சூரியனின் சுந்தரக் கோயில் .
ஒரிசா மாநிலத்தில் அழகு சிற்பங்களுடன் , ஆன்மிகப் பெருமையுடன் ஜொலிஜோலித்துக் கொண்டிருக்கிறது , கோணார்க் கோயில் . பூரியில் இருந்து 35 கி.மீ., புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது இந்த சூரியத் திருத்தலம் .
கோணா என்றால் சக்தி மூலை ; அர்க்கா என்றால் சூரியன் . கோணார்க் என்றால் , சூரியன் அருள்பாலிக்கும் சக்தி மூலை . கோயில் எழுந்த பின்னணி சுவாரஸ்யமானது ....
சம்பா என்ற மன்னன் தொழுநோயால் அவதிப்பட்டான் . சூரியனை வழிபட்டால் நோய் நீங்கும் என விமோசன வழி தெரிந்ததும் , இங்குள்ள சந்திரபாகா நதியில் நீராடி சூரியனை நோக்கி தவம் செய்து நோய் நீங்கப்பெற்றான் நேர்த்திக்கடனாக கோயில் கட்டினான் . இந்தக் கோயிலை 13 வது நூற்றாண்டில் கங்க வம்ச மன்னரான நரசிம்மதேவர் புதுப்பித்தார் . ஆயிரத்து 200 சிற்பிகளின் 12 ஆண்டு உழைப்பில் ஆன்மிக அழகு பொக்கிஷமாகப் பிரமாண்டமாக எழுந்தது கோணார்க் கோயில் !
வேற்று மதத்தினரின் படையெடுப்புக்களில் சிதைவுகள் நடந்தாலும் , தேர் வடிவிலான பிரதான கோயில் கம்பீரம் குறையாமல் தலைநிமிர்ந்து நிற்கிறது .தேர் வடிவின் நாலாபுறமும் தலா 10 அடி விட்டத்திலான 24 சக்கரங்கள்; முன்பகுதியில் தேரை இழுக்கும் தோற்றத்தில் 7 குதிரைகளின் சிற்பங்கள் உள்ளன . நான்கு மேல்பகுதிகளிலும் உள்ள சூரியபகவானின் சிற்பங்களில் சூரிய ஒளி படரும் அற்புதக் காட்சி , சொர்க்க கற்பனைகளையும் தோற்கடிக்கும் !
முகசாலா என்ற நுழைவாயில் , நடன அரங்கம் , சூரியனின் மனைவியான சாயாதேவியின் கோயில், நடனக்கூடம் , ஆளுயர மனித சிற்பங்கள் , பிரமாண்டமான யானை, குதிரை, காவல் வீரர்கள் சிலைகள், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட கல் தோரன வளைவுகள் என பிரமிக்க வைக்கிறது கோணார்க் கோயில் . இது யுனெஸ்கோவால் சர்வதேச பாரம்பரியக் கலைச் சின்னம் என அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இடம் . ஒரு முக்கியத் தகவல் : இது சிதிலமடைந்த கோயில் என்பதால் , மூலவர் ( சூரிய பகவான் ) விக்ரகத்தை கி.பி. 1696ல் பூரி கோயிலுக்கு மாற்றிவிட்டனர் !
--- தினமலர் , இணைப்பு . மார்ச் 7 2010 .
No comments:
Post a Comment