ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடம் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் ! அதுதான் ' பிரீடம் ஷிப் ' என்ற மிதக்கும் நகரம் !
இதன் நீளம் 1,317 மீட்டர்கள் . அகலம் 221 மீட்டர்கள் . உயரம் 103 மீட்டர்கள் . இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தைவிட உயரமானது . இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது . இவ்வளவு பெரிய ' மெகா ' கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல , உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது .
' பிரீடம் ஷிப் ' பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்கவைக்கின்றன . இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்புப் பிரிவுகள் அமையும் . இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டபடி இருக்கும் . இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றிப்பார்க்கலாம் .
இந்தக் கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில் , 1,158 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையும் , விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கப்படும் . உல்லாசப் படகுகளை நிறுத்தும் பகுதி , ஒரு பெரிய வணிக வளாகம் , பள்ளி, கல்லூரி, கோல்ப்மைதானம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், ஓய்வாய் கழிப்பதற்கு 200 திறந்த வெளிப் பகுதிகள் ஆகியவையும் அமையும் .
இம்மாபெரும் கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை . இதில் பல உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும் . விளையாட்டுப் பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு . டென்னிஸ், கூடைப்பந்து, ' பவுலிங் ' போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடலாம் . நீச்சல் குளம், பசும்புல் பரப்பு, ' ஸ்கேட்டிங் ' வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வசதி போன்றவைகளும் உண்டு .
ஒவ்வொருகுடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும் கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம் . இணைய வசதியும் உண்டு .
இந்த மிதக்கும் நகரத்துக்கென்று ஒரு தனி பாதுகாப்புப் படையும் உண்டு . இக்கப்பலின் மற்றொரு சிறப்பம்சமாக இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் . இதன் கழிவுகளால் கடல் பாதிக்கப்படாமல் அவை மறுசுழற்சி செய்யப்படும் அல்லது பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கப்படும் .
இவ்வளவு பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல . அதற்கென்று , தலா 3,700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் . கற்பனைக்கும் அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டிமுடிக்க மூன்றாண்டுகளும் , பல்லாயிரம் கோடி ரூபாயும் ஆகும் என்று கனக்கிட்டிருக்கிறார்கள் .
ஆதங்கமான ஒரே விஷயம் , இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீஸ்வரர்களால் மட்டுமே முடியும் !
--- தினத்தந்தி , இணைப்பு . 26 - 02 - 2010 . இதழ் உதவி : N. G. கலியபெருமாள் , திருநள்ளாறு .
1 comment:
அன்பு ராஜ் அவர்களே ! மதமாற்றம் . நன்கு சொன்னீர்கள் . நன்றி !
Post a Comment