Sunday, November 30, 2014

கணக்குப் புதிர்.

  ஒரு  குடும்பத்தில்  மொத்தம்  நான்கு  சகோதரிகள்.
     மூத்த  சகோதரிக்கும்  அடுத்த  சகோதரிக்கும்  இடையே  உள்ள  வயது  வித்தியாசம்  ஆறு.
     மற்றவர்களுக்கு  இடையே  உள்ள  வித்தியாசம்  இரண்டு.
     இவர்களின்  சராசரி  வயது  25.
     அப்படி  என்றால்  மூன்றாவது  சகோதரியின்  வயது  என்ன?  இந்தப்  புதிர்  கேள்விக்கு  விடை  சொல்லுங்கள்  பார்க்கலாம்.
விடை:  முதல்  சகோதரியின்  வயது -  31;  இரண்டாவது  சகோதரியின்  வயது - 25; மூன்றாவது  சகோதரியின்  வயது - 23;  நான்காவது  சகோதரியின்  வயது - 21;  மொத்தம்  = 100;  சராசரி = 100 / 4 = 25.
-- தினமலர்  சிறுவர்மலர் . டிசம்பர் , 28, 2012. 

Saturday, November 29, 2014

விண்வெளியில்...

விண்வெளியில் வாடகைக்கு வீடு !
     நமது நாட்டு ISRO போல, அமெரிக்க நாட்டில்  NASA (  National Aeronautic Space Administration )  என்ற அமைப்பு  உள்ளது.  இதனால் விண்வெளியில் செலுத்தப்படும் வெண்கலங்களில் அனுப்பப்படுவோர் தங்கி இருக்க வேண்டி, ஒரு வெண்கல வீடு ( அறை ) அமைக்க நினைத்து 1990ஆம் ஆண்டிலேயே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    தற்போது புதிதாகச் செய்யப்பட்ட  BEAM  ( The Bigrlow Expandable Activity Module )  என்ற புதிய சாதனமானது, வெக்ட்ரான் எனப்படும், குண்டு நுழைக்காத பொருளைக்கொண்டும், மற்றும் செயற்கை நூலிழையினால் செய்யப்பட்ட ஒரு விதமான துணி போன்ற பல அடுக்குகள் கொண்ட பொருளாலும் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்தத் துணியின் தன்மை என்னவென்றால் இக்கலம் வெண்வெளியில் செல்லும்போது சூரிய வெப்பம், சூரியப்புயல் மற்றும் அதன் மேல் விழும் பலமான வான்வெளிக்கற்கள் கதிர்வீச்சு இவற்றினால் பாதிக்கப்படாது.
    இப்புதுமாதிரியான வெண்வெளி ' வீடு ' ( அறை ) காற்றினால் உப்புகிறது. இதன் அமைப்பே ஒரு பலூன் போன்றது.  இதனுள் காற்றைச் செலுத்தி உப்பச் செய்தால் இதன் அளவு (  Size ) 13 அடி நீளம், அகலம் 10 அடி விட்டம் கொண்டதாக இருக்கும்.  இதன் எடை 1361 கிலோகிராம்.  இதை ஒரு' T' ஷர்ட்டை' மடித்து வைப்பதுபோல மடித்து ஒரு சூட் கேஸினுள் வைத்துவிட முடியும்.  இதன் உட்பரப்பு 560 கன அடி.
    இதை வருகிற 2015 ஆம் ஆண்டில் வெண்வெளியில் செலுத்துவதாக இருக்கிறார்கள்.  மனிதர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் இம்மாதிரி, காற்றை உட்செலுத்தி வைக்கிற அமைப்பானது, இதுதான் முதன்முறை.
-- ' சுமன் '  மஞ்சரி . மார்ச் 2013.                
--    இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.  

Friday, November 28, 2014

ஃபெஸ்புக்

 சமீபத்தில் ஃபெஸ்புக்கில் ஒரு சுவாரஸ்யமான பதிவைப் படித்தேன்.  ஒரு இளைஞனின் அறையில் திருமணத்திற்கு முன்பும், பின்பும் இருக்கும் பொருட்கள் எவை எவை என்பது குறித்த பதிவு அது.
திருமணத்திற்கு முன்பு இருப்பவை:
1.  பெர்ஃப்யூம்ஸ்
2.  காதல் கடிதங்கள்
3.  பரிசுப் பொருட்கள்
4.  வாழ்த்து அட்டைகள்
5.  ஐ போன்
அதே இளைஞனின் அறையில் திருமணத்திற்குப் பிறகு இருப்பவை:
1.  வலி நிவாரணிகள்
2.  கடன் பத்திரங்கள்
3.  கட்டப்படாத பில்கள்
4.  நோக்கியா 3310
இந்த ஒப்பீட்டில் இருக்கும் வாழ்வின் தலைகீழ் மாற்றத்தை நினைத்து வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.
--மனுஷ்ய புத்திரன்.  குங்குமம் . 3 . 6 . 2013.                                
-- இதழ் உதவி:  P. சம்பத் ஐயர், திருநள்ளாறு.

Thursday, November 27, 2014

மூர்க்கத்துவம்

  ' மரணத்திலும் கொடுமையானது எது? ' என்று ஸ்ரீசங்கரரிடம் கேட்டான் சீடன்.  அதற்கு அவர், ' மூர்க்கத்துவம் ' என்றார்.
       மரணம் என்றால் என்ன என்பதை முதலில் ஆய்ந்து அறியவேண்டும்.  உடலை விட்டு உயிர் நீங்குதல், அதன்பின் அனைத்து நாடிகளும் ஒடுங்குதல் மரணம் என்று சொல்லப்படும்.  அந்தநிலையில் உடலைப் பிணம் என்று சொல்கிறோம்.  மூர்க்கட்த்துவம் உடைய மனிதன் பிணத்திலும் இழிநிலையில் வாழ்பவன், கிட்டத்தட்ட நடைப்பிணம் என்றே சொல்லலாம்.
       மனிதனிடம் அறியாமை இருப்பது இயல்பு.  அறியாமையில் இருந்து நீங்க முயற்சிக்க வேண்டும்.  அறியாமை காரணமாக எடுத்த முடிவைப் பிடிவாதமாகப் பின்பற்றுபவன்தான் மூர்க்கன்.  இலக்கண நூல்களில் இதை ஒரு கொள்கையாகச் சொல்வார்கள்.  ' தான் ஆட்டி தனாது நிறுத்தல் ' என்று அதற்கு பெயர்.  தான் எடுத்த முடிவு தவறானது என்பதை மனசாட்சி சுட்டிக்காட்டிய பின்னாலும்கூட  அந்த முடிவில் இருந்து பின்வாங்காமை மூர்க்கதுவமாகும்.
-- ஞான வாயில் .தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013. 

Wednesday, November 26, 2014

மலமாதம்.

 இரண்டு அமாவாசை வரும் மாதங்களில் மங்கள காரியங்கள் செய்யக் கூடாதா?  ஏன்?
      இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்.  திருமணம் மற்றும் புதிய திருக்கோயில் கும்பாபிஷேகம் போன்றவை செய்யக்கூடாது.  பழைய திருக்கோயில் கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காது குத்தல் போன்றவை செய்யலாம்.  தவிர்க்க முடியாத பட்சத்தில் மலமாத தோஷ சாந்தி செய்து விட்டு சிலர் திருமணமும் நடத்துகிறார்கள்.
--  மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் . பக்திமலர். பிப்ரவரி 21, 2013. 

Tuesday, November 25, 2014

SMART

 குறிக்கோள் நிர்ணயிப்பதன் தன்மையை  SMART  என்று சுருக்கமாகச் சொல்வார்கள்.  கடினமாக உழைப்பதைவிட புத்திசாலித்தனமாக உழைப்பது சிறந்தது என்பதைத்தான் இந்த SMART என்கிற வார்த்தை குறிக்கிறது.  இதன் விரிவாக்கத்தைப் பார்ப்போம்.
S       Specfic               குறிப்பானதா
M       Meaningful          அர்த்தமுள்ளதாக
A       Action oriented    நடைமுறைப்படுத்தத்தக்கதாக
R       Rewarding          பயனளிக்கக்கூடியதாக
T       Time-bound        நேரக் கட்டுப்பாட்டோடு இருப்பதாக
-- கோ.ரமேஷ், சுட்டி விகடன் . 15 . 01 . 2013                                        
இதழ் உதவி: இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

Monday, November 24, 2014

வணக்கங்கள் பலவிதம்

 உயர்ந்தவர்களை வணங்குவதில் பலவிதமான முறைகள் உண்டு.  ஒரு கையால் வணங்குதல் ஏகாங்க நமஸ்காரம் எனப்படும். இது இக்காலத்திய சல்யூட் போன்றது. வலது கையை மட்டும் எடுத்துத் தலை மீது வைத்து வணங்குவது ' துவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு கைகளையும் தலை மீது வைத்து வணங்குவது ' திரிவிதாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டி, தலை ஆகியவற்றால் வனங்குவது பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.  இது பெண்களுக்குரிய வணக்க முறையாகும்.  இரண்டு கால்கள், இரண்டு கைகள், இரண்டு காதுகள், தலை, மார்பு ஆகியவற்றை பூமியில் பதித்து எட்டு அங்கங்களால் வணங்குவது ' அஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  நெடுஞ்சாண் கிடையாக எல்லா உறுப்புகளும் தரையில் படும்படி  வணங்குவது ' சாஷ்டாங்க நமஸ்காரம் ' எனப்படும்.  இதுவும் ஆண்களுக்குரிய வணக்க முறையாகும்.
---   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013.  

Sunday, November 23, 2014

துளசி பறிப்பது எப்படி?

 காலையில் நீராடியபின் ,மடி ஆசாரத்துடன் தெய்வ சிந்தனையுடன் துளசியைப் பறிக்க வேண்டும்.  அதைப் பறிக்கும்போது,
     துளஸ்யம்ருத ஜந்மாஸி ஸதாத்வம்
                    கேஸவப்ரியே
     கேஸவார்த்தம் லுநாமித்சிம் வரதாபவ
                      ஸோபதே
என்ற சுலோகத்தைச் சொல்லிக் கொண்டு பறிக்க வேண்டும்.  நான்கு இலைகளும் நடுவில் துளிரும் கொண்ட ஐந்து தளங்கள் இருப்பது போலத் துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும்.  பல நாட்கள் வைத்திருந்து சாத்தலாம்.
--   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013.  

Saturday, November 22, 2014

ருத்ரஜபம் கூடாது

 வேதத்தின் நடுநாயகமாக அமையும் பகுதி ஸ்ரீருத்ரம்.  மிகமிகச் சக்தி வாய்ந்த மந்திரம்.  இந்தக் காலத்தில் அந்த மந்திரம் கேசட் சிடியாக வெளிவந்து வீடூகளில் ஒலிக்கத் தொடங்கி விட்டது  .கண்ட கண்ட நேரங்களில் எல்லாம் ஒலிக்கிறார்கள்.  ருத்ரஜபம் மற்றும் பாராயணத்தைத் தனியாகச் செய்வதனால் நண்பகல் 12 மணிக்கு முன்புதான் செய்ய வேண்டும்.  அதன்பின் கூடாது.  மாலையிலோ இரவிலோ சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது மட்டும்தான்
ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்ய வேண்டும்.  கேசட் போட்டுக் கேட்பவர்கள் இந்த விதியைத் தவறாமல் மனதில் கொள்ளவேண்டும்.
--   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013. 

Friday, November 21, 2014

வியாழ வட்டம்

   ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்ப ராசிகளில் குரு இடம் பெற்றிருப்பது குருவளையல் எனப்படும்.  இதை வியாழ வட்டம் என்பர்.
     குரு, ரிஷப ராசியில் இருந்தால் அவர் தலையசைத்தால் ஊர் அசையும்.  வெகுஜன செல்வாக்குப் பெற்றிருப்பார்.  சிம்ம ராசியில் இருந்தால் நடமாடும் சிங்கங்களாக வைராக்கிய நடையிடுவர்.  தனுசு ராசியில் இருந்தால் ராஜயோகம்.  கும்பராசியில் இருக்கப் பிறந்தவர்கள் ஞானிகளாகத் திகழ்வர்.
வியாழ நோக்கம்
      கல்யாண வயதை எட்டிய நிலையில்  'வியாழ நோக்கம் ' இருந்தால் மளமளவென கல்யாணம் நடக்கும்.
      இது என்ன வியாழ நோக்கம் ?
      ஒரு ஜாதகரின் ஜனனராசிக்கு அதாவது சந்திரன் நிற்கும் ராசிக்கு 2,5,7,9,11 ம் ராசிகளில் குரு சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு குருபலன் - அதாவது, வியாழ நோக்கம் உள்ளது என்று அர்த்தம்.  அந்த நிலையில் திருமணப்பேச்சு எடுத்தால் போதும். இது கல்யண காலம் விரைவில் திருமணத்தை நடத்தி வைத்து விடும்.
பத்து தோஷமும் விலகும் !
      ஜனன லக்னத்துக்கு 1-4-7-10ல் குரு, சுக்கிரன்,புதன் கூடியோ, பரவலாகவோ இருந்தால் அந்த ஜாதகருக்கு உரிய பத்து தோஷங்களும் பகலவனைக் கண்ட பனிபோல விலகும்.  பட்சி, எட்சி, தேரை, புருஷ, குழி, முட்டு, பெண், பறவை, பாலாரிஷ்டம். கருவழிந்த தோஷம் என்பவை பத்து தோஷங்களாகும்.
--- தினமலர் பக்திமலர். மே 23, 2013. 

Thursday, November 20, 2014

குரு -- அறிவியல் தகவல்கள்

  குருக்கிரகம் ஜுபிடர் என்று சொல்லப்படும்.  சூரியனிடமிருந்து 48 கோடியே 30 லட்சம் கல் தொலைவில் சூரியனை குறித்த வேகத்தில் வட்டமாகச் சுற்றுகிறது.
     இதன் விட்டம் 88700 மைல்.  ஒரு மணிக்கு 29282.5 மைல் வேகத்தில் சூரியனை சூழ உள்ள 303,60 கோடி மைல் சுற்றளவு உள்ள வட்டப்பாதையை 4320 நாட்களில் ஒருமுறை கடக்கும். செவ்வாய் சனிக் கிரகங்களுக்கிடையே சஞ்சரிக்கும்.
மஞ்சள், கடலை கூடாது !
     நவக்கிரக நாயகர்களுள் ஒருவர் குரு.  இவர் தேவர்களின் குரு.  பிரகஸ்பதி என்று பெயர்.  பிரம்மனின் பேரன்.  ஆங்கீரசரின் மகன். இவன் வாசஸ்பதி எனவும், வியாழன் எனவும் சொல்லப்படுபவன்.  வடக்குத்திசை நோக்கி இருப்பான். இவனுக்கு உரியதே மஞ்சள் ஆடையும், மஞ்சள் அபிஷேகமும். கொண்டைக்கடலையும் இவனுக்கு உரியதே ஆகும்.  சிவாலய மாடங்களில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தி சிவாம்சம்.  மகாயோகி.  தெற்குப் பார்த்திருப்பார்.  இவருக்கு மஞ்சள் ஆடை அணிவிக்கக்கூடாது. கொண்டைக்கடலை மாலை சாத்தக்கூடாது.
---தினமலர் பக்திமலர். மே 23, 2013.  

Wednesday, November 19, 2014

உதவி

" நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டு, அதை அவர்கள் மறுக்கும்போது என்ன நினைப்பீர்கள்?"
" அவர்களுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக்கொள்வேன்.  இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா... ' எனக்கு எதையும் மறுத்தவர்களுக்கு நான் நன்றியுள்ளவானாக இருக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.  ஏனென்றால், அவர்களால்தான் நானே என் காரியங்களைச் சாதிக்க முடிந்தது! ' என்பார் அவர் !"
-- கே.சரஸ்வதி, திண்டல்.

" பணத்தால் ஆத்திகனையும் நாத்திகனையும் சேர்த்து வைக்க முடியுமா?"
" பணத்தால் முடியாதது எதுவும் இல்லை.  இந்தக் கவிதையைப் படியுங்கள்...
   ' வாஸ்து பார்த்துக் கட்டிய வீட்டில்
    நல்ல வாடகை தந்த
   நாத்திகனுக்கு இடம்!' ".
-- ராம்.ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
--- நானே கேள்வி...நனே பதில் !
-- ஆனந்த விகடன்.  22 .5  .2013.  

Tuesday, November 18, 2014

சூப்பர் சார்ஜர்.

20 நொடியில் சார்ஜ் செய்யும்  சூப்பர் சார்ஜர்.அமெரிக்க வாழ் இந்தியர் சாதனை.
     அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாராதோகாவை சேர்ந்தவர் இஷா காரே ( 18 ). இந்திய வம்சாவளியினரும், நானோ கெமிஸ்ட்ரி மாணவியுமான அவர், செல்போனுக்கு 20 -30 நோடிகளில் சார்ஜ் ஏற்றக்கூடிய புதிய சூப்பர் சார்ஜரை கண்டுபிடித்திருக்கிறார்.
     இந்த சார்ஜர் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் ஏற்றப்படும் சார்ஜ் நீண்ட நேரத்திற்கு இருக்கும்.  இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் மட்டுமல்லாது கார் போன்ற வாகனங்களின் பேட்டரிகளும் இதன்மூலம் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் எதிர்காலத்தில் அந்த சாதனத்தை நவீனப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- தினமலர் . 22 . 5 . 2013.  

Monday, November 17, 2014

சித்திர குப்தனின் பிறந்தநாள்

 சித்திரா பவுர்ணமி -- சித்திரகுப்தனின் பிறந்த நாள்.  உயிர்களின் புண்ணிய பாவக் கணக்குகளை எழுதுவதற்காகச் சிவனால் படைக்கப்பட்டவன் சித்திரகுப்தன்.
     கணக்கு எழுதும் தெய்வங்கள்
     சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் உயிகளின் புண்ணிய பாவக் கணக்கு எழுதுகிறார்கள் .  ஏழுவகையான பிறவிகள், 84 லட்சம் யோனி பேதங்கள், உணவு, உறக்கம் இல்லாவிட்டால் உடல் இளைக்கும். உயிரும் இளைப்பதுண்டு எப்படி தெரியுமா?
     ' புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
       பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
       கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
       வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
       செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
       எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்...' என்கிறார் மாணிக்கவாசகர்.
-- தினமலர் . பக்திமலர் . ஏப்ரல் 18, 2013.  

Sunday, November 16, 2014

நட்பு


தெரியுமா? தெரியுமே!

*  ஆப்பிரிக்க பறவை இனங்களில் ஒன்றின் பெயர் விதவை.
*  ' புபு ' என்றால் திபெத்திய மொழியில் வியாழக்கிழமை என்று அர்த்தம்.
*  சூரியனின் கொள் அளவு எத்தனை பூமிகளுக்கு சமம்?  அதாவது, சூரியனுக்குள் எத்தனை பூமிகளை வைக்கலாம் தெரியுமா? 10 லட்சம் பூமிகள்!
*  எவரெஸ்டின் இப்போதைய உயரம் 29,028 அடி.
*  விளக்கு வெளிச்சத்தில் அடை காக்கும் கோழிகள் முட்டைகளை சீக்கிரம் பொரிக்கின்றனவாம்.  இதுபோல இனிய இசைகளைக் கேட்கும் கோழிகள்
   அதிக முட்டைகளை இடுகின்றனவாம்.
*  மனித முடியை தீயினால் மட்டுமே அழிக்க குடியும்.  வேறு வழிகளில் அழிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
*  மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 70 முறை துடிக்கிறது.  ஆனால், மிகப் பெரிய உருவங்கொண்ட யானையின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு
   27 முறை தான்.
-- சுட்டி விகடன். 15 . 06 . 2011.      .
-- இதழ் உதவி: P.K.ஸ்ரீபாலா,  பச்சூர் . காரைக்கால். 

Saturday, November 15, 2014

அந்த 6 பேர் !

நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார்.
அந்த 6 பேர்கள்:
ப்ராதஸ்நாநி  --  அதிகாலையில் குளிப்பவன்.
அஸ்வத்தசேவி  --  அரச மரத்தை வணங்குபவன்.
த்ருணாக்னி ஹோத்ரி  --  முன்று தீயை இடையறாது வளர்ப்பவன்.
நித்யான்னதாதா  --  நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன்.
சதாபிஷேகி  --  நூற்றாண்டு விழா செய்து கொண்டவன்.
பிரம்மஞானி  --  இறைவனை உணர்ந்தவன்.
--  தினமலர் பக்திமலர் . மே 16, 2013. 

Friday, November 14, 2014

இவர்கள் இதனைப் பெற்றார்கள்.

    ரிஷப விரதம் இருந்து தேவர்கள் இவை இவை பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அந்தப் பட்டியல் பின்வருமாறு.
இந்திரன் :        ஐராவதம்
அக்னி :           ஆட்டுக்கடா
எமன் :             எருமைக்கடா
நிருதி :             மனிதன்
வருணன் :        முதலை
வாயு :              மான்
குபேரன் :         புஷ்பக விமானம்
ஈசானன் :         காளை
சூரியன் :          ஒரு சக்கரம் மற்றும் ஏழு குதிரையுடன் கூடிய தேர்
சந்திரன் :          ரத்ன விமானம்
வசிஷ்டர் :        முக்காலமும் உணரும் சக்தி
விஸ்வசேனன் : திரிகால ஞானம்
ஸந்துஷ்டன் :   அஷ்டமாசித்தி
விஷ்ருதன் :     சகல உலகத்திலும் சஞ்சரிக்கும் சக்தி.
-- தினமலர் பக்திமலர் . மே 16, 2013

Thursday, November 13, 2014

தெரியுமா? தெரியுமே!

*  கேதார விரதம் என்பது புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தொடங்கி,  21 நாட்கள் தீபாவளி வரை மேற்கொள்ள வேண்டியதாகும்.
*  ஆற்று மணலில் வெட்டப்படும் ஊற்றுக்கு என ஒரு விசேஷமான குணம் உண்டு.  தோண்டப்படும் பக்கத்தில் நீர் வேகமாகப் போகும்.  ஆனால்,
   அதேநேரத்தில் இன்னொரு பக்கம் தூறும்.
*  எண்ணெயைச் சொரிந்து தேய்க்க வேண்டும்.  கல்வியை வருந்திக் கற்க வேண்டும்.
*  எறும்பு முதலாக யானை ஈராக 84 லட்சம் உயிரினங்கள் உண்டு என்பர் பெரியோர்.
*  எறும்புக்கு பல விசேஷ சக்திகள் உண்டு. அவற்றுள் ஒன்று பெரும்மழை வெள்ளம் வரும் என்பதனை அறியும் தன்மை.
*  எறும்பு வழிபட்ட தலம் திருவெறும்பூர்.  திருச்சிக்கு அருகில் உள்ளது.  மலைமேல் கோயில்.  125 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.  இந்திரனும் தேவர்களும்
   எறும்பு வடிவில் வழிபட்டதால் பிப்பிலேஸ்வரர், எறும்பீஸ்வரர் என்றெல்லாம் சொல்லப்படுகிறார்.
*  தமிழகத்தில் அறுபத்து மூவருக்கென அமந்த ஆலயம் திருப்பனந்தாள் மட்டுமே ( கும்பகோனத்திற்கு அருகில் உள்ளது இந்த திருத்தலம் ).

Wednesday, November 12, 2014

108 கோமுகங்கள்.

  கருவறையில் உள்ள இறைவனை அபிஷேகித்த நீர் வெளியில் வந்து விழும் பகுதியில் பசுவின் முகம் போன்ற அமைப்பு இருக்கும். இதைக் கோமுகம் என்றும் கோமுகை என்றும் சொல்வார்கள். இமயமலைச் சாரலில் முக்திநாத் என்றோரு வைணவத் தலம் உள்ளது.  அங்குள்ள கோவிலைச் சுற்றிலும் பசுவின் முகம் போலச் செய்யப்பட்ட 108 கோமுகைகள் இருக்கின்றன.  இவற்றில் இருந்து எப்போதும் நீர் விழுந்து கொண்டு இருக்கும்.
பரமன் அருளால் தோன்றிய பசுக்கள்:.
     ஒரு சமயம் சிவபெருமான் அருளால் நான்கு பசுக்கள் தோன்றின.  சிவன் அவற்றை நான்கு திசைத் தெய்வங்களுக்கு அளித்தார்.  இந்திரனுக்கு சுஷிதை, எமனுக்குக் கயிலை, வருணனுக்கு ரோகிணி, குபேரனுகுக் காமதேனு என்ற பசுக்கள் தரப்பட்டன. இந்தச் செய்தி மகாபாரதத்தில் அனுசாசன பருவத்தில் உள்ளது.
--- தினமலர் பக்திமலர். மார்ச் 14, 2013. 

Tuesday, November 11, 2014

பூட்டைத் திறக்கும் புளூடூத் !

  தமிழ்நாட்டுக்கு திண்டுக்கல் பூட்டுகள் எப்படியோ,  அப்படி பூட்டு  தயாரிப்பில் உலகளவில் பிரசித்தி பெற்றது கலிபோர்னியாவைச் சேர்ந்த கிவிக் செட் நிறுவனம்.  இவர்களது தயாரிப்பான சிக்னேச்சர் சீரிஸ் வகை பூட்டுகள் மிகவும் பிரபலமானவை.  உலகின் பல நாடுகளிலும் தங்கள் மின்னணு பூட்டு தயாரிப்பு தொழிற்சாலையை நடத்திவரும் இந்த நிறுவனம், இப்போது புளூடூத் மூலம் பூட்ட திறக்கக்கூடிய மின்னணு பூட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
     ரானுவத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனத்தாரால் பெருமையுடன் குறிப்பிடப்படும் இந்தப் பூட்டுகளை வீடு அல்லது அலுவலகத்தின் கதவுடன் இணைத்து விட்டால் போதும்.
     அப்புறம் தூரத்தில் இருந்தாலும் புளூடூத் மூலம் உங்கள் ஐபோனில் குறிப்பிட்ட பொத்தானைத் தொட்டால் கதவு திறந்து விடும். அருகில் இருக்கும்போது விரல் தொடுகை மூலம் திறக்கலாம்.
     இதன்மூலம் பயனாளர் வீட்டில் இல்லாமல் இருக்கும் நேரத்தில் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு போன் மூலமே கதவைத் திறந்துவிட முடியும். இந்த நவீன பூட்டின் விலை 12 ஆயிரம் ரூபாய்.
-- தினமலர் . வாரமலர் . 19 .5 . 2013.

Monday, November 10, 2014

பஞ்ச வில்வம்.

  " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம் செழிக்கும்.  ஒரே ஒரு வில்வத்தை உள்ளன்புடன் சிவபெருமானுக்குச் சமர்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.
       கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம்.  இதனுடன் இன்னும் நான்கு இலைகளையும் சேர்த்து ஐந்து இலைகளைப் பஞ்ச வில்வம் என்பர்.  கூவிளம், நொச்சி, கிளுவை, மாவிலங்கம், விளா என்பவை அவை.
       சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு.  கிழக்கில் உள்ள முகம் தத்புருஷம், தெற்கில் உள்ளது அகோரம், மேற்கில் உள்லது சத்யோஜாதம், வடக்கில் உள்ளது வாமதேவம்.  மேலே ஒரு முகம் உண்டு.  அது ஈசானம் எனப்படும்.  இந்த ஐந்து முகங்களில் இருந்து கூவிளம், நொச்சி, கிளுவை, மாவிலகம், விளா என்பவை தோன்றின.  அது பஞ்ச வில்வங்களாயின என்பது வில்வமகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தியாகும்.
       சிவபெருமானுக்கு விசேஷ அர்ச்சனை பஞ்சமுக அர்ச்சனையாகும்.  ஒரே சமயத்தில் 5 சிவாச்சாரியர் 5 வகையான பஞ்ச வில்வங்களைக் கொண்டு பூஜிப்பர்.  ஒரு முகத்துக்கு ஒரு இலை. இறுதியில் ஐவகையான பிரசாதங்களை நிவேதித்து ஐவர் ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வர். இது பஞ்சமுக அர்ச்சனை எனப்படும்.
--- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர் பக்திமலர். மார்ச் 14, 2013.  

Sunday, November 9, 2014

கைபேசி.

    கம்பித் தொடர்பு இல்லாமல் ஒரு தொலைபேசி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை பொதுமக்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் இருந்தது.  முக்கியமாக மோட்டோரோலா நிறுவனமும், பெல் லாக்ஸ் நிறுவனமும் இது குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கின.  வென்றது மோட்டோரோலா நிறுவனம்.  அந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த மார்ட்டின் கூப்பர் என்பவர்தான் கைபேசியைக் கண்டுபிடித்தார்.  அதன் எடை 2.5 பவுண்டு.  ஒன்பது அங்குல நீளமும் 1.75 அங்குல அகலமும், 5 அடி ஆழமும் கொண்டதாக அது இருந்தது.  அதில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள்தான் பேச முடிந்தது.  அதற்குள் மின் சக்தி தீர்ந்துவிடும்.  ரீசார்ஜ் செய்ய 10 மணி நேரத்தைவிட அதிகம் தேவைப்பட்டது.  1947ல் AT&T என்ற நிறுவனம்தான் கைபேசி சேவையை வணிகமயமாக்கியது.  செயின்ட் லூயி என்ற இடத்தில் விற்பனை தொடங்கியது.  விரைவில் சிறுசிறு நகரங்களுக்கும் இது பரவியது.  என்றாலும் 5000 வாடிக்கையாளர்களோடு இது நிறுத்திக் கொண்டது.
--தினமலர். சிறுவர்மலர்.  மே 17, 2013. 

Saturday, November 8, 2014

சதாபிஷேகம்.

   சதாபிஷேகம் நடத்த ஒருவருக்கு எத்தனை ஆண்டு, மாதம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்?
     சதம் என்றால் நூறு.  சதாபிஷேகம் நூறு வயது பூர்த்தியாகி செய்ய வேண்டும் என்பதில்லை.  எண்பது வயது பூர்த்தியாகுதல்,  கொள்ளுப்பேரன் பிறத்தல் அல்லது ஆயிரம் பிறை காணுதல் ஆகிய மூன்றுமே சதாபிஷேகம் செய்துகொள்ளத் தகுதியைத் தருகின்றன.  வளர்பிறையில் மூன்றாம் பிறையைக் காணுவதை சந்திர தரிசனம் என்பர்.  ஒரு ஆண்டுக்கு 13 முறை சந்திர தரிசனம் செய்யலாம்.  நினைவு தெரிந்த நாளிலிருந்து அதாவது நான்கு வயது முதல்  சந்திர தரிசனம் செய்வதாகக் கணக்கிட வேண்டும்.  76 ஆண்டுகல் 10 மாதங்கள் நிறைவடைந்தால் ஆயிரம் முறை சந்திர தரிசனம் செய்த கணக்கு வரும்.  இதனுடன் விடுபட்ட நான்கு வயதையும் சேர்த்துக் கொண்டால் 80 வயது மற்றும் 10 மாதங்கள் நிறைவடைந்த பிறகு ஆயிரம் பிறை கண்ட பேறு கிடைக்கிறதாக ( சந்திரனைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ) எண்ணி சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.  ஜன்ம நட்சத்திரத்தில்தான் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நல்ல சுபமுகூர்த்த நாளிலும் செய்யலாம்.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.
-- தினமலர் . பக்திமலர். மார்ச்  14 , 2013. 

Friday, November 7, 2014

பஞ்சமி நாட்கள்.

   பஞ்சமி நாட்கள் பற்றிய விவரம்:
சைத்ர ( சித்திரை ) வளர்பிறைப் பஞ்சமி  --  லட்சுமி பஞ்சமி.
சைத்ர ( சித்திரை ) தேய்பிறைப் பஞ்சமி  --  ஸ்ரீபஞ்சமி.
வைசாக ( வைகாசி ) வளர்பிறைப் பஞ்சமி  --  ஸ்ரீசங்கர ஜயந்தி.
ஆஷாட ( ஆடி )  வளர்பிறைப் பஞ்சமி  --  ஸ்கந்த பஞ்சமி.
சிராவண ( ஆவணி )  வளர்பிறைப் பஞ்சமி  --  நாக பஞ்சமி.
சிராவண ( ஆவணி )  தேய்பிறைப் பஞ்சமி  --  கருட பஞ்சமி.
பாத்ரபத ( புரட்டாசி )   வளர்பிறைப் பஞ்சமி  --  ரிஷி பஞ்சமி.
மார்க்சித்ர ( மார்கழி )  வளர்பிறைப் பஞ்சமி  --  நாக பஞ்சமி.
மாக ( மாசி )   வளர்பிறைப் பஞ்சமி  -- வசந்த பஞ்சமி.
பால்குண ( பங்குனி )  வளர்பிறைப் பஞ்சமி  -- ரங்க பஞ்சமி.
-- தினமலர் . பக்திமலர். மார்ச்  14 , 2013.

Thursday, November 6, 2014

குட்டிக்கோள்

குட்டிக்கோள்களைக் கட்டி இழுத்து வர முடியும் !
      ஆஸ்ட்டெராய்டுகள் ( Asteroid ) என்பவை நமது சூரிய வெளியில் ( Solar System ) பெரிய மலைகளைப்போல் மிதந்து சூழ்ந்துவரும் குட்டிக்கோள்கள்
( Planet - like bodies ) பெரும் பாறைகள் !!
      இந்தப் பாறைகளில் 5,00,000 கிலோ எடையுள்ள ஒரு குட்டி ஆஸ்ட்டெராய்டை ஒரு பெரிய பையைப்போட்டுப் பிடித்து இழுத்துச் சென்று,  விண்வெளியில் ஈர்ப்புவிசைச் சமநிலை கொண்ட ஓர் இடத்தில் நிறுத்தி உபயோகப்படுத்திக் கொள்வதற்கு நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
      அதை ஒரு விண்வெளி நிலையமாக ( Space Station ) உபயோகித்துக்கொள்ள விரும்புகின்றார்கள்  நாசா விஞ்ஞானிகள். செவ்வாய்க்கு மனிதனை அனுப்பப் போகின்றார்கள் இல்லையா?  அப்போது பூமியிலிருந்து செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச் செல்கின்ற விண்கலம் ( ஸ்பகே க்ரஃப்ட் ) இடையில் அந்த ஆஸ்ட்டெராய்டு விண்வெளி நிலையத்தில் மறுபடியும் எரிபொருள் நிரப்பிக்கொள்ளும்!
     ஒரு 50 அடி டயாமீட்டர் உள்ள பையொன்றை அவர்கள் தயாரித்துக் கொள்ளப்போகிறார்கள்.  ஆஸ்ட்டெராய் பிடிக்கும் கலம் ஒன்றையும் உருவாக்கிக்கொள்ளப் போகின்றார்கள்.  அக்கலம் பழைய ' அட்லாஸ் v ' ராக்கெட்டினால் உந்தப்படும்.  பூமிக்கும், சந்திரனுக்கும் இடையில் ஆஸ்ட்டெராய்டு
செலுத்தப்படும்.   ஆஸ்ட்டெராய்டு நெருங்கிய தொலைவுக்கு வந்ததும் அந்த 50 அடி டயாமீட்டர் பை விண்கலத்திலிருந்துவெளியே வீசப்பட்டு ஆஸ்ட்டெராய்டைச் சுற்றி மூடிக்கொள்ளும்.  இப்படி எலியை அமுக்கிப் பிடித்ததுபோல் அந்த ஆஸ்ட்டெராய்டை மூடிக் கட்டிய பிறகு, விண்கலம் அதை இழுத்துக் கொண்டு வந்துவேண்டிய இடத்தில் விடும்!
    Courtesy:  " The Times of India "  ( " Nasa Plan : Asteroid, make it refueelling station ")
   -- தமிழில்: பல்லவசூரியன்.
   --  மஞ்சரி. பிப்ரவரி 2013.
  ---   இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.

Wednesday, November 5, 2014

' ஏசி ' தலையணை.

  ஏசி தலையணை என்றவுடன் குளுகுளு காற்றை செலுத்துமோ என்று எண்ணிவிட வேண்டாம்.  இது, அசுத்தக் காற்றை வெளியேற்றி தூய்மையான காற்றை உள் செலுத்தும் செயல்பாட்டைக்கொண்டது.
     நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டி ஜப்பானில் நடைபெற்றது.  இதில் ஆயிரத்து 700 பேர் கலந்துகொண்டனர்.  அவற்றிலிருந்து ஆயிரம் சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.  அதில் தூங்கும்போது ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தலையணையும் அடங்கும்.  இதை சீனாவின் ஜிலின் அனிமேஷன் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த மாணவர் குயிங்ஜி தயாரித்துள்ளார்.
     அலியோ என்ற செல்களால் உருவாக்கப்பட்டுள்ள இது,  பார்வைக்குச் சாதாரண தலையணை போல்ட்தான் இருக்கும்.  ஆனால், இதன் மேல் தலைவைத்து தூங்கும்போது நாம் வெளிவிடும் கார்பன் மோனாக்சைடை உறிஞ்சிக்கொண்டு,  ஆக்சிஜனை வெளியேற்றும்.  சுத்தமான காற்று கிடைப்பதால் தொந்தரவின்றி  தூங்கலாம் என்பதோடு, தூங்கி எழுந்தபின் வழக்கத்தை விட அதிகமான சுறுசுறுப்பும், உற்சாகமும் கிடைக்கும் என்கிறார் குயிங்ஜி.
-- கர்ணா.
--  தினமலர் . வாரமலர். 12 . 05. 2013. 

Tuesday, November 4, 2014

இதுவும் புண்ணியம்தான் !

  கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இறை அடியார்களை,  நம் வீட்டு விருந்தினர் போலப் பாவித்து சில பணிவிடைகளைச் செய்வதிலும் புண்ணியம் உண்டு.
     அப்படி செய்ய வேண்டிய பணிவிடைகள் எவை என தெரிந்து கொள்ளுங்கள்:
ஆசனம்  --  அமர்வதற்குத் தவிசு அளித்தல்.
பாத்யம்  --  கால் அலம்ப நீர் தரிதல்.
அர்க்யம்  --  கை கழுவ நீர் தருதல்.
ஆசமணீயம்  --  பருகுவதற்கு நீர் வழங்குதல்.
அபிஷேகம்  --  திருமுழுக்கு நீர் ஆட்டுதல்.
வஸ்திரம்  --  அணிந்து கொள்ள ஆடைகள் வழங்குதல்.
கந்தம்  --  நறுமணப் பொருட்கள் தருதல்.
புஷ்பம்  --  மலர் மாலைகள் சூட்டுதல்.
தூபம்  --  அகில், சந்தனம் முதலிய நறுமணப் புகையிடுதல்.
தீபம்  --  ஒளி விளக்குகள் ஏற்றி மும்முறை வலமாகச் சுற்றுதல்.
      இப்படி பல வகையான பணிவிடைகள் செய்வதும்,  கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் நாம் வாழும்போதே தேடிக் கொள்ளும் புண்ணியச் செயல்களாகும்.
-- தேவராஜன்.
-- தினமலர் . வாரமலர். 12 . 05. 2013.

Monday, November 3, 2014

புலியோ புலி

  சிவபெருமானுக்கும் புலிக்கும் தொடர்பு அதிகம். புலி தொடர்பான சில கேள்விகள் இதோ:...
     இது சிவ சஞ்சரியில் உள்ள விடுகதை.
1.  ஒரு புலியைச் சூடினான்.அது என்ன புலி?
2.  ஒரு புலியை உடுத்தினான் அது எந்த புலி?
3.  ஒரு புலியை அணிந்தான் அது எந்தப் புலி?
4.  ஒரு புலி மகிழ ஆடினான் அது எந்தப் புலி?
5.  ஒரு புலிபோன்ற பாதத்தான் அது எந்தப் புலி?
6.  ஒரு புலியைத் தாங்கினான் அது எந்தப் புலி?
விடை:
1. சூடிய புலி அம்புலி ( சந்திரன் ).   2.தருகாவன முனிவர் ஏவிய புலியின் தோலை ஆடையாக அணிந்தான்.  3. சிவன் அணிந்தது புலிநகக் கொன்றை மலர்.
4. சிவன் ஆடக் கண்டு மகிழும் முனிவர் புலிக்கால் முனிவர் ( வியாக்ரபாதர் ).  5. தாமரை போன்ற பாதத்தை உடையவன் புண்டரீகம். மரை -- புலி எனப்
பொருள்படும்.  6. சண்ட- தாண்டவத்தில் புலியை மானைப்போல ஏந்தியாடுவான்.
-- தினமலர் பக்திமலர் . மார்ச் 28,  2013. 

Sunday, November 2, 2014

ஐபோனுடன் இணைக்கக்கூடிய வாட்ச்.

 கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள கேசியோ, புளுடூத் மூலமாக ஐபோனுடன் இணையும் வகையில் புதிய வாட்ச்சை அறிமுகப்படுத்தி உள்ளது.
     இந்த புதிய வாட்ச் பல பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டது. இந்த வாட்ச், இங்கமிங் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் வந்தால் அலர்ட் கொடுக்குமாம்.
     மேலும் போன் பைண்டர் என்ற பெயரில் ஒரு வசதி உள்ளது.  அதன்படி, வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்தினால், போனில் அலாரம் அடிக்குமாம். மேலும் ஐபோனுடன் உள்ள இணைப்பு துண்டிக்கும்போது, வாட்ச் வைப்ரேட் ஆகுமாம். இதன் மூலம் போன் திருடுப்போவது மற்றும் தவறி கீழே விழுவதை தவிர்க்க முடியும்.
     இதைத்தவிர, பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் ரெகுலர் அப்டேட்டுகளுக்கு அலர்ட் தருமாம். இதில் உள்ள பட்டனின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஜிபி -5600 ஜிபி -   6900  ஏபி என வகையான மாடல் வாட்சுகளை கேசியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.9,995 ஆகும்.
     இந்த வாட்சின் புளுடூத் ரேஞ் அலவு 2 மீட்டர் வரை இருக்கும் என்றும் 100 நகரங்கள் மற்றும் 35 டைம் சோன் உள்ளடக்கிய உலக நாடுகளில் உள்ள நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி, பகல் நேரத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்தும் வசதி என பல சிறப்பம்சங்களை கொண்டது என்று கேசியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
--- தினமலர் . 11 . 5. 2013. 

Saturday, November 1, 2014

ஓம் ஒலிக்கும் ஊர்க் கடிகாரம்.

 லண்டன் மாநகருக்கு விஜயம் செய்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்ப்பது ' பிக்பென் ' ( Bigben ) எனப்படும் மிகப்பெரிய கடிகாரம்.  ஆனால், பெங்கர் நகருக்கு விஜயம் செய்பவர்களில் பெரும்பான்மையோர், பார்க்காமலேயே இருக்கும் ஒரு ' பிக் பென் ' இருக்கிறது. லண்டன் கடிகாரத்திற்கு இணையான இந்தக் கடிகாரம், நமது உள்நாட்டுத் தொழில் நுணுக்க விற்பன்னர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் நாமனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
     பெங்களுரூ ராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள ஓம்கார் ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள இந்தப் பெரிய கடிகாரத்தை வடிவமைத்தது,எச்.எம்.டி. என, சுருக்கமாக அழைக்கபடும் ' இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் ' எனும் அரசு சார்ந்த தொழிற்சாலை.  ஒவ்வொரு மணி நேரத்தின் போதும் ' ஓம் ' எனும் நாதஒலி எழுப்பி, பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் பரவசமூட்டும் கடிகாரம் இது.
     'ஓம்கார் மலை' என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மீது 2002ஆம் ஆண்டு  ஜனவரி 30 இந்த கடிகாரம் நிறுவப்பட்டது. இந்த குன்றின் உச்சிக்குப் போய்விட்டால், தெற்கு பெங்களூர் நகர் முழுவதையும் பார்த்துவிட முடியும்.
     கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கடிகாரத்தின் குறுக்களவு ( விட்டம் ) 24 அடி. தரையிலிருந்து 40 அடி உயரத்தில் 9 ச.அடி குறுக்களவு கொண்ட இரண்டு பெரிய தூண்களின் மீது பொருத்தப்பட்டுள்ளது, இந்த ராட்சஸ கடிகாரம்.  இந்த ' பிக்பென்' கடிகாரத்த்தின் எடை 500 கிலோ,  நிமிட முள், மணி முள் ஒவ்வொன்றின் எடையும் 40 கிலோ. இந்த 'பிக்பென்' எனப்படும் ராட்சஸ கடிகாரம் அமைக்க, சுமார் பத்து லட்ச ரூபாய் செலவாயிற்று.
-- ஜனகன்,
-- மஞ்சரி. பிப்ரவரி 2013.
---  இதழ் உதவி: செல்லூர் கண்ணன்.