Saturday, January 31, 2009

'தெற்கு'.

மனித வாழ்வில் 'தெற்கு' மகத்தான பங்கு பெருகிறது. அவனுக்கு உயிரூட்டும் தென்றலும் தெற்கிலிருந்து வருகிறது;பிறவி அகற்றும் யமன் திசையும் தெற்குதான்....ஆக வாழ்வு--இறப்பு இரண்டும் தெற்கிலிருந்துதான் வருகின்றன.
பொன். பாஸ்கரமார்தாண்டன். -- தேவி தரிசனம். ( 15-02-1982).
சங்கீதம் !
சங்கீதத்தில் 'கல்பித சங்கீதம்' ,'கல்பனா சங்கீதம் ' என்று இரண்டு வகை உண்டு.
சொல்லிக் கொடுப்பதை அப்படியே பாடுவது 'கல்பித சங்கீதம்'.
அந்தந்த நேரத்திற்கு ஏற்ப உள்ளத்தில் எழும் உணர்வுக்களை வெளிப்படுத்துவது 'கல்பனா சங்கீதம்'
--குங்குமம் . 31-01- 1982.

Friday, January 30, 2009

வேண்டும்

நமக்கு என்ன வேண்டும் ?
படுத்தவுடன் உறக்கமது வருதல் வேண்டும்
பசித்தவுடன் உண்ணுகிற நிலைமை வேண்டும்
எடுத்தவுடன் படிக்கின்ற நூல்கள் வேண்டும்
இசைத் தமிழே என் செவியை அடைதல் வேண்டும்
உடுத்தவுடன் துணிமணிகள் இருத்தல் வேண்டும்
உணவாக மரக்கறியே இருக்க வேண்டும்
கொடுத்தவுடன் வாங்காத மாந்தர் வேண்டும்
குன்றாத நட்புறவு இருத்தல் வேண்டும்.
--நன்றி: தமிழப்பன்.'முகம்' இதழில் எழுதியது.

Thursday, January 29, 2009

செய்தித் துளிகள் !

கப்பலில் உள்ள திசைக் காட்டும் கருவியில் ,32 திசைகள் உள்ளன.
ரூபாய் நோட்டுக்களுக்கு மாதிரி அமைத்துக் கொடுப்பவர்கள் பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் & லார்டு கம்பெனியார்.
பறவைகளை 27 வம்சங்களாகப் பிரிக்கிறார்கள்.
பெரியவர்கள் செய்யும் சிறுபிள்ளைத் தனமான செயல்களைக் குறிப்பது 'Childish' .குழந்தைகளின் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட பெரியவர்களைக் குறிப்பது 'Childlike'
ஒரு வான சாஸ்திர அலகு என்பது சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்.
உலகிலுள்ள வளை குடாக்களில் பெரியது 'மெக்ஸிகோ' வளைகுடா. சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை உடையது அது.
ரோமாபுரியில் கி.மு.63 -ம் ஆண்டிலேயே சுருக்கெழுத்து முறை இருந்திருக்கிறது.
தேனீக்கு ஐந்து கண்கள். மூன்று சாதாரணமானவை. மற்ற இரண்டு மிகவும் நுட்பமானவை. ஆயிரக்கணக்கான 'லென்சு'களைக் கொண்டவை.பல சர்சுகளில் தேனீயின் பணியைப் பாராட்டும் வகையில் தேன் மெழுகினால் செய்யப்பட்ட மெழுகுவர்த்திகளை உபயோகிக்கிறார்கள்.

Wednesday, January 28, 2009

அரச மனு நீதி !

மாதா, பிதா, குரு, புரோகிதர், புராணிகர், வேதப்பிராமணர் ,தபசிகள், வித்வஜனர், விகடகவிகள், சுத்தவீரர் , தானாபதிகள்,தூதர்கள்,சுற்றத்தார்,பிணியாளர் வறியவர், பாலர், அடைக்கலம் புகுந்தோர், போகமாதர் என்னும் இந்தப் பதினெட்டுப் பெயர்களும் செய்த குற்றத்தைப் பாராட்டி அதற்காக அவர்களைத் தண்டிப்பது அரசர்களுக்கு மனுனீதியன்று.
--வினோத ரச மஞ்சரி. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்.

Tuesday, January 27, 2009

இராவணன் !

கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலத்தில், இராவணன் அசோகவனத்திலிருக்கையில் கும்பகர்ணன் மடிந்தான் என்ற செய்தியைச் சுகசாரணர் ஓடி வந்து சொல்லக் கேட்டுத் தன் குரலோசை வானத்தளவும் எட்டும்படி அவனது பெயரைச் சொல்லிக் கூவியழைத்து, முன்பு கைலாசக்கிரியை எடுத்த காலத்தில் அதை உமாபதியானவர் கண்டு திருவடியினால் அழுத்த அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுங்கி தான் அழுத காரணத்தால் தனக்குண்டான ராவணனென்னும் பெயர் பொருளை வெளியிட்டான்.(அழுதான் என்றபடி, ராவணம்--அழுமோசை ).
--வினோத ரச மஞ்சரி. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்.

Monday, January 26, 2009

'C Y C L O N E'

கல்லூரி மாணவி !
நல்ல கல்லூரி மாணவி என்பதற்கு ஒரு மருத்துவக் கல்லூரி ஆண்டு மலரில் வந்த விளக்கம்:
A good college girl is one who never missed the 'periods'.
'C Y C L O N E'
புயலின் உருவததைக் கற்பனை செய்து பார்த்தால், அது சுருண்டு படுத்திருக்கும் நாகம் தனது தலையை உயர்த்திச் சீறுவது போன்று இருக்கும் .புயலைக் குறிக்கும் ' C Y C L O N E' என்ற கிரேக்கச் சொல்லுக்குப் பொருளே 'சுருண்ட பாம்பு' என்பதாகும்.
பாரதிதாசன் !
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 'புரட்சி' என்ற வார்த்தையை தன் கவிதைகளில் பதினாறு முறையும், முன்னுரைகளில் நான் கு முறையும், தலைப்புகளில் மூன்று முறையும் பயன்படுத்தியிருக்கிறார்.

Sunday, January 25, 2009

'ஏழு சமுதாய பாவங்கள்' .

கொள்கை யற்ற அரசியல்
உழைப்பினால் ஏற்படாத பணச் சுமை
நாணய மற்ற வாணிபம்
நன்னடத்தை அளிக்காத கல்வி
மனச் சாட்சி யற்ற சந்துஷ்டி
சமுதாயத்துக்கு உதவாத விஞ்ஞானம்
தியாகமற்ற போலி பக்தி.
-- மகாத்மா காந்தி. 'யங் இந்தியா' - 1924.

Saturday, January 24, 2009

தாவர உணவு !

மனிதனுக்கு உதவுகின்ற மிருகங்களைப் பாருங்கள், பசு பால் தருகிறது. எருது வேலை செய்கிறது குதிரை வண்டி இழுக்கிறது. யானை மரக்கட்டைகளைத் தூக்கிச் செல்கிறது.இந்த மிருகங்கள் அனைத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவை எல்லாமே தாவர உணவை உட்கொள்பவை.மாமிசம் உண்ணும் சிங்கத்தையோ, புலி போன்ற மிருகங்களையோ மனிதன் தன் உதவிக்கு வைத்துக் கொள்வதில்லை.
-- 24 வது உலக தாவர உணவாளர் மாநாட்டில், திரு கி வா ஜகன்னாதன்.
எறும்பு.
உலர்ந்த வெள்ளரிக் காய் தோலைப் போட்டு வைத்தாலும், அடுப்புச் சாம்பலும் மஞ்சள் பொடியையும் கலந்து தூவி வைத்தாலும் அந்த இடத்தில் எறும்பு வராது.

Friday, January 23, 2009

'வணக்கம் '

'வணக்கம் ' பலவிதம்
சிவன், பிர்மா, விஷ்ணு.ஆகிய தெய்வங்களை வணங்கும்போது, சிரசிற்கு மேல் 12 அங்குலம் கைகளை உயர்த்தியும்,
மற்ற தெய்வங்களுக்கு சிரசின்மேல் கைகளைத் தூக்கிக் கூப்பியும், குருவிற்கு ,நெற்றிக்கு நேராகவும், தந்தைக்கும், அரசனுக்கும் வாய்க்கு நேராகவும்,அறனெறியாளர்களுக்கு மார்புக்கு நேராகவும், அன்னைக்கு, வயிற்றுக்கு நேராகவும் கைகளைக் கூப்பி வணங்க வேண்டும் என்பது சாஸ்திரம்.
பூணூல்.
பிராமணர்களின் தனி உரிமை அல்ல. உரியவயதில் குருவிடம் உபதேசம் பெற்று 'இரண்டாவது பிறப்பு' எய்தும் அத்தனை பேருக்கும் அது பொதுவானது.
பழமொழி !
நம்மிடையே ஒரு பழமொழி உண்டு."வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை"
உண்மையில் வாக்கு ஒத்தவனுக்கு (சொல் சரியாக அமைபவனுக்கு ) என்றும், ஆட்சி நடத்தும் அரசாங்கத்தின் போக்கோடு ஒத்துப் போகிறவனுக்கும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
-- டாக்டர் ஓளவை. நடராசன்.

Thursday, January 22, 2009

பிரதோஷம்

.

துன்பம் விலக்கும் பிரதோஷம். பிரதோஷம் என்பது தவறுகளையும் மகா பிரதோஷம் என்பது மகா ( பெரிய ) தவறுகளையும் நேர் செய்யும் காலங்கள் ஆகும் . அந்த நேரத்தில் , சிவபெருமானை வழிபட்டால் துன்பங்கள் விலகும் வளர்பிறையில் சதுர்த்தி அன்றும் , தேய்பிறையில் திரயோதசி அன்றும் மாலை 4 - 30 மணியிலிருந்து 6 - 00 மணி வரை பிரதோஷ காலமாகும் . அப்போது , சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கும் இடையே நின்று நடனமாடி தரிசனம் தருவதாக ஐதீகம் .
புத்தர் பார்வையில் ' கோபம் '
புத்தரிடம் ஒருவர், ' கோபத்தை எதனுடன் ஒப்பிடலாம் ? ' என்று கேட்டார் . அதற்கு புத்தர் , ' கோபம் என்பது தீயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை கையில் எடுத்து , அதனால் நமக்கு வேண்டாதவரை தாக்க முயற்சிப்பதைப் போன்றது . அதை கையில் பிடித்து சுட்டுக் கொள்வதின் மூலம் பாதிக்கப்படுவதும் நாமே ! ' என்றார் .
இனிமையான உணவு
இயேசுநாதரிடம் சீடர் ஒருவர், ' உலகிலேயே மிகவும் இனிமையான உணவு எது ? ' என்று கேட்டார் . அதற்கு இயேசுநாதர் , ' ஒருவன் தன் உழைப்பால் பெற்ற கூழ் அமிர்தத்திலும் மேலானது' என்று பதிலளித்தார் .
--- தினத்தந்தி . இலவச இணைப்பு .27 -05 -2008 .

Wednesday, January 21, 2009

மத்திய சிறைச்சாலை !

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் எதிரே 14 ஏக்கர் பரப்பில் 170 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது சென்னை மத்திய சிறைச்சாலை . கடந்த 1837ம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் ' மெட்ராஸ் சீர்திருத்த மையம் ' என்ற பெயரில் 14.86 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது இந்த சிறைச்சாலை . அந்தமான் சிறைக்கு கைதிகளை அனுப்புவதற்கு முன்னர் தற்காலிகமாக தங்கவைக்கப் பயன்படும் இடமாகவே இது பயன்பட்டுவந்தது .
இந்த சிறைச்சாலையின் 24 ம் எண் சிறையின் , தனி அறையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் வீர சாவர்க்கர் , மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , தற்போதைய முதல்வர் கருணாநிதி உட்பட பல தலைவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர் .
மொத்தம் 1,200 கைதிகளை அடைப்பதற்கு இந்த சிறைச்சாலையில் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன . கைதிகளுக்கு போதுமான வசதிகள் இங்கு இல்லை என்பதால் , மத்திய சிறைச்சாலையை புழலுக்கு மாற்றும் திட்டம் உருவாகி , 2006 ஆண்டு நவம்பர் 18ம் தேதி புழலுக்கு மாற்றப்பட்டது .
இவ்வளவு வரலாறு படைத்த இந்த மத்திய சிறைச்சாலை இன்று ( 21 - 01 - 2009 ) இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது .

புரட்சியின் தலைவன் !

லெனின் ( 10 - 04 - 1870 -- 21 - 01 - 1924 ) .
ரஷ்யாவில் சிம்பிர்ஸ்க் என்ற வால்கா டவுனில் , 10 -04 - 1870 -ல் இவர் பிறந்ததும் , ' விளாடிமிர் இலியச் உலைனாவ் ' என்று இவருக்குப் பெயர் வைத்தார்கள் . பின்னாளில் , லெனின் என்று அழைக்கப்பட்டார் . இவரது தகப்பனார் , ஒரு பள்ளிக்கூட இன்ஸ்பெக்டர் . தாயாருக்குச் சங்கீதம் தெரியும் . பல பாஷைகளும் தெரியும் .இவற்றையெல்லாம் அவள் தன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தாள் . அவளுக்கு லெனின் மூன்றாவது குழந்தை .
லெனின் தன் 16-வது வயதில் தகப்பனாரை இழந்தார் . அடுத்த வருஷத்தில் மற்றொரு போரிடி ! மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் , ஜாரைக் கொல்ல முயன்றதாகக் கைது செய்யப்பட்டு , தூக்கிலிடப்பட்டார் .
ஜாரின் அடக்குமுறை தாண்டவமாடியது . மாணவர் சங்கங்கள் கலைக்கப்பட்டு , பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் .இதர மாணவர்கள் இதைக் கண்டித்தனர் . தடை செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டதாக ' காஜான் சர்வ கலாசாலை ' யிலிருந்து லெனின் வெளியேற்றப்பட்டு , ஒரு கிராமத்தில் அடைக்கப்பட்டார் . கிராமத்திலிருந்தபடியே , கல்லூரி செல்லாமல் படித்த லெனின் , சட்டப் பரீட்சை எழுதி , முதல் தரமாகத் தேறினார் .
கொடுங்கோலாட்சியை வீழ்த்த பயங்கர இயக்கம் உதவாது : மக்கள் இயக்கம் வேண்டும் என்று ரஷ்யாவைப் புரட்சிக்குத் தயாராக்கினார் லெனின் .

அபிஷேகமும் , பலன்களும் .

தெய்வங்களுக்கு நாம் என்னென்ன பொருட்களால் அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் . அந்த வகையில் சில அபிஷேகப்பொருட்களும் , அவற்றின் பயன்களும் :
மஞ்சள் பொடி -- அழகும் , வசீகரமும் கிடைக்கும் .
திருமஞ்சனப் பொடி -- விவசாயம் செழிக்கும் .
தயிர் ................................-- திருமணம் , சுகமான வாழ்வு கிடைக்கும் .
பால் , விபூதி...............-- தீர்க்க ஆயுள் கிடைக்கும் .
பஞ்சாமிதம் .................-- தொழில் விருத்தியாகும் .
மலர்கள் ........................--- குழந்தை பாக்கியம் பிட்டும் .
குங்குமம் .....................--- காரிய சித்தி கிடைக்கும் .
--- தினத்தந்தி . ஆன்மிக மலர் . 25 - 11 -2008 .

Tuesday, January 20, 2009

காண வேண்டியவை .

விழித்தவுடன் காண வேண்டியவை .
காலையில் தூங்கி எழுந்தவுடன் முதலில் பார்க்க வேண்டியவை :
கோயில் கோபுரம் , சிவலிங்கம் , தேவாலயம் , தெய்வப் படங்கள் , மலர்ந்த பூக்கள் , மேகம் சூழ்ந்த மலைகள் , கடல் , சூரியன் , பொன் , நவரத்தினங்கள் , தீபம் , கண்ணாடி , தனது வலது உள்ளங்கை , மனைவி மற்றும் குழந்தைகள்
--- தினத்தந்தி .ஆன்மிக மலர் .25 -11 -2008 .

Monday, January 19, 2009

இசைமணி !

சீர்காழி கோவிந்தராஜன் ( 19 - 01 - 1933 -- 24 - 03 - 1988 ) .
திருவையாறு ஆராதனை உற்சவ கமிட்டிக்கு நான்காண்டுகள் காரியதரிசியாக இருந்திருக்கிறார் சீர்காழி . வீணை பிச்சுமணியுடன் இணைந்து , உற்சவத்தை அமோகமாக நடத்தியிருக்கிறார் .
1956 - ல் சுலோசனாவின் கரம் பிடித்தார் சீர்காழி . சிஷ்யரின் திருமண வரவேற்பில் அவரது குருநாதர் , புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் என். சுவானிநாதப்பிள்ளை புல்லாங்குழல் கச்சேரி !
" என் குருநாதரின் எதிரில் நான் நாற்காலி போட்டு உட்கார்ந்துகிட்டதே இல்லை . அன்னிக்கு வரவேற்பு நிகழ்ச்சியின் போதும் நான் நின்னுக்கிட்டேதான் இருந்தேன் . குருநாதர் இதைக் கவனிச்சுட்டார் . மேடையில் வாசிச்சுக்கிட்டிருந்தபடியே என்னை உட்காரச் சொல்லிச் சைகை காட்டினார் . அப்பவும் எனக்கு மனசே கேட்கலே . ஆனா , குருநாதரோ பக்கத்திலிருந்தவர் மூலமா சொல்லியனுப்பி என்னை உட்கார வைத்தார் " என்று சீர்காழி சொன்னபோது , அந்தக் காலத்தில் நிலவிய உண்மையான குரு- சிஷ்ய மரியாதை பளிச்சென்று வெளிப்பட்டது .
-- வீயெஸ்வி

செய்தித் துளி !

--- திருக்குறள் மதுரையில் அரங்கேற்றப்பட்டது .
--- கம்பராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது .
--- கந்தபுராணம் காஞ்சியில் அரங்கேற்றப்பட்டது .
--- பெரியபுராணம் சிதம்பரத்தில் அரங்கேற்றப்பட்டது .
--- கந்த சஷ்டி கவசம் சென்னிமலையில் அரங்கேற்றப்பட்டது

Sunday, January 18, 2009

நான் ஒரு அகல்விளக்கு !

அகல் விளக்கை பற்றி கிருஷ்ண பக்தை மீராபாய் சொல்லும்போது ,
" கிருஷ்ணா ! என்னுடைய தேகம் ஒரு அகல் விளக்கு . உன் மேல் நான் வைத்திருக்கும் காதலே நெய் . என்னிடைய அத்மாவே திரி . இந்த விளக்கின் ஒளி நீயே .
மீரா என்ற திரியானது காதலால் கசிந்து , எரிந்து ஒளிப்பிழம்பாகி , கண்ணன் என்ற ஒளியில் , கலந்து ஒளிமயமாய் ஆகிறாள் என்பது இதன் அர்த்தம் .
-- குமுதம் சினேகிதி / அக்டோபர் . 1 , 2008 .

Saturday, January 17, 2009

செய்தித் துளிகள் !

--சோழர் காலம் வரை தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை .
--1944 , 1952 , 1990 , ஆகிய வருடங்களில் புரட்டாசியிலேயே ( 31-ம் தேதி ) தீபாவளி வந்தது .
--பட்டாசு என்ற சொல்லின் மூலம் ' டபாஸ் ' என்ற சமஸ்கிருத சொல்லாகும் .
--1946 -ம் வருடத்திலிருந்துதான் சிவகாசியில் கேப் வெடிகள் தயாரிக்கப்படுகின்றது .
--ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டு வரை பட்டாசு வெடிக்கும் உரிமை ராணுவத்தினருக்கு மட்டும்தான் இருந்தது .
-- தராசின் இரு தட்டுக்களும் சமநிலையில் இருபது போல ஐப்பசி மாதத்தில் மட்டும் இரவும் பகலும் சம அளவில்
இருப்பதால் , அந்த மாதத்திற்கு துலா ( தராசு ) மாதம் என்ற பெயரும் உண்டு .
-- சங்க காலம் முதல் பாரதி காலம் வரை தீபாவளி பற்றிய பாடல்கள் எதுவும் தமிழில் இல்லை .
-- மைசூர்பாகு என்ற சொற்றொடரில் வரும் ' மைசூர் ' என்பது பெர்சியன் மொழியில் ' மிஸ்ரி ' எனக் கற்கண்டைக்
குறிக்கும் சொல்லின் திரிபாகும் .
--தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் நிறையப் பேர் வசிப்பதால் அங்கு தீபாவளி ஒரு தேசியப் பண்டிகையாகவே
அறிவிக்கப்பட்டுள்ளது .
-- சமண மதத்தின் புது வருடம் தொடங்குவது தீபாவளித் திருநாளில் தான் . மஹாவீரர் இந்த நாளில்தான் முக்தி
அடைந்தார் .
-- ஸ்கந்த புராணத்தின்படி பார்வதி தவம் செய்த நாள் தீபாவளியன்றுதான் . அதனால் , தன் உடலில் பாதி கொடுத்து
அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன் .
-- குரு ஹர்கோவிந்த் சிங் , ஜஹாங்கிரின் சிறையிலிருந்து திரும்பி வந்தது தீபாவளித் திருநாளில் . அதனால் , புனிதமான
தாக இந்த தினத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள் .
-- நரகாசுரன் ஆண்ட நகரம் எங்கேயிருக்கிறது தெரியுமா ? ' பிராயாகி யோடிஷ்ஹபுர 'என்ற பெயருள்ள அந்த நகரம்
இன்றைய அஸ்ஸாம் தான் .
--குமுதம் சினேகிதி / அக்டோபர் . 1 , 2008 .

Friday, January 16, 2009

சாட்சி இயற்கை !

மனிதன் எந்தக் காரியத்தையும் இரகசியமாகச் செய்யமுடியாது. சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, ஆகாயம், பூமி, நீர், இதயம், யாமம், இரவு,பகல், தர்மம், நீதி, இறைவன் ஆகிய பதின்மூன்று சாட்சிகள் சதா மனிதனின் நடத்தையைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.
உடல் அழியும்போது எல்லாம் முடிந்துவிட்டதாக மனிதன் நினைக்கிறான்.
ஆனால் மாபெரும் யாத்திரையில் மரணம் என்பது ஒரு நிலை மாற்றம் மட்டுமே !
--சாங்கிய யோகம்.

Thursday, January 15, 2009

அவதாரங்கள் !

கி.பி.முதல் நூற்றாண்டில் தமிழகத்த்தில் அவதரித்தித்தவர் திருவள்ளுவர்.
மூன்றாம் நூற்றாண்டில்................................................................. --மாணிக்கவாசகர்.
ஏழாம் ........................................................................................................--அப்பர்,ஞானசம்பந்தர்.
ஒன்பதாம்.................................................................................................--சுந்திரமூர்த்தி நாயனார்.
பத்தாம்.......................................................................................................--பட்டினத்தடிகள்.
பதினோராம் ............................................................................................--சேக்கிழாரும், பிற்பகுதியில் கம்பரும்.
பனிரெண்டாம்.........................................................................................--மெய்கண்டசிவம்.
பதிமூன்றாம்.............................................................................................--உமாபதி சிவம்.
பதினைந்தாம்..........................................................................................--அருணகிரி நாதர்.
பதினேழாம்...............................................................................................--தாயுமானவர்.
பத்தொன்பதாம் .....ராமலிங்க அடிகள், தியாகபிரும்மம், கோபாலகிருஷ்ண பாரதியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஆறுமுக நாவலர்,மகாவித்வான் வைத்திய நாதய்யர்.
இருபதாம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,--பாம்பன் சுவாமிகள்.

Wednesday, January 14, 2009

'அபாப்டோசிஸ்'

நம் முதுமையை நிர்ணயிக்கும் ' அபாப்டோசிஸ் ' என்ற என்சைம் எனும் புரதப்பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 -ம் தேதி கண்டுபிடித்தனர் . என்சைம் ( நொதி அல்லது நொதியம் ) என்னும் புரதப் பொருளானது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாகச் செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கியாகும் .
உடலில் உள்ள எல்லா செல்களின் இயக்கத்திற்கும் இது அவசிய தேவையாகும் . என்சைம்கள் இல்லாவிட்டால் , சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு மெதுவாகவே நடக்கும் . மெதுவான செயல்பாட்டால் மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ இயலாது .
நம் உடலில் 1000க்கும் மேலான வெவ்வேறு வகை என்சைம்கள் உருவாகி செயல்படுகின்றன . இன்று வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 4 ஆயிரம் உயிர் - வேதியியல் வினைகளுக்கு என்சைம்கள் அடிப்படையாக உள்ளன . செடி கொடிகளில் ஒளிச்சேர்க்கை நிகழ்வது போல மனிதர்களின் உடலில் உணவு செரிப்பது , மூளை இயங்குவது , இதயம் துடிப்பது , மூச்சு விடுவது ஆகிய அனைத்துக்குமே என்சைம்கள் இன்றியமையாதவையாகும் .
சர்க்கரைக் கரைசலை ஈஸ்ட் என்னும் நுண்ணுயிரியை கொண்டு லூயி பாஸ்ச்சர் என்பவர் நொதிக்கவைத்து ஆல்கஹாலாக மாற்றினார் . ஆல்கஹால் நொதித்ததற்குக் காரணம் ஈஸ்ட் செல்கள் உயிர்ப்புடன் இருந்ததுதான் என்று கண்டுபிடித்தார் .
அபாப்டோசிஸ் என்னும் என்சைம் குறைபாட்டால் நம் உடலில் உள்ள செல்கள் தினமும் இறக்கின்றன . இதனால் சீக்கிரம் முதுமை ஏற்படுகிறது என்பதை அறிஞ்ர்கள் கண்டுபிடித்தனர் .
இந்த என்சைம்கள் நம் உடலில் சரியான அளவில் இருந்தால் முதுமை அடைவது தள்ளிப்போகிறது என்றும் கண்டுபிடித்தனர் . இந்த ஆய்வு முடிவை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அறிவித்தார் .

இடைவெளி !

சூரியனுக்கும் பூமிக்கும் இடைதூரம் உத்தேசமாக 93 மில்லியன் மைல்கள் .உத்தேசமாக என்றுதான் குறிப்பிடுகிறோம்.ஏனென்றால் பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதை வட்டவடிவமானதல்ல. முட்டை வடிவமானது. ஜனவரியில் 91 1/2 மில்லியன் மைல் இருந்தால், ஜூன் மாதத்தில் 94 1/2 மில்லியன் மைல்களாக இருக்கும்.

Tuesday, January 13, 2009

விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் ( 12 -01 -1863 -- 04 - 07 -1902 ) .
ஆங்கிலம் பேசும் அற்புத சந்நியாசி !
விவேகானந்தர் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது . இவர் 19 -ம் நூற்றாண்டின் நாட்டின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர் . இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா . ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வதாக அமைந்துள்ளன . 1893-ம் ஆண்டு சிகாகோவில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அவரது சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை . கோல்கத்தாவைச் சேர்ந்த விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனான இவர் இள வயது முதலே தியானம் பழகினார் . ராமகிருஷ்ணரை முதன் முதலாக இவர் சந்தித்த ஆண்டு 1881 . ராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால் , பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் இரண்டையும் புரிந்துகொண்டார் . 1886 -ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களும் துறவிகளாயினர் . பின்னர் நான்கு ஆண்டுகள் நாடு முழுவதும் விவேகானந்தர் பயணம் செய்தார் . பயண முடிவில் 24 டிசம்பர் 1892 ல் கன்னியாகுமரி சென்று கடல் நடுவில் அமைந்த பாறை மீது 3 நாள் தியானம் செய்தார் . இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப்பட்டு வருகிறது . 1902 -ம் ஆண்டு ஜூலை 4 -ம் நாள் , தனது 30 -ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார் . அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவியது .

ஒற்றுமை !

நெப்போலியனுக்கும், ஹிட்லருக்கும் இருந்த ஒற்றுமை !
நெப்போலியன் பிறந்த வருடம்.............. --1760.
ஹிட்லர் பிறந்த வருடம்............................ --1889.
நெப்போலியன் தேர்ந்தெடுக்கப்பட்டது... --1804.
ஹிட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டது................. --1933.
நெப்போலியன் வியன்னாவைப் பிடித்தது --1809.
ஹிட்லர் வியன்னாவைப் பிடித்தது................ --1938.
நெப்போலியன் U.S.S.R.நாட்டைத் தாக்கியது --1812.
ஹிட்லர் U.S.S.R.நாட்டைத் தக்கியது....................--1914.
நெப்போலியன் போரில் தோற்றது.........................--1816.
ஹிட்லர் போரில் தோற்றது.......................................--1945.
இருவருக்கும் சரியாக 129 வருடங்கள் ஒவ்வொரு செயலிலும் இடைவெளியாக அமைந்துள்ளது, அதிசயமாக இல்லையா?
--நன்றி. 'விஸ்டம்' இதழ்.1978.

Monday, January 12, 2009

செய்திச் சிதரல் !

சோவியத் குடிமகன் இந்தியப் பிரஜைக்கு உயில் எழுதி வைத்தால், சட்டபூர்வமாக அது செல்லுபடி ஆகும்.
மனித உடலை முதன் முதலில் அறுத்துப் பார்த்துச் சோதனை செய்தவர்:ஹிரோ ஃபிலஸ்.
புகழ் மிக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கினார்.
நகங்கள் என்பவை இறந்து போன செல்கள் தான். இது புரோட்டினால் ஆனது.
மருத்துவச் சின்னமான 'எஸ்குலாப்பியஸ்'-பண்டைய ரோமானிய மருத்துவக் கடவுளான கைத்தடியே சின்னமாகியது.இச்சின்னம் எஸ்குலாஸ்பியஸ் தேவதையோடு தொடர்புடையது.
மன நோய்க்குக் காரணம் சந்திர கிரகத்தின் கதிர்கள் என்று ஒரு கருத்து உண்டு. சந்திரன் LUNACY என்கிற சொல்லே அதன் காரணமாக வந்தது தான்.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயுள்ள தூரம் ,பூமிக்கும் சந்திடனுக்குமுள்ள தூரத்தைப் போல் 385 மடங்கு அதிகமானது.
பெங்குவின் பறவை நீரில் நீந்தும் போது , தன் இறக்கைகளையே துடுப்புகளாய் பயன்படுத்துகிறது.

Saturday, January 10, 2009

புலால் உணவு !

'புலால்; என்றால் மாமிசம் மட்டும் தான் என்று நாம் நினைக்கிறோம். அது தவறு.
தாவரங்களில் கூட புலால் உள்ளது. கீரை புலால் வகையை சேர்ந்தது. ஏனெனில் அதை நாம் பறித்த பின்பு அதனால் உயிரணுக்களை உற்பத்தி செய்யமுடிவதில்லை. பறித்த பின் உயிரணுக்களை உற்பத்தி செய்ய முடிந்தால், அது புலால் அல்ல.
--குன்றக்குடி அடிகளார். 22-01-1982.

எண் விந்தை !

ஆறு இலக்கத்தில் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு எண்ணையும் உங்கள் இஷ்டப்படி மாற்றி இன்னொரு ஆறு இலக்க எண்ணை உருவாக்குங்கள் . பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழித்து, வித்தியாசம் காண்க. அதன் ஒவ்வொரு இலக்கத்தையும் கூட்டவும். வரும் விடையான இரண்டு இலக்கத்தின் எண்களைக் கூட்டவும்.
விடை: எப்போதும் ஒன்பதுதான். உதாரணம்:
ஆறு இலக்க எண் = 785435.
மாற்றி எழுதப் பட்ட எண் = 558437.
விதியாசம் = 785435 - 558437 = 226998.
இலகங்களின் கூடுதல் = 2+ 2+ 6+9+9+8 =36.
மறுபடியும் கூட்டினால் = 3 + 6 = 9.
-குங்குமம் இணைப்பு. 26-07-1991.

Friday, January 9, 2009

'சோற்றுப் பருக்கை '

ஒரு நாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. என் அருகில் இருந்த என் மாமன் புன்னகையோடு சொன்னார்_ "இந்தப் பருக்கையோட நிலையைப் பார்த்தியா...பாவம் ! " நான் வியப்பாக, "ஏன் ?" என்றேன்.
"இந்தப் பருக்கை எத்தனை இடத்தில தப்பிச்சிருக்கு. அறுவடையில், களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகயில, ....அப்படின்னு எத்தனை இடங்கள் ! எங்கேயும் தவறாம அதனேட பயனுக்காக எவ்வளவு தூரம் கடந்து வந்துச்சு, இப்பப் பாரு....சாதமா மாறி , உன் கைக்கு வந்து கடைசி நொடியில தவறி விழுந்துடுச்சு....எவ்வளவு பாவம் அது....!"
நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரிடமிருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.!.
நம்முடைய பிறப்பும் அந்த அரிசி போலத்தான். நாமும் எத்தனை இடங்களிலிருந்து தப்பித் தப்பி வாழ்வை கடந்து கொண்டிருக்கிறோம். நாம் ஒரு போதும் அந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக்கூடாது.
-டைரக்டர் மகேந்திரன். ஆனந்த விகடன். 19-09-1999,

Thursday, January 8, 2009

கணிதத்தில் விந்தை !

பெருக்கலில் சில அதிசயங்கள் உண்டு.அவற்றுள் ஒன்று இது:
33 X 3367 = 111,111.
66 X3367 =222,222.
99 X 3367 =333,333.
132 X 3367 =444,444.
165 X 3367 = 555,555.
297 X 3367 =999,999.
-கல்கண்டு. 25-07-1991.

Wednesday, January 7, 2009

நியாயக் களஞ்சியம் !

ஈயின் நியாயம்: ஈ ஒருவர் பருகுவதற்கென வைத்த பால் முதலியவற்றில் வீழ்ந்து தம்முயிர் போக்கி,பால் முதலியவற்றினையும் பழுதாக்கும். அதுபோலக் கயவர் தம் உயிர் விடுத்தேனும் பிறருக்கு இடையூறு விளைப்பர். மேலும் உடம்பில் நல்ல இடங்களையெல்லாம் விட்டுப் புண்ணுள்ள இடத்திலேயே ,ஈ மொய்க்கும். அதுபோல நல்லனவறை விடுத்து ,அல்லாதனவற்றையே அல்லாதவர் விரும்புவர்.இது மக்ஷிகா நியாயம் எனப்படும்.
ஈயானது தேன், நெய் முதலிய நறுமணப் பண்டங்களிலும் மொய்க்கும்; அதே சமயம் மலம் சுமந்து போவதைக் கண்டால் நறுமணப் பண்டத்தை விட்டு மலத்திற் சென்று மொய்க்கும். அதுபோல நல்ல சொற்பொழிவு நடக்கும் காலை கயவர் நல்ல பேச்சினை விடுத்து பின்னால் பேசும் தகாததையே எடுத்துக் கொள்வர்.
உடல் நிழல் நியாயம்: உடலின் நிழல் எப்போதும் ஒருவனை விட்டு நீங்காதவாறு போல மாணவன் ஆசிரியனை விட்டு நீங்காது வழிபடுவான் என்பது.
உண்ட இலை நியாயம்: சோறு உண்பதற்கு இலை கருவியாகப் பயன்படும். உண்ட பின்னர் அதனை எச்சில் ஆயிற்றெனக் கழித்து அது கிடந்த இடத்தையும் தூய்மைபடுத்துவர். அது போல மெய்யுணர்வு பெறுதற்கு உடல் இன்றியமையாதது.ஆதலால் ஞானம் பெறும்வரை உடலினைக் கருத்தோடு காப்பாற்றி பின் ஞானியற்கு இவ்வுடல் அருவருப்பாய் தோன்றும். இதனை நெடுனாள் வைத்துக் காக்க விரும்பார். கழிக்கவே விரும்புவர்.
உண்ணத்தக்கவற்றை விதித்தலால் உண்ணத்தகாதன விலக்கப் பட்டன எனும் நியாயம்:ஐந்தைந்து நகமுடையன உண்ணத்தக்கன என்று விதித்தலால் அவையல்லாதன உண்ணத்தகாதன என்பது வெளிப்படை.

Tuesday, January 6, 2009

தாகூர் !

மகரிஷி தேபேந்திரநாத் தாகூரின் இளைய மகன் ரவீந்திரநாத் தாகூர் இருபாலரும் படிக்கும் பள்ளி ஒன்றை 1901 -ம் ஆண்டு ஆரம்பித்தார் . அது ' பாதபவனா ' என்று அழைக்கப்பட்டது .
தாகூர் எழுதிய ' கீதாஞ்சலி ' என்ற கவிதை நூலுக்கு 1913 -ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது . அந்த பரிசு பணத்தைக் கொண்டு 1921 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 - ம் தேதி ' விஸ்வபாரதி ' என்ற பெயரில் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தார் .
--- தினமலர் . 23 - 12 -2008 .

Monday, January 5, 2009

தெரிஞ்சா...தெரியாமலா ?

" டி . வி .-- யில ' சின்ன வீடு ' படம் ஓடிக்கிடிருந்தது . என் அண்ணன் பையனுக்குப் பன்னிரெண்டு வயசு . அவன் என் கிட்ட வந்து ' சித்தப்பா , சின்ன வீடுன்னா என்ன ? ' னு கேட்டான் . எனக்குத் தர்மசங்கடமா இருந்திச்சு . ' நீ படிக்கிற பையன் , இதெல்லாம் இப்ப தெரிஞ்சுக்க வேண்டாம் . பின்னால தெரிஞ்சுக்கலாம் . இப்ப போய் படிடா ' ன்னு சொன்னேன் . அதுக்கு அவன் ' நீங்க சொல்லுங்க சித்தப்பா....நான் இப்பவே
தெரிஞ்சு வெச்சுக்கறேன்' னு சொன்னான் . ' அடப்பாவி ! தெரிஞ்சு வெச்சுக்கறது இல்லடா சின்னவீடு , தெரியாம வெச்சுகிட்டாதான் சின்னவீடு ' னு பதில் சொல்லி வெச்சேன் ! "
--- சென்னையில் நடந்த ' உரத்தசிந்தனை ' நிகழ்ச்சியில் தமிழக அரசின் சமூக நலத்துறை தலைவர் உ . கருணாகரன் சொன்னது

Sunday, January 4, 2009

நெட் ஜோக் !

வேடிக்கை பார்க்க கிராமத்துக்கு விஜயம் செய்த அவருக்கு ஒரு வேதனையான காட்சி காத்திருந்தது . கால் ஒன்றை முழுவதுமாக இழந்து அதிலிருந்து லேசாக ரத்தம் கசிந்தபடி முனகிக்கொண்டிருந்தது ஒரு ஆடு .
ஆட்டுக்குச் சொந்தக்காரர் அருகிலேயே இருக்கவும் அவரை விசாரித்தார் நம்ம ஆள் . " அது பெரிய சோகக் கதைங்க ...."என்று இழுத்தவர் , " ஒரு நாள் ராத்திரி திடீர்னு எங்க வீடு தீப்பிடிச்சுடுச்சு . எதுவும் தெரியாம வீட்டுக்குள்ளே நாங்க தூங்கிகிட்டிருந்தோம் . அப்ப எங்களை எழுப்பி விட்டுக் காப்பாத்தின ஆடு சார் இது " என்றார் .
"சரி....அவ்வளவு உதவி பண்ணின ஆட்டை இப்படி வெச்சுட்டிருக்கியே ....இது நியாயமா ? " என்று கேட்டார் நம்ம ஆள் .
" இன்னும் கேளுங்க . ஒரு தடவை டிராக்டர்ல இருந்து நான் தவறி விழுந்துட்டேன் . உடனே ஓடிப் போய் ஆட்களையெல்லாம் அழைச்சுட்டு வந்து , என் உயிரைக் காப்பாத்தினதும் இந்த ஆடுதான் .! "
" இன்னமும் நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரலை..."
" பதில்தான் சார் சொல்லிகிட்டிருக்கேன் , இவ்வளவெல்லாம் உதவி பண்ணிய ஆட்டை ஒரே நாள்ல எப்படி சார் மட்டனாக்க மனசு வரும் ?! "

Saturday, January 3, 2009

தகவல் சுடர் !

சுவாமி விவேகானந்தர் முப்பது வயது வரை நம்மோடு வாழ்ந்துகொண்டே விவேகானந்தராய்த் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார் . அல்ல , நம்மிடையே கலந்து திரிந்துகொண்டிருந்தார் . பிறகு , தாமே தம்மை வெளிப்படுத்தி விசுவரூபம் காட்டிப் பின்னர் ஒரு மின்னல் மாதிரி மறைந்து போனார் .
ஸ்ரீ ராமனின் ஜென்ம நட்சத்திரம் நமக்குத் தெரியும் . அதை நாம் கொண்டாடுகிறோம் . ஆனால் , அவன் சரயூ நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட கதைதான் நமக்குத் தெரியுமே தவிர , அதற்கு நாளும் இல்லை ; கோளும் இல்லை . அதை நாம் துக்கமாகவோ மகிழ்ச்சியாகவோ கொண்டாடுவதில்லை .
ஸ்ரீ கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் நமக்குத் தெரியும் . அதை நாம் கொண்டாடுகிறோம் . ஆனால் , அவன் ஒரு வேடன் தெரியாமல் எய்த அம்பு பட்டு மாண்டான் என்ற கதைதான் நமக்குத் தெரியும் . அந்தத் தேதியும் தினமும் நமக்குத் தெரியாது . அதையும் நாம் அனுஷ்டிப்பதில்லை . தீபாவளி கூட ஒரு சாப விமோசன சந்தோஷ நாளே தவிர , துக்க நாள் அல்ல .
--- ஆனந்தவிகடன் . ( 10 - 12 - 2008 ) .

Friday, January 2, 2009

தகவல் பலகை !

--- கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம் .
--- உடம்பில் எடை கூட வாழைப் பழத்தைச் சாப்பிடவேண்டும் .
--- காலில் கண்ணுள்ள பூச்சி வெட்டுக்கிளி .
--- மனித உடலில் உள்ள ரத்தத்தின் அளவு 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வரை .
--- சந்திரனுடைய மறுபக்கத்தை முதலில் படம் எடுத்த விண்வெளிக்கலம் லூனிக் - 3 .
--- மலேரியா நோய் கிருமியை முதலில் கண்டுபிடித்த விஞ்ஞானி லேவரான் .
--- இந்தியாவின் முதல் பெண் ஐ . பி . எஸ் ., அதிகாரி கிரண்பேடி .
--- கிரிஸ் கிபோர்ட் , வெலரி வால்ஷ் , எரிக் வெய்னர் என்ற மூன்று பேரின் கற்பனையில் உருவான கதைதான் ' டோராவின் பயணங்கள் '.

Thursday, January 1, 2009

விக்கல் நிற்க !

எட்டுத் திப்பிலி . ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகும் விடா
விடில் புத்தகத்தைச் சுட்டுப் போடு நான் தேரனுமல்லவே !
விக்கலுக்கு மருந்து இது.திப்பிலி 8 பங்கு; சீரகம் 10 பங்கு. இவற்றைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு, அப்படியும் நிற்காவிடில் புத்தகத்தை (மயிலிறகை ) சுட்டுச் சாம்பலைத் தேனில் குழைத்துச் சாப்பிட விக்கல் நிற்கும் என்கிறார் தேரச்சித்தர்.