ஆற்று மணலுக்கு மாற்று பொருளாக, 'எம் சாண்ட்' எனப்படும் செயற்கை மணலை பயன்படுத்துவது, வழக்கத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் சேலம், கரூர், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில், இதற்கான ஆலைகள், அதிக எண்ணிக்கையில் வரத்துவங்கியுள்ளன. இருப்பினும், செயற்கை மணலை பயன்படுத்துவது தொடர்பாக, மக்களிடம் இன்னும் போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
துவக்கத்தில், கல்லுடைக்கும் ஆலைகளில் இருந்து, கழிவாக வெளியேற்றப்படும் துகள்களே, மேலும் பொடியாக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் சுத்தம் செய்யப்பட்டு, செயற்கை மணலாக பயன்படுத்தப்பட்டு வந்தது
ஆனால், இப்போது இந்த நிலை மாறிவிட்டது. செயற்கை மணல் தயாரிப்பதற்கென, தனியாக ஆலைகள் வந்துள்ள நிலையில், கல்லுடைக்கும் ஆலை கழிவுகளை பயன்படுத்துவது கைவிடப்பட்டு, குவாரிகளில் இருந்து, பொடி ஜல்லிகள் என்ற நிலையில், சிறு ஜல்லிகள் வாங்கப்பட்டு, செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது.
பொடி ஜல்லிகள் வாங்கப்பட்டு நொறுக்குதல், சலித்தல், வகை பிரித்தல், வடிவமைத்தல், அலசி கழுவுதல் ஆகிய நிலைகளில், இதன் உருவாக்கம் அமைந்துள்ளது. உயர் தொழில் நுட்ப அடிப்படையில், பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, இவை தயாரிக்கப்பட்டு, தேவையான நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
வழக்கமான மணலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையை காட்டிலும்,இதற்கான கலவையில் சிமென்ட் தேவை, 20 சதவீதம் வரை குறைகிறது. இதன்மூலம் கட்டுமான செலவில், சிமென்ட் வாங்குவதற்கு ஆகும் செலவும் மிச்சமாகும். அடிக்கடி செங்கல் விலை உயர்ந்து வரும் இன்றைய சூழலில், கட்டுமான பணிகளை மேற்கொள்வோருக்கு, இது சாதகமான விஷயமாக உள்ளது.
பல்வேறு நிலைகளில் துல்லியமாக சுத்தப்படுத்தி தயாய்க்கப்படுவதால், வழக்கமான ஆற்று மணலில் இருப்பது போன்று இதில் மாசு, தூசு, களிமண் கட்டிகள், இலைகள் போன்றவை இருக்காது. எந்த பணிக்கு, எந்த நிலையில் வேண்டுமோ அந்த அளவுக்கு செயற்கை மணல் கிடைக்கிறது எங்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
-- கனவு இல்லம்.
-- தினமலர் சென்னை சனி, 31-5-2014.
No comments:
Post a Comment