தண்டனைகள் அளிப்பதில் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, தவறு செய்தவர் வருந்த வேண்டும் என்பது. இன்னொன்று, அவருக்கு அளிக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பது.
ஆன்மிகத்திலும் ஏறக்குறைய அனைத்துக் கடவுளர்களும் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கியிருப்பதைப் பார்க்கலாம். தவறு செய்தால் நரகம் போக வேண்டும் என்பது பல மதங்களிலும் சுட்டிக்காட்டப்படும் அல்டிமேட் தண்டனை.
தண்டனைகளிலேயே அதிக பட்சம் மரண தண்டனைதான். மனித உரிமை அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் முயற்சியாக, பல நாடுகளில் மரண தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியாவிலும் rare among the rarest குற்றங்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது .
மரண தண்டனையை நிறைவேற்றுவதிலும் நாட்டுக்கு நாடு வேறு வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஜப்பானிய மக்களில் சிலர் தங்கள் மன்னர் இறந்துவிட்டால் துக்கம் தாங்காமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு மண்டியிட்ட நிலையில் அமைதியாக உயிர் துறப்பார்களாம். இதை ஹராக்கி என்பார்கள்.
சிலர் தங்களுக்குத் தாங்களே சுயதண்டனைகள் கொடுத்துக் கொள்வர். மகாத்மா காந்தி இதுபோல தமக்குத் தாமே தண்டனைகள் வழங்கிக் கொண்டதுண்டு.
திருவள்ளுவர் கொடுக்கச் சொல்லும் தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்! தவறு செய்பவர்களூக்குக் கொடுக்கும் பெரிய தண்டனை அவர்களை மன்னிப்பது என்கிறார்.
' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.'
--- லதானந்த், குங்குமம் 18 . 10 . 2010.
--- இதழ் உதவி: P. சம்பத் ஐயர் , திருநள்ளாறு.
No comments:
Post a Comment