Tuesday, January 31, 2012

மாயத் தோற்றம் !

" ' நாம் எதைச் செய்தாலும் உலகம் நமக்கு எதிராகவே இருக்கிறதே' என்ற எண்னம் சமயங்களில் ஏற்படுகிறதே ? "
" அது ஒரு மாயத் தோற்றம் . உண்மையிலேயே உலகம் முழுவதும் நமக்கு எதிராக இருந்தாலும்கூட, நான் வாழ்ந்துதானே ஆக வேண்டும் . தஸ்லீமா நஸ்ரினின் கவிதை ஒன்று...
' மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே.
நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்னை
நடக்கக் கூடாதா ?
நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ .
நீங்கள் தாள முடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்,
நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா ?
விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வார்கள்
நீ வாழ வேண்டும் .
நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்
யாருக்குத் தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்துத் தொலை .
அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ! '
தஸ்லீமாவின் சொந்த வாழ்க்கையை இந்தக் கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே ! "
--- மாணிக்கவாசகம் , மதுரை. ஆனந்தவிகடன் . 9 . 2. 2011 .

Monday, January 30, 2012

தெரியுமா ? தெரியுமே !

* ஆஸ்திரேலியாவில் பெண்கள் கங்காரு ' பை ' யை ( Pouch ) அப்படியே கத்தரித்து எடுத்து, அதில் குழந்தையை உட்காரவைத்துத் தோளில் மாட்டிக்கொண்டு செல்வார்கள் .
* கனவு மூலம்கூட ஒருவர் SEX பரவச நிலையை அடைந்தது இல்லை என்றால்... எங்கோ, பிறப்பிலேயே பெரிய தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அர்த்தம் .
* மாபெரும் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் 85 வயது வரை வாழ்ந்தார் . வாழ்நாளில் அவர் செக்ஸ் அனுபவித்தது இல்லை என்று தீர்மானமாக பல புத்தகங்கள் தெரிவிக்கின்றன.
* சிறுவர்களுக்கான கதைகள் எழுதிய லூயி கரோல் ( Levis Carrol ), இசை மேதை சோப்பின், முதலாம் எலிசபெத் மகாராணி, இலக்கிய மேதை ரஸ்கின் என்று செக்ஸ் அனுபவிக்காதவர்களின் பட்டியல் உண்டு .
* நடுக்கடலில் அலைகள் காணப்படுவது இல்லை . பின் எங்கிருந்து, எவ்வாறு உருவாகின்றன . நியூட்டன் விதிதான் ! Every action has a reaction . நிலம் தோன்ற, முதன்முறையாகக் கடல் அதோடு மோத, ஒரே ஒரு முதல் அலை உருவானது . அது பின்னோக்கிப் போனபோது, நீரோடு மோதி இரண்டாவது அலையை உருவாக்கியது . நிலம் இல்லாமல், குறிப்பாகக் கரை இல்லாமல் அலை இல்லை . அடுத்த பிரளயம் ஏற்பட்டு, அத்தனை நிலமும் கடலில் மூழ்கிய பிறகு அலைகளும் நின்றுவிடும் !

Sunday, January 29, 2012

செல்போன் சேவை... மாற்றுவது எப்படி ?

" மொபைல் போர்டடபிலிட்டி திட்டத்தின்படி செல்போன் எண்ணை மாற்றாமல் மொபைல் சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றும் நடைமூறைகள் என்னென்ன ? "
" நீங்கள் எந்த நிறுவன சிம்கார்டினை உபயோகப்படுத்திக்கொண்டு இருந்தாலும், வேறு நிறுவன சேவைக்கு மாறவிரும்பினால், உங்கள் மொபைலில் ' PORT ' என்று டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு, உங்கள் மொபைல் எண்ணையும் டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் . உங்கள் கோரிக்கை பதிவாகிவிட்டதற்கான அத்தாட்சியாக, உங்களுக்கான பிரத்யேக எண் ஒன்று எஸ்.எம்.எஸ்ஸில் வரும் . இந்த நடைமுறை முடிந்ததில் இருந்து 15 நாட்களுக்குள் நீங்கள் விரும்பிய நிறுவனத்தின் சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும் . நீங்கள் ஒப்படைக்கும் சான்றிதழ்களைச் சரி பார்த்த பிறகு, பழைய எண்ணிலேயே புதிய சிம்கார்டு வழங்கப்படும் . போஸ்டு -- பெய்டு சிம் வைத்து இருப்பவர்கள் கடைசி பில் தொகை வரை செலுத்த வேண்டியது அவசியம் . ஃபிரீ -- பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுன்டில் மீதமிருக்கும் தொகை முழுவதையும் பயன்படுத்திவிடுவது நல்லது . புதிய சிம்மில் பழைய பேலன்ஸ் தொகை சேராது . மிக முக்கியமான விஷயம், பழைய சிம் எவர் பெயரிலான அடையாளச் சான்றிதழ் கொடுத்துப் பெறப்பட்டதோ, அவர்தான் இந்த சேவைக்கு விண்ணப்பிக்க முடியும் ! "
--- வி.விஜயா , மக்கள் தொடர்பு மேலாளர், பி.எஸ்.என்.எல் . ஆனந்தவிகடன் . 9 . 2. 2011 .

Saturday, January 28, 2012

சொல்வனம் !

கொட்டும் மழையும்
குட்டிப் பெண்ணும் ...
குட்டிப் பெண்
பாட்டியிடம் கேட்டாள்
' மழை எப்படி வருது பாட்டி ? '
' அதுவா ... வானத்தில் நின்னு
கடவுள் குளிக்கிறாரு அதான் '
என்றாள் பதிலுக்குப் பாட்டி .
குட்டிப் பெண் சிரித்தாள்
'ஒரு ஆளு இவ்வளவு தண்ணியில குளிச்சா
ஊர்ல தண்ணிப் பஞ்சம் வராம
வேறென்ன செய்யும் > '
--- பாஸ்கோ பெர்னாண்டஸ் , ஆனந்தவிகடன் . 9 . 2. 2011 .

Friday, January 27, 2012

கொசுவுக்கு வில்லி !

கற்பூரவல்லி...கொசுவுக்கு வில்லி !
பூந்தொட்டியில் வளர்க்கும் கற்பூரவல்லி இலைகளையும், சோற்றுக் கற்றாழையையும் பறித்து மிக்சியில் அரைத்து, சாறு எடுத்து, அதை வீடு முழுவதும் தெளித்தால் கொசுக்கள் மாயமாய் மறைந்து விடும் . மேலும், சாம்பிராணி கோன்கள் வாங்கி, அவற்றை இந்த கற்றாழை -- கற்பூரவல்லி சாற்றில் ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்து, அதை தினமும் இரவு ஏற்றி வைத்தால் கொசுக்கள் வராது . கொசு விரட்டிச் சுருளில் வரும் புகையினால் ஏற்படும் மூச்சு இரைப்புத் தொல்லையும் இருக்காது .
--- ஆர்த்தி , சென்னை - 4 . அவள் விகடன் .25 . 2 . 2011 . இதழ் உதவி : N .கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Thursday, January 26, 2012

கடையில வாங்கினதா ?

இந்த மாவு கடையில வாங்கினதா ?
ஒரு நிமிடம்..... இந்த மாவு கடையில வாங்கினதா ?
" ரெடிமேட் இட்லி -- தோசை மாவில் மனிதன் மற்றும் மிருகங்களின் குடல் பகுதியில் காணப்படும் ' ஈகோலி ' எனப்படும் ஒருவித பாக்டீரியா கலந்திருக்கிறது . இது மனிதனுக்கு நோய்களை வரவழைக்கக் கூடியது .
மனிதர்கள் மற்றும் மிருகங்களோட குடல் பகுதிகளில இருக்கிற ' கோலிஃபார்ம் ' ( Coliform ) பாக்டீரியா, இந்த மாவுகள்ல இருக்கிறது தெரிஞ்சுது . இதுக்குக் காரணம், சரியா பராமரிக்கப்படாத கிரைண்டர், மாசுபட்ட தண்ணீர், மாவை ஸ்டோர் செஞ்சு வைக்கற பாத்திரம்னு சுகாதாரமற்ற சூழல்தான் . அந்த மாவை வாங்கி நாம உபயோகப்படுத்தும்போது அது நமக்கு வாந்தி, பேதி, வயிறு மற்றும் குடல் வலின்னு பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம் " என்று தகவல்களை அடுக்கி அதிர வைக்கிறார், சென்னையை சேர்ந்த ' கான்சர்ட் ' ( GONCERT ) நிறுவன அமைப்பின் டைரக்டர் சந்தானராஜ் .
--- ம.பிரியதர்ஷினி , அவள் விகடன் .25 . 2 . 2011 . இதழ் உதவி : N .கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி )

Wednesday, January 25, 2012

டிப்ஸ்...டிப்ஸ்...

* அப்பளம் பொரிக்கப் போகிறீர்களா .... ஒரு நிமிடம் . அப்பளத்தில் ஒரு பக்கம் மட்டும் எண்ணெய் தடவி, நான்கு ஐந்து அப்பளங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, ' மைக்ரோவேன் அவன்'ல ஒன்று முதல் ஒன்றரை நிமிடம் வரை வைத்து எடுங்கள் . பொரித்த அப்பளம் போல சுவையாக இருக்கும் . ஒரேசமயத்தில் நிறைய அப்பளங்களை பொரித்த திருப்தியும் கிடைக்கும் .
* கேரட், பீட்ரூட், மாங்காய் போன்ற காய்களை எளிதில் துருவ ஒரு வழி இருக்கிறது . காய்களின் தோலை சீவியதும், தண்ணீரில் கழுவி, துணியால் நன்றாகத் துடைத்துவிட்டு, பிறகு துருவுங்கள் . கையிலிருந்து வழுக்காமல் இருக்கும் . கொழகொழப்பில்லாமல் சுலபமாகத் துருவ முடியும் .
* அப்பளம், சிப்ஸ், வடாம், வத்தல் போன்றவற்றைப் பொரிக்கிறீர்களா.... அடுப்பை அணைத்த பிறகு, எண்ணெய் சூடாக இருக்கும்போதே கைப்பிடி கறிவேப்பிலையைப் போடுங்கள் . நன்றாகப் பொரிந்துவிடும் . பொரித்த பலகாரங்களில் அந்த கறிவேப்பிலையையும் தூவி வைத்தால், பரிமாற எடுக்கும்போது நல்ல வாசனையாக இருக்கும் .
--- அவள் விகடன் .25 . 2 . 2011 . இதழ் உதவி : N .கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .

Tuesday, January 24, 2012

எரிகல் .

பூமியை தாக்க வரும் எரிகல் .
பூமியின் மீது மோதுவதற்காக அசுர வேகத்தில் அபோபிஸ் என்ற எரிகல் வந்துகொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய நாட்டு விண்வெளி அறிஞர்கள் கண்டுபிடித்து உள்ளனர் .
இந்த எரிகல் சுமார் 300 மீட்டர் அகலம் கொண்டது என மதிப்பிடபட்டுள்ளது . பூமியில் இருந்து பல கோடி ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் இருக்கும், அபோபிஸ் எரிகல் இப்போது இயங்கும் வேகத்தில் பூமியை நோக்கி வந்தால், வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13 ம் தேதியன்று பூமிக்கு 37 ஆயிரம் முதல் 38 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு வந்துவிடும் . அதன்பிறகு அந்த எரிகல் மெதுவாக நகர்ந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து 2036 ம் ஆண்டு ஏப்ரல் 13 ம்தேதி, பூமியின் மீது விழுந்து நொருங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .
அந்த எரிகல் மோதும்போது, பல்லாயிரம் இடிகள் ஒரே நேரத்தில் விழும்போது எவ்வளவு வெப்பம் வருமோ அந்த அளவு வெப்பம் உருவாக வாய்ப்பு உள்ளது . அதனால் மனிதர்கள் உட்பட ஒரு கோடி உயிரினங்கள் அழியும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளும் எச்சரிக்கை செய்துள்ளனர் .
--- தினமலர் பிப்ரவரி 11 , 2011 .

தூங்காவிட்டால்...

6 மணிநேரம் தூங்காவிட்டால்...
தினமும் 6 மணிநேரம் தூங்காவிட்டால் ஆபத்து !
இன்றைய வேகமான உலகத்தில் மாரடைப்புதான் பலரின் உயிருக்கு உலை வைக்கும் முக்கிய நோய் . மன அழுத்தம்,
அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது, ரத்த அழுத்தம் போன்ற பல காரணங்களால் மாரடைப்பு வருவதாக சொல்கின்றனர் . சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் மாரடைப்பு வரும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது .
தினமும், 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறவர்களுக்கு, ரத்தத்தில் லெப்டின் என்ற வேதிபொருளின் அளவு குறைந்துவிடும் . இதனால் சாப்பிடும் அளவு குறைந்து நாளடைவில் உடல் பலவீனமாகி மாரடைப்பு வருகிறது என்று இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
--- தினமலர் பிப்ரவரி 11 , 2011 .

Monday, January 23, 2012

ஐ. நா. சபை !

நைல் நதிக்கரை ஓரம் முதலைகள் வாய் திறந்து படுத்திருக்கும் . அப்படி வாய் திறந்து எவ்வளவு காற்றைத் தன் சுவாசப் பையில் சேமித்துக்கொள்கிறதோ, அதற்கேற்ப நீருக்குள் அமிழ்ந்திருக்கும் . முதலை வாய் திறக்கும் சமயம், அதன் பல் இடுக்குகளில் ஒட்டி இருக்கிற உணவுத் துகள்களைக் கொத்தித் தின்ன ஒரு பறவை வரும் . முதலையும் விட்டுவிடும் . காரணம், பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்கள் சுத்தம் செய்யப்பட்டால்தான் அடுத்த முறை இரை உண்ணும்போது தடை ஏற்படாமல் இருக்கும் .அதே சமயம், முதலைக்கு பசி ஏற்படுகிறபோது அந்தப் பறவையையே தின்றுவிடும் . அப்படி வல்லரசுகள் தரும் நிதியைக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நிலையில்தான் ஐ.நா. இருக்கிறது .
--- பாரதிகிருஷ்ணகுமார் , ஆனந்த விகடன் 2 . 2 .2011 .

Sunday, January 22, 2012

கவனிக்க வேண்டிய விஷயம் !

பேச்சிலே கவனிக்க வேண்டிய விஷயம் !
பேச்சிலே கவனிக்க வேண்டிய விஷயம் சமயோசிதம் . நீங்கள் ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள் . அதற்கு இன்னொருவர் எதிர்க் கருத்து தெரிவிக்கிறார் . அவருக்கு நீங்கள் பதில் சொல்லும்போது அவர் மனம் புண்படாமல் நாசுக்காகக் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் . அண்ணா உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் . அப்போது ஊர்வலத்தில் யாருக்கு எல்லாம் சிலை வைக்கலாம் என்று ஆலோசித்தார்கள் . ஒவ்வொருவரும் தங்கள் எண்ணத்தைச் சொன்னார்கள் . இறுதியாக, தவ்த்திரு குன்றக்குடி அடிகளார் எழுந்து, ' நீங்கள் வள்ளுவன், கம்பன், இளங்கோ ஆகியோருக்கு எல்லாம் சிலை வைக்கிறீர்கள் . அப்பர் ( திருநாவுக்கரசர் ) எனும் சிவனடியாருக்கும் சிலை வையுங்கள் ' என்றார் . அண்ணாவோ நாத்திகர் . இவர் வைக்கச் சொல்வதோ தெய்வத்தின் சிலை . அவர் மனதைப் புண்படுத்தாமல் அண்ணா இப்படிச் சொன்னார், ' அரசு வணங்கத் தக்கவர்களுக்குத்தான் சிலை வைக்கிறதே தவிர, வழிபடத் தக்கவர்களுக்கு அல்ல ! '. என்ன ஒரு நாசுக்கு பாருங்கள் . மேடைப் பேச்சில் இந்த ' ஸ்பான்டேனியஸ் ஸ்பார்க் ' அதாவது, மின்னல் தெறிப்பது போன்ற சமயோசிதம்தான் வெற்றியைக் கொடுக்கும்... மக்களைக் கவரும் ! .
--- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் 2 . 2 .2011 .

Saturday, January 21, 2012

மனம் கவர்ந்த கவிதை

ஒரு மரம் பாடுவதாக பால்டிமோர் குரோட்டோ என்ற கவிஞர் எழுதிய கவிதை :
.' இந்தக் கானகத்திலிருந்து
எதையாவது எடுத்துச் செல்ல
விரும்பினால்
அதை உங்கள்
கேமரா சுருளுக்குள்
எடுத்துச் செல்லுங்கள் .
இங்கு எதையாவது
விட்டுச் செல்ல வேண்டும் என
ஆதங்கப்பட்டால்
உங்கள் காலடித் தடத்தை மட்டும்
விட்டுச் செல்லுங்கள் .
எதையாவது கழித்தேயாக
வேண்டும் என
விரும்பினால் உங்களது பொன்னான
நேரத்தை இங்கே கழியுங்கள் ! '
--- அ. யாழினி பர்வதம் , சென்னை - 78. ஆனந்த விகடன் 2 . 2 .2011 .

Friday, January 20, 2012

வெப்பமான கிரகம் .

மிகமிக வெப்பமான கிரகம் .
3,200 டிகிரி செல்சியஸ் . மிகமிக வெப்பமான கிரகம் கண்டுபிடிப்பு .
நம்மால் 40 டிகிரி வெப்பத்தையே தாங்க முடியவில்லை . இந்நிலையில், 3,200 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . விண்ணில் வெப்பமான கிரகமாக இது கருதப்படுகிறது .
இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷயரில் உள்ள கீலே பலகலைக்கழக பேராசிரியர் அலெக்சிஸ் ஸ்மித் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த கிரகம் டபிள்யூ ஏஎஸ்பி -- 33பி அல்லது எச்டி15082 என்று அழைக்கப்படுகிறது . இதன் வெப்பநிலையை தற்போது உறுதி செய்து உள்ளனர் . இது ஜுபிடர் கிரகத்தைப் போல நான்கரை மடங்கு பெரியது .
380 ஒளியாண்டு தொலைவில் இது உள்ளது . இது தன்னைத்தானே சுற்றிவர 29.5 மணி நேரம் ஆகிறது . இது 3,200 டிகிரி வெப்பநிலயைக் கொண்டிருந்தாலும், நட்சத்திரங்களின் வெப்பநிலையான 7,100 டிகிரியைவிடவும், சூரியனின் வெப்பநிலையான 5,600 டிகிரி வெப்பநிலையை விடவும் குறைவுதான் .
--- தினகரன் . ஜனவரி 29 , 2011 .

Thursday, January 19, 2012

மேஜிக் ' 3 ' !

33 2 = 1089
333 2 = 110889
33332 = 1110889
333332 = 1111088889
3333332 = 111110888899
ஒவ்வொரு எண்ணுக்கும் பல அதிசயக் குணங்கள் உண்டு . மேற்கண்ட கணக்கும் இதற்கு ஒரு உதாரணம் .
இதை நன்கு கவனியுங்கள்... வெறும் ' 3 ' மட்டுமே கொண்ட எத்தனை பெரிய எண்ணின் வர்க்கத்தையும் ஈஸியாகக் கண்டுபிடிக்கும் ' ஷார்ட் கட் ' புரிந்துவிடும் !
--- தினமலர் இணப்பு , ஜனவரி 21 .2011

Tuesday, January 17, 2012

முடிகள் !

இரண்டு விதமான முடிகள் மனிதனுக்கு உண்டு . மெல்லிய ( பூனை ! ) Vellus முடி , அடர்த்தியான ' terminal ' முடி . உடலின் குறிப்பிட்ட இடங்களில் ' டெர்மினல் ' முடி இருப்பினும், உடல் முழுவதும் மனிதனுக்கு ' வெல்லஸ் ' முடி உண்டு . மார்பில் முடி இல்லாத ஆண்களும் உண்டு . ( குறிப்பாக கீழ்த் திசை நாடுகளில் ) . குழந்தைக்கு இடைஞ்சல் இல்லாமல் பால் தர வசதியாக பெணகளுக்கு மார்பில் முடியில்லாமல் போய்விட்டது . -- Evolution ! முடி என்பது குளிரில் இருந்து ஒரு பாதுகாப்பு . ஸ்வெட்டர் என்பது ' முடி'தான் ! உடலில் முடியே இல்லாத இடங்கள் -- தொப்புள், உதடுகள், முலைக்காம்பு, உள்ளங்கை -- கால் !
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் . 19 . 1 . 2011 .

Monday, January 16, 2012

கொழுப்பு குறைவது தெரியும் !

மூச்சு விட்டால் போதும் கொழுப்பு குறைவது தெரியும் !
உடம்பை குறைக்க நம்மில் பலரும் டிரட்மில், வாக்கிங், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது என்று பல வகையிலும் முயற்சி செய்கிறோம் . ஆனாலும், நம் உடலில் உள்ள கொழுப்பு குறைந்துள்ளதா என்பதை நம்மால் அறிய முடிவதில்லை . இந்தக் குறையைப் போக்க புதிய கருவி வந்துள்ளது . உடற்பயிற்சிக்கு முன் உங்கள் உடலில் எவ்வளவு கொழுப்பு இருந்தது . உடற்பயிற்சியால் எவ்வளவு கொழுப்பு குறைந்துள்ளது என்பதை இந்தக் கருவி சொல்லிவிடும் . இந்த அருமையான கருவியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . அதற்கு ' பீரித் அன்லைசர் ' என்று பெயர் சூட்டியுள்ளனர் .
உடற்பயிற்சி முடிந்ததும் இந்த கருவியை முகத்தின் அருகே வைத்து மூச்சு விட்டால் போதும் . உடம்பில் எவ்வளவு கொழுப்பு கரைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்துவிடும் . சுவாசத்தின்போது வெளிவிடும் காற்றில் அசிட்டோன் என்ற பொருளும் கலந்து வரும் . கொழுப்பு எரிக்கப்படுவதால் வெளியாகும் பொருள்தான் அசிட்டோன் . எவ்வளவு அசிட்டோன் வருகிறதோ, அவ்வளவுக்கு உங்கள் உடலில் கொழுப்பு குறைந்துள்ளது என்பதை இந்தக் கருவி ஒரு நிமிடத்தில் கணக்கிட்டு சொல்லிவிடும் .
--- தினமலர் . ஜனவரி 25 , 2011 .

Sunday, January 15, 2012

மாரடைப்புக்கு காரணம் .

மாரடைப்புக்கு காரணம் ஒரு வகை சிறுநீரக ஜீன்
மனித வாழ்க்கையை திடீரென்று முடிவுக்கு கொண்டுவந்து சுபம்போடும் கொடிய நோய் எது என்று கேட்டால் ' மாரடைப்பு ' என்று சட்டென சொல்லிவிடலாம் . மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் மனிதனின் சிறுநீரக ஜீன்தான் என்ற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது .
மனித உடற்கூறின் முக்கிய அம்சம் டி.என்.ஏ. எனப்படும் மரபணு . இதில்தான் மனிதத்தன்மையையும் உடல் செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் ஜீன்கள் உறைந்துள்ளன . மனிதன் மனிதனாக செயல்படுவதற்கு இலக்கணமானவை இந்த ஜீன்கள்தான் ...
மனித உறுப்புகள் ஒவ்வொன்றின் செயல்பாட்டையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதும் ஜீன்கள்தான் . எனவே, ஜீன்கள் இல்லையேல் மனிதன் இல்லை என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட உண்மை . இதனால்தான் ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சி உலக அளவில் நடந்துகொண்டிருக்கின்றன .
மனிதனின் இதயநோய்களுக்கு, மனிதனின் சிறுநீரகத்தில் காணப்படும் ஒருவகை ஜீன்தான் முக்கிய காரணம் என்ற உண்மை தெரியவந்துள்ளது . இந்த சிறுநீரக ஜீனில் புரோட்டின் அமைப்பு சீரற்று இருக்குமாம் . இதற்கு சி.எல்.சி.என்.கே., என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .
இந்த ஜீனுக்கும் இதயத்தின் செயல்பாட்டுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை . என்றாலும் இதயத்துக்கு செல்லும் ரத்தத்துடன் சிறுநீரக ஜீன் இதயத்தில் செல்லும்போது அதில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், இதயத்தில் ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
--- தினமலர் . ஜனவரி 20 , 2011 .

Saturday, January 14, 2012

ஓட்டல் !

122 வது மாடியில் ஓட்டல் !
துபாய் புர்ஜ் கலிபா கட்டடத்தின் 122 வது மாடியில் ஓட்டல் ஒன்று நேற்று திறக்கப்பட்டது உலகிலேயே உயரமான இடத்தில் உள்ள ஓட்டல் என்ற பெருமையை இது பெறுகிறது .
வளைகுடா நகரமான துபாயில் புர்ஜ் கலிபா என்ற மிக உயரமான கட்டடம் உள்ளது . 828 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டடம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மையமாக திகழ்கிறது .
இந்நிலையில் இந்த கட்டடத்தின் 122 வது மாடியில் ' அட்மாஸ்பியர் ' என்ற பெயரில் ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது . கடல் மட்டத்தில் இருந்து 442 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது உலகிலேயே உயரமான இடத்தில் அமைந்துள்ள ஓட்டல் என்ற பெருமையை பெறுகிறது . இங்கு உட்கார்ந்து சாப்பிட்டால் துபாய் நகரின் அழகுத்தோற்றம் பளிச்சென தெரியுமாம் .
ஒரே நேரத்தில் 210 பேர் சாப்பிடலாம் . இந்த ஓட்டல் மட்டுமல்ல... இங்கு விலைகளும் ' உயரமாகத்தான் ' உள்ளது . உள்ளே நுழைவதற்கே தனிக்கட்டணம் . இதற்கு ரூ. ஆயிரத்து 200 தர வேண்டும் . சாப்பாடு ரூ. 8 ஆயிரம் என்ற அளவில் உள்ளது . மற்ற உணவு ஐட்டங்களூம் இதே ரேஞ்சில்தான் உள்ளது .
--- தினமலர் . ஜனவரி 25 , 2011 .

Friday, January 13, 2012

பழம் பாடல் ,

ஒரு பழம்பாடல் :
' வால் நீண்ட கரிக்குருவி
வலமிருந்து இடம் போனால்
--கால்நடையாய்ச்
சென்றவர்தாம்
கனக் தண்டிகை ஏறுவரே ! '
--- கனக தண்டிகை என்றால், தங்கப்பல்லக்கு . கரிக்குருவி என்பது ' வல்லியன் ' எனும் பறவை . இதைத்தான் ஆண்டாள் ' ஆனைச் சாத்தான் ' எனத் திருப்பாவையில் பாடுகிறாள் .
இந்த கரிக்குருவி -- இடம் இருந்து வலம் போனால் -- கனக் தண்டிகை ஏறியோர் கால்நடையாய்ச் செல்லக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டும் !
--- நினைவு நாடாக்கள் ஒரு rewind , தொடரில் வாலி . ஆனந்தவிகடன் 19 . 1 . 2011 .

Thursday, January 12, 2012

அசத்தல் கணக்கு !

உன் நண்பனை மூன்று இலக்க எண் ஒன்றை நினைத்து, அதை எழுதச் சொல்லவும் . பிறகு, அதன்பக்கத்தில் அதே மூன்று இலக்க எண்ணை மறுபடியும் எழுதச் சொல்லவும் . இப்பொழுது அது ஆறு இலக்க எண்ணாக மாறிவிட்டதா என்று கேளுங்கள் ! உன் நண்பனிடம் அதை ஏழால் வகுக்கச் சொல்லவும் . அடுத்து, பதினொன்றால் வகுத்த பின்பு 13 ஆல் வகுக்கச் சொல்லவும் . இதில் கிடைக்கும் ஈவுதான் நீ முதலில் நினைத்த எண் என்று சொல்லி அசத்துங்கள் !
---- ஸ்ரீகோகுல், சேலம் . சுட்டி விகடன் 31 . 01 . 2011 .

Wednesday, January 11, 2012

அட....அப்படியா ?

* மனிதர்களுக்கு ஒரு கண்ணில் ஒரு லென்ஸ் மட்டுமே உள்ளது . ஆனால், தட்டான் பூச்சிகளுக்கு ஒரே கண்ணில் 30 ஆயிரம் லென்ஸ்கள் உண்டு !
* தேனீக்கு மொத்தம் 5 கண்கள் . இரண்டு கூட்டுக் கண்கள் . மூன்று ஒற்றைக் கண்கள் . ஒற்றைக் கண்களால் அருகில் உள்ள பொருள்களைக் காணலாம் . கூட்டுக் கண்கள் தொலைவில் உள்ள பொருள்களின் தன்மையை அறியப் பயன்படுகின்றன .
* நம் கண்களின் மேல் இமையில் 90 முதல் 160 முடிகளும், கீழ் இமையில் 75 முதல் 80 முடிகளும் இருக்கும் . இமை முடி வளர 30 நாட்களாகும் . வாழ்நாள் வெறும் 5 மாதங்கள்தான் .
-- - சுட்டி விகடன் 31 . 01 . 2011 .

Tuesday, January 10, 2012

ஒரு டம்ளர் தண்ணீர் !

* ஒரு டம்ளர் தண்ணீரை காலையில் கண் விழித்து எழுந்ததும் அருந்தினால், உடலின் உள் உறுப்புகள் அனைத்தும் சுறுசுருப்பாக இயங்கும் .
* ஒரு டம்ளர் நீரை உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் பருகினால், அது உணவை விரைவாக செரிக்க உதவும் .
* ஒரு டம்ளர் நீரை குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் குடித்தால், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் .
* ஒரு டம்ளர் நீரை உறங்கச் செல்லும் முன் அருந்தினால், நரம்புத் தளர்ச்சியையும் மாரடைப்பையும் கட்டுப்படுத்தும் .
--- மு. நவீனா , சுட்டி விகடன் 31 . 01 . 2011 .

Monday, January 9, 2012

சூப்பர் (நோவா ) !

கனடாவைச் சேர்ந்த பத்து வயது பெண் கேத்ரீன் அரோரா கிரே, சூப்பர் நோவா ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறார் . உலகிலேயே மிக இளம் வயதில் இந்தச் சாதனையைச் செய்தவர் இந்தச் சுட்டிதான் .
சூப்பர் நோவா என்றால் என்ன ?
அண்டவெளியில் சூரியனுக்கும் அப்பால் பல லட்சம் ஒளி ஆண்டுகளைத் தாண்டி சூரியனைவிட மிகப் பெரிய நட்சத்திரங்கள் இருக்கின்றன . அவைகள் ஒன்றோடு ஒன்று மோதி வெடிக்கும்போது ( Steller Explosion ) வானில் வர்ண ஜாலங்கள் நிகழும் . இதில் ஆச்சர்யப்படவைக்கும் விஷயம்... இந்த சூப்பர் நோவா ஒரு வார காலத்துக்கும் குறைவான காலத்திலேயே சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்தும் சக்தியை வெளிப்படுத்துகிறது .
' SN2010 lt ' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சூப்பர் நோவா, பூமியில் இருந்து 240 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது .
இவரது சாதனையை அங்கீகரித்திருக்கும் ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொஸைட்டி ஆஃப் கனடா , ( RASC ) " விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு கேத்தரின் ஒரு முன்னோடி " என்று பாராட்டி உள்ளது .
--- மோ. அருண் ரூப பிரசாந்த் , சுட்டி விகடன் 31 . 01 . 2011 .

Sunday, January 8, 2012

உடல் எடை குறைய.....

உடல் எடை குறைய. உதவும் பாக்டீரியா .
காலம் கெட்டுப்போச்சு என்று சொல்லும் அளவுக்கு உலகத்தில் நாளூக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன . அவற்றில் சில கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு மிகவும் உதவும் வகையில் உள்ளன . அதில் ஒன்றுதான் நட்பு பாக்டீரியா .
அயர்லாந்து நாட்டில் உள்ள, வேளாண் மற்றும் உணவு மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினரும் கார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து இந்த நட்பு பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர் . யோகர்ட் மற்றும் மனித உடம்பில் இந்த நட்பு பாக்டீரியாக்கள் உள்ளன . கண்ணுக்கு புலப்படாத ஒருவகை துகள்கள் இந்த பாக்டீரியாக்களில் சுரக்கின்றன . இந்த துகள்கள், உடல் செல்களில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது இதனால், உடல் எடை குறைகிறது . யோகர்ட் என்று சொல்லப்படும் பால்சார்ந்த உணவுப்பொருளில் இந்த வகை நன்மை பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், இவற்றை எளிதாக உற்பத்தி செய்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் . மனிதர்கள் எளிதில் சாப்பிட வசதியாக இந்த வகை நட்பு பாக்டீரியாக்களை குளிர்பானத்திலேயோ, பாலிலோ கலந்து விற்பனை செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர் .
ஏற்கனவே மனிதர்களின் உடலில் லேக்டோபேசில்லஸ் என்ற பாக்டீரியா உள்ளது . இந்த பாக்டீரியாக்கள் மனித உடலில் கொழுப்பு அமிலங்களை சுரக்கச் செய்ய உதவுகிறது . இனி இந்த நட்பு பாக்டீரியாக்களையும் உள்ளே செலுத்தினால், அவற்றின் உதவியால் மனித உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து உடம்பு மெலிந்துவிடும் என்று விஞ்ஞ்ஞானிகள் ஆதாரத்துடன் கூறியுள்ளனர்
--- தினமலர் . ஜனவரி 19 , 2010 .

Saturday, January 7, 2012

ஏ.சி. உஷார் !

ஏ.சி. மெஷினை எப்பொதுமே 23 டிகிரிக்கு அதிகபட்ச வெப்பத்தில் இயக்ககூடாது . அந்த வெப்பநிலைக்கு மெஷின் சூடாகும்போது, அதன் பாகங்கள் அனைத்தும் அதிகப் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் . கம்ப்ரஸர், காயில், மெஷினுக்கு உள்ளே செல்லும் ஒயர்கள் என அனைத்துப் பகுதிகளும் அந்த வெப்பநிலையில் மிக அதிகமாக சூடாகும் . அதைத் தாக்குபிடிப்பதற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்படாததால் மிக விரைவிலேயே அவை பழுதாவதற்கான வாய்ப்புகள் அதிகம் . மிக நீண்ட நேரம் அந்த வெப்பநிலையில் இயங்கினால் சமயங்களில் தீப்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது . அதே சமயம் எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்குக் குறைந்த குளிர்நிலையில் ஏ.சி. இயங்கக் கூடாது . அதுவும். அலர்ட் வேண்டிய ஆபத்துதான் !
ஃப்ரிஜ் பத்திரம் !
ஃப்ரிஜை ஆஃப் செய்துவிட்டு உடனடியாக மீண்டும் ஆன் செய்யக்கூடாது . ஃப்ரிஜ் குளிர் இயக்கத்துக்கு அதன் உள்ளே நிரப்பப்பட்டு இருக்கும் கேஸ் மிக முக்கியக் காரணி . ஃப்ரிஜை ஆஃப் செய்த உடன் குழாயில் கேஸ் அடைத்துக்கொள்ளும் . அப்போது குழாயில் காற்றும் செல்லாது . எனவே, குறைந்தது மூன்று நிமிடங்க்களுக்குப் பிறகுதான் ஃப்ரிஜை ஆன் செய்ய வேண்டும் . அப்போதுதான் இயல்பான நிலையில் ஃப்ரிஜ் இயங்கத் தொடங்கும் !
---- விகடன் தீபாவளி மலர் 2010 .

Friday, January 6, 2012

புத்திசாலி குழந்தை வேண்டுமா ?

புத்திசாலி குழந்தை வேண்டுமா ? தாய்ப்பால் நிறைய கொடுங்க !
தாய்ப்பால் கொடுப்பதுதான் குழந்தைகளுக்கு நல்லது என்பதை உணர்த்தும், அருமையான கண்டுபிடிப்பை வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . அதாவது தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், 10 வயதிலேயே புத்திசாலி குழந்தைகளாக மாறுகின்றனர் என்பதுதான் அந்த ஆய்வு செய்தி . அதிலும் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளில் பெண்குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக இருக்கிறதாம் . பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கே உரிய ஹார்மோண்கள் சுரப்பதால், அவர்களின் புத்திசாலித்தனம் கொஞ்சம் மந்தமாக உள்ளதாம் . ஆண் குழந்தைகளுக்கு அத்தகைய ஹார்மோன்கள் சுரப்பதில்லை என்பதால், ஆண் குழந்தைகளின் மூளை மிகவும் சிறப்பாக செயல்படுகிறதாம் . இதனால் அவர்கள் படு புத்திசாலித்தனமாக இருப்பதாக அந்த ஆய்வுத்தகவல் தெரிவிக்கிறது . இவ்வளவு தகவலை கொடுத்துள்ள ஆய்வாளர்கள் குழந்தைகளுக்கு எத்தனை மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற தகவலையும் சொல்லாமல் விடவில்லை , குறைந்தது 6 மாதமாவது தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் . ஒரு வருடம் வரை விடாமல் தாய்ப்பால் கொடுத்தால் சிறப்பான பலனை காணலாம் என்று அந்த ஆய்வுத்தகவல் கூறுகிறது .
ஆனால், இன்றைய நாகரிக மங்கைகள் தாய்ப்பால் கொடுத்தால், தனது அழகு குறைந்துவிடும் என்று நினைத்து குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கிறார்கள் . இது தாய், குழந்தை இருவரின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர் .
--- தினமலர் . டிசம்பர் 22 , 2010 .

சாப்பிடாதீங்க ...

* பசி இல்லாதபோது ...
* உடலுக்கு பொருந்தாத உணவை...
* களைப்பாக இருக்கும்போது...
* வேலை நிறைய இருக்கும்போது...
* கோபமாக உள்ளபோது...
* உடல் நலம் இல்லாதபோது...
* அவசரமாக...
* கெட்டுப் போன பழையதை...
* கண்ட நேரங்கள் / கண்ட இடங்களில்...
* காய்கறி இல்லாமல்...
* மசாலா போட்ட உணவை...
* டால்டா சேர்ந்துள்ளதை ...
* கொழுப்பு கலந்த நெய் ( மாட்டுக் கொழுப்பு ) ...
* மாலை 5.30 லிருந்து 6.30 மணிக்குள்...
* காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு...
--- ஆர். உஷா , புதுவிளாங்குடி.
--- மங்கையர் மலர் . ஜூலை 2011 .

Wednesday, January 4, 2012

தெய்வம் !

தெய்வம் என்ற வார்த்தை, திவ்யம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது . ' ஒளிமயமானது ' என்று அர்த்தம் . இதனால்தான் தெய்வ தரிசனத்தை திவ்யதரிசனம் என்கிறோம் ; தெய்வத் திருத்தலங்களை திவ்யஷேத்திரம் என்கிறோம் .
' தெய்வீகமானது ' என்பதை ஆங்கிலத்தில் ' டிவைன் ' ( Divine ) என்கிறார்கள் . இந்த வார்த்தை, நமது சமஸ்கிருத மொழியின் ' திவ்ய ' என்ற சொல்லில் இருந்துதான் பிறந்திருக்கிறது . எல்லா மதங்களிலும், ஒளிக்கு பிரதான இடம் அளிக்கப்பட்டுள்ளது . எல்லா மதங்களும், சொர்க்கத்தை ஒளிமயமான இடமாகவும் சித்தரிக்கின்றன .
ஒவ்வொரு மதத்திலும், ' இருளில் இருக்கும் எங்களை ஒளிமயமாக மாற்றுவாயாக ! ' என்ற பிரார்த்த்னை இடம்பெற்றிருக்கிறது . இதன் உட்பொருள் : ' மனிதப்பிறவி எடுத்தவர்கள், தெய்வமாக முன்னேற வேண்டும் ! '.
ஒளி, பஞ்சபூதத்தில் ஒன்றான நெருப்பில் இருந்து பிறக்கிறது . நெருப்பின் விசேஷ தன்மை : இது மட்டுமே, மேல் நோக்கி எழும்பும் ! இதனால்தான் ஒவ்வொரு மதத்திலும் ஒளியேற்றி வழிபடும் பாரம்பரியம் இருந்து வருகிறது . ' மனிதத்தன்மை என்ற கீழ்நிலையில் இருந்து மேல் நோக்கி முன்னேறுங்கள் ' என்பதே ஒளிவழிபாட்டின் உட்பொருள் .
-- பூஜ்யா - தினமலர் . இனைப்பு 23 . 7 . 2011 .

புதுமையான போக்குவரத்து !

பிரிட்டன் தலைநகர் லண்டன் ஹூத்ரு விமான நிலையத்தில் ஒரு அதிசயமான வாகனத்தைப் பார்க்க முடியும் . தரையிலிருந்து 3, 4 மீட்டர் உயரத்தில் மேம்பாலம்போல இருக்கும் பாதையில் குட்டி வாகனங்கள் மின்னல் வேகத்தில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும் . சிறிய கண்ணாடி அறைபோல காட்சியளிக்கும் அந்த வாகனத்தில்4 முதல் 8 பேர் வரை அமர முடியும் . ரப்பர் டிராக்கில் அந்த வாகனங்கள் ஓடுவதால், சத்தம் அறவே இருக்காது . கம்ப்யூட்டர் மூலம் அவை இயக்கப்படுவதால், குறிப்பிட்ட இடங்க்ளில் மட்டுமே நிற்கும் . அந்த இடங்களில் மட்டுமே அந்த வாகனத்தின் கதவுகள் திறக்கும் .
நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் விமானங்கள் இயக்கப்படும் ஹூத்ரு விமான நிலையத்தில் இந்த வாகனங்களின் சேவை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது . மேம்பாலத்தில் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் கிடையாது . குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடந்துவிடும் . எளிதாக ஏராளமானோர் பயணம் செய்ய முடியும் .
இந்த பயண முறைக்கு, பி.ஆர்.டி. என்று பெயர் . அதாவது, ' பெர்சனல் ராபிட் டிரான்சிட்' என்று அர்த்தம் . ஏராளமானோர் இல்லாமல், நான்கைந்து பேர்களாக இந்த வாகனங்களில் பயணிக்க முடியும் . இந்த வாகனங்களுக்கு அல்ட்ரா என்று பெயர் . இருபுறமும் ஒரே நேரத்தில் 20, 30 குட்டி அல்ட்ராக்களை இயக்க முடியும் என்பதும், நிறைய பேர் பயணிக்க முடியும் .
இந்தியாவில், அமிர்தசரஸ் நகரில் முதலில் இந்த அல்ட்ரா வாகனங்கள் பயன்படுத்த உள்ளது . நம்ம ஊர்களிலும் விரைவில் இந்த திட்டம் அறிமுகம் ஆகும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்று நம்புவோம் !
--- தினமலர் . 17 . 7. 2011 .

Tuesday, January 3, 2012

ஆஹா ...!

* மார்பில் வலி என்று ஒருவர் கூறினால், அது மாரடைப்பாகக் கூட இருக்க முடியும் . அந்த வலி வந்த முதல் ஒரு மணி நேரத்துக்கு ' கோல்டன் அவர் ' என்று பெயர் . அந்தச் சமயத்தில் வலி இருக்கும் நபரின் நாக்கு அடியில் ' சார்பிட்ரேட் ' மாத்திரையை வைத்து, அவரை குலுக்காமல் கார் ( அ ) டாக்ஸி போன்றவற்றில் வைத்து ( ஆட்டோ கண்டிப்பாக
வேண்டாம் ) அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் மருத்துவர்கள் காப்பாற்ற ஏதுவாக இருக்கும் . அந்த சமயத்தில் குடிக்க, சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது . விரைந்து செயல்படுவதே முக்கியம் . வலி உள்ள நபரின் முன் அழுவது போன்றவற்றைத் தவிர்த்தால் அவரது இரத்த அழுத்தம் எகிறாது .
* குதிகால் வலியால் அவதிப்படுவதைத் தடுக்க, ஒரு பெரியவர் சொன்னது : சாம்பார் வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய்யைக் கலந்து வலி உள்ள குதிகாலில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம் .
* பஜ்ஜி பண்ணுவதற்கு மாவு கரைக்கிறீர்களா ? எண்ணெய் காய்ந்தயுடன் அந்த எண்ணெயை ஒரு சின்னக் கரண்டியால் எடுத்து பஜ்ஜி மாவில் விட்டுக் கலந்து பஜ்ஜி தோய்த்துப் போட்டுப் பாருங்கள் . பஜ்ஜி உப்பிக் கொண்டு, நல்ல கலராகவும், மொறுமொறுவென்றும் இருக்கும் .
* தினமும் காலை மாலை வயிற்றுப் பகுதியை, நமது கைகளினால் செல்ஃப் மசாஜ் செய்து வந்தால் தொப்பை குறையும் . இடுப்பு உறுதிபடும் . ரத்த ஓட்டம் அதிகமாகி சருமம் மினுமினுக்கும் .
* மாங்காய்த் தொக்கு செய்ய முதலில் முழு மாங்காயையும் குக்கரில் ஒரு விசில் வைத்து வேகவைத்து , தோலுரித்து, மசித்து எப்போதும்போல் எண்ணெயில் வதக்கித் தொக்கு போட்டால் எண்ணெயும் ஆகாது . ருசியும் அல்வா மாதிரி வரும் !
* பருப்பே வேண்டாம் . அரிசியை நல்ல கைபொறுக்கும் சூட்டில் வறுக்கவும் . எண்ணெயில் எல்லாம் தாளித்து உப்பு சேர்த்து, கொதித்ததும் அரிசியைக் களையாமல் போட்டுப் பொங்கல் செய்யவும் . சூப்பர் டேஸ்ட் !
----மங்கையர் மலர் . ஜூலை 2011 .

Monday, January 2, 2012

ஜனவரி முதல் நாளில்.....

ஜனவரி முதல் நாளில் நடந்த நிகழ்ச்சிகள் !
1 . 1. 1772 -- பயணிகள் காசோலை லண்டனில் அறிமுகமானது .
1 . 1. 1862 -- மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது .
1 . 1 . 1883 -- முதன் முதலாக லண்டனில் தீ அணைக்கும் படை உருவானது .
1 . 1 . 1862 -- கறுப்பு அடிமைகளுக்கு அமெரிக்க அதிபர் லிங்கன் விடுதலை அளித்தார் .
1 . 1 . 1909 -- லண்டனில் முதன் முதலாக வயதானவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது .
1 . 1 . 1923 -- சோவியத் குடியரசு தோன்றியது .
1 . 1 . 1942 -- ஐ. நா. சபை அமைக்கப்பட்டது .
காலணடர் பெயர்க்காரணம் .
காலண்டர் என்ற பெயர் காலணடசு என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்தது . காலண்டர் என்றால் மாதத்தின் முதல் நள் என்பது பொருள் .
--- எஸ்.விஜயா சீனிவாசன் , திருவெறும்பூர் .
--- தினமலர் இணைப்பு , 1 . 1 . 2012 .

Sunday, January 1, 2012

போன் குறியீட்டு எண் .

போன் குறியீட்டு எண் தரும் தளம் .
தொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப்படும் ஒரு செயலாக மாறிவிட்டது . எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் . ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட்டு எண்ணைக் கொண்டுள்ளன . இந்தியாவிற்கு 91 என்பது அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் அனைத்து நாடுகளின் குறியீட்டு எண்ணை எப்போதும் நினைவில் கொள்ள முடியாதே . இந்த தேவையை நிறைவு செய்திட , இணையத்தில் ஒரு தளம் இயங்குகிறது . http;// www. Simplecountry codes.com. என்ற முகவரியில் உள்ள தளம் , அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தருகிறது . இந்த தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் ? என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட்டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும் . இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம் .
--- தினமலர் , 28 . 6 . 2011 .