ஈயின் நியாயம்: ஈ ஒருவர் பருகுவதற்கென வைத்த பால் முதலியவற்றில் வீழ்ந்து தம்முயிர் போக்கி,பால் முதலியவற்றினையும் பழுதாக்கும். அதுபோலக் கயவர் தம் உயிர் விடுத்தேனும் பிறருக்கு இடையூறு விளைப்பர். மேலும் உடம்பில் நல்ல இடங்களையெல்லாம் விட்டுப் புண்ணுள்ள இடத்திலேயே ,ஈ மொய்க்கும். அதுபோல நல்லனவறை விடுத்து ,அல்லாதனவற்றையே அல்லாதவர் விரும்புவர்.இது மக்ஷிகா நியாயம் எனப்படும்.
ஈயானது தேன், நெய் முதலிய நறுமணப் பண்டங்களிலும் மொய்க்கும்; அதே சமயம் மலம் சுமந்து போவதைக் கண்டால் நறுமணப் பண்டத்தை விட்டு மலத்திற் சென்று மொய்க்கும். அதுபோல நல்ல சொற்பொழிவு நடக்கும் காலை கயவர் நல்ல பேச்சினை விடுத்து பின்னால் பேசும் தகாததையே எடுத்துக் கொள்வர்.
உடல் நிழல் நியாயம்: உடலின் நிழல் எப்போதும் ஒருவனை விட்டு நீங்காதவாறு போல மாணவன் ஆசிரியனை விட்டு நீங்காது வழிபடுவான் என்பது.
உண்ட இலை நியாயம்: சோறு உண்பதற்கு இலை கருவியாகப் பயன்படும். உண்ட பின்னர் அதனை எச்சில் ஆயிற்றெனக் கழித்து அது கிடந்த இடத்தையும் தூய்மைபடுத்துவர். அது போல மெய்யுணர்வு பெறுதற்கு உடல் இன்றியமையாதது.ஆதலால் ஞானம் பெறும்வரை உடலினைக் கருத்தோடு காப்பாற்றி பின் ஞானியற்கு இவ்வுடல் அருவருப்பாய் தோன்றும். இதனை நெடுனாள் வைத்துக் காக்க விரும்பார். கழிக்கவே விரும்புவர்.
உண்ணத்தக்கவற்றை விதித்தலால் உண்ணத்தகாதன விலக்கப் பட்டன எனும் நியாயம்:ஐந்தைந்து நகமுடையன உண்ணத்தக்கன என்று விதித்தலால் அவையல்லாதன உண்ணத்தகாதன என்பது வெளிப்படை.
No comments:
Post a Comment