Monday, August 31, 2015

ஆன் லைன் காதல் !

பெண் :  அப்பா நான் லவ் பண்றேன்...
அப்பா : பையன் எந்த ஊரு...?
பெண் :  அமெரிக்காவில இருக்கான்...
அப்பா :  நீ இங்க இருக்கே, அவன் அங்கே. ...எப்படி?
பெண் : ' பேஸ் புக் ' மூலமா நண்பர்கள் ஆனோம்.  ' வெப்சைட் ' மூலமா நானும் அவனும் டெட்டிங் கூட போய் இருக்கோம்.  ' வாட்ஸ் அப் 'ல ரொம்ப நாளா
              சாட் பண்றோம்.  நாங்க லவ்வை ஷேர் பண்ணினது 'ஸ்கைப் 'ல.  அப்புறம் ' வைபர் 'மூலமா கணவன் மனைவியா வாழ்றோம்.  அப்பா, எங்களுக்கு
              உங்க ஆசீர்வாதம் வேண்டும்...
அப்பா :  அப்புறம் என்ன... ' டு விட்டர் ' மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க... ' ஆன் லைன் 'ல ஜாலியா இருங்க... ' இ பே'ல குழந்தைகளை வாங்கிகோங்க
              ... ' ஜிமெயில்'ல அவனுக்கு அனுப்பு... எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை ' ஓஎல்எக்ஸ்' மூலமா வித்துடு.  அவ்வளவுதான்...
பெண் :  !!!!!!
--  சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 15-12-2013. 

Sunday, August 30, 2015

ஆந்தைகள் !

  எல்லா ஆந்தைகளுமே இரவில் நடமாடும் வேட்டையாடிகள்.  மற்ற பறவைகளைப் போலல்லாமல் ஆந்தையின் இரு கண்களும் மனிதர்களின் கண்கலைப்போல முன்புறம் நோக்கி அமைந்திருக்கின்றன.  ஆந்தையால் தன் தலையை முழுவதுமாகப் பின்புறம் திருப்பமுடியும். சக்தி வாய்ந்த செவிகளின் மூலம், ஒலி வரும் தூரத்தை வைத்தே இரை இருக்கும் இடத்தைத் துல்லியமாக கணிக்க இப்பறவையால் முடியும்.  குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கக்கூடிய பார்வைத் திறன், மெல்லிய இறகுகள் புசுபுசுவென்று நிறைந்திருப்பதால் ஓசையின்றிப் பறக்கக்கூடிய ஆற்றல், கூரிய, வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு ஆகியவற்றைக் கொண்டு ஆந்தைகள் திறமைமிக்க இரைகொல்லிகளாக இயங்குகின்றன.
     நம் நாட்டில் உணவு தானியங்களைச் சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் கொன்று இந்த ஆந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன. உலகின் பல இடங்களில் தோட்டங்களில் வெண்ணாந்தைகளை ஈர்க்கச் சிறிய மரப்பெட்டிகளை மரத்தில் கட்டி விடுகிறார்கள்.  இனப்பெருக்கக் காலத்தில் ஓர் ஆந்தை ஒரே இரவில் ஐந்தாறு எலிகளைக் கொன்றுவிடும்.
     செல்வத்தின் கடவுளான லட்சுமியின் வாகனம் என்றாலும்கூட , ஆந்தை என்றதுமே அச்சமும் அருவருப்புமே மக்கள் மனதில் உருவாகிறது. நாட்டு மருத்துவதுக்காகவும் ஆந்தைகள் கொல்லப்படுகின்றன.  ஆந்தைக் கூடுகளைக் கண்டுபிடித்து குஞ்சுகளைப் பிரித்துவிடுகிறார்கள்.  அல்லது கீழே தரையில் கிடக்கும் எச்சத்தின் மூலம் ஆந்தை அடிக்கடி வந்தமரும் கிளையை அறிந்து, அதில் ஃபெவிகால் போன்ற பசைகளைத் தடவி இவற்றை எளிதாகப் பிடித்துவிடுகிறார்கள்.  அதிகமாகப் பிடிபடுபவை புள்ளி ஆந்தைகளும் வெண்ணாந்தைகளும்தான்.  ஆனால் அதிக விலைக்குப் போவது உருவில் பெரிய கோட்டான்.  ரூபாய் ஐந்தாயிரம்வரை போகிறது என்கின்றனர் வனத்துறையினர். வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யக் கால்கள், தேர்தலில் வெற்றி பெறத் தலை, எதிர்காலத்தைக் கணிக்க ஈரல், வேகமாகப் பயணிக்க எலும்புகள் என ஆந்தையின் ஒவ்வொரு உடற்பாகமும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
-- தியடோர் பாஸ்கரன்.  உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013. 

Saturday, August 29, 2015

இணைய வெளியிடையே...


*  விதைத்துக்கொண்டே இருங்கள்...
   முளைத்தால் மரம், மக்கினால் உரம்!
   kirukan @ twitter.com
*  மற்ற பெண்களெல்லாம்
   அழகாய்தான் உடுத்திக் கொள்வார்கள்.
   நீ மட்டும் தானடி
   அழகை உடுத்திக் கொண்டிருக்கிறாய்!
   alexious @ twitter.com
*  உன் கோபத்தை என்னிடம் காட்டிக்கொள்ளாமல்
   இருந்ததுதான் நீ என்னிடம் காண்பித்த அதிகபட்சகோபம்.
   navin @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 15-12-2013.                                                               

Friday, August 28, 2015

நாமும் தெரிஞ்சுக்கலாம் !

*  வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அழகாக இருக்கும் பாதரசம், பூமியில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.  வெறும் 0.6 கிராம்
   பாதரசம், சுமார் 20 ஏக்கர் அளவுள்ள ஏரியை மாசுபடுத்தும் தன்மை கொண்டது.  இதனால் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள்
   ஏற்படுகின்றன.
*  மருத்துவ கருவிகளான தெர்மாமீட்ட , ரத்த அழுத்தம் அறியும் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.  இந்தக் கருவிகள் பழுதடையும்போது கழிவாகத்
   தூக்கி எறியப்படுகின்றன.
*  இன்றைய தேதியில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதன் மூலம்தான்.  உலகின் மிக
   முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணம்.
--  ந.வினோத் குமார். சூழல் சீர்கேடு. உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013.  

Thursday, August 27, 2015

பாதரசம் !


     கருவில் இருக்கும் குழந்தைகள், மனஅழுத்தம், தற்கொலை எண்ணம், முடக்கு வாதம், சிறுநீரகம் செயலிழப்பு, அல்ஸெய்மர் நோய், பார்வை, பேச்சுத்திறன் பாதிப்பு, ஒவ்வாமை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பாதரச மாசுபாட்டால் ஏற்படும்.  எனவே, பாதரசத்தைக்கொண்ட மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக வேறு கருவிகளைப் பயன்படுத்த உலகமெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     ஜப்பான் நகரமான மினமாட்டாவில் 1956 -ம் ஆண்டு முதன்முதலாகப் பாதரசத்தால் ஏற்படும் நோய் கண்டறியப்பட்டது.  இதனால் பாதரசம் மூலம் உருவாகும் நோய்கள் ' மினமாட்டா நோய் ' எனப்படுகின்றன.
-- ந.வினோத் குமார். சூழல் சீர்கேடு. உயிர் மூச்சு.
--  ' தி இந்து ' நாளிதழ்.செவ்வாய், டிசம்பர் 17, 2013.                            

Wednesday, August 26, 2015

' நெட்'டுக்குத்து.

*  செய்தி :  இடவசதி செய்து தராததால் சட்டமன்றத்துக்கு செல்ல முடியவில்லை.  -- கருணாநிதி.
   குத்து :    முதல்வர் இருக்கைதான் வேணும்னா எப்படி தலைவரே !
*  செய்தி : காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது .  -- ஞானதேசிகன்.
   குத்து :   திரும்புன பக்கமெல்லாம் அடி பலமா உள்ளதுன்னு சொல்லுங்கண்ணா. -- சி.பி.செந்தில்குமார்.
*  செய்தி : மாட்டுத் தீவன ஊழல் வழக்கு; லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்!
   குத்து :   வீட்டுக்கு வந்து இதுவரை செஞ்ச ஊழலை அசை போட்டுப்பாருங்க. --  சி.பி.செந்தில்குமார்.
--   ' தி இந்து ' நாளிதழ்களிலிருந்து.  

Tuesday, August 25, 2015

டயானா சாவு.

டயானா சாவு.கொலையில்லை : ஸ்காட்லாந்து யார்டு.
     பிரிட்டிஷ் இளவரசி டயானா கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் நிராகரித்துள்ளனர்.
     பாரீசில் 1997-ம் ஆண்டு கார் விபத்துஒன்றில் உயிரிழந்தார்.  ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று குற்றச்சாட்டு எழுந்தது..  இதில் பிரிட்டன் சிறப்பு விமானப் படையினருக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது.  அப்படையில் பணியாற்றிய வீரர் ஒருவரின் மனைவி இதற்கான ஆதாரத்தை ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்தார்.
     அந்த ஆதாரங்களை ஆய்வு செய்த போலீசார், அவை வலுவானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் இல்லை என்று கூறி டயானா கொலை செய்யப்பட்டாரென்ற குற்றச்சாட்டை நிராகரித்தனர்.
     டயானாவுடன் காரில் சென்ற எகிப்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டோடி அல் பயதும் உயிரிழந்தார்.
     பிரிட்டிஷ் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோரின் தாயாரான டயானா, இளவரசர் சார்லஸிடம் இருந்து 1996-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
-- பி.டி.ஐ. சர்வதேசம்.
--  ' தி இந்து ' நாளிதழ்.புதன், டிசம்பர் 18, 2013.