சமண -- பௌத்த சமயங்களின் வீழ்ச்சியும் , பக்தி மார்க்கத்தின் வெற்றியும் பல புதிய மதக்கலாச்சாரங்களை தமிழகத்தில் தோற்றூவித்தன . அவற்றில் ஒன்றுதான் சந்நியாசிகளுக்குக் கிடைத்த சமூக அந்தஸ்த்தும் -- அங்கீகாரமும் . சைவமும் , வைணவமும் போட்டிபோட்டு அவர்களை இறைவனின் அடியார்களாகச் சித்தரித்தன . கடவுளின் அம்சமாகக்கூட அவர்கள் கருதப்பட்டனர் . அவர்களை உபசரிப்பதும் , உணவளிப்பதும் , வணங்குவதும் , அவர்கள் கேட்பதைக் கொடுத்துத் திருப்திப்படுத்துவதும் , சாதாரண பக்தர்களின் மதக்கடமைகளாக -- தொண்டுகளாகப் போதிக்கப்பட்டன . அந்தத் தொண்டுகள் சுவர்க்கத்திற்கான திறவுகோல்கள் எனச் சான்றளிக்கப்பட்டன . பெற்ற பிள்ளையைக் கொன்று சமைத்துப் போடவேண்டும் என்று கேட்ட சிவனடியாருக்காக , மகனையே கொன்று பிள்ளைக்கறி சமைத்த சிறுதொண்டரும்... ' எனது உடல்பசியைத் தணிக்க உனது மனைவியைத் தரவேண்டும்' என்று கூசாமல் கேட்ட சிவனடியாரை மகிழ்விக்க , தனது இல்லாளைத் தர முன்வந்த இயற்பகையும் , நாயன்மார்களாகப் போற்றப்பட்டனர் . பகுத்தறிவு -- மனிதாபிமானம் -- பெண்ணியம் ஆகியவை , பக்தியின் பெயரால் அங்கே படுகுழியில் புதைக்கப்பட்டன . அந்த அளவிற்குச் சந்நியாசிகளுக்கு உயரிய செல்வாக்கை உருவாக்கி வளர்த்தன வைதீக மதங்கள் . நாளடைவில் அந்தச் சாமியார்களில் பலர் மண்ணாசை , பெண்ணாசை , பொன்னாசை என்ற மூன்றையும் துறக்காமல் , அவற்றைச் ' சிக்கெனப் பிடித்துக்கொண்ட ' சுயநலமிகளாய் மாறி , பசுத்தோல் போர்த்திய புலிகளாய் , மதப்போர்வைக்குள் பாதுகாப்பாக உலாவந்தனர் . காவி உடைக்குள் காமசூத்திரர்களைச் சரிபார்க்கும் சரச ஒத்திகைகள் நடத்தப்பட்டன . அப்பாவி ஆண்களும் , பெண்களும் பக்தியின் பெயரால் நடந்த அந்தச் சுரண்டலுக்குப் பலியானார்கள் . இது , இன்றுவரை நீடிக்கும் அவலமாகத் தொடர்வது வெளிப்படையான -- வேதனையான உண்மை . சித்தர்களின் காலத்தில் இப்படிப்பட்ட கபட சந்நியாசிகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருந்ததோ என்னவோ ? பெரும்பாலான சித்தர்கள் இந்தப் போலி வேடதாரிகளை ஈவிரக்கம் இன்றித் தோலுரித்துக் காட்டினார்கள் . கஞ்சா உண்டும் , மாதரை மயக்கியும் , திரைமறைவில் சுகபோகங்களை அனுபவித்த அவர்களைப் பற்றிய எச்சரிக்கையும் , விழிப்புணர்வையும் மக்களிடம் உருவாக்க , சித்தர்கள் அயராமல் பாடுபட்டனர் .
--- சித்தர்களின் வைதீக மறுப்பு . எனும் கட்டுரையில் . நந்தா . குமுதம் தீராநதி . செப்டம்பர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.
2 comments:
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
பாலு அவர்களே ! நன்று சொன்னீர்கள் .
Post a Comment