உங்களுக்குப் பேசத் தெரியுமா ? இதென்ன பிரமாதம் ? எல்லோரும்தான் பேசுகிறார்கள் . வாயைத் திறந்தால் பேச்சு . அது ஒரு பெரிய விஷயமா ? நிச்சயமாகப் பெரிய விஷயம்தான் . சரியான் நேரத்தில் , சரியான இடத்தில் , சரியானவிதத்தில் பேசுவதென்பது சாதாரண சமாச்சாரமே இல்லை .
பெரிய அரசியல் பிரமுகர்கள் , நிறுவனங்களின் தலைவர்கள் , முக்கிய அதிகாரிகள் , கலைத்துறைப் பிரபலங்கள் என்று யாரை எடுத்துக்கொண்டாலும் சரி , அவர்களுடைய பேச்சு , மற்றவர்களிடம் பழகும் விதம் ஒரு பெரிய ப்ளஸ் பாயின்டாக இருக்கும் . பல சமயங்களில் அதுவே அவர்களுடைய வளர்ச்சிக்கு ஏணியாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம் .
எந்தச் சூழ்நிலையிலும் பேச்சு ஒன்றையே ஆயுதமாக , கேடயமாகப் பயன்படுத்தி ஜெயிக்கமுடியும் என்கிற கருத்தை முன்னிருத்தியுள்ள ஒரு சுவாரஸ்யமான சூப்பர் ஹிட் தொகுப்பு , ' ஹவ் டூ டாக் டூ எனிவன் ' ( How To Talk To Anyone ) லீல் லௌண்டஸ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் பேச்சுக்கலை , பழகும்தன்மையை மேம்படுத்திக்கொள்வதற்கான் பல நுட்பங்கள் , வழிமுறைகள் , ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன .
அவரது வெற்றி சூத்திரங்களில் முக்கியமான பத்து இங்கே சுருக்கமாக :
1 . மனிதர்கள் எல்லோருமே உள்ளுக்குள் இன்னும் குழந்தைகள்தான் . அவர்களிடம் உள்ள ஏதேனும் ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினால் புளகாங்கிதம் அடைந்துவிடுவார்கள் . நீங்கள் சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஒரு நல்ல விஷயமாவது இருக்கும் . அதைத் துப்பறிந்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள் , ஸ்கோர் பண்ணுங்கள் .
2 . மற்றவர்களிடம் பேசும்போது மெஷின் கன் சுடுவதுபோல படபடவென்று பேசிக்கொண்டே இருக்காதீர்கள் . அடுத்தவர்களுடைய மனோபாவத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களுடைய பேசும் தன்மையை மாற்றுங்கள் , ஏற்றுங்கள் , அல்லது குறையுங்கள் ! அப்போதுதான் உங்கள் பேச்சு எடுபடும் .
3 . ஒருவரைப் புதிதாகத் தெரிந்துகோள்ளும்போது , அவர்களுடைய நெகடிவ் அம்சங்களை ( உதாரணமாக : தோல்விகள் , சர்ச்சைகள் ) முன்வைத்துப் பேசாதீர்கள் . அதெல்லாம் நீங்கள் நல்ல நண்பர்களாக நெருங்கியபிறகு பார்த்துக்கொள்ளலாம் .
4 . யார் பேசினாலும் அக்கறையோடு கவனித்துக் கேளுங்கள் , கண்கள் இங்கே யோசனை வேறு எங்கோ என்பதுபோல் நடந்துகொள்ளாதீர்கள் , ஆர்வமாய் தலையசைத்துக் கேளூங்கள் , அப்போதுதான் பேசுபவர்களுக்கு உற்சாகமாய் இருக்கும் .
5 . வெளியூர் , வெளிமாநிலம் , வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கிறபோது , முடிந்தவரை அவர்களுடைய லோக்கல் கலாச்சாரம் , பழகுமுறைகள்த் தெரிந்துவைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள் , அந்த அக்கறை அவர்களைக் கவரும் . உதாரணமாக ஒரு பஞ்சாபி சிங் உங்களைப் பார்த்து ' வணக்கம் சார் ' என்று சொல்லிக் கை கூப்பினால் அப்படியே மெய்சிலிர்த்துப் போய்விடமாட்டீர்களா ?
6 . ஒருவரை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போது , அவர்களைப்பற்றிய தனித்துவமான தகவல் ஒன்றை ஞாபகம் வைத்திருந்து சொல்லி ஆச்சர்யப்படுத்துங்கள் . ( உதாரணமாக : ' உங்க பொண்ணு டான்ஸ் கத்துக்கறதாச் சொன்னீர்களே , அரங்கேற்றம் எப்போ ? ' ) மிக எளிமையாகத் தோன்றுகிற இந்த உத்தி , அற்புதமான பலன்களைத் தரக்கூடியது . .
7 . யாரியமாவது உதவி கேட்க நேர்ந்தால் , அதைச் செய்வதன்மூலம் அவர்களுக்கு ஏதாவது பலன் இருக்கக்கூடுமா என்று யோசியுங்கள் , அதை முன்னே வைத்துப் பேசுங்கள் , அப்புறம் நீங்களே வேண்டாம் என்று சொன்னாலும்கூட , அவர்கள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள் .
8 . பேசிவிட்டுக் கிளம்பும்போது , மறக்காமல் நன்றி சொல்லுங்கள் . அதுவும் வெற்று ' நன்றி ' போதாது , ' உங்களிடம் பேசியதில் ரொம்பப் பிரமாதமான புது விஷயங்களைத் தெரிந்துகொண்டேன் , அதற்காக நன்றி ' என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள் , அடுத்த சந்திப்புக்கு அந்த ' நன்றி 'தான் அவர்களை உங்களிடம் கொக்கி போட்டு இழுக்கும் !
9 . முக்கியமான நபர்களைச் சந்திக்கும்போது அவர்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு சொல்லுங்கள் . பேசும்போது அவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லும்போது உங்கள் மீது மதிப்பு உயரும் .
10 . கடைசியாக , முகத்தில் ஒரு புன்னகையோடு பேசுங்கள் . சிடுசிடுவென்று இருப்பவரை யாருக்கும் பிடிக்காது . பேசாவிட்டாலும் புன்னகையே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் .
--- என். சொக்கன் . குமுதம் , 11. 8. 2010.
No comments:
Post a Comment