Monday, September 7, 2015

" மழை பெய்யுமா?"

" இன்னைக்கு  மழை பெய்யுமா?"
     தெற்கில் உள்ள கடக ரேகைக்கும் வடக்கில் உள்ள மகர ரேகைக்கும் சூரியன் மாறி மாறிச் சென்று திரும்பும்போது காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சூரியன் வடக்கே நகர்ந்தால் ' வெப்ப மண்டல ரேகை 'எனப்படும் ரேகையும் அதனுடன் நகரும்.  தென்மேற்குப் பருவக் காற்று அந்த ரேகையைப் பின்தொடர்கிறது.  இந்த ரேகை ஜூன் முதல் தேதி கேரளத்தில் தொடங்குகிறது. ' வெப்ப மண்டல ரேகை' நகரும்போது, சூராவளிப் புயல்களும் உருவாகின்றன.
     சூரிய வெப்பத்தால் கடல் நீர் நீராவியாகும்.  அந்த நீராவி புயல் மேகங்களாகவும், மழை மேகங்களாகவும், பனியாகவும் மாறும்.  சாதாரணமாகக் காற்று மண்டலத்தில் தாழ்வு நிலை (  depression ) ஏற்படும்போது மழை உருவாகிறது.  சுருக்கமாகச் சொன்னால் கடலுக்கும் காற்று மண்டலத்துக்கும் இடையிலான ஊடாட்டமே வானிலை மாறுபாடுகள்.
     வானிலை மாறுபாடுகள் தினசரி மாறக்கூடியவை.  அதை முன்கூட்டியே அறிவதற்கு நிலம் சார்ந்த குறிப்புகளும், காற்று மண்டலக் குறிப்புகளும் அவசியம்.  இந்தத் தகவல்களை உலகம் முழுவதும் சேகரித்து ஒப்பிட்டால் மட்டுமே, வானிலை ஆய்வு செய்ய உடியும்.
வானிலை ஆய்வு.
     பல்வேறு ஆண்டுகளுக்குத் தொகுக்கப்பட்ட வானிலைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட ஓர் இடம், மண்டலத்தின் வானிலை பற்றி ஆய்வு செய்வதே வானிலை ஆய்வு.  இதன் மூலம் ஒரு பகுதியின் பொதுவான வானிலை நிலையைக் கணிக்கலாம்.
     வெப்ப நிலையை அளக்கப் பயன்படும் வெப்பமானி, காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் வேகமானி போன்றவை வானிலை தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் எளிய கருவிகள்.  வானிலை ஆய்வுக் கூடங்கள், தானியங்கி ஆய்வுக் கூடங்கள், டாப்ளர் ராடார்கள் போன்றவையும் வானிலையைக் கணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
     பழைய காலத்துக்கு மாறாகத் தற்போது செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால், புவியியல் ரீதியில் வானிலை ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது.  உலக நாடுகளின் வானிலை ஆய்வுமையங்கள், நவீனத் தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் தங்கள் கணிப்புகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றன.  இதை வானிலை ஆய்வாளர்கள் பகுத்து ஆராய்ந்து, முன்னறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
     விமானம், கப்பல்கள் போன்ற நவீனப் போக்குவரத்து வசதிகள் முழுவதும் வானிலை முன்னறிவிப்புகளைச் சார்ந்தே இயங்கிவருகின்றன.  பருவ மழை, வறட்சி பற்றி முன்கூட்டியே தெரிந்தால்தான் விவசாயிகளால் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்.  குறிப்பாக, நம் நாட்டின் விவசாயம் பருவ மழையை நம்பியே உள்ளது.  எனவே, அதில் ஏற்படும் சிறிய மாறுதல்களும் மிக முக்கியமானவையே.
     சாதாரண மக்களுக்கும் புயல், வெள்ளம் பற்றிய தகவல்கள் முக்கியமாக இருக்கின்றன.  இன்றைக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம் ( Climate Change ) , வெப்ப நிலை மாற்றம் ( Temperature Change ) போன்றவை பற்றியும் வானிலை ஆய்வு மையங்களே ஆய்வு செய்கின்றன.
     சரி, முதலில் பேசிய விஷயத்துக்கு வருவோம்.  பருவமழை என்பது இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ள வானிலை அம்சம்.  அது பல்வேறு தாக்கங்களால் நிகழ்கிறது.  எனவே, அதைத் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமில்லை.
-- ஆதி.  ( நன்றி : சி. ரங்கநாதனின் குறிப்புகள் ). வெற்றிக்கொடி.
-- - ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 23, 2013.  

Sunday, September 6, 2015

அரபி : ஓர் அறிமுகம்

  ' அரபா ' என்ற சொல்லுக்குத் தெளிவாகப் பேசுதல் என்று பொருள்.  அரபு நாட்டில் வாழ்ந்த மக்கள், தாங்கள் தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில், தங்களின் மொழியை ' அரபி ' என்று கூறலாயினர்.  இன்று 21 நாடுகளின் ஆட்சி மொழி, ஐ.நா- வின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று.  183 மில்லியன் மக்களின் தாய்மொழி அரபி.  மேற்கே வட ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கே ஓமன் வரையும், வடக்கே சிரியாவிலிருந்து தெற்கே சூடான் வரையும் அரபியின் எல்லை விரிந்திருக்கிறது.
      தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளை நாம் எப்படித் திராவிட மொழிகள் என்று அழைக்கிறோமோ அப்படி அரபி ஒரு ' ஸாமிய' மொழி.
      நமது தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழி.  அதன் சொல்வளம் வியக்கத் தக்கது. ஆண்டு என்பதற்கு 24 சொற்களூம் ஒளி என்பதற்கு 21 சொற்களும் இருப்பதைப் போல இருள் என்பதற்கு 52 சொற்களூம் கதிரவன் என்பதற்கு 29 சொற்களும் நீர் என்பதற்கு 170 சொற்களும் ஒட்டகம், வாள் போன்ற வார்த்தைகளைக் குறிக்க 1,000 சொற்களையும் கொண்டுள்ளது அரபி.
     அரபிக்கும் தமிழுக்குமான உறவு இன்றைக்கு நெருக்கமானது.  தமிழ்ச் சொற்களோடு இரண்டறக் கலந்த சொற்களாகிவிட்டன அரபிச் சொற்கள்.  அமல், இனாம், கஜானா, ஜாமின், கைதி, ஜில்லா, தாலுக்கா, தாசில்தார், நகல், மகஜர், மசோதா, மராமத்து, ஜப்தி, வசூல், தகராறு, பாக்கி, வாரிசு, தாக்கல், மைதானம், கடுதாசி, ரசீது, மாமூல், வகையறா எனத் தமிழில் கலந்துள்ள அரபிச் சொற்கள் தமிழாகவே மாறிவிட்டன.
     மொழிகள் கொடுத்துப் பெறுகின்றன; பெற்றுக் கொடுக்கின்றன!
-- க.மு.அ.அஹ்மது ஜுபைர்.  தொடர்புக்கு : arabic. zubair @gmail.com
-- கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன், டிசம்பர் 18, 2013.

Saturday, September 5, 2015

நல்லவனா .. கஷ்டம்.

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக்காரன் சாப்பிட , 2 ரூபாய் கேட்டான்.  அவர் அவனை விசாரித்தார்...
" குடிப்பாயா?"
" இல்லை சார்"
" சிகரெட் பிடிப்பாயா?"
" இல்லை சார் "
" ரேசுக்கு போவாயா?"
" இல்லை சார்"
" சூதாட்டம்?"
" கிடையாது சார்"
" பெண் சிநேகிதம் ?"
" சத்தியமா இல்லை சார் "
" உனக்கு 20 ரூபாய் தருகிறேன்.  என் வீட்டுக்கு வா.  எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலையை பார்த்தாயா என்று என் மனைவியிடம்
  காட்ட வேண்டும் !"
நீதி :  ரொம்ப நல்லவனா இருந்தாலும் கஷ்டம்தான்.
---   தினமலர். . டிசம்பர் 22, 2013.   

Friday, September 4, 2015

இணைய வெளியிடையே...

*  கொசு பேட்ல ஸ்கோர் காமிச்சா தேவலை, எண்ணுறது கஷ்டமாயிருக்கு!
   sudha @ twitter.com
*  கேள்வி : கடந்த 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் எதை சாதித்தார்?
   பதில் :    மவுனம் சாதித்தார் !
   udanpirappe @ twitter.com
*  பாவ மன்னிப்பு கேட்பதற்கும், பாவம் என மன்னிப்பு கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
   csk @ twitter.com
*  புத்தகத்துக்குப் பிடித்தமான புத்தக ஸ்டான்ட் , படித்தவனின் மார்பு!
   thotta @ twitter.com
--  தினமலர். . டிசம்பர் 22, 2013. 

Thursday, September 3, 2015

பாண்டவர்கள்.

 தர்மதேவதை ' விராட நகரத்தில் மறைந்தும், ஒருவராலும் அறியப்டாமலும் வாழுங்கள் என அருளாணை இட்டது.  அதன்படியே, 12 ஆண்டுகள் வனவாசமிருந்த பாண்டவர்கள், அஞ்ஞாதவாசம் ' எனும் மறைந்து வாழும் காலத்தை, விராட நகரத்தில் கழிக்கத் தீர்மானித்தார்கள்.
     அதன்படி, தர்மர் சந்நியாசி வடிவில் கங்கபட்டர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்.
     திரவுபதியோ, சைரந்தரி என்ற பெயரில் அரசிக்கு பணிமகளாகப் பணிபுரிந்தாள்.
     மிகவும் நல்லவர்களான பாண்டவர்களுக்கே அந்த நிலை.  அந்த நிலையிலும், ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த வேலையை வைத்து, மறைந்து வாழும் காலத்தில் பாணடவர்கள் சமாளித்து வாழ்ந்தார்கள்.
-- ஸாந்த்ரானந்தா.  ஆன்மிகம்.
-- தினமலர். வாரமலர். டிசம்பர் 22, 2013.  

Wednesday, September 2, 2015

ஒரு சொல் பல பொருள்

 மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம்.  அதேபோல ஒரே பெயரில் இருவேறு பொருட்களோ, உயிரினங்களோகூட இருக்கின்றன.  அதாவது ஒரே உச்சரிப்பில் வரும் வார்த்தைகள், இருவேறு பொருளைத் தரலாம்.  ஆங்கிலத்தில் இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள்.  தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன.  இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரனத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
    ஆங்கிலத்தில் கிவி ( kiwi ) என்னும் சொல் ஒரு பழத்தையும் பறவையையும் குறிக்கும்.  நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.  இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.  இறக்கைகளே இல்லாத பறவை இது.  வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும் இருக்கும்.  ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது கிவியி உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது கிவி.  ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும்.  இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயிரிடப்படும் பழ வகை கிவி.  கோழிமுட்டை அளவில் இருக்கும் இது, பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும்.  மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும்.  நடுவே கடுகு போல சின்னச் சின்ன விதைகள் இருக்கும்.  இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும் இருக்கும்.
    தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை, கலசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.
-- பிருந்தா. மாயாபஜார்.
--  ' தி இந்து ' நாளிதழ்.புதன், டிசம்பர் 18, 2013.  

Tuesday, September 1, 2015

தெரிஞ்சுக்கோங்க!

*  மகா பாதகங்கள்  5:
   1. கொலை  2. பொய் 3. களவு  4. கள் அருந்துதல்  5. குரு நிந்தை.
*  பேறுகள்  16:
   1. புகழ்  2. கல்வி  3. வலிமை  4. வெற்றி  5. நன்மக்கள்  6. பொன்  7. நெல்  8. நல்ஊழ் 9. நுகர்ச்சி  10. அறிவு  11. அழகு  12. பொறுமை  13. இளமை
   14. துணிவு  15. நோயின்மை  16. வாழ்நாள்.
*  புராணங்கள்  18.:
   1. பிரம்ம புராணம்  2. பத்ம புராணம்  3. பிரம்மவைவர்த்த புராணம்  4. லிங்க புராணம்  5. விஷ்ணு புராணம்  7. அக்னி புராணம்  8. மத்ஸ்ய புராணம்
   9. நாரத புராணம்  10. வராக புராணம்  11. வாமன புராணம்  12. கூர்ம புராணம்  13. பாகவத புராணம்  14. ஸ்கந்த புராணம்  15. சிவ புராணம்
   16. மார்க்கண்டேய புராணம்  17. பிரம்மாண்ட புராணம்  18. பவிஷ்ய புராணம்.
* இதிகாசங்கள் : 3.
   1. சிவரகசியம்  2. ராமாயணம்  3. மகாபாரதம்.
-- தினமலர். சிறுவர்மலர். டிசம்பர் 13, 2013.