தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும்போது ' அலோ ' என்று ஏன் சொல்லுகிறார்கள் ?
பழைய பிரஞ்சு மொழியில், ' அங்கே யார் ? ' என்று கேட்க, ' ஹேலா ' என்பார்கள் . பழைய ஜெர்மானிய மொழியில், சிறிது தொலைவில் உள்ள ஓடக்காரரை அழைக்க ' ஹேலா , ஹல்லோ ' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள் . இந்த 3 வார்த்தைகளில் இருந்துதான் ' ஹலோ ' வந்திருக்கும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து .
பழைய ஆங்கிலத்தில் ' ஹலாவ் ' என்று ஒரு ' வாழ்த்து ' வார்த்தை உண்டு . அதற்கு, ' நீ நல்லாயிரு ! ' என்று அர்த்தம் .அந்த வார்த்தைதான் ' ஹலோ ' என்று மாறியுள்ளது என்பது வேறு ஆய்வாளர்களது கருத்து .
' அங்கே யார் ? ' என்று கேட்டல் , தொலைவில் உள்ளவரை அழைப்பதற்கான வார்த்தை , வாழ்த்து வார்த்தை என்ற மூன்று அர்த்தங்களுமே ' ஹலோ ' என்ற வார்த்தைக்குப் பொருந்துகின்றன . இதனால், இந்த வார்த்தையின் மூலம் எந்த மொழி என்று திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்படவில்லை .
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலக்சாண்டர் கிரஹாம் பெல், மறுமுனையில் இருப்பவரை அழைக்க ' அஹோய் ' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்றார் . இது கப்பலில் இருப்பவர்களை அழைக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை . சிறிதுகாலம் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது .
பிரபலக் கண்டுபிடிப்பாளரான தாமஸ் ஆல்வா எடிசன், ' அஹோய் ' என்பதைவிட ' அலோ ' என்பதே பொருத்தம் என்று கருத்து தெரிவித்தார் . இதைப் பலரும் ஏற்றதால், அலோ என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது !
--- தினமலர் , ஆகஸ்ட் 13 . 2010.
No comments:
Post a Comment