீஷ்மர்மீது நான் எப்படிப் பாணங்களைப் போடுவேன் ! என் குரு துரோணரை நான் எப்படிக் கொல்லுவேன் ? இவர்களைக் கொல்லுவதைவிட , இந்த உலகில் பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை சிறந்தது " என்கிறான் அர்ஜூனன் .
இந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் கீதையை உபதேசிக்கிறான் . " உன் கடமையைச் செய் . உன் கடமையைச் செய்யும்போது உற்றார் , உறவினர் என்றெல்லாம் பார்க்காதே " என்கிறான் .
இருந்தும் , போரில் முதல் நாலைந்து நாட்களுக்கு அர்ஜுனன் பீஷ்மரைப் பலமாகத் தாக்க நடுங்குகிறான் . பீஷ்மர் விட்ட பாணங்களையெல்லாம் தம் மீது வாங்கிக்கொண்டு , கண்ணன் உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட நின்ற பிறகுதான் அர்ஜுனனுக்கு ஆவேசம் பிறக்கிறது . மூர்க்கத்தனமாக சண்டை போட ஆரம்பிக்கிறான் .
இது கேட்டவன் , அதாவது கீதையைக் கேட்டவன் !
ஆனால் கீதையைக் கேட்காதவன் , அதுதான் கர்ணன் எப்படி நடந்துகொள்லுகிறான் என்று பாருங்கள் .
யுத்த ஆரம்பத்திலிருந்தே கர்ணனுக்கு பஞ்சபாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பது தெரியும் . தெரிந்தும் , அவன் மூர்க்கத்தனமாகவே அவர்களைத் தாக்கினான் . கடனையைச் செய்யும்பொழுது உற்றார் , உறவினர் என்று பார்க்கக்கூடாது என்ற கீதையின் கோட்பாட்டை அறியாமலேயே அவன் பின்பற்றுகிறான் .
தர்மம் தலை காக்கும் என்று சொல்லுவார்கள் . அது போலவே அர்ஜுனனின் பாணங்கள் அவனைக் கொல்லமுடியாதபடி அவன் செய்த புண்னியம் அவனைக் காப்பாற்றுகிறது . அதைக்கண்ட கண்ணன் , அவன் புண்ணியத்தையும் , ஒரு கிழ , அந்தணர் உருவில் சென்று யாசகமாகக் கேட்டுப் பெறுகிறான் . கர்ணன் மிக்க மகிழ்ச்சியுடன் தன் ரத்தத்தைக்கொண்டே தாரை வார்த்துக் கொடுக்கிறான் .
இந்த இரு செயல்களையும் பாராட்டி கண்ணன் இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டார் .
-- புலவர் சிதம்பரம் சுவாமினாதன் . சென்னை அமைந்தகரை , அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து . மே 29 . 1990 .

No comments: