Monday, September 7, 2015

" மழை பெய்யுமா?"

" இன்னைக்கு  மழை பெய்யுமா?"
     தெற்கில் உள்ள கடக ரேகைக்கும் வடக்கில் உள்ள மகர ரேகைக்கும் சூரியன் மாறி மாறிச் சென்று திரும்பும்போது காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சூரியன் வடக்கே நகர்ந்தால் ' வெப்ப மண்டல ரேகை 'எனப்படும் ரேகையும் அதனுடன் நகரும்.  தென்மேற்குப் பருவக் காற்று அந்த ரேகையைப் பின்தொடர்கிறது.  இந்த ரேகை ஜூன் முதல் தேதி கேரளத்தில் தொடங்குகிறது. ' வெப்ப மண்டல ரேகை' நகரும்போது, சூராவளிப் புயல்களும் உருவாகின்றன.
     சூரிய வெப்பத்தால் கடல் நீர் நீராவியாகும்.  அந்த நீராவி புயல் மேகங்களாகவும், மழை மேகங்களாகவும், பனியாகவும் மாறும்.  சாதாரணமாகக் காற்று மண்டலத்தில் தாழ்வு நிலை (  depression ) ஏற்படும்போது மழை உருவாகிறது.  சுருக்கமாகச் சொன்னால் கடலுக்கும் காற்று மண்டலத்துக்கும் இடையிலான ஊடாட்டமே வானிலை மாறுபாடுகள்.
     வானிலை மாறுபாடுகள் தினசரி மாறக்கூடியவை.  அதை முன்கூட்டியே அறிவதற்கு நிலம் சார்ந்த குறிப்புகளும், காற்று மண்டலக் குறிப்புகளும் அவசியம்.  இந்தத் தகவல்களை உலகம் முழுவதும் சேகரித்து ஒப்பிட்டால் மட்டுமே, வானிலை ஆய்வு செய்ய உடியும்.
வானிலை ஆய்வு.
     பல்வேறு ஆண்டுகளுக்குத் தொகுக்கப்பட்ட வானிலைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட ஓர் இடம், மண்டலத்தின் வானிலை பற்றி ஆய்வு செய்வதே வானிலை ஆய்வு.  இதன் மூலம் ஒரு பகுதியின் பொதுவான வானிலை நிலையைக் கணிக்கலாம்.
     வெப்ப நிலையை அளக்கப் பயன்படும் வெப்பமானி, காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் வேகமானி போன்றவை வானிலை தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் எளிய கருவிகள்.  வானிலை ஆய்வுக் கூடங்கள், தானியங்கி ஆய்வுக் கூடங்கள், டாப்ளர் ராடார்கள் போன்றவையும் வானிலையைக் கணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
     பழைய காலத்துக்கு மாறாகத் தற்போது செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால், புவியியல் ரீதியில் வானிலை ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது.  உலக நாடுகளின் வானிலை ஆய்வுமையங்கள், நவீனத் தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் தங்கள் கணிப்புகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றன.  இதை வானிலை ஆய்வாளர்கள் பகுத்து ஆராய்ந்து, முன்னறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
     விமானம், கப்பல்கள் போன்ற நவீனப் போக்குவரத்து வசதிகள் முழுவதும் வானிலை முன்னறிவிப்புகளைச் சார்ந்தே இயங்கிவருகின்றன.  பருவ மழை, வறட்சி பற்றி முன்கூட்டியே தெரிந்தால்தான் விவசாயிகளால் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்.  குறிப்பாக, நம் நாட்டின் விவசாயம் பருவ மழையை நம்பியே உள்ளது.  எனவே, அதில் ஏற்படும் சிறிய மாறுதல்களும் மிக முக்கியமானவையே.
     சாதாரண மக்களுக்கும் புயல், வெள்ளம் பற்றிய தகவல்கள் முக்கியமாக இருக்கின்றன.  இன்றைக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம் ( Climate Change ) , வெப்ப நிலை மாற்றம் ( Temperature Change ) போன்றவை பற்றியும் வானிலை ஆய்வு மையங்களே ஆய்வு செய்கின்றன.
     சரி, முதலில் பேசிய விஷயத்துக்கு வருவோம்.  பருவமழை என்பது இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ள வானிலை அம்சம்.  அது பல்வேறு தாக்கங்களால் நிகழ்கிறது.  எனவே, அதைத் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமில்லை.
-- ஆதி.  ( நன்றி : சி. ரங்கநாதனின் குறிப்புகள் ). வெற்றிக்கொடி.
-- - ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 23, 2013.  

No comments: