இறையன்பு நிறையீர் !
வணக்கம் . மென்மேலும் வளர இறையருளைப் பிரார்த்திக்கிறேன் . வாழ்வியலில் கடைபிடிக்கப்பட்டு வரும் இல்லற தர்மங்கள் இன்றைய இந்தியாவின் விலைவாசி ஏறுமுகத்தில் இழிவுகளின் உயரங்களாக மாறிவருகின்றன . அதாவது
ஒரு கணவனின் உயிரணுவும், மனைவியின் சினைமுட்டையும் சோதனைக்குழாயில் இணைக்கப்பட்டு அதை வாடகைத் தாய் ஒருத்தியின் வயிற்றில் வளரச் செய்து குழந்தைப் பேறுக்குப் பிறகு சினைமுட்டை தந்தவளிடம் அவளின் குழந்தையாகவே ஒப்படைக்கப்படுகிறது .
இந்த வகை சீரழிவுக் கலாச்சாரம் பெங்களுர், ஹைதராபாத், ஆமதாபாத் போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வருகின்றன . குறிப்பாக ஐ.டி., சாஃப்ட்வேர் துறைகளில் பணியாற்றுகின்ற ஆண்கள், பெண்கள் திருமணத்திற்குப் பிறகு பணி, தகுதி உயர்வு போன்றவை குழந்தைப்பேறு காரணமாக பாதிக்கிறது என்பதால் கிடைத்துவரும் அபரிமிதமான வருவாயை இழக்க மனமில்லாததாலும், இருப்பதைக் கொண்டு சமரச வழியில் சிக்கனமாக வாழ முயற்சி மேற்கொள்ளாததுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன .
இதே போல வாடகைத்தாயாக இருக்க இசைவு தரும் பெண்கள் வெறும் இரண்டு லட்ச ரூபாய்களும், சில மாத மருத்துவ கண்காணிப்பு மற்றும் சத்தான உணவும் கிடைக்கப் பெறுவதால் வாடகைத்தாயாக முன்வர சம்மதிக்கிறரார்கள் .
அன்பு, அரவணைப்பு, அந்தரங்கத்தில் பகிர்ந்துகொள்ளும் பாரம்பரியப் பெருமைகளின் நீட்சியாக மனமும், உடலும் ஒன்றில் ஒன்று ஒன்றிக் கலந்து உருவாகும் புத்திரர்களே உத்தம புத்திரர்கள் . தம்பதியரின் உயிரை சினையிலிருந்தும் சோதனைக்குழாயிலும் உருவாக்கிய கரு வாடகைத்தாயின் வயிற்றிலுமாக வளர்ந்து பிரசவமானால் இந்தியத்தின் எதிர்காலம் மனச்சிதைவுகளின் தாயகமாக மாறிவிடும் . நம் தேசத்தின் குடும்ப உள்கட்டமைப்பை குலைக்கும் இச்சீரழிவைத் தடுக்க இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ அரும்பாடுபட்டு வருகிற மகான்கள், துறவியர்கள், அறநெறி போற்றி வளர்க்கும் ஆன்மிகச் செம்மல்கள் ஒருங்கிணைந்து முழுவீச்சில் பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தி விழிப்புணர்வைத் தூண்டிட வேண்டுகிறேன் .
--- 'சிவ ஒளி' பிப்ரவரி 2011 மாத இதழில் , ஆசிரியர் கா. விஜயராகவன் .
No comments:
Post a Comment