' பெரிய கோவில் ' என்று சொன்னதும் தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ( சிவன் ) கோவில்தான் நம் நினைவுக்கு சட்டென்று வரும் . இந்த கோவில் அந்த அளவுக்கு சிறப்பு பெற முக்கிய காரணம் , அதை கட்டிய முதலாம் ராஜராஜசோழன் .
தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னர்களுள் மிகச் சிறப்பானவர் இவர் . இவரது காலத்தில் ( கி.பி. 985 -- 1012 ) தான் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படக்கூடிய பிரகதீஸ்வரர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது .
கோபுரத்தின் சிறப்பு : சோழர்கள் கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த கோவிலின் கோபுரம் தனிச் சிறப்பு கொண்டது . அடிப்பகுதி அகலமாகவும் , மேலே செல்லச்செல்ல குறுகும் வகையிலும் ஒரு பிரமிட் போன்று இது அமைக்கப்பட்டுள்ளது . 64.8 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரம் 29 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரமான பீடத்தின் மீது அமைந்துள்ளது .
கோபுரத்தின் உச்சியில் ஒரே கல்லால் ஆன பிரமாண்ட விமானம் ஒன்று உள்ளது . இதன் எடை மட்டும் 80 டன்கள் ( 80 ஆயிரம் கிலோ ) . எந்த நவீன வசதியும் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு பெரிய கல்லை எப்படி மேலே கொண்டு சென்றிருப்பார்கள் என்ற வியப்பு , கோபுரத்தைக் காணும் அனைவருக்கும் நிச்சயம் எழும் .
இந்த கல்லை மேலே கொண்டுசெல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு தேவைப்பட்டது . முதலில் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு சாய்தளம் ஒன்றை ஏற்படுத்தினார்கள் . இந்த 6 கிலோமீட்டர் தூரமும் படிப்படியாக உருட்டி , உருட்டியே கோபுரத்தின் உச்சிக்கு கல்லை கொண்டு சென்றார்கள் .
கல்லின் எடை 80 டன்கள் என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் . அவர்களது ஒட்டுமொத்த உழைப்பின் பயனாக கோபுரத்தின் உச்சியை இந்த கல் அடைந்தது . அங்கு அழகாக , எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நிறுவப்பட்டது .
விழாத நிழல் : இந்த அற்புத கோபுரத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு . சூரிய ஒளியில் இதன் நிழல் தரைப்பகுதியில் விழாது என்பது தான் அது . அந்த அளவிற்கு கோவிலின் அமைப்பு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது .
பெரிய கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது இங்குள்ள பிரமாண்ட நந்தி . பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலும் நந்தி சிறிய அளவில்தான் காணப்படும் . ஆனால் , இங்கு பிரம்மாண்ட தோற்றத்தில் அது காட்சி தருகிறது . இதுவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது தான் . இதன் எடை சுமார் 25 டன் . சிலையின் உயரம் 12 அடி, நீளம் 19.5 அடி , அகலம் 18.25 அடி .
இது போன்ற சிறப்புகளால் மிக முக்கிய தென்னிந்திய கோவில்கள் பட்டியலில் இந்த தஞ்சை பெரிய கோவிலும் இடம் பெற்றுள்ளது . அத்துடன் , யுனஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது . ' சோழர்கள் ஏற்படுத்திய கோவில்களுள் மாபெரும் சிறப்புபெற்றது இந்த கோவில் ' என்று யுனஸ்கோ புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது .
--- தினத்தந்தி , 05 - 08 - 2008 .
No comments:
Post a Comment