சித்தர்களில் பலரை , மிகவும் பிற்படுத்தப்பட்ட -- ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் கர்ணபரம்பரைக் கதைகளும் , போகரின் நூலும் கூறுகின்றன .
சட்டைமுனி -- சிங்களத் தாசியின் மகன் ; கருவூரார் -- கல்தச்சர் ; கொங்கணர் -- கொல்லர் ; மூலத்தீசர் -- பள்ளர் ; உரோமரிஷி -- செம்படவனுக்கும் மலைக்குறத்திக்கும் பிறந்தவர் ; பாம்பாட்டிச் சித்தர் -- மாடுமேய்க்கும் இடைச்சிக்கும் , குருட்டு எமங்கலியனுக்கும் பிறந்தவர் ; இடைக்காடர் , குதம்பைச் சித்தர் -- இடையர்கள் ; சிவவாக்கியர் -- குறப்பெண்ணை மணந்தவர் என்பதாக அந்தக் குறிப்புகள் நீள்கின்றன .
மேல்தட்டு சாதிகளால் அழுத்தி நசுக்கப்பட்டு , கசக்கிப் பிழியப்பட்டதால் ஏற்பட்ட காயங்களும் -- வலியும் அவர்களுக்குள் கனன்று எரிந்திருக்க வேண்டும் . அந்தக் கனல் , சாதிப்பிளவுகளையும் -- அதை விதைத்துப் பயிராக்கி , அறுவடை செய்த பிராமணர்களையும் -- சத்திய ஆவேசத்துடன் சாடுவதற்கான உத்வேகத்தை அவர்களுக்கு ஊட்டியிருக்கலாம் , என்று கருத இடமிருக்கிறது . அப்படி இல்லையென்றால் , மற்றவர்களின் பார்வையில் சித்தர்களை இழிவானவர்களாகக் காட்ட , இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைப் பின்னாளில் திட்டமிட்டுப் பரப்பி இருக்கலாம் . எப்படியிருந்தாலும் , வைதீகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த வர்ணாசிரமத்தை அதிர வைக்கும் அறிவுப்போரை , சித்தர்கள் தலைமை ஏற்று வழிநடத்தினர் .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு . எனும் கட்டுரையில் . நந்தா . குமுதம் தீராநதி . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .
No comments:
Post a Comment