Wednesday, September 30, 2015

பெரியார்.

எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5. 1933 ந் தேதி மாலை 7:45 மணிக்கு ஆவி நீத்தார்.  இதற்காக நான் துக்கப்படுவதா, மகிழ்ச்சியடைவதா?  நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?
ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா?
இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா?
உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா?
ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா?
எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?  எதுவும் விளங்கவில்லையே!
*  பெரியார் சுற்றுப்பயணம் செய்த தூரம் 8,20,000 மைல்கள்.
*  அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் 10,700.
*  உரையாற்றிய நேரம் 21,400 மணி நேரம்.
-- ( குடி அரசு - தலையங்கம் 14. 05.1933 ).
--  ' தி இந்து ' நாளிதழ்.  செவ்வாய், டிசம்பர் 24, 2013. 

Tuesday, September 29, 2015

கோபம் ஒரு நோய் !

*பலருக்கும் தெரியாத உண்மை இது.  கோபம் என்பது பழக்கம் அல்ல.  அது ஒரு நோய்.  சிலருக்கு கோபமே அவர்களின் வாழ்வியல் அங்கமாகிவிட்டிருக்கிறது.  சமூகத்தில் அன்பானவர், புத்திசாலி, கறார் பேர்வழி, கஞ்சப் பிசினாரி, சபலக்காரர் என்கிற வரிசையில் கோபக்காரர்களும் மிக அதிகமாகவே இருக்கிறார்கள்.  இளம் வயதிலேயே இதற்குத் தீர்வு கானாவிட்டால் இவர்கள் ஆயுட்காலக் கோப நோயாளிகளாகிவிடுவர்.
*கோபம் அதிகரிக்க அதிகரிக்க ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தின் வீச்சு அதிகரிக்கிறது.  அப்போது அக்குழாய்களின் உட்பகுதி தசைகளில் நுண்ணிய கிழிசல்கள் ( Micro teams) ஏற்படுகின்றன.  இது தொடர்ந்தால் இதயத் தாக்குதல், பக்கவாதம் நோய்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு.
* ஏற்கனவே இதயத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து கோபப்படுவதால் இதயத்தில் ரத்தத்தை பீய்ச்சும் திறன்
  ( Pumping efficiency) பாதிக்கப்படுகிறது.
--  டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  டாக்டர் மோகன் வெங்கடாசலபதி. ( உணர்ச்சிகள் ). வாழ்வு இனிது. ரசித்து வாழ வேண்டும்.
-- ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013. 

Monday, September 28, 2015

மணல் ரகசியம்.

தஞ்சை பெரிய கோயிலில் ' புதைந்திருக்கும் ' மணல் ரகசியம்.
கட்டிடக்கலை வல்லுநர்கள் புதிய தகவல்.
கீழே இரு மடங்கு சுமை    
     பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்ததில், கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமான ஆற்றுமணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.  அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இருமடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.
     அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டி கட்டியிருக்கிறார்கள்.  கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும்.  அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது.  பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.  அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
தலையாட்டி பொம்மை போல...
     தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ.  தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன்.  அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.  இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைதானே சமப்படுத்திக்கொள்ளும்.  இதனை zero settlement of foundation என்பர்.  இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது.  அசையுமே தவிர விழாது.  தலையாட்டி பொம்மையின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
     இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது.  அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மனலும் இடம்பெறுகின்றன.
     2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை.  அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை.  350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.
      இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல.  தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல்.  ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல்.  இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல்.  மேற்கு தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.(கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்யம்மன் ,  கூறக்கேட்டது ) பூச்செண்டு.
-- ' தி இந்து ' நாளிதழ்.  செவ்வாய், டிசம்பர் 24, 2013.  

Sunday, September 27, 2015

கோபம்

ஆண் கோபம், பெண் கோபம் : எது அதிகம்?
     சமூகக் கட்டமைப்பில் ஆணும் பெண்ணும் சமம்.  ஆனால், உடலியல் தொடங்கி உளவியல் வரை இருவருக்குமான இடைவெளி அதிகம்.  அதனால்தான் ஆண் கோபம் வேறு, பெண் கோபம் வேறு என்கிறோம்.  பெரும்பான்மை ஆணின் கோபம் மூர்க்கக் கோபம்.  முன்பின் யோசிக்காத கோபம்.  சமயங்களில் வக்கிரம் கொப்பளிக்கும் கோபம்.
     ஆண் கோபத்துக்கு கொஞ்சமும் வீரியம் குறைந்தது அல்ல பெரும்பான்மை பெண் கோபம்.  ஆனால், அதனை வெளிப்படுத்துவதில் இருக்கிறது வேறுபாடு.  பெண் கோபம், விளைவுகளை யோசிக்கும்.  ஆண் அளவுக்கு அழிக்கத் துணியாது.  கொஞ்சமேனும் கருணை காட்டும்.
     இந்த வேறுபாடுகளை அடையாளம் காணும் மருத்துவ அறிவியல் அதற்குக் காரணமும் சொல்கிறது.  சரிசமமாக உடைத்த அரை வட்டத் தேங்காய் வடிவத்தில் இரு பாகங்களாக இருக்கிறது நமது மூளை.  இதன் பெயர் செரிபிரல் ஹெமிஸ்பியர்
( Cerebral  hemisphere ).  இந்த இரு அரை வட்டப் பகுதிகளையும் இணைக்கும் நார்ப் பொருளிலான சுவர்தான் கார்பஸ் கலோசம் ( Corpus callosum).  வலது அரை வட்ட மூளைக்கும் இடது அரை வட்ட மூளைக்கும் தகவல் தொடர்புகளை கொண்டுசெல்வது இந்த கார்பஸ் கலோசம்தான்.  தகவல் தொடர்பில் தபால்காரருக்கு உதவுவதற்காக சுமார் 250 மில்லியன் நரம்பு முனைகள் ( Axons ) பரிமாற்றப் பணிகளில் அதிவேகத்தில் ஈடுபடுகின்றன.
      வலது மூளையை எமோஷனல் பிரைன் ( Emotional brain ) என்றும் இடது மூளையை லாஜிக்கல் பிரைன் ( Logical brain ) என்றும் சொல்கிறது மூளை நரம்பியல்.  வலது மூளை உணர்ச்சிகரமானது.  வேகமானது.  உடனடியாகச் செயல்பட உறுப்புகளுக்குக் கட்டளையிடக்கூடியது.
     இடது மூளையோ யோசிக்கும் தன்மை கொண்டது.  நாகரிகம், சிந்தனைகள், பகுத்தாய்வு, பன்திறன்கள், கூச்சம், கண்னியம், நட்பு, காதல், தாய்மை உள்ளிட்ட உணர்வுகள் எல்லாம் ஊற்றெடுப்பது இடது மூளையில்தான்.  விலங்கிடம் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் ஆறாம் அறிவு இதுதான்.
     வேகமும் விவேகமும் சேர்ந்து இயங்கும்போதுதான் ஒரு மனிதனின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.  அதற்கு இரு அரை வட்ட மூளைகளுக்கான தபால்காரரும் மேலாளருமான கார்பஸ் கலோசம் ஆரோக்கியமானவராக இருத்தல் அவசியம்.  இவர்தான் இடது மூளை சிந்தித்து உருவாக்கும் கருத்தை வலது மூளைக்கு எடுத்துச் செல்கிறார்.  அங்கு சிற்சில காய் நகர்தலுக்குப் பிறகு அக்கருத்து, செயலாக்கம் பெறுகிறது.  இவைகள் எல்லாம் நமது கற்பனைக்கு எட்டாத வேகத்தில் நடக்கக்கூடியவை.  ஆனால், தபால்காரர் ஆரோக்கியம் இழந்தால், சரியாகச் செயல்படத் தவறினால், தகவல் தொடர்பில், ஆலோசனை பெறுவதில் குளறுபடி நடக்கிறது.  250 மில்லியன் நரம்பு முனைகளும் ஒரே நேரத்தில் தாறுமாறாக இயங்குகின்றன.  யோசிக்கவே இயலாமல் ஸ்தம்பிக்கிறது மூளை.  கோபம் கண்ணை மறைத்துவிட்டது என்று சொல்வோமே அது இதுதான்.
     இயல்பிலேயே ஆண் மூளையின் கார்பஸ் கலோசம் என்கிற நார்ச் சுவரின் தடிமன் மிகக் குறைவு.  மென்மையானது.  ஆனால், பெண் மூளையின் கார்பஸ் கலோசம், ஆண் மூளையில் இருப்பதைவிட இருமடங்கு தடிமன் அதிகமானது.  உறுதியானதும்கூட.  இதனால்தான் இயல்பிலேயே பெண் மூளை, ஆண் மூளையைவிட யோசித்துக் கோபப்படுகிறது.  புத்திசாலித்தனமாகக் கோபப்படுகிறது. அழகாகக் கோபப்படுகிறது.
-- டி.எஸ்.சஞ்சீவிகுமார்.  டாக்டர் மோகன் வெங்கடாசலபதி. ( உணர்ச்சிகள் ). வாழ்வு இனிது. ரசித்து வாழ வேண்டும்.
-- ' தி இந்து ' நாளிதழ். சனி, டிசம்பர் 21, 2013.  

Saturday, September 26, 2015

ஸ்ரீரங்கம்.

உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கம்.
     ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.  13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.
தங்க விமானம்
     மூலமூர்த்தியாகிய ஸ்ரீரங்கநாதப் பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார்.  கருவறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கருவறைமேல் தங்க விமானம் ஜொலிக்கிறது.  தங்க விமானத்தின் தெற்குப் பக்கம் பரவாகதேவரின் தங்க சிலையும் பளபளப்புடனும் நேர்த்தியுடனும் விளங்குகிறது.
கம்பன் காவியம் அரங்கேறிய தலம்
     கவிச்சக்ரவர்த்தி கம்பன், தன் உன்னதப் படைப்பான ' ராமாவதாரம் ' என்ற ராமாயணக்காப்பியத்தை அரங்கேற்றம் செய்ய ஸ்ரீரங்கத்தையே தேர்ந்தெடுத்தான்.  ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி அருகே கோயில் கொண்ட நரசிம்மர் சன்னதியில்தான் கம்பன் தன் காவியத்தை அரங்கேற்றினான்.
     கம்பன் தன் காவியத்தின் புதிய படைப்பான ' இரணியன் வதைப்படல'த்தைப் பாடியபோது, ' மேட்டு அழகிய சிங்கர் ' என்ற திருநாமம் கொண்ட நரசிம்ம மூர்த்தி தன் தலை அசைத்து கம்பன் காவியம் அரங்கேற அங்கீகாரம் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
-- புலவர் முத்து வெங்கடேசன். ஆனந்த ஜோதி.
--  ' தி இந்து ' ஆளிதழ்.  வியாழன்,  டிசம்பர் 19, 2013. 

Friday, September 25, 2015

கடவுள் எதற்காக?

  மனிதனே எல்லாவற்றையும் தன்னுடைய முயற்சியால் சம்பாதித்துக் கொள்கிறான் என்றால் கடவுள் எதற்காக?
      உங்களுக்காக கண்ணதாசன் சொன்னதைக் கேளுங்கள்...
பிறப்பின் வருவது யாதெனக்
கேட்டேன்
பிறந்து பாரென இறைவன்
பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதென
கேட்டேன்
அறிந்து பாரென இறைவன்
பணித்தான்

அன்பெனப்படுவது யாதென
கேட்டேன்
அளித்துப் பாரென்றான்

மனையாள் சுகமெனில் யாதெனக்
கேட்டேன்
மணந்து பாரென்றான்

பிள்ளை என்பது யாதெனக்
கேட்டேன்
பெற்றுப் பாரென்றான்

முதுமை என்பது யாதெனக்
கேட்டேன்
முதிர்ந்து பாரென்றான்

இறப்பின் பின்னது ஏதெனக்
கேட்டேன்
இறந்து பாரென்றான்

அனுபவித்தே அறிவது
வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்
கேட்டேன்

அந்த அனுபவமே நான்தானே
என்றான்.
-- ஸ்ரீ கேள்வி பதில்.
-- தினமலர். பெண்கள்மலர் இணைப்பு.  21-12-2013.  

Thursday, September 24, 2015

விழிப்புடன் இருங்கள்!

   (  சிறப்பு )
     பைக்  வைத்திருப்போர்,  பெட்ரோல்  பங்க்களில், பெட்ரோல்  நிரப்பும்போது  கவனிப்பது  உண்டா? ...
     நீங்கள்  கொடுக்கும்   பணத்திற்கு  ஏற்ற  பெட்ரோல், பைக்  டேங்கை  நிரப்பும்  முன், கையில்  உள்ள  பெட்ரோல், 'பம்ப் நாக்'கை  அழுத்தி  விடுவார்.
     நீங்கள்,  100  ரூபாய்க்கு  பெட்ரோல்  போடச்  சொல்லி  இருப்பீர்கள்;   பெட்ரோல்  நிரப்பும்  நபர், 100  ரூபாய்  என,  பொத்தானை  அழுத்தி,  பெட்ரோல்  போடுவார்.  மீட்டரில், 90  ரூபாய்  நெருங்கும்  சமயம்  அவர், 'லாக்கை'  அழுத்தி, பின்  விடுவிப்பார்.  பின்,  மெதுவாக   பெட்ரோல்  இறங்கி  100  ரூபாயை  தொடும்.  இது  எல்லோரும்  பார்க்கும்  விஷயம்தான்.
     இந்த  நடவடிக்கையால்,  ஐந்து  ரூபாய்  முதல்,  10  ரூபாய்  வரை  மதிப்புள்ள   பெட்ரோல்,  உங்களுக்கு  குறைகிறது.  எவ்வாறெனில்,   பெட்ரோல், 'பம்ப்  மீட்டர்'  ஒரே  சீராக  இயங்கினால்  தான்,  சரியாக  100  ரூபாய்க்கு  என  இறங்கும்.  நடுவில்  தடை  செய்யப்பட்டு, பின்  இயக்கினால்,  குறைந்த  அளவு  பெட்ரோல்  மட்டுமே  கிடைக்கும்.
     இதுபோல்  நூதன  திருட்டு  மூலம்   பெட்ரோல்  பங்க்  உரிமையாளர்கள், தினமும், 20  ஆயிரம்  ரூபாய்  வரை  லாபம்  அடைகின்றனர்.  உங்கள்  பணத்தை, உங்கள்  கண்  முன்  திருடுவதை  பார்த்துக்  கொண்டிருக்காதீர்கள்.  தைரியமாக  தட்டிக்  கேளுங்கள்!
     நுகர்வோரே... ஏமாற  தயாராகாதீர்கள்;  விழிப்புடன்  இருங்கள்!
-- இது  உங்கள்  இடம்.
-- தினமலர்  சென்னை  ;  செவ்வாய் ;  30-6-2015.
--  இதழ் உதவி: S.B.மாதவன், விருகம்பக்கம். சென்னை .92. 

கிறிஸ்துவின் கால் தடங்கள்

எருசலேம்
     எருசலேம் சமாதானத்தின் நகரம் ஆகும்.  இதற்கு எட்டு வாயில்கள் உள்ளன.  பொன்வாயில் வழியாகத் தான் இயேசு எருசலேமுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.  இன்றும் யூதர்கள் அந்த வாயில் வழியாகவே மீட்பர் வருவார் என்று கூறுகின்றனர்.
பெத்லகேம்
     இங்குதான் யேசுவும் தாவீதும் பிறந்தனர்.  இராக்கேலின் கல்லறை இங்கே உள்ளது.  எருசலேமிற்குத் தெற்கே ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் சூசையப்பரின் தந்தையின் இல்லம் உள்ளது.  இங்கிருந்துதான் புனித ஜெரோம் விவிலியத்தை எழுதினார்.  இவர் தங்கியிருந்த குகை ஒன்றும் உள்ளது.
நாசரேத்
     கலிலேய நகரங்களில் பழமை வாய்ந்த ஊர்.  அன்னை மரியாளிடம் கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை அறிவித்த இடத்தில் இன்று ஆலயமும் அதனுடன் சூசையப்பரின் ஆலயமும் உள்ளது.  உலகிலேயே கபிரியேல் வானதூதருக்கு இங்கு மட்டும்தான் ஆலயம் உள்ளது.
-- ரூஃபஸ்.  ஆனந்த ஜோதி.
--  ' தி இந்து ' ஆளிதழ்.  வியாழன்,  டிசம்பர் 19, 2013. 

Wednesday, September 23, 2015

இப்போ சீனா வேற மாதிரி.

 ஒரு குடும்பத்துக்கு ஒரே குழந்தை என்ற அரசு விதியை சீன நாடாளுமன்றதின் நிலைக்குழு நேற்று ரத்துசெய்தது.  கூடவே, தவறு செய்தவர்களுக்கான கடும் உடலுழைப்பு முகாம்களும் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.  கணவன் அல்லது மனைவி ஆகியோரில் ஒருவர் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாதவர்களாக இருந்தால், அவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.  உடலுழைப்பு முகாம்கள் மூடப்படுவதாகக் கூறப்பட்டாலும், போதை மருந்துக்கு அடிமையானவர்களை மீட்கும் முகாம், சிந்தனை சீர்திருத்த முகாம் என்ற வேறு பெயர்களில் இவை தொடர்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-- எத்திசையும்.  அரசியல் களம்.
-- ' தி இந்து ' ஆளிதழ்.  ஞாயிறு, டிசம்பர் 29, 2013.  

Tuesday, September 22, 2015

இணைய வெளியிடையே...

  பெரும்பாலானவர்களுக்கு சீட்டு விளையாட தெரியும்.  அதில் ராஜா, ராணி என்ற சீட்டுக்கள் இருக்கும்.  ஆனால், அந்த ராஜா - ராணி எந்த மன்னனை,  அரசியை குறிக்கிறது தெரியுமா...?
   ஸ்பேட் ராஜா  --  மன்னர் டேவிட்  ( இஸ்ரேல் ).
   ஹார்டின் ராஜா  --  மன்னர் சார்லஸ்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராஜா  --  ஜூலியஸ் சீசர்  ( இத்தாலி ).
   கிளாவர் ராஜா  --  அலெக்சாண்டர் தி கிரேட்  ( கிரீஸ் ).
   ஸ்பெட் ராணி  --  ஏதெனா  ( கிரீஸ் ).
   ஹார்டின் ராணி  --  ஜூதிக்  ( பிரான்ஸ் ).
   டயமண்ட் ராணி  --  ரேச்சல்  ( எகிப்து  ).
   கிளாவர் ராணி  --  ஆர்ஜீன்  ( கிரீஸ்  ).
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் நாளிதழ்.  29 -12- 2013. 

Monday, September 21, 2015

' நெட்' டுக்குத்து.

*  செய்தி : ஊழலை ஒழிக்க காங்கிரஸ் பாடுபடுகிறது.  --  சோனியா.
    குத்து :  மேடம். தப்பா தமிழ் பேசுறீங்க.  அது ஒழிக்க இல்ல, ஒளிக்க.
*  செய்தி :  காவிரித் தண்ணீர் வழங்க பிரதமர் கட்டளையிட்டார்.  --  விஜயதாரணி.
   குத்து :  இவங்களுக்கு லிப் ரீடிங்லாம் கூட தெரியும் போல டோய்.  --  அறுவை சர்ஜன்.

பாருங்கையா இந்த கூத்தை!
*  விலை குறைந்த பொம்மைகள் என்றாலே அது சீன தயாரிப்புகள் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது.  ஆனால், அடுத்த முறை நீங்கள் சீன
   தயாரிப்பில் உருவான பொம்மையை வாங்கினாலும் அது நிச்சயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நம்புங்கள்.
*  சந்தையில் விற்பனையாகும் பெரும்பாலான பொம்மைகள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரானவை என்றால் நம்புவது
   சிரமம் தான்.  ஆனால், அதுதான் உண்மை.  பால்ஸ் பிளஷ் இந்தியா எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம் சீனாவின் துணை நிறுவனமாகும்.
*  பிடதி ஆசிரம குளத்தில் அதிகாலையில் நீராடிய நடிகை ரஞ்சிதா, ருத்ராட்ச மாலைகள் அணிந்து, காவி உடை உடுத்தி நித்யாந்தாவிடம் தீட்சை பெற்றார்
*  இன்றைக்கு இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மனநலச் சிதைவு இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கை
   தெரிவிக்கிறது..

Sunday, September 20, 2015

விமானத்தில் செல்போன்.

விமானத்தில்  பறக்கும்போது செல்போனில் பேசலாம்.
அமெரிக்க தொலைத்தொடர்பு ஆணையம் பரிந்துரை.
     விமானம் 3,048 மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கும்போது பயணிகள் செல்போனில் பேசவும், செல்போன், குளிகைக்கணினி ( டேப்லெட் ), கணினிகள் ஆகியவற்றில் அகன்ற அலைவரிசைச் சேவைகளைப் பயன்படுத்தி இணையதளங்களைக் கையாளவும் அனுமதிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
     அதே சமயம், விமானம் வானில் ஏறும்போதும், ( டேக் ஆப் ), தரையிரங்கும் போதும் செல்போன்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும்.
     விமானத்தில் பயணிக்கும் போது வைஃபை தொழில்நுட்பத்தின் மூலம் கணினிகளிலும், இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கு பெரும்பாலான பயணிகள் விரும்புவது குறிப்பிடத்தக்கது.
--  பிடிஐ  சர்வதேசம்
--  ' தி இந்து' நாளிதழ்.  சனி,  நவம்பர் 23, 2013.  

Saturday, September 19, 2015

இதையும் தெரிஞ்சுக்கலாம் !

*  சென்னை நேரம் கிரீன்விச் நெரத்திலிருந்து 5 மணி 21 நிமிடங்கள் 14 நொடிகள் என இருந்திருக்கிறது.  இந்தியாவுக்கான பொது நேரத்தை
   ( Indian Standard Time ( IST ) 1906 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
*  செங்கல் தரமானதா என்பதை நம்மால் அறிய முடியும்.  சில செங்கற்களை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.  பிறகு, விரலால் சுரண்டிப்
   பார்க்கும்போது பிசிறு பிசிறாக வந்தால், அது தரம் குறைந்த செங்கல்.
*  தற்போது கட்டுமானத்தில் ' இண்டர்லா செங்கற்கல் ' என்றோரு வகையும் பயன்பாட்டில் உள்ளது.  நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து
   தயாரிக்கப்படும் இக்கல் மூன்று செங்கற்களுக்கு இணையானது.  இது வேலையை மிகவும் சுலபமாக்கும்.
*  பாசியை நீக்குவது : தண்ணீர் டியூப்புகளில் அதிக ப்ரஷர்.கொடுத்து நீரை வெளியேற்றி மேற்கூரையில் உள்ள தூசி, துரும்புகளை அகற்றலாம்.  அதிக
   ப்ரஷரில் நீர் பாய்ச்சும்போது, நீரின் வலிமை காரணமாக அழுக்கையும் பாசியையும் கூரைகளைச் சுத்தப்படுத்தும் முறைகளில் இது ஒரு வழிமுறையாகும்.
*  மேற்கூரை மற்றும் சுவர்களில் உள்ள பாசியைச் சுரண்டி எடுப்பதன் மூலம் இப்பிரச்சினையைப் போக்கலாம்.  இந்த முறையைக் கையாண்டால் அதிக
   நேரமும் உழைப்பும் தேவைப்படும்.  ஆனால், சுத்தப்படுத்துவதற்கு இது சிறந்த வழி.  இந்த முறையைப் பின்பற்றினால் சுவர் மற்றும் கூரையில் இருக்கும்
   கடைசித் துளி பாசி வரை நீக்கிவிடலாம்.  சுரண்டி எடுத்த பின் அந்த இடத்தில் ரசாயன மருந்தைத் தெளித்துப் பாசி மீண்டும் வராமல் பார்த்துக்
   கொள்ளலாம்.
-- சொந்த வீடு.  கனவு மெய்பட வேண்டும்.
--  ' தி இந்து' நாளிதழ். இணைப்பு. சனி, டிசம்பர் 28, 2013. 

Friday, September 18, 2015

வைக்கோல் பிரிக்கும் இயந்திரம்.

 சேலம் தலைவாசலில் ரவுண்ட் பேலர் எஸ் ஆர்பி - 60 என்ற இயந்திரத்தை, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ள சக்திமான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இது அறுவடைக்கு பின்பு கரும்பின் தோலையும், நெல்லிருந்து வைக்கோலையும் பிரித்தெடுக்கும் பணியை திறம்பட செய்யக்கூடியதாகும்.  தற்போது தமிழகமெங்கும் இந்த இயந்திரம் விற்பனைக்கு கிடைக்கிறது.
     மேலும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 30 அடி உயரம் வரை தேங்காய் பறிக்கும் வசதி இதில் உள்ளது.  360 டிகிரி வரை சுழலும் தன்மை கொண்டது.  தனிநபர் ஒருவரால் இதை இயக்க முடியும்.  இதன்மூலம், தேங்காய் பறிப்பது மட்டுமன்றி, மாங்காய், பனை எண்ணெய், தோட்ட பயிர்களை பராமரித்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள முடியும்.
-- தினமலர் நாளிதழ். 27- 12-2013. 

Thursday, September 17, 2015

வகுப்பறை

உலகில் முதன்முதலாக நின்று கொண்டே படிக்கும் வகுப்பறை. ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் குண்டாகாமல் தடுக்க புது முயற்சி.
     ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, சிறுவர்கள் இறுக்கையில் மணிக்கணக்கில் அமர்ந்தே இருப்பதால் உடல் குண்டாக ஊதிப்போகும் நிலைமை ஏற்படுகிறது.
     இதைத் தடுப்பதற்காக, மாணவர்களின் உயரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய டெஸ்க்கை வடிவமைதுள்ளனர்.  தமது தேவைக்கேற்ப நின்றுகொண்டோ அல்லது அமர்ந்தபடியோ பாடம் கேட்க வகை செய்யப்பட்டுள்ளது.  இந்த சிறப்பு டெஸ்க் மான்ட் ஆல்பர்ட் தொடக்கப்பள்ளியின் 6-ம் வகுப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ளது.
     இந்த டெஸ்க் அமைக்கப்பட்டதிலிருந்து நிறைய மாணவர்கள் நின்று கொண்டே பாடம் கேட்கின்றனர்.  மாணவர்கள் நின்றபடி இருப்பதால் அவர்களது சுகாதாரம், உடல்தகுதி, படிப்பாற்றல், நினைவுத்திறன் மேம்படுகிறதா என்பதை விஞ்ஞானிகள் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர்.
     எவ்வளவு நேரம் அமர்ந்தபடி இருக்கின்றனர் என்பதை அளவிடும் கருவிகள் மாணவர்களுக்கு பொருத்தப்படும்.  சோம்பலாக மாணவர்கள் இருப்பதை தவிர்க்க பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.
     பள்ளிக்கூடங்களில் தினமும் 3ல் 2 பங்கு காலம் அமர்ந்தபடியே இருந்தால் நீரிழிவு நோய், இதய நோய், உடல் ஊதி பருமனாதல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.
--  பிடிஐ  சர்வதேசம்
--  ' தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  டிசம்பர் 26, 2013.  

Wednesday, September 16, 2015

வாங்க தெரிஞ்சுக்கலாம் !

*  அந்தக் காலத்தில் பாய்ன்செட்டியா என்கிற செடியின் இலைகளை கிறிஸ்துமஸ் அலங்காரத்துக்குப் பயன்படுத்துவார்கள்.
*  முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து தனது 700 சதுர அடி வீட்டில் இருந்துதான்  புத்ததேவ் பட்டாச்சாரியா பணியாற்றினார்.
*  தற்போது திரிபுரா முதலமைச்சராக இருக்கும் மாணிக் சர்க்காரோ, முதலமைச்சருக்கான இருப்பிடத்திலிருந்து வெளியேறினால், கட்சி அலுவலகத்தில்
   உள்ள அறையில்தான் தங்குவார்.  அவருக்குத் தலைநகர் அகர்தலாவில் சொந்த வீடு கிடையாது.  சொந்த ஊரில் தகரம் போட்ட வீடுதான் அவருடையது.
*  டில்லி முதல்வராக பதவி ஏற்க இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தேவை இல்லை எனவும், ஆடம்பர பங்களா
   தேவை இல்லை எனவும் அறிவித்திருப்பது ஒரு நல்ல ஆரம்பமே.
*  இந்திய ராணுவத்திலிருந்து 6 வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்; காஷ்மீர் போலி எங்கவுன்டர் சம்பவத்தில் குற்றம் இழைத்தது தெரியவந்ததால்.
*  மதம் பிடித்ததால் தன் பாகனைக் கொன்று விட்ட யானை, பின்னர் தனது தவறை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதது.  உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த
   உருக்கமான சம்பவத்தைப் பார்த்து அனைவரும் கண்கலங்கினர்.
-- ' தி இந்து' நாளிதழ்.  வெள்ளி, டிசம்பர் 27, 2013.  

Tuesday, September 15, 2015

வணக்கம் பலவிதம் !

தலையால் மட்டும் வணங்குதல்  -  ஏகாங்க நமஸ்காரம்.
வலது கையை மட்டும் தலைமீது வைத்து வணங்குதல்  -  த்விதாங்க நமஸ்காரம்.
இரண்டு கைகளையும் தலை மேல் வைத்து வணங்குதல்  -  த்ரிவிதாங்க நமஸ்காரம்.
இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டிகள், தலை இவற்றால் வணங்குவது  -  பஞ்சாங்க நமஸ்காரம்.
இரு கால்கள், இரு கைகள், இரு செவிகள், தலை, மார்பு ஆகிய எட்டு அங்கங்களால் வணங்குதல்  -  அஷ்டாங்க நமஸ்காரம்.
நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது  -  சாஷ்டாங்க நமஸ்காரம்.
--  தினமலர். பக்திமலர். டிசம்பர் 26, 2013.   

Monday, September 14, 2015

குங்குமப் பொட்டில் மங்கலம்!

 பெண்கள் திலகம் வைத்து கொள்வது மங்கலத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.  திலகமிடுவது மங்கல குறியீடு மட்டுமல்ல; அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது.  மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும், வேறு மனிதர்களின் எண்ண பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து, அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது.  அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில், சிக்கல்கள் இல்லை, வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்.
    'பொட்டு இட்டுக் கொண்டவர்களை, அவர் சம்மதம் இல்லாமல் எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது என்பது உறுதி...'
-- தினமலர். பக்திமலர். டிசம்பர் 26, 2013. 

Sunday, September 13, 2015

பசுமைத் திருமணம் !

சுற்றுச்சூழல் போற்றும் பசுமைத் திருமணங்கள் !
காந்திய பொருளாதாரத்தின் மற்றொரு வடிவம்.
     கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வருகிறார் கடலூர் மாவட்டம் தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா.
     பாரம்பரிய இயற்கை விருந்து !
     பசுமைத் திருமணங்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே நடத்தப்படுகின்றன.  பாரம்பரிய சிறு தானியங்கள் மற்றும் இயற்கை விவசாய வகை உணவுகலே விருந்தாக வழங்கப்படுகின்றது.  காலை விருந்தாக தேன், தினைமாவு, உருண்டை, முக்கனிகள், வரகு அரிசி பொங்கல், நவ தானிய அடை, நாட்டுக் காய்கறி அவியல், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், இளநீர், சுக்குமல்லி தேநீர், பனை வெல்ல பானகம், நொங்கு வழங்குகிறார்கள்.  மதியம் சிகப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறிகள் குழம்பு, கம்பு தயிர் சாதம், கடைந்த கீரை, அவியல், துவையல், பனை வெல்லம் பருப்பு பாயசம் வழங்கப்படுகிறது.  சமையலுக்கு எண்ணெய் கிடையாது.  பெரும்பாலும் கிராம நீர்நிலைகளின் நீரையே இயற்கை முறையில் சுத்திகரித்து குடிநீராக பரிமாறுகிறார்கள்.
-- டி.எஸ். சஞ்சீவிகுமார். பூச்செண்டு.
-- ' தி இந்து ' நாளிதழ்.  புதன், டிசம்பர் 25, 2013.  

Saturday, September 12, 2015

' ஆல்ஃபா நிலை '

 " சக்திகளிலேயே மிகப்பெரிய சக்தி நம்  ஆழ்மனதின் சக்தி !."  இதை உணர்ந்து நமக்குள்ளேயே இருக்கும் இந்த சக்தியைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் நிச்சயமாக நம் வாழ்வில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.  பல விஷயங்களைச் சாதிக்கவும் முடியும்.
      இந்த ஆழ்மனதின் சக்தியை எப்படித் தெரிந்து கொள்வது?  உங்கள் மனதின்  ' ஆல்ஃபா நிலை ' தான் அது.  ஒரு தியான முறையின் மூலம் இந்த நிலையை அடைய முடியும்.
     மனித மூளையின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் மிக அழகாக ஆராய்ந்திருக்கிறார்கள்.  மூளையிலிருந்து வெளிப்படும் மெல்லிய முன் வீச்சுக்கள் அவ்வப்பொழுது அதன் செயல்பாட்டிற்கேற்ப  மாறக்கூடியது.  இது EEG என்ற கருவியின் மூலம் வினாடிக்கு இத்தனை ' சைக்கிள் 'கள் என்று கனக்கிடப்படுகிறது.
     இதில் ஆல்ஃபா எனப்படுவது வினாடிக்கு 7 முதல் 14 சைக்கிள்கள் வரையிலான நிலையாகும்.  தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான நிலை இது.  இந்த நிலையில் செயல்படும் பொழுது பொதுவாக அதிகமாக இயங்கும் இடது பக்க மூளையுடன், வலது பக்க மூளையும் ஊக்குவிக்கப்படுகிறது.  அதனால் நமது மூளை மிகவும் சக்தி வாய்ந்த, ஆக்கபூர்வமான உள்ளுணர்வுடன் கூடிய சிந்தனையில் ஈடுபடுகிறது.  இந்த நிலையில் உங்கள் ஆழ்மனதுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படுகிறது.  அங்கு பதுங்கி இருக்கும் மிகப்பெரிய சக்தியைத் தட்டி எழுப்பி நீங்கள் பயன்பெற முடியும்.
     இந்த நிலையில் இருக்கும்பொழுது மனதில் பதிக்கப்பட்ட எண்ணங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் ஏடேறும் என்று கண்டறியப்படுள்ளது.
     அது மட்டுமன்றி, தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆல்ஃபா தியானத்தைப் பயிற்சி செய்தாலே நினைவாற்றல் கூடுவதுடன் புத்திக் கூர்மையும் உண்டாகிறது.
- 'ஆல்ஃபா மைண்ட் பவர் '  என்ற நூலில்.  - டாக்டர் விஜயலக்ஷ்மி பந்தையன்.
--  இதழ் உதவி : S.B.மாதவன், விருகம்பாக்கம், சென்னை .

Friday, September 11, 2015

பதினாறாம் லூயி மன்னர்

  நாடே கொந்தளித்த நிலையில்  பதினாறாம் லூயி மன்னருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதா?  மன்னிப்பதா? என்ற விவாதம் பிரெஞ்சு கன்வென்ஷனில் நடைபெற்ற போது மன்னருக்கு மரணதண்டனை என்று வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 361.  மன்னருக்கு மன்னிப்பு கொடுப்போம் என வாக்களித்தவர் எண்ணிக்கை 334.  இதிலிருந்து புரிவது என்ன?  மரணத் தறுவாயிலும் செல்வாக்காகவே இருந்தார்  பதினாறாம் லூயி மன்னர் என்பது புரிகிறதா?
     ஏழாண்டுக் காலம் சிறியஓர் அறுவை சிகிச்சைக்குத் தயங்கி அல்ல கூச்சப்பட்டு மனைவியைத் திருப்தி செய்ய முடியாமல், அவளது தவறான அரசியல் முடிவுகளை ஏற்று நடந்ததால் ஒரு நல்ல மனிதர் அரசையும் உயிரையும் இழந்தார்.  ஏழாண்டுகளுக்குப் பிறகு தமது மைத்துனரின் உறுதியான ஆலோசனைப்படி அந்தச் சிகிச்சையை மேற்கொண்டார்.  இல்வாழ்வுத் தகுதி பெற்றார்.  ஆனால், அதற்குள் நாட்டு அரசியல் நிலை செப்பனிட முடியாத அளவு சிக்கலாகி இருந்தது.  சின்னப் பிரச்சனைகளை உரிய காலத்தில் தீர்க்க விரும்பாதவர்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் புரிகிறதா?
--  வாழ்ந்து பார்க்கலாம் வா ! ( தன்னம்பிக்கை -- சுயமுன்னேற்ற நூலில் ).
-- சுகி . சிவம்.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.  

Thursday, September 10, 2015

மணி .

ஸ்பந்தா ஹாலில் உங்கள் இருக்கை அருகே மணி ஒன்று தொங்குகிறதே அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?
     இந்த மணி மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் எப்போதும் இத்தகைய மணிகள் மிகவும் கவனத்துடன், சரியான உலோகம், சரியான வடிவம், சரியான கட்டமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. அதனால் இதற்கு தன்னை சுற்றியுள்ள சக்திநிலையை தக்க வைத்துக்கொள்ளக்கூடிய குணம் ஏற்பட்டுள்ளது.  குறிப்பிட்ட இந்த மணி பல ஆன்மிகவாதிகளை விடவும், பல துறவிகளை விடவும் ஆன்மிகத்தை நன்றாக அறிந்துள்ளது.  ஏனென்றால், இது அத்தகைய பல சூழ்நிலைகளுக்கிடையே இருந்துள்ளது.  தன்னைப் பற்றிய விழிப்புணர்வு அதற்கு இல்லை.  ஆனால், இந்த மணி தன்னைச் சுற்றியுள்ள பல அற்புதமான விஷயங்களை சேகரித்துள்ளது.  அதற்கு பகுத்துப் பார்க்கும் அறிவோ அல்லது புத்திசாலித்தனமோ கிடையாது.  இருந்தாலும், இது தன்னைச் சுற்றியுள்ளவற்றை சேகரிக்கும் திறமையுண்டு.
     உலோகங்களை நாம் இதுபோன்று உருவாக்க இயலும்.  பாதரசம் போன்ற உலோகங்களை மிக தீவிர உயிரோட்டமான நிலைகளுக்கு நாம் எடுத்துச் செல்ல முடியும்.  மனிதர்களை விடவும் இவற்றை உயிரோட்டமான நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்.
-- கேளுங்கள் கொடுக்கப்படும். ?! பதில்கள் தொடரில், சத்குரு ஜக்கி வாசுதேவ்.
-- ஈஷா காட்டுப்பூ.  ஜனவரி 2012.
-- இதழ் உதவி : S.B.மாதவன், விருகம்பாக்கம், சென்னை 92

Wednesday, September 9, 2015

எது? எது? எப்ப? எப்ப?

  " பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்க வாய்ப்பில்லை " என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா?  நம்பத்தான் வேண்டும்.  ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.
       பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு.  இறுக்கமாகத் தோலால் மூடியிருந்தது.  அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.  அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது.  ஆனால் அவ்வளவு சாதாரணமான அறுவை சிகிச்சைக்கு மன்னர் உடன்படவில்லை.  தயங்கினார்.  குழம்பினார்.  ஒத்திப் போட்டார்.  முடிவில் அவரது தலையே கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டது.
       ஆம்.  அவரது இந்தப்பிறவிக் குறைபாடு காரணமாக மன்னர் பதினாறாம் லூயி தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற்கொள்ள முடியவில்லை.  அவள் தன்னை விவாகரத்துச் செய்து அவமானப் படுத்திவிடக் கூடாதே என்பதற்காகவே அரசியின் எல்லா அநியாயங்களையும் மன்னர் சகித்துக் கொள்ள வேண்டியதானது, அவளது ஒழுக்கக் கேடுகள், முறையற்ற தொடர்புகள், அகங்காரமான நடவடிக்கைகள் குறித்து மன்னருக்கு அதிருப்தி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காகவே அவளிடம் மன்னர் பணிந்து போனார்.  விளைவு அரசியின் அராஜக நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபமே பிரெஞ்சுப் புரட்சியாகப் பிறகு வெடித்தது.  மன்னர் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பில்லை.  மாறாகப் பாசம் இருந்தது என்பது ஓர் ஆச்சரியமான உண்மை!
-- வாழ்ந்து பார்க்கலாம் வா ! ( தன்னம்பிக்கை -- சுயமுன்னேற்ற நூலில் ).
-- சுகி . சிவம்.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.    

Tuesday, September 8, 2015

பாரம்பரியம்

பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மறந்ததால் பலவித நோய்களுக்கு ஆளாகிறோம்.
     பெரும்பாலான  நோய்களுக்கு உணவு, சுற்றுச்சூழல்,வாழ்வியல் ஆகியவை முக்கியக் காரணம்.  உணவுப் பழக்கம் நல்லவிதமாக இருந்தால் பல நோய்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம். காலை உணவு மிக முக்கியம்.  அதை தவிர்க்கவே கூடாது.  ஆனால், நாம் காலை உணவாக நூடுல்ஸ், ப்ளேக்ஸ் ஆகியவற்றை சில நொடிகளில் செய்து கொடுத்து வேலையை முடித்து விடுகிறோம்.  இந்த உணவுகள் கெடுதலை விளைவிக்கக் கூடியவை.
     மோனோசோடியம்குளூட்டமேட் எனப்படும் சீன உப்பு ரெடிமேட் உணவுகளில் சேர்க்கப்படுகிறது.  இதில் உள்ள ரசாயனம் நரம்பு நோய், மூளை பாதிப்பு, அறிவாற்றல் மந்தம் ஆகியவற்றை உண்டாக்குகிறது.  இதனால் உலகில் 60 நாடுகள் இந்த சீன உப்பை தடை செய்து விட்டன.  ஆனால், நம் நாட்டில் அது தங்குதடையின்றிக் கிடைக்கிறது.
     தெரிந்தோ தெரியாமலோ நாம் உட்கொள்ளும் மஞ்சள்தான் நம்மை பலவிதமான நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.  தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெய்களைவிட நல்லது.  அதிலிருக்கும் லாரிக் அமிலம் இதய நோய்க்கான மருந்து.  மற்ற ரீபைண்ட் ஆயிலில் உள்ள எக்சிம் கல்லீரலைப் பாதிக்கும் தன்மைக் கொண்டது.
     ஒரு காரட்டில் உள்ளதைப் போல் 2700 மடங்கு அதிகம் பீட்டாகரோட்டின் முருங்கைக் கீரையில் இருக்கிறது.  சர்க்கரையைக் காரணம் காட்டி கனி வகைகளை நாம் ஒதுக்கிவிட்டோம்.  உள்ளூரில் கிடைக்கும் அனைத்துக் கனி வகைகளும் மிகவும் நல்லது.  அயல் நாட்டு கனி வகைகள் பல நாள் கழித்து நமது கைக்கு வருவதால் அதில் சத்துக் குறைவாகவே இருக்கும்.  மேலும், கெட்டுப்போகாமலிருப்பதற்காக அந்தக் கனிகள் மீது பூசப்படும் மெழுகு மிகவும் கெடுதலானது.
     வாரத்திற்கு மூன்று, நான்கு நாட்கள் சிறு தானியங்களை உணவாக உட்கொள்ளுங்கள்.  உளுந்து, கம்பு, கேழ்வரகு களி, கஞ்சி வடிவிலும், சோள தோசை என செய்து சாப்பிடுங்கள்.  கடலை மிட்டாய் அதிக சத்து நிறைந்த ஒரு திண்பண்டம்.  அதிரசம், முறுக்கு ஆகியவற்றையும் சத்தான திண்பண்டங்கள்தான்.  உள்ளூரில் விளையும் நெல்லிக் கனி, வாழைப்பழம், கொய்யாப்பழம், பன்னீர்திராட்சை, கமலா ஆரஞ்சு ஆகியவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளுங்கள்.  பெரும்பாலும் உங்களை நோய் அண்டாது.
-- கு.சிவராமன். இயற்கை மருத்துவர்.
--   ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 23, 2013.

Monday, September 7, 2015

" மழை பெய்யுமா?"

" இன்னைக்கு  மழை பெய்யுமா?"
     தெற்கில் உள்ள கடக ரேகைக்கும் வடக்கில் உள்ள மகர ரேகைக்கும் சூரியன் மாறி மாறிச் சென்று திரும்பும்போது காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சூரியன் வடக்கே நகர்ந்தால் ' வெப்ப மண்டல ரேகை 'எனப்படும் ரேகையும் அதனுடன் நகரும்.  தென்மேற்குப் பருவக் காற்று அந்த ரேகையைப் பின்தொடர்கிறது.  இந்த ரேகை ஜூன் முதல் தேதி கேரளத்தில் தொடங்குகிறது. ' வெப்ப மண்டல ரேகை' நகரும்போது, சூராவளிப் புயல்களும் உருவாகின்றன.
     சூரிய வெப்பத்தால் கடல் நீர் நீராவியாகும்.  அந்த நீராவி புயல் மேகங்களாகவும், மழை மேகங்களாகவும், பனியாகவும் மாறும்.  சாதாரணமாகக் காற்று மண்டலத்தில் தாழ்வு நிலை (  depression ) ஏற்படும்போது மழை உருவாகிறது.  சுருக்கமாகச் சொன்னால் கடலுக்கும் காற்று மண்டலத்துக்கும் இடையிலான ஊடாட்டமே வானிலை மாறுபாடுகள்.
     வானிலை மாறுபாடுகள் தினசரி மாறக்கூடியவை.  அதை முன்கூட்டியே அறிவதற்கு நிலம் சார்ந்த குறிப்புகளும், காற்று மண்டலக் குறிப்புகளும் அவசியம்.  இந்தத் தகவல்களை உலகம் முழுவதும் சேகரித்து ஒப்பிட்டால் மட்டுமே, வானிலை ஆய்வு செய்ய உடியும்.
வானிலை ஆய்வு.
     பல்வேறு ஆண்டுகளுக்குத் தொகுக்கப்பட்ட வானிலைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட ஓர் இடம், மண்டலத்தின் வானிலை பற்றி ஆய்வு செய்வதே வானிலை ஆய்வு.  இதன் மூலம் ஒரு பகுதியின் பொதுவான வானிலை நிலையைக் கணிக்கலாம்.
     வெப்ப நிலையை அளக்கப் பயன்படும் வெப்பமானி, காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படும் வேகமானி போன்றவை வானிலை தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் எளிய கருவிகள்.  வானிலை ஆய்வுக் கூடங்கள், தானியங்கி ஆய்வுக் கூடங்கள், டாப்ளர் ராடார்கள் போன்றவையும் வானிலையைக் கணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
     பழைய காலத்துக்கு மாறாகத் தற்போது செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால், புவியியல் ரீதியில் வானிலை ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது.  உலக நாடுகளின் வானிலை ஆய்வுமையங்கள், நவீனத் தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் தங்கள் கணிப்புகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றன.  இதை வானிலை ஆய்வாளர்கள் பகுத்து ஆராய்ந்து, முன்னறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
     விமானம், கப்பல்கள் போன்ற நவீனப் போக்குவரத்து வசதிகள் முழுவதும் வானிலை முன்னறிவிப்புகளைச் சார்ந்தே இயங்கிவருகின்றன.  பருவ மழை, வறட்சி பற்றி முன்கூட்டியே தெரிந்தால்தான் விவசாயிகளால் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்.  குறிப்பாக, நம் நாட்டின் விவசாயம் பருவ மழையை நம்பியே உள்ளது.  எனவே, அதில் ஏற்படும் சிறிய மாறுதல்களும் மிக முக்கியமானவையே.
     சாதாரண மக்களுக்கும் புயல், வெள்ளம் பற்றிய தகவல்கள் முக்கியமாக இருக்கின்றன.  இன்றைக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம் ( Climate Change ) , வெப்ப நிலை மாற்றம் ( Temperature Change ) போன்றவை பற்றியும் வானிலை ஆய்வு மையங்களே ஆய்வு செய்கின்றன.
     சரி, முதலில் பேசிய விஷயத்துக்கு வருவோம்.  பருவமழை என்பது இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ள வானிலை அம்சம்.  அது பல்வேறு தாக்கங்களால் நிகழ்கிறது.  எனவே, அதைத் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமில்லை.
-- ஆதி.  ( நன்றி : சி. ரங்கநாதனின் குறிப்புகள் ). வெற்றிக்கொடி.
-- - ' தி இந்து ' நாளிதழ். திங்கள், டிசம்பர் 23, 2013.  

Sunday, September 6, 2015

அரபி : ஓர் அறிமுகம்

  ' அரபா ' என்ற சொல்லுக்குத் தெளிவாகப் பேசுதல் என்று பொருள்.  அரபு நாட்டில் வாழ்ந்த மக்கள், தாங்கள் தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில், தங்களின் மொழியை ' அரபி ' என்று கூறலாயினர்.  இன்று 21 நாடுகளின் ஆட்சி மொழி, ஐ.நா- வின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று.  183 மில்லியன் மக்களின் தாய்மொழி அரபி.  மேற்கே வட ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கே ஓமன் வரையும், வடக்கே சிரியாவிலிருந்து தெற்கே சூடான் வரையும் அரபியின் எல்லை விரிந்திருக்கிறது.
      தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளை நாம் எப்படித் திராவிட மொழிகள் என்று அழைக்கிறோமோ அப்படி அரபி ஒரு ' ஸாமிய' மொழி.
      நமது தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழி.  அதன் சொல்வளம் வியக்கத் தக்கது. ஆண்டு என்பதற்கு 24 சொற்களூம் ஒளி என்பதற்கு 21 சொற்களும் இருப்பதைப் போல இருள் என்பதற்கு 52 சொற்களூம் கதிரவன் என்பதற்கு 29 சொற்களும் நீர் என்பதற்கு 170 சொற்களும் ஒட்டகம், வாள் போன்ற வார்த்தைகளைக் குறிக்க 1,000 சொற்களையும் கொண்டுள்ளது அரபி.
     அரபிக்கும் தமிழுக்குமான உறவு இன்றைக்கு நெருக்கமானது.  தமிழ்ச் சொற்களோடு இரண்டறக் கலந்த சொற்களாகிவிட்டன அரபிச் சொற்கள்.  அமல், இனாம், கஜானா, ஜாமின், கைதி, ஜில்லா, தாலுக்கா, தாசில்தார், நகல், மகஜர், மசோதா, மராமத்து, ஜப்தி, வசூல், தகராறு, பாக்கி, வாரிசு, தாக்கல், மைதானம், கடுதாசி, ரசீது, மாமூல், வகையறா எனத் தமிழில் கலந்துள்ள அரபிச் சொற்கள் தமிழாகவே மாறிவிட்டன.
     மொழிகள் கொடுத்துப் பெறுகின்றன; பெற்றுக் கொடுக்கின்றன!
-- க.மு.அ.அஹ்மது ஜுபைர்.  தொடர்புக்கு : arabic. zubair @gmail.com
-- கருத்துப் பேழை.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன், டிசம்பர் 18, 2013.

Saturday, September 5, 2015

நல்லவனா .. கஷ்டம்.

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக்காரன் சாப்பிட , 2 ரூபாய் கேட்டான்.  அவர் அவனை விசாரித்தார்...
" குடிப்பாயா?"
" இல்லை சார்"
" சிகரெட் பிடிப்பாயா?"
" இல்லை சார் "
" ரேசுக்கு போவாயா?"
" இல்லை சார்"
" சூதாட்டம்?"
" கிடையாது சார்"
" பெண் சிநேகிதம் ?"
" சத்தியமா இல்லை சார் "
" உனக்கு 20 ரூபாய் தருகிறேன்.  என் வீட்டுக்கு வா.  எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலையை பார்த்தாயா என்று என் மனைவியிடம்
  காட்ட வேண்டும் !"
நீதி :  ரொம்ப நல்லவனா இருந்தாலும் கஷ்டம்தான்.
---   தினமலர். . டிசம்பர் 22, 2013.   

Friday, September 4, 2015

இணைய வெளியிடையே...

*  கொசு பேட்ல ஸ்கோர் காமிச்சா தேவலை, எண்ணுறது கஷ்டமாயிருக்கு!
   sudha @ twitter.com
*  கேள்வி : கடந்த 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் எதை சாதித்தார்?
   பதில் :    மவுனம் சாதித்தார் !
   udanpirappe @ twitter.com
*  பாவ மன்னிப்பு கேட்பதற்கும், பாவம் என மன்னிப்பு கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
   csk @ twitter.com
*  புத்தகத்துக்குப் பிடித்தமான புத்தக ஸ்டான்ட் , படித்தவனின் மார்பு!
   thotta @ twitter.com
--  தினமலர். . டிசம்பர் 22, 2013. 

Thursday, September 3, 2015

பாண்டவர்கள்.

 தர்மதேவதை ' விராட நகரத்தில் மறைந்தும், ஒருவராலும் அறியப்டாமலும் வாழுங்கள் என அருளாணை இட்டது.  அதன்படியே, 12 ஆண்டுகள் வனவாசமிருந்த பாண்டவர்கள், அஞ்ஞாதவாசம் ' எனும் மறைந்து வாழும் காலத்தை, விராட நகரத்தில் கழிக்கத் தீர்மானித்தார்கள்.
     அதன்படி, தர்மர் சந்நியாசி வடிவில் கங்கபட்டர் என்ற பெயரிலும், பீமன், மல்லன் எனும் பெயரில் சமையலிலும், அர்ஜுனன் பிருகன்னவள் என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும், நகுல - சகாதேவர்கள் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள்.
     திரவுபதியோ, சைரந்தரி என்ற பெயரில் அரசிக்கு பணிமகளாகப் பணிபுரிந்தாள்.
     மிகவும் நல்லவர்களான பாண்டவர்களுக்கே அந்த நிலை.  அந்த நிலையிலும், ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த வேலையை வைத்து, மறைந்து வாழும் காலத்தில் பாணடவர்கள் சமாளித்து வாழ்ந்தார்கள்.
-- ஸாந்த்ரானந்தா.  ஆன்மிகம்.
-- தினமலர். வாரமலர். டிசம்பர் 22, 2013.  

Wednesday, September 2, 2015

ஒரு சொல் பல பொருள்

 மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம்.  அதேபோல ஒரே பெயரில் இருவேறு பொருட்களோ, உயிரினங்களோகூட இருக்கின்றன.  அதாவது ஒரே உச்சரிப்பில் வரும் வார்த்தைகள், இருவேறு பொருளைத் தரலாம்.  ஆங்கிலத்தில் இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள்.  தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன.  இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரனத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்.
    ஆங்கிலத்தில் கிவி ( kiwi ) என்னும் சொல் ஒரு பழத்தையும் பறவையையும் குறிக்கும்.  நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.  இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.  இறக்கைகளே இல்லாத பறவை இது.  வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும் இருக்கும்.  ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது கிவியி உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது கிவி.  ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும்.  இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயிரிடப்படும் பழ வகை கிவி.  கோழிமுட்டை அளவில் இருக்கும் இது, பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும்.  மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும்.  நடுவே கடுகு போல சின்னச் சின்ன விதைகள் இருக்கும்.  இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும் இருக்கும்.
    தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை, கலசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.
-- பிருந்தா. மாயாபஜார்.
--  ' தி இந்து ' நாளிதழ்.புதன், டிசம்பர் 18, 2013.  

Tuesday, September 1, 2015

தெரிஞ்சுக்கோங்க!

*  மகா பாதகங்கள்  5:
   1. கொலை  2. பொய் 3. களவு  4. கள் அருந்துதல்  5. குரு நிந்தை.
*  பேறுகள்  16:
   1. புகழ்  2. கல்வி  3. வலிமை  4. வெற்றி  5. நன்மக்கள்  6. பொன்  7. நெல்  8. நல்ஊழ் 9. நுகர்ச்சி  10. அறிவு  11. அழகு  12. பொறுமை  13. இளமை
   14. துணிவு  15. நோயின்மை  16. வாழ்நாள்.
*  புராணங்கள்  18.:
   1. பிரம்ம புராணம்  2. பத்ம புராணம்  3. பிரம்மவைவர்த்த புராணம்  4. லிங்க புராணம்  5. விஷ்ணு புராணம்  7. அக்னி புராணம்  8. மத்ஸ்ய புராணம்
   9. நாரத புராணம்  10. வராக புராணம்  11. வாமன புராணம்  12. கூர்ம புராணம்  13. பாகவத புராணம்  14. ஸ்கந்த புராணம்  15. சிவ புராணம்
   16. மார்க்கண்டேய புராணம்  17. பிரம்மாண்ட புராணம்  18. பவிஷ்ய புராணம்.
* இதிகாசங்கள் : 3.
   1. சிவரகசியம்  2. ராமாயணம்  3. மகாபாரதம்.
-- தினமலர். சிறுவர்மலர். டிசம்பர் 13, 2013.