ஓர் அரசர் பக்கத்து ஊருக்கு வருவதாகக் கேள்விப்பட்டு ஊர் மக்கள் எல்லாம் காடு, கழனி வேலைகளை விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்கப் போனார்கள் . அரசர் ஏதாவது கொடுப்பார் என்று எண்ணம் . ஒரு கிழவி மட்டும் அப்படிப் போகாது , மர நிழலில் உட்கார்ந்து கூடை முடைந்து கொண்டிருந்தாள் . அங்கு வந்த பிச்சைக்கார வழிப்போக்கன் , " பாட்டி நீ அரசரைப் பார்க்க போகவில்லையா ?" என்றான் . " வெட்டிப் பயல்கள் , வேலை இல்லாமல் போய் விட்டார்கள் . நான் உழைக்காமல் போனால் என் குடும்பத்துக்கு யார் சோறு போடுவார்கள் ?" என்று படு சூடாகப் பதில் கொடுத்தாள் பாட்டி .
கலீர் என்று சிரித்த பிச்சைக்காரன் அரச முத்திரையிட்ட தங்க மோதிரத்தைப் பாட்டியிடம் நீட்டினான் . திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் பாட்டி . " அரசனை தரிசிக்கப் போனவர்கள் திரும்பி வந்ததும் , உழைத்துப் பிழைக்கும் உன்னை வந்து அரசரே தரிசித்து விட்டுப் போனார் என்று இதைக் காட்டு " என்று கொடுத்துவிட்டு சிட்டாய்ப் பறந்தார் அரசர் . இதுதான் உழைப்பின் பெருமை .
உழைப்பதால் சக்தி விரயமாவதாகப் பலர் தவறாக நினைக்கிறார்கள் . இல்லை, அது மேலும் பலமடைகிறது . உடல் நலிவடைவதில்லை . பொலிவடைகிறது . உழைத்தவனுக்குப் பசி என்கிற பரிசு கிடைக்கிறது . பசி செரிமானம் என்ற சிறப்பு செய்கிறது . உழைக்காதவனுக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது . உழைத்தவனுக்கு ஜொலிக்கிறது .
--- சுகி. சிவம் . தினகரன் . 27. 02. 2010 .
No comments:
Post a Comment