Sunday, April 30, 2017

1729-ஐ மறக்க முடியுமா?

  கணித  மேதை  ராமானுஜன்  ஒரு  எண்ணுக்கு  எத்தனை  வழிகளில்  பிரிவினைப்படுத்த  இயலும்  என்பதற்குத்  தொடர்  பின்னம்  மூலம்  சூத்திரம்  கண்டதுதான்  அவர்க்குப்  பெருமை  தேடித்தந்தது.  நமக்கு  ராமானுஜன்  என்று  அறிமுகமான  எண்  1729.  இரண்டு  கன  எண்களின்  கூடுதலாக  ஒன்றுக்கு  மேற்பட்ட  முறைகளில்  அமைக்கக்கூடிய  மிகச்  சிறு  எண்  என்று  ஒரு  வினாடிக்கும்  குறைந்த  நேரத்தில்  கூறி  தனது  ஆய்வுத்  துணைவர்  ஜி.எச்.ஹார்டியை  வியப்பில்  ஆழ்த்திய  செய்தி  பல  முறை  சொல்லப்பட்டுள்ளது.  இது  மிகச்  சிறிய  எண்  என்றால்  இதற்கு  அடுத்த  எண்கள்  என்ன  என்று  கண்டறிய  முற்பட்டோமா?
     இதோ  சில  எண்கள் :
4194 = 23  +  163  =  93  +  153
13832  =  23  +  243  =  183  +  203
65728  =  123  +  403   =  313  +  333
     கோல்ட்பாக்  என்பவர்  ஒரு  அனுமானம்  செய்தார்.  ஆனல்,  அதனைக்  கணிதவியல்படி  நிறுவ  இயலவில்லை.  2-க்கும்  மேற்பட்ட  எந்த  முழு  எண்ணையும்  இரண்டு  பகா  எண்களின்  கூடுதலாக  அமைக்க  முடியும்  என்பதே  அவரது  அனுமானம்.
     எடுத்துக்காட்டுகள் :
6 = 3+3,  10 = 3+7,  100 = 41+ 59,  222 = 109+113.
     இந்த  அனுமானத்தை  மேம்படுத்தி  ராமானுஜன்  ஒரு  விதியைக்  கண்டார்.  எந்த  முழு  எண்ணையும்  நான்கு  எண்களுக்கு  மிகாது  பகா  எண்களின்  கூடுதலாக  அமைக்க  முடியும்.  எ.கா :  45 = 2+7+13+ 23.
--  ச.சீ.இராஜகோபாலன்.  ( கருத்துப்  பேழை ).
-- 'தி இந்து'  நாளிதழ்,  செவ்வாய்,  டிசம்பர்  23, 2014.   

Saturday, April 29, 2017

மெல்லிய போன்

உலகின்  மிக  மெல்லிய  போன்.
     4ஜி  தொழில்நுட்பத்தில்  இயங்கும்படியான  உலகின்  மிக  மெலிதான  அப்போ  ஆர்  5  என  பெயர்  கொண்ட  ஸ்மார்ட்போனை  இந்தியாவில்  அறிமுகப்படுத்தியுள்ளது.  பயனாளர்கள்  எளிதாக  பயன்படுத்தும்  விதமாக  இருக்க  கட்டிங் எட்ஜ்   தொழில்நுட்பம்  கொண்டு  போனை  தயாரித்துள்ளனர்.
     இந்த  ஸ்மார்ட்போன்  4.85  அகலம்,  155  கிரம்  எடையில்  உள்ளது.  ஆக்டா  கோர்  க்வால்காம்  எம்எஸ்எம்  8939,  5.2  இன்ச்  அமோல்ட்  டிஎஸ் பிளேவுடன்,  புதிய  பிஎல்  2.0  பிளஸ்  பிளாஷ்  சாட்   தொழில்நுட்பம்  கொண்ட  13  மெகாபிக்சல்  கேமராவுடன்  வந்துள்ளது.  மேலும்  நிறுவனத்தின்  விஓஓசி  மினி  ரேபிட்  சார்ஜிங்  சிஸ்டத்தை  பயன்படுத்தியுள்ளதால்  30  நிமிடம்  சார்ஜ்  செய்தால்  75  சதவீத  பாட்டரி  ஆயுள்  கொடுக்கும்.  அதேபோல், ஐந்து  நிமிடம்  சார்ஜ்  செய்தால்,  இரண்டு  மணி  நேரம்  பேசிக்கொள்ளலாம்.  மெலும்  பல  அதிநவீன  வசதிகளை  கொண்ட  இந்த  போன்  ரூ. 29  ஆயிரத்து  990  என்ற  விலைக்கு  வெளிவந்துள்ளது.
-- தினமலர்  திருச்சி  1-1-2015.  

Friday, April 28, 2017

சீனிவாச ராமானுஜன்

மயக்கும்  மாயச்சதுரம்
     ராமானுஜன்  தன்  பிறந்த  நாளை  வைத்து  ஒரு  மாயச்சதுரத்தை  உருவாக்கினார்.

             22              12             18              87
             21              84             32                2
            92              16               7              24
             4              27             82               26
     அதில்  நிரல்,  நிரை,  மூலைவிட்ட  எண்களின்  கூடுதல்  139  என்பது  மட்டுமல்ல,  நான்கு  மூலைகளிலும்  அமைந்த  எண்களின்  கூடுதலும்  139.  நடுவில்  அமைத்த  உட்சதுரத்திலுள்ள  எண்களின்  கூடுதலும்  139.  மற்றும்  பலவகைகளிலும்  கூடுதல்  139  ஆக  அமைந்திருப்பது  இந்த  மாயச்சதுரத்தின்  சிறப்பு.  இதை  ஒரு  பிரம்ம  ரகசியமாக  வைத்திராமல்  அதனை  அமைக்கும்  முறையையும்  விளக்கியுள்ளது  அவரது  பரந்த  மனப்பான்மையைக்  காட்டுகிறது.
     தொடக்கப்  பள்ளி  மாணவரும்  விளையாடக்  கூடியது  அவரது  எண்  பிரிவினை  ஆய்வுகள்.  ஒரு  முழு  எண்ணைப்  பிற  முழு  எண்கள்  மூலம்  எத்தனைவகைகளில்  கூறலாம்  என்பதே  அவரது  தேடல்.  3  என்ற  எண்ணை  3+0,  2+!,  1+1+!  என்ற  மூன்று  வகையில்  அமைக்க  முடியும்.  4  என்ற  எண்ணை  4+0,  3+1,  2+2,  2+!+1,  1+1+1+!  என்று  ஐந்து  பிரிவினைகளால்  அமைக்க  முடியும்.  பார்க்க  எளிதாகத்  தோன்றும்  இவ்வெண்  பிரிவினை  போகப்  போக  எவ்வாறு  நினைக்க  இயலாத  அளவு  முறைகள்  உள்ளன  என்று  வியப்பில்  ஆழ்த்தும்.
--  ச.சீ.இராஜகோபாலன்.  ( கருத்துப்  பேழை ).
-- 'தி இந்து'  நாளிதழ்,  செவ்வாய்,  டிசம்பர்  23, 2014.     

Thursday, April 27, 2017

டிப்ஸ்...டிப்ஸ்...

*   தேங்காய்  மூடிகளை  அப்படியே  ஃப்ரீஸரில்  வைத்துவிடுங்கள்.  உபயோகிப்பதற்கு   10  நிமிடங்களுக்கு  முன்னால்  எடுத்து  வெளியே  வைத்து  விட்டு,  ஒரு  கத்தியால்  வெள்ளைப்  பகுதியை  மட்டும்  அகழ்ந்து  எடுத்தால்,  தேங்காயின்  உள்தோல்  வாராமல்  வெண்மையான  பகுதி  மட்டும்  கழன்று  வந்துவிடும்.  இதைத்  துண்டுகளாக்கி,  மிக்ஸியில்  பொடித்தால்,  பூப்பூவான,  வெள்ளை  வெளேர்  தேங்காய்த்  துருவல்  ரெடி.
*   பிரெட்டின்  ஓரங்களை  வெட்டிய  பின்  தூக்கி  எறியாமல்,  பாலில்  கொஞ்ச  நேரம்  ஊறவைத்து,  சப்பாத்தி  மாவுடன்  சேர்த்துப்  பிசைந்தால்,  சப்பாத்தி  மிருதுவாக  இருப்பதுடன்  கூடுதல்  சப்பாத்திகளும்  கிடைக்கும்.
*   ஆப்ப  மாவு,  தோசை  மாவு  முதலியவை  கொஞ்சமாக  இருந்தால்,  அதில்  கடலை  மாவு,  உப்பு,  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்,  பச்சைமிளகாய்,  கறிவேப்பிலை  சேர்த்து,  சுவையான  பக்கோடா  செய்யலாம்.
*   ஜாம்,  ஊறுகாய்  பாட்டில்கள்  இறுக  மூடிக்கொண்டு  திறக்க  முடியவில்லையா?  பாட்டிலைத்  தலைகீழாகக்  கவிழ்த்து,  இளம்  சூடான  வெந்நீரில்  அமிழ்த்தி... சில  விநாடிகள்  கழித்து  வெளியே  எடுத்தால்,  சுலபமாகத்  திறக்கலாம்.
*   கொத்துமல்லித்  தழையை,  ஈரமில்லாமல்  வாழை  இலையில்  சுற்றி  ஃப்ரிட்ஜில்  வைத்தால்  நான்கைந்து  நாட்கள்  வரை  பசுமையாக  இருக்கும்.
-- அவள் விகடன்.  29-7-2014.
-- இதழ் உதவி :  H. சுரேஷ்,  காரைக்கால்.  

Wednesday, April 26, 2017

'லிப்டில்' கவனம்

அபார்ட்மென்ட்  தானியங்கி  'லிப்டில்'  கவனம்.  படியேறுவதே  பாதுகாப்பு !
     அடுக்குமாடி  குடியிருப்புகள்  கட்டும்போது,  வாகன  நிறுத்துமிடத்துக்கு  அளிக்கப்படும்  முக்கியத்துவத்தை,  லிப்ட்  அமைப்பதற்கும்  செலுத்த  வேண்டும்  என்கின்றனர்,  கட்டுமான  வல்லுனர்கள்.
ஆலோசனைகள் :
     இதற்காக  அவர்கள்  கூறும்  ஆலோசனைகள்:  கட்டுமான  நிறுவங்னங்கள்,  பிரபல  நிறுவனங்களின்  லிப்ட்களையே  குடியிருபுகளுக்கு  பயன்படுத்துகின்றனர்.
     இத்தகைய  நிறுவனங்கள்,  லிப்ட்களை  அமைப்பதுடன்,  ஆண்டு  ஒப்பந்த  அடிப்படையில்  அவற்றின்  பராமரிப்பு  பொறுப்பையும்  ஏற்றுக்  கொள்கின்றன.  இவ்வாறு  ஆண்டு  ஒப்பந்த  அடிப்படையில்  அவர்களிடம்  பராமரிப்பு  பொறுப்பு  அளிப்பது,  மிகவும்  பாதுகாப்பான  நடைமூறை.
     இவ்வாறு  பராமரிப்பு  பொறுப்பை  ஒப்பந்தம்  போட்டு  கொடுத்து  விட்டோம்  என்று,  அசட்டையாக  இருந்து  விடக்  கூடாது.  ஒப்பந்த  ஷரத்துப்படி  குறிப்பிட்ட  கால   இடைவெளியில்  அந்த  நிறுவனத்தை  சேர்ந்தவர்கள்,  வந்து  பராமரிப்பு  செய்வர்.
      ஆனால்,  தினசரி,  'லிப்ட்'  பயன்படுத்தும்  ஒவ்வொருவரும்,  அதன்  இயக்கத்தில்  ஏதாவது  மாற்றம்  தெரிந்தால்,  அது  குறித்து  உடனடியாக  அந்த  நிறுவனத்துக்கு  தெரிவிக்க  வேண்டும்.
     லிப்ட்  இயக்கத்தில்  ஏதாவது  பிரச்னை  ஏற்படுகிறது  என்றால்,  அது  முதலில்  பயன்பாட்டின்போது  ஏற்படும்  சத்தத்தின்  வாயிலாகவே  தெரியவரும்  என்பதை,  கவனத்தில்  கொள்ள  வேண்டும்.
கதவுகள் :
     நவீன  வசதி  என்பதற்காக,  பல்வேறு  அடுக்குமாடி  குடியிருப்புகளில்,  தானியங்கி  கதவுகளை  கொண்ட  லிப்ட்  பயன்படுத்தப்படுகின்றன.  பெரிய  அலுவலக  வளாகங்கள்,  ஆலைகள்  போன்றவற்றில்  வேண்டுமானால்,  தானியங்கி  கதவுகள்  கொண்ட  லிப்ட்  பயனுள்ளதாக  இருக்கலாம்.  ஆனால்,  குடியிருப்பு  கட்டடங்களில்,  தானியங்கி  கதவு  லிப்ட்  தவிர்ப்பது  நல்லது.
     குடியிருப்புகளில்,  சிறுவர்கள்  முதல்  வயதானவர்கள்  வரை  பல்வேறு  தரப்பினர்  லிப்ட்  பயன்படுத்துவர்.  இவர்களின்  வயதுக்கு  ஏற்ப  செயல்பாடு  வேறுபடும்.  எனவே,  தானியங்கி  கதவுகள்  இருந்தால்,  ஏதாவது  பிரச்னை  ஏற்படும்  போது  வெளியில்  இருப்பவர்கள்  தானாக  முன்வந்து  உள்ளே  இருப்பவர்களை  மீட்பதில்  சிக்கல்  ஏற்படும்.  முற்றிலுமாக  அடைக்கப்பட்ட  கதவுக்குள்,  சிக்கியவர்களும்  பதற்றத்துக்கு  ஆளாக  நேரிடும்.
ஸ்ட்ரெச்சர்களில்  கவனம் :
      இதேபோன்று,  ஐந்து  தளங்களுக்கு  மேற்பட்ட  அடுக்குமாடி  குடியிருப்பு  எனில்,  அதில்  சாதாரண  லிப்ட்களுடன்,  அவசர  தேவைக்காக,  ஸ்ட்ரெச்சர்களை  கொண்டு  செல்லும்  வகையிலான  லிப்ட்  அமைப்பது  நல்லது.  இதனால்,  மேல்  தளங்களில்  யாருக்காவது  உடல்நிலை  பாதிக்கப்பட்டால்,  அவர்களை  படுக்க  வைத்த  நிலையிலேயே,  தரைதளத்துக்கு  கொண்டு  செல்ல  இது  உதவும்.
-- கனவு இல்லம்.
-- தினமலர்.  கோவை.  சனி.  8-11-2014.  
-- இதழ்  உதவி :  K.கல்யாணம்,  சிறுமுகை . ( கோவை.). 

Tuesday, April 25, 2017

தரைகள் பளபளக்க...

 தரை  அமைப்பதில்  பல  விதமான  முறைகள்  இருக்கின்றன.  அவற்றில்  ஒன்றுதான்  ரெட்ரோ  பிளேட் (Retroplate ).  எந்த  அளவுக்குப்  பளபளப்புக்  கொண்டதாக  இருக்க  வேண்டுமோ  அதற்கேற்ற  வகையில்  தேய்த்துப்  பலபளப்பாக்கலாம்.  இதன்  மூலம்  தரையின்  தேய்மானத்தைக்  கட்டுப்படுத்த  முடியும்.  உராய்வுகளால்  ஏற்படும்  சேதமும்  குறையும்.  அதுபோல   ரெட்ரோ  பிளேட்   உபயோகிப்பதால்  தரையின்  பிரதிபலிப்புக்  கூடும்.  இதனால்  அதிக  அளவில்  மின்விளக்குகளால்  பயன்படுத்த  வேண்டிய  அவசியம்  இல்லை.   ரெட்ரோ  பிளேட் டில்  உள்ள  வேதிப்  பொருட்கள்  தரையின்  ஈரத்தன்மையை  நீடிக்கச்செய்கிறது.
     அதேபோல்  இதில்  மிகக்  குறைந்தபட்சப்  பராமரிப்பே  போதுமானதாக  இருக்கும்.  கறைகள்  படிந்தாலும்  எளிதில்  சுத்த்ப்படுத்த  முடியும்.  இதனால்  தரைகள்  எப்போதும்  பளபளவென்று  மினுங்கும்.  நீண்ட  கால  உழைப்பையும்  கொண்டது.  மேலும்  இவை  சுற்றுச்சூழலுக்கு  உகந்தவை.  உடலுக்கும்  நல்லது.
--   ( சொந்த வீடு ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  சனி,  டிசம்பர் 13, 2014. 

Monday, April 24, 2017

கான்கிரீட் பலமாக...

 வீட்டுக்  பணிகளில்  முக்கியமானது  கான்கிரீட்  அமைக்கும்  பணிதான்.  கான்கிரீட்  பணி  முடிந்த  பிறகு  அதை  நீரால்  ஆற்றுவது  அவசியமானது.  எந்த  அளவுக்கு  நீராற்றுகிறீர்களோ  அந்த  அளவுக்கு  கான்கிரீட்  பலமாக  இருக்கும்.  அதாவது  கான்கிரீட்   மேற்பரப்பில்  நீரைக்  குறிப்பிட்ட  காலத்திற்குத்  தேங்கி  இருக்குமாறு  செய்ய  வேண்டும்.
     நீராற்றும்  வேலையைச்  செய்ய  பல  வழிகள்  பின்பற்றப்படுகின்றன.  கான்கிரீட்  தளத்தின்  மேல்  நீரைத்  தேக்கப்   பல  வழிகள்  பின்பற்றப்படுகின்றன.   நீர்  வெளியேறிப்  போகாமல்  இருக்க  பாத்தி  கட்டுவது,  ஈரக்  கோணிகளைக்  கொண்டு  மூடி  வைப்பது  இப்படிப்  பல  வழிகள்  பின்பற்றப்படுகின்றன.  இதற்கு  மாற்றாகப்  பல  வழிமுறைகளும்  வந்திருக்கின்றன.  உதாரணமாக,  அக்ரிலிக்  எமல்ஷன்  வகையிலான  பூச்சுகளை   கான்கிரீட்  பரப்பின்  பூசியும்  நீராற்றலாம்.  ஒரே  ஒரு  முறை  செய்தால்  போதும்.  பூசப்படும்  பூச்சு   கான்கிரீட்  பரப்பின்  மேல்  சீரான  படலமாகப்  பரவும்.  இந்தப்  படலம்   கான்கிரீட் டிற்குள்  இருக்கும்  தண்ணீர்  வீணாக  ஆவியாகி  வெளியேறிவிடாமல்  தடுக்கும்  வேலையைச்  செய்யும்.   கான்கிரீட்   வெகு  விரைவில்  உலர்ந்து  போகாமல்  காக்கும்.  இதனால்  வெடிப்புகள்  ஏற்படுவது  தடுக்கப்படும்.  எந்த  முறையைப்  பின்பற்றினாலும்  சரி,   கான்கிரீட்டுக்கு  நீராற்றும்  பணியைச்  சரியாக  செய்யாவிட்டால்  கட்டிடத்தின்  ஆயுள்  குறைவுதான்.
-- சுந்தரி.  ( சொந்த வீடு ).
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  சனி,  டிசம்பர் 13, 2014. 

Sunday, April 23, 2017

டிப்ஸ்...டிப்ஸ்...

*   எந்தவித  பருப்புத்  துவையல்  செய்தாலும்  இரண்டு,  மூன்று  பருப்பு  வகைகளை  ( துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு,  பயத்தம்பருப்பு )  சேர்த்துச்  செய்தால்,  சுவை  கூடுவதுடன்  கூடுதல்  புரதச்சத்தும்  கிடைக்கும்.
*   உருளைக்கிழங்கை  முழுதாக  வேகவைக்கும்போது,  அதனுடன்  ஒரு  பிடி  புதினா  இலைகளையும்  சேர்த்து  வேக  வைத்தால்,
கிழங்கின்  மண்வாசனை  நீங்கிவிடும்.  இந்தக்  கிழங்கை  சமையலில்  சேர்க்கும்போது  ருசியும்  சத்தும்  கூடும்.
*   பாயசத்துக்கு  முந்திரிப்  பருப்பு  இல்லையென்றால்  கவலைப்பட  வேண்டாம்.  இரண்டு  ஸ்பூன்  நெய்யில்  கைப்பிடி  அளவு  வேர்க்கடலையை  பொன்னிறமாக  வருத்து,  பாயசத்தில்  போட்டால்  சுவை  கூடும்.
*   வாழைக்காய்,  உருளைக்கிழங்கு,  சௌசௌ,  கத்தரிக்காய்  போன்றவற்றில்  பஜ்ஜி  செய்யப்போகிறீர்களா?  காய்களை  வில்லைகளாக  நறுக்கி,  ஒரு  வில்லையின்  மேல்  ஏதாவது  தொக்கு  அல்லது  ஊறுகாய்  விழுதைத்  தடவி  விட்டு,  அதன்  மேல்  இன்னொரு  வில்லையை  வைத்து  மூடி,  பஜ்ஜி  மாவில்  தோய்த்து  பஜ்ஜி  தயாரித்தால்,  சுவையாக  இருக்கும்.
*   நீளமான  முழுக்  கத்தரிக்காய்களில்  ஸ்டஃப்டு பொரியல்  செய்யும்போது,  கத்தரிக்காயை  மேலிருந்து  பாதிவரை  நான்காகக்  கீறவும்.  பின்னர்  காயைத்  தலைகீழாகப்  பிடித்துக்கொண்டு,  மீண்டும்  நான்காகக்  கீறவும்.  நடுவில்  காய்  பிய்ந்துவிடாமல்  கவனமாகச்  செய்யவும்.  பிறகு,  மசாலாவை  இரு  பக்கங்களிலும்  ஸ்ட்ஃப்  செய்து,  இட்லித்  தட்டில்  5-10  நிமிடங்கள்  வேகவிட்டு,  பின்னர்  வதக்கினால்,  விரைவாகவும்,  உடையாமலும்  நன்கு  வதங்கும்.
-- அவள் விகடன்.  29-7-2014.
-- இதழ் உதவி :  H. சுரேஷ்,  காரைக்கால். 

Saturday, April 22, 2017

தலையில் லப்டப் !

*   இறாலுக்கு  அதன்  தலையில்தான்  இதயம்  இருக்கிறது.
*   வீட்டில்  வளர்க்கப்படும்  தங்க  மீன்கள்  கர்ப்பமாக  இருந்தால்  எப்படி  அழைப்பார்கள்  தெரியுமா?  'ட்வீட்'  என்றே
    அழைப்பார்கள்.
*  வீட்டில்  அதிகம்  தூசி  படிவதற்கு  வெப்புறத்  தூசிகள்  மட்டும்  காரணமல்ல,  நம்  தோலில்  உள்ள  இறந்த  செல்களும்
    காரணம்.  
*   கரப்பான்பூச்சியின்  தலையை  வெட்டினால்கூட  9  நாட்கள்  வரை  உயிருடன்  வாழும்.
*   பொதுவாக  எல்லா  உயிரினங்களுக்கும்  கீழ்  தாடை  இறங்கிதான்  வாய்  திறக்கும்.  ஆனால்,  முதலைக்கு  மட்டும்தான்
    மேல்  தாடை  தூக்கி  வாய்  திறக்கும்.
*  குழந்தையாக  இருந்து  வளர  வளர  நம்  கண்கள்  மட்டும்  வளராமல்  அப்படியே  இருக்கும்,  மற்ற  உறுப்புகள்  வளர்ச்சி
   அடையும்.
*   உலகிலேயே  மிகப்பெரிய  பறவையான  நெருப்புக்கோழியின்  மூளை  அதன்  கண்ணைவிட  மிகச்  சிறியது.
*   பட்டாம்பூச்சிகள்  செடிகளில்  உள்ள  தேனைத்  தன்  வாயால்  சுவைப்பதில்லை.  தன்  கால்களால்தான்  தேனைச்
    சுவைக்கிறது.      
*   ஆங்கில  மொழிக்  கவிதைகளில்  ( Rhymes )  மாதம்,  ஆரஞ்சு,  ஊதா,  சில்வர்  போன்ற  வார்த்தைகளைப்  பயன்படுத்தவே
    மாட்டார்கள்.
*   கம்ப்யூட்டரின்  கீ  போர்ட்டின்  முதல்  வரிசையில்  உள்ள  பட்டனில்  ஒரே  வரிசையில்  typewriter  என்ற  வார்த்தையை  டைப்
    செய்யலாம்.
-- தொகுப்பு:  சிவரஞ்சனி.  (  மாயாபஜார் )
--  'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  புதன், டிசம்பர்  31, 2014. 

Friday, April 21, 2017

3டி ஸ்கேனர் வி பிட்

  மனித  உடலை  மருத்துவ  தேவைகளுக்காக  ஸ்கேன்  செய்வது  தெரியும்.  இந்த  3டி  ஸ்கேனர்  என்பது  நமது  உடல்  குறித்து  24  மில்லியன்  புள்ளிவிவரங்களை  20  விநாடிகளில்  எடுத்து  கொடுத்து  விடுகிறது.
      தற்போது  உடற்பயிற்சி  தேவைகளுக்காக  சோதனை  செய்யப்பட்டு  வருகிறது.  இந்த  விவரங்களை  நமது  மொபைல்  மற்றும்  லேப்டாப்  மூலம்  எடுத்துக்  கொள்ளலாம்.  நமது  உடல்  அமைப்புக்கு  என்ன  வகையான  உடற்பயிற்சி  எடுப்பது,  என்ன  உணவை  எடுத்துக்  கொள்வது  போன்றவை  இந்த  டேட்டாக்களில்  கிடைத்துவிடும்.  சிறிய  உடை  மாற்றும்  அறையைபோல  உள்ள  இந்த  ஸ்கேனர்  விரைவிலேயே  சந்தைக்கு  வரலாம்.
கை  கொடுக்கும்  கை
     மாற்று  உடலுறுப்புகளை  கண்டுபிடிப்பதில்  விஞ்ஞானிகள்  பல  முன்னேற்றங்களை  கண்டுவருகின்றனர்.  இதற்கான  சமீபத்திய  சாட்சி  3டி  படோமெட்ரிக்  கை.
     செயற்கை  இதயம்  பொருத்துவதுகூட  சாத்தியமாகிவிட்டது.  ஆனால்  கையை  இழந்தவர்களுக்கு  அதன்  இழப்பை  ஈடுசெய்ய  முடியாததாகவே  இருந்தது.  செயற்கை  கரங்களை  பொருத்தினாலும்  அது  சுயமாக  வேலை  செய்யாது.  அந்த  குறையை  போக்கும்  விதமாக  இருக்கிறது  இந்த  3டி  பயோ மெட்ரிக்  கை.
     வழக்கமாக  நாம்  எந்த  வேலை  செய்தாலும்  அதற்கு  ஏற்ப  கட்டளையிடுவது  நமது  மூளைதான்.  இந்த  கட்டளைகளை  உணரும்  விதமாக  இந்த  பயோமெட்ரிக்  உள்ளது.  இதனால்  வழக்கமான  மனித  கை  செய்யக்கூடிய  வேலைகளை  போலவே  இந்த  செயற்கை  கைகளால்  செய்ய  முடியும்.
     இந்த  கைகளை  பொருத்திக்  கோண்டு  நாம்  வழக்கமாக  செய்யும்  வேலைகளை  செய்யமுடியும்.  ஒவ்வொரு  விரல்களும்  தனித்தனியாகவும்  இயங்கும்.  இந்த  முயற்சி  வெற்றிபெற்றால்  விஞ்ஞானத்தில்  மைல்கல்லாகவே  இருக்கும்  என்கிறது  மருத்துவ  உலகமும்.
-- தொழில் நுட்பம்.  வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள், டிசம்பர்  29, 2014. 

Thursday, April 20, 2017

இந்தியாவின் கிஃப்ட் சிட்டி

 இந்தியா  முழுவதும்  ஸ்மார்ட்  சிட்டி  உருவாக்க  மத்திய  அரசு  திட்டமிட்டுள்ளது.
      ஆனால்  2007 ஆம்  ஆண்டிலேயே  இதற்கான  திட்டத்தை  குஜராத்  அரசாங்கம்  அறிவித்திருந்தது.  இதற்கு  GIFT ( Gujarat  International  Finance  Tec -- City )  சிட்டி  என்றும்  பெயரிட்டிருந்தது.  உலக  தரத்திலான  உள்கட்டமைப்புகள்,  தொழில்நுட்பம்  கொண்ட  இந்த  நகரத்தில்  பல  பன்னாட்டு  நிறுவனங்களும்  தொழில்  தொடங்க  உள்ளன.
      358  ஹெக்டேரில்  அமைய  உள்ள  இந்த  நகரத்தின்  கட்டுமான  பணிகள்  வேகமாக  நடந்து  வருகின்றன.  இந்தியாவின்  முதல்  ஸ்மார்ட்  சிட்டியாக  கிஃப்ட்  சிட்டி  வளர்ந்து  வருகிறது.
விரிவுபடுத்தப்படும்  பனாமா  கால்வாய்
      பனாமா  கால்வாய்  இந்த  ஆண்டோடு  நூற்றாண்டுகளை  கொண்டாடி  முடிக்கிறது.  இந்த  புகழ்  வாய்ந்த  பாதையை  விரிவுபடுத்தும்  பணிகள்  நடந்து  வருகின்றன.
      2016ல்  புதிய  பாதை  பயன்பாட்டுக்கு  வரும்.  75  சதவீத  வேலைகள்  முடிந்து  விட்டன.  நூறு  வருடங்களில்  கப்பல்  போக்குவரத்து  பலமடங்கு  முன்னேறிவிட்டதால்,  மிகப்பெரிய  கப்பல்களும்  சென்று  வருவதற்கு  ஏற்ப  கால்வாய்  விரிவுபடுத்தும்  பணிகள்  நடக்கின்றன.  தற்போது  இந்த  கால்வாயை  கடந்து  செல்ல  10  மணி  நேரம்  எடுத்துக்  கொள்கின்றன.  புதிய  வழி  நேரத்தை   குறைக்கும்,  எரிபொருள்  செலவு  மிச்சமாகும்.
--வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள், டிசம்பர்  29, 2014. 

Wednesday, April 19, 2017

டிப்ஸ்...டிப்ஸ்...

*     மதியம்  வைத்த  பருப்பு  சாம்பார்  கொஞ்சம்  மிகுந்து  இருக்கிறதா?  சாம்பாரின்  அளவுக்கு  ஏற்றபடி  கொஞ்சம்  தேங்காய்,  தனியா,  கடலைப் பருப்பு,  சீரகம்,  வெந்தயம்,  மிளகாய் வற்றல்,  ஒன்றிரண்டு  வெங்காயம்  ஆகியவற்றை  வறுத்து,  அரைத்து,  சாம்பாருடன்  சேர்த்துக்  கொதிக்க  விட்டால்... மாலையில்  இட்லி,  தோசை,  பொங்கல்,  உப்புமா  போன்ற  டிபங்களுக்கு  ஏற்ற  சைட்  டிஷ்ஷாக  மாறி  விடும்.
*     ஈஸியான,  டேஸ்டியான  வெங்காய  பக்கோடா  செய்யலாமா?  ஒரு  கப்  கடலைமாவு,  அரை  கப்  அரிசி  மாவு,  அரை  கப்  ரவை,  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்  3,  பச்சை மிளகாய்  6,  சிறிதளவு  இஞ்சி,  கறிவேப்பிலை,  உப்பு  ஆகியவற்றை  ஒரு  பாத்திரத்தில்  போட்டு,  ஒரு  ஸ்பூன்  நெய்விட்டு,  தேவையான  தண்ணீர்  தெளித்துப்  பிசிறவும்.  இந்த  மாவை  காயும்  எண்ணெயில்  கிள்ளிப்  போட்டுப்  பொரித்தால்... க்ரிஸ்பியான  பக்கோடா  தயார்.
*     ஒரு  டம்ளர்  கெட்டி  அவலை  இரண்டு  டீஸ்பூன்  நெய்யில்  வறுத்து,  அதனுடன்  ஒரு  கைப்பிடி  உடைத்த  கடலை,  ஒரு  கைப்பிடி  கறிவேப்பிலை  சேர்த்து  மீண்டும்  ஒரு  நிமிடம்  வாணலியில்  வறுத்து  எடுக்கவும்.  அதில்  தேவையான  அளவு  உப்பு,  மிளகாய்த்தூள்  தூவிப்  பரிமாறினால்... மாலை  நேரத்தில்  கொறிக்க  மொறுமொறு  ஸ்நாக்ஸ்  தயார்!
*     பகாளாபாத்  ( தயிர்  சாதம் )  தயாரிக்க  அரிசியை  வேக  விடும்போது,  ஒரு  கப்  அரிசிக்கு  ஒரு  ஸ்பூன்  அவல்  அல்லது  ஒரு  ஸ்பூன்  ஜவ்வரிசியையும்  சேர்த்து  வேகவிட்டால்  சாதம்  குழைவாகவும்,  கூடுதல்  சுவையுடனும்  இருக்கும்.
-- அவள் விகடன்.  29-7-2014.
-- இதழ் உதவி :  H. சுரேஷ்,  காரைக்கால்.   

Tuesday, April 18, 2017

நீளமான ரயில் பாதை

 சீனா - ஸ்பெயின்  நாடுகளை  இணைக்கும்  விதமாக  13,000  கிலோ  மீட்டர்  ரயில்  பாதை  அமைகப்பட்டுள்ளது.  சரக்கு  போக்குவரத்துக்காக  போடப்பட்டுள்ள  உலகின்  நீளமான  ரயில்பாதை  இதுதான்.  ஒரே  நேரத்தில்  40  கண்டெய்னர்களை  ஏற்ற  முடியும்.
ஸ்மார்ட்  பேனா!
     எழுதுவதற்கு  மட்டுமல்ல,  உரையாடலைப்  பதிவு  செய்யவும்  உதவும்  லைவ்ஸ்திரைப்  ஏகோ  ஸ்மார்ட்  பென்.  800  மணி  நேரம்  வரையான  உரையாடலை  இதில்  பதிவு  செய்ய  முடியும்.
குட்டி  கார்
     ஹாங்காய்  நகரைச்  சேர்ந்த  ஷூஷையூன்  உலகின்  மிகச்சிறிய  காரை  வடிவமைத்துள்ளனர்.  77சிசி  திறன்  கொண்ட  இந்த  குட்டி  கார்  24  அங்குல  நீளமும்,  14  அங்குல  அகலமும்  கொண்டது.  உயரம்  16  அங்குலம்.  ஒருவர்  உட்கார்ந்து  செல்லும்  வகையிலான  இந்த  காரை  வீட்டிலேயே  வடிவமைத்துள்ளார்.
-- வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  திங்கள், டிசம்பர்  29, 2014.  

Monday, April 17, 2017

இசை மதங்கள்

  இசையில்  நாரத  மதம்,  அனுமன்  மதம்,  சோமேஸ்வரர்  மதம்,  கல்லிநாதர்  மதம்  என்று  நான்கு  மரபுகள்  உண்டு.
     வட நாட்டு  இசை  --  அனுமன்  மதம்;  தென்  நாட்டு  இசை  --  நாரத  மதம்;  என்று  சொல்வார்கள்.  வட  நாட்டுப்  பைரவி  ராகம்  தென்னாட்டில்  தோடி.  அதற்கு  'அனுமத்  தோடி'  என்றே  பெயர்.  சங்கீத  மும்மூர்த்திகளில்  முத்துச்சாமி  தீட்சிதர்  அனுமத்  மதம்  என்பார்கள்.  இசைக்கு  அனுமன்  ஒரு  அகராதி  செய்திருக்கிறான்.  அந்த  அகராதிக்கு  'அனுமத்  கடகம்'  என்று  பெயர்.
வெளி நாடுகளில்  ஆஞ்சநேயர்
     தாய்லாந்தில்  பிமாய்  கோயிலிலும்,  ஜாவாவில்  பிரம்பாணம்  கோயிலிலும்,  கம்போடியாவில்  பல  கோயில்களிலும்  ஆஞ்ச நேயர்  பூஜை  செய்யப்பட்டு  வருகிறது.
--  தினமலர்.  பக்திமலர்.  டிசம்பர்  18,  2014.  

Sunday, April 16, 2017

பஞ்சபூத ஸ்வரூபி!

'அஞ்சிலே  ஒன்று  பெற்றான்  அஞ்சிலே
 ஒன்றைத்  தாவி
 அஞ்சிலே  ஒன்று  ஆறு  ஆக  ஆர்  உயிர்
 காக்க  ஏகி
 அஞ்சிலே  ஒன்று  பெற்ற
 அணங்கைக்கண்டு  அயல்  ஆரூரில்
 அஞ்சிலே  ஒன்று  வைத்தான்  அவன்
 நம்மை  அகித்துக்  காப்பான்'
                                         -- என்பது  கம்பர்  பாடல்.
     இதன்  பொருள் :  பஞ்ச  பூதங்களில்  ஒன்றான  வாயுவின்  புத்திரன்  அனுமன்.  இவன்  நீரைத்  ( கடல் )  தாண்டினான்.  ஆகாய  மார்க்கமாக  இலங்கைக்குச்  சென்றான்.  பூமி  பெற்றெடுத்த  சீதையைக்  கண்டான்.  இலங்கைக்கு  நெருப்பு  வைத்தான்  --  என்கிறது  இந்த  கம்பராமாயணப்  பஞ்சபூத  ஸ்வரூபியாகக்  காட்டுகிறது.
-- தினமலர்.  பக்திமலர்.  டிசம்பர்  18,  2014. 

Saturday, April 15, 2017

அணுக்கழிவு

அணுக்கழிவா...  அதிசய  ஆராய்ச்சியா!?  மர்மம்  விதைக்கும்  நியூட் ரினோ.
     அடுத்த  சில  ஆண்டுகளில்  தமிழகத்தை  அலறவைக்கப்போகிற  சொல்... 'நியூட்ரினோ'!
     1,450  கோடி  ரூபாய்  செலவிலான நியூட்ரினோ ஆய்வு  மையம்  தேனி  அருகே  தேவாரம்  மலைப்பகுதியில்  அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  நிலையில்,  இந்தத்  திட்டம்  தங்களுக்கு  நன்மையானதா,  தீமையானதா  என்பது  யாருக்கும்  தெரியவில்லை.  பலர்  அஞ்சுகின்றனர்;  சிலர்  நன்மை  நடக்கும்  என்கின்றனர்.  ஆனால்,  யாருக்கும்  நியூட்ரினோ திட்டம்  என்பது  என்ன  என்பதுகூட  தெரியவில்லை.  தெரிந்தது  எல்லாம், 'பூமிக்குள்ள  பெருசா  குகை  தோண்டி  எதையோ  ஆராய்ச்சி  செய்யப்  போறாங்க'  என்பது  மட்டும்தான்.
நியூட்ரினோ'  திட்டம்  என்றால்  என்ன?
     "நியூட்ரினோ  என்பது  சூரியனில்  இருந்தும்,  இந்தப்  பேரண்டத்தின்  மற்ற  விண்மீன்களில்  இருந்தும்  வெளிப்படும்  துகள்.  இது  மிக, மிக  நுண்ணியது.  ஒரு  மில்லிகிராம்  எடையில்  பல  கோடி,  கோடி  நியூட்ரினோ  துகள்கள்  இருக்கும்.  மனிதன்  இதுவரை  கண்டறிந்த  பொருள்களிலேயே  எடை  குறைந்தது  இதுதான்.  இந்த  நியூட்ரினோ  துகள்  கிட்டத்தட்ட  ஒளியின்  வேகத்தில்  பயணிக்கக்  கூடியது.  தன்  எதிரில்  உள்ள  எந்தப்  பொருளையும்  ஊடுருவிச்  செல்லக்கூடியது.  இப்போது  இதை  வாசித்துக்கொண்டிருக்கும்  இந்தக்  கணத்தில்கூட ,  பல்லாயிரம்  கோடி  நியூட்ரினோ  துகள்கள்  உங்களை  ஊடுருவிச்  சென்றுகொண்டிருக்கும்.  பூமியின்  இந்தப்  பக்கத்தில்  இருந்து  அந்தப்  பக்கம்  ஊடுருவி  சென்று  அண்ட  சராசரத்தில்  கலந்துவிடுகின்றன.
     பொதுவாக  ஒரு  பொருளை  ஆராய்ச்சி  செய்ய  வேண்டும்  என்றால்,  அது  மற்ற  பொருள்களுடன்  எப்படி  வினை  புரிகிறது  என்பதை  வைத்தே  அந்த  ஆய்வு  செய்யப்படும்.  ஆனால்,  நியூட்ரினோ  என்பது  வேறு  எந்தப்  பொருளுடனும்  வினை  புரியாத,  மின்காந்த  சக்தியற்ற  ஒரு  துகள்.
ஏன்  தேனி?
     தேனி,  தேவாரம்  அருகே  உள்ள  பொட்டிபுரம்  கிராம  எல்லையில்  உள்ள  மலைப்பகுதிதான்  ஆய்வகம்  அமையவிருக்கும்  இடம்.  இதை  India -- based  Neutrino  Observatory ( INO ) என்கிறார்கள்.  சுருக்கமாக,  ஐ.என்.ஓ.  இப்போது  பொட்டிபுரத்தில்  ஐ.என்.ஓ.  செயல்படுத்தப்படும்  இடத்தைச்  சுற்றி  சுமார்  ஐந்து  கி.மீ.,  சுற்றளவுக்கு  கம்பி  வேலிகள்  போடப்பட்டுள்ளன.
      இங்கு  அமைக்கப்படும்  ஐ.என்.ஓ.  ஆய்வகம்  என்பது,  உலகளவில்  நியூட்ரினோ  ஆய்வின்  ஓர்  அங்கம்.  மற்ற  நாடுகளின்  ஆய்வகங்களிலிருந்து  நியூட்ரினோ  இங்கு  அனுப்பப்பட்டு,  இங்கிருந்து  அங்கு  அனுப்பப்பட்டு  ஆய்வுகள்  நடத்தப்படும்.
      தற்போது  நியூட்ரினோ  ஆய்வு  மையம்  அமைய  உள்ள  இடத்தைச்  சுற்றி  10க்கும்  மேற்பட்ட  அனைகள்  உள்ளன.  இந்த  நிலையில்  சுமார்  2.5  கி.மீ.  ஆழத்துக்கு  பூமிக்குள்  சுரங்கம்  தோண்டும்போது  ஏராளமான  வெடிமருந்துகளை  வெடிக்கச்  செய்து  பாறைகளைத்  தகர்க்க  வேண்டும்.  அது  அனைகளுக்கும்,  மலைகளுக்கும்,  காடுகளுக்கும்,  உயிரினங்களுக்கும்  நிச்சயம்  கடும்  பாதிப்பை  ஏற்படுத்தும்.
     "ஐ.என்.ஓ.  ஆய்வகத்தில்  அணு  உலைக்  கழிவுகளைக்  கொட்டுவது  என்பது  சாத்தியமே  இல்லாதது.  காஸ்மிக்  கதிர்களை  வரவிடாமல்  தடுத்து  நியூட்ரினோவைப்  பற்றி    ஆய்வு  செய்யத்தான்  பூமியின்  அடியாழத்துக்குச்  செல்கிறொம்.  அப்படி  இருக்கும்போது,  கதிர்வீச்சை  உமிழக்கூடிய  அணுக்கழிவை  எப்படி  அதற்குள்  கொட்ட  முடியும்?  அதிகம்  வேண்டாம் ... ஒரே  ஒரு  சாக்கு  மூட்டை  அளவு  அணுக்  கழிவைக்  கட்டி  அந்தச்  சுரங்கத்தில்  போட்டுவிட்டால்கூட  நியூட்ரினோ  ஆய்வை  நடத்தவே  முடியாது.  10  ஆயிரம்  வாட்ஸ்  மின்விளக்கின்  முன்பு  ஒரு  மெழுகுவர்த்தியைப்  பார்க்க  முடியாது  இல்லையா... அதுபோல"  என்று  மறுக்கிரார்  த.வி. வெங்கடேஸ்வரன்.
      கண்ணுக்குத்  தெரியாத  நியூட்ரினோவைக்  கண்டறிய  பல்லாயிரம்  கோடியை  ஒதுக்கும்  இந்திய  அரசு,  கண்ணுக்குத்  தெரியும்  மனிதக்  கழிவுகளை  மனிதர்களே  அள்ளும்  கேவலத்தை  ஒழிக்க  எத்தனை  ஆயிரம்  கோடியை  ஒதுக்கியது?  அதற்கு  ஒரு  கருவி  செய்ய  ஆய்வகத்தை  அமைத்தது?  இரண்டையும்  நேருக்குநேர்  வைப்பது  பொருத்தமற்ர  ஒப்பீடு  என்று  சொல்ல  முடியாது.  அடிப்படை  வசதிகள்கூட  நிறைவேறாத  தெருப்  புழுதிகளில்,  சாக்கடை  ஓரங்களில்  தலைமுறை  தலைமுறையாக  வாழ்கிற  மக்களைக்கொண்ட  இந்தியா  போன்ற  ஒரு  நாடு  எதற்கு  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்  என்ற  கேள்விதான்  இதற்கான  அடிப்படை.
--  பாரதி  தம்பி .  ( விகடன்  பார்வை ).
-- ஆனந்த விகடன்.  21-5-2014.    

Friday, April 14, 2017

குளிகை

 குளிகை  எனப்படும்  நேரத்தில்  அசுபகாரியங்களைச்  செய்யக்கூடாது.  காரணம்  குளிகை  நேரத்தில்  எதைச்  செய்தாலும்  அதை  மீண்டும்  மீண்டும்  செய்யும்படி  ஆகுமாம்.  எனவே  அசுபமானவற்றைத்  தவிர்ப்பதே  நன்மை  தரும்.
வார  சூலை
     சூலம்  என்பது  குறிப்பிட்ட  திசையில்  குறிப்பிட்ட  நேரத்தில்  பயணம்  செய்தல்  ஆகாது  என்பதைக்  குறிக்கிறது.  அதாவது  பஞ்சாங்கத்தில்  உதய  நாழிகைக்குப்  பிறகு  இத்தனை  நாழிகை  சூலம்  என்று  குறிப்பிட்டிருப்பார்கள்.  அப்படி  குறிப்பிட்ட  நாழிகைக்குப்  பிறகு  வரும்  4  நாழிகையே  சூலம்.  இதனை  விஷக்காலம்  என்பர்.  இங்கு  ஒரு  நாழிகை  என்பது  24  நிமிடங்கள்.  இதைப்  பார்த்து  சூரிய உதய நாழிகை  முதல்  குறிப்பிட்ட  நாழிகை  வரையுள்ள  நேரத்தைக்  கணக்கிட்டு  பிறகு  வரும்  1  மணி  நேரம்  36  நிமிடத்தைத்  தவிர்த்துவிட்டால்  யாவும்  சுபம்.
     நாம்  எவ்வளவுதான்  நாள்,  நட்சத்திரம்  பார்த்து  முக்கிய  வேலையாகக்  கிளம்பினாலும்  இந்த  நேரத்தைக்  கணக்கிட்டுச்  சென்றால்  தடைகளின்றி  வேலைகள்  நடக்கும்  என்று  நம்  முன்னோர்கள்  அறிவுறுத்தப்பட்டும்,  நம்பப்பட்டும்  வருகிறது.
--  ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி.  அகிலாண்டேஸ்வரி ஐயர்.  ( ஜோதிடம்  தெளிவோம் ). பெண் இன்று.
--  ' தி  இந்து'  ஞாயிறு,  டிசம்பர்  28,  2014.  

Thursday, April 13, 2017

யோகங்கள்

  மொத்தம்  27  யோகங்கள்  இருக்கின்றன.  அவை  முறையே :  விஷ்கம்பம்,  ப்ரீதி,  ஆயுஷ்யமான்,  சவுபாக்கியம்,  சோபனம்,  அதிகண்டம்,  சுகர்மம்,  திரிதி,  சூலம்,  கண்டம்,  விருத்தி,  துருவம்,  வியாகதம்,  ஹர்ஷணம்,  வஜ்ஜிரம்,  சித்தி,  வியதி,  பாதம்,  வரியான்,  ப்ரீதம்,  சிவம்  சித்தம்,  சாத்தியம்,  சுபம்,  சுப்பிமம்,  பிராம்யம்,  ஐந்திரம்,  வைதிருதி  என்பனவாம்.
      ப்ரீதி,  ஆயுஷ்யமான்,  சோபனம், சுகர்மம்,  விருத்தி,  வஜ்ஜிரம்,  சித்தி,  வரியான்,  சிவம் சித்தம், சாத்தியம்,  சுப்பிரமம், பிராம்யம்,   ஐந்திரம்  ஆகிய  இந்த  யோகங்கள்  யாவும்  நன்மை  தருவன.  
      மேலும்  அன்றாடம்  பஞ்சாங்கப்படி  உள்ள  சித்த,  அமிர்த  யோகங்கள்  நன்மை  தருவன.
      தவிர  தினசரி  நாம்  கடைபிடிக்கிற,  பார்க்கிற  யோகங்களான  சித்த  மற்றும்  அமிர்தயோகங்கள்  யாவும்  நன்மை  தரக்கூடியன.  மரண யோகங்கத்தைத்  தவிர்த்துவிடல்  நன்று.  இந்த  நேரத்தில்  சுபங்களைத்  தவிர்ப்பதும்  நன்று.
-- ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி.  அகிலாண்டேஸ்வரி ஐயர்.  ( ஜோதிடம்  தெளிவோம் ). பெண் இன்று.
--  ' தி  இந்து'  ஞாயிறு,  டிசம்பர்  28,  2014. 

Wednesday, April 12, 2017

ராகு காலம்.

ராகு  காலத்தில்  முதல்  1  மணி  நேரம்  கழித்து  கடைசியில்  வருகிற  அரை  மணி  நேரம் 'அமிர்தராகு' காலம்.  இந்த  நேரத்தில்  ஏதாவது  செய்தலும்  நன்மையே  தரும்  என்பார்கள்.  நன்மைகள்  பெருகி  வரும்.
     சுவர்ணபானு  என்ற  அரக்கன்  தேவர்  வேடம்  பூண்டு,  திருமாலின்  கையில்  ஒரு  துளி  அமிர்தம்  வாங்கினான்.  பிறகு  சூரிய,  சந்திரர்களால்  சுட்டிக்காட்டப்பட்டு  மோகினி  அவதாரம்  கொண்ட  திருமாலின்  கையில்  அகப்பையால்  தலை  துண்டாடப்பட்டு  தலையும்  உடம்பும்  ராகு,  கேதுவாக  மாறியதாகப்  புராணங்கள்  சொல்கின்றன.  அந்த  ஒரு  துளி  அமிர்தத்தைச்  சுவைத்த  காரணத்தால்  ராகு காலத்தின்  கடைசி  அரை  மணி  நேரம்  நன்மை  பயக்கும்.  அதித்தான்  'அமிர்த ராகு காலம்'  என்பார்கள்.
     மகரத்தில்  ராகுவும்,  கடகத்தில்  கேதுவும்  இருக்க  பிறந்தவர்கள்  தேவபாஷை  எனப்படும்  சம்ஸ்கிருதம்  முதலிய  மொழிகளில்  தேர்ச்சிப்  பெற்று  பல  மோழிகளைப்  பேச  வல்லவர்களாக  கருதப்படுவார்கள்.
--  ஜோதிட ரத்னா மன்னை ஸ்ரீமதி வி.  அகிலாண்டேஸ்வரி ஐயர்.  ( ஜோதிடம்  தெளிவோம் ). பெண் இன்று.
--  ' தி  இந்து'  ஞாயிறு,  டிசம்பர்  28,  2014.  

Tuesday, April 11, 2017

நீதிபதி -- வக்கீல்!

"நீதிமன்றங்களில் நீதிபதிகள்  கிண்டல்  செய்தால்... வக்கீல்கள்  பதிலடி  கொடுப்பது  உண்டா?"
     "பெரும்பாலும்  பொறுத்துக் கொள்வார்கள்.  ஏனெனில்,  வழக்கு  வெற்றியடைய  வேண்டுமே!  ஆனால், பிரிட்டிஷ்  ஆட்சிக் காலத்தில்  எர்ட்லி  நார்ட்டன்  என்கிற  பிரபல  வழக்கறிஞர்  துணிச்சலானவர்.  ஒரு  ( ஆங்கிலேய )  நீதிபதிக்கு,  அவரைக் கண்டாலே  பிடிக்காது.  ஒரு  வழக்கில்  அவர்  வலுவான  வாதங்களை  அடுக்கிக்கொண்டு  இருந்தபோது  அந்த  நீதிபதி  கிண்டலாக, 'மிஸ்டர்  நார்ட்டன்... உங்கள்  வாதங்களில்  சாரமே  இல்லை.  அவை  என்  ஒரு  காது  வழியாக  நுழைந்து  இன்னொரு  காது  வழியாக  வெளியேறிக்  கொண்டிருக்கின்றன  என்றார்.  நார்ட்டன்  அமைதியாக, 'இரு  காதுகளுக்கு  இடையில்  ஒன்றும்  இல்லாவிட்டால்  அப்படித்தான்  நேரும்'  என்றதும்  நீதிமன்றத்தில்  பலத்த  சிரிப்பு!"
-- அ.ஷண்முகசுந்தரம்,  பெங்களூரு.
"சமீபத்தில்  படித்ததில்  ரசித்தது,  சிந்திக்கவைத்தது?"
     "யாருக்காவது  குழி  தோண்டவும்,  அவர்கள்  மீது  மண்ணைப்  போடவும்  விரும்பினால்,  அதை  விதைகளுக்குச்  செய்யவும்!"
-- குணசேகரன்,  புவனகிரி.
 (  நானே  கேள்வி... நானே  பதில்! )  பகுதியில்.
-- ஆனந்த விகடன்.  21-5-2014.    

Monday, April 10, 2017

பொது அறிவு

*   ராமாயணத்தில்  ராமர்  இறுதியில்  பிரம்மாஸ்திரம்  ஆயுதத்தால்  ராவணனை  வீழ்த்தினார்.
*   ஆங்கிலேயர்கள்  முதன்  முதலில்  கொல்கத்தாவில், 1672-ல்  கோர்ட்டை  உருவாக்கினார்கள்.
*   இந்தியா  முதன் முதலாக  ஒலிம்பிக்கில்1924 -ல் ( பாரீஸ்  ஒலிம்பிக் )  பங்கேற்றது.
*   லட்சத்தீவுக்  கூட்டத்தில்,  மினிக்காய்  தீவை  கடற்பயணி  மார்க்கோபோலோ  'பெண்  தீவு'  என்று  குறிப்பிட்டார்.
*   டீஸ்டா  ஆறு  பாயும்  மாநிலம்  சிக்கிம்.
*   இந்தியாவில்  உருவாகிய  முதல்  ஆண்கள்  பாப்  பாடகர்  குழுவின்  பெயர் --  தி  பேண்ட்  ஆப்  பாய்ஸ்.
*   குர்முகி  கதை  பஞ்சாபி  மொழியில்  எழுதப்பட்டது.
--  தினத் தந்தி.  சிறுவர்  தங்கமலர்.  இணைப்பு  . 26-12-2014.
-- -- இதழ் உதவி : P.செல்வேந்திரன்,  உரிமை . சாரல்  டெக்ஸ்டைல்ஸ் ,  திருநள்ளாறு. 

Sunday, April 9, 2017

தகவல் களஞ்சியம்

*   உலகில்  அதிக  அளவில்  வெங்காயம்  விளையும்  நாடு  சீனா.
*   கேழ்வரகின்  அறிவியல்  பெயர்  எல்லு  சீன்  குரோகனா.
*   இந்திய  தேசிய  காங்கிரஸை  ஆரம்பித்தவர்  ஆலன்  ஆக்டேவியஸ்  ஹியூம்.
*   தஞ்சை  பெரியகோவில்  ராஜராஜ  சோழன்  காலத்தில்  ராஜ  ராஜேஸ்வரம்  என்றும்,  மராட்டியர்கள்  காலத்தில்
    பிரகதீஸ்வரம்  என்றும்  அழைக்கப்பட்டது.
*  புளுட்டோ  கிரகம்  தன்னைத்தானே  சுற்றிக்  கொள்ள  6  நாட்களையும்,  சூரியனைச்  சுற்றி  வர  248  ஆண்டுகளையும்
    எடுத்துக்  கொள்கிறது.
*  உலகின்  முதல்  கண்  வங்கி  1944-ல்  நியூயார்க்கில்  தொடங்கப்பட்டது.
-- தொகுப்பு :  எஸ். நடராஜன்,  வேப்பம்பட்டு.
--  தினத் தந்தி.  சிறுவர்  தங்கமலர்.  இணைப்பு  . 26-12-2014.
-- இதழ் உதவி : P.செல்வேந்திரன்,  உரிமை . சாரல்  டெக்ஸ்டைல்ஸ் ,  திருநள்ளாறு.

Saturday, April 8, 2017

நினைவில் வையுங்கள்!

*   மகாத்மா  காந்தி  சிறையில்  இருந்த  நாட்கள்  2338.
*   ஜவஹர்லால்  நேரு  சிரையில்  இருந்து  மகள்  இந்திராவிற்கு  எழுதிய  கடிதங்கள்  30.
*   இன்சுலீனை  கண்டறிந்து  அறிமுகம்  செய்தவர்கள்  கனடாவை  சேர்ந்த  பிரடெரிக்  பாண்டிங்க்.  சார்ல்ஸ்  எச்.பெஸ்ட்.
*   ஏ.கே. ரக  துப்பாக்கியை  உருவாக்கிய  நாடு  ரஷியா.
*   நம்  நாட்டின்  மீது  17  முறை  படையெடுத்த  மன்னர்  கஜினி  முகமது.
*   ஒருநாள்  கிரிக்கெட்  போட்டியில்  அதிக ரன்கள் (264  ரன்கள் )  எடுத்து  உலக  சாதனை  நிகழ்த்திய  இந்திய  வீரர்  ரோஹித்
     சர்மா.
-- தொகுப்பு :  கே.இளஞ்செழியன்,  குன்னூர்.
-- தினத் தந்தி.  சிறுவர்  தங்கமலர்.  இணைப்பு  . -- இதழ் உதவி : P.செல்வேந்திரன், உரிமை . சாரல்  டெக்ஸ்டைல்ஸ ,  திருநள்ளாறு. 

Friday, April 7, 2017

மின்சார கார்கள்

 இந்தியாவில்  மின்சார  கார்கள்  இன்று  வரை  அதிகம்  பிரபலம்  அடையமுடியாததற்கு  காரணம்  பேட்டரி  சார்ஜ்  என்னும்  தடங்கள் தான்.  கார்  பேட்டரியை  மொபைல்  மாதிரி  நினைத்த  இடத்தில்  எல்லாம்  சார்ஜ்  போட  முடியாது.  அதற்கென்று  ஸ்பெஷல்  பிளக்  பாயின்ட்  வேண்டும்.  இல்லையென்றால்  எலக்ட்ரிக்  கார்  வெறும்  ஷோகேஸ்  பொருள்  தான்.  ஒரு  முறை  சார்ஜ்  செய்தால்  100  முதல்  150  கி.மீ  வரை  தான்  இந்தக்  கார்  செல்லும்  என்பதால்  அடிக்கொரு  முறை  சார்ஜ்  செய்யவேண்டியிருக்கும்.  இந்த  குறையை  போக்கும்  வகையில்  SEEO  என்னும்  அமெரிக்க  கம்பெனி  ஔது  வகை  பேடரிகளை  அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த  பேட்டரியை  நீங்கள்  ஒரு  தடவை  சார்ஜ்  செய்தால்  350  முதல்  400  கிலோமீட்டர்  வரை  செல்லுமாம்.  சென்ற  வாரம்  இதை  டெமோ  காண்பித்து  அசத்தி  விட்டனர்.  இந்த  பேட்டரியின்  விலை  சாதாரண  கார்  பேட்டரியை  விட  50  சதவீதம்  குறைவு  என்பதால்,  ஒன்றுக்கு  இரணடாக  காரில்  பொருத்தி  700  கிலோமீட்டர்  லாங் டிரைவை  சிங்கிள்  சார்ஜில்  மேற்கொள்ளலாம்.  பலருக்கும்  பயனளிக்கும்  கண்டுபிடிப்புதான்  இது.
--  ரவி  நாகராஜன்.  (  டெக்  மார்க்கெட் ).  சண்டே  ஸ்பெஷல் .
-- தினமலர்  திருச்சி  28-12-2014.  

Thursday, April 6, 2017

'Gecko'

விண்வெளிக்கு  குப்பை  லாரி  விட  முடிவு  செய்திருக்கிறது  நாசா  விண்வெளி  ஆராய்ச்சி  நிறுவனம்.  அட !  நிஜமாதாங்க. அண்டவெளியில்  பல  விண்கலங்கள்  மற்றும்  சாட்டிலைட்கள்  சுற்றிவருவது  நாம்  அறிந்ததே.  இதில்  பல  சாட்டிலைட்கள்  தங்கள்  ஆயுட்காலம்  முடிந்தும்  அங்கே  சுற்றிக்கொண்டிருக்கும்  விஷயம்  நம்மில்  பலர்  அறியாதது.  ஆராய்ச்சி  நிறுவனங்களைப்  பொறுத்த  வரையில்  இவை  ஒன்றுக்கும்  ஆகாத  குப்பைகள்.  இவை  பூமியின்  புவி  ஈர்ப்பு  விசையினுள்  நுழைந்தாலோ,  விமானங்களில்  மோதினாலோ  அதனால்  ஏற்படும்  சேதங்கள்  மிகப்பெரிய  அளவில்  இருக்கும்.  இந்த  அபாயத்தைத்  தவிர்க்க  வான்  வெளிக்கு  ஒரு  பிரத்யேக  விண்கலத்தை  அனுப்பி  இந்த  குப்பைகளை  பூமிக்கு  எடுத்து  வரும்  முயற்சியில்  ஈடுபட்டிருந்த  நாசாவிற்கு  சமீபத்தில்  வெற்றி  லிடைத்துள்ளது.  இந்த  முறைக்கு  'Gecko'  என  பெயரிட்டிருக்கிறார்கள்  நாசா  விஞ்ஞானிகள்.  இதனால்  பூமிக்கு  வரவிருந்த  மிகப்  பெரிய  ஆபத்து  தவிர்க்கப்பட்டிருக்கிறது  என்பது   விஞ்ஞானிகளின்  கருத்து.
-- ரவி  நாகராஜன்.  (  டெக்  மார்க்கெட் ).  சண்டே  ஸ்பெஷல் .
-- தினமலர்  திருச்சி  28-12-2014.   

Wednesday, April 5, 2017

f இணைய வெளியிடையே... t

*   சுடுகாடு  தான்னு  ச்சீப்பா  நெனச்சுடாதீங்க  அங்கப்  போறதுக்காக  அவனவன்  உயிரையே  கொடுக்கறான்.
     Imwishnu@twitter.com
*   கிழிந்து  போன  கருகிப்  போன  தோசைகளில்,  அம்மாவின்  பெயர்  எழுதப்பட்டிருக்கும்...!
     Indrajithguru@twitter.com
*   சொந்தமா  வீடுவச்சிருக்காய்ங்க!  காரு  வச்சிருக்காய்ங்க!  சொந்தகாரங்களை  தூரமா  வச்சிருக்காய்ங்க!
     arunodhayam@twitter.com
*    (  ஒரு  காதல்  கதை )
     "மன்னிக்கணும்  என்  மனச  இங்க  வச்சிட்டுப்  போயிட்டேன்!"
     "நீங்க  மன்னிக்கணும்.  அது  எனக்குதான்னு  நெனச்சி  எடுத்துக்கிட்டேன்!"
      raajaacs@twitter.com
*    கூழாங்கற்களின்  தேய்மானம்  சொல்லிவிடும்  அவ்வழியே  கடந்த  ஆற்றின்  கதையை.
     ranillsa @ twitter.com
-- சண்டே  ஸ்பெஷல் .
-- தினமலர்  திருச்சி  28-12-2014. 

Tuesday, April 4, 2017

ஜோதிடமெனும் தேவ ரகசியம்

 ஒவ்வொரு  கிரகங்களும்  மனித  ரூபமாக்கப்பட்டு  அதற்கு  மனைவிகளும்,  அவற்றின்  துணைக்  கோள்கள்  மகங்களாகவும்  ஆக்கப்பட்டன்.
     "சனியின்  உபகோளான  மாந்தி ( TITAN)  சனியின்  ஒரு  துணைக்கோள்.  அது  சனியைச்  சுற்றிவரும்.  எப்போதும்  சனியுடந்தான்  இருக்கும்"  என்று,  சுற்றி  வளைத்துச்  சொல்லி  கொடுப்பட்தைவிட  'சனியின்  மகன்  மாந்தி"  என்று  ஒரே  வார்த்தையில்  ஞானிகளால்  எளிதாக  விளக்க  முடிந்திருக்கும்.
     சூரிய  மண்டலத்தில்  வெகு  தொலைவில்  இருப்பதால்  சூரியனை  சனி  மெதுவாக  சுற்றிவருகிறது  என்பதை  விளக்க, "சனியை  எமன்  அடித்ததால்  சனி  நொண்டியாகி  விட்டான்"  என்ற  ஒருவரிக்  கதை  புரியவைத்து  விடுமே!
     நமது  கிரந்தங்களில்  ஞானிகளால்  கூரப்படும்  ஒவ்வொரு  கதைகளுக்கும்,  கிரகங்களின்  கணவன்  மனைவி,  புத்திரர்கள்  போன்ற  உறவிமுறைகளுக்கும்  பின்னால்  ஒரு  அற்புதமான  விஞ்ஞான  விளக்கம்  ஒளிந்து  கிடப்பதை  தெளிவாக  விளக்க  முடியும்.
    "சந்திரனுக்கு  27  மனைவிகள்.  அவர்களில்  ரோகிணியை  அவருக்கு  மிகவும்  பிடிக்கும்"  என்ற  கதைக்குப்  பின்னால்  பூமியின்  துணைக்கோள்  சந்திரன்  ஒன்று.  மொத்தமுள்ள  நட்சத்திரக்  கூட்டங்கள்  27.  அவற்றில்  ரிஷபராசியின்  முழுனட்சத்திரமான  ரோகிணியில்  சந்திரன்  இருக்கும்போது  அவர்  பலம்  அடைவார்  என்ற  ஜோதிட  உண்மை  இருக்கிறது.
-- 'ஜோதிடக்கலை  அரசு'  ஆதித்ய  குருஜி.
-- மாலை  மலர்.  சென்னை.  வெள்ளி . 26-12-2014.  

Monday, April 3, 2017

வெள்ளை அடிக்க

வெள்ளை  அடிக்க  வண்ண  வண்ண  யோசனைகள்.
     உங்கள்  வீட்டுச்  சுவரை  வெள்ளை  அடிப்பதற்கு  ஏற்ற  மாதிரி  தயார்படுத்த  வேண்ண்டும்.
     சோப்பு  கரைத்த  தண்ணீரை  கொண்டு  சுவரில்  படிந்திருக்கும்  புகை,  எண்ணெய்க்  கறை,  திட்டு  திட்டாகப்  படிந்திருக்கும்  உணவுப்  பண்டங்களின்  கறை  போன்றவற்றை  முதலில்  துடைத்தெடுக்க  வேண்டும்.  உடைப்பு,  துவாரங்கள்,  விரிசல்  இருந்தால்  மக்கு  பூசுவது  சிறந்தது.  உடைப்பு  பெரிதாக  இருக்குமானால்  சிமெண்ட்  பூசி  அப்பகுதியைச்  சமன்படுத்தி  48  மணி  நேரம்வரை  உலரவிட  வேண்டும்.
கலவை  தயாரிப்பு :
     1  கிலோ  சுண்ணாம்புப்  பொடியில்  5  லிட்டர்  தண்ணீர்  ஊற்றி  நன்றாகக்  கலக்க  வேண்டும்.  பார்ப்பதற்கு  நீர்த்துப்போனது  போலத்  தோன்றும்.  ஆகையால்  24  மணி  நேரம்  இந்தக்  கலவையை  அசைக்காமல்  ஒரு  இடத்தில்  வைக்கவும்.
     அடுத்த  நாள்  ஒரு  சல்லாத்  துணியில்  சுண்ணாம்புக்  கலவையை  ஊற்றி  வடிகட்டி  எடுத்துக்  கொள்ளவும்.  20  கிராம்  அளவில்  ஃபெவிகாலை  எடுத்துச்  சுடு  நீரில்  கலந்து  சுண்ணாம்புக்  கலவையில்  ஊற்றவும்.  மொத்தக்  கலவையில்  3  கிராம்  இண்டிகோ  நிறத்தைக்  கரைத்தால்  சுவரில்  பூச  ஏதுவான  சுண்ணாம்புக்  கலவை  தயார்.
-- ம.சுசித்ரா. ( சொந்த வீடு ).    
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  சனி,  டிசம்பர்  20, 2014.  

Sunday, April 2, 2017கம்பிகள் அரிப்பைத் தடுக்க...

  கான்கிரீட்  அமைக்க  கம்பி  கட்டியவுடன்  அதை  அரிப்பிலிருந்து  பாதுகாப்பது  முக்கியம்.  இப்போது  கான்கிரீட்டைப்  பலப்படுத்த  பலவிதமான  கட்டுமானப்  பொருள்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அதுபோலக்  கட்டுமானக்  கம்பியில்  ஏற்படும்  அரிப்பைத்  தடுக்கவும்  பல  உபகரணங்கள்  வந்துள்ளன.  அவற்றில்  ஒன்றுதான்  ஜென்ட்ரிஃபிக்ஸ் ( zentrifix ).  நாள்பட்ட  கான்கிரீட்  கட்டுமானத்தை  பழுதுபார்க்க  இது  மிகப்  பொருத்தமான  கட்டுமானப்பொருள்.
      ஜென்ட்ரிஃபிக்ஸ்  தூள்  போன்ற  வடிவில்  கிடைக்கும்.  இதை  அப்படியே  தண்ணீருடன்  கலந்து  நன்றாகக்  கலக்க  வேண்டும்.  நன்றாகக்  கூழ்  போன்ற  நிலை  வருமாறு  கலந்துகொள்ள  வேண்டும்.  கட்டிகள்  இல்லாதவாறு  காற்றுக்  குமிழ்கள்  இல்லாதவாறு  பார்த்துக்கொள்ள  வேண்டும்.  இதெல்லாம்  கவனமாகப்  பார்த்துக்கொள்ள  வேண்டும்.  அதிகமான  நீர்  இல்லாதவாறும்,  அதேசமயம்  கெட்டியாகவும்  இருக்கக்கூடாது.
     வீட்டிற்கு  வண்ணம்  பூசுவதுபோல்  இந்தக்  கரைசலைப்  பூச  வேண்டும்.  இர்ரும்புக்  கம்பிகளின்  மேல்  அவற்றின்  மேல்  பகுதியை  மூடும்படியாக  இந்த   ஜென்ட்ரிஃபிக்ஸைப்  பூச  வேண்டும்.  இவ்வாறு  இருமுரை  அடிப்பது  அவசியம்.  கட்டுக்  கம்பிகளால்  கட்டப்பட்டு  கம்பிகள்  அடுக்கப்பட்டிருக்கும்.  கம்பிகள்  மற்றும்  கட்டுக்  கம்பிகள்மேலும்  முழுமையாக  இந்த   ஜென்ட்ரிஃபிக்ஸைப்  பூச  வேண்டும்.  இது  ஒரு  கம்பியின்  மேல்பூச்சாக  அணிவிக்க  வேண்டும்.  இதை  ஒரு  கடமையாகச்  செய்யாமல்,  இது  அரிப்பைத்  தடுப்பதற்காகச்  செய்யபடுகிறது  என்பதை  மனதில்  வைத்து  பூச  வேண்டும்.  இது  இப்போது  இந்தியாவில்  பரவலாகக்  கிடைக்கிறது.
-- குமார்.  ( சொந்த வீடு ).    
--   'தி இந்து' நாளிதழ்.  இணைப்பு.  சனி,  டிசம்பர்  27, 2014.