Saturday, September 26, 2015

ஸ்ரீரங்கம்.

உயர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கம்.
     ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.  13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.
தங்க விமானம்
     மூலமூர்த்தியாகிய ஸ்ரீரங்கநாதப் பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார்.  கருவறைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் கருவறைமேல் தங்க விமானம் ஜொலிக்கிறது.  தங்க விமானத்தின் தெற்குப் பக்கம் பரவாகதேவரின் தங்க சிலையும் பளபளப்புடனும் நேர்த்தியுடனும் விளங்குகிறது.
கம்பன் காவியம் அரங்கேறிய தலம்
     கவிச்சக்ரவர்த்தி கம்பன், தன் உன்னதப் படைப்பான ' ராமாவதாரம் ' என்ற ராமாயணக்காப்பியத்தை அரங்கேற்றம் செய்ய ஸ்ரீரங்கத்தையே தேர்ந்தெடுத்தான்.  ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி அருகே கோயில் கொண்ட நரசிம்மர் சன்னதியில்தான் கம்பன் தன் காவியத்தை அரங்கேற்றினான்.
     கம்பன் தன் காவியத்தின் புதிய படைப்பான ' இரணியன் வதைப்படல'த்தைப் பாடியபோது, ' மேட்டு அழகிய சிங்கர் ' என்ற திருநாமம் கொண்ட நரசிம்ம மூர்த்தி தன் தலை அசைத்து கம்பன் காவியம் அரங்கேற அங்கீகாரம் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.
-- புலவர் முத்து வெங்கடேசன். ஆனந்த ஜோதி.
--  ' தி இந்து ' ஆளிதழ்.  வியாழன்,  டிசம்பர் 19, 2013. 

No comments: